Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Wednesday, February 13, 2013

பெண்களுக்கெதிரான தேசம்!




நம் தேசத்தின் ஆணாதிக்கத்துக்கு இதோ, இன்னொரு பலி. காதல் என்ற வன்முறையால், அமிலத்தில் அழுத்தப்பட்டு, தனது சிறகுகள் கருகி, உயிரை விட்டிருக்கிறது இந்த வண்ணத்து பூச்சி. புன்னகை தொலைத்துவிட்ட தேசமோ, தேவதைகளை காக்க வழி அறியாது தலை குனிந்து மௌனமாக நிற்கிறது.

ஏன் இந்த நாடு பெண்களுக்கெதிரான தேசமாக மாறிப் போனது. மொத்தம் உள்ள 135 நாடுகளில், பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவின் இடம் 113. இந்த தேசத்தில் தான் அதிக பெண் தெய்வங்கள் தெய்வமாக வழி படப் படுகிறார்கள்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆணாதிக்க தேசத்தில், பெண்களுக்கெதிரான வன்முறையை ஊடகங்களிலும், சினிமாவிலும் நய்யாண்டி செய்து கொண்டு அவர்களை அவமதித்து வாழும் தேசமிது. பெண் என்றால், காமத்துக்கு உருவாக்கப்பட்ட ஒரு வடிகாலாகத்தான் இந்த நாட்டின் ஒவ்வொரு ஊடக எந்திரமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரம், அவளது எதிர்கால நலன் கருது எழுபது விழுக்காடுகள் வெளியே வருவதே இல்லை. பெண்கள் இப்படித்தான் உடை அணியவேண்டும் எனில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த படுவார்கள் என்று சொல்லி தரும் பெரியோர்கள், தங்கள் வீடு ஆண்கள் பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை சொல்லித் தருவது இல்லை.

நேற்று ஏழு வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் பதிமூன்று வயதுக்குட்பட்ட மூன்று சகோதரிகள், கற்பழிக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

பெண்கள் பயமில்லாமல் நடமாடும் ஒரு இந்தியாவை என்று உருவாக்கப் போகிறோம்? இந்த கேடு கேட்ட நிலைமைக்கு, நம் நாட்டின் ஊடகம் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. பெரும் பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் எல்லாம், அரை குறை ஆடைகளுடன் பெண்களின் படங்களை வெளியிட்டு, மனதின் அடியே அமிழ்ந்து கிடக்கிற பாலுணர்வுகளை வெளியே கொண்டு வருகின்றன. இன்றைய திரைப்படங்களின் வசூலே பெண்களின் இடைகளிலும் தொப்புள்களிலும், மேலும் பல சாமாசாரங்களிலும் தான் இருக்கிறது.

தனக்கு கிடைக்காத பெண் வேறு எவனுக்கும் கிடைக்க கூடாது என தனது கதாநாயகனை விட்டே உலகத்துக்கு பாடம் சொல்லித் தருகிறது. காதல் மட்டுமே உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்றும் காதல் இல்லாவிட்டால் செத்து ஒழி என்றும் பாடம் புகட்டுவது திரைப்படங்கள் தான். பாலியல் வறட்சி நிறைந்த தேசத்தில், மனித அடிமன வக்கிரங்களை வெளியே கொண்டுவர, 'கலாச்சாரத்திற்காக' பாடுபட்டுக் கொண்டிருப்பதாக பீற்றிக் கொள்ளும் எழுத்தாளர்களுமே தங்கள் புத்தகம் விற்பதற்காக, அதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்தால் அடைந்துவிட கூடிய வெறியை ஒருவனுக்கு ஊட்டுவதற்கு அவனது பெற்றோர் தான் மிகப் பெரிய காரணமாக இருக்கிறார்கள். குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதற்காக ஓடி ஓடி வேலை செய்யும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கவனிக்க மறந்து அந்நியமாகிப் போக, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே அறியாமல் போக, குழந்தைகளோ, வளரும் பிராயத்தில் தங்களுக்குள் நடக்கும் ரசாயன உணர்வு மாற்றங்களை அறியாமல் குழம்பிப் பொய் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். கற்பு கற்பு என்று பிதற்றிக் கொண்டு, அதனை பெண்களுக்கு மட்டுமே பொதுவானதாக வைத்து விட்டு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால்,'யாரிடமும் சொல்லாதே மானம் பொய் விடும் ' என அவர்களை மிரட்டி, அவர்களது உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே அமிழ்த்தி புழுங்க வைத்து உயிரோடு ஒவ்வொரு நாளும் சாகடிக்கும் கொடுமை, பாலியல் பலாத்காரத்தை விட கொடுமை.

பாலியல் கல்வி, பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்கட்டும். பெண்களை மதிக்க ஆண்களுக்கு, வீடுகள் கற்றுக் கொடுக்கட்டும். ஆண்களை சிறந்த பள்ளிகூடங்களிலும், பெண்களை மோசமான பள்ளிகூடங்களிலும் சேர்ப்பதை வேறுபாடு காட்டுவதை பெற்ற மனங்கள் உணரட்டும். பெற்றோர்களின் நேரம் தினமும் கொஞ்சம் தங்கள் குழந்தைகளுக்காகவும் இருக்கட்டும். இந்த தேசத்தை நம் குழந்தைகள் தான் காப்பாற்ற வேண்டும்.

