Saturday, September 23, 2023

 உலக சினிமா: தி காங்ஸ்டர் தி காப்  தி டெவில் ( The Gangster the cop the devil) (கொரியா)


ஒரு இரவு சாலையில் ஒரு காரை இன்னொரு கார் பின்தொடர்ந்து வந்து பின்னே மெதுவாக இடித்து விடுகிறது. முதல் காரிலிருந்து இறங்கி பின்னால் இடித்த கார் ஓட்டிவந்தவரோடு இன்சூரன்ஸ் பற்றி பேச்சு கொடுக்கும் நபரை  பின்னால்  வந்த காரில் வந்தவர் கத்தி வைத்து பலமுறை குத்தி  விடுகிறார்.

இந்த கேஸை விசாரிக்க நியமிக்கப்படும் ஒரு போலீஸ் அதிகாரி Jung Tae-seok இதே போல பல கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அந்த கொலையாளி ஒரு சீரியல் கில்லர் என தனது மேலதிகாரிக்கு நிரூபிக்க படாத பாடு படுகிறார். இடையே ஒரு காங்ஸ்டர் தவறான ஒரு சூதாட்ட விடுதியை நடத்துபவரையும்  கவனிக்க வேண்டி இருக்கிறது.

அந்த காங்ஸ்டர் Cheonan Dong-soo அந்த கொலையாளியின் அடுத்த இலக்காக,  அவனுடன் சண்டை போட்டு தப்பி விடுகிறார். அந்த கொலையாளியும் தப்பி விடுகிறான்.

இந்த மூன்று பேரையும் இணைக்கும் புள்ளி தான்  தி காங்ஸ்டர், தி காப்  , தி டெவில். 

போலீசாக நடித்திருக்கும் நபர் தனது அலட்சிய நடிப்பால் மின்னுகிறார். தனது மேலதிகாரியை இடது கையால் டீல் செய்வதும் ஒரு க்ரிமினலை உபயோகித்து கிரைம் நடந்த இடத்துக்கு சென்று சேர்வது என பிரம்மாதப் படுத்தி இருக்கிறார். 

கொடூர காங்ஸ்டர் ஆக நடித்திருக்கும். Ma Dong-seok தானே ஒருவனிடம் வெட்டுப்பட்டு தப்பித்ததும், கூட இருப்பவர்கள் ஒரு ஒரு காங்ஸ்டராக  இருந்தும் குத்துப்பட்டு வந்த அவனை கேலி செய்ய அந்த கொலையாளியை தேடி கண்டுபிடித்து பழி வாங்க  வெறி கொண்டு அலைகிறார். 

படத்தின்ஆக்க்ஷன் காட்சிகள் பல இருந்தும் உறுத்தவில்லை.காட்சிகள் நம்பகத்தன்மையோடுதான் அமைக்கப்பட்டிருக்கிறது . போலீஸ் அதிகாரி தான் நிறைய அடி வாங்குகிறார். 

ஒரு நல்ல ஆக்க்ஷன் படத்துக்கு உண்டான விறுவிறுப்பான திரைக்கதை. ராக்கட் வேகத்தில் பறக்கிறது படம்.  அதற்குண்டான ஒளி அமைப்பில் உறுத்தாத ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு பரபரக்கும் இசை என ஆக்க்ஷன்  பட ரசிகர்களுக்கு விருந்து. 

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் நீதிமன்றக் காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பது குறை.

படத்தில் ரத்தம் தெறிக்கிறது. அனால் நமது தமிழ் படமான ஜெய்லருக்கு இந்தப்படத்தின் வன்முறை காட்சிகள் எவ்வளவோ பரவா இல்லை.

ஆக்சன் ரசிகர்கள் விரும்பி பார்க்கலாம்.

