Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Friday, August 24, 2012

முதல்வன் பெடரர் - 3


'நான் டென்னிஸ் உலகின் முதல்வனா வரணும்.அதாவது நம்பர் ஒண்ணா வரணும்' பெடரர் என்ற அந்த சிறுவன், தனது கோச்சிடம் இப்படி சொன்னபோது அவர் சிரித்தார். 'மொதல்ல  ஒழுங்கா  டென்னிஸ் விளையாட கத்துக்கோ ' என்று சொன்னார். கூட பயிலும் சிறுவர்களும் சிரித்தார்கள். பெடரருக்கு அவரது கனவை எட்டி பிடிக்கும் வழி அவ்வளவு சுலபமாக இல்லை. முதல் முதலில் விளையாடிய டோர்ணமண்டில் அவர் 6-0 6-0 என்ற நேர் செட்களில் அவர் தோற்றுப் போனார். வழக்கம் போல ஆட்டத்தின் முடிவில் அவர் கதறி அழவும் தவறவில்லை. 

அதனைத் தொடர்ந்து பல தோல்விகள். ஆனால் உள்ளே தான் முதல்வனாக வேண்டும் என்கிற வெறி மட்டும் அவருள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தனது நண்பர்களை அழைத்து விளையாடும் நேரம் போக, சுவர்களில் பந்தை அடித்து ஆடி கொண்டே இருந்தார். அதற்க்கு வெகு விரைவில் பலன் கிடைத்தது. தனது பதினோராவது வயதில், 1993 ஜெனிவாவில் நடந்த உள்ளரங்கு இறுதி பந்தயத்தில் வென்று சுவிஸ் நாட்டின் பனிரெண்டு வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன் ஆனார். ஆறு மாதங்கள் கழித்து தனது பரம டென்னிஸ் வைரியான டானி ஷ்னைடரை தோற்கடித்து வெளி அரங்கிலும் சுவிஸ் நாட்டின் பனிரெண்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லவும்.. 'ஆஹா நம்மாலும் டென்னிசில் வெல்ல முடியும்' என்ற நம்பிக்கை மெள்ள வந்ததது.


                                        பெடரரின் சிறுவயது புகைப்படங்கள் சில...

பெடரரின் பதிமூன்றாம் வயதில், தான் சுவிஸ் நாட்டின் நம்பர் ஒன் வீரனாகவும், உலக அரங்கில் தான் முதல் நூறு பேரிலும் வரவேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்பட்டது. அவனுக்காக எதையும் செய்ய தயாராகவும் அதே சமயத்தில் அவனது முடிவுகளில் குறுக்கிடாத பெற்றோர்கள் , அவனை ஜெனிவா லேக் அருகே இருந்த இகுப்ளேன்(EKUBLEN) என்ற நகரத்தில் இருந்த 'சுவிஸ் தேசிய டென்னிஸ் விளையாட்டு மையம்' (swill national tennis center) அனுப்ப முடிவு செய்தனர். அங்கு பயின்றவாறே, பள்ளியிலும் சேர்ந்து பயில வசதி இருந்தது. அந்த மையத்தில் பயிலுபவர்களுக்கு சில பாடங்கள் படிக்க தேவை இல்லை என்ற வசதியும் இருந்தது. அவர்கள் பேயிங் கஸ்டாக  யாராவது   ஒரு வீட்டில் தங்கி கொள்ள வேண்டும். பெடரரிடம் கேட்டபோது முதலில் தனது தாயை பிரிந்து இருக்க வேண்டுமே என்ற வருத்தத்தில் மறுப்பு சொன்ன போதிலும், டென்னிஸ் மேலிருந்த காதலால், சம்மதித்தார்.

அந்த மையத்தில் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலவிதமான பயிற்சிகளும், பரீட்சைகளுக்கும் பின்னர் தான் அங்கே சேர்த்துக் கொள்வார்கள். நம்மாள் தான் எதிலும் சளைக்காத வீரனாயிற்றே. அவனது செய்கைகள், தேர்வாளர்களான பியர்ரே  பகணினி மற்றும் கிறிஸ்டோபர் பிரெய்ஸ்  (Pierre Paganini and Christophe Freyss) இருவருக்கும் உடனே பிடித்துவிடவும், 'இவனுக்குள் எதோ ஒன்னு இருக்கு' என்று எண்ணிய அவர்கள், உடனே பெடரரை செலக்ட் செய்து விட்டனர்.

1995 அந்த பள்ளியில் சேர்ந்தவுடன் தான் ஒரு பெரும் சவாலை பெடரர் எதிர்கொள்ள வேண்டி வந்தது...

ஆட்டம் தொடரும்... 

Tuesday, August 21, 2012

முதல்வன் பெடரர் -2


ராபர்ட் பெடரர் மற்றும் லிநெட் பெடரர் இருவரும், சவுத் ஆபிரிக்கா தேசத்தில் சந்தித்து மணந்து கொண்டனர். அதன் பின்னர் ராபர்டின் சொந்த ஊரான சுவிட்சர் லாந்துக்கு திரும்பி வந்து குடி ஏறினர்.
ஆகஸ்ட் எட்டு 1981 சுவிஸ் நாட்டின் ஓரத்தில் பேசல் நகரத்தின் அருகே உள்ள பெர்நேக் (Berneck) என்ற சிறிய கிராமத்தில், லிநெட் என்ற இளம் பெண், பின்னாளில் வரலாற்றில் பேசப்பட போகும் ஒரு மகவை பெற்றாள். அந்தக் குழந்தைக்கு ரோஜர் பெடரர் என பெயர் வைத்தனர். ராபர்ட் மற்றும் லிநெட் இருவரும், விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களாய் இருந்தனர். டென்னிஸ், சாக்கர், கால்ப் என எதையும் விட்டு வைக்கவில்லை. 

