Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, June 19, 2015

கவிதை: வாசனை.

செய்தி: மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது இரும்பு கம்பி கழன்று விழுந்து பைக்கில் சென்றவர் பலி


வாசனை.
---------------
தலைக்கவசம் தாண்டி

தெறித்த

ரத்தத் துளிகள்,

அந்தக் கண நேரத்தில் ..

அவனுக்கு ஞாபகப்படுத்தின,

பனித்துளிகள் சிதறிய

முன்னிரவின் தனிமையில்,

சிறகுகள் விரித்த காற்றுப் பறவையினிடையே,

கர்ப்பிணி மனைவியின்

வயிற்றில் காது வைத்து

கேட்கப்பட்ட

சிசுவின் ஒலியில்,

அவள் புன்னகையின்

வெளிச்சச் சூட்டில்

முகத்தில் கோடிட்ட

வியர்வைத் துளியின் வாசனையை ...!

Friday, March 20, 2015

கவிதை: கடவுளிடம் சிறுமியின் சிறு கேள்விகள்...!


செய்தி : ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் http://www.ibtimes.co.uk/india-six-year-old-sexually-assaulted-4-foot-iron-rod-1491027

தெய்வம் நின்று கொல்லும்
என்றார்கள்.

நான் செய்த குற்றம் என்ன?

அப்பாவின் மடியில்
ஆழ்ந்துறங்கியதா?

அம்மாவிடம்
மிட்டாய் வாங்க காசு கேட்டதா?

தம்பியிடம்
பலப்பத்தை பிடுங்கி
சண்டை இட்டதா?

புல்லை
மான்களுக்கு
இரையாகப்  படைத்தாய்!

மான்களை
புலிகளுக்கிரையாகப்  படைத்தாய்!

என்னை,
மனிதர்களுக்கிரையாகப்
படைத்தாயா ?

பெண் என்றால்
பேயும் இரங்கும்  என்பார்களே!

கடவுளே !
உனக்கு
இரக்கம் இல்லையே
உன்னை
என்னவென்று சொல்வது?

பெண்களை
தெய்வமாக
வணங்கும் நாடு என்பதால்
தைரியமாகப் பிறந்தேன்.

பெண்களை சேதப்படுத்துபவர்கள்,
தெய்வங்களை
என்ன செய்வார்கள்?

பாலூட்டும் தாயையும்
பாலுணர்வுடன்  பார்க்கும்
பெண்களுக்கெதிரான தேசத்தில்...
ஆறும்
அறுபதும்
ஒன்றுதான்.

ஆக்குபவர்கள்
பெண்களாக இருந்தாலும்
இங்கே
அழிபவர்களும்
அவர்களாகவே இருக்கிறார்கள்.


கடவுளே !
நீ
பெண்ணாக இருந்தால் !
இங்கே
பிறந்துவிடாதே!

நீ
நிர்பயாவாக  மாறுவாய்
அல்லது
இதே கவிதையை
எழுதிக் கொண்டிருப்பாய்..!

Thursday, February 26, 2015

மன்னிப்பு!

மன்னிப்பு
==========


மன்னிப்பு என்பது
வெறும்
வார்த்தையில்
தொக்கி நிற்கிறது!

மன்னிப்பு
கேட்கப்பட்ட
கணத்தைக் கடந்து
அந்த வார்த்தைக்கு
மதிப்பேதும்
இருப்பதில்லை.

மன்னிப்பு
வழங்கப்பட்ட நொடியில்
ஏற்படும் கர்வம்
சில நொடிகள் தாண்டி
நிலைப்பதில்லை!.

மன்னிப்பில்
பரிமாற்றப்படும்
கண்ணீர் துளிகளில்,
உப்புச்சுவை
தெரிவதில்லை!

எதிராளியின் இதயத்தில்
பாரத்தை ஏற்றிவிடும்
திருப்திக்காக
சிலசமயம்
மன்னிப்புகள்
கேட்கப்படுகின்றன

மன்னிப்பு
கேட்டுவிட்டதால்
தன மீதான குற்றச்சாயங்கள்
துடைக்கப்பட்டுவிட்டதாக
நம்பப்படுகின்றன .

