Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Friday, March 16, 2012

ஈழத்தின் அவலம்.

சனல் 4 தயாரித்துள்ள இலங்கை கொலை களங்கள் இரண்டாம் பாகம். மென்மையான இதயம் உள்ளோர் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம்.




சனல் நாலு வெளிப்படுத்திய, ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் வெறித்தாண்டவம், உடல் பதைபதைப்பை உண்டு பண்ணியது. பலருக்குள் தாமும் விடுதலை புலியாக மாறிடலாமா என உள்ளுக்குள்ளே ஒரு அக்கினி கனன்று கொண்டு இருக்கும். இந்த வெறியாட்டத்தை பின்னின்று நடத்திய இந்தியாவின் மத்திய அரசாங்கம், அமெரிக்கா ஐ நாவில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை எப்படி எதிர் கொள்ளபோவது என்று திருடனுக்கு தேள் கொட்டுவதைப் போல கையை பிசைந்து நின்று கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் கழித்து விழித்து கொண்டுள்ள உலக சமூகம், அப்போது ஈழத்தில் இருந்து கேட்ட அவல குரல்களை உதாசீனப் படுத்தியதால் தானே இத்தனை பேர்கள் மாண்டார்கள்.. கொடுமைகளில் சிக்கி உழன்றார்கள். அப்போது எல்லாம் வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது உண்மைகள் வெளி வந்து நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கையில், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பச்சோந்தி அரசியல் வாதிகள் அறிக்கை விடுகிறார்கள். காலை உணவை உண்டுவிட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுவிட்ட தமிழக தலைவரின் உண்ணாவிரதத்தை மறக்க முடியுமா? தனது அரசியல் நாற்காலிக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்று பம்மாத்தாக பிரதமருக்கு கடிதங்கள் மட்டுமே எழுதி கொண்டிருந்தார். பிரதமர் என்ன இவரது 'உடன்பிறப்புகளில்' ஒருவரா? இவரது கடிதம் கண்டு உணர்ச்சிவசப்பட?

ஒரு ராஜீவ் காந்தி என்ற இந்தியனின் கொலைக்காக ஒரு லட்சம் ஈழத்தமிழர்களை காவு கொடுத்தார்களே? அந்த ஒரு லட்சம் ஈழதமிழர்களுக்காக ஒரு லட்சம் இந்தியர்களாவது கண்ணீர் சிந்தி இருப்பார்களா? உலகம் வாழும் அனைத்து தமிழனும், நான் உட்பட, என்ன செய்து விட முடிந்தது. இந்தியாவை ஆண்ட அரசியல் வாதிகளை நோக்கி தான் நம் அத்துணை விழிகளும் இருந்தது. போரை இயக்கிய மத்திய அரசியல் வாதிகளையும் , தன குடும்பத்துக்காக, ஒரு லட்சம் மக்கள் மடிந்த போதும் கடிதம் மட்டும் எழுதி கொண்டிருந்த தலைவனையும் முதலில் குற்றவாளிகளாக்கி கைது செய்ய வேண்டும்.

தமிழனுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் ஒரே அரசியல் வாதி வைக்கோ மட்டுமே. வேறு எவனுக்கும் இலங்கை தமிழனின் வாழ்கையை பற்றி சிந்திக்கவும், அதனை பற்றி பேசவுமே அருகதை கிடையாது.

இருந்தாலும் தற்போதைய நிலையில், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும், காங்கிரஸ் உட்பட, இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே குரலில் வேண்டுக்கோள் விடுத்துள்ளன. இத்தனையும் இந்தியா ஏற்க மறுத்து மாற்றி வாக்களித்தால், புவியில் உள்ள எந்த தமிழனும், தமிழின வரலாறும், ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தையும், அரசியல் வாதிகளையும் மன்னிக்கவே மன்னிக்காது.

வாய்மையே வெல்லும்.

Saturday, December 11, 2010

உண்மைத் தமிழன் சீமான்..!

