'இறைவன் இருகிறான் என உங்களை என்னால் நம்ப வைக்க முடியும். ஏன்
என்றால், நான் அதனை உணர்ந்தேன்.'. ப்ரிசின் படேல் என்கிற 'பை' சொல்லும் இந்த வசனத்தில் தான் படம் ஆரம்பம் ஆகிறது. ' கண்ணே கனியமுதே' என தமிழ் பாடலோடு, பாண்டி சேரியில் தான் கதை ஆரம்பம். தனதுகதையை பாண்டிச்சேரியில் இருந்து துவங்குகிறான் இப்போது கனடாவின் மாண்ட்ரியால் நகரில் வாழ்ந்து வரும் 'பை'. கடவுள் இருக்கிறான் என்பதை ஆணித்தரமாக நம்பும் 'பை' எல்லா மதத்தின் கடவுளையும் நம்புபவன். பிறப்பால் ஹிந்துவாக பிறந்தாலும், மானிட குலத்துக்காக தன்னையே தாகம் செய்த தேவகுமாரன் இயேசு , அனைவரையும் அன்பால் அரவணைத்து செல்லும் அல்லா, படைப்பின் மூலமான பிரம்மா, என அனைத்து கடவுளையும் வணங்குபவனாக இருப்பதை, நாத்திகனான அவனது தந்தை, அடக்குமுறையில் கையாளாது, கருத்தியல் ரீதியாக எதிர் கொள்கிறார்.
பையின் தந்தை சில மிருகங்களை வைத்து பாண்டிச்சேரியின் முனிசிபாலிடியில் இடம் வாங்கி, ஒரு மிருக காட்சி சாலை நடத்தி வருகிறார். கனடாவுக்கு புலம் பெயர கடவு சீட்டுகள் வாங்கி கனடா நாட்டுக்கு 'ட்சிம்ட்சும் ' என்ற சரக்கு கப்பலில், புறப்படுகிறார்கள். மிருகங்களுக்கு அமெரிக்காவில் நல்ல கிராக்கி என்பதால், அவைகளையும் கூண்டில் அடைத்து கூட்டிக் கொண்டு கப்பல் ஏறுகிறார்கள். கனடா போகும் வழியில், கலிபோர்னியா ஜூவில் நல்ல விலைக்கு விற்றுவிட ஏற்பாடு.
பிலிப்பைன்ஸ் தீவின் மணிலா நகருக்கு சற்று வெளியே ஒரு புயலில் மாட்டிக் கொண்டு 'ட்சிம்ட்சும்' கப்பல் மூழ்கிவிட, ஒரு உயிர்காப்பு படகில் பதினாறு வயதான 'பை', ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு உராங்குட்டான், மற்றும் 'ரிச்சர்ட் பார்க்கர்' என்ற பெயர் கொண்ட ஒரு புலியுடன் தப்பி விடுகிறான்.
காலுடைந்த வரி குதிரையை ஓநாய் தின்றுவிட, மற்ற மிருகங்களை 'ரிச்சர்ட் பார்க்கர்' என்ற புலி தின்றுவிட, எஞ்சியது, 'பை' மற்றும் புலி. படகை புலி ஆக்கிரமித்து விட, படகில் இருக்கும் சில மிதவைகள் கொண்டு அதில் ஒரு மிதப்பானை அமைத்து அதில் தனது இருப்பிடத்தை அமைத்து கொண்டு அதனை படகுடன் கயிறில் கட்டி விடுகிறான் 'பை'. படகில் சில நாட்களுக்கு தேவை பட கூடிய குடி தண்ணீர், சில பிஸ்கட்டுகள் என இருக்க, ஒவ்வொரு முறையும் தனது மிதப்பானிலிருந்து படகுக்குள் செல்லும்போதும் உயிரை பிடித்தபடி சென்று வருகிறான். ஒருகட்டத்தில் இது சரிப்படாது என உணர்ந்த 'பை', ரிச்சர்ட் பார்க்கரை, ஒரு ரிங் மாஸ்டரின் முனைப்போடு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.
சுத்த சைவனான 'பை' வேறு வழியில்லாமல் மீன்களை பிடித்து பச்சையாக உண்கிறான். பெரிய மீன்களை பிடித்து ரிச்சர்ட் பார்கருக்கு உண்ணக் கொடுக்கிறான். மழை நீரை சேமித்து தனது மற்றும் புலியின் தாகத்தை தீர்த்துக் கொள்கிறான். இவ்வாறு 255 நாட்கள் கடலில் தத்தளித்த 'பை' எவ்வாறு கரை காண்கிறான் என்பதை, உண்மைக்கு மிக அருகிலிருந்து சொல்லி இருக்கிறார்கள்.
கனடிய எழுத்தாளர் 'யான் மார்ட்டல் '(Yaan Martel) எழுதிய; 'Life of Pi', எனும் மிக சிறப்பு மற்றும் புகழ் பெற்ற நாவலே, அதே பெயரில் திரைப்படமாக்கப் பட்டிருக்கிறது. இன்னமும் 'பை' கனடாவில் உயிருடன் வாழ்ந்து வருவதாக இந்த நாவல் கூறுகிறது. நான் முதலில் புத்தக வடிவை இரண்டு மாதங்களுக்கு முன்பு படித்தபோது, குறைந்தது ஒரு வாரமாவது தூக்கமின்று துவண்டேன். நாவலை படிக்கும் ஒவ்வொருவருமே, தன்னை பை யாக நினைத்துப் பார்த்துகொள்ளும் உணர்வு வரும். நாவல் வாசகனே, கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை போல பிரம்மை ஏற்ப்படுத்தியதே நாவலின் வெற்றி என கொள்ளலாம்.