தான்
மன்னிப்பு கேட்டுவிட்டதாக
பிறரிடம் சொல்லிக் கொள்ளும்
வாய்ப்புகளை
சில
மன்னிப்புகள் ஏற்ப்படுத்துகின்றன.

மன்னிப்பினால்
தற்காலிக நிம்மதி தவிர
ஆகக்கூடிய  காரியம்
வேறொன்றுமில்லை.

கேட்கப்பட்ட காலத்தை தாண்டிய
செயலில் இருக்கிறது,
உண்மையான மன்னிப்பின்
மதிப்பு .!

Friday, June 27, 2014

சூன்யவேளியின் கார்டூன் பொம்மைகள்!


வீடு நுழைகையில்,
இடறிவிட்டது ...
கார் பொம்மை ஒன்று!

படுக்கை அறையெங்கும்
மனைவி மடித்து வைத்த
துணிகள்
பரவிக் கிடந்தன.

காலுடைந்த பார்பி
குப்புறப் படுத்தபடி
அழுது புரண்டது!

உணவு மேசை எங்கும்
எங்கள் வீடு வான் கோ க்கள்
இலக்கில்லாமல்
தீட்டிய
வண்ணங்கள்!

பிய்ந்து கிடந்தன
புதிதாய் வாங்கிய
கித்தார் கம்பிகள்.

உடைந்து கிடந்தன
தேநீர் கோப்பைகள்

கிழிந்து கிடந்தன
அலுவலக கோப்புகள்.

களமாடிவிட்டு  வந்த
வீரர்களைப் போல
அசதியில்
உறங்கிய பிள்ளைகளை
எழுப்பி
வைதது
நினைவுக்கு வந்தது.

விடுமுறைக்காக
ஊர் சென்றுவிட்ட
பிள்ளைகளை
தொலைத்துவிட்டு,

யாருமற்ற
சூன்யவேளியின் தனிமையில்
நான் விடும்
மூச்சுக் காற்று
வீடெங்கும்
எதிரொலித்தது!

கார் பொம்மையை
கதவருகே வைத்துவிட்டு,
தேநீர் கோப்பையை
உடைத்தேன்.

தொலைக்காட்சிப்  பெட்டியில்
சிரிக்கத் துவங்கின
கார்டூன் பொம்மைகள்.


Wednesday, June 27, 2012

என் நிலாவும்.. நிலாத் துண்டுகளும்..








'நிலா வேணுமா...'
கேட்ட என் குட்டி நிலாவிடம்...
'ஆம்' என்று சொல்ல..
நீரில் தெரிந்த நிலாவை,
தன் குட்டிக் கரங்களால்...
அள்ளியெடுத்து
என் கைகளில் கொட்டினாள்.


'நிலா போய்டுச்சே''
என்ற என் குட்டி நிலாவின்
துக்கம் தாளாமல்,
ஒரு நிலவை
வாங்கி அளித்தேன்.


' நிலாவை' கொஞ்சி,
கூத்தாடி,
கட்டி அணைத்தபடி,
நிலவொளியில்
அவள் உறங்குவதை..
நிலாவே
பொறாமையுடன் பார்த்தது.

'நிலாவுக்கு உடம்பு சுகமில்லை'
டாக்டர் சொன்னதும்,
குட்டி நிலாவுடன்
எடுத்து சென்றிருந்த
'நிலா'
பதற்றத்தில் கீழே விழுந்து
உடைந்தது.

'நிலா உடஞ்சிருச்சி'
முனகிய நிலாவுக்கு...
உடைந்த நிலாத் துண்டுகளை,
பொறுக்க தெம்பில்லை.

இன்று,
நிலா இல்லை.
உடைந்த நிலாத் துண்டுகளை
ஓட்டத் தெரியாமல்
அழுதுகொண்டிருக்கிறேன் நான்.





- நிலா முகிலன்.

Sunday, February 12, 2012

காதல் என்பது...!