சீமான்..!
தற்போதைக்கு ஈழ தமிழர்கள் தங்கள் விடிவெள்ளியாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர். சில எழுத்தாளர்களைத் தவிர்த்து பலரும் விடுதலைப் புலிகளின் மேலும் இலங்கை அரசின் மேலும் பழிகளைப் போட்டு ஈழத் தமிழர்களின் சாவுக்கு பரிதாபம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்த வேளையில்...ஈழத்தமிழர்களுக்காக ஓங்கி குரல் கொடுத்து இயக்குனர்களை ஒருங்கிணைத்து ராமேஸ்வரத்தில் தைரியமாக இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக உண்மைகளை போட்டு உடைக்க.. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஈழ மக்களை , தங்களுக்காக ஒருவர் பேசி சிறை சென்று இருக்கிறாரே என திரும்பி பார்க்க வைத்தார் சீமான்.

ஈழம் என்று ஒன்றை இருப்பதையே மறந்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள், பொதுத் தேர்தல் முடிந்த வேளையில்.. கொத்து கொத்தாக ஈழத்தில் மடிந்து கொண்டிருந்த தமிழர்களை நினைத்து பார்க்காமல், தன் குடும்பங்களின் வாரிசுகளுக்கு ஏற்ற துறையை வேண்டி சக்கர நாற்காலியில் தமிழர் தலைவராக கருதப்பட்டவர் டில்லியில் பேரம் பேசி கொண்டிருக்க, ஈழ போரில் இலங்கை அரசுக்கு உறுதுணையாக பல உதவிகளை செய்து கொண்டிருந்த இந்தியாவுக்கு எதிராக, தமிழனுக்கு ஆதரவாக  இவரும் இவரது ஆதரவாளர்களும் செய்த பிரச்சாரத்தில்... பல பெரிய காங்கிரஸ் தலைகள் மண்ணில் உருள காரணமாய் இருந்தவர்.

பல தமிழ் மீனவர்களை நிர்வாணப் படுத்தி, சித்திரவதைப்படுத்தி சின்னாபின்னமாக குத்துயிரும் குலை உயிருமாக அனுப்பிக் கொண்டிருந்தது சிங்கள ராணுவம். பலரின் உயிர்களையும் பறித்து கொண்டு வெறும் பிணங்களை திருப்பி படகில் அனுப்பி கொண்டிருக்க, அதனை எதிர்த்து  ஒரு தீர்மானம் கூட இயற்றாமல், பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார் தமிழக முதல்வர். அதனை கண்டித்தவர் சீமான்.  நீங்கள் எங்கள் மீனவர்களை அடித்தால், நாங்கள் உங்கள் மாணவரை அடிப்போம் என்று சொன்னதற்காக, சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், மீண்டும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பொதுத் தேர்தல் மிக அருகில் வருகிற நேரத்தில், இவரது பிரச்சாரத்தின் சூடு தாங்காமல் எங்கே தாங்கள் கவிழ்ந்து விடுவோமோ என எண்ணி சிறையில் அடைத்தவர்களின்  வாயில் மண். நீதி தேவதை இன்னமும் கண் விழித்துக் கொண்டிருப்பதால், சீமானை, தேசிய பாதுகாப்பின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது நீதி மன்றம்.

நம் தொப்புள் கோடி சொந்தங்களான இலங்கை தமிழர்கள் அங்கே சித்ரவதைப்படுத்தப்பட்டு , சீரழிக்கப்பட்டு கண்டந்துண்டமாய் கொந்தப்பட்டு கொல்லப்பட்டு கொண்டிருக்கையில், இங்கு முதல்வரின் சொந்தங்கள் பதவிக்காக அடித்துக் கொண்டிருந்ததை, தொலைபேசி உரையாடல்களை ஒலிபரப்பியதன் மூலம் புண்ணியம் கட்டிக் கொண்டன ஊடகங்கள். போர்குற்றங்களை இழைத்த ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து தமிழர்களின் ரோஷத்தில் ஒரு சதவிகிதம், நம் உள்ளூர் தமிழர்களுக்கு இருந்திருந்தால், இந்தியாவில் காலடி வைத்திருக்கமாட்டான் அந்த கொடுங்கோலன். கோவையில் ஒரு  சிங்கள அமைச்சர் விரட்டி அடிக்கப்பட்டார். அவரை இங்கிருந்து அழைத்தவர்களும் தமிழின துரோகிகளே. அவரையும் விரட்டி அடித்திருக்க வேண்டாமா..?

