அந்த சாந்தமான முகத்தையும் அதில் வீற்றிருக்கும் அமைதியான கண்களையும் கண்டவர்கள், அதற்க்கு பின்னே ஒரு தீவிரவாதியையும் ஒரு பயங்கரவாதியையும் கண்டிருக்கமாட்டார்கள், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் வீழும் வரை. ஒசாமா பின் லாடன். இந்த ஒரு பெயர் மட்டுமே அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இரட்டை கோபுரத்தை தகர்த்து அமெரிக்காவின் பொருளாதரத்தை நிலை குலைய வைத்ததில் இருந்து அமெரிக்கா, பல பில்லியன் கணக்கான டாலர்களை பத்து வருடங்களாக செலவழித்தது ஒசாமாவை கண்டுபிடிக்க. நட்பு நாடான பாகிஸ்தானின் துரோக நிலத்தில், பாகிஸ்தான் ராணுவ கேந்திரத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் ஐந்து வருடங்களாக வசித்து வந்ததாக ஒசாமாவின் மனைவி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஒசாமாவை அமெரிக்க கண்டு பிடித்தது எப்படி?
ஒசாமா, தனது கட்டளைகளை, போன் மூலமாகவோ, இன்டர்நெட் மூலமாகவோ அனுப்புவது இல்லை. மன்னர்கால முறைப்படி, தூதுவர்கள் மூலமாகவே தனது கட்டளைகளை தனது தளபதிகளுக்கு இடுவான். அந்த தூதுவன் ஒசாமாவின் நம்பிக்கைக்கு மிக மிக பாத்திரவானாக இருந்திருக்கவேண்டும். அவனுடைய தங்குமிடம் அவனது தளபதிகளுக்கு கூட தெரியாததாக இருந்தது.
இரட்டை கோபுரம் இடிக்கப் பட்டபின் கைதான அல் குவைதா கைதிகளிடம் விசாரணை செய்ததில், அப்படிப்பட்ட தூதுவர்களில் ஒருவனின் பெயர், அபு அஹமத் அல் குவைடி என்றும் அவன் குவைத் நாட்டை சார்ந்தவன் என்றும் தெரியவந்தது. பின்னர் 2004 இல் பிடிபட்ட அல் குவைதா வின் முக்கிய நபர்களில் ஒருவனான ஹசன் குல்லிடம் விசாரணை செய்ததில், அபு அஹமத் அல் குவைதாவின் மிக முக்கியமான தூதுவன் என்றும் அவன் அல் குவைதாவின் முக்கிய நபரான பாராஜ் அல் லிபி என்பவனுக்கு நெருக்கமானவன் என்றும் கூறினான்.
பின்னர் 2005 இல் பராஜ் அல் லிபியை கைது செய்தனர் அமெரிக்கர். அவன், அல் அஹமத் கொண்டு வந்த செய்தியின் படியே தான் புதிய கமாண்டராக பொறுபேற்றுக் கொண்டதாக கூற, அல் அஹமது நிச்சயம் ஒசாமாவுடன் தொடர்பில் இருப்பதாக நம்பியது அமெரிக்காவின் சி ஐ ஏ.
அந்த தூதுவனின் உண்மை பெயரான ஷேக் அபு அஹ்மத் என்பதை அறிந்து கொள்வதற்கே சி ஐ ஏ வுக்கு பல ஆண்டுகள் ஆனது. அவனுக்கு நிச்சயம் ஒசாமாவின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என நம்பினர். ஒசாமா வெகு உஷாராக தனக்கு அருகே போன் கள் மற்றும் இண்டர்நெட்டை அனுமதிப்பதில்லை. எனவே வெளி தொடர்பு எல்லாம் தூதுவன் மூலமாகத்தான்.
சென்ற வருட மத்தியில், அல் குவைதாவுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவரின் போன் தொடர்பை ஒட்டு கேட்ட பொது அகமது அவருடன் பேச அவன் இருக்குமிடம் கண்டுபிடித்து அவனை அவனை அறியாமல் தொடர்ந்தது சி ஐ ஏ.
