வீடு நுழைகையில்,
இடறிவிட்டது ...
கார் பொம்மை ஒன்று!
படுக்கை அறையெங்கும்
மனைவி மடித்து வைத்த
துணிகள்
பரவிக் கிடந்தன.
காலுடைந்த பார்பி
குப்புறப் படுத்தபடி
அழுது புரண்டது!
உணவு மேசை எங்கும்
எங்கள் வீடு வான் கோ க்கள்
இலக்கில்லாமல்
தீட்டிய
வண்ணங்கள்!
பிய்ந்து கிடந்தன
புதிதாய் வாங்கிய
கித்தார் கம்பிகள்.
உடைந்து கிடந்தன
தேநீர் கோப்பைகள்
கிழிந்து கிடந்தன
அலுவலக கோப்புகள்.
களமாடிவிட்டு வந்த
வீரர்களைப் போல
அசதியில்
உறங்கிய பிள்ளைகளை
எழுப்பி
வைதது
நினைவுக்கு வந்தது.
விடுமுறைக்காக
ஊர் சென்றுவிட்ட
பிள்ளைகளை
தொலைத்துவிட்டு,
யாருமற்ற
சூன்யவேளியின் தனிமையில்
நான் விடும்
மூச்சுக் காற்று
வீடெங்கும்
எதிரொலித்தது!
கார் பொம்மையை
கதவருகே வைத்துவிட்டு,
தேநீர் கோப்பையை
உடைத்தேன்.
தொலைக்காட்சிப் பெட்டியில்
சிரிக்கத் துவங்கின
கார்டூன் பொம்மைகள்.
No comments:
Post a Comment