நன்றி விகடன்.
விகடனில் வெளியான பதிவு.
அமெரிக்காவின் தெற்க்கே மெக்ஸிகோ நாட்டின் எல்லையோரத்தில் ஆரம்பிக்கும் பசிபிக் க்ரெஸ்ட் ட்ரயல் (Pacific Crest trail ) ஈராயிரம் மைல்கள் கடந்து கனடா எல்லையோரத்தில் இருக்கும் ஆஷ்லாந்து என்ற இடத்தில் முடிகிறது.மலைகள், காடுகள், பாலைவனங்கள் , பனிமலைகள் என அனைத்தையும் கடந்து இலக்கை அடைவது, பயணத்தை ஆரம்பித்தவர்களில் ஐம்பது விழுக்கடுகளே.
ஒரு குன்றின் மீது அமர்ந்தபடி, ரத்தம் வழியும் காலுறையை கழட்டி பெயர்ந்து நிற்கும் தனது நகத்தை பிடுங்கி எறிவதில் துவங்குகிறது திரைப்படம். படத்தின் திரைக்கதையில், ஷெரிலின் கால் நடைப் பயணத்தினூடே அவளது முன்கதை சொல்லப்படுகிறது.
அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளரும் ஷெரில், தன குடிகார அப்பாவின் கொடுமைக்கு ஆளாகும் அம்மாவைக் கண்டு அவள் மேல் மிகுதியாக பாசமும், தன் தந்தையின் மேல் மிகுந்த துவேஷத்தையும் கொள்கிறாள். தனது தந்தை ஒரு நாள் இறந்தபின் மகிழும் ஷெரில் அந்த நிகழ்வை கண்டு துக்கப் படும் தாயை கண்டு ஆச்சர்யம் அடைகிறாள்.
'அவன் ஒரு குடிகாரன், அவனிடம் நீ அடி வாங்காத நாளே கிடையாது. அப்படியும் எப்படி உன்னால் அவனை வெறுக்க முடிவதில்லை?'
அதற்க்கு அவள் தாய் பாபி இப்படி பதிலுரைக்கிறாள்.' அவன் குடிகாரனாக இருந்திருக்கலாம். என்னை அடித்து துன்புறுத்தி இருக்கலாம். என்றாலும். அவன் மூலமாகத்தான் உன்னையும் உன் தம்பியையும் கருவுற்றேன். அவன் இல்லையென்றால் நீங்கள் இல்லை. பின் எப்படி அவனை நான் வெறுக்க முடியும்?'. பெரும்பாலான தாய்மார்கள். எல்லா ஊரிலும் ஒரு மாதிரித்தான் இருப்பார்கள் போல.
அம்மாவின் மூளையில் கட்டி என்றும் அது புற்றுநோயாக மாறிவிட்டது என்றும் இன்னும் சிறிது காலம் தான் என்றும் மருத்துவர்கள் கைவிட, நொறுங்கிப் போகிறார்கள் ஷெரிலும் அவளது தம்பி லியாமும். அம்மா சிறிது சிறிதாக சாவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு பின் ஒரு நாள் மொத்தமாக கண்களை மூடியபின்னர் ஷேரிலால் தான் இவ்வுலகிலேயே அதிகமாக நேசித்த தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிலிருந்து வெளிவர காமத்தையும் போதையையும் நாடுகிறாள். கட்டிய கணவன் இருக்க, அறிமுகம் இல்லாதவர்களிடம் எல்லாம் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள். ஹெராயின் என்ற போதை பழக்கத்துக்கு அடிமையாகும் ஷெரில், அதனை தன்னுடன் பகிர்ந்தவனோடு நிர்வாண நிலையில் இருக்கும்போது தனது கணவனால் மீட்கப் படுகிறாள்.
இருவரும் மனமொத்து விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்கள். அந்த சமயத்தில், ஷெரில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிகிறாள். தனது தோழி அய்மியிடம் அந்த குழந்தைக்கு தகப்பன் யாரென்று தெரியாது என பிதற்றுகிறாள். அவள் வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கும் வேளையில், தனது தாய் பாபி வளர்த்த பெண் தான் இல்லை என உணர்கிறாள். தான் தனது அம்மாவின் மகளாக மாற ஒரு முடிவு எடுக்கிறாள். அது தான் இயற்கையோடு இயைந்த அந்த சாகசக் கால்நடை பயணம்.
