
டைட்டானிக் ஒரிஜினல் படம்.
மனிதன் தனது சாதனைகளுக்கு கர்வப்படும் போதெல்லாம் அவனுக்கு மரண அடி விழுவது வரலாற்றில் பதியப் பட்டிருக்கிறது. அதற்க்கு ஒரு உதாரணமாக திகழும் சின்னம் தான் டைட்டானிக் என்ற மாபெரும் கப்பலின் வீழ்ச்சி.
வைட் ஸ்டார் லைன் (White Star Line) என்ற கம்பனியால் 1909 இல் ஆரம்பிக்கப்பட்டு 1911 ஆண்டு அந்த நாளைய மதிப்பின் படி 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டி முடிக்க பட்ட டைட்டானிக் உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.
1912 இல் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முதல் கப்பல் என்ற கர்வத்தில், எந்த ஒரு இடர்பாட்டினையும் சமாளிக்க கூடிய கப்பல் என்பதால் அறுவது உயிர் காக்கும் படகுகள் கொள்ளக் கூடிய கப்பலில் வெறும் இருவது படகுகளை மட்டுமே கொண்டு சென்றனர். கப்பலில் பெரும் செல்வந்தர்களுக்கு இடையே, ஐரோப்பாவின் அயர்லாந்தில் இருந்தும், இங்கிலாந்திலிருந்தும் மற்றும் பல ஏழை ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு பஞ்சம் பிழைக்க வந்த, பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மக்கள் இருந்தனர்.
ஏப்ரல் பதினைந்து 1912, அட்லாண்டிக் சமுத்திரத்தில், மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த வேளையில் கப்பலில் இருந்தவர்கள் , தங்கள் கப்பலின் மிக அருகே ஒரு பெரும் பனிப்பாறை இருப்பதை அறிந்து கப்பலை திருப்ப எத்தனிக்கையில் பக்கவாட்டில் மோதிய கப்பலின் எஞ்சின்கள் பழுதாகி, முழுக ஆரம்பித்தது. பெருஞ்செல்வர்கள் பெரும்பாலானோர் தப்பிவிட, பெண்களும் குழந்தைகளும் காப்பற்றப் பட ஏழை மனிதர்கள் கப்பலுடன் மூழ்கினர்.பயணித்த 2224 பேரில், உயிர் பிழைத்தவர்கள், 710 தான். 1514 பேர் அந்தப் பனியில் உறைந்து இறந்து போனார்கள்.
ஸ்ட்ராஸ் மற்றும் ஐடா.
டைட்டானிக் படத்தில் வருவது போல ரோஸ் என்றோ ஜாக் என்றோ எந்த காதல் கதையும் இல்லை. ஆனால் அதையும் மிஞ்சும் சுவாரஸ்ய நிகழ்வுகள் உண்டு என்கிறது வரலாறு.
மேசிஸ் என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தின் அதிபர் ஸ்ட்ராசும் அவரது மனைவி ஐடாவும் அந்த கப்பலில் இருந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர்காக்கும் படகில் தப்பி செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டதும், கணவரை விட்டு தான் மட்டும் தப்பிக்க எண்ணமில்லை எனக் கூறி, தனது வேலைக்காரியை தனக்கு பதிலாக ஐடா அந்தப்படகில் அனுப்பி விட்டு, தனது காதல் கணவனுடன் உயிர் கப்பலில் மூழ்கி உயிர் இழந்தார். செல்வா சீமாட்டியாக இருந்தாலும், காதல், எல்லாவற்றையும் விட மேலானது என நிரூபித்தார்.
கப்பலில் கண்ட்ரோல் அறையில் வேலைப் பார்த்த பொறியாளர்கள், கப்பலில் கடைசிவரை மின்சாரம் பழுதாகாமல் தப்பி செல்பவர்களுக்கு கப்பலில் இருந்த விளக்கொளி குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் தப்பி செல்ல கடைசி படகு காத்திருக்கிறது என்று சொல்லப்படதற்க்கு செவி சாய்க்கவில்லை அவர்கள். கடைசி வரை தங்கள் கடமைகளை நிறைவேற்றி விட்டு கப்பலுடன் சேர்ந்து மடிந்து போனார்கள்.
மார்கரெட் பிரவுன் என்ற பெண்மணி தான் ஒரு சீமாட்டியாக இருந்தாலும் அந்த நள்ளிரவில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஆறாவது எண் கொண்ட படகை செலுத்தி அதில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் கார்பெதியா என்ற இன்னொரு கப்பலுக்கு சென்று சேர்த்து கணவனை இழந்த பெண்களுக்கு, பணக்கார குடும்பத்து பெண்களிடம் இருந்து பணம் வாங்கி அந்த காலத்திலேயே 'பத்தாயிரம் ' அமெரிக்க டாலர்களை வசூலித்து அவர்களிடம் அளித்து 'அன்சிங்கபுல் மார்கரெட் பிரவுன்' என்று அவரது பெயரை வரலாறு பதித்தது. அவரை பற்றிய புத்தகங்களும் திரைப்படமும் கூட வெளிவந்தது.
பெஞ்சமின் எனும் பெரும் செல்வந்தர், 'எல்லோரும் மேல் தளத்துக்கு ஓடுங்கள், கப்பல் மூழ்கப் போகிறது' என்று அறிவித்ததும், தன அறை சென்று கோட் சூட் போட்டுகொண்டு தன்னை அழகாக்கியபடி வெளி வந்தார். ' என் மனைவியிடம் சொல்லுங்கள். நான் ஒரு ஜென்டில் மேனை போல மறித்து போனேன் என்று' என்றபடி கப்பலில் மூழ்கி இறந்து போனார். கடைசியில் அவரது உடலை கண்டுபிடித்தவர்கள் அவரது கோட்டை நினைவு சின்னமாக இன்னமும் வைத்துள்ளார்கள்.
ஜோசப் பிருஸ் இஸ்மே, டைட்டானிக் கப்பலின் முதலாளி, பெண்கள் குழந்தைகளுக்கு முன்னே படகில் ஓடி சென்று ஏறி தப்பித்தவர். அவரது வாழ்நாள் முழுக்க கோழை என லண்டன் வாழ் மக்கள் பட்டம் கட்டி அவரை மூலையில் அமரவைத்தனர்
டைட்டானிக் இப்பொது 12,415 feet (3,784 m) ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. பல குழுவினரும் பலமுறை டைட்டானிக் கப்பலுக்கு சென்று பல ஆராய்சிகளும் பல நினைவு சின்னங்களும் எடுத்து உலகில் பல இடங்களில் பல நினைவகங்களில் அவை வைக்கப்பட்டுள்ளன.
டைட்டானிக் திரைப்படத்தில்....
டைட்டானிக் மூன்று முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியை தழுவியது. நீரின் மேல் காதல் கொண்ட ஜேம்ஸ் காமரூன் 1997 இல் ஜாக் மற்றும் ரோஸ் என்ற காதல் கதாபாத்திரங்களையும், டெக்னாலஜி யையும் வைத்து மிரட்டி எடுத்த திரைப்படம் பதினோரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வசூலிலும் உலக சாதனை படைத்தது. டைட்டானிக் என்ற மிகப்பெரும் சோகத்தை உலகமே கொண்டாடியது.
கடந்த நூறு ஆண்டுகளாக ஆழ் கடலில் அடிமனத்தில் மர்மங்களை சுமந்தபடி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது டைட்டானிக்.