

நான் கடவுள் போன்ற படத்தை எடுக்க மிகுந்த துணிவு வேண்டும். அந்த துணிவு பாலாவிற்கு இருந்ததால் தான் இந்த விருது சாத்தியமாகி இருக்கிறது. அவரது ஒவ்வொரு படத்திற்கும் அவரது சிரத்தை, அவரது உழைப்பு அந்த படம் முழுதும் தெரியும். படத்தின் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் மிக அழுத்தமாக ஆணித்தரமாக இருக்கும். அந்த கதாபாத்திரங்கள் படத்தை பார்க்கும் ரசிகர்களாக நமக்கும் மிகுந்த பாதிப்புகளை ஏற்ப்படுத்தும். அதுவே அவரது படைப்பின் வெற்றி. சேது படத்தின் சேது, பிதாமகன் படத்தின் சுடுகாடு சுடலை, நான் கடவுள் படத்தின் பூஜா மற்றும் அகோரியின் கதாபாத்ரங்கள் யாராலும் மறக்க முடியாதபடி படைக்க இப்போதைக்கு பாலாவினால் மட்டுமே முடியும். எனினும் அவரது ஒவ்வொரு படத்தின் கதாநாயகர்களும் ஒரே மாதிரி அசுர பலத்துடன் ஒருவித மிருகத்தனத்துடன் இருப்பது மீண்டு மீண்டும் அவருடைய மற்ற படங்களையே ஒப்பிட்டு நோக்க வைத்து ஒரு ஆயாசத்தை உண்டு பண்ணுவது உண்மை. அதனை விட்டு அவர் வெளியே வருதல் நலம். அவரது அடுத்த படத்தில் அத்தகைய கதாநாயகர்கள் இல்லாது முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக செய்ய இருப்பதை அறிகிறேன் வாழ்த்துக்கள்.
சிறந்த கதாநாயகன் மற்றும் சிறந்த சமூக நலன் படமாக மராத்திய படமான ஜோக்வா தேர்ந்தெடுக்கப் பட்டிருகிறது. அப்படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன். நிச்சயம் ராஜ் தாக்கரே சந்தோஷ பட்டிருப்பார். அப்படத்தின் இயக்குனர் வட இந்தியானாக இருந்தால் அப்படத்தின் சுருளை கொளுத்தி போட ஆட்களை ஏவி விட்டிருப்பார்.
இம்முறை, பெரும்பாலான விருதுகளை ஹிந்தி மராத்தி மற்றும் வங்காள திரைப்படங்களே அள்ளி சென்றுள்ளன. தமிழ் படங்களின் வசூலை பார்த்து, தமிழ் பட பாணியை எப்போது நகலெடுக்க துவங்கியதோ அப்போதே சினிமா ஜீவிகள் சூழ்ந்த மலையாள படங்கள் தங்களது தனித்தன்மையை இழக்க துவங்கி விட்டன. எப்போதும் திரைப்பட விருதுகளில் முதன்மையாக இருக்கும் மலையாள படங்களில் ஒரு படத்திற்கு கூட எந்த நல்ல விருதும் கிடைக்காதது ஏமாற்றமே. மலையாள திரைப்பட பிரம்மாக்கள், தங்களது முயற்சியை மாற்றி நல்ல சினிமாக்கள் படைப்பத்தை தொடர வேண்டும்.
வங்காள மொழிப்படமான அநிருத்த ராய் சௌதரி இன் 'அந்தஹீன்' படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி பாடகி (ஸ்ரேயா கோசால்) பிரிவுகளுக்கு தேர்வாகி இருக்கிறது. வங்காள இயக்குனர்கள், இன்னும் வியாபார ரீதியான படங்களை நோக்கி முற்றிலுமாக நகரவில்லை என்பதை இது காட்டுகிறது.
சில பல பதிவர்கள் கமலுக்கு தசாவதராம் படத்திற்கு விருது கிடைக்க வில்லை என வருந்தி இருந்தது சிரிப்பை வரவழைத்தது. அப்படி பார்த்தால் சிவாஜி ரஜினியும் விருதுக்கு தகுதியானவரே. தசாவதாரம் படத்தில் காயாஸ் தியரி என்ற ஒரு புதுமையை தவிர, கமலின் மாறுவேட தாகத்தை தீர்த்து வைத்த திரைப்படம்அவ்வளவே.
தமிழ் படங்களில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றான 'பூ' படத்திற்கு இந்த வருடமோ அல்லது சென்ற வருடமோ.. எந்த விருதும் கிடைக்க வில்லை என்பதுதான் எனது ஆதங்கம்.