உலக சினிமா: தி காங்ஸ்டர் தி காப் தி டெவில் ( The Gangster the cop the devil) (கொரியா)
ஒரு இரவு சாலையில் ஒரு காரை இன்னொரு கார் பின்தொடர்ந்து வந்து பின்னே மெதுவாக இடித்து விடுகிறது. முதல் காரிலிருந்து இறங்கி பின்னால் இடித்த கார் ஓட்டிவந்தவரோடு இன்சூரன்ஸ் பற்றி பேச்சு கொடுக்கும் நபரை பின்னால் வந்த காரில் வந்தவர் கத்தி வைத்து பலமுறை குத்தி விடுகிறார்.
இந்த கேஸை விசாரிக்க நியமிக்கப்படும் ஒரு போலீஸ் அதிகாரி Jung Tae-seok இதே போல பல கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அந்த கொலையாளி ஒரு சீரியல் கில்லர் என தனது மேலதிகாரிக்கு நிரூபிக்க படாத பாடு படுகிறார். இடையே ஒரு காங்ஸ்டர் தவறான ஒரு சூதாட்ட விடுதியை நடத்துபவரையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
அந்த காங்ஸ்டர் Cheonan Dong-soo அந்த கொலையாளியின் அடுத்த இலக்காக, அவனுடன் சண்டை போட்டு தப்பி விடுகிறார். அந்த கொலையாளியும் தப்பி விடுகிறான்.
இந்த மூன்று பேரையும் இணைக்கும் புள்ளி தான் தி காங்ஸ்டர், தி காப் , தி டெவில்.
போலீசாக நடித்திருக்கும் நபர் தனது அலட்சிய நடிப்பால் மின்னுகிறார். தனது மேலதிகாரியை இடது கையால் டீல் செய்வதும் ஒரு க்ரிமினலை உபயோகித்து கிரைம் நடந்த இடத்துக்கு சென்று சேர்வது என பிரம்மாதப் படுத்தி இருக்கிறார்.
கொடூர காங்ஸ்டர் ஆக நடித்திருக்கும். Ma Dong-seok தானே ஒருவனிடம் வெட்டுப்பட்டு தப்பித்ததும், கூட இருப்பவர்கள் ஒரு ஒரு காங்ஸ்டராக இருந்தும் குத்துப்பட்டு வந்த அவனை கேலி செய்ய அந்த கொலையாளியை தேடி கண்டுபிடித்து பழி வாங்க வெறி கொண்டு அலைகிறார்.
படத்தின்ஆக்க்ஷன் காட்சிகள் பல இருந்தும் உறுத்தவில்லை.காட்சிகள் நம்பகத்தன்மையோடுதான் அமைக்கப்பட்டிருக்கிறது . போலீஸ் அதிகாரி தான் நிறைய அடி வாங்குகிறார்.
ஒரு நல்ல ஆக்க்ஷன் படத்துக்கு உண்டான விறுவிறுப்பான திரைக்கதை. ராக்கட் வேகத்தில் பறக்கிறது படம். அதற்குண்டான ஒளி அமைப்பில் உறுத்தாத ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு பரபரக்கும் இசை என ஆக்க்ஷன் பட ரசிகர்களுக்கு விருந்து.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் நீதிமன்றக் காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பது குறை.
படத்தில் ரத்தம் தெறிக்கிறது. அனால் நமது தமிழ் படமான ஜெய்லருக்கு இந்தப்படத்தின் வன்முறை காட்சிகள் எவ்வளவோ பரவா இல்லை.
கோவிட் சமயங்களில் புலம் பெயர் மக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி சென்ற துயரத்தை வரலாறு மறக்காது மன்னிக்காது. அந்த மக்கள் சந்தித்த வலிகளை சிறிது சாதிய வன்மங்கள், மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களின் பேதங்கள், மத துவேஷங்கள், சிறிது காதல், சிறிது மனிதம் என அனைத்தையும் கலந்துகட்டி காக்டைல் அளிக்கிறது இந்த இந்தி படம் பீட் (Bheed). Bheed என்றால் கூட்டம் என இந்தியில் பொருள் படுகிறது
வெகு தூரம் நடந்து வந்து ஆயாசத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கும் மக்கள் மேல் ரயில் ஏறி 16 பேர்கள் இறந்துபோன நிகழ்வில் கருப்பு வெள்ளையில் தொடங்குகிறது படம். திரிவேதி என்ற உயர் சாதியை சேர்ந்த வாட்ச்மேன்கள் குடும்பம், சுவாரஸ்ய செய்திகளுக்கு அலையும் மீடியாவை சேர்ந்த பெண், தன் குடிகார தந்தையை சைக்கிளில் வெகுதூரம் அழைத்து செல்லும் ஒரு பெண், ஹாஸ்டலில் இருக்கும் தனது பெண்ணை மீட்டுவர முயற்சிக்கும் ஒரு பெண், தியானத்துக்கு சென்று திரும்பும் ஒரு இஸ்லாமிய குழு, இவர்களை சமாளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி (ராஜ் குமார் ராவ்) மற்றும் அவனை காதலிக்கும் உயர் சாதியை சேர்ந்த ஒரு டாக்டர் என இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்தித்தால் என்னவாகும் என்பதை நிதர்சனங்களோடு பொருந்திப்போகும் திரைக்கதை.
புலம் பெயர் மக்களின் துயர் தான் கதை என்றாலும் அதனூடே அரசியல்வாதிகளின் சாதி மத அரசியலால் மக்கள் மனதில் எழும் துவேஷங்களையும் அதன் விளைவுகளையும் காட்சிப்படுத்தி இருப்பது சமூக அக்கறை. கவுதம் லால் டிகாஸ் என தனது சாதி பெயரான டிகாஸ் என்ற தாழ்ந்த சாதி பெயரால் தாழ்வு மனப்பான்மையுடன் வலம் வரும் ராஜ் குமார் ராவ்,நடக்கும் நிகழ்வுகளால் கையறு நிலையில் செய்வதறியாது துடிக்கும் சமயத்தில், தனது உயர் சாதியை சேர்ந்த காதலி பூமி பட்நாகருடன் சாதி வித்யாசம் பார்த்து மறுகும் இடத்திலும் நடிப்பில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார். பலராம் திரிவேதி யாக வரும் பங்கஜ் கபூருக்கு அற்புதமான குணசித்திர வேடம்.
ஆர்டிகிள் 15,மல்க் போன்ற சமூக சிந்தனையுள்ள படங்களை இயக்கிய அனுபவ சின்ஹா தான் இப்படத்தின் இயக்குனர். இன்றைய அரசியல் காலகட்டத்தில் இது போன்ற படம் எடுக்க பெருந்துணிவு வேண்டும். படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்திருப்பதால் உண்மைக்கு அருகே இருப்பதை போன்ற உணர்வை சவுமிக் சட்டர்ஜீ யின் ஒளிப்பதிவு தருகிறது. இசை இருப்பதாகவே தெரியாமல் இசை அமைத்திருக்கிறார் அனுராக் சைக்கியா.
கதை ஒரே இடத்தில் நிகழ்வதாக இருப்பதால் படம் மெதுவாக நகர்வதாக உணர்வை தருகிறது. இருந்தாலும் புலம் பெயர் தொழிலாளிகளின் கொரோனா கால பயணத்தை வலிகள் மாறாமல், உண்மை சம்பவங்களை கோர்த்து மாலையாக்கி அளித்த அனுபவ சின்ஹாவின் சமூகத்தின் மீதுள்ள காதல் நன்றே தெரிகிறது.
இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது
பருவ காலத்தில் காதல் வந்து அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு, வயதான பால்யத்தில் அருகே இருப்பது தான் உண்மை காதல் என பொளேரென அறைந்து சொல்கிறது பிரெஞ்சு திரைப்படம் AMOUR( காதல் )
படத்தின் துவக்கத்தில் ஒரு அரங்கத்தில் பியானோ இசைக்கப் படுகிறது. அரங்கத்தின் மேடை காண்பிக்கப் படுவதில்லை. பார்வையாளர்கள் மட்டும் காட்டப் படுகிறார்கள்.அதன் பின்னே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் வீட்டுக்குள் நுழைகிறார்கள், எண்பதுகளில் தங்களது அந்திமத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆன் மற்றும் ஜார்ஜ் தம்பதியர். அன்று வாசித்தவன் ஆனின் மாணவன் ஆண்ட்ரே. அவனது வாசிப்பை பற்றி பெருமையாக கூறிக் கொண்டிருக்கும் ஆன் சிறிது நேரம் செயலற்று பொய் விட பதைபதைக்கும் கணவன் ஜார்ஜ் மருத்துவமனைக்கு தொலைபேசுகிறான். ஆனுக்கு ஸ்ட்ரோக் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்புகிறார். வீடு திரும்பியதும், ஜார்ஜிடம், தன்னை இனி எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லக்கூடாது என வாக்கு வாங்கி விடுகிறார் ஆன் .
அதன் பின்னே ஆனை குளிப்பாட்டுதல் முதல் உணவளிப்பது வரை அனைத்தும் செய்யும் தாயுமானவனாக ஜார்ஜ் பணிவிடை செய்கிறார்.அவர்களது ஒரே மகள் ஈவா லண்டனில் வசித்து வருகிறாள். அவ்வப்போது இவர்களை பாரிஸ் வந்து பார்த்து செல்கிறாள். அம்மாவின் நிலையை கண்டும், அப்பா அம்மாவுக்கு செய்யும் பணிவிடைகளை கண்டும், அப்பாவின் பாரம் குறைக்க அம்மாவை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு கூற, ஆனிடம் தான் கொடுத்த வாக்கு பற்றி கூறி, அதனை மறுக்கிறார் ஜார்ஜ்.
ஆனுக்கு பக்கவாத நோயும் தாக்க,நிலை குலைந்து பொய் விடுகிறார்கள் இருவரும். எனினும் ஆனை , தன காதல் மனைவியை சுமை தாங்கியாக நின்று தாங்குகிறார் ஜார்ஜ். தனது காதல் மனைவியின் வியாகுலத்தை பார்த்து தாங்க இயலாத ஜார்ஜ் இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.
ஒரு அடுக்குமாடி வீடு, அதில் வாழும் இரு மனிதர்கள் அவ்வப்போது வந்து செல்லும் மகள் இரண்டு செவிலியர், ஆனின் பியானோ மாணவன் இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். படம் முழுக்க ஒரே ஒரு வீட்டில் மட்டுமே கதை சொல்லப்படுகிறது . இசையால் நிரம்பி வழியும் அந்த வீடும் கூட இந்தப் படத்தின் ஒரு கதாப் பாத்திரமாக நடித்திருக்கிறது.
ஆரம்பத்தில் தனியாக ஜார்ஜ்ஜும் ஆனும் தாங்கள் ரசித்த அந்த பியானோ குறித்த உரையாடல், அவர்களுக்கிடையே நிகழும் அந்நியோன்யத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது. ஆன் துயரப்படும் போதெல்லாம் ஜார்ஜ் பேசும் ஆறுதல் மொழிகளும், ஆனுக்கு ஒவ்வொரு நாளும் சிறுகுழந்தைகளுக்கு வாசிப்பதை போல புத்தகம் வாசித்து காட்டும்போதும், ஜார்ஜ் ஆனுக்கு பணிவிடை செய்யும்போதும் ஆணின் மீது தனக்குண்டான காதலை, மொழியின் மூலம் புரிய வைக்காமல்,தனது செயலின் மூலம் புரியவைப்பது படத்தின் அடிப்படை ஆன் மற்றும் ஜார்ஜின் மகள் இவா , 'என் சிறுவயதில் நீங்கள் இருவரும் காதலுடன் தான் இருக்கிறீர்கள், என் நண்பர்களின் பெற்றோர் போல விவாகரத்து பெறமாட்டீர்கள் என்பதை, மேலே கேட்கும் கட்டில் சத்தத்தில் இருந்து புரிந்துக் கொள்வேன்' என்று சொல்லுமிடம் கவிதை!.
இந்தப் படம் திரைப்படம் பார்க்கும் உணர்வை தராமல் நேரிலேயே இரு மனிதர்களின் வாழ்க்கையை பார்ப்பது போல பதிவு செய்திருக்கும் எதார்த்தம் பிரம்மிப்பை உண்டு செய்கிறது. எண்பது வயதான இருவரை மட்டுமே திரைப்படம் முழுவதும் உலவவிட்டு, அவர்களது காதலை, வலியை கோவத்தை, அன்னியோன்யத்தை காண்பிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் அதனை நிகழ்த்தி ஆஸ்கார், கோல்டன் க்ளோப் , பாப்டா போன்ற உலகின் ஆகச்சிறந்த விருதுகளை இந்தத் திரைப்படம் பெற காரணமாக இருந்தவர் , இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கிய ஜெர்மனியத் திரைப்பட இயக்குனர் மைக்கேல் ஹானெகெ. படத்தில் இசை ஒன்று இரண்டு இடங்களில் மட்டுமே வருகிறது.அதுவும் பியானோ மட்டுமே. படத்தின் ஒவ்வொரு துளியுமே ஒளிபபதிவில் தாண்டவம் நடத்தி இருக்கிறது.
படத்தின் ஜார்ஜ் ஆக நடித்திருக்கும் ஜீன் லூயி மற்றும் ஆன் ஆக நடித்திருக்கும் இம்மனுவாலா ரீவா இருவரும் இந்தக் கதா பாத்திரங்களுக்கு அத்துணை பாந்தம். இம்மானுவாலா முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.. தனது எண்பதாவது வயதிலும், ஒரு தேவதையாக ஒளிர்கிறார். ஜார்ஜ் அந்த எண்பதாவது வயதிலும் தீராக் காதலுடன் இருப்பதற்கு இந்த அழகும் நியாயப் படுத்தப் படுகிறது.
படம் மிக மெதுவாக நகர்வது படத்தை பார்க்கும் சிலருக்கு பெரும் குறையாக இருக்கலாம். நிச்சயமாக இந்த திரைப்படம் நல்ல சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே.