சானல் 4  போன்ற ஊடகத்துறைகள் இல்லாவிட்டால், இலங்கையில் அவர்கள் தமிழர்களுக்கெதிராக போட்ட பேயாட்டங்கள் வெளியே தெரியாமல் போய் இருக்கும். ஊடகத்துறை இல்லா விட்டால்.. பதவிக்காக எம் முதல்வரின் சொந்தங்கள் போட்ட ஆட்டங்களும் வெளியே தெரியாமல் போய் இருக்க கூடும். சில பத்திரிக்கைகளும் சில தொலைகாட்சிகளும் உண்மையாய் இருப்பதால் தான் திருவாளர் பொது ஜனம் சிறிது நம்பிக்கையோடு நடமாடிக் கொண்டிருக்கிறான்.

ஏழு மாதங்களுக்கு முன் நாம் தமிழர் என்ற இயக்கம் கண்ட சீமான் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அடுத்த பொது தேர்தலில் போட்டி இடப்போவதாய் சூளுரைத்திருக்கிறார். தன்னை சிறையில் இட்ட அரசுக்கு பழி வாங்குவதற்காக, பதட்டத்தில் திட்டங்கள் போடாமல், தமிழர்களுக்காக என திட்டங்கள் போட வேண்டும். அரசியலுக்கு வந்ததும்.. பதவிக்கு ஆசைபடாமல், இப்போது போலவே எப்போதும் போராட்ட குணத்தோடு தமிழர்களின் துணை நிற்கவேண்டும்.

இப்போது உலக தமிழர்கள் முழுமையாக நம்பி இருப்பது.. உங்களைத்தான் சீமான்!..
--

Friday, May 14, 2010

வலி!

உறைந்து போன விழிகளும்,
ஒடுக்கப்பட்ட  மொழிகளும்,
உடைந்து போன கனவுகளும்,
நடுக்கமுள்ள நனவுகளும்,

தொலைந்து போன உறவுகளும்,
தவிக்கப் பற்றும் இரவுகளும்,
உலர்ந்து போன ரத்தமும்,
தெளிந்து போகா பித்தமும்,

காற்றில் நாறும் தசைகளும்,
பழுதுபட்ட விசைகளும்,
மறைந்து போன மனிதமும்,
மாற்றி எழுதிய  கணிதமும்,

தமிழும் எம்மை கைவிட..
உமிழும் நீராய் நாம் உளோம்.
அமிலமான வாழ்கையே..
அடுத்த அடுத்த வேளையே..

இருந்தும் ஒளியை நோக்கிய
பயணம் முடியவில்லையே..
விடியல் காணும் நாள் நினைத்து..
வலி மரத்து போனதே..!

--ஈழப் படுகொலைகளின் நினைவாக...
--

Sunday, April 18, 2010

காந்தி தேசமே... ஈரம் இல்லையா...?!!!



எங்கிருந்தோ பத்துக்கு மேற்பட்ட தீவிரவாதிகள், விசா பாஸ்போர்ட் எதுவும் இன்றி, பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு திருட்டு தோணி மூலம் மும்பை வந்து இருநூறு பேரின் உயிரை உருவி நாட்டின் பாதுக்காப்பையே எள்ளி நகையாடிவிட்டு செல்லலாம். ஒரு எண்பது வயது மூதாட்டி, ஆறு மாத விசாவோடு மருத்துவத்திற்காக தமிழகத்தின் மண்ணை மிதிக்க கூடாதாம். 

பல நாடுகளில் இருந்து பல ஊர்களில் இருந்து வந்து இங்கு வாழலாம்.  வந்தாரை வாழ வைக்குமாம் தமிழ் நாடு...ஆனால் தமிழ் தாயை மட்டும் திருப்பி அனுப்பி விடுமாம். காரணம். பாதுகாப்பாம்.உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது. தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு பூரண கும்ப மரியாதை. போர் வாசனை அறியாத ஒரு தமிழ் மூதாட்டிக்கு தமிழகத்தில் கால் வைக்க மறுப்பு. 

தமிழர்களின் மேல் உள்ள மத்திய அரசின் வெறுப்பும், தமிழகத்தை ஆள்வோரின் பச்சோந்தி தனமுமே இதற்க்கு காரணம்.