Wednesday, August 16, 2023

பீட் (Bheed) இந்தி

 



கோவிட் சமயங்களில் புலம் பெயர் மக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி சென்ற துயரத்தை வரலாறு மறக்காது மன்னிக்காது. அந்த மக்கள் சந்தித்த வலிகளை  சிறிது சாதிய வன்மங்கள், மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களின் பேதங்கள், மத துவேஷங்கள், சிறிது காதல், சிறிது மனிதம் என அனைத்தையும் கலந்துகட்டி காக்டைல் அளிக்கிறது இந்த இந்தி படம் பீட் (Bheed). Bheed  என்றால் கூட்டம் என இந்தியில் பொருள் படுகிறது 

வெகு தூரம் நடந்து வந்து ஆயாசத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கும் மக்கள் மேல் ரயில் ஏறி 16 பேர்கள் இறந்துபோன நிகழ்வில் கருப்பு வெள்ளையில் தொடங்குகிறது படம். திரிவேதி என்ற உயர் சாதியை சேர்ந்த வாட்ச்மேன்கள் குடும்பம், சுவாரஸ்ய செய்திகளுக்கு அலையும் மீடியாவை சேர்ந்த பெண், தன் குடிகார தந்தையை சைக்கிளில் வெகுதூரம் அழைத்து செல்லும் ஒரு பெண், ஹாஸ்டலில் இருக்கும் தனது பெண்ணை மீட்டுவர முயற்சிக்கும் ஒரு பெண், தியானத்துக்கு சென்று திரும்பும் ஒரு இஸ்லாமிய குழு, இவர்களை சமாளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி (ராஜ் குமார் ராவ்) மற்றும் அவனை காதலிக்கும் உயர் சாதியை சேர்ந்த ஒரு டாக்டர் என இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்தித்தால் என்னவாகும் என்பதை நிதர்சனங்களோடு பொருந்திப்போகும் திரைக்கதை.

புலம் பெயர் மக்களின் துயர் தான் கதை என்றாலும் அதனூடே அரசியல்வாதிகளின் சாதி மத அரசியலால் மக்கள் மனதில் எழும் துவேஷங்களையும் அதன் விளைவுகளையும் காட்சிப்படுத்தி இருப்பது சமூக அக்கறை. கவுதம் லால் டிகாஸ் என தனது சாதி பெயரான டிகாஸ் என்ற தாழ்ந்த சாதி பெயரால் தாழ்வு மனப்பான்மையுடன் வலம் வரும் ராஜ் குமார் ராவ்,நடக்கும் நிகழ்வுகளால் கையறு நிலையில் செய்வதறியாது துடிக்கும் சமயத்தில், தனது உயர் சாதியை சேர்ந்த காதலி பூமி பட்நாகருடன் சாதி வித்யாசம் பார்த்து மறுகும் இடத்திலும்  நடிப்பில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்.  பலராம்  திரிவேதி யாக வரும் பங்கஜ் கபூருக்கு அற்புதமான குணசித்திர வேடம்.

ஆர்டிகிள் 15,மல்க் போன்ற சமூக சிந்தனையுள்ள படங்களை இயக்கிய அனுபவ சின்ஹா தான் இப்படத்தின் இயக்குனர். இன்றைய அரசியல் காலகட்டத்தில் இது போன்ற படம் எடுக்க பெருந்துணிவு வேண்டும். படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்திருப்பதால் உண்மைக்கு அருகே இருப்பதை போன்ற உணர்வை சவுமிக் சட்டர்ஜீ யின் ஒளிப்பதிவு தருகிறது. இசை இருப்பதாகவே தெரியாமல் இசை அமைத்திருக்கிறார் அனுராக் சைக்கியா.

கதை ஒரே இடத்தில் நிகழ்வதாக இருப்பதால் படம் மெதுவாக நகர்வதாக உணர்வை தருகிறது. இருந்தாலும் புலம் பெயர் தொழிலாளிகளின் கொரோனா கால பயணத்தை வலிகள் மாறாமல், உண்மை சம்பவங்களை கோர்த்து மாலையாக்கி  அளித்த அனுபவ சின்ஹாவின் சமூகத்தின் மீதுள்ள காதல் நன்றே தெரிகிறது.

இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது 

பீட்...ஒரு அனுபவம்.

Monday, February 26, 2018

ஊர்வலம்...!(சிரியா )


இந்த வீதிகளில் தான்
என் அப்பாவின் தோளில் அமர்ந்தபடி
ஊர்வலம் சென்றேன்.
அன்றைய ஊர்வலத்தில்
மகிழ்ச்சியும்
களிப்பும் நிரம்பி வழிந்தது

இன்று ....
குழந்தைகள்
தங்கள் புன்னகைகள் தொலைத்து
வெகு நாளாகிவிட்டன .
பூக்களை ஏந்திய  கரங்களில்
புல்லட்கள் ஊடுருவுகின்றன ...!