Wednesday, August 26, 2009

ஐ டி மக்களும் அவர்களை குறித்து சமுதாயத்தின் பார்வையும்.


அதென்னவோ தெரியவில்லை, ஐ டி துறையில் வேலை பார்ப்பவர்கள் தான் ஒட்டுமொத்த தமிழ் கலாசாரத்தையே அழிக்க வந்த கிங்கரர்கள் என பலரின் மனதில் எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. எதோ டை கட்டிக் கொண்டு ஏ சி ரூமில் அமர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு, ப்லாகுகள் எழுதிக் கொண்டு, வலைத்தளங்களை மேய்ந்துகொண்டு வருவதற்கு அவர்களுக்கு லட்சம் ருபாய் சம்பளம் தருகிறது அவரது அலுவலகங்கள் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை நான் சக பதிவர்களின் பதிவுகளில் இருந்தும், திரைப் படங்களிலும் பார்த்து அடைந்த கவலையின் விளைவே இந்த பதிவு.

சரி ஐ டி மக்களின் மேல் அப்படி என்ன இவர்களுக்கு இருக்கும் கோவம்.

1. அதிகம் சம்பாதிக்கிறார்கள்.நோகாமல் நுங்கு தின்கிறார்கள்.(அதிகம் வேலை செய்யாமல் சம்பாதிக்கிறார்கள்).
2. தண்ணி அடிக்கிறார்கள்.
3. நம் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள்.
4. உள்ளூரில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள்.
5. விலைவாசியை உயர்த்துகிறார்கள்.

இந்திய பொருளாதாரம் இன்று உயர்ந்துள்ளதற்கு யார் அல்லது எது காரணம் என நினைக்கிறீர்கள்? அந்நிய செலாவணி தானே? அதனை இப்போது அதிகமாக ஈட்டிக் கொடுப்பது ஐ டி தானே. இந்தியா இன்று உலக வரைப்படத்தில் ஒரு தவிர்க்க முடியாத பங்கு சந்தையாக வளர்ந்து நிற்பதற்கு காரணம் என்ன? இந்தியா ஒளிர்கிறது மற்றும் ஜெய் ஹோ என மாறி மாறி அரசியல் கட்சிகள் தேர்தல் முழக்கம் செய்வதற்கு காரணம் என்ன? ஐ டி என்ற கணினி பொறியாளர்களால், மென்பொருட்கள் புனையப்பட்டு ஏற்றுமதி செய்யபடுவதால் தானே? அவர்கள் அதிகம் சம்பாதிக்க காரணம் என்ன? அவர்கள் புனைந்த மென்பொருட்கள் அதிகம் விலைக்கு உலக சந்தையில் விலை போவதால் தானே? சரக்குக்கு ஏற்ற கூலி. அல்லது வருமானத்துக்கு ஏற்ற கூலி.

மக்களின் வருமானம் சுழற்சி முறையில் தான் தீர்மானிக்கப் படுகிறது. முதலில் ஆடிட்டர்கள் சம்பாதித்து தீர்த்தார்கள், பின்பு வக்கீல், பின்னர் பெற்றோர்கள், தங்கள் பிள்ளை எஞ்சினியராகவோ அல்லது ஒரு டாக்டராகவோ ஆக்க ஆசைப்பட்டார்கள். அதில் வருமானமும் கௌரவமும் அதிகம் இருந்தது. இப்போது கணினி. எதிர்காலத்தில் வேறொன்று வரலாம்.

உழைப்பவர்கள் தங்கள் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்பட, ஐ டி பொறியாளர்கள் தங்கள் மூளையை மூலதனமாக கொண்டு செயல்படுகிறார்கள்.

சும்மா உக்கர்ந்திருந்து பணம் சம்பாதிப்பது எந்த ஒரு தொழிலும் இயலாத காரியம்.அப்படி ஒரு நிலைமை ஐ டி கம்பெனிகளில் இருந்தது. அதை பெஞ்ச் பீரியட் என சொல்வார்கள். மாடு மாதிரி ஒரு ப்ரொஜெக்டில் உழைத்து முடித்திருப்பான்.அடுத்த ப்ராஜெக்ட் வரும்வரை அவனுக்கு சம்பளம் கொடுத்து காத்திருக்க வைப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு.ப்ராஜெக்ட் முடிந்தால் அடுத்த நாளே அவனுக்கு வேலை பொய் விடும்.

மன உளைச்சல் மன உளைச்சல் என ஒரு எழுத்தாளன் சொல்கிறான் என்றால், அதற்க்கு காரணம் அவன் எழுத்திலேயே மூழ்கி அதை பற்றியே சிந்தித்து அதிலேயே உழன்று திரிவதால் வருகிறது. ஒரு ஐ டி பொறியாளனும் அவ்வாறே. தாது ப்ரோஜெக்ட்க்கு எவ்வாறு ப்ரோகராம் எழுதினால் சரியாக வரும் என அதிலேயே உழன்று குறித்த நாட்களுக்குள் அதனை முடிக்க வேண்டும் என்ற டெட் லைனுக்காக இரவும் பகலும் பாடுபட்டு மன உளைச்சல் அடைய்கிறான். ஒரு புத்தகம் எழுதி முடித்துவிட்டு ஒரு எழுத்தாளன் அடைகிற அதேவிதமான மகிழ்வும் நிம்மதியும் ஒரு ப்ரோக்ராம் முடித்ததும் ஒரு கணிப்பொறி போறியாளனுக்கு ஏற்ப்படுகிறது. எழுத்துக்களை படைக்கு படைப்பாளியான ஒரு எழுத்தாளன் தான் படைப்பதால் கடவுள் என சொல்லிக் கொண்டால், ஒரு ப்ரோக்ராமை படைக்கும் ஒரு கணினி பொறியாளனும் கடவுள் தானே.

