Monday, February 26, 2018

ஊர்வலம்...!(சிரியா )


இந்த வீதிகளில் தான்
என் அப்பாவின் தோளில் அமர்ந்தபடி
ஊர்வலம் சென்றேன்.
அன்றைய ஊர்வலத்தில்
மகிழ்ச்சியும்
களிப்பும் நிரம்பி வழிந்தது

இன்று ....
குழந்தைகள்
தங்கள் புன்னகைகள் தொலைத்து
வெகு நாளாகிவிட்டன .
பூக்களை ஏந்திய  கரங்களில்
புல்லட்கள் ஊடுருவுகின்றன ...!

சாக்கடைகளுக்குள்
தஞ்சமடைகிறேன்.
உள்ளே
ஆயிரம் குழந்தைகளின் கண்கள்
மருட்சியோடு கண் சிமிட்டுகின்றன .

அந்த சாக்கடையில்
விழுந்த பந்தை எடுக்க
ஏசிய அம்மா
இறந்து வாரமாகி விட்டது.
இன்று சாக்கடைக்குள்
பந்துகளாக அடைந்து கிடக்கிறோம்.

யாருக்காக இந்த போர் ...?
ஒரு தேசத்தின்
எதிர்காலத்தையே
துள்ளத் துடிக்க அழித்த பிறகு
தேசம் எதற்கு..?.

என் கேள்விகளுக்கெல்லாம்
விடை அளித்த
அப்பாவும் அம்மாவும் இல்லை.

மேலே ஊர்வலத்தின் சப்தம் .
இன்றைய ஊர்வலத்தில்
மரணங்களும்
வியாகுலத்தின் ஓலங்களும்
வீதிகளை நிறைக்கின்றன....

ஊர்வலம் எப்போது ஓயுமென்று
தடதடக்கும் இதயத்துடன்
காத்திருக்கிறோம் நாங்கள்...!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...