கூட்டுக் குடும்பங்கள் குறைந்தும் பெரும்பாலும் மறைந்தே விட்ட இந்த சமூகச் சூழலில் , தங்கள் பிள்ளைகள் தங்கள் அருகே இல்லாத நிலையில் இருக்கும் பல பெற்றோர்களின் நிலையை இந்தத் திரைப்படம் உணர்த்துகிறது.
இத்திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும், தங்களது அந்திமக் காலத்தைக் குறித்து பயம் வரும், அந்த பயத்தை தம்பதியர் இருவரும் தங்களது தீராக் காதல் மூலம் வெல்ல முடியும் என இந்தத் திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.
ஒரு புல்லாங்குழலின் இசை போல மெலிதாக இதயம் எங்கும் வருடிப் போகிறது அன்னாவுக்கும் ரசூலுக்குமான காதல். மெழுகுவர்த்தியின் ஒளியில் அன்னாவின் அழகு முகத்தை காண்பதில் துவங்குகிறது ரசூலுக்கு அன்னாவின் மேல் உள்ள காதல்.
கொச்சின் நகர பின்னணியில் நதியில் பயணிக்கும் படகில் தொடரும் காதலின் முடிவு யூகிக்க கூடியது தான் என்றாலும், நம்மருகே நடக்கும் சம்பவங்களைப் போல காட்சிகளை கோர்த்தது திரைக்கதையின் வெற்றி. இமேஜ் பற்றிய வரை முறைகளை தகர்த்தெறிந்துவிட்டு வேறுபட்ட பாத்திரங்களை தேடி சென்று நடிக்கும் பகாத் பாசிலின் உடல் மொழியும் மிகை இல்லாத நடிப்பும் ரசூலை நமது வாழ்கையின் அருகே கொண்டு நிறுத்துகிறது.
அன்னாவாக ஆண்ட்ரியா... இவருக்கு வசனங்களே இல்லை. அதனாலென்ன..பக்கம் பக்கமான வசனங்களை இவரது விழிகளே பேசி விடுகிறது.
சம்பவங்கள் நடக்கும் இடத்திற்கு தேவையான ஒளி கொடுத்து காட்சி படுத்தி இருக்கும் விதம், படத்திற்கு ஒரு ஓவிய வடிவத்தை கொடுக்கிறது. படத்திற்கு பெரும் பலம் மது நீலகண்டனின் ஓளிப்பதிவு.
இயற்க்கைக்கு முரணில்லாத காட்சிகள் அமைத்ததற்கு இயக்குனர் ராஜீவ் ரவிக்கு வாழ்த்துக்கள்.
மலையாள இயக்குனர்களில், கலையும் கமர்ஷியலும் கலந்து நல்ல படைப்புகளை கொடுக்கக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் லால் ஜோஸ்.
இவர் இயக்கிய கிளாஸ் மேட்ஸ், அச்சன் உறங்காத வீடு போன்றவை, படைப்பு ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்தன. அந்த வரிசையில் சமீபத்தில் காணக் கிடைத்த திரைப்படம் தான் ஆயாளும் ஞாணும் தம்மிள்.
டாக்டர் ரவி தரகனிடம் ஒரு உடல் நலம் குன்றிய பெண்ணை கொண்டு வருகிறார்கள். அவளுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று பரிந்துரைத்த டாக்டர் ரவியை தடுக்கிறான் அப்பெண்ணின் தந்தை. அறுவை சிகிச்சை செய்தால் உயிர் போய்விடும் என்பதால் அறுவை சிகிச்சை செய்ய கூடாது என்று மறுக்கிறான். ரவி, அவனையும் மீறி அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய அந்த பெண் இறந்து விட, அவனை கொல்ல அப்பெண்ணின் தந்தை உறவினர்களுடன் தேட அதில் இருந்து தப்பிக்கும் ரவியின் கார் விபத்துக்குள்ளாகிறது ஆனால் டாக்டர் ரவியை காணவில்லை.
அவனை தேடி அவன் வேலை செய்த மருத்துவமனை தலைவரின் செகரெட்டரி தியா புறப்பட, டாக்டர் ரவி கல்லூரி சமயங்களில் ஒரு மந்தமான மாணவன் என்றும் அவன் தனது இண்டெர்ன்ஷிப்க்காக மூணாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணி புரிந்ததையும் கண்டு பிடிக்கிறாள்.
மூணாறு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக டாக்டர் சாமுவேல் மருத்துவத்தை தொழிலாக மதித்து கறாராக நடந்து கொள்வது ரவிக்கு பிடிக்காமல் போகிறது.
இதற்கிடையே அவன் நடுவில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகறாரு ஏற்பட, அவனால் ரவியின் கல்லூரி காதலை இழக்க நேரிடுகிறது. பின்னால் அதே போலீஸ் அதிகாரி தன் சுகவீனமடைந்த மகளை மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது அவளுக்கு மருத்துவம் பார்க்க மறுக்கும் டாக்டர் ரவி தரகனை கண்டித்து அவளுக்கு மருத்துவம் பார்கிறார் டாக்டர் சாமுவேல். அவனுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட, அவனுக்கு டாக்டர் வேலை பறிபோகும் அபாயத்தில் இருக்கும் அவனை மாற்றுகிறது ஒரு சம்பவம்.
ரவியாக ப்ரித்விராஜும் டாக்டர் சாமுவேலாக பிரதாப் போத்தனும் அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்கள். எப்போதும் போல லால் ஜோஸின் முன்னும் பின்னும் செல்லும் திரைக்கதை தான் இதிலும் என்றாலும் அலுக்காமல் படத்தின் இறுதி வரை தொய்வில்லாமல் போகிறது.
மூணாறி ன் அழகை அள்ளி வரும் ஜோமோன் ஜானின் ஒளிப்பதிவு அட்டகாசம்.
அவுசப்பெச்சனின் இசையில் நிகில் மாத்யு குரலில் வரும் 'அழலிண்டே ஆழங்களில்' பாடல் நம் ஆன்மாவின் ஆழங்களை வருடிப் போகிறது.சோகம் ததும்பும் அந்த குரலும் இசையும்...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும், கண்கள் கலங்க வைக்கும்.
பலவித சர்ச்சைகளை ஆரம்பத்தில் இருந்தே கண்டு வந்த விஸ்வரூபம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையேயும், எதிர்ப்புகளுக்கு இடையேயும் வெளியாகிவிட்டது. அமெரிக்க திரை அரங்கில் ஒரு வார நாளில் ஒரு இந்திய திரைப்படத்தை காண சுமார் முப்பது பேர் வந்திருந்தது ஆச்சர்யம் அளித்தது. டீவீடி வரும்போது பார்த்துகொள்ளலாம் என்றிருந்த என்னை, படத்தின் விமர்சனங்களும் சர்ச்சைகளும், திரை அரங்கத்தை நோக்கி இழுத்துவிட்டது எனலாம். எனவே படத்தி சுற்றி எழுந்த சர்ச்சைகள், படத்தின் வசூலுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்பது திண்ணம்.
படத்தின் கதை என்ன?. அமெரிக்கனான தமிழன் விச்சுவை மணம் புரிந்து அமெரிக்காவில் வசிக்கும் நிருபமாவுக்கு விச்சுவின் மேல் பெரிதான ஈடுபாடு இல்லை. நடன பள்ளி அமைத்து நடனம் கத்து தருவதால் பெண்மை கலந்திருக்கும் விச்சுவை அவளுக்கு பிடிக்காமல் போக,அவள் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளிக்கும் அவளுக்கும் ஏற்படும் ஈர்ப்பினால் அவனை விவாகரத்து செய்வதற்கு முயல்கிறாள்.
விவாகரத்து செய்ய காரணம் வேண்டுமே!. ஒரு துப்பறிவாளன் அவளுக்காக விச்சுவின் பின்னே அலைந்து அவன் ஒரு இஸ்லாமியன் என்பதை கண்டுபிடித்து எக்குதப்பாக இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்டு உயிரிழக்க அவனிடம் இருக்கும் குறிப்புகளைக் கொண்டு விச்சுவையும் அவன் மனைவியையும், கொண்டு சென்று தனி அறையில் அடைக்கிறது அந்த கும்பல்.
அந்த கும்பலின் தலைவன் ஓமர், விச்சுவின் புகைப்படத்தை கண்டு, தான் அவனை நேரில் காண விரும்புவதாக கூற, அதுவரையில் பெண்மை கலந்து காணப்படும் விச்சு வீறு கொண்டெழுந்து விஸ்வரூபம் எடுத்து அவர்களுடன் சண்டையிட்டு தன மனைவியுடன் தப்பிக்க, அவன் முன்பு அல் குவைதா படைகளில் பயின்றவன் என்பதும் தீவிரவாதிகளை வேரோடு அழிக்கவே அந்த வேடம் பூண்டுள்ள ஒரு இந்திய உளவுத்துறை இஸ்லாமிய ஏஜன்ட் என்பதும் தெரியவருகிறது. இடையே ஆப்கானிஸ்தானில், தீவிரவாதிகளின் பயிற்சி அங்கு அவர்களின் கொடூரமான வாழ்க்கை முறைகள் காண்பிக்கப் படுகிறது.
விச்சு என்ற கஷ்மீரி, எவ்வாறு தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவை மீட்கிறான் என்பது மீதிக் கதை. படத்தின் இறுதியில் ஓமர் தப்பி விட, விஸ்வரூபம் பகுதி இரண்டில் அவனை இந்தியாவில் பிடிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான் காஷ்மீரி.
கதையா மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு விஜயகாந்த் டைப் மசாலா கதை தான். என்ன, விஜயகாந்த் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்றுவார். கமல் உலக நாயகன் ஆயிற்றே. தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றுகிறார்.
சாதாரண மசாலா கதை என ஒதுக்கிவிட முடியாதபடி, லாஜிக்குகளை புகுத்தி பிரமாண்டத்தை காட்டியதில் இது கமலுக்கு ஒரு விஸ்வரூபமே. குறிப்பாக, படத்தின் முதல் நாற்பது நிமிடங்கள் ராக்கட் வேகத்தில் பறக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகளில் 'இப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள்' என கமல் ஒதுங்கி பார்வையாளனுக்கு காட்சிகளை காண்பிப்பதால், திரைக்கதை வேகமிழக்கிறது. இடைவேளைக்குப் பின்னே, திரைக்கதையில் பாசஞ்சர் ரயிலின் வேகம்.படத்தில் ஒவ்வொரு இடத்திலும், கமல் அமெரிக்காவை உயர்த்தி கோடி பிடிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. க்ளைமாக்சில் அமெரிக்காவின் FBI சிரிப்பு போலீசாக காட்டவே உதவி இருக்கிறது. கமல் மட்டுமே எல்லாம் தெரிந்ததாக காட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
ஆப்கானிஸ்தான் குகைகளுக்குள் புகுந்து புறப்படும் சானு ஜான் வர்கீசின் காமெரா படத்துக்கு பெரிய பலம். திகிலூட்டும் பின்னணி இசையில் கலக்கி எடுக்கும் ஷங்கர் எசான் லாயின் இசையில் சில இடங்களின் பின்னணி இசை, ஏற்கனவே பல ஹாலிவூட் படங்களில் கேட்ட உணர்வு. 'உன்னை காணாமல் ' பாடல் மேன்மை என்றால், 'யாரென்று தெரிகிறதா' பாடல் அதகளம்.
படத்தில் வரும் முதல் ஆக்க்ஷன் ப்ளாக்கில், 'யாரென்று தெரிகிறதா' என்ற பாடலின் பின்னணியில் கமல் தீவிரவாதிகளுடன் மோதும் அந்த சண்டை காட்சி உலகத்தரம். மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் சண்டை காட்சிகளில் சில 'வாவ்' சொல்ல வைக்கிறது. எனினும் பிரம்மாண்டத்தை மட்டுமே வைத்து ஹாலிவூட் தரத்தை எட்டி விட முடியாது. அப்படி பார்த்தால் எந்திரனை கூட ஹாலிவூட் தரம் எனலாம். ஹாலிவூட் தரத்தை எட்ட, பிரமாண்டம் தேவை இல்லை. சமரசம் செய்து கொள்ளப்படாத சீரான திரைக்கதையும் புதுமையான கதையும் இருந்தாலே போதும். உதாரணத்துக்கு, அமெரிக்காவின் பரம வைரியான இரான் நாட்டில் இருந்து வெளியான 'A separation' திரைப்படத்தை எடுத்து கொள்வோம். அதிகம் செலவு செய்யப்படாத அந்த திரைப்படம், திரைக்கதையில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டது. சிறந்த அயல் நாட்டு திரைப்படம் என்ற விருதையும் வென்றது.
படம் வெளியாவதன் முன்னே, இஸ்லாமியர்கள் இப்படத்தை திரை இடக்கூடாது என போர்க்கொடி தூக்கியபோது, நாத்திகரான கமல் படத்துக்கு ஏன் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள் என்ற கோவம் எனக்கிருந்தது. படம் பார்த்ததும், அந்த எதிர்ப்பின் நியாயத்தை புரிந்துகொண்டேன். போகிற போக்கில் இந்து கடவுள்களையும் கிண்டலடிக்கத் தவறவில்லை கமல். ஆனால், படத்தில் வரும் எல்லா இஸ்லாமியனுமே (கமலை தவிர) ஒரு தீவிரவாதியாகத்தான் காட்டப்பட்டிருக்கிறான். அமெரிக்காவிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ, படத்தில் வரும் ஒவ்வொரு இஸ்லாமியனும் வெடிகுண்டுடன் அலைந்து கொண்டிருக்கிறான். அல் குவைதா தீவிரவாதிகளைப் பற்றி தான் படம் எடுத்திருக்கிறார்கள் என சப்பை கட்டு கட்டினாலும், படத்தில் வரும் எல்லா இஸ்லாமியனும் அல் குவைதா தீவிரவாதிகளாகவே இருப்பது எந்த விதத்தில் ஞாயம். இந்த திரைப்படம் அமெரிக்காவில் வேண்டுமானால் பாராட்டுகளைப் பெறலாம். மத பிணக்கங்கள் நிறைந்த நம் நாட்டில் இப்படம், துவேஷங்களை உருவாக்கும்.படம் பார்க்கும் பாமரன் கண்டிப்பாக, இஸ்லாமியர்கள் எல்லாரும் தீவிரவாதி தான் என்ற முடிவெடுக்க இந்த திரைப்படம் ஒரு உந்து சக்தியாக இருக்கும். மற்றபடி அய்யாவுக்கும் அம்மாவுக்கும், இஸ்லாமிய ஒட்டு வங்கியை குறித்த அரசியலையும் அது உருவாக்கும். வரும் காலங்களில் இதனை கருத்தில் கொண்டு படங்களை எடுப்பது கமலுக்கும் நாட்டுக்கும் நல்லது.
