Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Friday, April 20, 2012

டைட்டானிக் - மரணத்தின் வயது 100!





                                               டைட்டானிக் ஒரிஜினல் படம்.

மனிதன் தனது சாதனைகளுக்கு கர்வப்படும் போதெல்லாம் அவனுக்கு மரண அடி விழுவது வரலாற்றில் பதியப் பட்டிருக்கிறது. அதற்க்கு ஒரு உதாரணமாக திகழும் சின்னம் தான் டைட்டானிக் என்ற மாபெரும் கப்பலின் வீழ்ச்சி.


வைட் ஸ்டார் லைன் (White Star Line) என்ற கம்பனியால் 1909 இல் ஆரம்பிக்கப்பட்டு 1911 ஆண்டு அந்த நாளைய மதிப்பின் படி 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டி முடிக்க பட்ட டைட்டானிக் உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.


1912 இல் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முதல் கப்பல் என்ற கர்வத்தில், எந்த ஒரு இடர்பாட்டினையும் சமாளிக்க கூடிய கப்பல் என்பதால் அறுவது உயிர் காக்கும் படகுகள் கொள்ளக் கூடிய கப்பலில் வெறும் இருவது படகுகளை மட்டுமே கொண்டு சென்றனர். கப்பலில் பெரும் செல்வந்தர்களுக்கு இடையே, ஐரோப்பாவின் அயர்லாந்தில் இருந்தும், இங்கிலாந்திலிருந்தும் மற்றும் பல ஏழை ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு பஞ்சம் பிழைக்க வந்த, பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மக்கள் இருந்தனர்.


ஏப்ரல் பதினைந்து 1912, அட்லாண்டிக் சமுத்திரத்தில், மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த வேளையில் கப்பலில் இருந்தவர்கள் , தங்கள் கப்பலின் மிக அருகே ஒரு பெரும் பனிப்பாறை இருப்பதை அறிந்து கப்பலை திருப்ப எத்தனிக்கையில் பக்கவாட்டில் மோதிய கப்பலின் எஞ்சின்கள் பழுதாகி, முழுக ஆரம்பித்தது. பெருஞ்செல்வர்கள் பெரும்பாலானோர் தப்பிவிட, பெண்களும் குழந்தைகளும் காப்பற்றப் பட ஏழை மனிதர்கள் கப்பலுடன் மூழ்கினர்.பயணித்த 2224 பேரில், உயிர் பிழைத்தவர்கள், 710 தான். 1514 பேர் அந்தப் பனியில் உறைந்து இறந்து போனார்கள்.



ஸ்ட்ராஸ் மற்றும் ஐடா.

டைட்டானிக் படத்தில் வருவது போல ரோஸ் என்றோ ஜாக் என்றோ எந்த காதல் கதையும் இல்லை. ஆனால் அதையும் மிஞ்சும் சுவாரஸ்ய நிகழ்வுகள் உண்டு என்கிறது வரலாறு.

மேசிஸ் என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தின் அதிபர் ஸ்ட்ராசும் அவரது மனைவி ஐடாவும் அந்த கப்பலில் இருந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர்காக்கும் படகில் தப்பி செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டதும், கணவரை விட்டு தான் மட்டும் தப்பிக்க எண்ணமில்லை எனக் கூறி, தனது வேலைக்காரியை தனக்கு பதிலாக ஐடா அந்தப்படகில் அனுப்பி விட்டு, தனது காதல் கணவனுடன் உயிர் கப்பலில் மூழ்கி உயிர் இழந்தார். செல்வா சீமாட்டியாக இருந்தாலும், காதல், எல்லாவற்றையும் விட மேலானது என நிரூபித்தார்.


கப்பலில் கண்ட்ரோல் அறையில் வேலைப் பார்த்த பொறியாளர்கள், கப்பலில் கடைசிவரை மின்சாரம் பழுதாகாமல் தப்பி செல்பவர்களுக்கு கப்பலில் இருந்த விளக்கொளி குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் தப்பி செல்ல கடைசி படகு காத்திருக்கிறது என்று சொல்லப்படதற்க்கு செவி சாய்க்கவில்லை அவர்கள். கடைசி வரை தங்கள் கடமைகளை நிறைவேற்றி விட்டு கப்பலுடன் சேர்ந்து மடிந்து போனார்கள்.