சிறுவயதில் பெடரருக்கு. பாஸ்கட் பால் மிகப் பிடித்தமான விளையாட்டு. சிகாகோ புல்சின் மைகேல் ஜோர்டான் தான் அவருக்கு சிறுவயது ஹீரோ.சிறுவயது பெடரர் சுட்டித்தனம் பொறுக்க இயலாமல் அவரை கண்ட்ரோல் செய்ய இயலாது அவரை  அவர் போக்கிலேயே விட்டு விட்டனர். அவரை டென்னிஸ் வகுப்புக்கு கூட்டி செல்வது தான் மிகவும் கடினமான ஒரு விஷயமாக லிநெட் கூறுகிறார். 'பெடரர் அடிக்கும் பந்துகள் எதுவுமே ஒழுங்காக இராது. எவ்வளவு சொன்னாலும் தப்பு தப்பாகத்தான் அடிப்பான்.'

                                                               சிறுவயதில்.. பெடரர்..
வீட்டின் சுவர்களில் பந்தை டென்னிஸ் மட்டையால் அடித்து பழக ஆரம்பித்தான் சிறுவன் பெடரர்.வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உடைத்து வாங்கி கட்டிக் கொள்வது, பெடரரின் சிறுவயது ஹாபி. அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு தனது அக்கா   டையானை   வம்புக்கு இழுப்பது. அவள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிரும்ம்போது ஒட்டு கேட்பது, அவளது பொருட்களை தனது டென்னிஸ் பயிற்சியின் பொது போட்டு உடைப்பது என அவன் ஒரு குட்டி சைத்தானாக இருந்தான் என இப்போது தனது தம்பியின் சிறுவயது நினைவுகளை பெருமையோடு நினைவு கொள்கிறாள் டயான்.

டென்னிஸ் உலகில், சிறுவயதில் பெடரரின் ஆதர்சம், போரிஸ் பெக்கர்.  1985 இல் போரிஸ் பெக்கர் விம்பிள்டன் போட்டியில் வெற்றி கொண்ட பொது, பெடரருக்கு வயது நான்கு. அந்த போட்டியை கண்டே பெக்கரை தனக்கு மிகவும் பிடித்து போனதாக சொல்கிறார் பெக்கர். டென்னிஸ் களத்தில்  பெக்கருக்கு பிரதான எதிரி, செர்வுகளுக்கு பெயர் போன ஸ்டெபான் எட்பர்க். 1988 மற்றும் 1990 இல் பெக்கர், ஸ்டெபானிடம் இறுதி ஆட்டத்தில் தோற்று போனபோது, கதறி கதறி அழுதிருக்கிறார் பெடரர். பின்னர் டென்னிஸ் மட்டுமே பிடித்தமான ஆட்டமாக மாறிப்போனது. 'தோல்வி மற்றும் வெற்றி, இரண்டுமே எனக்கு கைகளில் தான் இருக்கிறது. சாக்கரில் வெற்றி தோல்வி நிர்ணயம் ஆவது ஒரு ஆளின் மூலமாக மட்டும் அல்ல.' எனவே தனக்கான விளையாட்டாக டென்னிசை தெரிவு செய்து அதில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.
                                      தன் இளவயது நண்பன் மார்கோவுடன்.... 
பேசல் நகரை சுற்றி இருந்த டென்னிஸ் க்ளப்புகளில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். அங்கு தான் தனது சிறுவயது நண்பனான மார்கோவை சந்தித்தார்.இருவரும் ஒரே இடத்தில் பயின்றதால், இரு நண்பர்களும் குறும்பு செய்து மாட்டிக் கொள்வதை நினைவு கூறுகிறார் மார்க். பாதி நேரம், குறும்பு செய்துவிட்டு தண்டனையாக மார்க்கும் பெடரரும் கோர்டுக்கு வெளியே அமர வைக்க படுவார்கள். பயிற்ச்சியில் போதிய கவனம் செலுத்தாத பெடரர், மாட்ச் என்று வந்து விட்டால் பின்னி எடுத்துவிடுவார்.  இவர்கள் இருவருக்கும் எட்டு வயது இருக்கும்போது இருவரும் இடம் வாரியாக பிரிக்கப் பட்டு வேறு வேறு குழுக்களில் இணைக்கப்பட்டு போட்டியில் விளையாடியதே பெருமையாக ஞாபகம் இருப்பதாக கூறுகிறார் மார்க். மார்க்கும் பெடரரும் நேருக்கு நேர் போட்டியில் மோதிய போது, மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த பெடரர் ஒருக்கட்டத்தில் உடைந்து அழ ஆரம்பிக்க, மார்க் ஓடி பொய் அவரை தேற்றி இருக்கிறார். பின்னர் பெடரர் நம்பிக்கையோடு முன்னேற, தான் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் மார்க் அழ ஆரம்பிக்க பெடரர் ஓடி வந்து தேற்றி இருக்கிறார். பொதுவாக, பெடரர் மிகவும் எமோஷனல் டைப். மிக எளிதாக அழுதுவிடுவார்.இப்போதும்.  அந்த ஒரே ஒரு மாட்சை மட்டும் பெடரருக்கு எதிராக ஜெயித்த மார்க், அதன் பின் எப்பொதுமே பெடரரை ஜெயித்ததில்லை.