காதல் என்பது...

ஒரு

ஐஸ் கிரீமுக்கு

இரண்டு ஸ்பூன்கள்

கேட்பது.


 காதல் என்பது...

மதிய வெய்யிலில்,

மெரீனா மத்தியில்,

குடைக்குள் மறைந்து

மறந்து கிடப்பது...



காதல் என்பது...

காதலியிடம்,

காதலனை,

பல பொய்கள்

சொல்ல வைப்பது.



காதல் என்பது..

காதலனிடம்,

காதலியை,

பல உண்மைகளை,

மறைக்க வைப்பது,



காதல் என்பது...

கை நகம்

கடிக்க வைத்து

நட்சத்திரங்களையும்

வெண்ணிலவையும்

ரசிக்க வைப்பது.



காதல் என்பது...

கண்ணாடி முன் நின்று

காலங்களை

தொலைப்பது.



காதல் என்பது...

வராத

கவிதையை,

வரவைத்து

எழுதுவது



காதல் என்பது...

பிரிவெனும் துயரத்தில்,

துளிர்க்கும்
 
கண்ணீர் துளியின்  

முற்றுப்புள்ளியில்

முடிந்து போவது.

Tuesday, December 6, 2011

முற்றுப் பெறாதக் கவிதை!

முற்றுப் பெறாதக் கவிதை!



 
தாள்கள் கிழிபட்ட

ஒரு சமூக நாவலின்,

முற்றுபெறாத அத்தியாயமாய்,

வந்தவன் எல்லாம்,

தன் கை மறந்து,

தங்கையை கேட்க...

மணந்து போன தங்கையை

வாழ்த்த தான் முடிந்தது.


ஆடைகளும்,

அணிகளும்,

அலங்கரிக்க மறுக்கும் உடலுடன்,

ஒரு

அகோரியின் மன நிலையில்,

நிலைத்து நின்றன

வளைகள் பூட்டிய விழிகள்.

 
வெள்ளியின் விலை ஏற்றமோ

என்னவோ..

அவள் சிரசு மயிரில்

ஏறி விட்டன

சில வெள்ளிக் கம்பிகள்..


இரவின்

தனிமையில்,

தவிப்பில்,

குளித்த நீர்த்துளி..

தொட்டு சென்றன..

அவளது

தொடக்கூடாத இடங்களை...


தனிமை தவத்தை

கலைக்க வருமோ..?!

தவிப்பின் தாகம்

தீர்க்க வருமோ..?!

தொலைந்து போனவனின்..

துவண்ட கைகள்..?


அணைப்பும் வேண்டாம்...

அரவணைப்பும் வேண்டாம்..

இறுகப் பற்ற

ஒரு கரம் போதும்..

இன்னமும்

முற்று பெறாத

இக்கவிதையை படிக்க...

எங்கே இருக்கிறாய்..

என் ராஜகுமாரா...?

Monday, October 31, 2011

கோப்பை!




எதற்க்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்...?
உன் தோல்விகளில்...
நான் பங்கேற்றுக் கொள்ளவா?
என் தோள்களில்...
உன் சுமைகளை இறக்கிக் கொள்ளலாம்.
உனக்காக...
என்னால் கோப்பையில் இறங்க முடியாது.

எதற்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்..?
உன் வெற்றிகளை
நான் கொண்டாடுவதற்கா...?
என் தோள்களில் உன்னை சுமந்து
ஊர்வலம் வருவேன்.
உனக்காக
என்னால் கோப்பையை எந்த முடியாது.


எதற்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்...?
நமது நட்பை
டையாளப் படுத்திக் கொள்ளவா?
நீ உடைந்து போகும் முன்பு
என்னை உடைத்து
உன்னை ஒட்டித் தருவேன்...
உனக்காக..
என்னால் கோப்பையை பிடிக்க முடியாது


உன் வெற்றிகளுக்கும்,
உன் தோல்விகளுக்கும்,
உன் கொண்டாட்டங்களுக்கும்...
கோப்பைகளை நிரப்பி நிரப்பி,
உன் நிகழ்கால
நிமிஷங்கள்  
தொலைத்து
உனக்கான ஆயத்தங்கள்
ஆறப்போடப் படுகின்றன...