அவனை தொடர்ந்தபோது தான் அவன் பாகிஸ்தானின் அபோட்டாபாத் என்ற இடத்தில் இருக்கும் அந்த பெரிய சுவர்களுக்குள் அடங்கிய அந்த வீட்டிற்க்கு அமெரிக்க புலனாய்வுதுறை நபர்களை அழைத்து சென்றது. முன்பே அந்த வீட்டை பற்றி சி ஐ ஏ அறிந்திருந்தாலும், ஒசாமா தனது பாதுகாவலர்களின் துப்பாக்கிகள் புடை சூழ பதுங்கி இருப்பன் என நினைத்ததால், அமைதியான அந்த வீடு அவர்களின் சந்தேக வளையத்துள் வரவில்லை.
ஒசாமா தங்கி இருந்த கட்டிடம்.
அந்த வீட்டில் உள்ளே வெளியே நடமாட்டமில்லை. அந்த வீட்டுக்கு போன் இல்லை இன்டர்நெட் இணைப்புகள் இல்லை. உள்ளே நுழைய இரண்டு பாதுகாப்பு அரண்கள். வெளியே பதினெட்டு அடிக்கு சுவர்கள். யாருக்கும் தெரியாமல் இருக்கவே அந்த வீடு கட்டப்பட்டுள்ளது என்றும் நிச்சயம் ஒசாமா அந்த வீட்டினுள் பதுங்கி இருக்க கூடும் என்றும் சி ஐ ஏ உணர்ந்து பெப்ரவரி 2011 இல் உறுதி செய்தது.
உலகின் எந்த அதிபரும் எடுக்க தயங்கும் முடிவை எடுத்தார் ஒபாமா. அந்நிய மண்ணில் எதிரியை வீழ்த்துவது. அதுவும் எதிரி அங்கே இருக்கிறான் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அவனை உள்ளே பார்த்தவர் யாரும் இல்லை. அந்த வீட்டில் தாக்குதல் நடத்தி அங்கு ஒசாமா இல்லை என்றால், தோழமை நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் பரஸ்பர நம்பிக்கை இன்மை ஏற்படும். அப்டியே தாக்குதல் நடத்தினாலும், அந்த வீடு இருக்கும் இடம் மக்கள் வாழும் அமைதியான இடம். அருகேயே ராணுவ குடியிருப்புகள், அவர்களுக்கு சேதாரமின்றி தாக்குதல் நடத்தவேண்டும். என பல சவால்கள் இருந்தாலும், துணிந்து முடிவெடுத்தார் ஒபாமா. புலனாய்வுதுறை சொல்வதை நம்பி அவர்கள் அளித்த பல திட்டங்களில், ஹெலிகாப்டரில் பறந்து சென்று இறங்கி தாக்கும் திட்டத்தை அவர் தான் தேர்ந்தெடுத்தார். நேவி சீல்ஸ் எனப்படும் கடற்படை வீரர்களில் சிறந்த வீரர்கள்( பெஸ்ட் ஒப் தி பெஸ்ட் என சொல்கிறார்கள்) ஆறு பேரை தேர்ந்தெடுத்தனர். தனது நட்பு நாடுகளான, பிரிட்டின், கனடா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கூட தெரியாமல், இந்த ஆபரேஷன் நடத்த திட்டமிடப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு தெரியாமல், அந்த நாட்டிலேயே தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு, அந்த திங்கள் கிழமையின் அதிகாலையில் ஹெலிகாப்டர்களின் மேலிருந்து குதித்த அந்த கடற்படை வீரர்கள், வெற்றிகரமாக காரியத்தை முடித்தனர். ஒசாமாவுக்கு இவர்கள் வைத்த சங்கேதப் பெயர் ஜெரோனிமா.