சாக்கடைகளுக்குள்
தஞ்சமடைகிறேன்.
உள்ளே
ஆயிரம் குழந்தைகளின் கண்கள்
மருட்சியோடு கண் சிமிட்டுகின்றன .

அந்த சாக்கடையில்
விழுந்த பந்தை எடுக்க
ஏசிய அம்மா
இறந்து வாரமாகி விட்டது.
இன்று சாக்கடைக்குள்
பந்துகளாக அடைந்து கிடக்கிறோம்.

யாருக்காக இந்த போர் ...?
ஒரு தேசத்தின்
எதிர்காலத்தையே
துள்ளத் துடிக்க அழித்த பிறகு
தேசம் எதற்கு..?.

என் கேள்விகளுக்கெல்லாம்
விடை அளித்த
அப்பாவும் அம்மாவும் இல்லை.

மேலே ஊர்வலத்தின் சப்தம் .
இன்றைய ஊர்வலத்தில்
மரணங்களும்
வியாகுலத்தின் ஓலங்களும்
வீதிகளை நிறைக்கின்றன....

ஊர்வலம் எப்போது ஓயுமென்று
தடதடக்கும் இதயத்துடன்
காத்திருக்கிறோம் நாங்கள்...!

Friday, September 30, 2016

நோயுற்ற நண்பனுடன் உரையாடுதல்...

நோயுற்ற நண்பனுடன் உரையாடுதல்...
========================================


நண்பனுடன்
எப்போதும் போல
பாசாங்குகளற்று
உரையாடுதல்,
அவன் நோயுற்றபின் ....
எளிதாக இருப்பதில்லை!

அவன் ,
தன் வலி மறக்கத்தான்
வீடு சென்று
உரையாடினேன்.
நடுவே
ஏதோ ஒரு நொடியில்
சட்டென்று
அவன் அமைதியாக ...
காரணம் தேடி
உணர்ந்தேன்..
அவன்
நோயின் மேல்
எனது ஒரு சொல்
குவிந்திருந்ததை....

நோயுற்ற
நண்பனுடன்
நேரில் உரையாடுவதை விட
சற்று தள்ளி
மண்டியிட்டு
அவனுக்காக பிரார்த்திப்பது
எளிதாக இருக்கிறது.

Wednesday, June 24, 2015

உலக சினிமா: வைல்ட் (WILD) ( அமெரிக்கா ) - ஆஸ்கார் திரைப்பட வரிசை-3


நன்றி விகடன். 
விகடனில் வெளியான பதிவு.




ஆண்களுக்கு உடலை வலிமையாக படைத்தக் கடவுள், பெண்களின் உடலையும் மனதையும் மென்மையாகப் படைத்து விட்டதாகக் கூறுவார்கள். எந்த ஒரு வலிமையான காரியத்தையும் ஆணின் அளவுக்கு பெண்ணால் முடிக்க முடியாது என்ற கருத்தே உலகம் முழுதும் முன்வைக்கப் படுகிறது. அந்த கருத்தை உடைக்கப் புறப்பட்ட ஒரு சாதனைப் பெண்ணின் உண்மை கதை தான் வைல்ட்திரைப்படத்தின் நாயகி ஷெரில் ஸ்ட்ரெய்ட் எந்த சாதனையையும் முறியடிக்கப் புறப்படவில்லை. யாருக்கும் போட்டியாக களமிறங்கவில்லை. அவளது வாழ்க்கையில் நடக்கும் துன்ப சம்பவங்கள் அவளது வாழ்கையை புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து மீள இயற்கையோடு அவள் கால் நடையாக ஆயிரம் மைல்கள் தன்னந்தனியாக நடந்து கடப்பது தான் கதை.

அமெரிக்காவின் தெற்க்கே மெக்ஸிகோ நாட்டின் எல்லையோரத்தில் ஆரம்பிக்கும் பசிபிக் க்ரெஸ்ட் ட்ரயல் (Pacific  Crest trail ) ஈராயிரம் மைல்கள் கடந்து கனடா எல்லையோரத்தில் இருக்கும் ஆஷ்லாந்து  என்ற இடத்தில் முடிகிறது.மலைகள், காடுகள், பாலைவனங்கள் , பனிமலைகள் என அனைத்தையும் கடந்து இலக்கை அடைவது, பயணத்தை ஆரம்பித்தவர்களில் ஐம்பது விழுக்கடுகளே.