ஏந்திக் கொள்கிறேன்..
என்
கோப்பையை நான்
நிரப்பிக்கொள்ளவும்,
எனக்கான கோப்பையை
நான் கை பிடிக்கவும்
எனக்கான சுதந்திரம்
உன் கோப்பை கொடுக்குமானால்...!

Sunday, February 13, 2011

ஆதலினால்...(சில காதல் கவிதைகள்...)

விழிகளின் குழந்தைகள்..!




உன்
விழிகளை
நோக்கும் நொடி எல்லாம்..
என் கனவுக் கருப்பைகள்,
ஆயிரம் கவிதைக் குழந்தைகளை
பிரசவிக்கையில்...
பத்து மாதங்கள் எதற்கு...?

புன்னகைச் சாலை.


இந்த சாலையில் மட்டும்
நடந்து செல்லாதீர்...
அவளது புன்னகைகளை ...
இந்த சாலையெங்கும்
பதியமிட்டிருக்கிறாள்..!

உனக்கானது..!

'எனக்கானதேல்லாம்..
உனக்கானது...'
என்று சொன்ன நீ...
என்னை மட்டும்
எனக்கு
தர மறுக்கிறாய்..!

-நிலா முகிலன்.




Friday, October 8, 2010

பிறிதொருநாளில்...!

சாயம் தொலைந்த சுவர்கள்,
காரை பெயர்ந்த தரை,
மழை நீர் ஒழுகும் கூரை,
கருப்பு தொலைத்த பலகை,
இலை உதிர்த்த போகன்வில்லா ,
இறந்து போன வாத்தி..
பொம்மியம்மா விற்கும் கார நில்லிக்காய்...
ரொட்டிக்கடை அண்ணாச்சி..
கிச்சாமி எட்டிப் பார்த்து மாட்டிக் கொண்ட..
பெண்கள் கழிப்பறை,
கட்டிப்புரண்டு சண்டையிட்ட மைதானம்...
திருட்டு தம்மடித்த முள் புதர்...
என...
எதுவும் சிலிர்ப்பைத் தரவில்லை...!
பிறிதொருநாளில்...
என் மகனின் கரம் பிடித்து அழைத்து சென்று...
என் நினைவுகள் பகிரும் வரை...!
--

Saturday, August 14, 2010

சுதந்திரம்...!


நேற்றைய,
பியர் விருந்தின்,
மிச்சங்களை நக்கிவிட்டு
மயங்கிக் கிடந்தன
நடுநிசி நாய்கள்...

குப்பையை கிளறி,
இலைகளின் எச்சங்களை
தேடி கொண்டிருந்தன...
நாளைய மாணவனின் 
விரல்கள்...

தம் மக்கள் 
சுமை சுமந்து 
சோர்ந்து போக..
கட்டணம் கட்டிய
தாயும் தகப்பனும்,
நாளைய மருத்துவனுக்கோ பொறியாளனுக்கோ  
தவமிருந்தனர்...

அவர்களின் தந்தையும் தாயும்...
முதியோர் இல்லத்தில்...
பேரனின் வரவுக்கு காத்திருந்தனர்...

காந்திக்கு மாலை இட்ட கையோடு,
தீக்குளித்த தொண்டனின்,
மனைவியுடன்
போன்னாடையோடு 
புகைப்படம் எடுத்துக் கொண்டான்...
தலைவன்.

சாலையின் சந்திப்பின் ...
விளக்குச் சிவப்பில்...
இடுப்பில் உறங்கி கிடந்த 
குழந்தையை கிள்ளிய பெண் 
'சாமீ' என ஆரம்பித்தாள்...

மாலைப் பேருந்தின் மூச்சு திணறலில்,
அவள் புட்டம் உரசும் 
மனிதனின் பேரனுக்கு...
நேற்று மூன்றாவது பிறந்தநாள்.

