மலையாள இயக்குனர்களில், கலையும் கமர்ஷியலும் கலந்து நல்ல படைப்புகளை கொடுக்கக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் லால் ஜோஸ்.
இவர் இயக்கிய கிளாஸ் மேட்ஸ், அச்சன் உறங்காத வீடு போன்றவை, படைப்பு ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்தன. அந்த வரிசையில் சமீபத்தில் காணக் கிடைத்த திரைப்படம் தான் ஆயாளும் ஞாணும் தம்மிள்.
டாக்டர் ரவி தரகனிடம் ஒரு உடல் நலம் குன்றிய பெண்ணை கொண்டு வருகிறார்கள். அவளுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று பரிந்துரைத்த டாக்டர் ரவியை தடுக்கிறான் அப்பெண்ணின் தந்தை. அறுவை சிகிச்சை செய்தால் உயிர் போய்விடும் என்பதால் அறுவை சிகிச்சை செய்ய கூடாது என்று மறுக்கிறான். ரவி, அவனையும் மீறி அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய அந்த பெண் இறந்து விட, அவனை கொல்ல அப்பெண்ணின் தந்தை உறவினர்களுடன் தேட அதில் இருந்து தப்பிக்கும் ரவியின் கார் விபத்துக்குள்ளாகிறது ஆனால் டாக்டர் ரவியை காணவில்லை.
அவனை தேடி அவன் வேலை செய்த மருத்துவமனை தலைவரின் செகரெட்டரி தியா புறப்பட, டாக்டர் ரவி கல்லூரி சமயங்களில் ஒரு மந்தமான மாணவன் என்றும் அவன் தனது இண்டெர்ன்ஷிப்க்காக மூணாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணி புரிந்ததையும் கண்டு பிடிக்கிறாள்.
மூணாறு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக டாக்டர் சாமுவேல் மருத்துவத்தை தொழிலாக மதித்து கறாராக நடந்து கொள்வது ரவிக்கு பிடிக்காமல் போகிறது.
இதற்கிடையே அவன் நடுவில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகறாரு ஏற்பட, அவனால் ரவியின் கல்லூரி காதலை இழக்க நேரிடுகிறது. பின்னால் அதே போலீஸ் அதிகாரி தன் சுகவீனமடைந்த மகளை மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது அவளுக்கு மருத்துவம் பார்க்க மறுக்கும் டாக்டர் ரவி தரகனை கண்டித்து அவளுக்கு மருத்துவம் பார்கிறார் டாக்டர் சாமுவேல். அவனுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட, அவனுக்கு டாக்டர் வேலை பறிபோகும் அபாயத்தில் இருக்கும் அவனை மாற்றுகிறது ஒரு சம்பவம்.
ரவியாக ப்ரித்விராஜும் டாக்டர் சாமுவேலாக பிரதாப் போத்தனும் அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்கள். எப்போதும் போல லால் ஜோஸின் முன்னும் பின்னும் செல்லும் திரைக்கதை தான் இதிலும் என்றாலும் அலுக்காமல் படத்தின் இறுதி வரை தொய்வில்லாமல் போகிறது.
மூணாறி ன் அழகை அள்ளி வரும் ஜோமோன் ஜானின் ஒளிப்பதிவு அட்டகாசம்.
அவுசப்பெச்சனின் இசையில் நிகில் மாத்யு குரலில் வரும் 'அழலிண்டே ஆழங்களில்' பாடல் நம் ஆன்மாவின் ஆழங்களை வருடிப் போகிறது.சோகம் ததும்பும் அந்த குரலும் இசையும்...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும், கண்கள் கலங்க வைக்கும்.
ஆயாளும் ஞாணும் தம்மிள்....ஆழம்.
No comments:
Post a Comment