ஆட்டம் தொடரும்.....


Friday, August 3, 2012

முதல்வன் பெடரர் -1



எனது பள்ளி நாட்களில், நான் நன்றாக ஓடியதால், ஓட்டத்துக்கு முதன்மை கொடுக்கும் கோ கோ என்ற விளையாட்டில் என் பள்ளி குழுவில் இணைத்து கொண்டார் என் விளையாட்டு ஆசிரியர். பல்வேறு பள்ளிகளுக்கு சென்று வெற்றிகள் குவித்த போதும், கோ கோ என்ற விளையாட்டுக்கு உலக அரங்கில் மதிப்பில்லை என உணர்ந்தேன். மெதுவாக கால்பந்து பக்கம் கவனம் செலுத்தி, எனது பள்ளி இறுதி ஆண்டுகளில் பள்ளியின் கால்பந்து குழுவில் விளையாடி, கோவை நேரு ஸ்டேடியம் வரை சென்று விளையாடியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என்ன விளையாடினாலும், வீட்டிலும், பள்ளியின் மதிய உணவு இடைவேளைகளிலும் கிரிக்கெட் ஆடுவது பிடித்தமாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானத்தில் கிட்டத்தட்ட பத்து டீம்கள் குறுக்கும் நெடுக்குமாக விக்கட் நட்டி விளையாண்டதை இப்போது நினைத்து பார்த்தாலும் உடல் உள்ளம் சிலிர்க்கிறது.

எனினும், எனது பள்ளி நாட்களில் இருந்தே, டென்னிஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அப்போது தூர்தர்ஷனில், அரை இறுதி, மற்றும் இறுதி போட்டிகளை மட்டுமே ஒளிபரப்பி வந்தார்கள். குட்டை பாவாடை அணிந்து ஆடும் பெண்கள் தான் என் கவனத்தை டென்னிஸ் பக்கம் திருப்பினார்கள். அவர்களை பார்க்க ஆரம்பித்த நான், மெல்ல ஆட்டத்தின் மீதும் கவனம் கொள்ள, ஆடவர் டென்னிசையும் கவனிக்க ஆரம்பித்து எனது முதல் டென்னிஸ் கதாநாயகன் ஐவன் லென்டில் என கொண்டேன். அப்போது (இப்போதும் கூட) டென்னிஸ் என்பது, மேல்தட்டு கனவான்கள் ஆடும் ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. ஐவன் லேண்டிலும், ஸ்டெப்பி க்ராபும் ஆடும் ஆட்டம் கண்டு, எனக்கும் டென்னிஸ் ஆடவேண்டும் என்று மிகுந்த ஆசை எழுந்தது. கிரிக்கெட் மட்டை கூட வாங்க காசில்லாதவன் டென்னிஸ் ராக்கட்டுக்கு ஆசை படலாமா? எனினும் என்றாவது ஒரு நாள் டென்னிஸ் ஆட வேண்டும் என்ற வெறி மட்டும் என்னுள் இருந்தது.

பலப்பல வருடங்கள் கழிந்து, இரண்டாயிரம் வருஷத்தில் முதன் முதலாக நான் விமானப் பயணத்தில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தபோது என் மனதினுள் எழுந்த முதல் சந்தோசம், நான் டென்னிஸ் ஆட வாய்ப்பு அங்கு கிடைக்கும் என்பதே. அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் மீது நான் சென்ற விமானம் மெல்ல பறந்து கொண்டிருந்தபோது, கீழே நிலத்தில் பச்சை நிறத்தில் நான் பலப்பல டென்னிஸ் கோர்ட்டுகளை கண்டதும், எனது கனவு நனவாகப்போவதை கண்டு குதூகலித்தேன். நான் ஐவன் லென்டிலுடனும், பீட் சாம்ப்ராசுடனும், ஆண்ட்ரே அகாசியுடனும் விளையாடுவதை போல கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்.





அமெரிக்கா சென்று இறங்கிய பின் சரியாக ஒரு ஆண்டு கழித்து தான் எனக்கு டென்னிஸ் ஆட வாய்ப்பு கிடைத்தது. இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டு, அமெரிக்காவின் வியாபாரம் தடைபட்ட நிலையில் ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் 'பெஞ்சில்' இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என் கம்பெனி எங்களுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்திருந்தது. நாங்கள் பகல் முழுவதும் எங்களுக்கு வரப்போகிற நேர்முகதேர்விற்கு எங்களை தயார் படுத்தி கொண்டோம். மாலை நேரங்களில், கோடை காலங்களில் இங்கு இரவு மிகத் தாமதமாக எட்டரை மணிக்கு தான் வரும் என்பதால் மாலை ஐந்திலிருந்து எட்டு வரை டென்னிஸ் விளையாட ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்கு மேனேஜராக இருந்த மிஸ்டர் முரளிக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். வேலை இல்லாத கவலையை போக்க எங்களுக்கு டென்னிஸ் கை கொடுத்தது. எனக்கு முதலில் டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்கவே தெரிய வில்லை. மற்றவர்கள் எனக்கு டென்னிஸ் தெரியாது என்று ஒதுக்கி விட்ட போதிலும், ரமேஷ் என்ற ஒரு நண்பன் எனக்கு பொறுமையாக ராக்கட் பிடிப்பது முதல் எப்படி விளையாட வேண்டும் என்று பொறுமையாக சொல்லிக்கொடுக்க, வெகு சீக்கிரத்தில் டென்னிஸ் எனக்கு பிடித்து போனது.

