Friday, October 29, 2010
உலக சினிமா: அப் இன் தி ஏர் (Up in the Air).
உலகில் பல தொழில்களில் ஒன்று ஆலோசகர் எனப்படும் கன்சல்டன்ட் தொழில். கன்சல்டன்ட்கள் ஐ டி தொழிலில் மட்டும் அல்ல. பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வருடத்தில் பாதி நாட்கள் விமானங்களில் பறந்து கொண்டே இருப்பார்கள். இவர்களது வாழ்க்கையை பெட்டி வாழ்க்கை (Box Life) என சொல்லலாம். எப்போதும் பெட்டியில் துணிகளை வைத்து எங்கும் கிளம்ப தயாராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கன்சல்டன்ட் வாழ்கையை சிறிது நகைச்சுவை, மேலோட்டமான செண்டிமெண்ட்ஸ் கலந்து வாழ்கையை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் திரைப்படமாக 'அப் இன் தி ஏர்' திரைப் படத்தை படைத்திருக்கிறார் கனடா நாட்டு இயக்குனர் ஜேசன் ரேயத்மான்.
அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தின் ஒமஹா நகரில் இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறான் நடுத்தரவயது ரயான் பிங்கம். அவனது வேலை, வேலைநீக்கம் செய்யும் ஒரு ஆலோசகன். ஒவ்வொரு நகரத்தில் இருக்கும் கம்பனிகளுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதே அவனது வேலை. வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களை அவர்களின் கவலைகளை குறைத்து அவர்களுக்கு இருக்கும் எதிர்காலத்தை விளக்கி ஒரு மனோதத்துவ நிபுணன் போல அவர்களது சுமைகளை தாங்கி கொண்டு அவர்களுக்கு பணி நீக்கம் தருவதே அவனது சவாலான வேலை.
வருடத்தில் 290 நாட்கள் விமானங்களில் பறந்து பறந்து வேறு வேறு ஊர்களுக்கு சென்று பணி நீக்கம் செய்யும் வேலை அவனுக்கு பிடித்திருந்தது. எஞ்சி இருந்த 75 நாட்களை அவன் வெறுத்தான். ஏனென்றால் தனியாக அவனது அபார்ட்மெண்டில் வாழ வேண்டும்.
அமெரிக்காவில் பிரீகுவன்ட் பிளையர் மைல்ஸ் என ஒன்று உண்டு. ஒரே விமானத்தில் பறந்து கொண்டே இருந்தால், அதற்குண்டான அட்டையை கொடுப்பார்கள்.நீங்கள் பறக்கும் தூரத்திற்கு உள்ள மைல்கள் பாயிண்டுகளாக அந்த அட்டையில் ஏறும். சில குறிப்பிட்ட பாயிண்டுகள் சேர்ந்ததும் உங்களுக்கு அந்த விமானத்தில் இலவசமாக அந்த பாயிண்டுகளுக்கு ஏற்ற தொலைவுக்கு அந்த விமானத்தில் பறந்து கொள்ளலாம். (இப்போது இந்தியாவிலும் இது இருக்கிறது). ரயான்னுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற அந்த விமான அட்டையில் ஒரு மில்லியன் பாய்ண்டுகள் சேர்க்கவேண்டும் என்பது கனவு.
நாடலி என்ற புதிதாக பட்டபடிப்பை முடித்து அவனது கம்பெனியில் சேரும் பெண்ணினால் அவனது கனவுக்கு தடை வருகிறது. அவனது கம்பனியின் செலவை குறைக்க அவள் புதிய ஒரு யோசனையோடு வருகிறாள். பணி நீக்கம் செய்வதற்கு நேரில் செல்லாமல், இன்டர்நெட் மூலமாகவே வீடியோ கோன்பெரேன்சிங் முறையில் நேர்முகம் நடத்திக் கொண்டால் விமான செலவுகள் மற்றும் தங்கும் செலவுகள் கம்பனிக்கு மிஞ்சும் என்ற அவளது யோசனையை அந்த கம்பெனி எம் டீ ஏற்றுக்கொள்ள ரயான் அதனை எதிர்க்கிறான். பணி நீக்கம் செய்யப்படும் மக்களின் குறைகளை நேரில் சென்று அறியாமல் அவர்களை திருப்தி படுத்த முடியாது என்ற அவனது வாதம் எடுபடவில்லை.
