
உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து விருதுகளிலும் நிச்சயம் ஒன்றாவது ஸ்லம் டாக் மில்லியனர் கு கிடைத்திருக்கும். ஏகோபித்த பாராட்டுதல்கள்.
'இத்திரைப்படம் ஒரு கொண்டாட்டம்' (A celebration) என அமெரிக்கா பத்திரிக்கைகள் வரிந்துகட்டிக் கொண்டு விமர்சனம் எழுதி வருகின்றன. சில உயர்தர இந்திய குடிமக்கள், இந்தியாவை இந்த திரைப்படம் கேவலப்படுத்திவிட்டது என குறை கூறி இருந்தனர்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இந்த திரைப்படத்தை பார்க்க சென்றேன். புதுவகையான திரைப்பட உருவாக்கம்(making) எனவும் எழுதி இருந்தார்கள். அதாவது நிகழ்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் மாறி மாறி பயணிக்கிறது திரைக்கதை. இதை தான் நமது மணி ரத்னம் நமது அலைபாயுதே படத்திலேயே செய்து விட்டாரே என்ற எண்ணம் எனக்குள் அலைபாய்ந்தது.
ஒரு இந்தியனான எனக்கு படத்தில் மற்றவர்கள் கூறுவதை போல, உலக அறிஞர்கள் கூறுவதை போல புதுமையான முயற்சி என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இந்தியாவின் சேரியை அப்பட்டமாக துகிலுரித்து காட்டியதை தவிர நமக்கு மிகவும் ,பழக்கப்பட்ட ஒரு ஏழை கோடீஸ்வரனாவது தான் கதை.
முதல் காட்சி, காவல் நிலையத்தில் ஜமால் என்ற இளைஞன் சித்ரவதைப்படுத்த படுகிறான். அவன் மேல் உள்ள குற்றம், ஒரு சேரி இளைஞனான அவன் 'யாருக்கு கோடீஸ்வரனாகும் ஆசை உள்ளது' (who wants to be a millionaire) என்ற நிகழ்ச்சியில் ஒரே ஒரு கேள்வியை தவிர மாற்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்கிறது. அவன் நிச்சயம் கள்ள விளையாட்டு ஆடி இருக்க வேண்டும் என்பதே குற்றச்சாட்டு. பலவிதமான சித்ரவதைவதைகட்க்கு பின் வாய் திறக்கிறான் ஜமால். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவன் வாழ்கையிலேயே விடைகள் இருந்தன என்பது அவன் வாதம். ஒவ்வொரு கேள்விக்கும் அவனுக்கு விடை எப்படி தெரிந்தது என அவன் கூற துவங்கும்போது A R ரகுமானின் சிலிர்க்கவைக்கும் ' ஒ சய்யா' என்ற பாடலுடன் இறந்த கால காட்சிகள் திரையில் விரிகின்றன. அந்த பாடலும், அந்த துரத்தல் காட்சிகளும், அந்த காட்சிகளினூடாக சேரி மக்களின் அவல வாழ்க்கையும் அற்புதமாக காட்சி படுத்தி உள்ளனர். அந்த காட்சியில் மட்டும் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் இசையும் பின்னி பிணைந்து மும்பையின் சேரியை நம் கண்முன் நிறுத்துகிறது.

அமிதாப் பச்சனிடம் கைஎழுத்து வாங்குவதற்காக மலக்குழிக்குள் விழுந்து உடம்பு முழுவதும் மலத்துடன் சென்று கை எழுத்து வாங்கும் காட்சி அருவருப்பின் உட்சம். படத்தில் மிக மிக மிகைப்படுத்தப்பட்ட காட்சியாக தோன்றியது. மற்றபடி சாக்கடையில் துணி துவைப்பது, மத கலவரத்தில் ஜமால் தன் அம்மாவை பறிகொடுக்க ஒரே நொடியில் அநாதை ஆகின்றனர் ஜமாலும் அவன் நண்பன் சலீமும்.
அனாதையான லத்திகாவும் அவர்களிடத்தில் சேர்ந்துகொள்ள, மூவரும், சிறுவர்களை முடமாகி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலில் அவர்கள் அறியாமலே சேர்ந்து கொள்கிறார்கள். அந்த கும்பலின் தலைவன் ஜமாலின் கண்ணை குருடாக்கும் எண்ணத்துடன் அவனை தேட, சலீம் ஜமாலை தப்ப வைத்ததோடு லத்திகாவை தந்திரமாக கழற்றி விடுகிறான்.
சின்ன சின்ன திருட்டுகள் என கழியும் அவர்கள் வாழ்க்கையில் ஜமால் லத்திகாவை தேடி கொண்டிருக்கிறான். அவர்களது பருவத்தில் அவள் ஒரு விபச்சார விடுதியில் இருப்பதை கண்டுபிடிக்க, சலீம் பிச்சைகார தாதாவை போட்டு தள்ளி விட்டு ஒரு தாதா கும்பலுடன் சேர்ந்து லத்திகாவை வளைத்து துப்பாக்கி முனையில் ஜமாலை துரத்தி விடுகிறான்.
