Wednesday, February 11, 2015

ஆம் ஆத்மி சுனாமி!




தூய்மை இந்தியா அமைப்பை தொடங்கியது பிரதமர் மோதி என்றாலும் அதனை செயல்படுத்தியது ஆம் ஆத்மி. ஆம் தில்லி சட்டபேரவை தேர்தலில் எழுபதுக்கு அறுபத்தேழு இடங்களை வென்று அரசியலின் மிகப் பெரும் திமிங்கலங்களான  காங்கிரஸ் மற்றும் பா ஜா கா கட்சி இடங்களை துடைத்தேறிந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மேல் இருந்த அதிருப்தியில் அப்போதைக்கு வலிமையாக இருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து மக்கள் பெரும் வெற்றி பெற வைத்தது மோதி அலைக்கு கிடைத்த வெற்றி என்று தப்பு கணக்கு போட்டு இறுமாப்போடு அலைந்ததில் இருந்து பா ஜா காவின் சரிவு துவங்கியது. பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து மோதி அரசு, தேர்தலுக்கு முந்தய தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது.மோதி தேசத்தின் பிரச்சனைகளை சமாளிப்பதில் ஆர்வம் காட்டாது, வெளிநாடுகளுக்கு பறந்து வெளிநாட்டு தலைவர்களோடு கை குலுக்கி படம் பிடித்து, தான் ஒரு உலக தலைவன் என காண்பிப்பதில் தான் முனைப்பாக இருந்தார். தனது தாய் மற்றும் சகோதர இயக்கங்களான ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவ இயக்கங்கள், சிறுபான்மை மதத்தினரை கண்டு 'இந்துக்கள் மட்டுமே, ராமரின் பிள்ளைகள், பிற மதத்தவர் முறை தவறி பிறந்தவர்கள்', 'கர் வாப்சி', இந்து ராஷ்டிரம், இந்துக்கள் ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், என்று உளறின உளறல்களை எல்லாம் கண்டும் காணதது போல இருந்து அவர்களின் உளறல்களை ஆமோதிப்பதை போல இருந்த செய்கைகள், உலகின் மாபெரும் ஜனநாயகத்தின் பிள்ளைகளான இந்திய குடிமகன்களை, பிரதமரின் மேல் எரிச்சல்பட வைத்தது.

பிரதமர் மோதியின்  மிகப்பெரும் சாதனையாக கருதப்பட்ட அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்  கொண்டு வந்த திட்டம். மன்மோகன் சிங்கின் கனவு திட்டம். அதற்காகத்தான் மன்மோகன் சிங் ஒபாமா வெற்றி பெற்றபின் அமெரிக்காவின்  ஸ்டேட் டின்னர் க்கு அழைக்கப் பட்டார். ஆனால் அது நிறைவேறாமல் போனதற்கு மன்மோகன் அரசு அறிவுபூர்வமாக வைத்த செக் தான் காரணம் என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீடு, அணு உலைகளை நிர்மாணிக்கும் அமெரிக்க கம்பனிகள் தான் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததால் அவரது காலத்தில் அந்த திட்டம் நிறைவேறாமல் போனது. இப்போது மோதியின் அரசு அமெரிக்க அரசுக்கு பணிந்து அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை அமெரிக்க அரசு தர வேண்டியது இல்லை என்ற ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டதாக தெரிய வருகிறது.

ஒபாமாவின் வருகையில், மோதி, எகிப்து அரசின் கொடுங்கோலனான ஹோஸ்னி முபாரக் பாணியில்  பத்து லட்சத்துக்கு உடை அணிந்து வந்ததை அவரது கட்சிக்காரர்களே விரும்ப வில்லை. டீ விற்றவன் பிரதமராகக் கூடாதா என கேட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்ததும் அவரது கடந்த வாழ்க்கையை மறந்து விட்டதை மறக்கவில்லை மக்கள். தில்லியின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பா ஜா காவின் கூடாரத்தில் திகில் கிளம்பி விட்டது. ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியானதை அறிந்ததும், தில்லியில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற முனைப்பில், ஆம் ஆத்மியிலிருந்து  கிரண் பேடியை அழைத்து வந்து குறைந்த நாட்களின் இடைவெளியில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்தியதை, பா ஜா காவின் வளர்ச்சிக்கு காலம் காலமாக பாடுபட்ட பலரை வருத்தத்தில் ஆழ்த்தியது. தனது மத்திய அரசாங்க செயல்பாடுகளை ஸ்தம்பிக்கும் அளவுக்கு பல மந்திரிகளை பல எம் பிக்களை களத்தில் இறக்கிய பா ஜா கா கடைசியில் மோதியையும் களத்தில் இறக்கியது.