மார்கரெட் பிரவுன் என்ற பெண்மணி தான் ஒரு சீமாட்டியாக இருந்தாலும் அந்த நள்ளிரவில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஆறாவது எண் கொண்ட படகை செலுத்தி அதில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் கார்பெதியா என்ற இன்னொரு கப்பலுக்கு சென்று சேர்த்து கணவனை இழந்த பெண்களுக்கு, பணக்கார குடும்பத்து பெண்களிடம் இருந்து பணம் வாங்கி அந்த காலத்திலேயே 'பத்தாயிரம் ' அமெரிக்க டாலர்களை வசூலித்து அவர்களிடம் அளித்து 'அன்சிங்கபுல் மார்கரெட் பிரவுன்' என்று அவரது பெயரை வரலாறு பதித்தது. அவரை பற்றிய புத்தகங்களும் திரைப்படமும் கூட வெளிவந்தது.

பெஞ்சமின் எனும் பெரும் செல்வந்தர், 'எல்லோரும் மேல் தளத்துக்கு ஓடுங்கள், கப்பல் மூழ்கப் போகிறது' என்று அறிவித்ததும், தன அறை சென்று கோட் சூட் போட்டுகொண்டு தன்னை அழகாக்கியபடி வெளி வந்தார். ' என் மனைவியிடம் சொல்லுங்கள். நான் ஒரு ஜென்டில் மேனை போல மறித்து போனேன் என்று' என்றபடி கப்பலில் மூழ்கி இறந்து போனார். கடைசியில் அவரது உடலை கண்டுபிடித்தவர்கள் அவரது கோட்டை நினைவு சின்னமாக இன்னமும் வைத்துள்ளார்கள்.

ஜோசப் பிருஸ் இஸ்மே, டைட்டானிக் கப்பலின் முதலாளி, பெண்கள் குழந்தைகளுக்கு முன்னே படகில் ஓடி சென்று ஏறி தப்பித்தவர். அவரது வாழ்நாள் முழுக்க கோழை என லண்டன் வாழ் மக்கள் பட்டம் கட்டி அவரை மூலையில் அமரவைத்தனர்

டைட்டானிக் இப்பொது 12,415 feet (3,784 m) ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. பல குழுவினரும் பலமுறை டைட்டானிக் கப்பலுக்கு சென்று பல ஆராய்சிகளும் பல நினைவு சின்னங்களும் எடுத்து உலகில் பல இடங்களில் பல நினைவகங்களில் அவை வைக்கப்பட்டுள்ளன.


                                                  டைட்டானிக் திரைப்படத்தில்.... 

டைட்டானிக் மூன்று முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியை தழுவியது. நீரின் மேல் காதல் கொண்ட ஜேம்ஸ் காமரூன் 1997 இல் ஜாக் மற்றும் ரோஸ் என்ற காதல் கதாபாத்திரங்களையும், டெக்னாலஜி யையும் வைத்து மிரட்டி எடுத்த திரைப்படம் பதினோரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வசூலிலும் உலக சாதனை படைத்தது. டைட்டானிக் என்ற மிகப்பெரும் சோகத்தை உலகமே கொண்டாடியது.

கடந்த நூறு ஆண்டுகளாக ஆழ் கடலில் அடிமனத்தில் மர்மங்களை சுமந்தபடி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது டைட்டானிக்.

Thursday, October 6, 2011

ஸ்டீவ்...!!!





இவ்வுலகில் டெக்னோலஜி பற்றி எந்த மூலையில் பேச்சு எழுந்தாலும் ஸ்டீவ் ஜாப்ஸின் பெயரை உச்சரிக்காமல் அந்த பேச்சு முழுமை அடைவதில்லை. ஆப்பிள் கம்ப்யுடரின் அதிபரான ஸ்டீவின் ஆளுமை அப்படி.

