Showing posts with label கிளைமாக்ஸ் கதைகள். Show all posts
Showing posts with label கிளைமாக்ஸ் கதைகள். Show all posts

Thursday, January 12, 2012

கிளைமாக்ஸ் கதைகள் 7: முடிவல்ல ஆரம்பம்...!




அந்த ஆஸ்பத்ரியின் வராண்டாவில் நகம் கடித்தபடி காத்திருந்தேன்.

டாக்டர் கூறிய அனைத்து டெஸ்டுகளும் முடிந்து விட்டன. ஒன்றா இரண்டா... ஐந்து டெஸ்டுகள்.

அந்த ரிசல்டுகள் அனைத்தும் இப்போது டாக்டரின் கைவசம்.

டாக்டர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் 'ஆம் அந்த வியாதி இருக்கிறது' என்று சொல்லிவிட்டால் என் கதி என்ன?

நான் ஒரு ஐ டி கம்பனியில் கை நிறைய சம்பளம் வாங்கும் சங்கர். ஒரு ஹான்க் மோட்டார் பைக், வார இறுதி கிளப்களில் பார்ட்டி, வாரம் ஒரு முறை மிலிடரி ஓட்டலில் சிக்கன் பிரியாணி,மாதம் ஒருமுறை நண்பர்களுடன் சுற்றுலா, பண்டிகை காலங்களில் பெற்றோருக்கு பணமும் உடுப்புகளும், தங்கைக்கு மறக்காமல் ஒரு தங்க கம்மலும் வாங்கி சொந்த ஊர் சென்று திரும்புதல், இரண்டு காதல் தோல்விகள் என சராசரி, சென்னை ஐ டி இளைஞனின் பிரச்சனை இல்லாத வாழ்கை.

ஒரு வருடத்துக்கு முன்பு தான் 'இந்தப் பிரச்சனை' ஆரம்பித்தது.'இதுவாக' இருக்குமோ என ஒவ்வொரு நாளும் நான் பயந்து பயந்து இறந்துக் கொண்டிருந்தேன்.

மருத்துவர்களிடம் செல்வதற்கும் பயம். ஏடாகூடமாக ஏதாவது சொல்லி தொலைத்து விட்டால், நான் வாழும் நாட்கள் எல்லாம் நரகமாகிவிடுமே!

இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல எனது பிரச்னை பூதாகாரமாகிக் கொண்டே செல்வதை நான் புரிந்து கொண்டேன்.

இனிமேல் காலம் தாழ்த்துவதால், சிக்கல் மேலும் பெரிதாக இருக்குமோ என்று தான் இந்த டாக்டரை பார்க்க வந்தேன்.

டாக்டர் ரங்கபாஷ்யம், 'இது போன்ற வியாதிக்கு கை தேர்ந்தவர்' என்றெல்லாம் டெஸ்டிங் டீமில் வேலை பார்க்கும் முத்து சொல்லி தான் இவரை பார்க்க வந்தேன். அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும். அன்பாக பேசியவர், சில பரிசோதனைகள் செய்தபின் தான் தான் எந்த முடிவுக்கும் வர முடியும் என சொல்லிவிட்டார்.

ரங்கா பாஷ்யத்தின் மேல் பாரத்தை போட்டு விட்டு ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அனைத்து பரிசோதனைகளுக்கும் என்னை உட்படுத்திக் கொண்டேன்.

இதோ இன்னும் சிறிது நேரத்தில் ரங்கா பாஷ்யம் என்னை உள்ளே அழைக்கப் போகிறார். 'உங்களுக்கு ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்ல போகிறார் என்று காத்திருக்கிறேன்.

'மிஸ்டர் சங்கர்...' என்று அழைத்த அந்த நர்ஸ் மிக அழகாக ஒரு வெள்ளை தேவதையை போல இருந்தாள். ஆனால் அவளை ரசித்துக் கொண்டிருக்க இப்போது சமயமும் இல்லை, எண்ணமும் இல்லை, மிகுந்த பதை பதைப்புடன் உள்ளே நுழைந்தேன்.

ரங்கபாஷ்யத்தின் முகம் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் இறுகி இருந்தது.

'உட்காருங்க சங்கர். எப்படி இருக்கீங்க? வேலை எல்லாம் எப்படி போகுது?'

'டாக்டர் சஸ்பென்ஸ் தாங்கல. சொல்லுங்க டாக்டர் ரிசல்ட் வந்துருச்சா? '

' ஆமா சங்கர். நீங்க கொஞ்சம் உங்க மனசை திடப் படுத்திக்கணும்'

'டாக்டர்ர்ர்ரர்ர்ர்ர் ....!'

'எஸ் சங்கர். உங்களுக்கும் 'அது இருக்கு' '.

