
எல்லோருக்கும் வணக்கம். கடுமையான வேலை பளு காரணமாக என்னால் கடந்த சில நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை. (யாரு உன்னை கேட்டா ? என்று சிலர் சொல்வது எனக்கு கேட்கிறது...). அக்டோபர் முப்பது ஆவிகளின் தினம் என்பதால்..இதோ ஆவிகளை பற்றிய ஒரு கட்டுரையுடன் இதோ வந்து விட்டேன்.(போச்சுடா..)
ஆவிகள் உலகத்தில் இருக்கின்றனவா என கேட்டால்...பகுத்தறிவாளர்கள் சிரிப்பார்கள். நான் இது வரை எந்த ஆவியையும் (இட்லி சுடும்போது வரும் ஆவி மற்றும் கொட்டாவி தவிர...) நேரில் கண்டதில்லை. எனவே இதில் எனது கருத்தும் பகுத்தறிவாளர்களின் கருத்து தான். எனினும் ஆவிகளைப் பற்றிய கதைகளை கண்டும் கேட்டும் அதிசயித்திருக்கிறேன். ஆனால் எனக்கு கூறப்பட்ட சம்பவங்களின் நம்பகத்தன்மை எனக்கு இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது.
எனக்கு தெரிந்த சிலர் விளக்கணைத்து,மெழுகுவர்த்தி பொருத்தி (அப்போது தான் ஆவி வருமாம்.) கட்டங்கள் போட்டு ஆங்கில எழுத்துக்கள் எழுதி, நாணயத்தை கட்டத்தின் நடுவில் வைத்து ஆவிகளுடன் பேசியதாக கூறியுள்ளனர். எனது சகோதரனே எனது இறந்து போன பெரியம்மாவின் ஆவியுடன் பேசியதாக கூறி உள்ளான். அந்த ஆவி பெயரை மட்டும் கூறியது பின்னர் சத்தம் கேட்டவுடன் சென்றுவிட்டது என கூறினான். மறுநாள் தூங்கி எழுந்ததும் பேய் அறைந்தது போல இருந்தான். என்ன வென கேட்டபோது இரவில் தனக்கு பயங்கர கேட்ட கனவுகள் வந்தது என்றும் இனி தான் ஆவிகளுடன் பேசப்போவது இல்லை எனவுக் கூறினான். சிலர் ஆவியை அழைத்தபோது அது 'டூ நாட் டிஸ்டர்ப் ' என கூறியதாக சொன்னார்கள்.
வாஷிங்டன் டி சி வானொலியில் நேற்று ஒரு நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தேன். மன நல மருத்துவர்களுடன் நேயர்களின், தொலைபேசி மூலம் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.
அப்போது ஒரு மைக் என்ற ஒரு தகப்பன் நடுங்கும் குரலில் சொல்கிறான்...
'எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். வயது 8. அவளுக்கு,அவளுக்கு மட்டும் சில பிம்பங்கள் தெரிகின்றன.அவள், அவளது அறையில் சில உருவங்களை பார்ப்பதாக சொல்கிறாள். அவளை தவிர மற்றவர்களுக்கு அவை புலப்படுவதில்லை. அந்த உருவங்கள் அவளை பயமுறுத்துவதில்லை.அந்த உருவங்களை அவள் அதற்க்கு முன்பு பார்த்தும் இல்லை.அவள் நார்மலாகத்தான் இருக்கிறாளா?'
இதற்க்கு மருத்துவர்கள் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கிறார்கள். அவள் பள்ளியில் எப்படி இருக்கிறாள்? சந்தோஷமாக இருக்கிறாளா? உங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கிறது.அவள் சோர்வாக காண படுகிறாளா,உங்கள் வேலை எப்படி இருக்கிறது என.
எனக்கு மணவாழ்க்கை போன வருடம் முடிந்தது விவாகரத்து பெற்றுவிட்டேன். என பதில் வருகிறது.
அந்தப் பெண் உங்களது கவனத்தை பெறுவதற்காக அல்லது உங்கள் மணமுறிவுக்கு ஒரு வடிகாலாக அப்படி சொல்ல வாய்ப்பு உண்டு. அவளை மன நல மருத்துவரிடம் காட்டுவது நல்லது.
