Thursday, February 23, 2012

திரைப்படம்: ப்ரணயம் (மலையாளம்) - எல்லைகள் தொலைத்த காதல்..


நான் ஆராதிக்கும் இந்திய திரைப்பட இயக்குனர்களில் மலையாள இயக்குனர் ப்ளேசிக்கு தனி இடம் உண்டு. அவரது இயக்கத்தில் வெளி வந்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து புல்லரித்து போனவன் என்ற முறையில் சமீபத்தில் வந்த பரணயம் என்ற மலையாள படத்தை கண்ட என்னை இம்முறையும் என்னை அவர் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு திரைப்படத்திலும் அழுத்தமாக தனது முத்திரையை பதித்து பார்வையாளனது சிந்தனையில் தனது திரைப்படத்தின் ஓட்டம், குறைந்தது ஒரு மூன்று நாளாக தங்கிவிடும்படி செய்துவிடுவார்.

அவரது திரைப்படங்களான 'காழ்ச்சா','தன்மாத்ரா','பலுங்கு','ப்ரம்மரம்' என ஒவ்வொன்றும் வேறு வேறு கதைகளை வேறு வேறு களத்தில் சொல்லின. இது வரை காதலின் பக்கம் செல்லாமல் இருந்த ப்ளேசி 'ப்ரணயம்' மூலம் யாரும் இதுவரை தொட்டுவிடாத காதலை சொல்லுகிறார்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மருமகள் மற்றும் பேத்தியுடன் வசிக்கிறார் பணி ஓய்வு பெற்ற அச்சுத மேனன். அவரது மகன் சுரேஷ், ஷார்ஜாவில் வேலை செய்து பணம் அனுப்பி வருகிறான்.அவ்வப்போது கேரளா வந்தும் செல்கிறான். ஒரு நாள் தனது அடுக்கு மாடி குடி இருப்பில் லிப்டில் இறங்கும் அச்சுத மேனன், கிரேசி என்ற அந்த வயதான பெண்ணை பார்த்ததும், உதடுகள் துடிக்க கண்கள் பட படக்க நெஞ்சை பிடித்து கொண்டு லிப்டிலேயே மயங்கி விழுந்து விட, கிரேசி அவரை தனது மடியில் கிடத்தியபடி, 'அச்சு அச்சு' என கதறியபடி உதவிக்கு அழைக்கிறாள்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் அவரது பெயர் வயது எல்லாவற்றையும் தானே சொல்ல, அச்சுத மேனோனின் குடும்பத்துக்கு சந்தேகம் வலுக்க, தான் அச்சுத மேனனின் முன்னாள் மனைவி என்றும் தாங்கள் சுரேஷ் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டதாகவும் கூறுகிறாள். அதன் பின்னர் அவள் ஒரு தத்துவ பேராசிரியரான மாதியூசை மணந்து அவளுக்கு ஒரு பெண் பிறக்க, மணமாகி குழந்தையுடன் அந்த குடியிருப்பில் வசிக்கும் அவளது பெண் வீட்டுக்கு தான் புதிதாக குடி வந்திருக்கிறார்கள் கிரேசும் மாத்யூசும்.

மாத்யூஸ்  பராலிடிக் அட்டாக் வந்து செயல்படாத கால்களும் ஒரு கையும் உடையவன். அவனை குளிக்கவைப்பது முதல் அவனுக்கு எல்லாம் செய்வது கிரேஸ் தான்.  கிரேஸின்  பழங்கதை முழுக்க அறிந்த மாத்யூஸ் அவளை புரிந்து கொண்ட கணவனாக அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான். உடல் நலமடைந்து அச்சுத மேனன் வீடு திரும்ப, அச்சுத மேனன், கிரேஸ் மற்றும் மாத்யூசுக்கு இடையே ஒரு கள்ளமில்லாத நட்பு வளையம் உருவாக, ஒருவர் பால் ஒருவர் அன்பாக ஊர்வலம் வர, இவர்களது உறவை காமத்துடன் தொடர்பு படுத்தி கொச்சை படுத்துகிறது இவர்களது வாரிசுகள்.

கொஞ்சம் கொஞ்சமாக கிரேஸ் மற்றும் அச்சுத மேனன் எதற்கு விவாகரத்து செய்தார்கள், மாத்யூஸ் கிரேசை எப்படி மணக்க நேர்ந்தது என ஒவ்வொரு முடிச்சாக அவிழ,  இவர்களின் மூவரின் நட்பும் விரிவடைய, தங்களது வாரிசுகளுக்கு தெரியாமல் ஒரு சாலைப் பயணம் கிளம்புகிறார்கள் மூவரும்.
அதை தொடர்ந்து வருகிறது கனக்க வைக்கும் கிளைமாக்ஸ். 

அச்சுத மேனனாக இந்தி நடிகர் அனுபெம் கெர், கிரேசாக ஜெயப்ரதா. அனுபம் கெர் பின்னணி குரல் உறுத்துகிறது. மற்றபடி இயல்பான நடிப்பு. ஜெயப்ரதா, படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை அழுதபடியே வருகிறார். மோகன் லால், சக்கர நாற்காலியில் இருந்த படி, போலியோ அட்டாக் ஆன ஒரு நோயாளியின் உடல்மொழியையும், திணறிய படி பேசும் வாய் மொழியும் என நடிப்பில் கொடி நாட்டுகிறார். இவருக்கும் ஜெயப்ரதாவுக்கும் இருக்கும் அந்த கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்னியோன்யம் பார்ப்பவர்களை பொறாமைப் பட வைக்கும்.

சதீஷ் குருப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் மின்னுகின்றன. எம் ஜி ஜெயச்சந்திரனின் இசை அருமை.  விஜய் யேசுதாஸ் மற்றும் ஸ்ரேயா கோஷாலின் குரலில்  அந்த மழைப்பாடலான 'மழைத்துளி பளுங்குகள்' கண்ணுக்கும் காதுக்கும் குளுமை, இனிமை. ஒரு வித ரெட்ரோ உணர்வுடன் எண்பதுகளுக்கே நம்மை கூட்டி செல்கிறது.




படத்தில் சில குறைகளும் உண்டு. சில செண்டிமெண்ட் காட்சிகள் அதிகபடியாக உள்ளது. அந்த மூவர் செல்லும் சாலை பயணத்தில் வரும் அந்த கிளப் பாடல் காட்சி, படத்துடன் ஒட்டாமல் உறுத்துகிறது.

ப்ளேசி என்னும் சிறந்த கதை சொல்லியின் இயக்கத்துக்காக கண்டிப்பாக இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.

ப்ரணயம் - அனுபவம்.

2 comments:

Vetirmagal said...

மலையாளப் படங்களைப் பற்றி , பத்திரிக்கைகளில் படிப்பது தவிர,பார்க்கும் வாய்ப்புக்கள் குறைவே.

உங்கள் விமரிசனம் படத்தை பற்றி பல செய்திகளை அழகாக விவரிக்கிறது.

நன்றி.

Vetirmagal said...

மலையாளப் படங்களைப் பற்றி , பத்திரிக்கைகளில் படிப்பது தவிர,பார்க்கும் வாய்ப்புக்கள் குறைவே.

உங்கள் விமரிசனம் படத்தை பற்றி பல செய்திகளை அழகாக விவரிக்கிறது.

நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...