'ஒ மை காட். இன்னும் எவ்ளோ நாள் இருக்கு டாக்டர்?'

'இன்னும் ஒரு ஆறு மாசம். அவ்ளோதான்'

'ஐயோ டாக்டர், எனக்கு பொண்ணு எல்லாம் பாத்ருக்காங்க டாக்டர் இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம்'

' ஐ ஆம் சாரி சங்கர். கொஞ்சம் தள்ளி போட வேணா முயற்சி பண்ணி பாக்கலாம்'

துவண்டு சரிந்த என்னை தேற்றினார் ரங்கா பாஷ்யம்.


'இப்போ அதுனால என்ன மிஸ்டர் சங்கர். இப்போ என்னை பாருங்க எனக்கும் தான் இருக்கு. என்ன பண்றது, நமக்கு வந்துட்டா அதோட வாழ பழகிக்கணும். தலை முடி உதிர்றது இப்போ எல்லாம் சாதாரணம். உங்களுக்கு ஆறு மாசத்துல முழுக்க உதிர்ந்துட்டா, ஒரு விக் வாங்கி மாட்டிக்கொங்களேன்.'

தனது வழுக்கை மண்டையை தடவியபடி முடிவில்லாதபடி பேசி கொண்டே சென்ற ரங்கா பாஷ்யத்தை பார்த்தபடி, இது தான் ஆரம்பம் என நினைத்துக் கொண்டேன்.


(குறிப்பு: நந்தினி ரெட்டி இயக்கிய ஆளா மொதலாயிந்தி என்ற தெலுகு திரைப்படத்தின் ஒரு காட்சியை தழுவியது இந்த கதை.)

Monday, November 15, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-6: வயசுப் பொண்ணு..!

ரு இருபது வயது வாலிபனையும் ஒரு வயது வந்த பெண்ணையும் ஒரு இரவில் தனியே மூன்று மணி நேரங்கள் விட்டு சென்றால், எவ்வளவு பிரச்சனை வரும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட என்னை வளர்த்தது என் அக்கா தான். அக்காவுக்கு ஒரு பெண் இருந்தாள். கிரிஜா என்பது பெயர். அவள் பிறந்த தினத்திலிருந்தே, இவன் தான் உன் தாய்மாமன் என என்னை காட்டி தான் வளர்த்தாள்.

இருந்தாலும் எனக்கும் கிரிஜாவுக்கும் பிடிக்காமல் போனது. அவளுக்கு வாய் பேச வரவில்லை. என்றாலும் என்னை அக்காவிடம் போட்டு கொடுக்க அவள் தயங்கியதில்லை. இப்படித்தான் ஒரு முறை, நான் திருட்டு தம் அடிக்க வைத்திருந்த ஒரு சிகரெட்டை அக்காவிடம் குடுத்து விட்டாள். இது பரவாயில்லையே.. நண்பர்கள் என்னிடம் கொடுத்து ஒளித்து வைக்க சொல்லியிருந்த மதுபுட்டியையும் நொண்டி எடுத்து உடைத்துப் போட அக்கா உடனே... 'உன்னை எப்படி எல்லாம் வளர்த்தேன்', என ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.அக்காவிடம் நான் எடுத்திருந்த நற்பெயர் தூள் தூளானது.

என்னை தேடி என் கல்லூரி நண்பர்கள் யாரேனும் வந்து விட்டாள் போதும், என் அறையிலேயே இங்கும் அங்கும் சுத்தி சுத்தி வருவாள். அவளுக்கு என் நண்பர்கள் கொடுக்கும் பறக்கும் முத்தங்களுக்கு வெக்கத்துடன் சிரிப்பதை கண்டு ஆத்திரமாக வரும் எனக்கு. என்னதான் இருபதாம் நூற்றாண்டு என்றாலும், என் வீடு முழுக்க அவள் குட்டை பாவாடையில் தான் வலம் வருவாள். என் அக்காவும் கண்டு கொள்வதில்லை.

அன்று அக்கா தயங்கி தயங்கி என்னிடம் வந்து நின்ற பொது அவள் மனதில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. மாமா வேறு அன்று சீக்கிரமே வந்து விட்டார்.
'இன்னிக்கு என்ன நாளு ன்னு நீ மறந்துட்ட சுந்தரேசா' என்று அக்கா சொன்னபோது கூட நான் யோசனை செய்து பார்த்து தோற்றுவிட்டதை ஒத்துக் கொண்டு...
' ஸாரிக்கா நேஜம்மாவே எனக்கு என்ன நாளுன்னு ஞாபகம் வரலை'

' அக்கா மேல பாசம் இருந்தா இதெல்லாம் மறப்பியா இன்னிக்கு என் கல்யாண நாள்..' எனக் கண்ணை கசக்க ஆரம்பித்து விட்டாள்.