தனது மன உளைச்சலை ஒரு எழுத்தாளன் கஞ்சா அல்லது தண்ணி என தீர்த்துக் கொள்கிறான். தனது கணினி பொறியாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களே தண்ணி வாங்கி தருகிறது. இது ஒரு உருவகம் மட்டுமே அனைத்து கம்பனிகளும் தனது தொழிலாளர்களுக்கு தண்ணி வாங்கி கொடுப்பது இல்லை. அனைத்து கணினி பொறியாளர்களும் தண்ணி அடிப்பதும் இல்லை. ப்ராஜெக்ட் முடிந்த பார்ட்டி என்றால் தண்ணி பார்ட்டி சில பெரிய கம்பனிகளில் உண்டு என நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அது ஐ டி கம்பெனிகளில் மட்டும் என்று இல்லை. ஐ டி அல்லாத கம்பெனிகளிலும் உண்டு என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஐ டி மக்களை மட்டும் இந்த அளவிற்கு மட்டம் தட்டுவது ஏன்? அவர்கள் அதிகம் சம்பாதிப்பது தான் இவர்களை உறுத்துகிறதோ?

கலாசாரம் என்றால் என்ன? ஐ டி தொழில் வருவதற்கு முன்னர் கலாசாரம் எப்படி இருந்தது இப்போது சீரழிந்து போவதற்கு. எப்போது கேபிள் டி வீ நமது வரவேற்பறைகளை அலங்கரிக்க ஆரம்பித்ததோ அப்போதே நமது காலாசாரம் சீர்கெட ஆரம்பித்து விட்டது. இன்று கல்லூரிகளிலேயே பல அத்துமீறல்கள் நடக்கின்றன. இன்று செய்தி தாள்களை பிரித்தால் தினந்தோறும் கள்ளக் காதல் கொலைகள்... அவர்கள் எல்லோரும் ஐ டீயில் வேலை பார்பவர்களா?. ஐ டீயில் உள்ள பெண்கள் தண்ணி அடிக்கிறார்கள் என்பது ஒரு குற்றசாட்டு. மலம் அல்லும் தொழிலாளிகளும் சித்தாள் வேலை பார்ப்பவர்களும் தான் தண்ணி அடிக்கிறார்கள். அதற்காக நான் அதனை ஞாயப் படுத்தவில்லை. அதற்க்கு ஒரு காரணம் இருக்கிற்து.

ஐ டி கம்பெனிகள் உருவாக துவங்கியதும், உலகமயமாக்கள் துவங்கிவிட்டது. வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் உள்ள கம்பெனிகளிலும் தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் உள்ள கம்பெனிகளிலும் வேலைக்கு சேர்வது சகஜமானது. வடக்கில் உள்ள பல பெண்கள் தண்ணி அடிப்பதும் சேர்ந்து வாழ்வதும் சகஜமானது. அவர்கள் தெற்கிலும் வந்து அதையே தொடர்ந்தால் கலாசாரம் கேட்டுவிட்டது என ஒட்டுமொத்த ஐ டி மக்கள் அனைவரையும் சாடுவது எந்த விதத்தில் ஞாயம். நிச்சயமாக கலாசார அதிர்வுகள் ஏற்பட்டிருப்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

ஆனால் அது எல்லா துறைகளிலும் உண்டு. எப்படி ஒரு நடிகை காதலித்தால் அது பூதாகாரமாக பார்க்கப்பட்டு செய்தி ஆகிறதோ அதே போல் தான் ஐ டி மக்களின் நிலைமையும். ஒரு முஸ்லிம் தீவிரவாதி குண்டு வைப்பதால், அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பது எவ்வளவு முட்டாள் தனமானதோ அதே அளவு முட்டாள் தனமானது தான் ஒரு சில ஐ டி மக்களின் நடவடிக்கைகளை பார்த்து அனைத்து ஐ டி மக்களும் அப்படி தான் இருப்பார்கள் என முடிவு செய்வது.

உள்ளூரில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வது நமது தாத்தா காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. நமது தாத்தா காலத்தில் ரங்கூன் சென்று சம்பாதித்து கொண்டிருந்தார்கள். நமது அப்பா காலத்தில் வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர் மலேசியா சென்று சம்பாதித்து கொண்டிருந்தார்கள். இப்போது அந்த எல்லைகள் விரிந்து அமெரிக்கா ஐரோப்பா என்று உலகெங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்.

இன்றைய மத்தியதர மக்களின் வாழ்க்கை உயர்ந்திருப்பதற்கு காரணம் ஐ டி துறையே என்பதை மத்தியதர மக்கள் சொல்வார்கள். இது நாள் வரை விமானங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மக்கள் இன்று அதில் ஏறி பயணித்து உலகம் சுற்றும் வாய்ப்பு அவர்களது ஐ டி துறை சார்ந்த மகனாலோ அல்லது மகளாலோ என்பதை அவர்கள் மறுக்க மாட்டார்கள்.