எனினும் விஸ்வரூபம், ஒரு பிரமாண்டமான, இந்திய திரைப்படம்
சில காலங்களாக, தமிழ் சினிமாவின் மசாலா சூழலில் மதி மயங்கி கொண்டிருந்த மலையாள படங்களில், இப்போது மீண்டும் வசந்த காலம். நல்ல படங்கள் சமீபகாலமாக வரத்துவங்கி உள்ளது வரவேற்கத் தகுந்த முயற்சி. அந்த வரிசையில் சால்ட் அண்ட் பெப்பர் பட இயக்குனர் ஆசிக் அபு வின் இயக்கத்தில் வந்துள்ள 22 பீமேல் கோட்டயம் ஆரவாரமாக இடம் பிடிக்கிறது. அடித்தளக் கதை இந்தி படமான 'ஏக அசீனா தி' என்ற படம் என்ற போதிலும்(அந்த படத்திற்கான கிரெடிட் டைட்டிலில் கொடுக்கப் படுவதால் இது ஒரு நேர்மையான முயற்சி.), படத்தின் கதையோட்டத்தை மாற்றி இன்றைய சூழ்நிலைக்கு பொருந்தி போகும்படி எடுத்துள்ளமைக்காக இந்த படத்தை பாராட்டியே தீர வேண்டும். பெங்களுருவில் ஒரு நர்சாக வேலை பார்த்து வருகிறாள் கோட்டயத்தை சேர்ந்த டெசா. பெற்றோரை இழந்த அவளுக்கு இருக்கும் ஒரே உறவு, கொச்சினில் படித்து கொண்டிருக்கும் தங்கை. அவளது அறைத்தொழிக்கு
மணமான பணம் படைத்த டி கே விடம் தொடர்பு இருக்கிறது.
கனடா நாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக, பெங்களுருவில் இருக்கும் இம்மிக்ராஷன் ஆபீசை அணுகுகிறாள்
டெசா . அங்கு மேலாளராக இருக்கும் சிறில் பழக்கமாகிறான். இருவருக்கும் பிடித்துப் போக, இவர்கள் உறவு லிவிங் டுகெதர் அளவுக்கு செல்கிறது.ஒருமுறை ஒரு உணவகத்தில் ஒருவன்
டெசாவை உரச, அவனை சிறில் அடிக்க, அவனோ ஒரு அரசியல் பெரும்புள்ளியின் மகன். தன்னை அடித்த சிறிலின் கையை உடைக்காமல் ஓய்வத்தில்லை என அவன் சிறிலை தேடி
அலைய , அவனை தனது கஸ்ட் ஹௌசில் தங்க வைக்கிறான் அவனுடைய முதலாளி ஹெக்டே.
சிறில் இல்லாமல் தனியே இருக்கும்
டெசாவை மண்டையில் அடித்து பலகீனமாக்கி அவளை கற்பழித்து விடுகிறான் ஹெக்டே. அதனை அறிந்து ஹெக்டேவை பழி வாங்கத் துடிக்கிறான் சிறில். அதன் பின் வரும் காட்சிகள் நம்மை சுழற்றி அடித்து பரபரப்பை உண்டு பண்ணுகின்றன.
படத்தில் சிறிலாக நடித்திருக்கும், காதலுக்கு மரியாதை இயக்குனர் பாசிலின் மகன் பகாத் பாசில் அற்புதம். மிக மிக எளிதாக தனக்குரிய பாகத்தை செய்திருக்கிறார். இவர் முன்பு நடித்த 'சப்ப குறிசு' திரைப்படத்திலும் தனது வித்யாசமான கதாபாத்திரத்தினால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களும் கதைகளும் மிகவும் அரிதானதாக இருக்கிறது. மலையாள நடிகர்களிடையே இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.
பாத்திரத்திற்கேற்று நடித்திருந்தாலும் இன்னும் முயற்சித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.காட்சிகளின் சூழ்நிலைகளுக்கேற்ப, பதைபதைப்பும் பரபரப்பும், இவர் முகத்தில் கொண்டு வராதாது ஏமாற்றம். ஹெக்டேவாக வரும் இயக்குனர் பிரதாப் போத்தன் வழக்கம் போல லூசு நடிப்பை கொண்டு வருகிறார்.
இசை பெரிதாக சொல்லிக்கொளும்படி இல்லை என்றாலும், படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, ஷைஜூ காலேதின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான ஒளியமைப்பு படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி செல்கிறது. பெங்களூரின் நகரத்தன்மை இவரது ஆளுமையில் புதுமையாகத் தெரிகிறது.
இயக்குனர் ஆஷிக் அபு விறுவிறுவென படத்தை நகர்த்தி இருக்கிறார். கலாச்சாரங்களை எல்லாம் குழி தோண்டி புதைத்து மிகவும் கேசுவலாக, இன்றைய நகர வாழ்கையை உள்ளது உள்ளபடி காட்டிய இவருக்கு தைரியம் அதிகம். அதும்போக படத்தை இன்ஸ்பைர் செய்த 'ஏக ஹசீன தீ' உட்பட இரண்டு ஆங்கில படங்களை டைட்டில் கார்டில் போட்ட நேர்மை...
ஒரு காதலிக்கும் கல்லூரி ஜோடி, காதலித்து கல்யாணத்துக்கு காத்திருக்கும் கல்லூரி முடித்த ஜோடி, காதலித்து மனம் முடித்து விவாகரத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு மூத்த ஜோடி, இவர்களின் காதலில் எழும் சொதப்பல்களும் அதற்கான தீர்வுகளும் என படம் முழுவதும் புன்னகையுடன் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி மோகன்.
யு ட்யூபில் நாலு லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ்கள் அடித்து பெரும் வரவேற்பு பெற்ற 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற இவரது குறும்படத்தையே, சிறிது நீட்டி இவரது இன்னொரு குறும்படமான 'மிட்டாய் வீடு' படத்தில் இருந்து சில காட்சிகளை கலக்கி, ஒரு பீல் குட் படத்தை படைத்திருக்கிறார்.
பெரிதாக கதை என்று ஒன்றும் இல்லாமல், சம்பவங்களை தொகுத்தே, 'பொண்ணுக இப்படி இருப்பாங்க' , 'பசங்க இப்படி இருப்பாங்க' என்று கத்தி இன்றி காதலை அறுவை சிகிச்சை செய்த இவரது புதுமையான திரைக்கதை யுக்தி தான் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கினை ஆற்றி உள்ளது.
கல்லூரியில் படிக்கும் காதலர்களாக சித்தார்த், அமலா பால். ஒவ்வொரு முறையும் அமலா விடம் பல்ப் வாங்கி, சொதப்பி, வருந்தி, கெஞ்சி, கூத்தாடி, 'காதல் ஏங்க இவ்ளோ கஷ்டமா இருக்கு' என புலம்பி டிபிகல் லவ்வர் பாயாக பின்னி எடுத்திருக்கிறார் சித்தார்த்.
கேர்ள் நெக்ஸ்ட் டோர் லுக் உடன் அமலா பால். 'மைனா' படத்திற்கு பிறகு, இந்த படத்தில் சிம்பிளாக வரும் அமலா பால் கொவப்படுவதிலும், ஈகோ காட்டுவதுமாக நன்றாக நடித்துள்ளார். மணம் முடித்த பின் விவாகரத்துக்காக காத்திருக்கும் அமலா பாலின் பெற்றோராக பழைய சுரேஷும் சுரேகாவும். பழைய காதலை பறை சாற்றுவது போல சுரேஷ் காதல் கடிதம் எழுதி மகளையே தன மனைவிக்கு தூது போக சொல்லுவதும் என அவர்கள் இருவரின் யதார்த்த நடிப்பும் அற்புதம்.
சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அவர்கள் இருவரும் பட்டாசு கிளப்புகிறார்கள்.
நீரவ் ஷாவின் ரொமாண்டிக் ஒளிப்பதிவும் தமனின் பின்னணி இசையும் படத்தை உயரத்தில் நிறுத்துகிறது. பாடல்களில் 'பார்வதி' மட்டும் மனதில் நிற்கிறது.
'இந்த பொண்ணுக இருக்காங்களே!' என காமெராவை பார்த்து சித்தார்த் பேசி கொண்டிருப்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், போக போக படத்தை ஒரு டாகுமெண்டரி லெவலில் கொண்டு பொய் விடுகிறது. தவிர நண்பர்களின் பாண்டி செரி பயணம் படத்தை நகர்த்தி செல்ல மட்டுமே உதவி இருக்கிறது.
படத்துக்கு பெரிய பலம், திரைக்கதையும் சிரிக்க வைக்கும் வசனங்களும் தான்.
கல்லூரியை சுற்றியே கதை நடந்தாலும், பேராசிரியர்களை கோமாளிகள் போல சித்தரிக்கும் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல்.
காதல் என்றாலே, உருக்கும் வசனங்கள், டூயட் பாடல்கள், காதலுக்கு எதிர்ப்பு, அரிவாள், கொலை சோகமான முடிவு என்ற இலக்கணங்களை எல்லாம் உடைத்து ஜாலியான படத்தை கொடுத்திருகிறார் பாலாஜி மோகன்.
நான் ஆராதிக்கும் இந்திய திரைப்பட இயக்குனர்களில் மலையாள இயக்குனர் ப்ளேசிக்கு தனி இடம் உண்டு. அவரது இயக்கத்தில் வெளி வந்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து புல்லரித்து போனவன் என்ற முறையில் சமீபத்தில் வந்த பரணயம் என்ற மலையாள படத்தை கண்ட என்னை இம்முறையும் என்னை அவர் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு திரைப்படத்திலும் அழுத்தமாக தனது முத்திரையை பதித்து பார்வையாளனது சிந்தனையில் தனது திரைப்படத்தின் ஓட்டம், குறைந்தது ஒரு மூன்று நாளாக தங்கிவிடும்படி செய்துவிடுவார்.
அவரது திரைப்படங்களான 'காழ்ச்சா','தன்மாத்ரா','பலுங்கு','ப்ரம்மரம்' என ஒவ்வொன்றும் வேறு வேறு கதைகளை வேறு வேறு களத்தில் சொல்லின. இது வரை காதலின் பக்கம் செல்லாமல் இருந்த ப்ளேசி 'ப்ரணயம்' மூலம் யாரும் இதுவரை தொட்டுவிடாத காதலை சொல்லுகிறார்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மருமகள் மற்றும் பேத்தியுடன் வசிக்கிறார் பணி ஓய்வு பெற்ற அச்சுத மேனன். அவரது மகன் சுரேஷ், ஷார்ஜாவில் வேலை செய்து பணம் அனுப்பி வருகிறான்.அவ்வப்போது கேரளா வந்தும் செல்கிறான். ஒரு நாள் தனது அடுக்கு மாடி குடி இருப்பில் லிப்டில் இறங்கும் அச்சுத மேனன், கிரேசி என்ற அந்த வயதான பெண்ணை பார்த்ததும், உதடுகள் துடிக்க கண்கள் பட படக்க நெஞ்சை பிடித்து கொண்டு லிப்டிலேயே மயங்கி விழுந்து விட, கிரேசி அவரை தனது மடியில் கிடத்தியபடி, 'அச்சு அச்சு' என கதறியபடி உதவிக்கு அழைக்கிறாள்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் அவரது பெயர் வயது எல்லாவற்றையும் தானே சொல்ல, அச்சுத மேனோனின் குடும்பத்துக்கு சந்தேகம் வலுக்க, தான் அச்சுத மேனனின் முன்னாள் மனைவி என்றும் தாங்கள் சுரேஷ் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டதாகவும் கூறுகிறாள். அதன் பின்னர் அவள் ஒரு தத்துவ பேராசிரியரான மாதியூசை மணந்து அவளுக்கு ஒரு பெண் பிறக்க, மணமாகி குழந்தையுடன் அந்த குடியிருப்பில் வசிக்கும் அவளது பெண் வீட்டுக்கு தான் புதிதாக குடி வந்திருக்கிறார்கள் கிரேசும் மாத்யூசும்.
மாத்யூஸ் பராலிடிக் அட்டாக் வந்து செயல்படாத கால்களும் ஒரு கையும் உடையவன். அவனை குளிக்கவைப்பது முதல் அவனுக்கு எல்லாம் செய்வது கிரேஸ் தான். கிரேஸின் பழங்கதை முழுக்க அறிந்த மாத்யூஸ் அவளை புரிந்து கொண்ட கணவனாக அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான். உடல் நலமடைந்து அச்சுத மேனன் வீடு திரும்ப, அச்சுத மேனன், கிரேஸ் மற்றும் மாத்யூசுக்கு இடையே ஒரு கள்ளமில்லாத நட்பு வளையம் உருவாக, ஒருவர் பால் ஒருவர் அன்பாக ஊர்வலம் வர, இவர்களது உறவை காமத்துடன் தொடர்பு படுத்தி கொச்சை படுத்துகிறது இவர்களது வாரிசுகள்.
கொஞ்சம் கொஞ்சமாக கிரேஸ் மற்றும் அச்சுத மேனன் எதற்கு விவாகரத்து செய்தார்கள், மாத்யூஸ் கிரேசை எப்படி மணக்க நேர்ந்தது என ஒவ்வொரு முடிச்சாக அவிழ, இவர்களின் மூவரின் நட்பும் விரிவடைய, தங்களது வாரிசுகளுக்கு தெரியாமல் ஒரு சாலைப் பயணம் கிளம்புகிறார்கள் மூவரும்.