பத்து கோடிக்கும் அதிகமாக பத்திரிகைகளின் முகப்பு பக்கங்களில் விளம்பரங்கள் செய்த பாஜாகா, ஆம் ஆத்மியின் பண வரத்து குறித்து கேள்வி எழுப்பியது ஆச்சர்யமான விஷயம். அவாம் என்ற ஆம் ஆத்மியின் முன்னாள் கிளையில் உள்ளவர்களை ஏவி அவர்கள் கனடாவில் இருந்து  ஜாஸ்ப்ரீத் மான் என்பவர் ஆம் ஆத்மியின் கட்சியின் மேல் உள்ள பிடிப்பால் ஆயிரம் கனடிய டாலர்களை அனுப்பியதை குறித்து கேள்வி எழுப்பி, ஆம் ஆத்மியை திருடனாக விளித்தார்  பா ஜா காவின் நிர்மலா சீதாராமன். பின்னர் ஜாஸ்ப்ரீத் மான் அவர்களே தொலைக்காட்சி நேரலையில் தோன்றி தான் பணம் அனுப்பியது எந்த சட்ட விரோதனமான வழியும் அல்ல  அல்ல என்று சொன்னதும் அவாமின் நேர்மை முகம் கிழிந்து தொங்கியது. அவர்கள் காட்டிய காசோலை பொய்யான ஒரு மோசடி என்றும் பாஜாகாவின் வேலை இது என்றும் வெளியே தெரிந்தது. அரவிந்தை நக்சலாக சித்தரித்தார் மோதி.அரவிந்தின் குடும்பம், அன்ன அசாரே,  அரவிந்தின் கோத்திரம் அனைத்தும் பாஜாகாவின்  கேலி சித்திரங்களில் கேவலப் படுத்தப்பட்டன.தனிநபர் தாக்குதல் அதிகம் நடந்ததை அரசியல் விமர்சகர்கள் மற்றும் மக்கள் ரசிக்கவில்லை.

ஆம் ஆத்மி தேர்தல் தேதி அறிவிக்கப் படும் முன்னரே தேர்தலுக்கான அடித்தள வேலைகளை துவக்கி விட்டது. நாடெங்கும் புரையோடிப் போன லஞ்சத்தை எதிர்த்த போராட்டத்தை முன் வைத்ததே ஆம் ஆத்மியின் மிகப் பெரிய பலம்.லஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள் ஆம் ஆத்மி கட்சி முழுக்க பரவி இருந்தார்கள். ஐ டி இளைஞர்கள் மாணவர்கள்  அனைவரும் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆதரித்தார்கள். தங்களது சொந்த வேலைகளில் இருந்து விடுப்பு  எடுத்துக் கொண்டு வந்து கட்சியின் வெற்றிக்காக  உழைத்தார்கள். ப்ளாஷ் மாப் என்ற நடனத்தை ஆங்காங்கே நடத்தி ஓட்டு  சேகரித்தார்கள். விஷால் டட்லாணி என்ற பாடகரின் 'பாஞ்ச் சால் கேஜ்ரிவால் ' (ஐந்து வருடங்களும் கேஜ்ரிவால்) ஆம் ஆத்மியின் டெல்லி கீதமானது. அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகிவிட அந்த பாடலை பாடியும் நடனம் ஆடியும், அடித்தட்டு மக்களிடம் இருந்து தங்கள் பிரச்சாரத்தை  ஆரம்பித்தனர். படித்தவர்கள், தேச நலனில் அக்கறை கொண்டவர்கள், லஞ்சத்தை வெறுப்பவர்கள் அனைவரும் ஆம் ஆத்மியில் இணைந்து ஒரு விடுதலை போரைப் போல  ஆம் ஆத்மியின் பிரச்சாரத்தை கடைக் கோடி டெல்லி வாசி வரை கொண்டு சேர்த்தனர். டில்லியில் வாழும் தமிழர்களின் ஓட்டை சேகரிக்க தமிழகத்தில் இருந்து முப்பது பேர் கொண்ட ஆம் ஆத்மி குழு ஒன்று புறப்பட்டு சென்று தமிழில் பிரச்சாரம் செய்து ஓட்டு  சேகரித்தனர்.


