நாம் வளர்ந்து வரும் பிராயத்தில் டீன் ஏஜ் எனப்படும் பதின்ம வயதுப் பருவம், மிக மிக முக்கியமான ஒன்று. நமது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் வயதும் இந்த வயது தான். அந்த வயதில் வரும் அகங்காரம், கோவம், தான் செய்வது மட்டுமே சரி என தோன்றும் மனோபாவம், அனைத்தையும் உளவியல் ரீதியாக அலசுகிறது நான் சமீபத்தில் பார்த்த மலையாளத் திரைப்படம் 'மம்மி அண்ட் மீ'.

ஜுவல் கல்லூரியில் படிக்கும் பதின்ம வயதுப் பெண். அவள் இந்த உலகத்தில் முதல் எதிரியாக நினைப்பது, வீட்டுக்கு காலம் தாழ்த்தி வந்தாலோ, இறுக்கப் பிடிக்கும் உடை அணிந்தாலோ, தனது ஆண் நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடித்தாலோ, அதனை எதிர்த்து திட்டும் அம்மா கிளாரா தான். வங்கி அதிகாரியான அப்பா ஜோசெப் க்கு இவர்கள் இருவரின் சண்டையை தீர்த்து வைக்கவே நேரம் போதவில்லை. அவளுடைய தம்பி, அவள் திட்டு வாங்கும்போதெல்லாம் குதூகலிக்கும் சாப்பாட்டு பிரியன்.
இவர்களின் குடும்ப நண்பரின் மகன் ராகுல். இரு குடும்பங்களும் பரஸ்பர நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதால், ஜுவலுக்கு ராகுலுடனான நட்புக்கு இருவர் வீட்டிலும் பச்சை கோடி. ஜுவலும் ராகுலும் ஒரே கல்லூரியில் படிப்பதால், ஜுவல் ஆண் பிள்ளைகளிடம் சண்டை இடும் போதெல்லாம் அவளைக் காப்பது ராகுல் தான். ராகுலுக்கு ஜுவலின் மீது ஒருதலை காதல் இருந்தாலும், அதன் மூலம் இரு குடும்ப நட்பு களங்கப்பட்டு விடுமோ என தன காதலை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்கிறான்.
கல்லூரியில் இருந்து நேரங்கழித்து வீடு திரும்புவதற்கு காரணம் கேட்டதற்கு, இன்டர்நெட் சாட் செய்வதால் சமயமாகிறது என காரணம் சொல்லும் ஜுவலுக்கு கிளாராவே பரிந்துரைத்து வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி தருகிறார் ஜோசெப். இன்டர்நெட் சாட்டில் நண்பனாகிறான் முகம் தெரியாத அமீர். அவனுடன் சாட் செய்ய செய்ய ஜுவலின் சுபாவம் மாறுகிறது. ஒருமுறை தனது தாயின் கண்டிப்பாய் பொறுக்க முடியாத ஜுவல் கத்தி கூப்பாடு போட்டு வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் உடைத்து மயங்கி விழுந்து விட, ஒரு மன நல மருத்துவரை அணுகுகிறார்கள் கிளாராவும் ஜோசெப்பும். அப்போது அவர் இன்றைய பதின்ம வயது இளைஞர்களின் மனோ நலத்தையும் பெற்றோர் எப்படி அவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் எனவும் விளக்குகிறார்.
உடைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியும் பேசி மாய்ந்து போகும் ஆண்ட்டிகள் வரும் பார்ட்டிகளுக்கு ஜுவல் செல்ல விரும்புவதில்லை. ( அந்த பார்டிகளுக்கும் சுடிதார் அல்லது காக்ரா சோளி தான் அணிந்து வரவேண்டும் என்ற அன்னையின் கட்டுப்பாடு வேறு). அவள் பார்ட்டிக்கு செல்ல, ஒரு அழகான உடை தைத்து அனுப்பி வைக்கிறான் அமீர். அதனை அணிந்து அவள் பார்ட்டிக்கு செல்ல பார்ட்டியில் உள்ள அனைவரின் கண்ணும் ஜுவலின் மேல். தன அம்மாவிடம் அதனை தன தோழியுடன் சென்று கடையில் வாங்கியது என பொய் சொல்ல, அமீர் தாயிடம் தான் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டியது தானே. என கேட்க அப்போது தான் தான் மெல்ல அமீரை காதலிக்க துவங்கி இருப்பது புரிகிறது. இதனை ராகுலிடம் அவள் சொல்ல, ராகுலோ அவளது நலத்தில் அக்கறை கொண்டவனாய் இரு வீட்டாரின் பெற்றோரிடமும் சொல்ல, மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி அமீரை வீட்டுக்கு அழைக்கிறார்கள் கிளாராவும் ஜோசெப்பும். ஜுவல் அவன் அனுப்பிய அந்த பார்ட்டிஉடை அணிந்தபடி மகிழ்ச்சியுடன் காத்திருக்க, ராகுலின் குடும்பமும் ஜுவலின் குடும்பமும், படம் பார்க்கும் நாமும் , நகம் கடித்தபடி காத்திருக்க, அமீர் வந்தானா? அமீர் யார்? ராகுலின் காதல் என்னவானது என்பதை சிறிது திருப்பத்துடன் சொல்கிறது படம்.
படத்தில் பட்டாசாக வெடித்திருப்பவர் ஊர்வசி. வயது வந்தப் பெண்ணை வைத்துள்ள ஒரு தாய்க்குரிய கண்டிப்பும் கரிசனமும் அவர் வெளிப்படுத்தும் இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார். முகேஷின் அலட்டல் இல்லாத நடிப்பும் அருமை. ஜுவல்லாக நடித்திருக்கும் அர்ச்சனா கவி கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார். மிகவும் சாதரணமாக செய்துள்ளார். ராகுலாக நடித்திருக்கும் குஞ்சாக்கோ போபனுக்கு படத்தில் அவ்வளவாக வேலை இல்லை.
படத்தின் மிகப்பெரும் பலம் திரைக்கதை மற்றும் இயக்கம். படத்தின் பலவீனம், நன்றாக இருந்தாலும் அவ்வப்போது சம்மந்தமில்லாமல் எட்டி பார்க்கும் பாடல்கள். தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவை விளக்கும் மாலாகப் போல மகளே.. மிக மென்மையான பாடல். காட்சிபடுத்தலும் அருமை.
இருந்தாலும் தைரியமான கதைக் களனுக்காகவும் திரைக்கதைக்காகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.
மம்மி அண்ட் மீ - மேன்மை.
மாலாகப் போல மகளே..
2 comments:
இந்தப்படத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.. பார்த்ததில்லை.. உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது
மிகவும் அருமையான திரைப்படம். வேற்று மொழிகளிலிருந்து கண்ட குப்பைகளையும் "சுட்டு" பிழைப்பு நடத்தும் தமிழ்த் திரையுலகம் இப்படிப்பட்ட படங்களைப் பார்க்க மாட்டார்களோ?.
Post a Comment