' இல்லக்கா அது வந்து... ' என நான் சமாளிக்க ஆரம்பிக்க உடனே அக்கா கண்களை துடைத்துக் கொண்டு...( இந்த பொம்பளைங்க எப்டி தான் டக் னு அழுது டக் னு அழுகைய நிப்பாட்டிக்கறாங்களோ )

' வந்து... உன் மாமா என்னை இன்னிக்கு சினிமாக்கு கூட்டிட்டு போகனும்னு ஆசை படறார். நானும் சினிமா எல்லாம் பொய் ரொம்பா நாளாச்சா... வந்து இன்னிக்கு ஒரு மூணு மணி நேரம் நீ கிரிஜாக்கு தொணயா இருந்தின்னா நாங்க போய்ட்டு ஒடனே வந்துருவோம். அது என்னமோ அடல்ட் படமாம். கிரிஜாவ கூட்டிட்டு போகமுடியாது. அதனால...'

எனக்கு அந்த ஐடியா சுத்தமாக பிடிக்கவில்லை. நானாவது கிரிஜாவுடன் மூணு மணி நேரமாவது...என நினைத்தேன். என்றாலும் என் அக்காவை அழ வைத்து விட்டதால் உடனே சரி என்றேன்.

அக்காவும் மாமாவும் கிளம்பி சென்றதும், நான் கிரிஜாவிடம் இருந்து விலகியே இருந்தேன். இருந்தாலும்... அவள் மெல்ல என் அறைக்குள் நுழைந்தாள். புன்னகைகளையும் பார்வைகளையும் என்னால் சமாளிக்க முடியாமல், அவள் மேல் எனக்கிருந்த கோவம் எல்லாம் பொடிப் பொடியாக நான் அவளை மெல்ல நெருங்கினேன்...

மூன்று மணி நேரம் கழித்து படம் முடிந்து அக்காவும் அத்தானும் வீட்டில் நுழைந்தபோது, நான் கிரிஜாவை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருந்ததை பார்த்து அக்காவும் மாமாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

' எலியும் பூனையுமா இருந்த மாமனும் மருமகளும் எப்படி கொஞ்சிக்கறாங்க பாருங்க..' என அக்கா சொல்ல...
' என்ன மச்சான் ரொம்ப படுத்தினாளா' என என் மாமா வினவ...
' இல்லை மாமா இவள் ரொம்ப சமத்து. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருங்கின நண்பர்களா ஆய்டோம். உங்க ரெண்டு பேருக்கும் தான் நான் தேங்க்ஸ் சொல்லணும் ' என்றேன்.

என்ன புரிந்ததோ.. தனது பொக்கை வாய் திறந்து சிரித்தாள்.. ஒரு வயதே பூர்த்தி அடைந்த என் மருமகள் கிரிஜா!
--

Friday, June 25, 2010

கிளைமாக்ஸ் கதைகள் 5-என்னைக் கொல்லப் போகிறார்கள்!

என்னைக் கொல்லப் போகிறார்கள்!.

அரிவாள்களோடு, கோடாரிகளோடு.. காத்திருக்கிறது ஒரு கும்பல். மக்கள் அனைவரும் மௌனமாக வேடிக்கை பார்க்க.. எனக்கு மரணப் பரிசை அளிக்கப் போகிறார்கள்.

இவர்களின் கொலை வெறி தாகம், என் சகோதரர்களை கொன்று குவித்தபின்பும் இவர்களுக்கு அடங்கவில்லை. இதோ என்னை நோக்கி படையெடுத்து வந்துள்ளனர்.

அப்படி நான் என்ன தவறு செய்தேன்.....? அவர்களுக்கு நான் இடையூறாக இருந்ததாக கூறுகிறார்கள்.நான் எந்த குற்றமும் புரியாமல் இருந்தால் கூட... இவர்களுக்கு இடையூறின்றி நான் ஓரமாய் நின்றால் கூட.. என்னை வெட்டுவார்கள். இவர்களுக்கு காரணம் தேவை இல்லை.

நான் பொது வாழ்வுக்கு வந்து முப்பத்தைந்து வருடங்களாகிவிட்டது. எத்தனை பேர்களுக்கு நன்மைகள் செய்திருப்பேன். என்னால் வாழ்ந்த காதலர்கள் எவ்வளவு, எத்தனை பேருக்கு களைப்புகள் தீர்த்து புத்துணர்ச்சி அளித்திருப்பேன்...எத்தனை சிறுவர்கள் என்னால் பயன் பெற்றிருக்கின்றனர்..எவ்வளவு மக்களுக்கு ஆறுதலாய் இருந்திருப்பேன்...

