Wednesday, February 29, 2012

திரைப்படம்: காதலில் சொதப்புவது எப்படி?



ஒரு காதலிக்கும் கல்லூரி ஜோடி, காதலித்து கல்யாணத்துக்கு காத்திருக்கும் கல்லூரி முடித்த ஜோடி, காதலித்து மனம் முடித்து விவாகரத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு மூத்த ஜோடி, இவர்களின் காதலில் எழும் சொதப்பல்களும் அதற்கான தீர்வுகளும் என படம் முழுவதும் புன்னகையுடன் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி மோகன்.

யு ட்யூபில்  நாலு லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ்கள் அடித்து பெரும் வரவேற்பு பெற்ற  'காதலில் சொதப்புவது எப்படி' என்ற இவரது குறும்படத்தையே, சிறிது நீட்டி இவரது இன்னொரு குறும்படமான 'மிட்டாய் வீடு' படத்தில் இருந்து சில காட்சிகளை கலக்கி, ஒரு பீல் குட் படத்தை படைத்திருக்கிறார்.

பெரிதாக கதை என்று ஒன்றும் இல்லாமல், சம்பவங்களை தொகுத்தே, 'பொண்ணுக இப்படி இருப்பாங்க' , 'பசங்க இப்படி இருப்பாங்க' என்று கத்தி இன்றி காதலை அறுவை சிகிச்சை செய்த இவரது புதுமையான திரைக்கதை யுக்தி தான் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கினை ஆற்றி உள்ளது.

கல்லூரியில் படிக்கும் காதலர்களாக சித்தார்த், அமலா பால். ஒவ்வொரு முறையும் அமலா விடம் பல்ப் வாங்கி, சொதப்பி, வருந்தி, கெஞ்சி, கூத்தாடி, 'காதல் ஏங்க இவ்ளோ கஷ்டமா இருக்கு' என புலம்பி டிபிகல் லவ்வர் பாயாக பின்னி எடுத்திருக்கிறார் சித்தார்த்.

கேர்ள் நெக்ஸ்ட் டோர் லுக் உடன் அமலா பால். 'மைனா' படத்திற்கு பிறகு, இந்த படத்தில் சிம்பிளாக வரும் அமலா பால் கொவப்படுவதிலும், ஈகோ காட்டுவதுமாக நன்றாக நடித்துள்ளார். மணம் முடித்த பின் விவாகரத்துக்காக காத்திருக்கும் அமலா பாலின் பெற்றோராக பழைய சுரேஷும் சுரேகாவும். பழைய காதலை பறை சாற்றுவது போல சுரேஷ் காதல் கடிதம் எழுதி மகளையே தன மனைவிக்கு தூது போக சொல்லுவதும் என அவர்கள் இருவரின் யதார்த்த நடிப்பும் அற்புதம்.



சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அவர்கள் இருவரும் பட்டாசு கிளப்புகிறார்கள்.

நீரவ் ஷாவின் ரொமாண்டிக் ஒளிப்பதிவும் தமனின் பின்னணி இசையும் படத்தை உயரத்தில் நிறுத்துகிறது. பாடல்களில் 'பார்வதி' மட்டும் மனதில் நிற்கிறது.

'இந்த பொண்ணுக இருக்காங்களே!' என காமெராவை பார்த்து சித்தார்த் பேசி கொண்டிருப்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், போக போக படத்தை ஒரு டாகுமெண்டரி லெவலில் கொண்டு பொய் விடுகிறது. தவிர நண்பர்களின் பாண்டி செரி பயணம் படத்தை நகர்த்தி செல்ல மட்டுமே உதவி இருக்கிறது.

படத்துக்கு பெரிய பலம், திரைக்கதையும் சிரிக்க வைக்கும் வசனங்களும் தான்.

கல்லூரியை சுற்றியே கதை நடந்தாலும்,  பேராசிரியர்களை கோமாளிகள் போல சித்தரிக்கும் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல்.

காதல் என்றாலே, உருக்கும் வசனங்கள், டூயட் பாடல்கள், காதலுக்கு எதிர்ப்பு, அரிவாள், கொலை சோகமான முடிவு என்ற இலக்கணங்களை எல்லாம் உடைத்து ஜாலியான படத்தை கொடுத்திருகிறார் பாலாஜி மோகன்.

குடும்பத்துடன் காணக்கூடிய ஒரு ஜாலி படம்.

காதலில் சொதப்புவது எப்படி?- ஜாலியான சொதப்பல்.

5 comments:

Kumaran said...

நல்ல அருமையான விமர்சனம் சகோ..படம் பார்க்க வேண்டும்.நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

குடிமகன் said...

நானும் பாத்தேன்.. நல்ல காமெடியா இருந்திச்சி பாஸ்..

குடிமகன் said...

நானும் பாத்தேன்.. நல்ல காமெடியா இருந்திச்சி பாஸ்..

NILAMUKILAN said...

நன்றி குமரன்.

NILAMUKILAN said...

நன்றி குடிமகன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...