உலக திரைப்பட வரலாற்றில் ஒரு பெண் இயக்குனர் போர்கால காட்சிகளை இவ்வளவு தத்ரூபமாக திரைப்படமாக பதிந்ததில்லை. பெண் திரைப்பட இயக்குனர் என்றாலே, மென்மையான காதல் கதைகள், பெண்ணுரிமை, குடும்ப கதைகள் என்பதையே கையாளும் வழமையை உடைத்து, வேறுபட்ட போர் திரைப்படம் எடுத்து அதற்காக ஆஸ்கார் விருதையும் வென்று சரித்திரம் படைத்துள்ளார், அவதார் படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவி காத்தரின் பிகாலோ.
இராக்கில் வெடிகுண்டு செயலிழக்கவைக்கும் வேலையில் ஒரு விபத்தில் ஒரு வெடிகுண்டு நிபுணன் மரணிக்க, அந்த
குழுவுக்கு தலைமை ஏற்று வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்க வருகிறான் வில்லியம் ஜேம்ஸ். முதலில் வெடிகுண்டுகள் இருக்கும் பார்சலை ஒரு ரோபோவின் துணை கொண்டு ஆராய்ந்து அது என்னவிதமான வெடிகுண்டு, அதில் டைம் செட் செய்யப்பட்டுள்ளதா என ஆராய்ந்து அதன் பின்னரே வெடிகுண்டு நிபுணர்கள் அதன் அருகில் செல்வார்கள்.
மரணத்துக்கு அஞ்சாத வில்லியம் ஜேம்சோ நேராக சென்று தன் கைகளினால் ஆராய்ச்சி செய்வது அவனது குழுவில் இருக்கும் மற்றோருக்கு அச்சத்தையும் எரிச்சலையும் அளிக்கிறது.அவனுடைய குழுவில் அவன் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் வேலையில் அவனுக்கு பாதுகாப்பாக இருப்பவர்கள் சான்பர்ன் மற்றும் ஓவென் எல்ட்ரிஜ். அவர்களின் பணிக்காலம் ஒரே ஒரு மாதம் மட்டுமே இராக்கில் இருக்க வேண்டி இருக்க, ஜேம்ஸ் எடுக்கும் ரிஸ்க்குகள் அவர்களின் வாழ்க்கைக்கே அபாயத்தை உண்டு பண்ணி விட கூடிய சூழல் உருவாகிறது. ஒரு முறை வெடிகுண்டுகளை தேடி புறப்படும் ஜேம்ஸ், ஒரு வேண்டிகுண்டு பல வெடிகுண்டுகளுடன் பிணைக்கப்பட்டு இருப்பதை கண்டு படம் பார்க்கும் நமக்கும் பல்சை எகிற வைக்கிறது.
பிரிட்டன் போர் வீரர்களுடன் சேர்ந்து எதிரிகளை ஒரு வறண்ட பாலைவனத்தில் தடுப்பு ஏற்படுத்திக்கொண்டு சுட்டு சாய்ப்பது, நடு இரவில் வெடிகுண்டு வைத்தவனை தேடிப்போய் வலிய மாட்டிக்கொள்ள, எதிரிகளின் குண்டு ஓவனின் காலை பதம் பாக்க, எனக்கு இப்படி நேர்ந்ததுக்கு காரணம் நீ தான் என ஓவென் ஜேம்சிடம் குதிக்க, ஜேம்ஸ் தனது போர் போதையை உணர்கிறான்.
பெக்கேம் என்ற தனக்கு நட்புக்கு பாத்திரமான அந்த இராக்கிய சிறுவன் கொந்தப்பட்டு ஒரு மனித வெடிகுண்டாக அவனது பிணத்துக்குள் வெடிகுண்டு பிணைத்திருக்க, கைகள் நடுங்க உள்ளத்தை உலுக்க ஒவ்வொரு சதையாய் பிய்த்து வெடிகுண்டு தேடும் கோரம் ஜேம்ஸின் நடிப்பில் பட்டு தெறிக்கிறது. இதய பலம் உள்ளவர்கள் மட்டுமே இந்த காட்சியை பார்க்க முடியும்.
படத்தின் இறுதியில் ஒருவனின் உடல் முழுதும் வெடிகுண்டுகள் பிணைக்கப்பட்டு பூட்டுகள் போடப்பட்டு அமெரிக்க ராணுவ முகாம் மீது தள்ளப்பட, அவனோ , 'நான் யாதொரு குற்றமும் அறியாதவன், எனக்கு குடும்பமும் பிள்ளைகளும் உள்ளனர், என்னை காப்பாற்றுங்கள் என கதறும்போது, அவன் மேல் இரங்கும் ஜேம்ஸ், தன் உயிரையும் பொருட்படுத்தாது அவனை நெருங்கி காப்பாற்ற முயல, அது டைம் பாம் என அறிந்து அவனை காப்பாற்ற முடியாமல் பின் வாங்கும்போது அந்த குண்டு வெடித்து அவன் சின்னாபின்னாமாகும் காட்சி பல இரவுகள் நம்மை தூங்க விடாது.
அந்த காட்சிக்கு பின்னர் சன்பார்ன் ஜேம்சிடம், 'எதற்காக இங்கே வந்தோம். எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், எனக்கு ஒரு மகன் வேண்டும் என கதறும்போது, இராக் போருக்கு உத்தரவிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மீது கோவமாக வந்தது.
தனது போர் காலம் முடிந்து வீடிற்கு வந்த ஜேம்ஸின் மனதில் நிம்மதி இல்லை. அவனது எண்ணமெல்லாம் மீண்டும் எப்போது தான் போருக்கு போக போகிறோம் என்பதிலேயே இருக்கிறது. தன் குழந்தையிடம், 'இப்போது நீ விளையாடும் இந்த பொம்மை நாளை உனக்கு பிடிக்காமல் போகலாம். உனக்கு வேண்டும் என தோன்றுவது குறுகி கொண்டே வரலாம், உனக்கு பிடித்ததை மட்டுமே நீ தேர்ந்தெடு' என கூறும் அடுத்த காட்சி, மீண்டும் ஒரு போர் முகத்தில் வெடிகுண்டை தேடி ஜேம்ஸ் புறப்படுவதோடு படம் முடிவடைகிறது.
போர் திரைப்படம் என்றால் இரு நாடுகளுக்கு இடையான சண்டை என்பதாக தான் பெரும்பாலும் இருக்கும். இந்த படத்தில் இயக்குனர் கையாண்டு இருப்பது ஒரு வெடிகுண்டு நிபுணனின் வாழ்க்கை. உயிருக்கு சிறிதும் அஞ்சாது, தனது ஆபத்தான வேலையை ஒரு போதை போல நினைத்து இயங்கும் வெடி குண்டு நிபுணனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் ஜெரேமி ரன்னர்.
'இந்த திரைப்படம், படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் போர் நடக்கும் இடத்துக்கு கூட்டி செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் படமாக்கப்பட்டது' என்றும் அவர் கூறுகிறார்.அந்த நோக்கம் நிச்சயமாக நிறைவேறி இருக்கிறது.
2010 ஆஸ்காருக்கு ஒன்பது விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டு,
சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய அனைத்து முக்கிய விருதுகளையும் தட்டி சென்றது. இது தவிர சென்ற இடங்களெல்லாம் விருதுகளை குவித்தது.
இத்திரை படம் பார்த்ததும், போரின் மீது வெறுப்பும், நம் ராணுவம் மீது மதிப்பும் பெருகுகிறது.
படத்தின் முன்னோட்ட காணொளி இங்கே.
1 comment:
தரமான பதிவு..
Post a Comment