ஒரு குன்றின் மீது அமர்ந்தபடி, ரத்தம் வழியும் காலுறையை கழட்டி பெயர்ந்து நிற்கும் தனது நகத்தை பிடுங்கி எறிவதில் துவங்குகிறது திரைப்படம். படத்தின் திரைக்கதையில், ஷெரிலின் கால் நடைப் பயணத்தினூடே அவளது முன்கதை சொல்லப்படுகிறது

அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளரும் ஷெரில், தன குடிகார அப்பாவின் கொடுமைக்கு ஆளாகும் அம்மாவைக் கண்டு அவள் மேல் மிகுதியாக பாசமும், தன்  தந்தையின் மேல் மிகுந்த துவேஷத்தையும் கொள்கிறாள். தனது தந்தை ஒரு நாள் இறந்தபின் மகிழும் ஷெரில்  அந்த நிகழ்வை கண்டு துக்கப் படும் தாயை கண்டு ஆச்சர்யம் அடைகிறாள்.

 'அவன் ஒரு குடிகாரன், அவனிடம் நீ அடி வாங்காத நாளே கிடையாது. அப்படியும் எப்படி உன்னால் அவனை வெறுக்க முடிவதில்லை?' 

அதற்க்கு அவள் தாய் பாபி இப்படி பதிலுரைக்கிறாள்.' அவன் குடிகாரனாக இருந்திருக்கலாம். என்னை அடித்து துன்புறுத்தி இருக்கலாம். என்றாலும். அவன் மூலமாகத்தான் உன்னையும் உன் தம்பியையும் கருவுற்றேன். அவன் இல்லையென்றால் நீங்கள் இல்லை. பின் எப்படி அவனை நான் வெறுக்க முடியும்?'. பெரும்பாலான தாய்மார்கள். எல்லா ஊரிலும் ஒரு மாதிரித்தான் இருப்பார்கள் போல.

அம்மாவின் மூளையில் கட்டி என்றும் அது புற்றுநோயாக மாறிவிட்டது என்றும் இன்னும் சிறிது காலம் தான் என்றும் மருத்துவர்கள் கைவிட, நொறுங்கிப் போகிறார்கள் ஷெரிலும்  அவளது தம்பி லியாமும். அம்மா சிறிது சிறிதாக சாவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு பின் ஒரு நாள் மொத்தமாக கண்களை மூடியபின்னர் ஷேரிலால் தான் இவ்வுலகிலேயே அதிகமாக நேசித்த தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிலிருந்து வெளிவர காமத்தையும் போதையையும் நாடுகிறாள். கட்டிய கணவன் இருக்க, அறிமுகம் இல்லாதவர்களிடம் எல்லாம் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள். ஹெராயின் என்ற போதை பழக்கத்துக்கு அடிமையாகும் ஷெரில், அதனை தன்னுடன் பகிர்ந்தவனோடு நிர்வாண நிலையில் இருக்கும்போது தனது கணவனால் மீட்கப் படுகிறாள்

இருவரும் மனமொத்து விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்கள். அந்த சமயத்தில், ஷெரில்  தான் கர்ப்பமாக இருப்பதாக அறிகிறாள். தனது தோழி அய்மியிடம் அந்த குழந்தைக்கு தகப்பன்  யாரென்று தெரியாது என பிதற்றுகிறாள். அவள் வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கும் வேளையில், தனது தாய் பாபி வளர்த்த பெண் தான் இல்லை என உணர்கிறாள். தான் தனது அம்மாவின் மகளாக மாற ஒரு முடிவு எடுக்கிறாள். அது தான் இயற்கையோடு இயைந்த அந்த சாகசக்  கால்நடை பயணம்


இதற்க்கு முன்பு ட்ரெக்கிங் என்ற அந்த கால் நடைப்பயணம் பற்றி எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாதவளாய், தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறாள். பயணம் ஆரம்பிக்கும் இடங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகமும் பேனாவும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் நடைபயணம் மேற்கொள்பவர்கள் குறிப்புகள் எழுதி வைத்து சென்றால் பின்னே வருபவர்கள், முன்னே செல்லும் பயணிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். புத்தகங்கள் படிப்பதில் விருப்பமுள்ள ஷெரில் , வழிநெடுகிலும் பயணம் துவங்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் எமிலி டிக்கேன்சன், ப்ரோஸ்ட் ஆகியோரின் பொன் மொழிகளை எழுதி வைத்து அடியில் அவர்கள் பெயர்களை எழுதி, 'மற்றும் ஷெரில் ' என்று தனது பெயரை எழுதி வைத்துப் புறப்படுகிறாள்