என் கேள்வி எல்லாம்...நிஜமாகவே அந்த பெண் உருவங்களை பார்த்திருப்பாளோ? மனோவியாதி என அதற்க்கு முடிவு கட்டப் படுகிறதோ என்பது தான்.
மனோ நல அகராதிகளை புரட்டிப் பார்த்தால் , இல்லாத உருவங்களை காண்பது ஒருவித மனோவ்யாதி என சொல்கிறது. அதற்க்கு சீசோபெறேன்யா (Schizophrenia) என நாமகரணமும் சூட்டியுள்ளது. இதைப்பற்றி எ பியுடிபுல் மைன்ட்(a beautiful mind) என திரைப்படமும் வந்து ஆஸ்கார் விருதுகள் வாங்கியுள்ளது.
ஜான் நாஷ் என்ற ஒரு பேராசிரியரின் கதையே அது. அவர் இன்னமும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யுனிவர்சிடி இல பேராசிரியராக இருக்கிறார்.( அவர் மாணவர்களை கண்டாலே எரிந்து எரிந்து விழுவார் என அங்கு பி எச் டி செய்த என் தோழி சொல்லி இருக்கிறாள்).
1999 இல தி ப்ளைர்விச் ப்ராஜெக்ட்(The Blair Witch project) என்ற உண்மை பதிவுகள் அமைந்த திரைப்படம் வெளியாகி அமெரிக்காவையே அலற வைத்தது.(இந்தியாவில் இந்த படம் வெளியானதா என தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்).
மூன்று திரைப்பட மாணவர்கள், இரண்டு ஆண்கள் ஒரு பெண், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பர்கித்ச்வில் என்ற இடத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் வாழும் ப்ளைர்விச் என்ற ஒரு சூனிய கிழவியை பற்றி தங்கள் பாடத்தின் ஒரு பகுதியான படம் எடுத்தல் என்ற பாடத்திற்காக சென்றனர். அவர்கள் கையோடு எடுத்து சென்ற வீடியோ கேமரா மற்றும் பிலிம் கமெராவில் பதியப்பட்ட காட்சிகள் இப்படத்தில் வருவது. அவர்கள் மூவரும் என்னவானார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. அவர்களால் எடுக்கப்பட்ட பிலிம் சுருள் மற்றும் வீடியோ கேமரா மட்டும் ஒருவருடம் கழித்து காட்டில் கண்டெடுக்கப் பட்டது. அப்படத்தில் காட்டின் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட வினோதமான மணிகள், கிலி ஏற்படுத்துவதாக இருந்தது. அவர்கள் தங்கி இருந்த கூடாரத்தின் முன்னே போடப்பட்ட ரத்தம் தோய்ந்த சதை துணுக்குகள் எல்லாவற்றையும் படம் பிடித்துள்ளனர். அவர்கள் பேய்களால் கொல்லப்பட்டனரா அல்லது வேறு மனிதர்களால் கொல்லப்பட்டனரா என இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.(படத்தின் இறுதியில் எஞ்சி இருக்கும் பெண்ணின் அலறல் கேட்க காமெராவை தூக்கி கொண்டு ஓடும் ஆண் தாக்கப்படுவதொடு கேமரா கீழே விழுந்து 'விர்ர்' சத்தத்தோடு படம் முடிவடைகிறது. பேயையோ ஆவியையோ காட்டாமலும், கத்துக்குட்டி ஒளிப்பதிவில் (வீடியோ கமெராவில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆடிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு காட்சியும்) எடுக்கப்பட்டிருந்தாலும் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுக்கு அந்த உண்மை காட்சிகளே காரணமாக சொல்லப்பட்டது.
நிஜ பிசாசுகள் ஆவிகள் இருக்கின்றனவா என தெரியவில்லை நான் கண்டதில்லை . ஆனால் மனித உருவத்தில் உள்ள பிசாசுகளை கண்டு இருக்கிறேன். சமீபத்தில் கூட..இலங்கையில்....
உங்களுக்கு எதாவது ஆவிகள் தொடர்பான அனுபவங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். ஆவிகள் பற்றிய எனது அறிவு விருத்தி அடைய உதவும்.
இனிய பிசாசுகள் தின வாழ்த்துக்கள்...(Happy Haloween..)
...