நான் ஒரு இயற்க்கை விரும்பி.
இயற்கையை நேசிப்பவன், தவறு செய்வானா சொல்லுங்கள்...?
மழையையும் மண் வாசனையும் விரும்புபவன், மரணத்தை விரும்புவானா? காற்றடித்தால் தலை சிலுப்பி நடனமாடும் நான் இடையூறாக இருப்பதாய் இவர்கள் கூறுவதை நம்ப முடிகிறதா...?

ஏசுவையும் காந்தியையும் இந்த கூட்டம் தானே கொன்று கூறு போட்டது..

இந்த உலகத்தில் நல்லவனாக இருப்பது மிக மிக கடினம் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன்.

இதோ என்னை வெட்டுகிறார்கள்... என் சதைகளை பிய்த்து எடுக்கிறார்கள்... எனது அலறல்களை இவர்கள் போருட்படுத்துவதாய் இல்லை... இறந்து போன என் உடலையும் பங்கு போடும் ஆட்கள் இந்த கூட்டத்தில் இருப்பதை நான் அறிவேன்.

'அங்கே வெட்டு இங்கே வெட்டு'  என ஆர்ப்பரிக்கிறார்கள்...என் உயிர் துடித்துக் கொண்டிருக்கிறது...

என் போன்ற பலரையும் இவர்கள் கொலை செய்யக் கூடும்...அதனால் இவர்களுக்குத் தான் தீமை என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்களா...?

அப்போது தான் அரவிந்த் அங்கு வந்ததை நான் பார்க்கிறேன்.. என் உயிர் நண்பன்.. எட்டு வயது தோழன். என் பார்வையில் வளர்ந்தவன். அவனது சிறு வயது முதலே எனக்கும் அவனுக்கும் இறுகிய நட்பு உண்டு. என் தாகத்திற்கு அவன் பலமுறை நீர் கொடுத்திருக்கிறான். அவன் சோர்ந்து வரும்போதெல்லாம் நான் அவனுக்கு தோள்கொடுத்திருக்கிறேன்.

என்னை வெட்டுவதை பார்த்து அலறுகிறான்...

'ஐயோ அப்பா  வெட்ட வேண்டாம்னு சொல்லுங்கப்பா...அந்த புளியமரத்தை வேட்டவேண்டாம்னு சொல்லுங்கப்பா..'

எனக்காக ஒரு ஜீவன் அழுவதை நினைத்து   புன்னகைத்தபடி மண்ணில் விழுந்து உயிர் துறக்கிறேன்..!
--

Friday, April 30, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-4-லிவிங் டுகெதர்...!



நான் மேகா...!

கலாச்சாரத்தை கேடுத்துவிட்டதாய் அனைவரும் திட்டிக் கொண்டிருக்கும் ஐ டி கம்பெனி ஒன்றில்  ப்ராஜெக்ட் மானஜர். கை நிறைய சம்பளம்.
நான் ஐந்து வருட ரணகள மண வாழ்க்கைக்கு பின்னர் விவகாரத்து பெற்று விட்ட நடுத்தர வயதுப்பெண்.

என் மணவாழ்க்கையின்  போது நான், என் கணவன் என்கிற சைக்கோவால் எதிர்கொண்ட சவால்களை, பிரச்சனைகளை துக்கங்களை, பகிர்ந்து கொள்ள, ஆறுதல் தர, திரும்பி கூட பார்க்காத சமூகம் இப்போது என் மீது அக்கறை கொண்டு,  நான், திருமணம் செய்து கொள்ளாமல் மணியோடு தனியாக அந்த அப்பார்ட்மென்ட்டிற்கு குடியேறியபோது என்னை திட்டி தீர்த்தது.

மணியுடன் நான் அந்த அப்பார்ட் மென்டில் தங்க கூடாதாம். அது அந்த அப்பார்ட்மென்ட் சமூகத்திற்கு நான் விளைவிக்கும் ஊறாம்.

என்ன வென்று சொல்வது. ஆறுதலின்றி தவித்த, தவிக்கும் எனக்கு ஒரே துணை இப்போது மணி ஒருவனே.

அவன் வேலைக்கு செல்வதில்லை. நானே கை நிறைய சம்பாதிப்பதால், அதற்க்கு அவசியம் என நானும் கருதவில்லை.

மணியின் அன்பும் அவனது அண்மையும் எனக்கு இருந்தால் போதும். நான் வீடு திரும்ப காத்திருக்கும் ஒரே ஆள் அவன்தான். நான் இல்லையென்றால் என்னைப்பற்றி கவலைப்பட இருக்கும் ஒரே ஜீவனும்அவன்தான்.