ஒரு இந்தியனாக, ஒரு  தமிழனாக இருப்பதற்கு வெட்கி தலை குனிகிறேன்.

Thursday, March 12, 2009

தேர்தல் 2009



மக்கள் அறிவாளிகளாகவும் அரசியல்வாதிகள் முட்டாள்களாகவும் மாறும் காலம் ஒன்று உண்டு என்றால் அது தேர்தல் நடக்கும் காலம் மட்டுமே.

அரசியல்வாதிகள் தங்கள் தொகுதிப் பக்கம் ஒதுங்கி தங்கள் முகங்கள் மக்கள் மறந்துவிடாமல் இருக்க தேர்தல் காலத்தில் மட்டுமே கை கூப்பியபடி எட்டிப் பார்ப்பார்கள். அவர்கள் போடும் கூழை கும்பிடை பார்த்தால், கோவில் வாசல்களில் ஆலய முற்றங்களில், பள்ளிவாசலின் வாசல்களின் 'அம்மா தாயே' என அழைக்கும் அந்த ஜீவன்களின் ஞாபகங்கள். அவர்களின் கும்பிடல் வயிற்றுக்காக...அரசியல் வாதிகளின் கும்பிடு வோட்டுக்காக.மக்களுக்கு வைக்கும் வேட்டுக்காக ....

இன்றைய அரசியல் காட்சிகளை நினைத்தால் எதோ மசாலா படம் பார்ப்பதை போல உணர்வு, நகைச்சுவை, சண்டை காட்சிகள், குடும்ப செண்டிமெண்ட், கண்ணீர் காட்சிகள் என கலவையான ஒரு திரைப்படம் தான் தேர்தல் 2009
தமிழக அரசியலில், இலங்கை தமிழருக்கு தனி ஈழம் அமைய அதிமுக போராடும் என ஜெயலலிதா உண்ணாவிரத பந்தலில் போட குண்டு இலங்கை ராணுவ குண்டை விட பயங்கரமாக வெடித்து கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் இறந்து போனதுக்கு அப்புறம், இத்துணை நாள் இலங்கை தமிழருக்கு எதிராக பேசி வந்த ஜெயலலிதா திடீரென ஞான உதயம் வந்தது போல தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமென பேசி இருப்பது இந்த படத்தின் மிக சிறந்த நகைச்சுவை. அழுகிற குழந்தை கூட இந்த கூற்றை கண்டு சிரிக்க ஆரம்பித்து விடும். தேர்தலுக்காக கொள்கையை கூட மாற்றி கொள்ளும் கட்சிகள் கண்டு நகைப்பதா அழுவதா.


இவ்வளவு நாட்களும் சோனியாவின் கடைக்கண் பார்வை படாதா என ஏங்கி கிடந்தவர், அது தனக்கு கிட்டாது என தெரிந்ததும், தமிழக உணர்வாளர்களின் ஈழ தமிழ் சகோதரர்களின் சகோதரபாசம் அறிந்ததும், தலைகீழாக குப்பற அடித்த பல்டி தான் அவர் மேற்படியாக பேசி உள்ளது.
அடுத்து சகோதர பாசம். வைகோ, ஜெயலலிதாவை தனது கொள்கைக்கு ஆதரவாக மாற்றி விட்டது வேண்டுமானால் அவருக்கு கிடைத்த வெற்றியாக எண்ணி கொள்ளலாம். இருந்தாலும் எத்தனை தடை வந்தாலும் தனது விடுதலை புலிகளின் ஆதரவை அவர் விளக்கி கொள்ளவில்லை. ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருந்த போதிலும் அவர் தனது கொள்கைகளை விட்டுகொடுக்கவில்லை. அந்த வகையில் வைக்கோ பாராட்டுக்கு உரியவரே. இருந்தாலும் அவ்வப்போது அவர் கண்ணீர் விட்டு அழுவது... அவர் நிஜமாக அழுகிறாரா இல்லை நடிக்கிறாரா என்று குழப்பமாக இருக்கிறது. அவர் ஜெயலலிதாவை சகோதரி என விளிக்கும் போதெல்லாம் நகைப்பாக இருக்கிறது.