இந்நாவலை திரைப்படமாக எடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து, இந்த நாவலை எப்படி திரைவடிவத்தில் கொண்டு வர முடியும் என்ற ஐயம் என்னுள் எழுந்தது. எனினும் இப்படத்தின் இயக்குனர், ஆஸ்கார் விருது பெற்ற, உலக புகழ்பெற்ற எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவரான ஆங் லீ என அறிந்த போது , எனது ஆர்வம் மிகவும் அதிகரித்தது. என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.
திரைப்படம் உண்மைக்கு மிக அருகில் எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் நாவலின் அனைத்து சம்பவங்களையும் திரை மொழியில் கொண்டு வந்து விட வேண்டும் (சில சம்பவங்கள் நீங்கலாக..!) என்ற திரைகதை ஆசிரியரின் முனைப்பு தெரிகிறது.விளைவு, ஹாலிவூட் திரைப்படங்களுக்கு சற்றே நீளமாக இரண்டு மணி நேரம் படத்தின் ஓட்டம். நாவலை படித்திராத பார்வையாளர்களுக்கு, படத்தின் முக்கால் வாசி நேரம், பதினாறு வயது 'பை', ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்த பெங்கால் புலி மற்றும் கடல், இவை மற்றுமே திரையில் காட்டப்படுவதால், சற்று அலுப்பு ஏற்படுகிறது. எனினும், நாவலைப் படித்தவன் என்ற முறையில், நான் வாசித்த ஒவ்வொரு சம்பவமும், திரையில் பிரமாண்டமாக விரியும் பொது (இப்படத்தை 3D இல் வேறு பார்த்தேன்), மனம் குதூகலித்தது என்னவோ உண்மை.
படத்தில் பை யாக நடித்திருக்கும் இந்தியர் சூரஜ் ஷர்மாவின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பளீரென அறிமுகமாகும் சூரஜ், கடலில் பல நாட்கள் தத்தளித்து, எழும்பும் தோலுமாகி, கண்கள் பஞ்சடைந்து, அவ்வளவு நாட்களாக தன்னுடன் கடலில் தத்தளித்த நண்பனான ரிச்சர்ட் பார்க்கர், கரையை அடைந்த பின் தன்னை திரும்பி கூட பார்க்காமல் காட்டுக்குள் சென்றதும், இயலாமையிலும் ஏமாற்றத்திலும் கதறி அழுது உடைந்து போவது கிளாஸ். கண்டிப்பாக, ஆஸ்கார் விருது பரிந்துரை இவருக்கு நிச்சயம் உண்டு.
படத்தில் உண்மை சம்பவங்கள் அதிகமாக தொகுக்கப்பட்டிருப்பதால், படத்தின் பிரம்மண்டத்துக்காக அதிக கிராபிக்ஸ் பயன்படுத்தாது, படத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்தி இருப்பதால், தனியாக துருத்திக்கொண்டு தொங்காமல், படத்தின் உண்மைத் தன்மையை குலைத்துவிடாமல், இயல்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
படத்தின் உண்மையான கதாநாயகன், படத்தின் ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டா (Claudio Miranda). படத்தின் உண்மை தன்மையை குலைக்காது, கடலின் பிரம்மாண்டத்தையும் குறைக்காது, ராட்சத நடனம் ஆடி இருக்கிறது இவரது கேமரா. கடலில் வரும் சில நைட் ஷாட்ஸ், மற்றும் எம்பி குதிக்கும் பிரம்மாண்ட திமிங்கிலம் போன்ற காட்சிகள், வாவ். படத்தின் இசையும் படத்தின் தன்மைக்கு சிறிதும் விலகாது, சிறிது இந்தியத் தனத்தோடு ஊடாடி வரும் மைக்கேல் டன்னாவின் இசை ஒரு அனுபவம்.
ஆங் லீ
இப்படத்தில் வரும் புலி முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டதே என ஆங் லீ ஒரு பேட்டியில் கூறியுள்ளது மிகவும் ஆச்சர்யம் அளித்தது. அவர் சொல்லாவிட்டால், யாருக்கும் அந்த விடயமே தெரிந்திருக்காது. அவ்வளவு கச்சிதம். மற்றும், படத்தின் கடல் காட்சிகள் அனைத்தும், தைவான் அருகே உள்ள பெரிய டாங்கில் தண்ணீர் நிரப்பி படமாக்கப்பட்டது என்று தெரிவித்தார். அவர் இப்படத்தை முடிக்க எடுத்துக் கொண்ட கால அளவு நான்கு ஆண்டுகள்.
ஆங் லீயின் 'லைப் ஒப் பை' ஒரு உன்னதமான படைப்பு. வரும் ஆஸ்கார் விருதுகள் தேர்வுபட்டியலில் பல விருதுகளுக்கு நிச்சயம் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப் படும்.
முக்கியமான விடயம் என்னவென்றால், படத்தின் ஆரம்பத்தில் வரும் தமிழ் பாடல். 'இன்ப தென் வந்து பாயுது...' என்பதை நான் உணர்ந்தேன். அதனை அமெரிக்காவின் தியேட்டரில், பல வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் நமது தமிழ் பாடலில் கிறங்கி போகும் அவர்களைப் பார்த்து எனக்குள் ஏற்ப்பட்ட உணர்வு.. அதனை என்னால் வார்த்தைகளால் புரிய வைக்க முடியவில்லை.
Life of PI: It is Life.
1 comment:
Same feeling I got here in Canada. Tamil make me proud. Nice nilamukilan
Post a Comment