கல்லூரி படிப்புக்கு ஆறு மாதத்தில் முற்றுபுள்ளி, தான் உருவாக்கிய கம்பனியில் இருந்து வெளி ஏற்றம், மோசமான வியாபாரி என பல மைனஸ்களை சுமந்தவர் தான் பிற்காலத்தில் உலகம் போற்றும் வகையில் தனது எதிர் கால கூர் பார்வை மூலமும், பயனாளிகளின் தேவைகளை விரல் நுனிகளில் வைத்திருந்து அதற்கேற்றவாறு தனது கம்பனியை முன்னேற செய்து உலகம் முழுதும் ஆப்பிள் கம்ப்யுடர்ஸ் நிறுவனத்தின் பொருட்களுக்காக ஏங்கும் வகையில், புதிய புதிய டெக்னாலஜிக்களை, புதிய புதிய அறிமுகங்கள் செய்தார்.

ஜன்டாலி என்ற சிரியா நாட்டு தகப்பனுக்கும் சுவிஸ் நாட்டை சேர்ந்த சிம்ப்சனுக்கும் மகனாக பிறந்த ஸ்டீவ் க்கு தனது பிறப்பு முதலே போராட்டம் தான். சிம்ப்சனின் பெற்றோர் ஒரு சிரியா நாட்டை சேர்ந்தவனுக்கு தனது மகளை மணம் முடிக்க விருப்பம் இல்லாததால், அவன் மூலமாக பிறந்த குழந்தையான ஸ்டீவ் ஜாப்சை தத்து கொடுத்து விட, கலிபோர்னியா மாகணத்தை சேர்ந்த ஒரு மத்திய தர குடும்பமான பால் மற்றும் கிளாரா ஜாப்ஸ் ஸ்டீவை வளர்த்து வந்தார்கள்.

மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் அதிபர் மார்க் சுக்கர்புர்க் போல இவரும் எந்த கல்லூரியிலும் பட்டம் வாங்கியவரல்ல. அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் உள்ள ரீட்ஸ் கல்லூரியில் ஆறு மாதங்கள் சேர்ந்து பயின்ற அவர், தனது மத்திய தர பெற்றோருக்கு தனது கல்லூரி செலவு மிகப்பெரும் பாரமாக இருப்பதை உணர்ந்து கல்லூரி செல்வதை நிறுத்திக் கொண்டார்.

தனது நண்பர்களின் வீட்டின் தரையில் படுத்துக் கொண்ட அவர், கோக் பாட்டில்கள் சேகரித்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது சாப்பாடு செலவுக்கு வைத்து கொண்டார். அது தவிர , ஹரே ராத ஹரே கிருஷ்ணா கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தையே உணவாக உட்கொண்டு காலத்தை ஓட்டினார். அந்த சமயத்தில் காலிக்ராபி என்ற கை எழுத்து பற்றிய படிப்பை படிக்கையில் தான் மாக் கம்ப்யூட்டர் பற்றிய எண்ணம் அவர் மனதில் உதயமானது.

ஸ்டீவ் ஜொப்ஸ், ரொனால்ட் வெயின்  மற்றும் ஸ்டீவ் வோஜ்நியாக் 


தனது நெருங்கிய நண்பனான ஸ்டீவ் வோஜ்நியாக் மற்றும் ரொனால்ட் வெயின் உடன் ஒரு கார் கராஜில் ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் துவங்கப் பட்டது. அப்போது கம்ப்யுடர் என்றாலே ஒரு மிகப்பெரிய கருவியாக இருந்தது அதனை உடைத்து சிறிய அளவில் மாகின்டோஷ் என்ற கம்ப்யுடரை வடிவமைத்து வெளி இட்டது ஆப்பிள் நிறுவனம். அது சக்கை போடு போட, பெப்சி நிறுவனத்தில் இருந்து ஜான் ஸ்கல்லி என்பவரை கொண்டு வந்து ஆப்பிள் நிறுவனத்தில் சி இ ஓ ஆக்கினார் ஸ்டீவ். அப்போது ஆப்பிள் கம்ப்யுடர்களின் நிகர லாபம் சரிய, ஆப்பிள் நிறுவனதினுள்ளே நிர்வாக அரசியலும் சேர்ந்து தன்னால் சி இ ஓ ஆக ஆக்கப்பட்ட ஜான் ஸ்கல்லி மூலமாகவே ஸ்டீவ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


பின்னர் வால்ட் டிஸ்னியின் கிராபிக்ஸ் கம்பனியை வாங்கிய ஸ்டீவ், அதற்க்கு பிக்சர் என பெயர் மாற்றம் செய்து வால்ட் டிஸ்னியின் கார்டூன் கிராபிக்ஸ் படங்களை உருவாக்கும் வகையில் அந்த கம்பனியை உருமாற்றினார்.