மருத்துவர் ராமதாஸ் என்ன தான் ஈழ மக்களிடம் பாசம் கொண்டிருந்தாலும், தனது மகனின் பதவி மீது அதைவிட மேலாக பாசம் வைத்துள்ளார். ஆளும் கட்சியான மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்கிறது என கூறினாலும் அதற்க்கு பதிலாக தனது மகனை பதவியை விட்டு ராஜினாமா செய்ய சொல்ல வில்லை.இன்னமும் பம்மிக்கொண்டு தான் இருக்கிறார். ஒருவேளை தேர்தலில் தோற்று தனது மகனின் பதவி காலியானால் வேண்டுமானால் ஈழ தமிழர்களின் மேல் அவரின் பாசம் போங்க கூடும். அவருக்கு வேண்டியதெல்லாம் தன் மகன் அன்புமணிக்கு மத்தியில் ஒரு பதவி. தனது சீடனான காடு வெட்டி குரு எவ்வளவு அட்டூழியம் செய்தாலும் அதை எல்லாம் கண்டுக்காமல் அவருக்கு ஒரு பதவி. அவ்வளவு தான். அதை தரும் கூட்டணி எங்கு இருந்தாலும் அதற்க்கு தாவ அவர் தயார். அவர் எப்போதும் ஒரே கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருந்தது கிடையாது.

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்தின் நிலைமை தான் மிக மோசமாக இருக்கிறது. அவரது எழுச்சியை பார்த்து அட, திராவிட கழகங்களுக்கு மாற்றாக இந்த கட்சி நல்லதொரு கட்சியாக இருக்கும் போல இருக்கிறதே என நிமிர்ந்து உட்கார்ந்தால், அவர் பொது தேர்தலை மனதில் வைத்து, இலங்கை தமிழர் பிரச்னையை ஆதரிக்கலாமா வேண்டாமா, ஆதரித்தால் காங்கிரஸ் தன்னை கை விட்டு விடும் ஆதரிக்காவிட்டால் தமிழகம் தன்னை கை விட்டு விடும் என பதுங்கி கொண்டார். அவ்வபோது 'பொது தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என மக்கி போன முழக்கங்களுடன் பின் தங்கி விட்டார். பொது தேர்தலை தனியாக தன்னால் சந்திக்க முடியுமா என்ற பயம் அவருக்கு வந்து விட்டது. அவரிடம் முன்பு இருந்து வீரியம், திருமங்கலத்தில் டெபொசிட் இழந்ததும் காணாமல் போய் விட்டது.

திருமாவளவன் வீரம் சொரிய பேசுகிறார். எடுத்த கொள்கையில் உறுதியாக நிற்கிறார். அவர் அஞ்சி நான் கண்டதில்லை. எதற்காகவும் அவர் தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் அவரின் தொண்டர்களில் பலர் குண்டர்கள். வர் பந்த் ஏதாவது நடத்தி விட்டால் அரசு பேருந்துகள் தான் பாவம். குறைந்தது இருவது பேருந்துகள் பற்றி எரிகின்றன. முப்பது பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து தூள் தூளாகின்றன. இப்படிப்பட்டவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா? திருமாவளவன் தனது கட்சி தொண்டர்களை அடக்க வேண்டும்.அவர்களுக்காக பரிந்து பேசாது அவர்களின் தவறுகளை எடுத்துரைக்க வேண்டும்.


சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒன்று இருப்பதே சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் மட்டும் தான் தெரியும் என்பதால் அதனை விட்டு விடுவோம்.
தமிழக காங்கிரஸ், படத்தில் வில்லன் முகாமில் இரண்டு குரூப் கொண்டு ஒன்றை ஒன்று தாக்கி கொள்வது போல எப்போதும் முட்டலும் முனகலும் தான். தனியாக நிச்சயமாக காங்கிரஸ் தமிழகத்தில் வெல்ல முடியாததால் எப்போதும் அதற்கு ஒரு திராவிட கட்சியின் துணை தேவைப்படுகிறது. இப்போது ஈழத்து கல்லறைகளின் நிழல் படிந்து கறைபடிந்து பரிதாபமாக நிற்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் வென்றாலும் கூட தமிழகத்தில் மிக கடினமே. ஈழத்தமிழ சகோதரர்களின் இழப்புகளுக்கு, எப்போதோ நடந்து போன ராஜீவ் காந்தி என்ற தனி மனிதனின் கொலைக்கு ஒட்டு மொத்த ஈழ தமிழர்களை பழி வாங்கும் சமயமாக இதனை கருதுவதால், உணர்ச்சி மிக்க தமிழன் நிச்சயம் ஒட்டு போடா மாட்டான். இந்த நிலையை உணர்ந்து தனது கொள்கை மறந்து ஒட்டு வங்கியை அறுவடை செய்ய பார்க்கிறது அதிமுக.
கருணாநிதி இத்திரைப்படத்தின் சிறந்த குணசித்திர பாத்திரம். ஈழ தமிழர்களின் துயர் துடைக்க உயிர் துறக்க தயார் என்று காமெடி பண்ணுவதாகட்டும், அனைத்து எம்பிக்கள் ராஜினமா என வில்லத்தனம் பண்ணுவதாகட்டும், உடன்பிறப்பே உன்னை நெஞ்சில் சுமக்கிறேன் என கண்ணீர் வடிப்பதாகட்டும், அற்புதமான நடிப்பு.அவருக்கு அவருடைய குடும்பத்தில் உள்ள ஒன்று விட்ட சகோதரன் மகன், சகலையின் பேத்தியின் கணவனின் மூத்த சகோதரியின் பேத்தி என குடும்பத்தில் ஒருத்தர் விடாமல் ஏதாவது பதவியை கொடுத்து விட வேண்டும் என முனைப்புடன் திரியும் அவருக்கு ஈழத்தமிழன் செத்தால் என்ன, ஈழத்தமிழச்சிகள் கற்பழிக்கப்பட்டால் என்ன, தமிழ் நாடு எக்கேடு கேட்டால் என்ன தமிழன் எப்படி போனால் என்ன. அழகிரியின் மகளுக்கு பதவி கனிமொழிக்கு பதவி, இன்னும் உதயநிதியின் பய்யன் மட்டும் தான் பாக்கி. கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் வரலாறு காணாத வீழ்ச்சி இம்முறை தமிழகத்தில் இருக்க போகிறது எனவே நான் எண்ணுகிறேன்.

தமிழகத்தில் காங்கிரஸ் கவிழ்ந்தாலும், தேசிய அளவில் காங்கிரஸ்க்கே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மிக்க படித்த மன்மோகன் சிங்கும் ப சிதம்பரமும் மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை பெற்றிருக்கிறார்கள். ப ஜ க விற்கு இருக்கும் கூட்டணிகள் எல்லாம் பிரிந்து போக அது மேலும் காங்கிரசுக்கு பலம் சேர்க்கிறது. வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது அதற்க்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாகி இருக்கிறது. முலாயம் சிங்கும் மனது வைத்தால் காங்கிரசை வீழ்த்துவது கடினம். எனினும் மத்தியில் அமரபோகும் கட்சியை நிர்ணயிக்க போவது தமிழனின் ஒட்டு தான்.
இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, February 5, 2009

இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதியை ஏன் குற்றம் சொல்கிறார்கள்?