முன் அனுபவம் இன்மையால் ஆரம்பத்தில் சில சங்கடங்களை எதிர்கொள்ளும் அவள் பின்னர் அதற்க்கு பழகிக் கொள்கிறாள். வழி நெடுகிலும் தென்படும் ஆண்களிடம் சந்தேகம் கொண்டு விலகியே இருக்கிறாள். ஒவ்வொரு  ஒரு குறிப்பிட்ட மைல்களை கடந்த பின்பு ஒரு ஸ்டேஷன் வருகிறது.அவளுக்கு ஐமியும் அவளுடைய முன்னாள் கணவனும் அவள் மேற்க்கொள்ளபோகும் மீதி பயணத்துக்கான பொருள், பணம் காலனி ஆகியவற்றை அனுப்பி வைக்கிறார்கள். பாலை, மலை,பனி பொழிவுகளை கடந்து  பலதரப்பட்ட மனிதர்களை கடந்து இலக்கை அடைகிறாள் ஷெரில் .

ஷெரில் ஸ்ட்ரைட் - மற்றும் ரீஸ் விதர்ஸ்பூன் ...நிஜமும் நிழலும்.!

ஷெரிலாக  ரீஸ் விதர்ஸ்பூன் (Reese Witherspoon).படம் முழுக்க ஒவ்வொரு காட்சியும் அவரே வியாபித்து நிறைகிறார். படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதோடு அவரே படத்தை தயாரித்தும் இருக்கிறார். தாயின் மீது தான் கொண்டுள்ள அன்பு, அவளது இழப்பை தாங்கி கொள்ள முடியாமல் போதை மற்றும் காமத்தில் உழன்று உடைந்துபோவது, பயணத்திற்கு தேவையானவற்றை சுமந்து செல்ல முடியாமல் தடுமாறுவது பின் ஒவ்வொரு இலக்கை அடையும்போதும் பரவசம் அடைவது, மலர்களினூடே, தாயை பற்றி பாடும் சிறுவனின் பாடலைக் கேட்டு உடைந்து அழுவது என பிரமாதப் படுத்தியிருக்கிறார்.

நாமும் ஷெரிலுடன்  பயணம் செய்த உணர்வை நமக்கு கடத்துகிறது இவெஸ் பெலன்கரின் (Yves Bélanger ) ஒளிப்பதிவு. பாலை நிலங்களிலும் காடுகளிலும் மழையிலும் மலையிலும் காமிரா அதகளம் செய்திருக்கிறது. படத்தின் தன்மைக்கேற்ப ஊடாடுகிறது துருத்தி தெரியாத இசை.

ரீஸ் விதர்ஸ்பூனுக்கு  சிறந்த நடிகை என்ற பிரிவில் ரீசின் தாயாக நடித்த லாரா டெர்ன் (Laura Dern )க்கு சிறந்த துணை நடிகைக்காகவும்ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது

படத்தில் சிற்சில வயது வந்தோருக்கான காட்சிகள் இருப்பதால், குழந்தைகளை தவிர்த்துவிட்டு இத்திரைப்படத்தை பாருங்கள். நீங்களே ட்ரெக்கிங் சென்று வந்த அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது.

வைல்ட் - வியப்பு. 


Friday, June 19, 2015

கவிதை: வாசனை.

செய்தி: மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது இரும்பு கம்பி கழன்று விழுந்து பைக்கில் சென்றவர் பலி


வாசனை.
---------------
தலைக்கவசம் தாண்டி

தெறித்த

ரத்தத் துளிகள்,

அந்தக் கண நேரத்தில் ..

அவனுக்கு ஞாபகப்படுத்தின,

பனித்துளிகள் சிதறிய

முன்னிரவின் தனிமையில்,

சிறகுகள் விரித்த காற்றுப் பறவையினிடையே,

கர்ப்பிணி மனைவியின்

வயிற்றில் காது வைத்து

கேட்கப்பட்ட

சிசுவின் ஒலியில்,

அவள் புன்னகையின்

வெளிச்சச் சூட்டில்

முகத்தில் கோடிட்ட

வியர்வைத் துளியின் வாசனையை ...!