அதே சமயத்தில் நெக்ஸ்ட் கம்ப்யுடர்ஸ் என்ற கம்பனியை உருவாக்கி அதன் மூலம் புதியவகை கம்ப்யுடர்களை உருவாக்கினார். பிக்ஸார் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி வாங்கிக் கொள்ள, நெக்ஸ்ட் கம்ப்யுடர்சை ஆப்பிள் நிறுவனம் வங்கிக் கொள்ள, ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் சி ஈ ஓ ஆனார் ஸ்டீவ்.

அதன் பின்னர் அவரது சிந்தனையில் உருவான ஐ மாக் கம்ப்யுடர்கள், ஐ போன் ஐ பாட் அனைத்தும் அனைவரும் அறிந்த வரலாறு.


2004 ஆம் ஆண்டு அவருக்கு மிக அரிதான ஆனால் இன்னமும் மருந்து கண்டுபிடிக்கபடாத பான்க்ரியாடிக் கான்செர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
எனினும் அதன் பின்னர் தான் ஸ்டீவின் கனவுகளான ஐ போன் ஐ பாட் என ஒவ்வொன்றாக வெளி வந்தது.

அக்டோபர் ஐந்து 2011 அவரது குடும்பம் அவர் நிம்மதியாக உயிர் நீத்தார் என உலகத்துக்கு அறிவிக்க, அறிவியல் உலகத்தில் மட்டும் அல்லது பூவுலகமும் அவருக்காக வருத்தப்பட்டது. அவரது கனவு ப்ராடக்டுகள் அனைத்தும் இப்பொது பரவலாக மக்களால் உப்யோகப்படுத்தபடுவது முதல் காரணம். ஆப்பிள் எந்த ப்ராடக்டை வெளி இட்டாலும் அது எவ்வளவு விலை இருந்தாலும் முதல் நாளே வாங்கி விட ஒரு பெரும் கூட்டம் கடைகளில் முண்டி அடிக்கிறது. அடித்து ஆப்பிள் ப்ரொடக்ட் எப்போது வெளி வரும் என தவம் கிடக்கிறது கூடம். அதற்க்கு காரணம், ஆப்பிளின் ப்ராடக்டுகளில் நிச்சயம் மட்டற்ற புதுமைகள் இருக்கும் என அவர்கள் நம்புவதே.

தோல்விகளில் இருந்து மீண்டு வரும் பீனிக்ஸ் பறவையை போன்ற வாழ்கையே ஸ்டீவ் வாழ்ந்தார். அவருக்கு வாழ்க்கை ரோஜா படுக்கைகளை அமைத்து தரவில்லை. அவரது பிறப்பின் முதலே போராட்டம். தான் உருவாக்கிய ஆப்பிள் கம்ப்யுடர்சில் இருந்து அவர் வெளி ஏற்றப்பட்டபோதும் அவர் துவண்டு விடவில்லை. 'அது மீண்டும் எனது வாழ்கையை புதிதாக துவங்க ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தது ' என சொல்கிறார்.

அவர் அனைத்தையும் ஜெயம் கொண்ட பொது அவரை தாக்கியது அந்த உயிர்கொல்லி புற்றுநோய். இருந்தாலும் தனது கனவுகளை நனவாக்கி விட்டு ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது பொறுப்புகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்க ஆரம்பித்தார். அவர் உயிர் பிரிந்த நாளில் அவரது மரணத்தை அறிவிக்க எத்தனை ஐ போன்கள் அலறி இருக்கும்?

Saturday, June 27, 2009

வானமே எல்லை - மைகேல் ஜாக்சன்


Well they say the skys the limit And to me thats really true But my friend you have seen nothing Just wait til I get through . . . -Michel Jackson.

அவர்கள் சொல்வார்கள், வானமே எல்லை என என்னை பொறுத்தவரை அது சரிதான். ஆனால் நண்பனே நீ இதுவரை எதுவும் கண்டதில்லை. நான் அதை நிறைவேற்றும் வரை காத்திரு.... -மைகேல் ஜாக்சன்.

