Friday, April 30, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-4-லிவிங் டுகெதர்...!



நான் மேகா...!

கலாச்சாரத்தை கேடுத்துவிட்டதாய் அனைவரும் திட்டிக் கொண்டிருக்கும் ஐ டி கம்பெனி ஒன்றில்  ப்ராஜெக்ட் மானஜர். கை நிறைய சம்பளம்.
நான் ஐந்து வருட ரணகள மண வாழ்க்கைக்கு பின்னர் விவகாரத்து பெற்று விட்ட நடுத்தர வயதுப்பெண்.

என் மணவாழ்க்கையின்  போது நான், என் கணவன் என்கிற சைக்கோவால் எதிர்கொண்ட சவால்களை, பிரச்சனைகளை துக்கங்களை, பகிர்ந்து கொள்ள, ஆறுதல் தர, திரும்பி கூட பார்க்காத சமூகம் இப்போது என் மீது அக்கறை கொண்டு,  நான், திருமணம் செய்து கொள்ளாமல் மணியோடு தனியாக அந்த அப்பார்ட்மென்ட்டிற்கு குடியேறியபோது என்னை திட்டி தீர்த்தது.

மணியுடன் நான் அந்த அப்பார்ட் மென்டில் தங்க கூடாதாம். அது அந்த அப்பார்ட்மென்ட் சமூகத்திற்கு நான் விளைவிக்கும் ஊறாம்.

என்ன வென்று சொல்வது. ஆறுதலின்றி தவித்த, தவிக்கும் எனக்கு ஒரே துணை இப்போது மணி ஒருவனே.

அவன் வேலைக்கு செல்வதில்லை. நானே கை நிறைய சம்பாதிப்பதால், அதற்க்கு அவசியம் என நானும் கருதவில்லை.

மணியின் அன்பும் அவனது அண்மையும் எனக்கு இருந்தால் போதும். நான் வீடு திரும்ப காத்திருக்கும் ஒரே ஆள் அவன்தான். நான் இல்லையென்றால் என்னைப்பற்றி கவலைப்பட இருக்கும் ஒரே ஜீவனும்அவன்தான்.


நான் கொஞ்சுவதும் அவனைத்தான் திட்டுவதும் அவனைத்தான்

அக்கம் பக்கம் குழந்தைகளுக்கெல்லாம் இவனது முரட்டு தோற்றம் கண்டு பயம். இவனுக்கு கோவம் வந்து கத்தினால் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்பதால் அவர்கள் அடிக்கடி என்னிடம் கம்ப்ளைன் செய்வதுண்டு. நான் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவேன்.

அவனுக்கு பொறுமை உணர்ச்சி இருப்பது போல பொறுப்பு உணர்ச்சி இல்லை. எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது இல்லை. எனக்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அவன் அதை பொருட்படுத்துவது இல்லை. உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரவம் தராமல் இருக்கவேண்டும்.

நான் மிகவும் அயர்ச்சியுடன் வீடு வரும் நேரம், வீட்டின் பொருட்கள் எல்லாம் அங்கங்கே கலைந்து கிடந்தால் எனக்கு மிகவும் கோவம் வரும். அவனை திட்டும்போது அது தவறென தெரிந்தால் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொள்வான். பதில் பேசமாட்டான். அனால் இதுவே வேறு யாராவது என்றால் கத்தி குமித்து விடுவான்.

இன்றும் அப்படி தான், பெரிய சச்சின் டெண்டுல்கர் என்ற நினைப்பு. வீட்டில் கிடந்த பந்தை எடுத்து விளையாடிய விளையாட்டில், வீடே தலை கீழாக கிடந்தது.

நான் போட்ட சத்தத்தில் பாவமாக என்னை பார்த்தான். எனக்கு கோவம் பறந்து போக, அவனுக்கு பால் சாதம் பிசைந்து கொடுத்தேன்.

வாலாட்டி கொண்டே உண்ண ஆரம்பித்தான், என் நன்றியுள்ள செல்ல நாய்  மணி.

Thursday, April 29, 2010

கடந்து போன கவிதை!

என்றோ படித்த நாவலை,
மீண்டும் துவக்குதல் போல்,
உறங்கிப்போன குழந்தையின்
கண்விழிப்பு அழுகை போல்...
குடை மடக்கிய பின்,
துவங்கும் மழையை போல் ,

முடிந்து போன
என் முதல் காதல் வரியின்,
முற்றுப்புள்ளியில்
தொடங்குகிறது....
உனக்கெனதாகிய
எனது அடுத்த காதல்...