அதை தொடர்ந்து வருகிறது கனக்க வைக்கும் கிளைமாக்ஸ்.
அச்சுத மேனனாக இந்தி நடிகர் அனுபெம் கெர், கிரேசாக ஜெயப்ரதா. அனுபம் கெர் பின்னணி குரல் உறுத்துகிறது. மற்றபடி இயல்பான நடிப்பு. ஜெயப்ரதா, படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை அழுதபடியே வருகிறார். மோகன் லால், சக்கர நாற்காலியில் இருந்த படி, போலியோ அட்டாக் ஆன ஒரு நோயாளியின் உடல்மொழியையும், திணறிய படி பேசும் வாய் மொழியும் என நடிப்பில் கொடி நாட்டுகிறார். இவருக்கும் ஜெயப்ரதாவுக்கும் இருக்கும் அந்த கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்னியோன்யம் பார்ப்பவர்களை பொறாமைப் பட வைக்கும்.
சதீஷ் குருப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் மின்னுகின்றன. எம் ஜி ஜெயச்சந்திரனின் இசை அருமை. விஜய் யேசுதாஸ் மற்றும் ஸ்ரேயா கோஷாலின் குரலில் அந்த மழைப்பாடலான 'மழைத்துளி பளுங்குகள்' கண்ணுக்கும் காதுக்கும் குளுமை, இனிமை. ஒரு வித ரெட்ரோ உணர்வுடன் எண்பதுகளுக்கே நம்மை கூட்டி செல்கிறது.
படத்தில் சில குறைகளும் உண்டு. சில செண்டிமெண்ட் காட்சிகள் அதிகபடியாக உள்ளது. அந்த மூவர் செல்லும் சாலை பயணத்தில் வரும் அந்த கிளப் பாடல் காட்சி, படத்துடன் ஒட்டாமல் உறுத்துகிறது.
ப்ளேசி என்னும் சிறந்த கதை சொல்லியின் இயக்கத்துக்காக கண்டிப்பாக இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.
ஒவ்வொரு முறையும் ஒரு சிறந்த உலக திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், இது போன்ற ஒரு திரைப்படம் எப்போது நமது தமிழில் வரும் என நினைத்து ஏங்கியதுண்டு. இப்போது தமிழ் திரைப்படங்களும் உலக திரைப்படங்களின் தரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதற்கு ஆரண்ய காண்டம் ஒரு வலுவான ஆதாரம். பருத்தி வீரனில் ஆரம்பித்த முயற்சி, சுப்ரமணிய புரத்தை தொடர்ந்து, இப்போது ஆரண்ய காண்டம் என்ற ஒரு சிறந்த திரைப்படத்தில், உலக திரைப்படங்களுக்கெல்லாம் சவாலான ஒரு முயற்சி தெரிகிறது.
இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அப்பாவின் பணத்தை செலவிட்டாலும், வணிக நோக்கோடு குப்பை படங்களை எடுத்து தள்ளாமல், ஒரு நல்ல திரைப்படத்தை தயாரித்ததற்காக எஸ் பி சரணுக்கு ஒரு பூங்கொத்து. ( தன பையன் எடுத்த திரைப்படங்களால் நஷ்டமடைந்த எஸ் பி பி தனது குருநாதர் பெயரில் கட்டிய கோதண்டபாணி ஸ்டுடியோவை விலை பேசி வருவதாக தகவல்).
இரண்டு நிழல் உலக தாதாக்களான சிங்கம்பெருமாள் மற்றும் கஜபதி ஆகியோருக்கு பகை. கதை நடக்கும் நாளில், (படத்தின் கதை காலையில் ஆரம்பித்தது மாலையில் முடிந்து விடுகிறது) அதிகாலையில், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, தனது வைப்பாக வைத்திருக்கும் சுப்புவிடம் தனது தள்ளாத வயதில் சுகம் அனுபவிக்க முடியாத சிங்கம்பெருமாளுக்கு தனது இயலாமையை ஒத்துகொள்ள முடியாத கோவத்தில் இருக்க, அவரது அடியாள் பசுபதி, எதிராளி கஜேந்தரன் போதை பொருள் கடத்த போவதை மோப்பம் பிடித்து , அதனை கடத்த அனுமதி கேட்க, அதனை சிங்கம்பெருமாள் மறுக்க, 'உங்களுக்கு வயசாயடுச்சி அதனால ரிஸ்க் எடுக்க தயங்க றிங்க, நான் பாத்துக்கறேன்' என தனியாக வேலை செய்ய அனுமதி கேட்க, அதனால் கொவமுற்ற சிங்கம் பெருமாள், பசுபதியை போட்டு தள்ள தனது ஆளுகளை ஏவி விட, அதனை அறிந்து பசுபதி தப்பி விட... டாப் கியரில் கிளம்புகிறது திரைக்கதை.
இடையே வாழ்ந்து கேட்ட ஜாமீன் குடும்பத்திலிருந்து தங்களது கடனை அடைக்க சேவல் சண்டை விட்டு சம்பாதிக்க வரும் முன்னாள் ஜமீனும், அவரது மகனும், போதை பொருள் வைத்திருக்கும் ஆளுடன் இரவில் தங்க, அவனது போதை பொருளினால் தங்களுக்கு பணம் கிடைக்கும் என அறிந்து அதனை கடத்த, அந்த ஆள் இறந்து விட, போதை பொருள் வாங்க கஜேந்திரனின் குழு வர, அங்கே பொருளை காணமல், தனது ஆள் இறந்து கிடப்பதையும் கண்டு அதனை எடுத்து போனது நிச்சயம் சிங்கம்பெருமாளின் ஆளாக இருக்கும் என நினைத்து அவனுக்கு தொலைபேச, சிங்கம்பெருமாள் அதனை எடுத்தது பசுபதி தான் என போட்டு குடுக்க, பசுபதியை கஜேந்திரனின் ஆட்களும், சிங்கம்பெருமாளின் ஆட்களும் கொல்லதேடுவது தனிக்கதை.
இதற்கிடையே சிங்கம் பெருமாள் சுப்பு என்கிற தனது வைப்புக்கு காவலாக 'சப்பை' என்ற பெண்தன்மை உடைய ஒருவனை துணைக்கு வைக்க, சுப்புவும் சப்பையும் காதல் கொள்ள....தட தடக்கும் திரைக்கதைக்கு ஏற்ற சுழற்றி அடிக்கும் ரத்த கிளைமாக்ஸ்.
ஓரம்போ, குவார்டர் கட்டிங் போன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய தியாகராஜா குமார ராஜா தான் இப்படத்தின் திரைக்கதை, வசனம் இயக்கத்துக்கு சொந்தக்காரர். அவரது திரைக்கதை உத்தியில், எனக்கு மிகவும் பிடித்தமான அலேஜன்றோ கோன்சாலஸ் இன்னரிட்டு, மற்றும் ஹாலிவூட் திரைக்கதை ஜாம்பவான குவென்டின் டொராண்டினோ வின் சாயல் தெரிந்தாலும், வித்தியாசமான திரைக்கதையால், ஹாலிவூட் தரத்தை எட்டி இருக்கிறார் என மார் தட்டிக் கொள்ளலாம்.
படத்தில் வரும் வசனங்களும் இயற்கையாய் அமைந்தும் அற்புதமாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் வந்து விழுகிறது. நீளமாக இல்லாமல் நறுக்கு தெறித்தாற்போல இருப்பது வசனகர்த்தாவின் வெற்றி. படத்தின் மூடுக்கு ஏற்ப இழைகிறது யுவனின் வயலினும் வினோத்தின் ஒளிப்பதிவும். யுவன் பல இடங்களில் மௌனத்தை மீட்டி இருந்தாலும், இசை கோர்வைகள் அனைத்தும் உலகத் தரத்தை எட்டிப் பிடிக்கிறது.
தமிழுக்கு புதுசான ஜாக்கி ஷேராபின் பாத்திரத்தை, தமிழில் வேறு யாரும் செய்ய முடியுமா என ஐயம் எழுகிறது. சம்பத் ராஜ்,சுப்புவாக நடித்திருக்கும் யாஸ்மின் பொன்னப்ப, சப்பையாக வரும் ரவிக்ருஷ்ண, ஜமீன், அவரது மகன், ஆண்ட்டிக்களை மடக்கும் டெக்னிக் சொல்லும் அடியாள் என பாத்திர படைப்புகள் காண கச்சிதம். நடிப்பில் கோடி கட்டி பறக்கிறார்கள்.
படத்தில் ரத்தம் அளவுக்கு அதிகமாவே தெறிக்கிறது. என்றாலும் கதைக் களனுக்கு அது அவசியமாகிறது.
நிச்சயமாக வயது வந்தோர்க்கான படம் இது. வசனங்களுக்கும்
வன்முறைக்கும்.
ஏற்கனவே அமெரிக்காவில் விருது வாங்கிய போதிலும், மேலும் பல விருதுகளை இத்திரைப்படம் குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
திரைப்படங்களில் பல உண்மைகள் பேசுகின்றன. கடந்து போன கதைகளை சொல்லுகின்றன. நம்பிக்கைகளை விதைக்கின்றன. வாழ்வின் விளிம்பிற்கு சென்ற மனிதர்கள் வெற்றி பெற்ற கதைகளை சில படங்கள் உண்மைக்கு அருகே இருந்து காட்டுகின்றன. அவ்வகை திரைப்படங்களாக 'The pursuit of happyness' போன்ற திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். அந்த திரைப் படங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு, நமது வாழ்கை அவர்களோடு மேலாக இருப்பதை உணர்ந்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களின் தன்னம்பிக்கை கண்டு நமக்கும் நமது மேல் நம்பிக்கை பிறக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கை பெண்மணியின் கதையைத்தான் ஆந்த்ரே நோஸ் திரைப்படம் பேசுகிறது.
கொலம்பியாவின் பகோடா என்ற ஊரிலிருந்து நியூ யார்க் நகருக்கு வேலை தேடி வருகிறது ஒரு குடும்பம். கணவன், மரியானா என்ற மனைவி. அவர்களின் குழந்தைகள் காபி என்ற காப்ரியல் மற்றும் அண்ட்ரியா என்ற சிறுமி. வந்த இடத்தில் கணவன் வேறு ஒரு துணையை தேடிக் கொண்டு, தனக்கு மியாமி நகரில் வேலை கிடைத்திருப்பதாகவும், தான் அங்கு சென்று செட்டில் ஆனா பின்னர் வந்து குடும்பத்தை அழைத்து செல்வதாகவும் கூறி செல்கிறான். நம்பிக்கையுடன் அவனை வழி அனுப்பி வைக்கிறது. அவனது நண்பனின் மூலமாக, மரியானாவுக்கு அவள் கணவன் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை சொல்லப்பட அவள் உடைந்து போகிறாள்.
நமது ஊர் பப்ஸ் போல இருக்கும் எஸ்பனடா என்னும் பலகாரம் செய்து தெருவில் இறங்கி விற்கிறாள்.அதில் வருமானம் வரவில்லை.
ஒருமுறை கோக் டின்களை சேகரிக்கும் ஒருவனை கண்டு அவன் பின்னாலேயே தன குழந்தைகளுடன் தொடரும் மரியன், ரீசைக்ளிங் செய்யப்படும் ஒரு காலி கோக் டின்னுக்கு ஐந்து சென்ட்கள் கிடைக்கும் என அறிந்து கொண்டு, மறுநாள், ஒரு கடையில் இருந்து ஸ்ட்ராலரை திருடும் அந்த குடும்பம், தினமும் காலி கோக் டின்களை குப்பைகளிலிருந்து பொறுக்க ஆரம்பிக்கிறது. அதே தினம், அவளது கணவன் மூன்று மாதமாக வாடகை தராததால், அந்த சைனீஸ் வீட்டுக்காரன், அவர்களை வீட்டில் இருந்து துரத்தி விட, அந்த குடும்பம் பார்க்குகளிலும், ரயில் மேம்பாலங்களிலும் தங்குகிறது. யாரோ சொன்ன ஒரு முகவரியை வைத்துகொண்டு, நியூ யார்க் நகரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாரத்துக்கு 150$ வாடகைக்கும் தங்குகிறார்கள். அப்போது தான் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள் மரியான். இருக்கிற கஷ்டம் போதாமல் இது வேறயா என விக்கித்து நிற்கும் வேளையில் அந்த இந்திய பெண் அவள் கருவை கலைக்க உதவுகிறாள். நமது ஊரு கிழங்கோ அல்லது மருந்தோ.. எதோ ஒன்றை கஷாயமாக்கி தர, அதுவாகவே கரு கலைந்து விடும் என சொல்லி அவளை பார்த்துக் கொள்கிறாள்.
கருகலைப்பு தனது மதத்துக்கு விரோதம் என தெரிந்தும் ஆலயம் சென்று கடவுளிடம் மன்னிப்பு வேண்டி அழுகிறாள். கரு கலைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பம் குப்பையில் கிடக்கும் காலி கோக் டின்களை பொறுக்கி முன்னேறுகிறது. அவளது ஒவ்வொரு கஷ்டத்திலும் அவளுக்கு துணையாக அவளது மகன் காப்ரியல் இருக்கிறான். எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதமாதிரி காட்டிக் கொள்ளும் அவன், தன தாய் கஷ்டப்படும் போதெல்லாம், தனியனாக கோக் டின்கள் பொறுக்கி குடும்பம் காக்கிறான். படத்தின் முடிவில், இந்தப் படம் ஒரு உண்மை கதை என்றும், தற்போது மரியன், காப்ரியல் மற்றும் ஆண்ட்ரியா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கார்டு போடும்போது நம் மேனி சிலிர்ப்பது உண்மை.
மரியனாக நடித்திருக்கும் பாவ்லா மண்டோசா தான் படத்தின் பிரதான பாத்திரம். தனது இயலாமையும், தன்னம்பிக்கையும் ஒரு சேர தன முகத்தில் படம் நெடுக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தை க்ளோரியா லா மார்த்தே என்ற மற்றொரு பெண்ணோடு சேர்ந்து எழுதி இயக்கி இருப்பவரும் இவரே.