பாப் இசையின் அரசன் (King of POP) என அழைக்கப்பட்ட இசை மற்றும் நடனத்தில் வரலாறு படைத்த மைகேல் ஜாக்சன் இன்று நமக்கு வரலாறாகி போனார். உலக உருண்டையை தன் இசையால் கட்டி போட்ட கயிறு இன்று நைந்து தனது கட்டுகளை அவிழ்த்துக் கொண்டது.

மைகேல் ஜாக்சன் என்ற அந்த மனிதனின் பெயரை கேட்டாலே இளசுகளின் நாடி நரம்புகளில் சூடேறும். கை கால்கள் தானாக நிலவு நடை (moon walk) பயிலும். இசை கண்கள் ஆங்காங்கே திறந்து கொள்ளும். ஒல்லியான தேகம். சற்றே பெண்மை கலந்த மெழுகு முகம். கழுத்து வரை புரளும் கூந்தல், முக்கால் பான்ட் அதற்க்கு மேல் வெள்ளை சாக்ஸ் பின்னர் கருப்பு ஷூ தலையில் ஒரு கவ்பாய் தொப்பி. பெண்மையான குரல். இதுவே இளைஞர்களின் இசை நரம்பாக துடித்த மைகேல் ஜாக்சன்.

எனது கல்லூரி காலங்களில் தான் ஜாக்சனின் இசை எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆங்கில இசை அறிவு இருந்தாலே ஒரு சில நண்பர்களை பெற முடிந்த நிலை. ஜாக்சனை தெரியாத ஒரு கல்லூரி பயலா என ஏளனமாக பார்த்தவர்கள் தான் நிறைந்திருந்தார்கள் கல்லூரியில் அப்போது நான் கெட்ட பாடல் தான் மிக்கேல் ஜாக்சனின் பில்லி ஜீன் (billy Jean). அப்போது எனக்கு ஆங்கில பாடலான இன்று வரை அவரது பாடல்களான என்றாலும், அந்த இசையும் அந்த குரலும் என்னை வசியம் செய்தது. (அதே பாடல் தமிழில் வெளிவந்த 'மங்கம்மா சபதம்' என்ற திரைப்படத்தில் 'சொர்கத்தின் வாசல் இங்கே' என்ற பாடலில் காப்பி அடிக்கபட்டிருந்தது.) அதன் பின்னர் தான் அவரின் பாடல்களை தேடி தேடி கேட்க ஆரம்பித்தேன்.

ஜாக்சனின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களில் சில
Black or white,
Bad,
Smooth Criminal,
Thriller,
Beat it,
Billy Jean,
We are the world.
Dangerous
Heal the world.
The Way you make me feel.

மைகேல் ஜாக்சன் அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் கேரி (Gary) என்ற ஊரில் 1958 ஆம் வருடம் ஒரு கறுப்பின தம்பதியருக்கு ஏழாம் மகனாய் பிறந்தார். (அவர் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர்).. தனது சிறு வயதில் தன தந்தையால் மிகவும் துன்புறுத்தபட்டார். அவரது தந்தை ஜாக்சன் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரை நேர்ப்படுத்த சாட்டையாலும் கைகளாலும் அடித்திருக்கிறார். தான் சிறுவயதில் தனிமையையே அதிகம் உணர்ந்துள்ளதாக மைகேல் பல நேர்முகங்களில் கூறி இருக்கிறார்.

ஜாக்சன் தனது ஐந்தாவது வயதில் தன பள்ளியில் கிறிஸ்துமஸ் க்காக பாடலை பாட ஆரம்பித்திருக்கிறார்.தனது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நடத்திய 'ஜாக்சன் 5' என்ற குழுவில் இணைந்து பின்னணி பாட ஆரம்பித்தார். பாப் இதழ்களின் முதன்மையான 'Rolling Stones' இதழ் சிறு வயது மைகேலை 'child prodigy' என கொண்டாடியது. இவ்வாறு அந்த குழுவில் இடம்பெற்று பல்வேறு நகரங்களில் மற்றும் ஒலி பேழைகளில் பாடி வந்த மைகேல் குவின்சி ஜோன்ஸ் உடன் இணைந்து வெளி இட்ட ஆப் தி வால் என்ற ஆல்பம் தான் அவரை உலகுக்கு காட்டியது. பல ரெகார்டுகளை முறியடித்தது.

