
சமீப காலத்தில் இப்படி ஒரு அற்புதமான திரைப்படத்தை நான் கண்டதில்லை. கான்ஸ் விருதுகள் வாங்கிய இத்திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டும் விருதுகள் வாங்கவில்லை. இத்திரைப்படத்தின் அடிப்படை, ஒரு தாய் தன் மகன் மீது கொண்ட பாசம் மற்றும் இசை மற்றும் நடனத்தின் மீது அவளுக்குள்ள ஆர்வம் என்று சொல்வதை விட வெறி.
செக் நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடி ஏறுகிறாள் சல்மா. அவளுக்கு ஜீன் என்ற ஒரு மகன். இருவரும் ஒரு அமெரிக்க குடும்பத்தின் trailor house எனப்படும் அவுட் ஹௌசில் குடி இருக்கின்றனர். அவள் வேலைக்கு செல்லும் சமயம் அவளுடைய மகனை அவர்களே பார்த்துக் கொள்கின்றனர். அவளுக்கு நல்ல உதவி செய்கின்றனர்.
வேலை செய்யும் இடத்தில் அவளுக்கு உதவியாக இருக்கிறாள் கேத்தி. அவளைபோல நமக்கும் ஒரு தோழி கிடைக்காதா என ஏங்க வைக்கும் கதாபாத்திரம்.
சல்மா வேலைக்கு சென்று விட்டு மாலையில் ஒரு நாடக வகுப்புக்கு கேத்தியுடன் செல்கிறாள். இசை நடனம் என்றால் அவளுக்கு பைத்தியம். தான் வேலை செய்யும் இடத்தில் கூட அங்குள்ள இயந்திரங்கள் எழுப்பும் ஒலியை மனதினுள் உள்வாங்கி அதனையும் இசையாக உருவகப்படுத்தி மனதிற்குள்ளேயே நடனம் ஆடுபவள்.
அவளுடைய அலுவலகத்தில் இருக்கும் ஒருவன் அவளை காதலிக்கிறான். அவள் அதனை நிராகரிக்கிறாள். தான் தன் மகனுக்காகவே வாழ்வதாகவும் காதலிக்க தனக்கு முடியாது எனவும் அவள் சொன்னாலும் அவன் அவளுக்காகவே தினமும் காத்திருக்கிறான். அவளுக்கு மிக்க உதவிகள் செய்கிறான்.

அனைவரும் அவளுக்கு உதவி கொண்டிருப்பதற்கு கரணம் வெள்ளந்தியான சல்மாவின் மனது. மற்றும் அவளுடைய தேவதை முகம். அவளுடைய வீட்டுகாரர்கள் அவளது மகனுக்கு அவளது எதிர்ப்பை கூட பொருட்படுத்தாது மிதி வண்டி வாங்கி கொடுக்கிறார்கள்.
இந்நிலையில் தான் அவளது வாழ்கை திசை திரும்புகிறது.தான் சம்பாதித்த பணத்தை தன் மகனுக்கு கூட தெரியாமல் சேமித்து கொண்டிருக்கிறாள் சல்மா. அவளது வீட்டு காரனான பில் ஒருநாள் அவளிடம் வந்து உன்னிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும் என சொல்கிறான் . தனது மனைவி லிண்டா மிகவும் செலவு செய்வதாகவும் பணம் தரவில்லை என்றால் தன்னை விவாகரத்து செய்துவிடுவாள் என்றும் வருத்தப்படுகிறான்.
தன்னிடம் பணம் இல்லை என்றும் வீட்டுக்கு பணம் கூட தன்னால் இரு மாதங்களாக கட்ட முடியவில்லை என்று சொல்கிறான். அவன் மேல் பரிதாபம் அடைந்த சல்மா தானும் ஒரு ரகசியம் அவனிடம் சொல்கிறாள். அதாவது தனக்கு கண் பார்வை குறைந்து கொண்டே வருவதாகவும் கூடிய சீக்கிரம் தான் கண் பார்வை இழக்க போவதாகவும் கூறுகிறாள். அது ஒரு வ்யாதி என்றும் தனது குடும்பத்தில் அனைவருக்கும் அது இருக்கிறது. தனது மகன் ஜீனுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த குறையை போக்குவதற்காகவே தான் அமெரிக்க வந்ததாக கூறுகிறாள்.
மறுநாள் அவளிடம் பேசுகிற பில் தனக்கு அவள் வைத்திருக்கும் பணத்தை கடனாக தர முடியுமா என கேட்கிறான். அவளோ அது ஜீனின் பணம் என்றும் அதனை தான் தொட முடியாது அவனது வைத்தியத்திற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளது என்றும் அவனிடம் சொல்கிறாள்.
தான் பணம் தராவிட்டால் அவன் செத்துவிடுவான் என்றும் தன்னால் தான் அது நிகழ போகிறது என்றும் உணர்கிற சல்மா கலக்கம் அடைகிறாள். மறுநாள் அவன் வீட்டிற்கு செல்லும் சல்மா பில்லின் மனைவியான லிண்டாவிடம் அவன் துப்பாக்கியை எங்கு வைத்திருக்கிறான் என கேட்கிறாள். லிண்டா துப்பாக்கி எப்போதும் தனது வீட்டில் தான் இருக்கும் என சொல்கிறாள். சல்மா தான் கொடுத்து வரும் வாடகை அவர்களுக்கு பத்தாது என்றும் அதிகமாக கொடுப்பதாக கூறுகிறாள். நல்ல உள்ளம் கொண்ட லிண்டா அது தேவை இல்லை உனக்கு தேவைப்படும் என கூறுகிறாள்.