இதற்க்கு முன்பு ட்ரெக்கிங் என்ற அந்த கால் நடைப்பயணம் பற்றி எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாதவளாய், தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறாள். பயணம் ஆரம்பிக்கும் இடங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகமும் பேனாவும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் நடைபயணம் மேற்கொள்பவர்கள் குறிப்புகள் எழுதி வைத்து சென்றால் பின்னே வருபவர்கள், முன்னே செல்லும் பயணிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். புத்தகங்கள் படிப்பதில் விருப்பமுள்ள ஷெரில் , வழிநெடுகிலும் பயணம் துவங்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் எமிலி டிக்கேன்சன், ப்ரோஸ்ட் ஆகியோரின் பொன் மொழிகளை எழுதி வைத்து அடியில் அவர்கள் பெயர்களை எழுதி, 'மற்றும் ஷெரில் ' என்று தனது பெயரை எழுதி வைத்துப் புறப்படுகிறாள்.
முன் அனுபவம் இன்மையால் ஆரம்பத்தில் சில சங்கடங்களை எதிர்கொள்ளும் அவள் பின்னர் அதற்க்கு பழகிக் கொள்கிறாள். வழி நெடுகிலும் தென்படும் ஆண்களிடம் சந்தேகம் கொண்டு விலகியே இருக்கிறாள். ஒவ்வொரு ஒரு குறிப்பிட்ட மைல்களை கடந்த பின்பு ஒரு ஸ்டேஷன் வருகிறது.அவளுக்கு ஐமியும் அவளுடைய முன்னாள் கணவனும் அவள் மேற்க்கொள்ளபோகும் மீதி பயணத்துக்கான பொருள், பணம் காலனி ஆகியவற்றை அனுப்பி வைக்கிறார்கள். பாலை, மலை,பனி பொழிவுகளை கடந்து பலதரப்பட்ட மனிதர்களை கடந்து இலக்கை அடைகிறாள் ஷெரில் .
ஷெரில் ஸ்ட்ரைட் - மற்றும் ரீஸ் விதர்ஸ்பூன் ...நிஜமும் நிழலும்.!
ஷெரிலாக ரீஸ் விதர்ஸ்பூன் (Reese Witherspoon).படம் முழுக்க ஒவ்வொரு காட்சியும் அவரே வியாபித்து நிறைகிறார். படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதோடு அவரே படத்தை தயாரித்தும் இருக்கிறார். தாயின் மீது தான் கொண்டுள்ள அன்பு, அவளது இழப்பை தாங்கி கொள்ள முடியாமல் போதை மற்றும் காமத்தில் உழன்று உடைந்துபோவது, பயணத்திற்கு தேவையானவற்றை சுமந்து செல்ல முடியாமல் தடுமாறுவது பின் ஒவ்வொரு இலக்கை அடையும்போதும் பரவசம் அடைவது, மலர்களினூடே, தாயை பற்றி பாடும் சிறுவனின் பாடலைக் கேட்டு உடைந்து அழுவது என பிரமாதப் படுத்தியிருக்கிறார்.
நாமும் ஷெரிலுடன் பயணம் செய்த உணர்வை நமக்கு கடத்துகிறது இவெஸ் பெலன்கரின் (Yves Bélanger ) ஒளிப்பதிவு. பாலை நிலங்களிலும் காடுகளிலும் மழையிலும் மலையிலும் காமிரா அதகளம் செய்திருக்கிறது. படத்தின் தன்மைக்கேற்ப ஊடாடுகிறது துருத்தி தெரியாத இசை.
ரீஸ் விதர்ஸ்பூனுக்கு சிறந்த நடிகை என்ற பிரிவில் ரீசின் தாயாக நடித்த லாரா டெர்ன் (Laura Dern )க்கு சிறந்த துணை நடிகைக்காகவும். ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
படத்தில் சிற்சில வயது வந்தோருக்கான காட்சிகள் இருப்பதால், குழந்தைகளை தவிர்த்துவிட்டு இத்திரைப்படத்தை பாருங்கள். நீங்களே ட்ரெக்கிங் சென்று வந்த அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது.
வைல்ட் - வியப்பு.
No comments:
Post a Comment