நான் கொஞ்சுவதும் அவனைத்தான் திட்டுவதும் அவனைத்தான்

அக்கம் பக்கம் குழந்தைகளுக்கெல்லாம் இவனது முரட்டு தோற்றம் கண்டு பயம். இவனுக்கு கோவம் வந்து கத்தினால் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்பதால் அவர்கள் அடிக்கடி என்னிடம் கம்ப்ளைன் செய்வதுண்டு. நான் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவேன்.

அவனுக்கு பொறுமை உணர்ச்சி இருப்பது போல பொறுப்பு உணர்ச்சி இல்லை. எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது இல்லை. எனக்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அவன் அதை பொருட்படுத்துவது இல்லை. உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரவம் தராமல் இருக்கவேண்டும்.

நான் மிகவும் அயர்ச்சியுடன் வீடு வரும் நேரம், வீட்டின் பொருட்கள் எல்லாம் அங்கங்கே கலைந்து கிடந்தால் எனக்கு மிகவும் கோவம் வரும். அவனை திட்டும்போது அது தவறென தெரிந்தால் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொள்வான். பதில் பேசமாட்டான். அனால் இதுவே வேறு யாராவது என்றால் கத்தி குமித்து விடுவான்.

இன்றும் அப்படி தான், பெரிய சச்சின் டெண்டுல்கர் என்ற நினைப்பு. வீட்டில் கிடந்த பந்தை எடுத்து விளையாடிய விளையாட்டில், வீடே தலை கீழாக கிடந்தது.

நான் போட்ட சத்தத்தில் பாவமாக என்னை பார்த்தான். எனக்கு கோவம் பறந்து போக, அவனுக்கு பால் சாதம் பிசைந்து கொடுத்தேன்.

வாலாட்டி கொண்டே உண்ண ஆரம்பித்தான், என் நன்றியுள்ள செல்ல நாய்  மணி.

Wednesday, April 21, 2010

கிளைமாக்ஸ் கதைகள் -3 வள்ளி!



விஜய் என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். நல்ல உயரம். எப்போதும் அலட்சியமாக தலையை ஒதுக்கி விட்டிருப்பான். அவனது காந்த கண்கள், என் அலுவலக பெண்கள் மத்தியை அவன் பால் ஈர்ப்பை ஏற்படுத்துவது உண்மை தான். அவனுக்கு மணமாகவில்லை.அவனை காதலிக்க என் அலுவலகத்து பெண்கள் எல்லாரும் போட்டி போட்டு கொண்டிருந்தனர்.

அனைவருடனும் நெருங்கி பழகுவதை போல என்னிடமும் பழகினாலும், என்னிடம் சற்று அதிகமாகவே பாசம் காட்டுவான். இதனால் அவனது தோழியருக்கு என் பால் சிறிது பொறாமையும் உண்டு. அவனுக்காக எதையும் செய்ய காத்திருந்தேன்.

ஆனால் அவன் 'இதை' கேட்ட பொது சற்று தடுமாறி தான் போனேன்.

'விஜய் நீ நெசமாத்தான் சொல்றியா. இதுலாம் தப்பு இல்லையா'

'இதன் மூலமா நாம வேற யாருக்கும் தீங்கு செய்யறோமா? நம்மால மத்தவங்களுக்கு பாதிப்பு இருக்கா வள்ளி?' என்றான் விஜய்.

'இல்லை ஆனால் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்'

'என்ன நீ அந்த காலத்துலேயே இருக்க. இப்போ சமூகம் எவ்ளோ முன்னேறிருச்சி தெரியுமா. இதுலாம் இப்போ தப்பே இல்ல'.

'ஏற்கனவே நாம சண்முகா லாட்ஜ் பக்கம் போயிட்டு வந்து வாந்தி வாந்தியா வந்துடுத்து. எங்கம்மா கூட ஒரு மாதிரி பாத்தா. நல்ல வேளை நின்னுடுத்து. அவளுக்கும் சந்தேகம் வரல. எதாச்சும் கோக்கு மாக்கு ஆகி எல்லாருக்கும் தெரிஞ்சிருந்ததுன்னா நான் என் உயிரையே விட்ட்ருப்பேன்'

'ஐயய உன்ன திருத்தவே முடியாது போல இருக்கே. நீ இந்த காலத்து ஆளே கெடயாது'

'நீ ஏன் சொல்லமாட்ட. உன்னை கேக்கறதுக்கு ஆள் கெடயாது. நீ தப்பு பண்ணினா வெளில தெரியாது. நான் அப்படியா?'

'சரி நா ஒன்னே ஒன்னு கேக்கறேன். போனவாட்டி சண்முகா லாட்ஜ் பக்கம் பொய் கச்சேரி நடத்தினோமே... அது உனக்கு புடிசிதா இல்லையா?'