முதல் தான்
முடிவு என இருந்த நான்,
முடிவில் இருந்து
மீண்டும் ,
நீ துவக்கிய தடுமாற்றத்தில்,
கிழித்தெறிந்தேன்...
கடந்து போன
இந்தக் கவிதையை....


-- நிலா முகிலன்
--

Saturday, April 24, 2010

உலக சினிமா: சின் நோம்ப்ரே (Sin Nombre) ஸ்பானிஷ் : புலம் பெயர்தலின் வலி.

புலம் பெயர்தல் என்பது, இலங்கையில் மட்டுமல்ல. இன்னும் பல நாடுகளில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் உடமைகள், உறவுகள் எல்லாம் துறந்து, சேர்வோமோ சேர மாட்டோமா என்ற நம்பிக்கையற்று இன்னமும் ஒரு நாட்டில் இருந்து உயிரை கையில் பிடித்து கொண்டு இன்னொரு நாட்டிற்க்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன பல ஜீவன்கள். சிலருடைய கதைகளையும், சில திரைப்படங்களையும் பார்த்தால், நமது வாழ்கை மிக மிக சுகமானதாகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் தோன்றும். என்னை அப்படி யோசிக்கவைத்த திரைப்படங்களில் ஒன்று சின் நோம்ப்ரே என்ற இந்த இஸ்பாநியோல்திரைப்படம்.

காஸ்பர், ஹோண்டுராஸ் தீவில் உள்ள ஒரு காங் கிடம் வேலை செய்கிறான். அவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். அவர்களின் அடையாளமாக சில சைகை மொழிகள், டாட்டூ என இருக்க, அவர்களின் தொழில் கொலை செய்வது கொள்ளை அடிப்பது. அவர்களிடம் ஸ்மைலி என்ற சிறுவனை சேர்த்து விடுகிறான் காஸ்பர். 


காஸ்பருக்கு மார்த்தா எனும் காதலி. அவளின் மேல் அவன் உயிரையே வைத்திருக்கிறான். அவனுடைய காங்கின் சந்திப்பு ஒன்று கல்லறை ஒன்றில் நடக்கிறது. அதனை காண வரும் மார்த்தாவை வெளியே கூட்டி சென்று விடுவதாக கூறி அந்த காங்கின் தலைவன் லில் மங்கோ அவளை தனியே அழைத்து சென்று அவளை கற்பழிக்க முயல அவள் தப்பிக்கபார்க்க அப்போது நடக்கும் களேபரத்தில் அவள் ஒரு கல்லறையில் மோதி இறந்துவிடுகிறாள். லில் மங்கோ இதனை காஸ்பெரிடம் கூறி கேசுவலாக வேறொரு பெண்ணை தேடிக்கொள்ளும்படி சொல்ல, கஸ்பாரின் ஆத்திரம் அழுகையாக வெடிக்கிறது.

லில் மங்கோ, காஸ்பரையும் ஸ்மைலியையும், அமெரிக்காவிற்கு புலம் பெயரும் கீழ் நாட்டினர் பயன்படுத்தும் ரயில் செல்லும் லா பாம்பில்லா என்ற இடத்துக்கு கூட்டி வருகிறான். அமெரிக்காவிற்கு கள்ளத்தனமாக செல்லும் கூட்டத்தில் இருக்கும் பதின் வயது சைரா தனது தந்தை மற்றும் மாமாவுடன் நியூ ஜெர்சி இல் இருக்கும் தங்களது சொந்தங்களை தேடி சென்று கொண்டிருக்கிறாள். அந்த கூட்டத்திடம் கொள்ளையடிக்க துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வரும் இவர்கள் சைராவையும் காண கண்டதும் லில் மாங்கோ அவளது அழகில் மயங்கி அவளை கற்பழிக்க முயல்கிறான். ஏற்கனவே தனது காதலியை கொன்ற லில் மங்கோ வை அரிவாளால் வெட்டி கொலை செய்து ட்ரெயினில் இருந்து தூக்கி எறிகிறான் காஸ்பர். ஸ்மைலியை ஊருக்கு போக சொல்லும் அவன், அதே ரயிலில் தன பயணத்தை தொடர்கிறான். தன்னை காப்பாற்றிய காஸ்பரின் மேல் சைராவுக்கு ஈடுபாடு வர அவனுக்கு உதவி செய்கிறாள். தன தகப்பன் மற்றும் மாமாவை நம்பாத அவள் அவனை முழுமையாக நம்புகிறாள். அவர்களது பயணம் பல இடர்களுக்கு நடுவே தொடர்கிறது. ஏற்கனவே தங்களது காங் உறுப்பினர்களை நாடு கடத்திய அனுபவம் உண்டென்பதால் காஸ்பர் சைராவுக்கு உதவி செய்கிறான். இதற்க்கு நடுவே லில் மாங்கோவை காஸ்பர் கொன்று விட்டதை ஸ்மைலி மூலம் அறிந்த அந்த கூட்டம், அவனை கொல்ல தேடுகிறது.  அதனை அறியும் காஸ்பர் தன்னால் சைராவுக்கு ஆபத்து வந்து விட கூடாது என அவள் உறங்கும் வேலையில் ட்ரைனை விட்டு இறங்கி ஓடுகிறான். அவன் இல்லாததை கண்ட சைராவும் அவனை தேடி வந்துவிட, சைராவை தான் மிக பத்திரமாக அமெரிக்க எல்லையை கடக்க உதவி புரிவதாக கூற, அவளோ அவனையும் தன்னுடன் வந்துவிடுமாறு கூற, லில் மாங்கோவின் கூட்டம். அவனை கொல்ல தேட.. தடதடக்கிறது பயணம்.