சல்மாவிற்கு கண் பார்வை மங்கி கொண்டே செல்கிறது. அவள் சீக்கிரம் பணம் சேர்த்து ஜீனின் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நைட் ஷிப்ட்க்கும் வேலைக்கு செல்கிறாள். அவள் கண் பார்வை மங்கிக்கொண்டிருப்பதால் அவளுடைய தோழி கேத்தி அவளுக்காக வேலை சமயத்தில் உதவி செய்கிறாள். சல்மா நைட் ஷிப்ட் வந்தால் அவளுக்கு கண் தெரியாதே என உணர்ந்த கேத்தி அவளும் நைட் ஷிப்ட் வந்து அவளுக்கு உதவுகிறாள்.
ஒரு நாள் முற்றிலும் கண் பார்வை பறிபோக, அவள் செல்லும் நாடக ஒத்திகைகள் இருந்து அவளை அகற்றி விடுகின்றனர். வீட்டுக்கு வரும் அவள் தனது பணப்பெட்டி காலியாக இருப்பதை அறிகிறாள். தட்டு தடுமாறி பில்லின் வீடிற்கு செல்ல அங்கு லிண்டா அவளை கோவத்துடன் எதிர் கொள்கிறாள். அவள் பில்லை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி அவளிடம் சண்டை போட அப்போது தான் பில் அவளை பற்றி லிண்டாவிடம் தவறாக சொல்லி வைத்திருப்பதை உணர்கிறாள் சல்மா.
இருந்தாலும் எதுவும் பேசாது மாடிக்கு செல்கிறாள் அங்கு அவனது பேச்சின் மூலமாக அவனிடம் அவளது பணம் இருப்பதை அறிகிறாள். அதனை பிடுங்கி 'இது எனது பணம் ஜீனின் மருத்துவத்துக்கு வைத்திருக்கிறேன் எனவே நான் இதை எடுத்து செல்கிறேன்' என கூறுகிறாள் அவன் அப்படி சென்றால் அவளை சுட்டு விடுவதாக அவன் சொல்ல அவள் அதை பொருட்படுத்தாமல் செல்ல அவன் பாய்ந்து அவளிடம் பணத்தை பிடுங்க அவள் தடுக்க அந்த சண்டையில் துப்பாக்கி வெடித்து அவன் மேல் தொட்ட பாய்ந்து விடுகிறது. ஓடி வந்த மனைவி இடம் பில், சல்மா பணத்தை களவாடி ஓடப் பார்ப்பதாகவும் தடுத்த தன்னை சுட்டு விட்டதாகவும் கூறுகிறான். உடனே அவள் வெளியே ஓடி அக்கம் பக்கம் உள்ள மக்களை கூப்பிட போகிறாள். அப்போது பில் அந்த பணம் வேண்டுமானால் தன்னை கொன்று விட்டு எடுத்து செல்லுமாறு வேண்டுகிறான். சல்மா அந்த துப்பாக்கியால் அவனை சுட்டு பணத்தை எடுத்து செல்கிறாள்.
இதை எதுவும் அறியாத அவளை ஒருதலையாய் காதலிக்கும் ஜெப் அங்கு வர தன்னை டாக்டர் வீட்டுக்கு அழைத்து செல்ல அழைக்கிறாள். அவனும் அழைத்து செல்ல டாக்டரிடம் பணம் முழுவதையும் கட்டி அடுத்த மாதம் நோவா என்ற தன் மகன் வருவான் அவனுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறுகிறாள். ஜெப் பின்னர் அவளை நாடக ஒத்திகை நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்ல அங்கு அவளை வரவேற்று விட்டு அவளுக்கு தெரியாமல் காவல் நிலையத்திற்கு போட்டு கொடுக்கிறார் நாடக அரங்கின் உரிமையாளர். அவளை கைது செய்கிறது காவல் துறை.
கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. அவளுக்கு எதிராக சாட்சி சொல்கிறாள் பில்லின் மனைவி லிண்டா. அவள் துப்பாக்கியை பற்றி விசாரித்ததை சொல்ல அவளுக்கு மரண தண்டனை தீர்ப்பாகிறது. எங்கே அந்த பணத்தை பற்றி சொன்னால் அந்த பணத்தை கோர்ட்டார் பிடுங்கி ஜீன் க்கு சிகிச்சை கிடைக்காதோ என உண்மையை சொல்லாமல் விட்டு விடுகிறாள் சல்மா.
அவள் சிறையில் இருக்கும் வேலையில் அவளை வந்து சந்திக்கிறாள் அவள் தோழி கேத்தி. இடையே அவளை காதலிக்கும் ஜெப் அந்த மருத்துவமனை சென்று உண்மை அறிகிறான். இவ்விருவரும் அவளை நிரபராதியாக மாற்ற முயற்சி மேற்கொள்கிறார்கள். அவள் மரண தண்டனை பெற்றாளா அல்லது விடுதலை ஆனாளா என அறிய இந்த உணர்ச்சிமிக்க காவியமான திரைப்படத்தை நீங்கள் பார்த்து களிப்படைய வேண்டும்