இலங்கை தமிழர்கள் அனாதைகளாக வீடுகளற்று நாடற்று உறவினர் இழந்து உடைமைகள் இழந்து எப்போது தாங்கள் குண்டுகளுக்கு இரை அவோமோ என அஞ்சி துடித்து கொண்டிருக்கின்றனர். மருத்துவமனையில் குண்டு, பாதுகாப்பு பகுதியில் குண்டு என ஊடகங்கள் எழுதி வருகின்றன.
ராஜபக்ஷே சகோதரர்கள் தமிழர்களை இலங்கையில் இருந்து சுத்தமாக துடைத்து எடுத்து விடுவது என கங்கணம் கட்டி கொண்டு தங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் 'வெள்ளை ஊர்தியில்' அடியாட்கள் வைத்து கொன்று குவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் 'போர் நிறுத்தம்' என அலறினாலும் செவிமடுக்காது தங்களது ஆணவ போக்கினால் அழிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சரி இதில் கருணாநிதி எங்கு நுழைந்தார். நாள் தோறும் ஏடுகளில் அரசியல் வாதிகள் அவரை விமர்சித்தும் (காங்கிரஸ் அரசியல்வாதிகள் தவிர) வலை பதிவாளர்கள் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கியும் வருகின்றனர்.
சில வலைத்தளங்களை படிக்க முடிவதில்லை. அப்படி நா கூசும் வகையில் அவரை வறுத்தெடுக்கிறார்கள். இது நியாயம் தானா? அவர் நினைத்தால் போர் நிறுத்தம் கொண்டு வந்து இலங்கையில் அமைதி திரும்பி விடுமா?
முதலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வருவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு குழு கூறுகிறது. இந்தியா தனது ராணுவத்தை இலங்கைக்கு உதவியாக அனுப்பி உள்ளது என்றும் கேரளா வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கிறது என்றும், ராடர்களை வழங்கி வருகிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். இந்தியா எதற்காக இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு சோனியா காந்தி பழி வாங்குகிறார் என கூறுகின்றனர். அது அவ்வளவு எளிதானதா என தெரியாவிட்டாலும் இந்தியா இலங்கைக்கு உதவி வருவதற்கான காரணம் அரசியல் சம்பத்தப்பட்டதல்ல. இராணுவம் சம்பந்தப்பட்டது என்பதே எனது அனுமானம்.
இலங்கை இந்தியாவிற்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. வடக்கே பாகிஸ்தானும், கிழக்கில் பங்களா தேசும் மேற்கில் சீனாவும், இந்தியாவை எதிரிகளாகவே பார்க்கின்றன. இந்தியா இலங்கைக்கு உதவா விட்டால் இலங்கை நிச்சயமாக பாகிஸ்தானிடம் உதவிகள் கேட்க கூடும். அல்லது கிழக்கு ஆசியாவில் கால்கள் பதிக்க திட்டமிட்டு கொண்டிருக்கும் அமெரிக்காவும் நாக்கை சுழற்றிக்கொண்டு காத்திருக்கிறது. அமெரிக்கா மட்டும் இலங்கைக்கு உதவ ஆரம்பித்தால் இலங்கை அமெரிக்காவின் ராணுவ தளங்களில் ஒன்றாகி விடும். பின் இந்தியாவிற்கு சோதனை தான்.
எனவே தான் மற்றவர்கள் உதவும் முன்பு தான் முந்தி கொண்டு இலங்கையின் நேசத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என இந்திய எண்ணி இருக்க கூடும். உதவிகளை வெளிப்படையாக செய்ய நேர்ந்தால் உலகில் பல இடங்களில் இருக்கும் தமிழர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதற்காகவே இத்தனை ரகசியமாக கை ஆள்கிறதோ என அவதானிக்க வேண்டி இருக்கிறது.

சரி இந்தியா உதவிகள் செய்தால் விடுதலை புலிகள் பலம் இழந்து போக வாய்ப்பு இருக்கிறது. விடுதலை புலிகள், என்றும் இலங்கை ராணுவத்தை பார்த்து பயந்தது இல்லை. ஆனால் ஆள் பலத்தில் இந்திய ராணுவத்தை பார்த்து தான் அஞ்சுகிறது.
அரசியல் காரணங்கள் இவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்லவா. மற்ற மொழிக்காரர்களிடம் இல்லாத உணர்வு தமிழனுக்கு உண்டு. தமிழனுக்கு ஒன்று என்றால் உணர்ச்சி பிழம்பாகிவிடுவான் தமிழன். இதற்க்கு வரலாறே சான்று. இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் 25 ஆண்டு கால வரலாறு. சம உரிமை வழங்குவோம் சுயாட்சி வழங்குவோம் என இலங்கை அரசு சொல்லும் கூற்றை தமிழர்களும் விடுதலை புலிகளும் நம்ப தயாராக இல்லை.இப்போது கூட பாதுகாப்பு பகுதிகளுக்கு வாருங்கள் என தமிழர்களை அழைத்து அதே இடத்தில் குண்டு போட்டு தமிழர்களை கொன்று குவித்து வருகிறது இலங்கை அரசு.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக லசங்கா என்ற பதிப்பாசிரியரை அடியாளை வைத்து கொன்றது இலங்கை அரசாங்கம். அரசுக்கெதிராக கருத்து கூறியமைக்காக 'ஜெர்மனி சுவிஸ் போன்ற தூதர்களை வெளியேற்ற தயங்க மாடோம்' என கோத்தபய ராஜபக்ஷேவை கொக்கரிக்க வைத்தது.
இதையெல்லாம் பார்க்கும்போது உகாண்டாவை ஆண்ட சர்வாதிகாரி இடி அமீன் நினைவுக்கு வருகிறார். உகாண்டா நாட்டினர் தவிர வேற யாரும் அந்த நாட்டில் வாழக்கூடாது என துரத்தி அடித்தவர் அவர். அரசுக்கெதிராக யாரும் கருத்து கூறினால் அதற்குப்பின் அவர்களை காண முடியாது.
தற்ப்போது உகாண்டாவின் ஆட்சி தான் இலங்கையில் நடக்கிறது என்று எண்ணும் வண்ணம் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