ஒவ்வொரு நாளும் எப்போடா ஐந்து ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம். இரவு முற்றிலும் கவிழும் வரை ஆடிதீர்த்தோம். மிஸ்டர் முரளியின் உதவியுடன் டோர்ணமேண்டுகள் வைத்து டென்னிஸ் எங்கள் வாழ்கையில் இருந்து இணை பிரியாத ஒன்றாக ஆகிப் போனது. டி வீயில் டென்னிஸ் காண்பித்து விட்டால் உடனே சானல் மாத்த தோன்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருப்பேன்.



டென்னிஸ் உலகத்தில், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் ஆடி வெல்லும் 'மிஸ்டர் கூல்' பீட் சாம்ப்ராஸ் எனது ஆதர்சமாகி போனார். தனது பதினான்கு வருட காரியரில் பதினாலு கிராண்ட் ச்லாம்களை வென்று, உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரராக உருவானார். ஏழு முறை விம்பிள்டன் போட்டிகளின் சாம்பியனாகவும், ஐந்து முறை யு எஸ் ஓபன் சாம்பியனாகவும் இருந்து தொடர்ந்து ஆறு வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் ஆட்டக்காரராக இருந்துள்ளார். சர்வுகளை பேஸ் லைனில் போடுவதும் பின்னர் ரிடர்ன் ஆனா பந்தை நெட்டின் அருகே போட்டு பாய்ன்ட்களை அள்ளுவது இவரது ஸ்பெஷாலிட்டி.

அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், ஆண்ட்ரே அகாசி. ஸ்டெபி கிராப்பை மணம் முடித்து பல்லாயிரக்கணக்கான ஸ்டெபி ரசிகர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானவர்.


பீட் சாம்ப்ராஸ் , அகாசி ஆட்டம் என்றாலே மைதானம் முழுக்க பொறி பறக்கும். ஒவ்வொரு முறையும் பீட் வேல்லும்போதும் மனம் ஆனந்தக் கூத்தாடும். பீட் சாம்ப்ராசுக்கு இணையாக விளையாடக் கூடிய ஒரே நபர் அகாசி என்றே நினைத்திருந்தேன். பீட் சாம்ப்ராஸ் டென்னிஸ் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்று வெளியேறிய பின், அகாசி மட்டுமே டென்னிஸ் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தார்.

அவரையும் வெல்ல ஒருவன் பிறந்து வருவான் என அப்போது எனக்குத் தோன்றவில்லை.


(ஆட்டம் தொடரும்...)

Friday, March 9, 2012

டிராவிட்- பெருஞ்சுவரின் அந்திமம்.


இந்தியா பல போட்டிகளில் தோல்விகளை எதிர் நோக்கி இருக்கும் காலமெல்லாம், தனி ஒரு ஆளாய் நின்று, எதிராளிகளின் வெற்றியை தடுக்கும் ஒரு பெருஞ்சுவரை நின்று இந்தியாவுக்காக ஆடும் வீரர்களில், திராவிட் முதன்மையானவர்.

1996 இல் சிங்கப்பூரில் தனது கிரிகெட் வாழ்கையை துவக்கிய ராகுலுக்கு கிரிக்கெட் இரத்தின கம்பள வரவேற்ப்பை தரவில்லை.தடுமாறிய அவர், இங்கிலாந்து சுற்றுபயணத்தின் பொது அணிக்கு முக்கியமாக தேவைப்பட்ட அவர் அடித்த 95 ரன்கள் அவரை திரும்பி பார்க்க வைத்தது. 1997 இல் சவுத் ஆபிரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட்டில் இவர் அடித்த 143 மற்றும் 81 ரன்கள், இவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என நிரூபித்தது.

பல வேளைகளில் இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றிய பெருமை ராகுலை சாரும். 1999 உலக கோப்பை ஆட்டங்களில் இந்தியாவை இறுதி போட்டி வரை அழைத்து சென்ற பெருமை ராகுளுக்குத் தான். 491 ரன்கள் எடுத்து அவரே முதன்மையான பாட்ஸ்மானாக திகழ்ந்தார்.அதனாலேயே அவருக்கு அடுத்த உலக கோப்பை போட்டியின் அணித்தலைவராக இருக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. வெஸ்ட் இண்டீசில் நடந்த அந்த ஆட்டங்களில் இந்தியா சொதப்பி வெளியேறியதும், மற்றவர்கள் மேல் பழி போடாமல், தானே பொறுப்பேற்று, தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.

2004 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 233 ரன்கள் அடித்து வெற்றி பெற்று தந்த டெஸ்ட் மாட்சை மறக்க முடியுமா.அந்த டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட்களில் ராகுல் விளாசி எடுத்த மொத்த ரன்கள் 619. 2011 உலக கோப்பை வென்ற இறுமாப்பில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி நான்கு போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. திராவிட் மட்டுமே நான்கு போட்டிகளில் மூன்று செஞ்சுரி அடித்து தான் ஒரு சிறந்த பாட்ஸ் மான் என்பதை மீண்டும் பறை சாற்றினார். அவர் மட்டுமே இந்திய அணியை காப்பாற்ற முடியும் என உணர்ந்து அவரை அதுவரை ஒருநாள் போட்டிகளில் மறுதலித்து வந்த இந்திய தேர்வு குழு அவரை மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை தேர்வு செய்தது.