எனினும் பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் மன நிலையை நேரில் அறிய ரயான், நாடலீயையும் தன்னுடன் கூட்டி செல்ல வேண்டி இருக்கிறது. இருவரும் சேர்ந்தபடி பணி நீக்கம் செய்ய ஆரம்பிக்கும்போது, பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் துக்கமான மன நிலை நாடலீக்கு மெல்ல புரிகிறது. அவளது பாய் அவளை விட்டு பிரிய, அவளால் பணி நீக்கம் செய்யப்பட ஒரு பெண்மணி தற்கொலை செய்து கொள்ள நாடலி தனது வேலையே ராஜினமா செய்து விடுகிறாள். இதற்கிடையே... ஒரு விமான நிலையத்தில், ரயான் போலவே ஒரு கன்சல்டண்டாக பறந்து கொண்டே இருக்கும் அலெக்ஸ் என்ற நடுத்தரவயது பெண்ணின் காதலும் கலவியும் கிடைக்க, பின்னர் அவளை மனதிற்குள் காதலிக்க ஆரம்பிக்கிறான் ரயான்.
ரயான்னுக்கு ஒரு தங்கை இருக்க அவனது குடும்பத்தின் மீது அவனுக்கு பிடிப்பில்லாமல் இருக்கிறது. எனினும் அவனது தங்கையின் திருமணத்துக்கு கட்டாயம் வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட அவன் அந்த திருமணத்துக்கு சென்றானா.. அவனது மன நிலை என்ன என்பதை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்கள்.
படம் மூன்றே மூன்று கதாபாத்திரங்களை சுற்றி சுழல்கிறது. ரயான்னின் தனிமையின் கொண்டாட்டம் பின்னர் அந்த தனிமையே அவனை வாட்டுகிறது. ரயான்னை வெறும் நட்புக்காகவும் கலவிக்காகவும் மட்டும் ஏற்றுக் கொள்ளும் அலெக்ஸ், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்துடன் வரும் நாடலி. ஒவ்வொருவரின் கதையும் படத்துடன் பின்னி பிணைந்து நமக்கு முன்னே நடப்பதை போல காட்சிகள் விரிவது இயக்குனரின் திறமை.
ரயான்னாக வரும் ஜார்ஜ் க்ளூனியின் நடிப்பு அபாரம். தனிமையை தான் நேசிக்கும் தருணங்களுக்கும் தனிமையை வெறுக்கும் தருணங்களுக்கும் வேறுபட்ட முகபாவத்தை காட்டி கைத்தட்டல் அள்ளிக் கொள்கிறார். ஆஸ்காருக்கு இவரது நடிப்பு பரிந்துரைக்கப் பட்டது மிகை அல்ல. நாடலியாக நடித்திருக்கும் ஆனா கெண்ட்ரிக்கும் எதுவும் தெரியும் என்ற திமிர் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை அற்புதமாக காட்டி இருக்கிறார்.
வால்ட்டர் கிம்மின் புத்தகத்தை திரைக்கதையாக்கி கருப்பு நகைச்சுவை படம் நெடுக தூவி, ஒப்பாரி காட்சிகளோ உருக்கமான காட்சிகளோ இன்றியும் கூட நம் இதயத்தை கனக்க வைக்கிறார் இயக்குனர் ஜேசன் ரேயத்மான். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், அமெரிக்கர்கள் தங்களை திரையில் பார்ப்பதே. அமெரிக்காவில் நடக்கும் பணி நீக்கங்களும் பலரின் பெட்டி வாழ்க்கைகளும் படத்தில் துல்லியமாக காண்பிக்கப் பட்டிருக்கிறது.
அப் இன் தி ஏர் ---தம்ஸ் அப்.
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நான் பார்த்து மிகவும் ரசித்த படம் இது.... நல்ல விமர்சனம்...
நன்றி சிவா.
நல்ல விமர்சனம் முகிலன்...
பார்க்காமல் விட்ட படம் இது, கண்டிப்பாக பார்க்க வேண்டும்!!
இன்னும் நிறைய நல்ல படங்களை தெரியபடுத்துங்கள்!!
Nalla vimarsanam..
Parka thundukirathu..
Post a Comment