Wednesday, July 21, 2010
ஒரு இந்தியப் பயணம் - 5
இம்முறை இந்தியா செல்லும் வேளையில் எனது இரண்டு நண்பர்களின் பெற்றோரை கண்டு வருவது என தீர்மானமிட்டிருந்தேன். அவர்களை என் சிறுவயது முதலே நான் அறிவேன் என்பதாலும், அவர்களின் ஆசிகளுடனே தான் நான் வளர்ந்தேன் என்பதாலும் தான்.
தி நகரிலுள்ள அந்த பிரமாண்ட பங்களாவில் எங்களது கால் டாக்சி நுழைந்தபோது அந்த வீட்டின் இறுக்கமும் பொலிவிழந்த சூழலும் என் மனதில் சுருக்கென தைத்தது. எனது நண்பன்.. அவர்களுக்கு ஒரே மகன்.அவன் கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கனடாவிற்கு வருகை தந்து அங்குள்ள சி என் டவர், நயாகாரா நீர்வீழ்ச்சி என பல கண்டு புகைப்படங்கள் கொண்டு சென்றனர் அவனது பெற்றோர். வருவோர் போவோரிடமெல்லாம், தன் மகன் கனடாவில் பெரிய வேலையில் இருப்பதாக கர்வத்தோடு சொல்லிகொள்ளும் அவர்கள் வீட்டுக்கு வருகை புரிவோர் அனைவரிடமும் தங்களது கனடா விஜயத்தை பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததில்லை. ' ஊருன்னா அது கனடா தான்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாம் அவனது அப்பா மொத்தமாக படுக்கையில் விழும் வரை தான். அதற்க்கப்புறம், அவர்கள் வெளியே செல்வது குறைந்து போயிற்று. ஆம் அவருக்கு போன் கான்சர். அதுவும் முதுகு தண்டு வடத்தில் வந்ததால் அவரால எழுந்து நிற்க முடியாது.
அவர்களை நான் சந்தித்தபோது அவர் படுக்கையில் இருந்தவாறே 'வாப்பா' என்றதும் என் கண்களில் நீர் முட்டிக் கொண்டது. அஜான பாகுவான அந்த மனிதர் பாதியாக இளைத்துப் போயிருந்தார். அவரால் எழுந்து அமரக் கூட முடியாத நிலை. அந்த அம்மா தலை நிறையப் பூவுடனும்.. நெற்றி நிறைய குங்குமத்துடனும் மங்களகரமாக ஒரு மகாலட்சுமியை போல் இருந்தார். என் மனைவிக்கும் தொடுத்த பூ அணிவித்து ஆதுரத்துடன் தழுவிக் கொண்டார். எங்களது வருகை அவரது முகத்தில் புன்னகையை வரவழைத்தாலும் அதன் பின்னே உள்ள சோகம் என் உள்ளத்தை கவ்வியது.
'அருண் கனடாவில இருந்து போன் பண்ணாம்பா. அவனுக்கு இந்த வருஷமும் லீவு கெடைக்கலயாம். அடுத்த வருஷம் முயற்சி பண்றேன்னு சொல்லிருக்கான்' என்று அந்த அம்மா சொன்னபோது. அருண் கனடாவில் வேலைபார்க்கிறான் என்ற கர்வம் காணவில்லை.
அப்பா பேசினார்.
' அவன் கிட்ட கொஞ்சம் அட்வைஸ் பண்ணி, அப்பாவ வந்து பாத்துட்டு போக சொல்றியாப்பா?..இன்னும் எவ்வளவு நாள் னு தெரியல...ராவானா வலி உயிர் போறது. நான் வலி தாங்க முடியாம கத்தற கத்துல.. இவளுக்கும் தூக்கம் கேடறது. அவளுக்கும் வயசாயடுத்து. என்னப்பா பண்றது... பகவான் இப்படி ஒன்னை கொடுத்துட்டான். என்னமோ கருணை கொலை அப்டி இப்டின்னு எல்லாம் சொல்றாளே... அதை எதாச்சும் ஒன்னு பண்ணிடப்படாதா? பிராணன் போனா எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும். இழுத்துட்டே இருக்குப்பா டாக்டரும் எப்போ நான் சாவேன்னு சொல்ல மாட்டேன்கறான்.'