எனக்கு தெரிந்த நண்பர் சொன்னார். தனக்கு பத்தாவது படிக்கும் வயதில் இருந்து அமெரிக்க சென்று வாழவேண்டும் என்ற எண்ணம் என்று. இவரைப் போல சிலரை தவிர அமெரிக்காவிலோ அல்லது இங்க்லாந்திலோ உள்ள பல இந்தியர்களின் கனவு, நன்று சம்பாதித்து விட்டு இந்தியாவில் ஒரு வீடு வாங்கி வந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே.

இந்தியாவில் வேலை செய்தாலும், அயல் நாட்டில் வேலை செய்தாலும் வேலை செய்வதென்னவோ அயல் நாட்டின் ப்ரோஜெக்ட்களுக்காக தானே. இந்தியர்கள் அனைவருக்கும் அரசாங்க உத்தியோகம் கிடைத்துவிடுகிறதா என்ன? இதில் அயல் நாடு சென்று வேலை செய்தால் என்ன இந்தியாவில் இருந்து வேலை செய்தால் என்ன? ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்க வேண்டும் நல்லபடியாக செட்டில் ஆக வேண்டும் என்பது தானே. வைப்புள்ளவன் சம்பாதித்துக் கொள்கிறான். வாய்ப்பில்லாதவன் பழி போடுகிறான்.

சனல் ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முன்னணி வகிக்கிறது. கணிப்பொருள் ஏற்றுமதியும் அவ்வாறுதானே. பொருள் மட்டும் தானே வேறு. பின் எப்படி ஐ டி மக்கள் மட்டும் அந்நிய நாட்டுக்கு சோரம் போவதாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்?

விலைவாசியின் ஏற்றத்துக்கு காரணம் அரசியல் வாதிகளின் திட்டங்கள் மட்டுமே. வீடு வாங்குவதிலும் மனைகள் வாங்குவதிலும் சரியான திட்டங்கள் இல்லாமையே வீடு விலை உயர்வுக்கு காரணம். விலை ஏற்றத்திற்கு சரியான நிர்ணயம் இல்லாமையே வீடுகளின் உயர்வுக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

நிற்க...
பணத்தை அள்ளிக் கொடுப்பதால், பணத்தின் மதிப்பு ஐ டி மக்களிடையே குறைந்து வருத்வது தெளிவாகிறது. எதிர்காலத்துக்கு சிறிதும் சேமிக்காமல், இருக்கும் காசை செலவு செய்ய துடிக்கும் இளைய சமுதாயத்தில் சிலர் பார்ட்டி கல்செரில் சிக்கி அல்லாடுவது தெரிகிறது.
மற்றும் வேறு ஊர்களில் வந்து வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கையில் காசு இருக்கும் சுதந்திரத்தால், யார் நம்மை பார்க்க அல்லது கேட்க போகிறார்கள் என்ற நினைவில் லிவிங் டுகெதர் என்ற சேர்ந்து வாழும் கலாசாரம் தனி மனித ஒழுக்கத்தை சீரழித்து வருகிறது.

இதனையே சமூகம் கலாசாரம் கேட்டுவிட்டது என கூப்பாடு போடுகிறது. வாழ்க்கையில மன உளைச்சலை தீர்க்க எவ்வளவோ வழிகள் உண்டு. மதுவிலும் மாதுவிலும் மட்டும் மன அமைதி தேடுவது வாழ்கையை சின்னாபின்னமாக்கிப் போடும்.

எதிலும் ஒரு அளவு வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். மேலும் கணவனும் மனைவியும் வேலைக்கு செல்ல ப்ரோஜெக்ட்களும் டெட் லைன்களும் குடும்பங்களின் மேல் உள்ள கவனத்தை குறைப்பதால் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் டே கேர் களிலும் வளர வேண்டிய சூழல் வரலாம். இதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
குடும்பத்திற்கென்று குறித்த நேரம் ஒதுக்க வேண்டும். ப்ராஜெக்ட் இல்லையென்றால் அடுத்த நாளே வேலையே விட்டு உங்கள் கம்பெனி தூக்கி விடலாம். உங்கள் குடும்பம் மட்டுமே கடைசி வரும் உங்கள் கூட வரும். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் நேரம் குடும்பம் உங்களுடன் இருக்காது.

இது மற்ற வேலைகளிலும் உண்டு என்றாலும், அதற்கும் இந்த சமூகம் ஐ டி மக்கள் மேல் தான் பழி போடும்.
-----------------------------------------

Friday, July 10, 2009

மொழி அழிதல்...!


(இந்த பதிவை தனது youthful.vikatan.com இல் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றி.)

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதொன்றும் காணோம். என பாடினான் சுப்ரமணிய பாரதி. ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் மட்டுமே நல்ல மொழி என தமிழை சிதைத்து வாழ்வோரால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் அபாயம் எட்டி உள்ளது.

குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் பல தமிழர்களின் குழந்தைகள் தமிழை அறிந்திருக்கவில்லை. மேலும் தமிழில் பேசினால் கேவலம் என்ற எண்ணமும் அவர்களிடையே மேலோங்கி உள்ளது. அதற்க்கு காரணம் அக்குழந்தைகளின் பெற்றோரும் அதன் உறவினர்களும் தான். இப்படியே போனால், ஒரு சந்ததியே தமிழறியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் பல குழந்தைகள் வெளியே ஆங்கிலம் அறிந்தாலும் ஆங்கிலத்திலேயே பேசினாலும் வீட்டிலும் அதனையே தொடர்வது, தமிழ் மொழியின் அழிவின் தொடக்கம். பெற்றோரும் குழந்தயிடத்தே ஆங்கிலத்தில் உரையாடுவதால் குழந்தைக்கு தமிழ் மொழி மறக்கிறது. மேலும் அக்குழந்தை விடுமுறைக்கு இந்தியா செல்லும்போது அங்கு வாழும் அக்குழந்தையின் தாத்தா பாட்டி மற்றும் உறவினர்கள் அதனை அமெரிக்காவின் ஆங்கிலத்தில் பேச சொல்லி அது பேச இவர்கள் புல்லரித்து புளங்காகிதம் அடைவதை காணும் குழந்தைகள், தமிழ் ஒரு மோசமான மொழி என்றும், ஆங்கிலம் பேசுவதால் மட்டுமே தனக்கு மரியாதை மற்றும் கெளரவம் என்று நினைக்கிறது.

அமெரிக்காவிலிருந்தோ ஐரொப்பாவிலிருந்தொ இந்தியாவிற்கு தொலை பேசும் குழந்தைகளை ஆங்கிலத்தில் பேசுமாறு அதன் பெற்றோர் பணிக்கின்றனர். அப்போது தான் தன குழந்தைக்கும் தனக்கும் கெளரவம் என நினைக்கின்றனர். இதனை தொலைபேசி மூலம் பாராட்டும் அக்குழந்தையின் உறவினர்களும் ஆங்கிலமே சிறந்தது என்ற என்னத்தை அந்த பிஞ்சு உள்ளத்தில் விதைக்கின்றனர்.

குழந்தைகளுக்கு 'அம்மா இங்கே வா வா ' என சொல்லி கொடுத்தால் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறீர்களே.'பா பா ப்ளாக் ஷீப்' அல்லது ரெயின் ரெயின் கோ அவே ' பாடல்களை சொல்லி கொடுங்கள் என அறிவுரைக்கிறார்கள்.

தமிழில் பேசுவதையே அகௌரவமாக நினைக்கும் குழந்தைகள் எழுதவும் படிக்கவும் தமிழை நிச்சயம் நாடப் போவதில்லை. எனது நண்பனின் குழந்தையாய் அமெரிக்காவில் உள்ள பள்ளியில் சேர்க்க சென்றபோது அக்குழந்தையின் அமெரிக்க ஆசிரியை கூறிய வார்த்தைகள் இவை.

'நீங்கள் வீட்டில் உங்கள் தாய் மொழியில் மட்டுமே உங்கள் குழந்தையுடன் உரையாட வேண்டும். தாய் மொழி தாய்க்கு நிகரானது. ஆங்கிலத்தை நீங்கள் வீட்டில் கற்றுக் கொடுக்க அவசியம் இல்லை. அதனை இங்குள்ள பள்ளிகளும் தொலைக்காட்சி பெட்டிகளும் தாமாக கற்று கொடுத்து விடும். தாய் மொழியை மறந்த குழந்தைகள் தாயை மறந்த குழந்தைகள் ஆகிவிடும். உங்கள் கலாச்சாரத்தையும் மறந்து இரண்டும் கேட்டான் ஆக எனது மாணவர்கள் ஆகிவிடக்கூடாது '

என்ன சத்தியமான வார்த்தைகள். எப்போதும் சதா ஆங்கிலத்தில் உரையாடி கொண்டிருந்த என் நண்பனின் குழந்தையை ஒரு ஐந்து நிமிடம் தமிழில் உரையாட சொன்னேன். அக்குழந்தை திக்கி திக்கி தமிழ் பேசுவதை நான் கண்டு சந்தொஷப்பட்டுகொண்டிருந்தபோது, என் காதுபட அக்குழந்தையின் தாய் சொன்னது, 'எதற்கு குழந்தையை துன்புறுத்துகிறீர்கள் அவளுக்கு ஆங்கிலம் தான் வருகிறது என்றால் ஆங்கிலத்திலேயே பேசட்டுமே'. குழந்தைகளுக்கு எது நல்லது எது கேட்டது என தெரியுமா? அதனை கற்றுக் கொடுப்பது நாம் அல்லவா? இப்போதே கற்றுகொடுத்தால் தானே மொழியின் மீது குழந்தைகளுக்கு பற்று வரும்?

இதற்க்கு இடையே தமிழகத்தில் இரண்டாவது மொழிப்பாடமாக சில பிரகஸ்பதிகள் பிரெஞ்சு மொழியை எடுத்துக் கொள்கிறார்கள். எதோ இவர்கள் பிரான்ஸ் சென்று பிரெஞ்சு புரட்சி செய்வது போல.

நான் ப மா கா வோ அல்லது திருமாவின் விடுதலை சிறுத்தைகளோ அல்லது சீமானின் சீடனோ அல்ல.,தூய தமிழில் பேசவேண்டும் என கோடி பிடிக்க. தமிழ் மொழியை பேசவும் எழுதவும், படிக்கவும் நம் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். அது நமது தலையாய கடமை. இல்லையேல் தமிழ் மொழி அடுத்த சந்ததியினர் இடையே அழிந்து விடும் ஆபத்து உண்டு.