Friday, May 15, 2015

உலக சினிமா: Boyhood ( அமெரிக்கா ) ஆஸ்கார் திரைப்பட வரிசை 2.



இப்பதிவை வெளியிட்ட விகடனுக்கு நன்றி.

மனித மனங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை  அருகே இருந்து கவனிக்க ஆசைப்படும். அடுத்தவன் வீட்டில் ஏதாவது நடந்தால் எட்டிப் பார்க்கும் குழு மனநிலை நம் சமூகத்துக்கு ஏற்பட்டது இப்படித்தான்.

இதே மனநிலை பற்றி 'The Truman story' போன்ற பல  திரைப்படங்கள் வந்திருந்தாலும் boyhood  போல ஒரு முயற்சி இதுவரை உலக திரைப்பட வரலாற்றில் நடந்ததில்லை. ஒரு மனிதனின் ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரையிலான வாழ்கையை சொல்கிறது இத்திரைப்படம். இதிலென்ன புதுமை? இத்திரைப்படம் பனிரெண்டு வருடங்களாக அதே நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அந்தந்த வருடத்துக்கு ஏற்றவாறு அந்ததந்த நடிகர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அந்த வருடத்தின் கால மாற்றங்களுக்கேற்ப படமாக்கப்பட்டிருக்கிறது படம்.

மேசன் என்கிற ஆறு வயது சிறுவனின் ஊடாக சொல்லப்படுகிறது ஒரு பனிரெண்டு வருட வாழ்க்கை. மேசனின் பெற்றோர் பிரிந்துவிட தனது தாய் மற்றும் தனது சகோதரி சமந்தாவுடன்  ஒரு நடுத்தர வாழ்கையை வாழ்ந்து வருகிறான். பெற்றோர் பிரிந்துவிட்டதால், கோர்ட் விதிமுறைகளின்படி அவர்களது தந்தை அவ்வப்போது வந்து மேசனையும் சமந்தாவையும் அழைத்து கொண்டு வெளியில் செல்வது வாடிக்கையானது. அவர்களது தாய்க்கு திருமணங்கள்  நிலைப்பதில்லை.

அவர்களை, அவர்களது தாயின் தாய் அதாவது பாட்டி, தான் இருக்கும் டெக்சாசில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு அழைத்துக்  கொள்கிறாள். அதுவரை தாங்கள் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, நண்பர்கள் அனைவரையும் சோகத்துடன்  பிரிந்து செல்கிறார்கள் மேசனும் சமந்தாவும். அங்கே மேலே படிக்கும் மேசனின் தாய் தனக்கு பாடம் சொல்லித்தரும் பேராசிரியருடன் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ள. அவரின் மகள் மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் வாழத் துவங்குகிறார்கள் மேசனும் சமந்தாவும். எனினும் புதிதாகக் கிடைத்த சகோதர சகோதரியுடன் நட்பு பாராட்ட, குடிக்கு அடிமையான பேராசிரியரோ அவர்களிடம் ஒரு அதிகாரத் தோரணையுடன் நடந்து கொள்கிறார். ஒரு நாள் அவர்களது தாயை  தாக்கிவிட, அவ்விடம் இருந்து மேசனும் சமந்தாவும் தங்களது புதிய தந்தை, சகோதர சகோதரியை விட்டு பிரிந்து வேறிடத்துக்கு  குடி பெயருகிறார்கள்.

அவ்வப்போது வந்து சந்திக்கும் தந்தை அவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கிறார். அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார், பின்னே அவரும் வேறொரு பெண்ணை மணம் புரிந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார். அவர்களது அம்மா மீண்டும் ஒரு முன்னாள் ராணுவ வீரனை மணந்து கொள்ள, அதிலும் கசந்து வெளியேறுகிறாள். மேசனும் சமந்தாவும்  பதின்ம வயதில் பள்ளி மேற்படிப்பு முடித்து கல்லூரியில் சேருவதோடு  முடிகிறது படம்.