படத்தில் காப்ரியல்ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன் தான் இந்த படத்தின் கதாநாயகன். எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாதது போல முகத்தில் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு, தன அம்மாவின் சிரமம் புரிந்து அவளது கஷ்டங்களில் தோள் கொடுத்து தன்னால் இயன்ற அனைத்து செல்லும் ஒரு கதாபாத்திரம், அனைத்து அன்னைகளுக்கும் ஒரு உதாரண மகனாக சிறந்த நடிப்பு.
இந்த திரைப்படம் உலகெங்கும் பலவித விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.
இந்த திரைப்படம் வாங்கிய விருதுகள்.
படம் மெதுவாக நகர்ந்தாலும், ஒரு அற்புதமான நெகிழ்வையும், எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டாலும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இந்த உலகத்தில் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை இயக்கத்துக்கு சொந்தமான பெண்கள் க்ளோரியாவுக்கும் பாவ்லா மண்டோசாவுக்கும் ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
இந்த படத்தை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் பாருங்கள்.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து அற்புதமான திரைப்படங்கள் வெளி வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. உலக சினிமாவை நோக்கிய பயணத்தை அடுத்த களத்துக்கு எடுத்து செல்லும் திரைப்படம் தற்போது வெளி வந்துள்ள வெற்றிமாறனின் ஆடுகளம். இந்தத் திரைப்படத்தை தனுஷின் திரைப்படம் என சொல்வதை விட, வெற்றிமாறனின் ஆடுகளம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். படத்தில் வணிகத் தன்மைகளின் ஆதிக்கங்களை குறைத்து, தமிழுக்கு புதிய களமான சேவல் சண்டையை மையப் படுத்தி, மனித மகிழ்வுகளையும் வக்கிரங்களையும் ஒன்று சேர பதிவு செய்து ஒரு நல்ல சினிமாவை படைத்திருக்கிறார் வெற்றிமாறன்.
சிலர் இதனை இஸ்பானியல் சினிமாவான அமோறேஸ் பெர்ரோசின் காபி என சொல்கின்றார்கள். அமோறேஸ் பெரோசின் கதை வடிவத்தை தான் மணிரத்னம் ஆயுத எழுத்து படத்தில் கையாண்டார். அமோறேஸ் பெரோஸில் வரும் மூன்று கிளை கதைகளில் ஒன்று நாய் சண்டையை பற்றியது, ஆடுகளம் சேவல் சண்டையை பற்றியது என்ற ஒரே ஒரு சிறிய ஒற்றுமை தவிர, இரண்டும் வேறு வேறு களங்கள், வேறு வேறு கதைகள். எனவே ஆடுகளம் என்ற ஒரு நல்ல முயற்சியை பிரதி என குறுக்கிட வேண்டாம்.
கதை?
மதுரையில் சேவல் சண்டைக்கு பெயர் போனவர் பேட்டைக்காரன். அவரை எதிர்த்து ஒவ்வொரு முறையும் மண்ணை கவ்வுகிறார், சேவல் சண்டைக்கு பெயர்போன குடும்பத்திலிருந்து வந்த காவல் அதிகாரியான இரத்தின சாமி. அது தனது கௌரவத்தை பாதித்தால், மீண்டும் ஒரு முறை பந்தயம் வைத்து பெட்டைகாரனை வெற்றிகொள்ள முடிவு செய்கிறார்.
பேட்டைகாரனிடம் வேலை செய்த தொரை, பார் வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்க, பேட்டைகாரனின் மற்றொரு சிஷ்யன், கருப்பு. ஒவ்வொரு முறை சேவல் தோற்றபோதும் அதனை அறுத்து போட சொல்வது பேட்டைகாரனின் வழக்கம். கருப்பு வளர்த்த ஒரு சேவலை அறுத்து போட சொல்ல, கருப்புக்கு மனம் கேட்காமல், அதனை எடுத்து சென்று தனது வீட்டினில் வளர்க்கிறான். அதற்க்கு, சேவல் சண்டைக்கு தேவையான பயிற்சியும் கொடுத்தபடி வருகிறான்.
சேவல் சண்டையில் ஈடுபடும்படி ரத்தினசாமி இன் சவாலை ஏற்று கொள்ளும் பேட்டைக்காரன், தோற்ப்பவன் மீசை மழித்து மொட்டை அடித்து சண்டையை விட்டே ஒதுங்கி விட வேண்டும் என்ற சவாலுடன் களத்தில் இறங்க சிலிர்ப்பூட்டும் சேவல் சண்டைகள் அந்த ஆடுகளத்தில் அரங்கேற, பேட்டைகாரனின் சேவல்கள், ரதினசாம்யின் தந்திரங்களுடன் களத்தில் இறக்கப்பட்ட சேவல்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல் சுணங்க, பேட்டைகாரனின் எதிர்ப்புக் கிடையே, தான் வளர்த்து வரும் சேவலை களம் இறக்கும் சேவல் வெற்றி வாகை சூட, இறுமாப்பில் பேட்டைகாரனுக்கு தனுஷின் மேல் பகையும் வஞ்சமும் வளர இடை வேளை. அதன் பின்னர் தான் உண்மையான ஆடுகளம்.
கருப்பு வாக வாழ்ந்திருக்கும் தனுஷுக்கு இது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். அசல் மதுரைக்காரனாக வாழ்ந்திருக்கிறார். அம்மாவை இழந்து அழுகை வராமல் அன்று இரவு அம்மாவை பற்றி தனது ஆங்கிலோ இந்தியன் காதலியான டாப்சீயிடம் புலம்பி கதறி உடைந்து போகுமிடத்தில் கலக்குகிறார். பேட்டைகாரனாக நடித்திருக்கும் ஈழத்துக் கவிஞயர் செயபாலன் ஒரு ரேவெலேஷன். அந்த பெரிய மீசைக்குள்ளிருந்து வரும் உறுமலும், குரோதம் கொண்ட பார்வையுமாக அற்புதமாக நடித்திருக்கும் அவருடன் சேர்ந்து , டப்பிங்கில் ராதாரவியின் குரல் மாடுலேஷங்களும் சேர்ந்து நடிக்கிறது.
தனது முதல் படமான பொல்லாதவனில் கவனத்தை ஈர்த்த வெற்றிமாறன், ஆடுகளத்துக்காக, சேவல் சண்டையின் அடிப்படையிலிருந்து அனைத்தையும் கற்று தேர்ந்து வெளிப்படுத்தியதில் அவரது கடின உழைப்பு தெரிகிறது. வித்தியாசமான களமும்,கதையும், விறுவிறு திரைக்கதையுமாக நம்மை ஆரம்பம் முதலே கட்டிபோட்டு உட்கார வைத்து விடுகிறார்.
அந்த விறு விறு திரைக்கதைக்கு வேகமூட்டுகிறது சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து புறப்படும் வேல்ராஜின் ஒளிப்பதிவும், சிலிர்ப்பூட்டும் ஜி வியின் பின்னணி இசையும். இவரது இசையின் 'யாத்தே யாத்தே' மற்றும் 'அய்யயோ நெஞ்சி அலையுதடி', இரண்டும் தாளமிட வைக்கின்றன..
தனுஷ் தனது அந்த ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்துக் கொண்டு அத்துணை பேரிடமும் மல்லுக்கு நின்று சண்டை இடுவது, மற்றும் கதைக்கு அழுத்தம் கூட்டாத டாப்சீயின் காதல் காட்சிகளும் படத்தின் சீரான திரைக்கதைக்கு உறுத்தலாக இருந்தாலும், ஆடுகளம், தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்புகளில் ஒன்று.
ஒரு மதத்தை சார்ந்தவன் ஏதாவது ஒரு பயங்கரவாத செயலில் ஈடுபட்டால், அம்மதத்தை சார்ந்த அனைவருமே, பயங்கர வாதிகள் என முத்திரை குத்தப்படுவதும் அதனை அரசியல் சக்திகள் ஊதி ஊதி பெரியதாக்குவதும் நாம் அனைவரும் கண்ட ஒன்று. அதே மதத்தை சார்ந்த, குற்றங்கள் அறியாதவர்களும் பலிகடாக்கள் ஆக்க படுவதை நாம் காண்கிறோம். ஒசாமா என்ற ஒரு தீவிர வாதி ஒரு அரபிக் என்பதால், அனைத்து அரபியர்களும் தீவிரவாதிகள் என பார்க்கும் மனோபாவம் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. அரபியர்களோ இஸ்லாமியர்களோ தங்கள் நாடுகள் வரும்போது அவர்களை பரிசோதிக்க கூடுதல் கவனமும் இமிக்ராஷன் பகுதியில் எடுத்துக் கொள்ளப்படும்.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஒரு வங்கியில் நல்ல வேலையில் இருப்பவள் முன்னா. அவளுடைய மகன் க்பாட்டி. முன்னா குண்டாக இருப்பதால், அவளை விவாகரத்து செய்துவிட்டு அழகான ஒரு யுவதியுடன் வாழ்க்கை நடத்துகிறான் அவள் கணவன். ஒவ்வொரு முறை தன அலுவலகத்தில் இருந்து இல்லம் திரும்பும்போது ராணுவத்தின் ஏகப்பட்ட பரிசோதனைகள். எங்கே தன மகனும் இந்த பாலைவனத்தில் கிடந்தே அல்லல் பட போகிறானோ என அவள் வருத்தமுற்று இருந்த சமயத்தில், அவள் எப்போதோ அமெரிக்க விசாவிற்கு மனு போட்டிருக்க, அப்போது அவளுக்கு கிடைக்கிறது.. தாயும் மகனும் அம்ரீக்காவிற்கு பயணப்படுகிறார்கள்.(அரபிக்கில் அமெரிக்காவைத்தான் அம்ரீக்கா என சொல்கிறார்கள்)
மூன்று மணி நேர விசாரணை மற்றும் பரிசோதனைக்கு பின்னர், வெளியே வரும் அவர்களை, முன்னாவின் சகோதரி ரகதா மற்றும் அங்கு மருத்துவனாக இருக்கும் அவள் கணவன் நபீல், தங்களது மூன்று குழந்தைகளுடன் தங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றனர்.
தனது பத்து வருட வங்கி வேலை அனுபவத்தில் எளிதாக வேலை கிடைத்துவிடும் என கனவில் இருக்கும் முன்னாவிற்கு வைட் காசில் என்கிற ஒரு துரித உணவகத்தில் பணியாளர் வேலை மட்டுமே கிடைக்கிறது. தனது அறிவாளியான மகன் க்பாடியை அங்குள்ள ஒரு நல்ல பள்ளியில் சேர்க்கிறாள். க்பாடியோ பாலஸ்தீனத்தை சேர்ந்தவன் என்பதால், அவனை எல்லோரும் ஒசாமா என எள்ளி நகையாடுகிறார்கள். முன்னாவின், சகோதரி ரகதாவுக்கோ, அம்ரீக்காவில் இருக்க பிடிக்க வில்லை. தனது சொந்த ஊருக்கு போக அவள் துடிக்கிறாள். அப்போது அமெரிக்கா சதாம் உசேன் நாடாண்டு கொண்டிருந்த இராக்கின் மீது போர் தொடுக்கிறது. மருத்துவனான நபீல் ஒரு அரபியன் என்பதால் அவனிடம் நோயாளிகளின் வரவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் அந்த குடும்பத்தின் நிம்மதி குலைந்து போகிறது. க்பாட்டி அமெரிக்கனாக மாறி தனது அம்மாவை மதிக்க மறுக்கிறான். சக மாணவர்கள் தன்னை அன்னியமாக பார்ப்பதால் அவனுக்கு அவர்களிடம் பிணக்கு வருகிறது.நிம்மதியாக இருந்த பாலஸ்தீன வாழ்கையை விட... அமெரிக்காவில் தாங்கள் அகதிகளாக உணர்கிறார்கள்.
வேறொரு நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயரும் மக்களின் துயரை அருமையாக சொல்லி இருக்கிறது படம். முன்னாவாக நடித்திருக்கும் நிஸ் ரீன் பௌர், மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாள். தனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், மற்றவரிடம் அன்பை வெளிப்படுத்தும் இடங்களிலும், தனது மகன் சிறிது சிறிதாக தன்னை விட்டு விலகிப் போவதை கண்டு கண்ணீர் வடிப்பதும் என கலக்கி எடுத்திருக்கிறார். இது ஒரு அரபி படம் என்பதால் தான் அவருக்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என நான் நினைக்கிறேன்.
ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு, அதிக செலவு இல்லாமல், மனித உணர்வுகளுடன் விளையாடி இருக்கிறார், திரைக்கதை மற்றும் இயக்கத்தை கையாண்டிருக்கும் பெண் இயக்குனர் செரியன் டபிஸ். சோகத்தை கசக்கி பிழியாமல், படம் முழுவதும் கருப்பு நகைச்சுவையை இழையோட விட்டு, படம் ராக்கெட் வேகத்தில் பயணிப்பதற்கு இவரது இருகப்பற்றும் திரைக்கதையே முக்கிய காரணி. படத்தில் அமெரிக்காவை குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் அதன் பாசிடிவ் பக்கத்தையும் காட்டி, ஒரு அருமையான படத்தை அளித்த அவருக்கு ஒரு ராயல் சல்யுட்.
ரகதாவின் வீடு, அவள் குடும்பம், வைட் காஸ்டல் உணவகம், க்பாடின் பள்ளி. அவ்வளவுதான் படத்தின் கதை நடக்கும் இடங்கள் என அதிகம் செலவுக்கு வழி வகுக்காமல் குறைந்த செலவில் நிறைவான் படத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர்.
படத்தில், வேறொரு நாட்டில் இருந்து அமெரிக்கா வந்து வாழ்பவர்களை பற்றி ரகதா சொல்லும் அந்த வசனம் மிகவும் பிடித்தது.
'ஒரு மரத்தை ஒரு இடத்தில் இருந்து பிடுங்கி, இன்னொரு இடத்தில் நட்டு வைத்தால், அது முன்பை போலவே வளருமா.. அதன் வேர்களை தேடாதா?'.