இவ்வளவு பேசி கொண்டிருக்கிறேன். அமெரிக்கா குடிமகனான என் ஒரு வயது மகன் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. இப்போது அவனுக்கு புரிந்த நமக்கு புரியாத மழலையில் பெசிகொண்டிருக்கிறான். பிற்காலத்தில் எந்த மொழியில் பேசுவானோ என கவலையாக இருக்கிறது...

Thursday, February 5, 2009

இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதியை ஏன் குற்றம் சொல்கிறார்கள்?


இலங்கை தமிழர்கள் அனாதைகளாக வீடுகளற்று நாடற்று உறவினர் இழந்து உடைமைகள் இழந்து எப்போது தாங்கள் குண்டுகளுக்கு இரை அவோமோ என அஞ்சி துடித்து கொண்டிருக்கின்றனர். மருத்துவமனையில் குண்டு, பாதுகாப்பு பகுதியில் குண்டு என ஊடகங்கள் எழுதி வருகின்றன.
ராஜபக்ஷே சகோதரர்கள் தமிழர்களை இலங்கையில் இருந்து சுத்தமாக துடைத்து எடுத்து விடுவது என கங்கணம் கட்டி கொண்டு தங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் 'வெள்ளை ஊர்தியில்' அடியாட்கள் வைத்து கொன்று குவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் 'போர் நிறுத்தம்' என அலறினாலும் செவிமடுக்காது தங்களது ஆணவ போக்கினால் அழிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சரி இதில் கருணாநிதி எங்கு நுழைந்தார். நாள் தோறும் ஏடுகளில் அரசியல் வாதிகள் அவரை விமர்சித்தும் (காங்கிரஸ் அரசியல்வாதிகள் தவிர) வலை பதிவாளர்கள் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கியும் வருகின்றனர்.
சில வலைத்தளங்களை படிக்க முடிவதில்லை. அப்படி நா கூசும் வகையில் அவரை வறுத்தெடுக்கிறார்கள். இது நியாயம் தானா? அவர் நினைத்தால் போர் நிறுத்தம் கொண்டு வந்து இலங்கையில் அமைதி திரும்பி விடுமா?
முதலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வருவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு குழு கூறுகிறது. இந்தியா தனது ராணுவத்தை இலங்கைக்கு உதவியாக அனுப்பி உள்ளது என்றும் கேரளா வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கிறது என்றும், ராடர்களை வழங்கி வருகிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். இந்தியா எதற்காக இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு சோனியா காந்தி பழி வாங்குகிறார் என கூறுகின்றனர். அது அவ்வளவு எளிதானதா என தெரியாவிட்டாலும் இந்தியா இலங்கைக்கு உதவி வருவதற்கான காரணம் அரசியல் சம்பத்தப்பட்டதல்ல. இராணுவம் சம்பந்தப்பட்டது என்பதே எனது அனுமானம்.
இலங்கை இந்தியாவிற்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. வடக்கே பாகிஸ்தானும், கிழக்கில் பங்களா தேசும் மேற்கில் சீனாவும், இந்தியாவை எதிரிகளாகவே பார்க்கின்றன. இந்தியா இலங்கைக்கு உதவா விட்டால் இலங்கை நிச்சயமாக பாகிஸ்தானிடம் உதவிகள் கேட்க கூடும். அல்லது கிழக்கு ஆசியாவில் கால்கள் பதிக்க திட்டமிட்டு கொண்டிருக்கும் அமெரிக்காவும் நாக்கை சுழற்றிக்கொண்டு காத்திருக்கிறது. அமெரிக்கா மட்டும் இலங்கைக்கு உதவ ஆரம்பித்தால் இலங்கை அமெரிக்காவின் ராணுவ தளங்களில் ஒன்றாகி விடும். பின் இந்தியாவிற்கு சோதனை தான்.
எனவே தான் மற்றவர்கள் உதவும் முன்பு தான் முந்தி கொண்டு இலங்கையின் நேசத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என இந்திய எண்ணி இருக்க கூடும். உதவிகளை வெளிப்படையாக செய்ய நேர்ந்தால் உலகில் பல இடங்களில் இருக்கும் தமிழர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதற்காகவே இத்தனை ரகசியமாக கை ஆள்கிறதோ என அவதானிக்க வேண்டி இருக்கிறது.

சரி இந்தியா உதவிகள் செய்தால் விடுதலை புலிகள் பலம் இழந்து போக வாய்ப்பு இருக்கிறது. விடுதலை புலிகள், என்றும் இலங்கை ராணுவத்தை பார்த்து பயந்தது இல்லை. ஆனால் ஆள் பலத்தில் இந்திய ராணுவத்தை பார்த்து தான் அஞ்சுகிறது.
அரசியல் காரணங்கள் இவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்லவா. மற்ற மொழிக்காரர்களிடம் இல்லாத உணர்வு தமிழனுக்கு உண்டு. தமிழனுக்கு ஒன்று என்றால் உணர்ச்சி பிழம்பாகிவிடுவான் தமிழன். இதற்க்கு வரலாறே சான்று. இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் 25 ஆண்டு கால வரலாறு. சம உரிமை வழங்குவோம் சுயாட்சி வழங்குவோம் என இலங்கை அரசு சொல்லும் கூற்றை தமிழர்களும் விடுதலை புலிகளும் நம்ப தயாராக இல்லை.இப்போது கூட பாதுகாப்பு பகுதிகளுக்கு வாருங்கள் என தமிழர்களை அழைத்து அதே இடத்தில் குண்டு போட்டு தமிழர்களை கொன்று குவித்து வருகிறது இலங்கை அரசு.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக லசங்கா என்ற பதிப்பாசிரியரை அடியாளை வைத்து கொன்றது இலங்கை அரசாங்கம். அரசுக்கெதிராக கருத்து கூறியமைக்காக 'ஜெர்மனி சுவிஸ் போன்ற தூதர்களை வெளியேற்ற தயங்க மாடோம்' என கோத்தபய ராஜபக்ஷேவை கொக்கரிக்க வைத்தது.
இதையெல்லாம் பார்க்கும்போது உகாண்டாவை ஆண்ட சர்வாதிகாரி இடி அமீன் நினைவுக்கு வருகிறார். உகாண்டா நாட்டினர் தவிர வேற யாரும் அந்த நாட்டில் வாழக்கூடாது என துரத்தி அடித்தவர் அவர். அரசுக்கெதிராக யாரும் கருத்து கூறினால் அதற்குப்பின் அவர்களை காண முடியாது.
தற்ப்போது உகாண்டாவின் ஆட்சி தான் இலங்கையில் நடக்கிறது என்று எண்ணும் வண்ணம் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