அலுவலக கணினியில் 
'சுதந்திரம்' 
என கவிதை எழுதினான் 
நிகழ் காலக் கவிஞன்.

இப்படியாக...
முடிந்து போனது....
அறுபத்து   நாலாவது 
சுதந்திர தினம்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

--

Friday, May 14, 2010

வலி!

உறைந்து போன விழிகளும்,
ஒடுக்கப்பட்ட  மொழிகளும்,
உடைந்து போன கனவுகளும்,
நடுக்கமுள்ள நனவுகளும்,

தொலைந்து போன உறவுகளும்,
தவிக்கப் பற்றும் இரவுகளும்,
உலர்ந்து போன ரத்தமும்,
தெளிந்து போகா பித்தமும்,

காற்றில் நாறும் தசைகளும்,
பழுதுபட்ட விசைகளும்,
மறைந்து போன மனிதமும்,
மாற்றி எழுதிய  கணிதமும்,

தமிழும் எம்மை கைவிட..
உமிழும் நீராய் நாம் உளோம்.
அமிலமான வாழ்கையே..
அடுத்த அடுத்த வேளையே..

இருந்தும் ஒளியை நோக்கிய
பயணம் முடியவில்லையே..
விடியல் காணும் நாள் நினைத்து..
வலி மரத்து போனதே..!

--ஈழப் படுகொலைகளின் நினைவாக...
--

Thursday, April 29, 2010

கடந்து போன கவிதை!

என்றோ படித்த நாவலை,
மீண்டும் துவக்குதல் போல்,
உறங்கிப்போன குழந்தையின்
கண்விழிப்பு அழுகை போல்...
குடை மடக்கிய பின்,
துவங்கும் மழையை போல் ,

முடிந்து போன
என் முதல் காதல் வரியின்,
முற்றுப்புள்ளியில்
தொடங்குகிறது....
உனக்கெனதாகிய
எனது அடுத்த காதல்...

முதல் தான்
முடிவு என இருந்த நான்,
முடிவில் இருந்து
மீண்டும் ,
நீ துவக்கிய தடுமாற்றத்தில்,
கிழித்தெறிந்தேன்...
கடந்து போன
இந்தக் கவிதையை....


-- நிலா முகிலன்
--

Monday, March 22, 2010

இருக்கை...!



மழையில்,
மனித வியர்வையில்,
குழந்தையின் கிறுக்கல்களில்..
கலவரத்தில் முத்தமிட்ட கத்தியில்...
காதலனை பார்க்கும் அவசரத்தில்...
பூச்சு தீட்டப்பட்ட பெண்ணின் நகங்களில்...,
மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த வன்முறையில்...
நைந்தும் பிய்ந்தும் போன..
இருக்கை...

நிர்வாணம் மறைக்க...
அவ்வப்போது ..
புத்தகம்,
கைக்குட்டை..
சிறு குழந்தை..
காய்கறி கூடை..
பைக்கட்டு என..
இடம் பிடிக்க நிகழும்...
ஆடை அணிவிப்புகள்..

பிச்சைகாரன்,
அம்மாவை தொலைத்த குழந்தை...
பாலியல் தொழிலாளி,
மதம் மறுப்பவன் ,
சாமியார்கள்,
காதலர்கள்...
திருடன்,
வைத்தியன்...
பார்வை தொலைத்தவன்...
வேலை இல்லாதவன்...
கால்களை இழந்தவன்...
என..
எவனுக்கும் பகிரப்படும் இடம்...

இரவின் மடியில்...
சாய்ந்து கொள்ள தோளும்..
காயாத கண்ணீரை...
துடைத்துக் கொள்ள மடியுமாய்...
மாணவர்கள் தாளம் போடும்...
இசை கருவியாய்...
அஜீரண குழந்தையின்
வாந்தியையும் மலத்தையும் ஏந்தி கொள்ளும்
ஏந்தலாய்...

என்னையும் தாங்கிக்கொள்ள...
சிரித்தபடி வரவேற்றது...
அரசு பேருந்தின்...
சன்னலோர... இருக்கை....
---

Tuesday, March 9, 2010

பெண்ணே...நீ..!