மிக கௌரவமான கான் திரைப்பட விருதுகள், சண் டான்ஸ் திரைப்பட விருதுகள், என அள்ளி குவித்துள்ளது இந்த திரைப்படம்.
வாழ்க்கையை பாசிடிவாக மாற்றி மற்றவர்களை மகிழ்விக்கும் முன்னாவின் புன்னகைக்காகவே இந்த திரைப்படத்தை இரண்டு முறை பார்த்தேன்.
நாம் வளர்ந்து வரும் பிராயத்தில் டீன் ஏஜ் எனப்படும் பதின்ம வயதுப் பருவம், மிக மிக முக்கியமான ஒன்று. நமது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் வயதும் இந்த வயது தான். அந்த வயதில் வரும் அகங்காரம், கோவம், தான் செய்வது மட்டுமே சரி என தோன்றும் மனோபாவம், அனைத்தையும் உளவியல் ரீதியாக அலசுகிறது நான் சமீபத்தில் பார்த்த மலையாளத் திரைப்படம் 'மம்மி அண்ட் மீ'.
டீன் ஏஜ் பருவத்தை பற்றி சொல்கிறேன் என பாலியல் காட்சிகளை காட்டி கல்லா கட்ட நினைக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு குடும்ப படமாக எடுத்து பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நிலவி வரும் ஜெனரேஷன் கேப்பை ஓரளவு மூட பிரயத்தனம் செய்கிறது இந்த நல்லப் படம். தமிழ் மசாலா படங்களைப் பார்த்து கேட்டு போய்விட்ட மலையாள திரைப்படங்களில் இந்தத் திரைப்படம், எடுத்தக் கொண்ட களன், மற்றும் விறுவிறு திரைக்கதையால் தனித்து நிற்கிறது.
ஜுவல் கல்லூரியில் படிக்கும் பதின்ம வயதுப் பெண். அவள் இந்த உலகத்தில் முதல் எதிரியாக நினைப்பது, வீட்டுக்கு காலம் தாழ்த்தி வந்தாலோ, இறுக்கப் பிடிக்கும் உடை அணிந்தாலோ, தனது ஆண் நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடித்தாலோ, அதனை எதிர்த்து திட்டும் அம்மா கிளாரா தான். வங்கி அதிகாரியான அப்பா ஜோசெப் க்கு இவர்கள் இருவரின் சண்டையை தீர்த்து வைக்கவே நேரம் போதவில்லை. அவளுடைய தம்பி, அவள் திட்டு வாங்கும்போதெல்லாம் குதூகலிக்கும் சாப்பாட்டு பிரியன்.
இவர்களின் குடும்ப நண்பரின் மகன் ராகுல். இரு குடும்பங்களும் பரஸ்பர நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதால், ஜுவலுக்கு ராகுலுடனான நட்புக்கு இருவர் வீட்டிலும் பச்சை கோடி. ஜுவலும் ராகுலும் ஒரே கல்லூரியில் படிப்பதால், ஜுவல் ஆண் பிள்ளைகளிடம் சண்டை இடும் போதெல்லாம் அவளைக் காப்பது ராகுல் தான். ராகுலுக்கு ஜுவலின் மீது ஒருதலை காதல் இருந்தாலும், அதன் மூலம் இரு குடும்ப நட்பு களங்கப்பட்டு விடுமோ என தன காதலை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்கிறான்.
கல்லூரியில் இருந்து நேரங்கழித்து வீடு திரும்புவதற்கு காரணம் கேட்டதற்கு, இன்டர்நெட் சாட் செய்வதால் சமயமாகிறது என காரணம் சொல்லும் ஜுவலுக்கு கிளாராவே பரிந்துரைத்து வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி தருகிறார் ஜோசெப். இன்டர்நெட் சாட்டில் நண்பனாகிறான் முகம் தெரியாத அமீர். அவனுடன் சாட் செய்ய செய்ய ஜுவலின் சுபாவம் மாறுகிறது. ஒருமுறை தனது தாயின் கண்டிப்பாய் பொறுக்க முடியாத ஜுவல் கத்தி கூப்பாடு போட்டு வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் உடைத்து மயங்கி விழுந்து விட, ஒரு மன நல மருத்துவரை அணுகுகிறார்கள் கிளாராவும் ஜோசெப்பும். அப்போது அவர் இன்றைய பதின்ம வயது இளைஞர்களின் மனோ நலத்தையும் பெற்றோர் எப்படி அவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் எனவும் விளக்குகிறார்.
உடைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியும் பேசி மாய்ந்து போகும் ஆண்ட்டிகள் வரும் பார்ட்டிகளுக்கு ஜுவல் செல்ல விரும்புவதில்லை. ( அந்த பார்டிகளுக்கும் சுடிதார் அல்லது காக்ரா சோளி தான் அணிந்து வரவேண்டும் என்ற அன்னையின் கட்டுப்பாடு வேறு). அவள் பார்ட்டிக்கு செல்ல, ஒரு அழகான உடை தைத்து அனுப்பி வைக்கிறான் அமீர். அதனை அணிந்து அவள் பார்ட்டிக்கு செல்ல பார்ட்டியில் உள்ள அனைவரின் கண்ணும் ஜுவலின் மேல். தன அம்மாவிடம் அதனை தன தோழியுடன் சென்று கடையில் வாங்கியது என பொய் சொல்ல, அமீர் தாயிடம் தான் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டியது தானே. என கேட்க அப்போது தான் தான் மெல்ல அமீரை காதலிக்க துவங்கி இருப்பது புரிகிறது. இதனை ராகுலிடம் அவள் சொல்ல, ராகுலோ அவளது நலத்தில் அக்கறை கொண்டவனாய் இரு வீட்டாரின் பெற்றோரிடமும் சொல்ல, மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி அமீரை வீட்டுக்கு அழைக்கிறார்கள் கிளாராவும் ஜோசெப்பும். ஜுவல் அவன் அனுப்பிய அந்த பார்ட்டிஉடை அணிந்தபடி மகிழ்ச்சியுடன் காத்திருக்க, ராகுலின் குடும்பமும் ஜுவலின் குடும்பமும், படம் பார்க்கும் நாமும் , நகம் கடித்தபடி காத்திருக்க, அமீர் வந்தானா? அமீர் யார்? ராகுலின் காதல் என்னவானது என்பதை சிறிது திருப்பத்துடன் சொல்கிறது படம்.
படத்தில் பட்டாசாக வெடித்திருப்பவர் ஊர்வசி. வயது வந்தப் பெண்ணை வைத்துள்ள ஒரு தாய்க்குரிய கண்டிப்பும் கரிசனமும் அவர் வெளிப்படுத்தும் இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார். முகேஷின் அலட்டல் இல்லாத நடிப்பும் அருமை. ஜுவல்லாக நடித்திருக்கும் அர்ச்சனா கவி கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார். மிகவும் சாதரணமாக செய்துள்ளார். ராகுலாக நடித்திருக்கும் குஞ்சாக்கோ போபனுக்கு படத்தில் அவ்வளவாக வேலை இல்லை.
படத்தின் மிகப்பெரும் பலம் திரைக்கதை மற்றும் இயக்கம். படத்தின் பலவீனம், நன்றாக இருந்தாலும் அவ்வப்போது சம்மந்தமில்லாமல் எட்டி பார்க்கும் பாடல்கள். தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவை விளக்கும் மாலாகப் போல மகளே.. மிக மென்மையான பாடல். காட்சிபடுத்தலும் அருமை.
இருந்தாலும் தைரியமான கதைக் களனுக்காகவும் திரைக்கதைக்காகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.
உலகில் பல தொழில்களில் ஒன்று ஆலோசகர் எனப்படும் கன்சல்டன்ட் தொழில். கன்சல்டன்ட்கள் ஐ டி தொழிலில் மட்டும் அல்ல. பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வருடத்தில் பாதி நாட்கள் விமானங்களில் பறந்து கொண்டே இருப்பார்கள். இவர்களது வாழ்க்கையை பெட்டி வாழ்க்கை (Box Life) என சொல்லலாம். எப்போதும் பெட்டியில் துணிகளை வைத்து எங்கும் கிளம்ப தயாராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கன்சல்டன்ட் வாழ்கையை சிறிது நகைச்சுவை, மேலோட்டமான செண்டிமெண்ட்ஸ் கலந்து வாழ்கையை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் திரைப்படமாக 'அப் இன் தி ஏர்' திரைப் படத்தை படைத்திருக்கிறார் கனடா நாட்டு இயக்குனர் ஜேசன் ரேயத்மான்.
அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தின் ஒமஹா நகரில் இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறான் நடுத்தரவயது ரயான் பிங்கம். அவனது வேலை, வேலைநீக்கம் செய்யும் ஒரு ஆலோசகன். ஒவ்வொரு நகரத்தில் இருக்கும் கம்பனிகளுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதே அவனது வேலை. வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களை அவர்களின் கவலைகளை குறைத்து அவர்களுக்கு இருக்கும் எதிர்காலத்தை விளக்கி ஒரு மனோதத்துவ நிபுணன் போல அவர்களது சுமைகளை தாங்கி கொண்டு அவர்களுக்கு பணி நீக்கம் தருவதே அவனது சவாலான வேலை.
வருடத்தில் 290 நாட்கள் விமானங்களில் பறந்து பறந்து வேறு வேறு ஊர்களுக்கு சென்று பணி நீக்கம் செய்யும் வேலை அவனுக்கு பிடித்திருந்தது. எஞ்சி இருந்த 75 நாட்களை அவன் வெறுத்தான். ஏனென்றால் தனியாக அவனது அபார்ட்மெண்டில் வாழ வேண்டும்.
அமெரிக்காவில் பிரீகுவன்ட் பிளையர் மைல்ஸ் என ஒன்று உண்டு. ஒரே விமானத்தில் பறந்து கொண்டே இருந்தால், அதற்குண்டான அட்டையை கொடுப்பார்கள்.நீங்கள் பறக்கும் தூரத்திற்கு உள்ள மைல்கள் பாயிண்டுகளாக அந்த அட்டையில் ஏறும். சில குறிப்பிட்ட பாயிண்டுகள் சேர்ந்ததும் உங்களுக்கு அந்த விமானத்தில் இலவசமாக அந்த பாயிண்டுகளுக்கு ஏற்ற தொலைவுக்கு அந்த விமானத்தில் பறந்து கொள்ளலாம். (இப்போது இந்தியாவிலும் இது இருக்கிறது). ரயான்னுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற அந்த விமான அட்டையில் ஒரு மில்லியன் பாய்ண்டுகள் சேர்க்கவேண்டும் என்பது கனவு.
நாடலி என்ற புதிதாக பட்டபடிப்பை முடித்து அவனது கம்பெனியில் சேரும் பெண்ணினால் அவனது கனவுக்கு தடை வருகிறது. அவனது கம்பனியின் செலவை குறைக்க அவள் புதிய ஒரு யோசனையோடு வருகிறாள். பணி நீக்கம் செய்வதற்கு நேரில் செல்லாமல், இன்டர்நெட் மூலமாகவே வீடியோ கோன்பெரேன்சிங் முறையில் நேர்முகம் நடத்திக் கொண்டால் விமான செலவுகள் மற்றும் தங்கும் செலவுகள் கம்பனிக்கு மிஞ்சும் என்ற அவளது யோசனையை அந்த கம்பெனி எம் டீ ஏற்றுக்கொள்ள ரயான் அதனை எதிர்க்கிறான். பணி நீக்கம் செய்யப்படும் மக்களின் குறைகளை நேரில் சென்று அறியாமல் அவர்களை திருப்தி படுத்த முடியாது என்ற அவனது வாதம் எடுபடவில்லை.
எனினும் பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் மன நிலையை நேரில் அறிய ரயான், நாடலீயையும் தன்னுடன் கூட்டி செல்ல வேண்டி இருக்கிறது. இருவரும் சேர்ந்தபடி பணி நீக்கம் செய்ய ஆரம்பிக்கும்போது, பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் துக்கமான மன நிலை நாடலீக்கு மெல்ல புரிகிறது. அவளது பாய் அவளை விட்டு பிரிய, அவளால் பணி நீக்கம் செய்யப்பட ஒரு பெண்மணி தற்கொலை செய்து கொள்ள நாடலி தனது வேலையே ராஜினமா செய்து விடுகிறாள். இதற்கிடையே... ஒரு விமான நிலையத்தில், ரயான் போலவே ஒரு கன்சல்டண்டாக பறந்து கொண்டே இருக்கும் அலெக்ஸ் என்ற நடுத்தரவயது பெண்ணின் காதலும் கலவியும் கிடைக்க, பின்னர் அவளை மனதிற்குள் காதலிக்க ஆரம்பிக்கிறான் ரயான்.
ரயான்னுக்கு ஒரு தங்கை இருக்க அவனது குடும்பத்தின் மீது அவனுக்கு பிடிப்பில்லாமல் இருக்கிறது. எனினும் அவனது தங்கையின் திருமணத்துக்கு கட்டாயம் வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட அவன் அந்த திருமணத்துக்கு சென்றானா.. அவனது மன நிலை என்ன என்பதை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்கள்.
படம் மூன்றே மூன்று கதாபாத்திரங்களை சுற்றி சுழல்கிறது. ரயான்னின் தனிமையின் கொண்டாட்டம் பின்னர் அந்த தனிமையே அவனை வாட்டுகிறது. ரயான்னை வெறும் நட்புக்காகவும் கலவிக்காகவும் மட்டும் ஏற்றுக் கொள்ளும் அலெக்ஸ், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்துடன் வரும் நாடலி. ஒவ்வொருவரின் கதையும் படத்துடன் பின்னி பிணைந்து நமக்கு முன்னே நடப்பதை போல காட்சிகள் விரிவது இயக்குனரின் திறமை.