சட்டென இப்படி கேட்டதும் விஜயிடம் என்ன பதில் சொல்வது என்றே புரிய வில்லை. எனக்கு அது தப்பு என்று தெரிந்தாலும் பிடித்து தான் இருந்தது. சலன படாமல் இருக்க முடியவில்லை.

'பிடிச்சிதான் இருந்தது...'

'பின்ன என்ன வள்ளி. மத்தவங்களுக்காக நாம வாழக்கூடாது நமக்கு என்ன சரி நு படுதோ நாம வாழ்ந்து பாத்திரனும்.'

'இல்ல விஜய் அந்த லாட்ஜ் கூட மோசம்னு பேசிக்கறாங்க. போலீஸ் ரைட் எல்லாம் வருதாம்'

' அதுலாம் இப்போ இல்ல தெரியுமா. மாமூல் கொடுத்து சரி படுத்திட்டாங்களாம்'.

புத்தி வேண்டாம்னு சொன்னாலும் மனசு விடுவதாக இல்லை. சம்மதித்தேன்.

சாயங்காலம் விஜயின் பைக்கில் அமர்ந்து  திடுக் திடுக் இதயத்துடனும், சபலத்தில் விளைந்த மகிழ்ச்சியும் ஒன்று சேர பயணித்தேன்.

சண்முகா லாட்ஜ் முன்னால் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் விஜய். நான் இறங்கி தெரிந்தவர் யாரும் வருகிறார்களா என சுத்தியும் முத்தியும் பார்த்தேன்.

நல்லவேளை யாரும் இல்லை. இருவரும் சண்முகா லாட்ஜ் முன்னால் சென்று நின்றோம்.

பக்கவாட்டில் உள்ள டாஸ்மார்க் கடை சென்று விஸ்கி வாங்கி கொண்டு கடையின் பின்னால் பம்மினோம்.

.வள்ளி நாயகம் என்ற நான் இரண்டாம் முறையாக என் நண்பன் விஜயுடன் மது அருந்த துவங்கினேன்.
--

Friday, April 9, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-2 மல்லிகா..ஓ மல்லிகா..



கோவையில் அன்று இரவு..ராகவனும் கனகாவும் கட்டிலில் படுத்திருந்தனர்.

மின் விசிறி ஓடி கொண்டிருந்தாலும் வேர்த்துக் கொட்டியது.

'எனக்கு மல்லிகாவ நெனச்சா கவலையா இருக்கு. இவ்ளோ வயசாகியும் அவ பண்ற ரகளை தாங்க முடியல' ராகவன் கவலையோடு பேசினான்.

'போன மாசம் கூட பாரு, அவ ஸ்கூல்ல படிக்கற ராஜீவ அடிச்சிட்டா. அந்த பையனோட அப்பா பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளைன் பண்ணி இவள சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க'

'ஸ்கூல்ல சேந்து ஆறு மாசம் தான ஆகறது. போக போக சரி ஆய்டும்' என்றாள் கனகா.

'எப்போ பாரு ஸ்கூல்ல இருந்து எதாச்சும் பிரச்சன பண்ணிட்டு வந்துடறா.ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் அவ மேல..'

'ஸ்கூல் நா அப்படி தான் இருக்கும். '

'ஸ்கூல் விட்டா சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டியது தான.. அவ வீட்டுக்கு போறேன் இவ வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு  ரொம்ப லேட்டா வீட்டுக்கு வரா..'

' அவளுக்கும் பிரெண்ட்ஸ் இருக்க கூடாதா'

'பக்கத்துக்கு வீட்டு மாலதி கூடையும் சண்டை.'அன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வரேன்.. ரெண்டு பெரும் முடிய புடிச்சிட்டு நிக்கறாங்க. சமாதனம் பண்றதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆய்டுச்சி.'

'அவ மல்லிகா கிட்ட என்ன பிரச்சனையை பண்ணினாளோ..?'  

'அவ பிரச்சனையை பண்ணினா என்ன. இவ அடங்கி போகலாம்ல.அவளுக்கு ரொம்ப கோவம் வருது. இந்த வயசுல இந்த அளவுக்கு கோவம் வரகூடாது. கைல கெடைக்கறத தூக்கி அடிக்கறா..'

'நீங்க தான் கொஞ்சம் பொறுமையா இருக்கனும்' என்றாள் கனகா.

'நீ எப்போ பாரு அவளுக்கே சப்போர்ட் பண்ணு. பெரியவங்கள எதுத்து பேசறா. எங்க அம்மாக்கு கூட மரியாதை குடுக்க மாட்டேன்கறா. இத எப்படி மாத்தறதுன்னு தெரில.'

'எல்லா பொண்ணுகளும்  இப்போ அப்படி தான் இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க'-கனகா.