பொண்ணா பொறந்தவ தான்
பூமி ஆள பொறந்தவதான்
கண்ணா பொறந்தவதான்
கள்ளிக்கு தப்பி பொறந்தவதான்..

பூமி தாய் தான் உண்டு
பூமி தந்தை கேட்டதுண்டா..
மோதல் வார்த்தை 'அம்மா' ன்னு
சொல்லா குழந்தை பார்த்ததுண்டா..

விண்வெளிக்கும் விரைவாளே..
விளையாட்டிலும் வெல்வாளே
விருதுகளும் பல பெற்று
நாட்டின் மானம் காப்பாளே..

பெண் இல்லா துறை ஏதும்
உண்டா இவ்வுலகத்திலே..
இல்லைன்னு சொல்லுங்களே..
அதிலும் இவள் சாதிப்பாளே

உனக்குள்ளே உயிர் வளர்க்க
உனக்கு மட்டும் உரிமை உண்டு.
நீ உயிரை படைப்பதாலே..
நீயும் ஒரு கடவுளானாய்

இருபதாண்டு மேலாக
உன்னை வளர்த்த குடும்பம் விட்டு
எனை வளர்க்க வந்ததாலே
எனக்கும் நீ தாயானாய்...

பெண்கள் தினத்தில்...பெண்மையை வணங்கி... நிலா முகிலன்.

Monday, December 14, 2009

வட்டம்


வட்டம்:
=======
தாயின் கருவறை,
சமுதாய வரையறை,
குழுவின் எல்லை,
மருந்து வில்லை...

பௌர்ணமி நிலவு...
மனிதனின் உறவு...
இதழ்களின் குவிப்பு.
குழந்தையின் சிரிப்பு ..

உலகின் வடிவம்.
கடிகாரப் படிவம்,
அலைகளின் எழுச்சி...
புயலின் சுழற்சி,

மங்கையின் வளையல்
மழைத்துளி சிதறல்
எண்களின் துவக்கம்,
அயர்ச்சியில் கிறக்கம்.

சுமங்கலிக் குங்குமம்
நதிகளின் சங்கமம்,
மனிதத்தின் திட்டம்
வாழ்க்கையே வட்டம்.
---

Tuesday, December 1, 2009

அது ஒரு மழைக்காலம்!



இக்கவிதையை வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி.

அது ஒரு மழைக்காலம்!
------------------------------
அவள்...
என் வாழ்க்கை வானத்தில்
மின்னி மறைந்தாள்

மேகங்கள்
என்னை விலகி சென்றன...

என்
இதயத்தின் இடிமுழக்கம்
எனக்கு மட்டும் கேட்டது.

என்
கனவுத் துளிகள்,
மண்ணில்
விழுந்து தெறித்தது.

என் கண்களில்
புறப்பட்ட
வெள்ளம்
என்
இதழ் கடந்து மார்பை நனைத்தது.

என்
நம்பிக்கை மரங்கள்,
அறுந்து விழுந்தன.

மனதில் பாய்ந்த
மின்சாரத்தால்,
என்
காதல் மனிதர்கள்
மாண்டு போனார்கள்.

ஒளியை தொலைத்த
என்
வாழ்க்கை பிரதேசங்கள்...
இருட்டில் இளைத்தன.

இன்று....
மழை ஓய்ந்துவிட்டது

என்
இதயபூமி
காத்திருக்கிறது
அடுத்த மழையை
எதிர்பார்த்து....!

-நிலா முகிலன்
=============

Thursday, November 19, 2009

அன்றும் இன்றும்....யூத்புல் விகடனுக்கு நன்றி.


அன்று...
நாங்கள்
சீறும் சிங்கங்களாக
வீறு கொண்டு எழுந்த போது
எங்கள்
மயிர்க்கால்களை
மழித்து விட்டீர்கள்...

அன்று...
நாங்கள்
வானம்பாடிகளாக
விண்ணில் பறக்க முனைந்தபோது
எங்கள்
சிறகுகளை சிரைத்துவிட்டீர்கள்...