மற்ற அனைத்து வீரர்களும் களம் விட்டு வெளியேறினாலும்,தனக்காக விளையாடாமல் இந்தியாவுகக நேர்த்தியாக விளையாடிய திராவிட், அவரது ஆட்டத்துக்கு ஏற்ப கவனிக்க படாது போனது, அவரின் துரதிர்ஷ்டம் அல்ல. அவரது விளையாட்டை உபயோகித்துக் கொண்டு அவருக்குரிய மரியாதையை தராமல் புறக்கணித்த இந்த தேசத்தின் அவலம் அது.


சச்சின் என்னும் சூறாவளியில் திராவிட் எனும் தென்றலின் இருப்பிடம் வெளியே தெரியவில்லை. திராவிட் செஞ்சுரி அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தாலும், சச்சின் அந்த ஆட்டத்தில் செஞ்சுரி அடிக்கவில்லையே என கவலைப்பட்டவர் தான் ஏராளம். சச்சினுக்கோ, செஹ்வாகிற்க்கோ கிடைத்த அங்கீகாரங்கள், சிறந்த வீராரான ராகுல் ட்ராவிடுக்கு கிடைக்காமல் போனதை பற்றி அவர் கவலைப்படவில்லை. என்னை போன்ற ராகுலின் ரசிகர்களுக்கு மிகுந்த மனவருத்தம் அளிக்கும் விஷயம் அது.

ராகுல் என்றுமே எந்த சர்ச்சைகளிலும் மாட்டாத ஒரு ஜென்டில்மேன். அவரது ஆட்டத்தை போலவே அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவர் என்று அவரை பற்றி அவரது சக வீரர்கள் பாராட்டுவர். மற்றவர்களை பற்றி என்றும் கவலை பட்டதில்லை அவர். அணியின் தேவைக்கு ஏற்றது என்ன என்பதை உணர்ந்து அதனை என்னால் முடிந்தவரை அளித்ததை தான் பெருமையுடன் நினைவு கூறுவதாக, தான் ஓய்வு பெரும் இந்நாளில் அவர்  அறிவித்துள்ளார். ராகுல் ஓய்வு பெறுவதை அறிவித்ததும், அவருக்கான அங்கீகாரம் கிட்டாமலேயே ஓய்வு பெருகிறாரே என எனது தொண்டைக்குழிக்குள் எதோ ஒன்று அடைத்துக்கொண்டு பிதுங்கி கண்களில் முட்டிக் கொண்டு நின்றது நீர்.

We miss you dravid.

Saturday, April 16, 2011

தேசபக்தியும் உலகக் கோப்பையும்...!



மிக மிகத் தாமதமான பதிவு தான். என்ன செய்ய. வேலை பளுவும் சுகவீனமும் என்னை இணையத்தின் எழுத்திலிருந்து சிறிது ஓய்வெடுக்கச் செத்துவிட்டது. (ஐயோ திரும்பவும் வந்துவிட்டானே என பலரது அலறல் எனக்கு கேட்கிறது). 

உலகக் கிண்ண அலசல்:
சுமாரான துவக்கமாய் இந்தியா துவங்கினாலும், நாளுக்கு நாள் அதன் எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. இந்த 2011 உலகக் கோப்பையில் எந்த ஒரு பந்தயத்தையும் இந்தியா எளிதாக வென்று விட வில்லை.கடைசி வரை நம்மை நகம் கடிக்க வைத்த பின்பே வெற்றி இல்லக்கினை தொட்டனர். முன்பு உள்ள இந்திய குழு எல்லாம் இந்த நிலைமையில் நிச்சயமாக கோப்பையை வேன்றிருக்காது. சிறிது சிக்கல் வந்த உடனேயே நம்பிக்கை இழந்து பொல பொல வென விக்கெட்டுகள் சரிந்து மிக விரைவில் தோல்வியை சந்தித்து விடுவோம். ஆனால் இந்த உலகக் கோப்பை இந்திய அணி அத்தகைய அணி அல்ல. சச்சினுக்காக கோப்பை வெல்வோம் என பந்தயம் ஆரம்பிக்கும் முன்பு சூழுரைத்தாலும், இந்திய அணி இப்போது சச்சினை மட்டுமே சார்ந்திருக்க கூடிய ஒரு அணியாக இல்லாமல், ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அழுத்தமாக பதிய வைத்தார்கள். தங்களது தனித்தன்மையை காட்டுவதற்காக ஆடாமல், அணியின் வெற்றிக்காக ஆடியது ஒன்றே நமது தேசத்திற்கு உலககோப்பையை பெற்று தந்தது.

இந்த வெற்றிக் குழுவை ஒருங்கிணைத்து சென்ற மிஸ்டர் கூல் கேப்டன் டோனி இந்த வெற்றிக்கு ஒரு முழு முதல் காரணம் என சொல்லலாம். வெற்றியை இழந்து விடுவோம் என்ற நிலை வந்தால் மற்ற அணித்தலைவர்களின் டென்ஷனை பார்க்கும் வேளையில் தோனி எவ்வளவு சிக்கலான நிலைமைக்கு அணி சென்றாலும் ஒரு யோகியை போன்றதொரு அமைதியை அவரிடம் காண முடிந்தது. அனைத்திற்கும் மேல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அடுத்தடுத்து விக்கட்டுகள் சரிந்ததும் யுவராஜ் சிங்கிற்கு முன்னாள் தான் களத்தில் இறங்கி ஒரு தலைவனுக்கு உரிய பொறுப்புணர்ச்சியுடன் ஆடி வெற்றி ரன்னை முத்தாய்ப்பாக சிக்சருக்கு அனுப்பி, உலககோப்பை கனவுடன் இருந்த நூற்றி இருபத்து சொச்சம் இந்தியர்களின் கனவை தீர்த்துவைத்தார். வெற்றியில் ஆனந்த கூத்தாடிய தன குழுவினரின் மத்தியில் அவர்களை பார்த்து அமைத்தியாக சிரித்தபடி ரசித்து கொண்டிருந்துவிட்டு சச்சினை கோப்பையை தூக்கி முன் செல்லவிட்டு தான் பின்னால் நடந்து சென்று தனது பெருந்தன்மையை நிலை நாட்டினார்.