ரயான்னாக வரும் ஜார்ஜ் க்ளூனியின் நடிப்பு அபாரம். தனிமையை தான் நேசிக்கும் தருணங்களுக்கும் தனிமையை வெறுக்கும் தருணங்களுக்கும் வேறுபட்ட முகபாவத்தை காட்டி கைத்தட்டல் அள்ளிக் கொள்கிறார். ஆஸ்காருக்கு இவரது நடிப்பு பரிந்துரைக்கப் பட்டது மிகை அல்ல. நாடலியாக நடித்திருக்கும் ஆனா கெண்ட்ரிக்கும் எதுவும் தெரியும் என்ற திமிர் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை அற்புதமாக காட்டி இருக்கிறார்.
வால்ட்டர் கிம்மின் புத்தகத்தை திரைக்கதையாக்கி கருப்பு நகைச்சுவை படம் நெடுக தூவி, ஒப்பாரி காட்சிகளோ உருக்கமான காட்சிகளோ இன்றியும் கூட நம் இதயத்தை கனக்க வைக்கிறார் இயக்குனர் ஜேசன் ரேயத்மான். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், அமெரிக்கர்கள் தங்களை திரையில் பார்ப்பதே. அமெரிக்காவில் நடக்கும் பணி நீக்கங்களும் பலரின் பெட்டி வாழ்க்கைகளும் படத்தில் துல்லியமாக காண்பிக்கப் பட்டிருக்கிறது.
கதை? உத்தரப்ரதேசத்தின் எல்லையோர கிராமத்தில் வாழ்ந்து வருபவள் கிருஷ்ணா. அவளது கணவனின் சமூக விரோத போக்கு பிடிக்காமல், காவல் துறையிடம் சரணடையுமாறு மன்றாடுகிறாள். அவனும் சரி என மறு அறைக்கு செல்ல அங்கு சிலிண்டர் வெடிக்கிறது.
கலுஜான் மற்றும் பப்பான் இருவரும் திருடர்கள். கலுஜானின் மருமகன் தான் பப்பான். இருவரும் கலுஜானின் மைத்துனனிடம் கொள்ளையடித்து விட்டு, நேபாளின் எல்லையோர கிராமத்துக்கு வருகிறார்கள். அவர்கள் கையில் இரண்டரை லட்ச ரூபாய் பணம். கிருஷ்ணாவின் கணவன் வர்மா தாங்கள் நேபாளுக்கு தப்பி செல்ல உதவி புரிவான் என எண்ணத்துடன் வந்தவர்களுக்கு, சிலிண்டர் வெடித்து வர்மா இறந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். எனினும் அந்த விபத்தில் தப்பித்த கிருஷ்ணா அவர்களுக்கு உதவுகிறாள்.அவர்களது பணம் காணாமல் போக, ஒருவனை கடத்தினால் தங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் என்றும் அதற்க்கு உதவுவதாகவும் கூறுகிறாள் கிருஷ்ணா. மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். இடையே கலுஜான் கிருஷ்ணாவின் மேல் காதல் கொள்ள, பப்பானோ கிருஷ்ணாவின் ஒப்புதலுடன் அவளுடன் கலவி கொள்ள, அந்த மனிதனை கடத்தும் சமயம், கலுஜானுக்கும், பப்பானுக்கும் மோதல் வெடிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ளும் கிருஷ்ணா, அவனை கடத்தி சென்று விடுகிறாள்.
கிருஷ்ணா எதற்கு அவனை கடத்தினாள், கலுஜான் மற்றும் பபபானின் காதல் என்னவானது என்பதை சொல்கிறது திருப்புமுனைகள் பல கொண்ட கிளைமாக்ஸ்.
கிருஷ்ணாவாக வித்யா பாலன், அவரது திரைப்பட வரலாற்றில் நிச்சயம் இந்த படம் ஒரு மைல் கல். இத்தகைய கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். அவரது கண்களே படத்தில் பாதி வசனங்களை பேசி விடுகின்றன. அவரும் பப்பானாக வரும் அர்ஷாத் வாசியும் முத்தமிட்டு கொள்ளும் அந்த முழு நீள நிமிடம் பொறி பறக்கிறது.
நாசருதின் ஷாவின் காதலும் பப்பானின் காமமும் கவிதை. 'உன்னுடையது மட்டும் காதல், என்னுடையது மட்டும் காமமா?' (துமாரா இஷ்க் இஷ்க் ஹமாரா இஷ்க் செக்ஸ் ?) என கேட்கும் அர்ஷத் வர்சியின் நடிப்பு அருமை. படத்தின் பெரும் சக்தியே இது போல படம் முழுவதும் வரும் ப்ளாக் ஹ்யூமர் தான்.
விஷால் பரத்வாஜின் போக்குடன் கலந்த கசல் இசை காட்சிகளுகேட்ப படத்துடன் ஊடாடுகிறது. 'டில் தோ பச்சா ஹாய் ஜி ' பாடல் இன்னமும் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது.
சிக்கலான கதையை கம்பி மேல் நடப்பதை போல இலகுவாக்கி இயக்கி இருக்கிறார், விஷால் பரத்வாஜின் ஆஸ்தான திரைக்கதை எழுத்தாளரான அபிஷேக் சௌபி. படத்துக்கு பெரும் பலம் மோகன கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு.எந்த ஒரு மிகைப்படுத்தலும் இன்றி ஒளி அமைப்புகள்துல்லியம்.
ஒரு கமெர்ஷியல் சினிமாவுக்கே உரிய கதையை, சினிமாத்தனங்களை வெகுவாக குறைத்து முடிந்தவரை எதார்த்தமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.அதில் வெற்றியும்பெற்றிருக்கிறார்கள்.
புலம் பெயர்தல் என்பது, இலங்கையில் மட்டுமல்ல. இன்னும் பல நாடுகளில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் உடமைகள், உறவுகள் எல்லாம் துறந்து, சேர்வோமோ சேர மாட்டோமா என்ற நம்பிக்கையற்று இன்னமும் ஒரு நாட்டில் இருந்து உயிரை கையில் பிடித்து கொண்டு இன்னொரு நாட்டிற்க்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன பல ஜீவன்கள். சிலருடைய கதைகளையும், சில திரைப்படங்களையும் பார்த்தால், நமது வாழ்கை மிக மிக சுகமானதாகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் தோன்றும். என்னை அப்படி யோசிக்கவைத்த திரைப்படங்களில் ஒன்று சின் நோம்ப்ரே என்ற இந்த இஸ்பாநியோல்திரைப்படம்.
காஸ்பர், ஹோண்டுராஸ் தீவில் உள்ள ஒரு காங் கிடம் வேலை செய்கிறான். அவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். அவர்களின் அடையாளமாக சில சைகை மொழிகள், டாட்டூ என இருக்க, அவர்களின் தொழில் கொலை செய்வது கொள்ளை அடிப்பது. அவர்களிடம் ஸ்மைலி என்ற சிறுவனை சேர்த்து விடுகிறான் காஸ்பர்.
காஸ்பருக்கு மார்த்தா எனும் காதலி. அவளின் மேல் அவன் உயிரையே வைத்திருக்கிறான். அவனுடைய காங்கின் சந்திப்பு ஒன்று கல்லறை ஒன்றில் நடக்கிறது. அதனை காண வரும் மார்த்தாவை வெளியே கூட்டி சென்று விடுவதாக கூறி அந்த காங்கின் தலைவன் லில் மங்கோ அவளை தனியே அழைத்து சென்று அவளை கற்பழிக்க முயல அவள் தப்பிக்கபார்க்க அப்போது நடக்கும் களேபரத்தில் அவள் ஒரு கல்லறையில் மோதி இறந்துவிடுகிறாள். லில் மங்கோ இதனை காஸ்பெரிடம் கூறி கேசுவலாக வேறொரு பெண்ணை தேடிக்கொள்ளும்படி சொல்ல, கஸ்பாரின் ஆத்திரம் அழுகையாக வெடிக்கிறது.
லில் மங்கோ, காஸ்பரையும் ஸ்மைலியையும், அமெரிக்காவிற்கு புலம் பெயரும் கீழ் நாட்டினர் பயன்படுத்தும் ரயில் செல்லும் லா பாம்பில்லா என்ற இடத்துக்கு கூட்டி வருகிறான். அமெரிக்காவிற்கு கள்ளத்தனமாக செல்லும் கூட்டத்தில் இருக்கும் பதின் வயது சைரா தனது தந்தை மற்றும் மாமாவுடன் நியூ ஜெர்சி இல் இருக்கும் தங்களது சொந்தங்களை தேடி சென்று கொண்டிருக்கிறாள். அந்த கூட்டத்திடம் கொள்ளையடிக்க துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வரும் இவர்கள் சைராவையும் காண கண்டதும் லில் மாங்கோ அவளது அழகில் மயங்கி அவளை கற்பழிக்க முயல்கிறான். ஏற்கனவே தனது காதலியை கொன்ற லில் மங்கோ வை அரிவாளால் வெட்டி கொலை செய்து ட்ரெயினில் இருந்து தூக்கி எறிகிறான் காஸ்பர். ஸ்மைலியை ஊருக்கு போக சொல்லும் அவன், அதே ரயிலில் தன பயணத்தை தொடர்கிறான். தன்னை காப்பாற்றிய காஸ்பரின் மேல் சைராவுக்கு ஈடுபாடு வர அவனுக்கு உதவி செய்கிறாள். தன தகப்பன் மற்றும் மாமாவை நம்பாத அவள் அவனை முழுமையாக நம்புகிறாள். அவர்களது பயணம் பல இடர்களுக்கு நடுவே தொடர்கிறது. ஏற்கனவே தங்களது காங் உறுப்பினர்களை நாடு கடத்திய அனுபவம் உண்டென்பதால் காஸ்பர் சைராவுக்கு உதவி செய்கிறான். இதற்க்கு நடுவே லில் மாங்கோவை காஸ்பர் கொன்று விட்டதை ஸ்மைலி மூலம் அறிந்த அந்த கூட்டம், அவனை கொல்ல தேடுகிறது. அதனை அறியும் காஸ்பர் தன்னால் சைராவுக்கு ஆபத்து வந்து விட கூடாது என அவள் உறங்கும் வேலையில் ட்ரைனை விட்டு இறங்கி ஓடுகிறான். அவன் இல்லாததை கண்ட சைராவும் அவனை தேடி வந்துவிட, சைராவை தான் மிக பத்திரமாக அமெரிக்க எல்லையை கடக்க உதவி புரிவதாக கூற, அவளோ அவனையும் தன்னுடன் வந்துவிடுமாறு கூற, லில் மாங்கோவின் கூட்டம். அவனை கொல்ல தேட.. தடதடக்கிறது பயணம்.
காஸ்பர் சைராவை எப்படி அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறான், அவனது கதி என்ன, ஸ்மைலி இன் கதி என்ன என்பதை வலியோடு விவரிக்கிறது படம்.
அமெரிக்கா செல்ல ரயிலுக்காக காத்திருக்கும் கூட்டத்தினர் மத்தியில் சைராவின் தந்தை 'இந்த கூட்டத்தில் பாதி பேர் நிச்சயம் ஊர் பொய் சேர போவத்தில்லை. ஆனால் நான் உன்னை பத்திரமாக கொண்டு செல்வேன்' என அவளிடம் கூறும்போது இலங்கை சகோதரர்களின் நினைவுகள் என் முகத்தில் அறைந்தது. புலம் பெயரும் மக்களின் அவஸ்தையை, அவர்களின் இடர்பாடுகளை படம் தத்ரூபமாக காட்டி கொண்டே செல்கிறது.
சைராவாக நடித்திருக்கும் பதினேழு வயதுப்பென்னான பவுலின கைட்டன், சிறுவயது கேட் வின்ஸ்லெட் போல அவ்வளவு அழகு. படம் முழுவதும் அந்த ரயிலினூடே நம்மை அமெரிக்கா எல்லைக்கு அழைத்து செல்கிறது, அட்ரியானோ கோல்ட் மெனின் அருமையான ஒளி ஓவியம். மழையில் பாலிதீன் கவர்களை மூடி ஒளிந்திருக்கும் அந்த பயணிகளிடம் லில் மங்கோ கொள்ளையடிக்கும் அந்த ஒரு காட்சி போதும்.
படத்தை இயக்கி உள்ளவர் காரி பூகுநாகா. இது இவரது முதல் திரைப்படம்.
ஆஸ்கார் விருதுகளின் பரிந்துரை உட்பட, பல விருதுகளை இந்த படம் அள்ளியுள்ளது.
வங்காளம், உலகின் சிறந்த இயக்குனர் மற்றும் கவிஞரை நம் தேசத்திற்கு அளித்துள்ளது. இந்தியாவின் சிறந்த பத்து இயக்குனர்களை பட்டியலிட சொன்னால் அதில் நிச்சயம் சத்யஜித் ரே, ஷ்யாம் பெனேகல், ரிதுபர்ன கோஷ், அபர்ணா சென் என முக்கால் வாசி இடத்தை வங்காளியர் நிரப்பிக் கொள்வர். அந்த வங்காள மொழியில் வெளி வந்து சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்படம் விருதினை வாங்கிய அனுரணன் திரைப்படம் காணக் கிடைத்தது.
நம் தமிழின் மௌன ராகத்திற்கு பிறகு, கணவன் மனைவியருக்குள் நடக்கும் நுண்ணிய உணர்வுகளை படம் பிடித்து காட்டி இருக்கும் படம் என்னை பொறுத்தவரையில் இதுவே. இரண்டு கணவன் மனைவியரின் வாழ்க்கையை சுற்றியே படம் முழுக்க சுழல்கிறது. என்றாலும், அவர்களது ஏக்கங்கள், அவர்களது விருப்பங்கள், பிரச்சனைகளை கையாளும் யுக்திகள் என அவர்கள் வாழ்கை நுணுக்கமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது .
ராகுல் சட்டர்ஜி, லண்டனில் ஒரு பெரிய கம்பனியில் ஆர்கிடெக்ட்.அவனது காதல் மனைவி நந்திதா. அவர்களுக்கு ஒரு குழந்தை இறந்து பிறந்தது. அதன் பின்னர் குழந்தை இல்லை. இருந்தாலும் அவர்கள் காதல் மென் மேலும் வளர்கிறது. அவர்களது அன்னியோன்யம், மற்ற கணவன் மனைவியிரடித்தில் பொறாமையை ஏற்ப்படுத்தும். ராகுலின் கம்பனி அவனை கஞ்சஞ்சன்காவில் கட்டும் ஒரு கட்டிட பணிக்காக, கல்கத்தாவுக்கு மாற்றல் செய்கிறது. ராகுலும் நந்திதாவும் இந்தியாவில் வேலை என்பதால், சந்தோஷமாக ஒத்து கொண்டு கல்கத்தா சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.
லண்டனில் வழியில் பார்த்து இருவரும் கல்கத்தா என்பதால் பழக்கம் ஏறபடுத்திக் கொள்கிறார்கள். ராகுலும், சேல்ஸ் மேன் அமித் பானர்ஜியும். கல்கத்தா வந்த பிறகும் இவர்கள் நட்பு தொடர்கிறது.அமித்தின் மனைவி ப்ரீத்திக்கும் ராகுலுக்கும், தாகூரின் கவிதைகள் இலக்கியம், மற்றும் இயற்கையை ரசிப்பது என பரஸ்பரம் சிந்தனைகள் ஒத்து போகிறது. குழந்தை இல்லா துக்கத்தில் இருக்கும் நந்திதா, ஒரு பள்ளியில் ஆசிரியை யாக வேலை செய்கிறாள். ராகுல் அவ்வப்போது கல்கத்தாவிலிருந்து கஞ்சஞ்சன்காவிற்கு ப்ராஜெக்ட் விஷயமாக சென்று வந்த படி இருக்கிறான்.
எப்போது பார்த்தாலும் பணத்திலேயே குறியாக இருக்கும் அமித் தனது மனைவியை மற்றும் அவளது எண்ணங்களை மதிப்பதில்லை. ராகுலுக்கும் தனக்கும் ரசனை ஒத்து போகிறபடியால், இருவரும் தங்களது இயற்க்கை மற்றும் இலக்கிய ரசனைகளை பரிமாறி கொள்கிறார்கள்.
ஒரு முறை, ராகுல் ப்ரீதியுடன், கஞ்சன்ஜங்கா மழையின் அழகையும், சாயங்கால வேளைகளில் நிலவின் கதிர்கள் பட்டு மலை முகடுகள் தகிக்கும் அழகையும் விவரிக்க அவளுக்கும் அந்த அழகை பார்க்க ஆவல் மேலிடுகிறது. ஒரு முறை, அமித் அலுவலக விஷயமாக திடீரென லண்டன் கிளம்பி சென்றுவிட, நேரம் போகாத ப்ரீத்தி, கஞ்சஞ்சன்காவிற்கு கிளம்பி செல்கிறாள். அவளை வரவேற்கும் ராகுல், அவளுக்கு கஞ்சன்ஜன்காவின் மலைகளை அதன் அழகை, நிலவின் கதிர்கள் மலைகளின் பட்டு தெறிக்கும் அதிசயங்களை காண்பிக்கிறான். ராகுலின் மனைவியை அறிந்திராத, ஹோட்டல் காரன், அவளை அவனது மனைவி என்று ரெஜிஸ்டரில் பதிகிறான். இருவரும் வேறு வேறு அறைகளில் குட் நைட் சொல்லி தூங்க போகிறார்கள்.
காலை கதிரவனின் கதிர்கள் பட்டு ஜொலிக்கும் மலை பிரதேசங்களை கண்ட ப்ரீத்தி ஓடி சென்று ராகுலின் அறைக்கு சென்று அவனை எழுப்ப, அவன் அன்றைய இரவில் ஏற்பட்ட மாரடைப்பினால் இறந்தது போய் இருக்கிறான். சந்தர்பங்களும் சாட்சியங்களும், ராகுலுக்கும், ப்ரீத்திக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கிளம்பி விட.. ஒரு புனிதமான நட்பு களங்கப்பட, அமித்தும் ப்ரீத்தியை சந்தேகப்பட, நந்திதா என்ன முடிவு எடுக்க போகிறாள் என நாம் நகம் கடித்தபடி காத்திருக்கிறோம்.
ப்ரீத்தி தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் கிடத்தி இருக்க ஓடோடி சென்று பார்க்கிறாள் நந்திதா...
'எப்போதும் நான் பறவையாக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் என் சிறகுகளை சின்ன சின்னதாய் பிய்த்து போட்டு அழகு பார்க்கிறது இந்த சமூகம்' என ப்ரீத்தி கதற...
'அடி லூசு பொண்ணே, சிறகுகள் கொண்டு பறக்க உன்னால் எப்படி முடியும், உன் உணர்வுகளை கொண்டு பற நிச்சயம் நீ பறவையாக உணர்வாய்' என கூறுவதோடு கவிதைத்தனமான முடிவு கொண்டு படம் முடிகிறது.
படத்திற்கு பெரும் பலம், படத்தின் கவிதை நயமுள்ள வசனங்கள். ஒவ்வொரு வசனமும் நம்மை 'அட' போட வைத்துக்கொண்டே இருப்பதற்கு காரணமானவர் வசனகர்த்தா கௌரவ் பாண்டே. கஞ்சன்ஜன்காவின் அழகை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது சுனில் படேலின் அருமையான ஒளிப்பதிவு.
ராகுலாக நடித்திருக்கும் ராகுல் போசின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும்,நந்திதாவாக நடித்திருக்கும் ரிதுபர்னா சென் குப்தாவின் முகத்தின் உணர்வுகளையும் விட, நந்திதாவாக நடித்துள்ள ரெய்மா சென்னின் கண்களே பாதி வசனங்களை பேசி விடுகிறது.
நமக்கே ராகுல் மீதும் நந்திதா மீதும் சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கில் காட்சிகள் வைத்தும் அவர்களின் நட்பின் புனித தன்மையை கவிதையாக சொல்லி இருப்பது இயக்குனர் அநிருத்த ராய் சௌதரி இன் திறமை. படம் சிறிது மெதுவாக நகர்ந்தாலும், உணர்வுகளை புரிந்து கொள்ள அந்த தொய்வு அவசியம் தானென தோன்றுகிறது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம் என தேசிய விருதுகளை அனுரணன் வாங்கியுள்ளது.
உலக திரைப்பட வரலாற்றில் ஒரு பெண் இயக்குனர் போர்கால காட்சிகளை இவ்வளவு தத்ரூபமாக திரைப்படமாக பதிந்ததில்லை. பெண் திரைப்பட இயக்குனர் என்றாலே, மென்மையான காதல் கதைகள், பெண்ணுரிமை, குடும்ப கதைகள் என்பதையே கையாளும் வழமையை உடைத்து, வேறுபட்ட போர் திரைப்படம் எடுத்து அதற்காக ஆஸ்கார் விருதையும் வென்று சரித்திரம் படைத்துள்ளார், அவதார் படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவி காத்தரின் பிகாலோ.
இராக்கில் வெடிகுண்டு செயலிழக்கவைக்கும் வேலையில் ஒரு விபத்தில் ஒரு வெடிகுண்டு நிபுணன் மரணிக்க, அந்த
குழுவுக்கு தலைமை ஏற்று வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்க வருகிறான் வில்லியம் ஜேம்ஸ். முதலில் வெடிகுண்டுகள் இருக்கும் பார்சலை ஒரு ரோபோவின் துணை கொண்டு ஆராய்ந்து அது என்னவிதமான வெடிகுண்டு, அதில் டைம் செட் செய்யப்பட்டுள்ளதா என ஆராய்ந்து அதன் பின்னரே வெடிகுண்டு நிபுணர்கள் அதன் அருகில் செல்வார்கள்.
மரணத்துக்கு அஞ்சாத வில்லியம் ஜேம்சோ நேராக சென்று தன் கைகளினால் ஆராய்ச்சி செய்வது அவனது குழுவில் இருக்கும் மற்றோருக்கு அச்சத்தையும் எரிச்சலையும் அளிக்கிறது.அவனுடைய குழுவில் அவன் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் வேலையில் அவனுக்கு பாதுகாப்பாக இருப்பவர்கள் சான்பர்ன் மற்றும் ஓவென் எல்ட்ரிஜ். அவர்களின் பணிக்காலம் ஒரே ஒரு மாதம் மட்டுமே இராக்கில் இருக்க வேண்டி இருக்க, ஜேம்ஸ் எடுக்கும் ரிஸ்க்குகள் அவர்களின் வாழ்க்கைக்கே அபாயத்தை உண்டு பண்ணி விட கூடிய சூழல் உருவாகிறது. ஒரு முறை வெடிகுண்டுகளை தேடி புறப்படும் ஜேம்ஸ், ஒரு வேண்டிகுண்டு பல வெடிகுண்டுகளுடன் பிணைக்கப்பட்டு இருப்பதை கண்டு படம் பார்க்கும் நமக்கும் பல்சை எகிற வைக்கிறது.
பிரிட்டன் போர் வீரர்களுடன் சேர்ந்து எதிரிகளை ஒரு வறண்ட பாலைவனத்தில் தடுப்பு ஏற்படுத்திக்கொண்டு சுட்டு சாய்ப்பது, நடு இரவில் வெடிகுண்டு வைத்தவனை தேடிப்போய் வலிய மாட்டிக்கொள்ள, எதிரிகளின் குண்டு ஓவனின் காலை பதம் பாக்க, எனக்கு இப்படி நேர்ந்ததுக்கு காரணம் நீ தான் என ஓவென் ஜேம்சிடம் குதிக்க, ஜேம்ஸ் தனது போர் போதையை உணர்கிறான்.
பெக்கேம் என்ற தனக்கு நட்புக்கு பாத்திரமான அந்த இராக்கிய சிறுவன் கொந்தப்பட்டு ஒரு மனித வெடிகுண்டாக அவனது பிணத்துக்குள் வெடிகுண்டு பிணைத்திருக்க, கைகள் நடுங்க உள்ளத்தை உலுக்க ஒவ்வொரு சதையாய் பிய்த்து வெடிகுண்டு தேடும் கோரம் ஜேம்ஸின் நடிப்பில் பட்டு தெறிக்கிறது. இதய பலம் உள்ளவர்கள் மட்டுமே இந்த காட்சியை பார்க்க முடியும்.
படத்தின் இறுதியில் ஒருவனின் உடல் முழுதும் வெடிகுண்டுகள் பிணைக்கப்பட்டு பூட்டுகள் போடப்பட்டு அமெரிக்க ராணுவ முகாம் மீது தள்ளப்பட, அவனோ , 'நான் யாதொரு குற்றமும் அறியாதவன், எனக்கு குடும்பமும் பிள்ளைகளும் உள்ளனர், என்னை காப்பாற்றுங்கள் என கதறும்போது, அவன் மேல் இரங்கும் ஜேம்ஸ், தன் உயிரையும் பொருட்படுத்தாது அவனை நெருங்கி காப்பாற்ற முயல, அது டைம் பாம் என அறிந்து அவனை காப்பாற்ற முடியாமல் பின் வாங்கும்போது அந்த குண்டு வெடித்து அவன் சின்னாபின்னாமாகும் காட்சி பல இரவுகள் நம்மை தூங்க விடாது.
அந்த காட்சிக்கு பின்னர் சன்பார்ன் ஜேம்சிடம், 'எதற்காக இங்கே வந்தோம். எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், எனக்கு ஒரு மகன் வேண்டும் என கதறும்போது, இராக் போருக்கு உத்தரவிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மீது கோவமாக வந்தது.
தனது போர் காலம் முடிந்து வீடிற்கு வந்த ஜேம்ஸின் மனதில் நிம்மதி இல்லை. அவனது எண்ணமெல்லாம் மீண்டும் எப்போது தான் போருக்கு போக போகிறோம் என்பதிலேயே இருக்கிறது. தன் குழந்தையிடம், 'இப்போது நீ விளையாடும் இந்த பொம்மை நாளை உனக்கு பிடிக்காமல் போகலாம். உனக்கு வேண்டும் என தோன்றுவது குறுகி கொண்டே வரலாம், உனக்கு பிடித்ததை மட்டுமே நீ தேர்ந்தெடு' என கூறும் அடுத்த காட்சி, மீண்டும் ஒரு போர் முகத்தில் வெடிகுண்டை தேடி ஜேம்ஸ் புறப்படுவதோடு படம் முடிவடைகிறது.
போர் திரைப்படம் என்றால் இரு நாடுகளுக்கு இடையான சண்டை என்பதாக தான் பெரும்பாலும் இருக்கும். இந்த படத்தில் இயக்குனர் கையாண்டு இருப்பது ஒரு வெடிகுண்டு நிபுணனின் வாழ்க்கை. உயிருக்கு சிறிதும் அஞ்சாது, தனது ஆபத்தான வேலையை ஒரு போதை போல நினைத்து இயங்கும் வெடி குண்டு நிபுணனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் ஜெரேமி ரன்னர்.
படத்தின் திரைக்கதை , மார்க் போயல், இராக்கில் நடந்த போரில், தானும் ராணுவ வீரர்களுடன் சென்று அவர்களது வாழ்கையை திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்.படத்தை ஒரு டாகுமெண்டரி எபக்டில் எடுக்கவேண்டும் என தனது ஒளிப்பதிவாளரான பேரி அக்ராய்த் க்கு உத்தரவிட்டிருந்ததாக படத்தின் இயக்குனர் காத்தரின் பிகளோ ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.
'இந்த திரைப்படம், படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் போர் நடக்கும் இடத்துக்கு கூட்டி செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் படமாக்கப்பட்டது' என்றும் அவர் கூறுகிறார்.அந்த நோக்கம் நிச்சயமாக நிறைவேறி இருக்கிறது.
2010 ஆஸ்காருக்கு ஒன்பது விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டு,
சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய அனைத்து முக்கிய விருதுகளையும் தட்டி சென்றது. இது தவிர சென்ற இடங்களெல்லாம் விருதுகளை குவித்தது.
இத்திரை படம் பார்த்ததும், போரின் மீது வெறுப்பும், நம் ராணுவம் மீது மதிப்பும் பெருகுகிறது.