காஸ்பர் சைராவை எப்படி அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறான், அவனது கதி என்ன, ஸ்மைலி இன் கதி என்ன என்பதை வலியோடு விவரிக்கிறது படம்.

 அமெரிக்கா செல்ல ரயிலுக்காக காத்திருக்கும் கூட்டத்தினர் மத்தியில் சைராவின் தந்தை 'இந்த கூட்டத்தில் பாதி பேர் நிச்சயம் ஊர் பொய் சேர போவத்தில்லை. ஆனால் நான் உன்னை பத்திரமாக கொண்டு செல்வேன்' என அவளிடம் கூறும்போது இலங்கை சகோதரர்களின் நினைவுகள் என் முகத்தில் அறைந்தது. புலம் பெயரும் மக்களின் அவஸ்தையை, அவர்களின் இடர்பாடுகளை படம் தத்ரூபமாக காட்டி கொண்டே செல்கிறது.
    
சைராவாக நடித்திருக்கும் பதினேழு வயதுப்பென்னான பவுலின கைட்டன், சிறுவயது கேட் வின்ஸ்லெட் போல அவ்வளவு அழகு. படம் முழுவதும் அந்த ரயிலினூடே நம்மை அமெரிக்கா எல்லைக்கு அழைத்து செல்கிறது, அட்ரியானோ கோல்ட் மெனின் அருமையான ஒளி ஓவியம். மழையில் பாலிதீன் கவர்களை மூடி ஒளிந்திருக்கும் அந்த பயணிகளிடம் லில் மங்கோ கொள்ளையடிக்கும் அந்த ஒரு காட்சி போதும்.


படத்தை இயக்கி உள்ளவர் காரி பூகுநாகா. இது இவரது முதல் திரைப்படம்.

ஆஸ்கார் விருதுகளின் பரிந்துரை உட்பட, பல விருதுகளை இந்த படம் அள்ளியுள்ளது.

சின் நோம்ப்ரே என்றால் பெயர் இல்லாதது என பொருள்.

சின் நோம்ப்ரே பயண வலி.

படத்தின் முன்னோட்ட காணொளி இங்கே...




--

Wednesday, April 21, 2010

கிளைமாக்ஸ் கதைகள் -3 வள்ளி!



விஜய் என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். நல்ல உயரம். எப்போதும் அலட்சியமாக தலையை ஒதுக்கி விட்டிருப்பான். அவனது காந்த கண்கள், என் அலுவலக பெண்கள் மத்தியை அவன் பால் ஈர்ப்பை ஏற்படுத்துவது உண்மை தான். அவனுக்கு மணமாகவில்லை.அவனை காதலிக்க என் அலுவலகத்து பெண்கள் எல்லாரும் போட்டி போட்டு கொண்டிருந்தனர்.

அனைவருடனும் நெருங்கி பழகுவதை போல என்னிடமும் பழகினாலும், என்னிடம் சற்று அதிகமாகவே பாசம் காட்டுவான். இதனால் அவனது தோழியருக்கு என் பால் சிறிது பொறாமையும் உண்டு. அவனுக்காக எதையும் செய்ய காத்திருந்தேன்.

ஆனால் அவன் 'இதை' கேட்ட பொது சற்று தடுமாறி தான் போனேன்.

'விஜய் நீ நெசமாத்தான் சொல்றியா. இதுலாம் தப்பு இல்லையா'

'இதன் மூலமா நாம வேற யாருக்கும் தீங்கு செய்யறோமா? நம்மால மத்தவங்களுக்கு பாதிப்பு இருக்கா வள்ளி?' என்றான் விஜய்.