சச்சின் இருபத்தொரு ஆண்டுகளாக காண்பித்து வரும் கன்சிஸ்டன்சியை இந்த உலக கோப்பையிலும் தக்கவைத்துக் கொண்டார். தனது ஐம்பதாவது ஒரு நாள் செஞ்சுரியை இந்த உலகக் கோப்பையில் அடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்ட வில்லை என்றாலும், இவர் அளவுக்கு தொடர்ந்து இருபத்தொரு ஆண்டுகள் கிரிக்கட் ஆடுகளத்தில் இப்படி கன்சிஸ்டன்சியை உலக அரங்கில் வேறு யாரும் கொண்டதில்லை. அவரது கிரிக்கட் வரலாற்றில் உலக கோப்பையும் கைப்பற்றி முத்தமிட்டுவிட்டார். இன்னமும் இவர் இன்னொரு செஞ்சுரியை ஒரு நாள் ஆட்டத்தில் அடித்து அந்த ரெக்கார்டையும் தக்கவைத்துக் கொள்வார். உலககோப்பை வெற்றி ஊர்வலத்தை சச்சினை தூக்கி கொண்டு வளம் வந்த இருவரில் ஒருவரான, விராட் கொஹ்லி இடம், சச்சினை தூக்கி வந்தது உங்களுக்கு வலிக்கவில்லையா என ரவி சாஸ்த்ரி வினவ...'இருபத்தொரு வருடங்களாக இந்த தேசத்தை தனது தொழில் சுமந்த சச்சினை நாங்கள் இருபது நிமிடங்கள் தானே தூக்கி வலம் வந்தோம்' என டைமிங்காக அடித்த பன்ச் உலக கோப்பை ஆவணத்தின் அழியா பதிவாக நிலைத்து நிற்கும்.

இங்கு அமெரிக்காவில் எங்கள் அலுவாலகத்தில் ப்ரொஜெக்டர் வைத்து உலக கோப்பை போட்டிகளை காண வழி செய்த என் அலுவலகத்துக்கு நன்றி. எங்கள் அலுவலகத்தின் இயக்குனர்களில் ஒருவர் ஒரு பாகிஸ்தானி. பாகிஸ்தானை இந்தியா வென்ற அன்று நடந்த மீடிங்கில் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டதை சொல்லி அவரை வம்புக்கு இழுத்த போது அவர் சொன்ன பன்ச் வசனம்,' நான் ஒரு சிரித்த முகத்தை விட ஐநூறு சிரித்த முகங்களை காணவே ஆசை படுகிறேன். எனவே நானும் இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்'; ( மீசையில் மண் ). இங்கு அமெரிக்காவில் ஆங்காங்கே இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர். பல பார்டிகள் நடந்தேறின.தொலைபேசி வாழ்த்துக்கள் குவிந்தன. இந்தியாவின் தேசபக்தியை உலகெங்கும் பறைசாற்ற கிரிக்கெட் என்ற விளையாட்டு பெரும் பங்கை ஆற்றி உள்ளது .

உலகம் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Saturday, February 27, 2010

சச்சின்..!



வணக்கம். அலுவலக விடயமாக மூன்று வாரங்கள் வெளியூர் சென்றிருந்ததால் பதிவுலகம் பக்கமே வர இயல வில்லை. ஏகப்பட்ட நிகழ்வுகள் அதற்குள். எதோ தூக்கத்தில் இருந்து கண் விழித்தது போல இருக்கிறது. அடுத்த பதிவு எதைப் பற்றி எழுதலாம் என்ற சிந்தனையில் இருந்தபோது, சச்சின் ஒரு நாள் போட்டியில் இருநூறு ரன்கள் அளித்தது என் மனதில் பாலை வார்த்தார். சச்சின் பற்றி எழுத என்ன இருக்கிறது? அது தான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம்மை அவர் சந்தித்து கொண்டே இருக்கிறாரே!. செய்தி தாள்களில், பூஸ்ட் இஸ் தி செக்ரெட் ஒப் மை எனர்ஜி என விளம்பரங்களில், அவ்வப்போது சதமடித்து தொலைகாட்சிகளில்.. இருந்தாலும், சச்சினின் ஒவ்வொரு செய்தியும் சுவாரஸ்யம்தான்.

கிரிக்கெட்டை கடவுளாக வணங்கும் ஒரு தேசத்தின் வரப்ரசாதம் சச்சின் என்றே இந்தியர்கள் நினைக்கிறார்கள். உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், அந்த ஒரு தொடர் தவிர, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குறிப்பாக பாகிஸ்தான் என நாடுகள் கிரிக்கெட்டில் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில், கவாஸ்கர் கபில் அசாருதீன் தவிர கிரிக்கெட்டில் நாயகர்கள் இல்லாது திண்டாடிக் கொண்டிருந்த பொது, பச்சிளம் பாலகனாக, பால் மனம் மாறா பருவ பதின் குழந்தையாக பதினாறு வயதில் சச்சின் நுழைந்து ஒரு சூறாவளியை ஏற்படுத்தியதை நாடுமறக்காது.