ஒரு கால் சென்டரில் டீ வழங்கும் பையனாக வேலை செய்யும் ஜமால் சலீம் இருக்குமிடம் கண்டுபிடித்து லத்திகாவை கண்டுபிடிக்க அவளோ சலீம் வேலை செய்யும் தாத்தாவின் பிடியில் இருக்கிறாள். அவளுக்காக தான் ரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும் அவளை புறப்பட்டு வந்துவிடுமாறும் கூறுகிறான். அவன் காத்திருக்கையில் அவளும் வருகிறாள். இடையில் சலீம் தனது ஆட்களுடன் வந்து அவளை கடத்தி சென்றுவிடுகிறான். அவள் 'who wants to be a millionaire' நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறாள் என்று ஜமால் அறிந்து அவளுடைய இருப்பிடம் அறிந்து கொள்வதற்காக அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான். முடிவில் சுபமாகி பாலிவுட் ஸ்டைலில் ஜெய் ஹோ என்ற பாடலை ஆடி படத்தை முடிக்கிறார்கள்.
நடிகர்களின் நடிப்பை விடவும், திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் மற்றும் இசை படத்தின் தூண்கள். எனினும் இந்தியர்களுக்கு இது பழகி போன ஒரு பார்முலா. சேரியில் இருந்து ஒருவன் கொடீஸ்வரனாகிறான் . காதலுக்காக இதை செய்கிறான். அதற்க்கு ஒரு வில்லன். கடைசியில் வில்லன் திருந்துவது, ஜமால் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் டிவி ஷோ நடத்தும் அணில் கபூருக்கு எப்படி தெரியும் என்று தெரிய வில்லை. ஏன் என்றால் அவனுக்கு தெரிந்த கேள்வியே கேட்கிறார். கடைசி கேள்விக்கு அவனுக்கு விடை தெரியாத போதும் எதோ ஒன்றை சொல்லி வைக்க அதுவும் சரி ஆகி விடுகிறது. இதனால் இப்படத்தின் நம்பகத்தன்மை மேல் கேள்வி எழுகிறது.
இத்திரைப்படம் ஒரு இந்தியரால் எடுக்கப்பட்டிருந்தால் இந்தியாவை விட்டு வெளியே போகாமல் முடக்கப்பட்டிருக்கும். ஆஸ்கார் வரை இப்படம் பொய் இருக்குமா என்பதே சந்தேகம் தான். என் என்றால் அரசியல் அங்கும் விளையாடுகிறது. படத்தின் இயக்குனர் பிரிட்டனின் மிக சிறந்த படைப்பாளர்களில் ஒருவரான டானி பொய்லே என்பதால் தான் இந்த திரைப்படத்திற்கு இவளவு வரவேற்ப்பு. AR ரகுமான் இதைவிட சிறப்பாக பல படங்களில் இசை அமைத்துள்ளார். இந்த படம் மட்டுமே டானி பொய்லே தயவில் தேர்வு செய்ய பட்டிருக்கிறது.
எனினும், இந்தியன் பார்முலா திரைப்படம் உலகம் முழுதும் இப்பொது இந்த திரைப்படம் மூலம் கொண்டாட படுகிறது. ஒரு தமிழரான AR ரகுமான் கொண்டாட படுவது, உலக தமிழர்கள் அனைவருக்கும் பெருமை. படம் ஆஸ்கார் கு தகுதியானது தான என்ற கேள்வி இருந்தாலும், இத்திரைப்படம் இந்திய திரை மேதைகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் தரும் ஒரு துருப்பு சீட்டு .
இந்தியாவை கேவலப்படுத்தி விட்டதாக குறை கூறுபவர்களுக்கு, மாநகரங்களில் உள்ள சேரிகள் தான் விடை. சேரி என்ற ஒரு இடத்துக்கு போக கூட நாம் விரும்புவதில்லை . கூவம் பக்கமாக மூக்கை பிடித்து கொண்டு நடந்து செல்பவர்களுக்கு அந்த கூவத்தின் அருகிலேயே வாழும் மனிதர்களை பற்றி தெரியுமா? டிராபிக் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்களை துரத்தி விடும் நமக்கு அவர்களின் நிலைக்கு காரணம் பற்றி தெரியுமா? வெள்ளை காரன் இந்தியாவை கேவலப்படுத்துகிறான் என கதறுபவர்கள், அந்த வெள்ளைகாரனான ரிச்சர்ட் ஆட்டன்போரோ காந்தியை பற்றி படம் எடுக்கவில்லை என்றால் நமக்கு அற்புதமான அந்த காந்தி திரைப்படம் கிடைத்திருக்குமா? இன்றும் இந்தியாவில் நமக்கு தெரியாமல் இருக்கும் சேரி மனிதர்களின் வாழ்க்கைக்கும் ஒரு வெள்ளைக்காரன் தான் படமாக எடுக்க வேண்டி இருக்கிறது. அந்த மலக்குழி காட்சி தவிர மாற்ற காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் நடக்கும் அவலங்களே என்பதை நாம் ஒத்துக்கொள்ள தான் வேண்டி இருக்கிறது.