1982 இல வெளிவந்த இவரது த்ரில்லர் ஆல்பம் தான் இவருக்கு திருப்பு முனை. சென்ற திசை எல்லாம் இவரது த்ரில்லர் தான் ஒலித்தது. உலகமெங்கும் விருதுகளை கொட்டி குவித்தது. இவருக்கு பாப் இசை உலக மன்னன் என்ற பட்டமும் கிடைத்தது.

புகழின் உச்சியில் இருந்த மைகேல் ஜச்சொனை தாக்கியது தனது நண்பனின் மகனான சிறுவன் ஜோர்டான் சாண்ட்லேரின் சிறுவர் வன்கொடுமை புகார். ஜாக்சனின் நண்பனான இவான் சாண்ட்லர், தனது மகனை ஜாக்சன் வன்கொடுமை செய்ததாக ஒரு வழக்கு போட பற்றி கொண்டு விட்டது ஊடகங்களின் தாக்கம். ஒவ்வொருவரும் யூகங்களின் அடிப்படையில் கண்ணா பின்னா வென எழுத ஆரம்பித்தனர். மைகேலின் வானளாவிய புகழ் மங்க ஆரம்பித்தது. தான் அப்படி செய்யவில்லை என்ன சத்தியம் செய்யாத குறையாக மைகேல் கூவியும் யாரும் அவரை நம்ப தயாராக இல்லை. அப்போது அவர் போதை பழக்கத்துக்கு அடிமையானார்.

அவருடைய துன்பகரமான அந்த நாட்களில் அவருக்கு ஆறுதலாய் இருந்தது புகழ் பெற்ற பாப் பாடகரான எல்விஸ் ப்ரெஸ்லி யின் மகள் லீசா மேரி ப்ரெஸ்லி. மே 1994 இல இவர்கள் திருமணம் நடைபெற்றது. இருவருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று நண்பர்களானார்கள், இருவரும்.

மைகேலுக்கு விர்டில்கோ (virtilgo) என்ற சரும நோய் தாகி அதற்க்காக தோல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது பழக்கமான டேபோரா என்ற தாதியை மணந்து 3 குழந்தைகளுக்கு தந்தையானார்.

39 சேவை அமைப்புகளுடன் இணைந்து அவர் சேவை செய்ததற்காக அவரது பெயர் கின்னேச்ஸ் புத்தகத்தில் இரண்டாயிரமாம் ஆண்டு இடம் பெற்றது.

நம்மூர் A.R. ரகுமான், மற்றும் பிரபு தேவா,ஷோபனா உடன் இணைந்து ஜெர்மனி மற்றும் கொரியாவில் தென்னாப்ரிகாவின் நெல்சன் மாநதேலாவுகாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி கொடுத்தார். கொசோவா நாடு அகதிகளுக்காகவும் குவாடமேலா நாடு குழந்தைகளுக்காகவும் நிதி திரட்டி தர பல கலாசார நிகழ்ச்சிகளை நடத்தினார்.

குழந்தைகள் மீது அதீத அன்பு கொண்டிருந்த மைகேல் ஜாக்சன், அவர்களுக்காக நேவேர்லாந்து என்ற பண்ணை வீட்டை நிர்மாணித்தார்.

சிர்வர்களின் மீது வான் கொடுமை செய்ததாக கூறப்பட்ட புகாரில் மிகவும் இடிந்து போன மைகேல் உளவியல் ரீதியாக ஒடுங்கிப்போனார்.

ஜூலை 2009 முதல் மார்ச் 2010 வரை லண்டனில் தனது பாடல் நிகழ்ச்சிகளை நடத்த ஆயத்தமானார். அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து போயின.

அந்த நிகழ்ச்சிக்காக ஆயத்தமாகி கொண்டிருந்த மைகேலை ஜூன் 25 2009 அன்று மாரடைப்பு ஏற்ப்பட்டு மரித்து போனார்.

அவர் வாழ்க்கையில் அதீத புகழையும், துன்பமான வறுமையையும் ஒருங்கே கண்டவர்.

அவரது மரணமும் அவரது வாழ்கையை போல மர்மமாகவே இருக்கிறது.

வானமே எல்லை என வாழ்ந்த மைகேல் இன்று அந்த லட்சியத்தை அடைந்து விட்டதாய் தான் தெரிகிறது...



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...