என்னைக் கொல்லப் போகிறார்கள்!.
அரிவாள்களோடு, கோடாரிகளோடு.. காத்திருக்கிறது ஒரு கும்பல். மக்கள் அனைவரும் மௌனமாக வேடிக்கை பார்க்க.. எனக்கு மரணப் பரிசை அளிக்கப் போகிறார்கள்.
இவர்களின் கொலை வெறி தாகம், என் சகோதரர்களை கொன்று குவித்தபின்பும் இவர்களுக்கு அடங்கவில்லை. இதோ என்னை நோக்கி படையெடுத்து வந்துள்ளனர்.
அப்படி நான் என்ன தவறு செய்தேன்.....? அவர்களுக்கு நான் இடையூறாக இருந்ததாக கூறுகிறார்கள்.நான் எந்த குற்றமும் புரியாமல் இருந்தால் கூட... இவர்களுக்கு இடையூறின்றி நான் ஓரமாய் நின்றால் கூட.. என்னை வெட்டுவார்கள். இவர்களுக்கு காரணம் தேவை இல்லை.
நான் பொது வாழ்வுக்கு வந்து முப்பத்தைந்து வருடங்களாகிவிட்டது. எத்தனை பேர்களுக்கு நன்மைகள் செய்திருப்பேன். என்னால் வாழ்ந்த காதலர்கள் எவ்வளவு, எத்தனை பேருக்கு களைப்புகள் தீர்த்து புத்துணர்ச்சி அளித்திருப்பேன்...எத்தனை சிறுவர்கள் என்னால் பயன் பெற்றிருக்கின்றனர்..எவ்வளவு மக்களுக்கு ஆறுதலாய் இருந்திருப்பேன்...
நான் ஒரு இயற்க்கை விரும்பி.
இயற்கையை நேசிப்பவன், தவறு செய்வானா சொல்லுங்கள்...?
மழையையும் மண் வாசனையும் விரும்புபவன், மரணத்தை விரும்புவானா? காற்றடித்தால் தலை சிலுப்பி நடனமாடும் நான் இடையூறாக இருப்பதாய் இவர்கள் கூறுவதை நம்ப முடிகிறதா...?
ஏசுவையும் காந்தியையும் இந்த கூட்டம் தானே கொன்று கூறு போட்டது..
இந்த உலகத்தில் நல்லவனாக இருப்பது மிக மிக கடினம் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன்.
இதோ என்னை வெட்டுகிறார்கள்... என் சதைகளை பிய்த்து எடுக்கிறார்கள்... எனது அலறல்களை இவர்கள் போருட்படுத்துவதாய் இல்லை... இறந்து போன என் உடலையும் பங்கு போடும் ஆட்கள் இந்த கூட்டத்தில் இருப்பதை நான் அறிவேன்.
'அங்கே வெட்டு இங்கே வெட்டு' என ஆர்ப்பரிக்கிறார்கள்...என் உயிர் துடித்துக் கொண்டிருக்கிறது...
என் போன்ற பலரையும் இவர்கள் கொலை செய்யக் கூடும்...அதனால் இவர்களுக்குத் தான் தீமை என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்களா...?
அப்போது தான் அரவிந்த் அங்கு வந்ததை நான் பார்க்கிறேன்.. என் உயிர் நண்பன்.. எட்டு வயது தோழன். என் பார்வையில் வளர்ந்தவன். அவனது சிறு வயது முதலே எனக்கும் அவனுக்கும் இறுகிய நட்பு உண்டு. என் தாகத்திற்கு அவன் பலமுறை நீர் கொடுத்திருக்கிறான். அவன் சோர்ந்து வரும்போதெல்லாம் நான் அவனுக்கு தோள்கொடுத்திருக்கிறேன்.
என்னை வெட்டுவதை பார்த்து அலறுகிறான்...
'ஐயோ அப்பா வெட்ட வேண்டாம்னு சொல்லுங்கப்பா...அந்த புளியமரத்தை வேட்டவேண்டாம்னு சொல்லுங்கப்பா..'
எனக்காக ஒரு ஜீவன் அழுவதை நினைத்து புன்னகைத்தபடி மண்ணில் விழுந்து உயிர் துறக்கிறேன்..!
--
7 comments:
மரம்தானே என்று நினைக்கிறார்கள் மரமான மனம் கொண்டவர்கள் !
நல்ல களம்!
வாழ்த்துக்கள்!
முதல் வரியிலேயே புரிந்து விட்டது.. என்ன செய்வது.. நுனிக்கிளையில் உக்காந்து கொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டு இருக்கிறோம்..நம்முள் பலரும் அன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. நாளையைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை.. கதையில் நல்ல எழுத்து நடை.. தொடருங்கள்.. நன்றி..
கோவை செம்மொழி மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்ணால் கண்டதால் விளைந்த படைப்பிது ஹேமா. நன்றி.
நன்றி சுரேகா.
கிளிமாக்சில் தான் புரியவேண்டும் என வடிவமைத்த கதைகள் இது. முதல் வரியிலேயே கண்டு பிடித்து விட்டீர்கள். நன்றி பிரகாஷ்.
மரத்திற்கும் உயிர் உண்டு. அருமையான கதை.
Post a Comment