'இப்போ கூட சம்மர் வக்கேஷனுக்கு சென்னை போகணும்னு ஒரே அடம். சரி அவ ரகளை கொறஞ்சா சரின்னு அனுப்பி வச்சிட்டேன்.' 

' அவ கேட்டான்னா ஒடன அனுப்பி வச்சிடிங்களே.அது அவளுக்கு குடுக்கற செல்லம் ஆகாதா..?.' கேட்டாள் கனகா.

'எப்படியோ அவள் ரகளை கொறஞ்சி நாம நிம்மதியா இருந்தா சரி.' என்றான் ராகவன்.

'சரி எனக்கு நேரம் ஆய்டுச்சி. குடுக்க வேண்டியது குடுத்தா நான் கெளம்பிட்டே இருப்பேன்' உடைகளை அணிந்தபடி கூறினாள் கனகா.

ராகவன் எழுந்து தனது பர்சில் இருந்து ரூபாய்களை எண்ண ஆரம்பித்த அதே நேரம்,  கோவை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறியபடி பள்ளிகூடத்தில் ஆறு மாதங்களுக்கு முன் டீச்சராக வேலைக்கு சேர்ந்த ராகவனின் மனைவி மல்லிகா தனது அப்பா அம்மாவுக்கு 'டாடா' சொல்லிக்கொண்டிருந்தாள்.
--

Thursday, April 1, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-1 ராதா விஜயம்!


'ராதா அப்போ நீ கண்டிப்பா வரியா.. நாங்க 4 பசங்க ஒரு சின்கிள் பெட்ரூம் அப்பார்ட் மென்டில தங்கி இருக்கோம். நீ வந்தா உனக்கு ஒரு தனி ரூம் குடுத்துடறோம். நாங்க 4 பெரும் ஹால்ல படுதுக்கறோம். இருந்தாலும் 4 பசங்க கூட தங்கறதுல உனக்குப்ரோப்ளேம் இல்லையே?'

நான் என்னுடைய அலை பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். ராதாவுடனான எனது பேச்சை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர் எனது அறை நண்பர்கள், ஆனந்த்,அஜய் மற்றும் சந்தர்.
நாங்கள் ப்ராஜெக்ட் விஷயமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஒரு அப்பார்ட்மென்ட் எடுத்து வசிப்பவர்கள். யாருக்கும் மணமாகி இருக்கவில்லை.

அது ஒரு நவம்பர் மாதம். வருகிற லாங் வீகென்ட்க்கு நோர்த் கரோலினா போகலாமென முடிவு செய்து வைத்திருந்தோம்.
நான் தொலைபேசி முடித்ததும், என் நண்பர்களிடம் கூறினேன்.
'வருகிற லாங் வீகேண்ட்க்கு என் பிரெண்ட் ராதா நம் வீட்டில் தங்கலாமா...நம்முடன் நோர்த் கரோலினா வரலாமா? உங்களுக்கு ஏதும் ப்ரோப்ளேம் இருக்குதா?'
சந்தர் ஆரம்பித்தான்.
'வேண்டாம் நரேன். மூணு ஆம்பிளைங்க இருக்கற இந்த ஒரு பெட்ரூம் அபார்ட்மென்ட்ல தங்கினா..ராதாவுக்கும் கஷ்டம்.. நமக்கும் கஷ்டம்.'

ஆனந்த்க்கும், அஜய்க்கும் கோவம் வந்து விட்டது.
'மச்சி நீ மூடு..உனக்கென்ன. அவங்க வரதா இருந்தா வந்துட்டு போகட்டுமே. பாவம்' இது ஆனந்த்.
'வரட்டும் மச்சி. நமக்கென்ன ப்ரோப்ளேம் இருக்க போகுது. அவங்களுக்கு ப்ரோப்ளேம் இல்லன்னா நமக்கும் ஒன்னும் இல்லை தானே' -அஜய்.
'இல்ல நரேன் அவங்களுக்கு வேனா ஒரு ஹோட்டல் புடிச்சி தந்திருவோம் நம்மளோட தங்கறது நல்லபடியா படல.'

'டேய் அவங்க...பொண்ணு, பாவம்... ஹோடெல்ல தங்கி பழக்கமிருக்குமோ என்னவோ. நாம அந்த பெட்ரூம் அவங்களுக்கு குடுத்துட்டு ஹால்ல படுத்துக்கலாம். ' ஆனந்த்.

'ராதா நம்ம கூட தங்கினது இந்தியாவுல இருக்கவங்களுக்கு தெரிஞ்சா நம்மள பத்தி தப்பா நெனைக்கமாட்டாங்களா..? ராதாவோட வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்க?'