மீடியாக்களில்  ஆம் ஆத்மியின் ராகவ் சட்டா மற்றும் ஆஷிஷ் கைத்தான் ஆகியோர் ஆம் ஆத்மியின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களை மிக நாகரிகமாக எதிர்கொண்டனர். தன்னை எதிர்த்து அரசியல் செய்யும் தனது முன்னாள் தோழியான கிரண் பேடியை எதிர்த்து எதுவுமே அரவிந்த் சொல்லவில்லை.' அவர் ஒரு நல்ல பெண்மணி. அவர் மனம் புண்படும்படி தான் எதுவும் பேசப் போவதில்லை ' என்று ஒவ்வொரு முறை கிரனைப் பற்றி கேட்கும்போதும் சொன்னார்.

ஆம் ஆத்மி இப்படியாக திறமையாக வகுத்த வியூகங்களின் படி மக்கள் ஆம் ஆத்மியின் மீதான தங்களது அபிரிதமான நம்பிக்கையை எழுபதுக்கு அறுபத்தேழு என்ற கணக்கில் காட்டி உள்ளனர். எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு பத்து விழுக்காடுகள் இடங்களை எதிர்க்கட்சி வென்றிருக்க வேண்டும். பா ஜா கா மூன்று இடங்களை வென்றிருந்த போதிலும் பா ஜா கா வுக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை தர விழைந்திருக்கிறது ஆம் ஆத்மி. பாஜாகா பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை காங்கிரஸ் அரசுக்கு தராமல் வெற்றிடமாகவே இதுவரை வைத்திருப்பதை குறிப்பிடவேண்டி உள்ளது.

ஆம் ஆத்மி இனிதான் அரசியல் சதுரங்கத்தின் கடும் சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆம் ஆத்மி பொதுமக்களுக்கு வாக்களித்த லஞ்ச ஊழலற்ற நிர்வாகம், மின்சாரம், தண்ணீர், பெண்கள் பாதுகாப்பு, தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அனைத்தும் அத்துனை  எளிதான விடயங்கள் அல்ல. மத்திய அரசின் ஒத்துழைப்பும் இதில் முழுமையாக தேவைப்படுகிறது. பெரும்பான்மை பெற்று விட்டதால் அகம்பாவத்தில் ஆடாமல், சுய துதிபாடிகளை  அனுமதிக்காமல்,மக்கள் பிரச்சனையை எதிர்கொண்டு தீர்வு கண்டு ஒரு முன் மாதிரியான அரசாக தில்லி அரசாங்கம் திகழ்ந்தால், காங்கிரஸ் மற்றும் பாஜாவின், ஊழலான மதவாத அரசுக்கு எதிரான  ஒரு நல்ல மாற்றாக ஆம் ஆத்மி மற்ற மாநிலங்களிலும் பரவி இந்தியா ஊழலற்ற நாடாக மாற வாய்ப்புண்டு. ஆம் ஆத்மி அரசின் நேர்மை ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

வாழ்த்துக்கள்!

2 comments:

ABELIA said...

சரிதான். இங்கே நேர்மையாக ஆட்சி செய்வதென்பது குதிரை கொம்புதான். அப்படியே நேர்மையாக ஆட்சி செய்ய முயற்சித்தால் அதற்கு முட்டுகட்டை போட்டு, பல்வேறு திட்டங்களை கிடப்பில் போடுவதற்கே பல உள்குத்து வேலைகளை செய்வார்கள். இதுதான் இந்திய அரிசியல் ஜனநாயகம். இது தெரியாதா உங்களுக்கு...!???

NILAMUKILAN said...

அதைத்தான் ஆம் ஆத்மி எதிர்கொள்ளவிருக்கும் மிகப்பெரும் சவாலாக நான் பார்க்கிறேன். நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...