ஒரு அமெரிக்க வாழ்கையை தத்ரூபமாக கண் முன்னே நிறுத்துகிறது படம். நடிக்கும் கதாபாத்திரங்களின் வளர்ச்சி குறிப்பாக மேசன் மற்றும் சமந்தா  சிறுவயதில் இருந்து பதின்ம வயது வரை தோற்ற மாற்றங்கள் எந்த விதமான பூச்சும் இன்றி இயல்பாக கடந்து ஒரு உண்மையான வாழ்கையை திரையில் காணும் பிரம்மிப்பை உண்டு செய்கிறது. அமெரிக்க குழந்தைகள் கடந்து செல்லும் பிரச்சனைகளை இயல்பாக கவலையோடு உரையாடுகிறது படம். தாயின் திருமண தோல்விகள், அடிக்கடி இருப்பிடம் மாறுவதால் தொடர்பிழக்கும் நட்பு வட்டம், பிள்ளைகளின் மீதான பெற்றோரின் வன்முறை, பள்ளியில் சக மாணவர்களால் ஏற்படும் BULLYING  எனப்படும் ராகிங், காதல் தோல்விகள் என இங்கு குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை சொல்லி செல்லும் அதே வேளையில். மேசன், சமந்தாவின் தந்தை , மேசனின் ஆசிரியர் போன்றோரின் மூலம் அவர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கத்  தவறவில்லை.

காலத்தே  மாறும் செல் பேசி மாடல்கள், இராக் போர், ஹாரி பாட்டர் திரைப்பட வெளியீடு தினம்,ஒபாமா, மெக்கெய்ன்  போட்டியிட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் என கதை நடக்கும் காலத்தை குறிப்பிட்டு செல்லும் காட்சிகளின் குறியீடுகள் படம் நெடுக விரவிக் கிடக்கின்றன.
ரிச்சர்ட் லின்க்லேட்டார். தன மகள் லோரேலி லின்க்லேட்டர்  மற்றும் படத்தின் நாயகன் எல்லார் கோல்ட்ரேன்.

இயக்குனர், ரிச்சர்ட் லின்க்லேட்டர் (Richard Linklater ). இந்த படத்துக்காக ஒவ்வொரு வருடத்துக்குமாக சேர்த்து பனிரெண்டு திரைக்கதைகளை எழுதியதாக சொல்கிறார். படத்தின் வரைவை (outline ) முதலில் தீர்மானித்துவிட்டு பின்பு காலத்துக்கேற்றபடி திரைக்கதை அமைத்து அந்த வருடத்தைய சிறப்புகளை திரைக்கதையில் சேர்த்திருக்கிறார். தனது மகள் லோரேலி லின்க்லேட்டர் சிறுவயதில் செய்த சேட்டைகளை கண்டு, அவளையே படத்தில் மேசனின் சகோதரி சமந்தாவாக நடிக்க வைத்திருக்கிறார். மேசனாக செய்திருப்பவர் எல்லார் கோல்ட்ரேன் (Ellar Coltrane) படத்துக்காக தனது வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியாமல், முடி வெட்டுதலை கூட இயக்குனரின் அனுமதி பெற்றபின் தான் செய்ததாக புலம்பி இருக்கிறார்.

படத்தின் ஜீவன், மேசனின் தாயாக நடித்திருக்கும் பெற்றிசியா ஆர்க்வெட் (Patricia Arquette). தனது திருமணங்கள் தோல்வியில் முடியும் வேளையில்  மனம் ஓடிவதும், அதனால் தனது பிள்ளைகள் பாதிக்கபடுவதை கண்டு மனம் வெதும்புவதும்,   அனைவரும் தன்னை தனியே விட்டு விட்டு பிரிந்து செல்லும்போது உடைந்து அழுவதுமாக அதகளப் படுத்தி இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கான ஆஸ்கார் விருது மற்றும் கோல்டன் க்ளோப்  விருது என கை நிறைய விருதுகளை சம்பாதித்து கொடுத்தது இந்த கதாபாத்திரம்.

படத்தின் ஆன்மா இசை. கதை நடக்கும் ஒவ்வொரு காலகட்டத்தையும் உணர்த்துவதற்காக அந்ததந்த காலங்களை பிரதிபலிக்கிறது இசை. படமாக்குவதற்கு டிஜிட்டல் உட்பட பல்வேறு கருவிகள் வந்துவிட்ட போதிலும், கதை நடக்கும் காலங்களுக்கிடையே ஆன  தொடர்பு காட்சிகள் (continuity ) அறுபட்டு விடக் கூடாது என்பதற்காக 35 எம் எம் பிலிம் சுருளில் முழு படத்தையும் எடுத்ததாக கூறுகிறார் இயக்குனர் லின்க்லேட்டார்.

பாய்ஹூட் -வாழ்க்கை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...