'அவங்களே அத பத்தி நெனைக்கல. உனக்கு ஏன் இப்படி புத்தி போகுது.. அதுவும் இந்தியாவுல இருக்கறவங்களுக்கு இங்க நடக்கறது எப்படி தெரியபோகுது. நீதான் டி வீ சேனல்ல வர மேட்டர் படம் எல்லாம் ஒன்னு விடாம பாக்கறியே.. அது எல்லாம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சி போச்சா என்ன...' ஆனந்தின் கோவம் அவன் முகத்தில் தெரிந்தது.

பிரச்சனையை பெரிதாவதை உணர்ந்த நான்...' ஐயோ நமக்குள்ள பிரச்சனை வேண்டாம். ராதாவ வரவேண்டாம்னு சொல்லிடறேன்.'

'இல்ல பாவம் அவங்க இப்பதான் இந்தியால இருந்து வந்திருக்காங்கன்னு சொல்ற..லாங் வீகென்ட் நாலு நாள் லீவு. அவங்க அங்க தனியா என்ன பண்ணுவாங்க. தமிழ் கூட பேசறதுக்கு ஆள் இருக்காது.' கவலைப்பட்டவன் அஜய்.

'அவங்க வரத பத்தி ஒண்ணும் இல்லை. வந்து இங்க ஹோட்டெல தங்கிக்கட்டும்ன்னு தான் சொல்றேன்'. அவங்க வரவேண்டாம்னு சொல்லலை. வரலைனா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன் என்ற கமல் டயலாக் மாதிரி பேசினான் சந்தர்.

'நரேன், இவனுக்கு கஷ்டமா இருந்தா இந்த நாயி வேணா ஹோடெல்ல தங்கிக்கட்டும்.நீ ராதாவ வர சொல்லு ' ஆனந்த் கோவத்தின் உச்சியில் கத்தினான்.

'அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் செய்யணும் யாரு செய்வா வந்தவங்கள் ஒழுங்கா கவனிக்கனும்ல.. நம்ம செய்யற சாப்பாடு அவங்களுக்கு பிடிக்குமோ என்னவோ... ' சந்தர் சொல்ல...உருளை கிழங்கை வறுத்து கொண்டிருந்த ஆனந்த் கரண்டியை எடுத்து அவன் முகத்தில் விட்டெறிந்தான்.

'என்னவோ இவன் சமைக்கிற மாதிரி பெருசா பேசி கிழிக்கறான். நான் எதுக்கு இருக்கேன். நான் சமைக்க மாட்டேனா.. என்னோட சாப்பாடு சாப்பிட்டு தான வளந்த.. '

'பாத்திரம் எல்லாம் வேணா நான் கழுவி வச்சிடறேன். எனக்கு ஒண்ணும் ப்ரோப்ளேம் இல்லை' என்றான் அஜய்.

'சரி மச்சி ராதாவ வர சொல்லலைனா என்னை விட்டு தொரத்திருவாங்க போல இருக்கு. பேசாம வர சொல்லிடு. பிரச்சன எதுவும் வந்தா நான் பொறுப்பில்ல' வேண்டா வெறுப்பாக சம்மதம் தந்தான் சந்தர்.

வர சொல்லி நானும் ராதாவிடம் சொல்லிவிட்டேன். இங்க நடந்த கூத்துகளை சொல்லவில்லை.

அதுவரை தரையில் தான் அமர்ந்து செய்தி தாள் விரித்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். ராதாவின் வருகையை ஒட்டி புதிய மேசை மற்றும் நாற்காலிகள் வாங்கப்பட்டது.

அந்த படுக்கையறை, புதிய கட்டில் மட்டும் மெத்தை விரிப்புகளுடன் தயாரானது. வீடு சுத்தம் செய்யப்பட்டது. பூ ஜாடிகள் வைக்கப்பட்டன.

ஆனந்த் புதிதாக ஒரு ஜீன்சும் டி ஷர்டும் வாங்கினான். ராதா வரும் நாளில் போட்டுக் கொள்ளபோவதாக சொன்னான்.

ராதா வரும் நாளும் வந்தது. நான் ரயில் நிலையம் சென்று நியூ ஜெர்சியில் இருந்து வரும் ராதாவை பிக் அப் செய்வதற்காக சென்றேன். ராதாவுடன் வந்து அப்பார்ட்மென்ட் கதவை தட்டினேன்.

புது ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் கதவை திறந்தான் ஆனந்த். உள்ளிருந்து ஓடி வந்தான் அஜய். ராதாவை பார்த்த மாத்திரத்தில், சந்தர் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். ஆனந்தும் அஜய்யும் ஏன் மேல் பாய்ந்து என்னை அடிக்க ஆரம்பித்தனர்.

ஆம் வந்திருந்தது.. ராதா என்கிற ராதா கிருஷ்ணன்.
--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...