சரி கருணாநிதியை எதற்காக எல்லாரும் சாட வேண்டும். அவர் தன்னை தமிழர்களின் காவலர் என கூறி கொள்பவர். மக்களும் அவ்வாறுதான் நினைக்கிறார்கள்.போரின் பிடியில் தவிக்கும் தமிழர்களின் நிலை அவருக்கு தெரியாமலா இருக்கும்? வாரத்துக்கு ஒரு அறிக்கை அவரிடம் இருந்து வருகிறது. 'இலங்கை தமிழனுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் உயிரை விடவும் தயார்' என்று கூறினார். ஆனால் அவருக்கு தசைபிடிப்புக்காக இப்பொது ஊசி போட்டு கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

'இலங்கை தமிழனுக்காக பதவி துறக்கவும் தயார் ' என கூறிய கருணாநிதி 'எப்போது திண்ணை காலி ஆகும் என எதிர்கட்சிகள் எண்ணுகிறார்கள் அவர்கள் ஆசை வீண்' என நய்யாண்டி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு திண்ணை மட்டுமே இப்போது குறிக்கோளாக பொய் விட்டது. எங்கோ தூத்து குடியில் பிறந்த ஒரு தமிழனுக்கு இருந்த தமிழின உணர்வு, தமிழ் காவலராக தன்னை பிரகடனம் செய்த்கொண்ட ஒரு மாபெரும் தலைவருக்கு இல்லாமல் போனது வேதனை. தீ குளித்த முத்துகுமரனின் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் வழங்கி விட்டதோடு இவரது தமிழின உணர்வு முடிந்து விட்டது.
பிரணாப் இலங்கை செல்கிறார் போர் நிறுத்தம் குறித்து பேசுவார் என சொல்லப்பட்டது. அவரும் சென்றார். 'இலங்கையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது' என அப்பட்டமான பொய் அறிக்கை விடுகிறார்.
இலங்கை தமிழருக்காக கூண்டோடு ராஜினாமா என்று கூறிய கருணாநிதி இன்று திண்ணை காலி ஆவதை பற்றி நினைக்கும் காரணமென்ன?. அவர் பார்க்காத பதவியா, அவர் அமராத முதலமைச்சர் நாற்காலியா? இந்த தள்ளாத வயதிலும் எதற்கு பதவி மேல் மோகம்?. அவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவி கொடுத்த பிறகாவது அவரது பதவி மோகம் அவரை விட்டு விலகுகிறதா என பார்க்க வேண்டும்.
இதற்காக மற்ற கட்சிகள் தமிழனுக்காக வாளேந்தி போர் புரியும் என்று நான் சொல்ல வில்லை. அதற்கான அருகதையும் அவைக்கு இல்லை. கருணாதியை மட்டுமே தமிழர்கள் நம்பி வந்ததால் தான் இந்த பதிவு.

கருணாநிதி நினைத்தால் அவருடைய பதவி துறந்து போர் நிறுத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்ய முடியும். போர் முகத்தில் தவிக்கும் எம் தமிழனை காப்பாற்ற முடியும். என்று தமிழும் தமிழனும் தனக்கு முக்கியம் என கருதி பதவி துறந்து தமிழனுக்காக போராடுகிறாரோ அன்று தான் அவர் தமிழ் காவலன். இல்லையேல் அவர் வெறும் திண்ணை காவலன் மட்டுமே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...