சரி கருணாநிதியை எதற்காக எல்லாரும் சாட வேண்டும். அவர் தன்னை தமிழர்களின் காவலர் என கூறி கொள்பவர். மக்களும் அவ்வாறுதான் நினைக்கிறார்கள்.போரின் பிடியில் தவிக்கும் தமிழர்களின் நிலை அவருக்கு தெரியாமலா இருக்கும்? வாரத்துக்கு ஒரு அறிக்கை அவரிடம் இருந்து வருகிறது. 'இலங்கை தமிழனுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் உயிரை விடவும் தயார்' என்று கூறினார். ஆனால் அவருக்கு தசைபிடிப்புக்காக இப்பொது ஊசி போட்டு கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

'இலங்கை தமிழனுக்காக பதவி துறக்கவும் தயார் ' என கூறிய கருணாநிதி 'எப்போது திண்ணை காலி ஆகும் என எதிர்கட்சிகள் எண்ணுகிறார்கள் அவர்கள் ஆசை வீண்' என நய்யாண்டி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு திண்ணை மட்டுமே இப்போது குறிக்கோளாக பொய் விட்டது. எங்கோ தூத்து குடியில் பிறந்த ஒரு தமிழனுக்கு இருந்த தமிழின உணர்வு, தமிழ் காவலராக தன்னை பிரகடனம் செய்த்கொண்ட ஒரு மாபெரும் தலைவருக்கு இல்லாமல் போனது வேதனை. தீ குளித்த முத்துகுமரனின் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் வழங்கி விட்டதோடு இவரது தமிழின உணர்வு முடிந்து விட்டது.
பிரணாப் இலங்கை செல்கிறார் போர் நிறுத்தம் குறித்து பேசுவார் என சொல்லப்பட்டது. அவரும் சென்றார். 'இலங்கையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது' என அப்பட்டமான பொய் அறிக்கை விடுகிறார்.
இலங்கை தமிழருக்காக கூண்டோடு ராஜினாமா என்று கூறிய கருணாநிதி இன்று திண்ணை காலி ஆவதை பற்றி நினைக்கும் காரணமென்ன?. அவர் பார்க்காத பதவியா, அவர் அமராத முதலமைச்சர் நாற்காலியா? இந்த தள்ளாத வயதிலும் எதற்கு பதவி மேல் மோகம்?. அவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவி கொடுத்த பிறகாவது அவரது பதவி மோகம் அவரை விட்டு விலகுகிறதா என பார்க்க வேண்டும்.
இதற்காக மற்ற கட்சிகள் தமிழனுக்காக வாளேந்தி போர் புரியும் என்று நான் சொல்ல வில்லை. அதற்கான அருகதையும் அவைக்கு இல்லை. கருணாதியை மட்டுமே தமிழர்கள் நம்பி வந்ததால் தான் இந்த பதிவு.

கருணாநிதி நினைத்தால் அவருடைய பதவி துறந்து போர் நிறுத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்ய முடியும். போர் முகத்தில் தவிக்கும் எம் தமிழனை காப்பாற்ற முடியும். என்று தமிழும் தமிழனும் தனக்கு முக்கியம் என கருதி பதவி துறந்து தமிழனுக்காக போராடுகிறாரோ அன்று தான் அவர் தமிழ் காவலன். இல்லையேல் அவர் வெறும் திண்ணை காவலன் மட்டுமே.

Saturday, November 8, 2008

கடவுளும் நானும்...


கடவுள் யார்?...கடவுள் இருக்கிறாரா..?
கடவுளை யாரும் கண்டதுண்டா?..
எதற்காக மதத்தின் பெயரால் குண்டுகள் வெடிக்கின்றன?
எதற்காக மதத்தின் பெயரால் வீடுகள் பற்றி எரிகின்றன?
எதற்காக பல உயிர்கள் மதத்தினால் மதம் பிடித்தவர்களால் பறிக்கப்படுகின்றன?

கடவுள் தனக்காக தான் படைத்த மனிதனின் உயிர்களை காவு கேட்டாரா?தான் படைத்த மனிதர்களின் உயிர்களை, தனது பெயரால் சிதைக்கும்போது...கடவுளுக்கு கோவம் வராதா..?