ஒசாமாவை கொல்லும்போது என்ன நடந்தது என முன்னுக்குப்பின் முரணான நிறைய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. கடைசியாக வந்த தகவலின் படி, ஒசாமா ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை. தனது மனைவியையும் தற்காப்புக்கு பிடிக்கவில்லை. ஆனால் தடுக்க நினைத்தக வெகு அருகில் இருந்து தலையில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது என சொல்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள மற்ற இரு பாதுகாபாலர்களும் சுடப்பட்டு இறந்து விட்ட நிலையில், ஒசாமாவின் மனைவியை உயிருடன் விட்டு வந்திருக்கின்றனர். ஒசமாவுடனும் அங்கிருந்த கம்புடேர்களில் இருந்த ஹார்ட் டிஸ்க் குகளும் எடுத்தபடி பறந்து விட்டனர்.
பின்னர் இஸ்லாமிய முறைகள் செய்துவிட்டு ஒசாமாவை கடலில் புதைத்துள்ளனர்.
அரபு நாட்டின் செல்வந்தருக்கு மகனாக பிறந்த ஒசாமாவுக்கு இந்த அளவுக்கு தீவிரவாத சிந்தனைகளை விதைத்தது யார்? எங்கிருந்து வந்தது உயிர்களை கொல்லும் எண்ணம்.? தான் நம்பிக்கை துரோகத்தால் சாகடிக்கப் படுவோம் என முன்பே ஒசாமா சொல்லி இருக்கிறான். தனக்கு பின்னே தனது பிள்ளைகள் அல் குவைதா இயக்கத்தில் சேர்ந்து விட கூடாது என்று தனது விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறான். ஒவ்வொரு குற்றவாளிக்கு பின்னும் அவனுக்கான நியாயங்கள் இருக்கும் அமெரிக்காவை வீழ்த்தவேண்டும் என்ற ஒசாமாவின் வெறிக்கு பின்னே ஒரு ஞாயம் இருக்கலாம். அது வெளி உலகத்துக்கு தெரியாமல் இப்போது அவனுடன் கடலில் மூழ்கிப் போயிற்று. எப்படி இருந்தாலும், வாளெடுத்தவன் வாளால் சாவான் என்ற பழம் சொல் மொழி மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. உயிர்களை கொல்லுதல் எந்த நியாயங்களையும் முடக்கிப் போடும். அது ஒசாமாவாக இருந்தாலும் சரி, இல்லாத அணு ஆயுதங்களுக்காக இராக்குக்கு படையெடுத்து சதாமை கொன்று அந்த நாட்டை சின்னாபின்னாபடுத்திய அமெரிக்காவானாலும் சரி.
பாகிஸ்தானை தனது சந்தேக வளையத்தில் வைத்துள்ளது அமெரிக்கா. அதனாலேயே பாகிஸ்தானுக்கு கூட தெரியாமல் அதன் மத்தியில் அமைந்துள்ள கட்டிடத்தில் கால் பதித்து ஒசாமாவை அலேக்காக கொன்று தூக்கி உள்ளது. சரிந்திருந்த தனது செல்வாக்கை இதன் மூலம் தூக்கி நிறுத்தி உள்ளார் ஒபாமா என செய்திகள் தெரிவிக்கின்றன. ஒசாமாவின் இறப்பை அமெரிக்கர்கள் கொண்டாடுவதை பார்த்தல், நரகாசுரனின் மறைவை இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளிதான் நினைவுக்கு வருகிறது.
ஒசாமாவின் மறைவுக்கு பழிவாங்கப் போவதாக சூளுரைத்திருக்கிறது அல் குவைதா. எல்லா மதத்தைப் போலவும் அன்பே இஸ்லாமும் போதிக்கிறது. இந்த தீவிரவாத செயல்களால் அப்பாவி இஸ்லாமிய சகோதரர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
என்னவானாலும் பாதிக்கப் படப் போவதும் பழி வாங்கப்படபோவதும்... அப்பாவி பொதுமக்கள் தான்.