அன்று ....
நாங்கள்
அநீதி கண்டு பொங்கி
கோஷமிட்டபோது
எங்கள்
குரல் வளைகளை
அறுத்து எறிந்தீர்கள்...

இன்று...
புழுபூச்சிகள் தின்றுவிட்ட
எங்களின்,
புகைப்படங்களுக்கு
மாலைகள் அணிவித்து
'தியாகி' என ஒளி ஏற்றுகிறீர்கள்..!

-----

Monday, November 16, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே...!


'ஆனந்த சுதந்திரம்... அடைந்து விட்டோம்...'
பாரதீ....!
நீ கண்ட கனவு
இன்னும் எங்களுக்கு கனவாகவே....

'நெஞ்சு பொறுக்குதில்லையே..
இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்துவிட்டால்...'
அன்றே தெரிந்துவிட்டது உனக்கு...
எங்களுக்கு...
இப்போது தான் புரியவே ஆரம்பித்திருக்கிறது.

புதுமை பெண்களை
படைக்கக் கோரினாய்...
புதிதாக பிறக்க கூட
நம் தேசத்து மன்னர்கள்
விட்டுவைப்பதில்லை.

ஜனிக்கும் கருப்பைகளே..
என் புதுமை பெண்களுக்கு...
கல்லறைகள்.

ஸ்கேனில் தப்பி விட்டால்...
இவர்கள்
முதலில் குடிப்பது
தாயின் முலைப்பாலை அல்ல...
கள்ளிச் செடியின் காம்புப் பாலை..

'தனி ஒருவனுக்கு உணவில்லையேல்..
ஜகத்தினை அழித்திடுவோம்...'
இங்கு ஜகமே தவிக்கிறது..
எதனை அழிப்பது?

'சாதி சண்டைகள் போச்சோ..சமய சண்டைகள் போச்சோ..'
எப்படி பாரதீ?
எங்கள் அரசியல்வாதிகளின் ஒட்டு வங்கியே
அதில் தானே இருக்கிறது?

எங்கள் அரசியல் வாதிகளின்
ஆதர்சன சத்தியகள் எல்லாம்..
அரியணை ஏறியதும்
ஆணி அடிக்கப்படும்.

எங்கள் தலைகள்
அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது
உலக வங்கியில்.

உன் புரட்சி உணர்வுகள்..
எங்கள் இளைஞர்களின் இதயங்களில்
புலரவே இல்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு
திட்டங்கள் தீட்டவேண்டியவர்கள்
பட்டங்களை சுமந்து கொண்டு
வீதிகளில்...
வேலைக்காய்....

'சிங்கள தீவினிற்கு ஒரு பாலம் அமைப்போம்'
அதனை செயல்பட துணிந்ததால்...
எங்களுக்கு கிட்டியது
பாலமல்ல..
மரண ஓலம்.

எங்கள் தேசத்தின் கால்களே
நசுக்கி போட்டது
எங்கள் தொப்புள் கோடி சொந்தங்களை...

இப்போதைக்கு
நம் பாரதத்துக்கு வேண்டியதெல்லாம்
ஒரு நல்ல தலைவன்.

பாரதீ..
மீண்டும்
இம்மண்ணில் பிறந்து விடு.
இறந்து கொண்டிருக்கும் இந்தியாவிற்கு
உயிர் கொடு.
உணர்வுகளை தொலைத்துகொண்டிருக்கும்
எம் நாட்டு இளைஞர்களை
உன் கவிதைகளால் உரமேற்று.
உன் மூலம்
நம் தேசம்...
ஒரு
புதிய விடியலை காணட்டும்.....

--மகா கவியின் நூற்றி இருபத்தி ஏழாம் பிறந்த தினத்தை முன்னிட்டு....

-நிலா முகிலன்.
-----

Monday, August 31, 2009

குட்டிக் கவிதை -7

மழை
=====

மேகக் காதலன் கைவிட்டதால்....

நீர்த் துளியின்

தற்கொலை...

.....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...