எனக்கு நினைவு தெரிந்த நாளில் எனக்கு 'தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்' என சொல்லி தரப்பட்டிருக்கிறது. தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்துமா? இன்னமும் அப்படி தான் நம்பி கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஏதாவது துன்பம் நேரும்போதெல்லாம், நான் முன்பு செய்த தப்புக்காக தான் எனக்கு தண்டனை கிடைக்கிறது என நினைத்து கொள்வேன். ஏதாவது தப்பு செய்யும்போதெல்லாம் 'ஐயோ இப்படி செய்கிறோமே.. இதனால் நமக்கு என்ன துன்பம் நேர போகுதோ' என எண்ணி இருப்பேன். எனக்கு துன்பம் வரும் வேளையில் ' ஒ அன்று செய்த தப்புக்கு இன்று நமக்கு தண்டனைக் கொடுத்தான் ஆண்டவன் என்றே நினைத்து கொள்வேன்.

சரி தண்டனை கொடுத்தது ஆண்டவன் தான் என எப்படி எனக்கு தெரிந்தது? எனக்கு அந்த கடவுள் மேல் ஆணையாக தெரியாது. என் என்றால் நான் கடவுளை கண்டதில்லை. ஆனால், கடவுள் நமது செயல்கள் ஒவ்வொன்றும் பார்த்து கொண்டிருக்கிறார் என்ற நினைவே என்னை பல சமயங்களில் தப்பு செய்ய விடாமல் தடுத்திருக்கிறது. அப்படி என்றால் கடவுள் தேவை தானா?

என்னை பொறுத்தவரை.. கடவுள் நிச்சயமாக தேவை.. ஆனால் அது அடுத்தவனின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்காதவரையில்...? எனது சாமியை கும்பிடாதவனை நான் பழித்ததும் இல்லை, அடுத்தவன் சாமியை நான் பழித்ததும் இல்லை.


எது ஒன்று நம்மை தப்பு செய்ய விடாமல் தடுக்கிறதோ அது நமக்கு தேவையா இல்லையா? சிலர் ' மனசாட்சிக்கு பயந்தா போதும் ' என்று சொல்வார்கள். அவர்களுக்கு தெரியாதா 'மனம் ஒரு குரங்கு ' என்று. ஆசை என்ற சொல்லே மனசு என்பதில் இருந்து தானே வந்தது. ஆசை அளவுக்கு மீறும்போது தானே தப்பு செய்யவே செய்கிறோம். எனவே மனசாட்சிக்கு பயப்படுவது என்பது அங்கேயே அடிபட்டு போகிறது. உதாரணமாக ஐஸ்வர்யா ராயை பார்க்க ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கே ஆசைப்படுவது தப்பு தானே. அதையும் மனசு தானே படுகிறது?

சரி ஆனால் தான் கண்டிராத கடவுளை, படங்களிலும் சித்திரங்களிலும், கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளிலும் மட்டுமே பார்க்கப்பட்ட கடவுளுக்காக, எதற்காக இந்த போராட்டம்? தங்களது உயிர்களை பணயம் வைக்கும் அளவுக்கு கடவுள் என்ன செய்துவிட்டார் இவர்களுக்கு... தனது இனத்தையே அழிக்கும் அளவுக்கு இவர்களின் வெறி ஏன் உச்சத்திற்கு போகிறது? இதனால் இவர்களது கடவுளின் அந்தஸ்த்து பெருகி விடுமா? அல்லது கடவுள் இவர்களின் தியாகங்களையும் தீவிரவாதத்தையும் பார்த்து ஆனந்த கூத்தாடுவாரா?( நான் எல்லா மதங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்) பணம் கொடுத்து மதம் மாற்றம் பண்ண கடவுள் சொல்கிறாரா? ...

கடவுளுக்கு நான் பயப்படுகிறேன் என்று கூறினது போல.. மனித வடிவங்களில் கடவுள்களை நான் வணங்குகிறேன். பாபா ஆம்தே, அன்னை தெரசா போன்றவர்கள்..தங்கள் செய்கைகளால் கடவுளை காக்கவில்லை. கடவுளுக்காக துப்பாக்கி ஏந்தவில்லை. கடவுளுக்காக சூலாயுதம் தரிக்கவில்லை. கடவுளுக்காக வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு மனிதர்களை ரத்த சகதிக்குள் பிணங்களாக மற்ற வில்லை. தங்கள் செய்கைகளால் அவர்களே கடவுளாக மாறிவிட்டனர் என்பது தான் உண்மை.


கடவுள் படைத்ததாக சொல்லப்படும் உயிர்களை காவு வாங்குவதன் மூலம் நீ கடவுளை முட்டாளாக்கி கொண்டிருக்கிறாய். அந்த கடவுளை விட்டு வெகு தூரம் சென்று கொண்டிருக்கிறாய்...
கடவுளை காக்கும் வேலை உனக்கு வேண்டாம். உலகத்தையே காக்கிற கடவுள் தன்னை காப்பாற்றிக்கொள்ளமாட்டாரா? தன்னையே காப்பாற்றிக்கொள்ள தெரியாத கடவுள், கடவுள் தானா? நீ உன்னையும் உன் தாய் தகப்பனையும் உன் பொண்டாட்டி புள்ளைகுட்டியையும் காப்பாற்றிகொள். உலகத்தை காக்கும் கடவுள், தன்னை காப்பாற்றி கொள்வார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...