அவர் முகத்திலும், பேச்சிலும் வலியின் வேதனை உரைத்தது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தொண்டையில் இருந்து வார்த்தை வரவில்லை. அம்மா வாயில் முந்தானையை வைத்து அழுத்தியவாறு அடுப்பங்கரை செல்ல என் மனைவி அவர் பின்னாடியே சென்றாள். அவள் முகத்தில் கண்ணீரை என்னால் காண முடிந்தது.
என் மகனின் முகம் நோக்கி பழிப்பு காட்ட அவன் சிரிக்க அவரும் சிரிக்க ஆரம்பித்தார்.
'எவ்ளோ வயசு பையனுக்கு.'
'ரெண்டுப்பா..'
'அருண் பையனுக்கு வயசு நாலு. அவளுக்கு டெலிவரி அப்போ ஒத்தாசைக்கு வேணும்னு எங்களை வர சொல்லிருந்தான். கனடா எல்லாம் நல்லா சுத்தி பாத்தோம். அப்போ என் பையன் கனடால இருக்கான் அப்டின்னு சொல்லிக்கறதுக்கு பெருமையா இருந்திச்சி. ஆனா இப்போ.. முடியாத நேரத்துல அவன் பக்கத்துல இருந்தான்னா.. யானை பலம் இருக்கும்.... வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து.... அது பொய் இல்லைப்பா.. சத்தியமான உண்மை. நான் எல்லாம் அரசாங்க உத்தியோகத்துல ஒரு சாதாரண கிளார்க்கா வேலை பாத்தப்போ நெனச்சி பாத்தேனா கனடா எல்லாம் போவேன்னு? அருணுக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல கனடா போகணும்னு. நான் தான் பையன் கனடா போனா எனக்கும் மதிப்பு அவனுக்கும் நல்லதுன்னு கடன் வாங்கி அனுப்பி வச்சேன். எதோ ரெண்டு மூணு வருஷம் சம்பாதிச்சிட்டு வரட்டும் னு. அங்க உள்ள கிரீன் கார்டு சிடிசன் இது பத்தி எல்லாம் எனக்கு அப்போ தெரியாம போச்சி'
'அமெரிக்கா கனடா எல்லாம் மலை பாம்பு மாதிரி. உள்ள வரவங்கள அப்டியே விழுங்கிக்கும் வெளியே துப்பாது. உனக்கு என்ன உங்க அப்பா அம்மா சீக்கிரம் போய்ட்டாங்க. நாலு பசங்க வேற. ஒருத்தர் இல்லாட்டி இன்னொருத்தர் வீட்டில இருந்திருப்பாங்க. நான் ஒண்ணே ஒண்ணு தான் பெத்து வச்சிருக்கேன். அதுவும் இப்போ கூட இல்ல. பேரக் கொழந்தைகளை கொஞ்சனும்னு ஆசையா இருக்கு. வேப்காம்ல தாம்பா பாத்து கொஞ்சிக்கறேன். அவளை கம்ப்யூட்டர் மானிட்டர பக்கத்துல தரவச்சி முத்தம் குடுக்கறேன். எல்லாம் இயந்திரம். ரத்தம் சதை எல்லாம் போச்சி. இதோ பாரு.. எலும்பு ஒவ்வொன்னா ஒடஞ்சிட்டே வருது...இப்போவாச்சும் என்ன தூக்கி உக்கார வச்சி வெளிய போக வைக்கறா. இன்னும் எலும்பு ஒடஞ்சிடுத்துன்னா அதுவும் முடியாது. என்ன பண்ண போறாளோ...?'
'நான் அருண் கிட்ட பேசறேன்ம்பா...'
'எல்லாம் சொல்லியாச்சி அங்க இருந்தா தான் எனக்கு த்ரீத்மேன்ட்க்கு பணம் அனுப்ப முடியும்னு சொல்றான். பணம் எதுக்குடா.. நீ வரதுக்குள்ள நான் பொணம் ஆகாம வேண்டிக்கோ னு சொன்னேன். ரெண்டு வாரம் என் கிட்ட பேசலை. இவ தான் தனியா தவிச்சி போய்ட்டா... எனக்காக ஒன்னு பண்ணுப்பா..'.