1989 இல் தனது உலக அளவிலான கிரிக்கெட் வாழ்கையை பாகிஸ்தான் மண்ணில் துவங்கியபோது, சிறுவன் என சிரித்தார்கள். அவரது முதல் டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்தது வெறும் பதினைந்து ரன்கள். இருபது ஓவர்கள் கொண்ட ஒரு எக்க்ஷிபிஷன் போட்டியில் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த அப்துல் காதிரின் சுழல் பந்து வீச்சை சவட்டி எடுத்து ஒரே ஓவர்களில் 28 ரன்கள் எடுத்து மொத்தம் பதினெட்டு பந்துகளில் ஐம்பத்து மூன்று ரன்கள் எடுத்து உலகத்தையே வாய் பிளந்தது தன்னை கவனிக்க வைத்தார். அதன் பின்னர் கிரிக்கெட்டில் அவர் கடந்து வந்த பாதைகள், ரன்கள், ரெகார்டுகள்,சவால்கள் அனைத்தும்வரலாறு.

இந்திய கிரிக்கெட்டை, சச்சினுக்கு முன் சச்சினுக்கு பின் என பிரிக்கலாம். உலக அரங்கில் இந்தியா வெற்றிகள் குவிக்க ஆரம்பித்தது சச்சினின் வருகைக்கு பிறகு தான். உலக நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை கண்டு இந்தியா அஞ்சி கொண்டிருந்த வேளையில், சச்சின் என்ற மாபெரும் ஷக்தி கொண்ட இந்தியாவை கண்டு பிற நாட்டு விளையாட்டு வீரர்கள் அஞ்ச ஆரம்பித்தனர். சச்சினுக்கு பிறகு சவ்ரவ் திராவிட் என அடுத்தது திறமை மிக்க வீரர்களை இந்தியா கண்டெடுத்து, ஒரு வலிமை மிக்க டீமாக இந்திய கிரிக்கெட் மாறிய அதிசயம் நடந்தது. அவருக்கு தலைமை பொறுப்பை அளித்தபோது, அந்த பொறுப்பை தாங்கிக் கொள்ள தனது சின்ன தோள்களுக்கு வலிமை பத்தவில்லை என உணர்ந்து அதனை கிரிக்கெட் வாரியத்துக்கு உணர்த்தி தான் ஒரு சக விளையாட்டு வீரனாகவே இருக்க விருப்பப் படுவதாகவும், தலைமை ஏற்று இந்திய டீமை நடத்தி செல்ல தனக்கு வலிமை போதாது என வெட்கத்தை விட்டு ஒத்துக் கொண்டவர்.

அவரது தீர்மானத்தை போலவே, தலைமை பொறுப்பை விட்டு விலகியதும், தனது விளையாட்டு சொபிப்பதை தேசமே உற்று கவனித்தது.

எனது நண்பர் ஒரு சச்சின் பிரியர். அவர் பிறந்த தேதியும் சச்சினின் பிறந்த தேதியும் ஒன்று ( ஏப்ரல் 24). எனவே சச்சின் செஞ்சுரி அடிக்கும்போதெல்லாம் தனக்கு நல்ல காலம் என்பது அவரது நம்பிக்கை.( அவருக்கு நல்ல காலம் அடிக்கடி வந்திருக்க வேண்டும். அது தான் சச்சின் அடிக்கடி செஞ்சுரி போடுகிறாரே..!). சச்சின் நன்றாக விளையாடும்போதெல்லாம் அவருக்கு தொலைபேசி வாழ்த்துக்கள் சொல்வது எனது வழக்கமாக போனது. சச்சின் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுத்துவிட்டால், அவரது எதிர்காலத்தை அவரால் அறிந்து கொள்ள இயலாமல் போகும் என்பதே இப்போது அவரது கவலை.

அவருக்கு மட்டுமல்ல. சச்சின் இல்லாத இந்திய கிரிக்கெட் அணியை எந்த இந்தியனாலும் ஜீரணிக்க முடியாது. திராவிட் டெஸ்ட் போட்டியில் மிகவும் சிரமப்பட்டு ஆடி செஞ்சுரி போட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்திருப்பார். ஆனாலும் சச்சின் செஞ்சரி போடவில்லையே என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக இருக்கும். இந்தியா தொற்றுபோனாலும் சச்சின் செஞ்சுரி அடித்திருந்தால் மகிழும் சச்சின் வெறியர்களை நான் அறிவேன்.

இந்திய வாண்டுகளுக்கேல்லாம் சச்சின் ஒரு கடவுள். அதனால் தான் வர்த்தகங்கள் எவ்வளவு கொடிகளை வேண்டுமானாலும் சச்சினுக்கு, விளம்பரங்களில்நடிக்க கொட்டி கொடுக்க தயாராக இருக்கின்றன.

சச்சினின் ரெகார்டுகளை பட்டியல் போட ஒரு பதிவு நிச்சயம் பத்தாது. இருந்தாலும் அவர் சென்ற வாரத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் கடந்த ஒரே வீரர் என்ற ரெகார்ட், அவரது ரேகார்டுகளுக்கேல்லாம் மகுடமாகிப் போனது. உலகம் போற்றும் கிரிக்கெட் வீரரான 'லிட்டில் மாஸ்டர்' கவாஸ்கர், தனது பட்டத்தை சச்சினுக்கு வழங்கியது மட்டுமல்ல..(இருவரும் குள்ளமானவர்கள்.) கபிலுடனான அவரது ஈகோ சண்டைகள் நாடறிந்தது. அவரது அறிக்கை மிகவும் முக்கியமானது. சச்ச்சின் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் கடந்தபோது அவர் சொன்னது..' நான் சச்சினின் கால்களை முத்தமிட விரும்புகிறேன்'

2011 உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தருவதே தனது லட்சியம் என கூறியுள்ளார் சச்சின்.

சச்சின் இருக்கும்போதே இந்தியா உலகக் கோப்பையை வென்றால் தான் உண்டு. ஏன் என்றால்.. சச்சின் இல்லாத இந்திய கிரிக்கெட் அணியை கற்பனை பண்ணி பார்க்க முடியவில்லை.

வாழ்த்துக்கள் சச்சின்.
--

Tuesday, September 15, 2009

ஒரு தாயின் தாகம்!


குழந்தை பிறந்தால் போதும்.நமது பெண்களுக்கு கவனம் எல்லாம் குழந்தையின் மீது. தங்களது கடந்தகால சாதனைகளை மறந்து விடுவார்கள். உடல் மேல் அக்கறை இல்லாமல் பெருத்து விடுவார்கள். தாங்கள் பெரிய நடன கலைஞராக இருப்பார்கள். பெரிய விளையாட்டு வீராங்கனையாக இருப்பார்கள். அலுவலகங்களில் மேலதிகாரியாக இருப்பார்கள்.ஆனால் குழந்தை பிறந்ததும் அனைத்தும் குழந்தைக்காக என தங்களது வாழ்கையை, சிந்தனையை அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்கையையே மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.அத்துடன் அவர்களது லட்சியம் எல்லாம் தொலைந்து விடும்.

2005 இல யு எஸ் ஓபன் சாம்பியன். உலக டென்னிஸ் தரப்பட்டியலில் முதலிடம் என இருந்த பெல்ஜியத்தின் கிம் க்ளைட்ஜெர் முதுகு வலி மற்றும் காயம் காரணமாக டென்னிஸ் இலிருந்து ஓய்வு பெற்றார். ஜூலை 2007 இல் அமெரிக்காவின் கூடைபந்து வீரரான ப்ரியன் லிஞ்சை மனம் முடித்த கிம் 2008 பிப்ரவரியில் ஜடா எல்லீ என்ற பெண் பெற்றெடுத்தார்.
மணக்கோலத்தில் கிம்.

டென்னிஸ் விளையாட்டின் மேல் உள்ள காதலும், மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் உந்தி தள்ள, தன கணவனின் ஊக்குவிப்புடன் மீண்டும் டென்னில் விளையாட்டு பயிற்சிகளை ஆரம்பித்தார். ஜனவரி 2009 இல் தனது தந்தையை இழந்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு வெறியுடன் போராடினார். தரபட்டியலில் இல்லாத ஒரு வீராங்கனையான கிம் கிளைட்ஜெர்ஸ் நிச்சயம் இறுதி போட்டி வரை தாக்குபிடிக்க கூடும் என்றே டென்னிஸ் வல்லுனர்கள் யாரும் நினைக்க வில்லை.

டென்னிசில் அசைக்க முடியாத சக்தியான வில்லியம்ஸ் சகோதரிகள் நேர் செட் கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். டென்னிஸ் தரப் பட்டியலில் பத்தாவதாக இருந்த டென்மார்க்கை சேர்ந்த வோஜ்நியாகியை புலி போல எதிர் கொண்டார்.ஆடுகளத்தின் ஓரங்களுக்கு ஓடி ஓடி இவர் பந்தெடுத்து அடித்து ஆடிய விதம் வோஜ்நிஆகியை திண்டாட செய்தது. கிம்மின் புலி பாய்ச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பதினேழு வயதான வோஜ்நியாகி அந்த இருபத்தி ஆறு வயது தாயிடம் தோற்றுப் போனார்.
ஜடா மற்றும் வெற்றிக் கோப்பையுடன் கிம்.


அந்த முழு போட்டியையும் தனது கணவன் மற்றும் தன் குழந்தையும் பார்க்கதான் ஆடி வெற்றி கொண்டார். போட்டியின் வெற்றி கோப்பையை அவர் கையில் வாங்கும்போது தனது குழந்தை ஜடாவையும் அழைத்து அந்த கோப்பையை அவளிடம் கொடுத்து அக்குழந்தை அந்த கோப்பையை வைத்து விளையாடியது ரசிக்கத்தகுந்த காட்சி.

இறுதியில் அவர் தொலைக்காட்சி நிருபருக்கு பதில் அளிக்கையில் அவர் கூறியது.....

'என் குழந்தை ஜடாவுடன் நான் முழுக்க நேரம் செலவு செய்து நாட்காளாகிவிட்டது.இனி வரும் சில மாதங்கள் எனது நேரம் அவளுக்கும் எனது கணவனுக்கும் மட்டும் தான்.'

சாதனைகள் செய்யத்துடிக்கும் தாய்மார்களுக்கு கிம் கிளைட்ஜெர்ஸ் ஒரு முன்னோடி.

வாழ்த்துக்கள் கிம்!

-----------

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...