'சொல்லுங்கப்பா.. என்ன பண்ணனும்....'
'கடவுள்ட்ட வேண்டிக்கோ...சீக்கிரம் நா செத்து போய்டனும்னு வேண்டிக்கோ...'
'ச்சே ச்சே அப்டி எல்லாம் நீங்க சொல்லக் கூடாது....' அவர் கண்களை மூடிக் கொண்டார். அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு எனது அடுத்த நண்பனின் இல்லம் செல்லும்போது நானும் என் மனைவியும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்கும் இதயம் கனத்திருந்தது.
எனது அடுத்த நண்பனின் இல்லம் வியாசர்பாடியில் இருந்தது. அவர்கள் வீட்டில் ஐந்து பையன்கள். ஐவருமே மொத்தமாக ஒரு ஏக்கர் நிலம் வாங்கி பாகம் பிரித்து வீடு கட்டி இருந்தார்கள். அம்மா சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். அவர்களை வளர்த்தது அவர்களது தந்தையும் பாட்டியும் தான். அந்த மனிதனை நான் கண்டபோது அவர் பளிச்சென்று கோல்ட் பிரேம் கண்ணாடியில் சிரித்தார்.
'நீ சற்குணம் தானே...?'
'இல்லப்பா...' என நான் என்னை அறிமுகப்படுத்தி கொண்டபோது.. அவர் ஞாபகம் வந்தது போல சிரித்தார்.
'ஒ ரொம்ப நாளாச்சிப்பா பாத்து '
ஆனால் நான் அந்த வீட்டை விட்டு கிளம்பு வரையில் ஒவ்வொரு பெயரை சொல்லி சொல்லி நீ அவன்தானே என கேட்டார். அவருக்கு ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாய் தப்பி கொண்டிருக்கிறது. ஆனால் அவர் மிக மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், அவர் தனது ஐந்து மகன்களுடன் ஒன்றாக குடி இருக்கிறார்.
'ஒரு குறைவும் கெடயாது தம்பி. இந்த வீட்டுல போர் அடிச்சா அந்த வீட்டுக்கு போய்டுவேன். அங்க போர் அடிச்ச அடுத்த வீடு. ஏன்னா ஸ்வீட் தான் தரமட்டேன்கறாங்க. சுகர் சுகர் னு சொல்றாங்க. வந்தா என்ன. நா இருந்து என்னத்த சாதிக்க போறேன். அதனால, நைசா பேரப் பிள்ளைங்க கிட்ட இருந்து திருடி சாப்டுருவேன். ஆனா எரும மாடுக பொய் அவங்க அப்பா அம்மா கிட்ட வத்தி வச்சிறுதுக.'
உண்மை தான். அவர்கள் வீட்டில் ஐந்து குடும்பமும் சேர்ந்து கிட்டத்தட்ட இருபது பேர் மொத்தமாக வட்டமாக தரையில் அமர்ந்து உண்டோம். கல கல என இருந்தது. வீட்டை விட்டு கிளம்பும்போது மொத்தமாக அனைவரும் வந்து வழியனுப்பினார்கள்.
மறுநாள் காலையில் நான் கிங் பிஷேர் ஏர்லைன்சில், இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே உள்ள முரண்களை நினைத்தபடியே கோவை சென்று சேர்ந்தேன்.
என்னை வளர்த்து ஆளாக்கின என் பெற்றோருக்கு மானசீகமாக நன்றி நவின்றேன்.
(பயணம் தொடரும்...)
--
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பதிவு அருமை......வாழ்த்துகள்
நன்றி குரு.
This is the fact.:(
நல்ல பதிவு.இதில் உள்ள நிதர்சனம் சுடுகிறது. உண்மை கசப்பதில் ஆச்சரியம் இல்லை.ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெறமுடியும், இரண்டும் வேண்டும் என்று அடம் பிடிப்பது குழந்தைத்தனம். நம்மில் பலர் வயதாகியும் (அல்லத் வயதானதாலா?)குழந்தைகளாவே இருக்கிறோம்.
Post a Comment