'இல்லை ஆனால் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்'

'என்ன நீ அந்த காலத்துலேயே இருக்க. இப்போ சமூகம் எவ்ளோ முன்னேறிருச்சி தெரியுமா. இதுலாம் இப்போ தப்பே இல்ல'.

'ஏற்கனவே நாம சண்முகா லாட்ஜ் பக்கம் போயிட்டு வந்து வாந்தி வாந்தியா வந்துடுத்து. எங்கம்மா கூட ஒரு மாதிரி பாத்தா. நல்ல வேளை நின்னுடுத்து. அவளுக்கும் சந்தேகம் வரல. எதாச்சும் கோக்கு மாக்கு ஆகி எல்லாருக்கும் தெரிஞ்சிருந்ததுன்னா நான் என் உயிரையே விட்ட்ருப்பேன்'

'ஐயய உன்ன திருத்தவே முடியாது போல இருக்கே. நீ இந்த காலத்து ஆளே கெடயாது'

'நீ ஏன் சொல்லமாட்ட. உன்னை கேக்கறதுக்கு ஆள் கெடயாது. நீ தப்பு பண்ணினா வெளில தெரியாது. நான் அப்படியா?'

'சரி நா ஒன்னே ஒன்னு கேக்கறேன். போனவாட்டி சண்முகா லாட்ஜ் பக்கம் பொய் கச்சேரி நடத்தினோமே... அது உனக்கு புடிசிதா இல்லையா?'

சட்டென இப்படி கேட்டதும் விஜயிடம் என்ன பதில் சொல்வது என்றே புரிய வில்லை. எனக்கு அது தப்பு என்று தெரிந்தாலும் பிடித்து தான் இருந்தது. சலன படாமல் இருக்க முடியவில்லை.

'பிடிச்சிதான் இருந்தது...'

'பின்ன என்ன வள்ளி. மத்தவங்களுக்காக நாம வாழக்கூடாது நமக்கு என்ன சரி நு படுதோ நாம வாழ்ந்து பாத்திரனும்.'

'இல்ல விஜய் அந்த லாட்ஜ் கூட மோசம்னு பேசிக்கறாங்க. போலீஸ் ரைட் எல்லாம் வருதாம்'

' அதுலாம் இப்போ இல்ல தெரியுமா. மாமூல் கொடுத்து சரி படுத்திட்டாங்களாம்'.

புத்தி வேண்டாம்னு சொன்னாலும் மனசு விடுவதாக இல்லை. சம்மதித்தேன்.

சாயங்காலம் விஜயின் பைக்கில் அமர்ந்து  திடுக் திடுக் இதயத்துடனும், சபலத்தில் விளைந்த மகிழ்ச்சியும் ஒன்று சேர பயணித்தேன்.

சண்முகா லாட்ஜ் முன்னால் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் விஜய். நான் இறங்கி தெரிந்தவர் யாரும் வருகிறார்களா என சுத்தியும் முத்தியும் பார்த்தேன்.

நல்லவேளை யாரும் இல்லை. இருவரும் சண்முகா லாட்ஜ் முன்னால் சென்று நின்றோம்.

பக்கவாட்டில் உள்ள டாஸ்மார்க் கடை சென்று விஸ்கி வாங்கி கொண்டு கடையின் பின்னால் பம்மினோம்.

.வள்ளி நாயகம் என்ற நான் இரண்டாம் முறையாக என் நண்பன் விஜயுடன் மது அருந்த துவங்கினேன்.
--

Sunday, April 18, 2010

காந்தி தேசமே... ஈரம் இல்லையா...?!!!



எங்கிருந்தோ பத்துக்கு மேற்பட்ட தீவிரவாதிகள், விசா பாஸ்போர்ட் எதுவும் இன்றி, பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு திருட்டு தோணி மூலம் மும்பை வந்து இருநூறு பேரின் உயிரை உருவி நாட்டின் பாதுக்காப்பையே எள்ளி நகையாடிவிட்டு செல்லலாம். ஒரு எண்பது வயது மூதாட்டி, ஆறு மாத விசாவோடு மருத்துவத்திற்காக தமிழகத்தின் மண்ணை மிதிக்க கூடாதாம். 

பல நாடுகளில் இருந்து பல ஊர்களில் இருந்து வந்து இங்கு வாழலாம்.  வந்தாரை வாழ வைக்குமாம் தமிழ் நாடு...ஆனால் தமிழ் தாயை மட்டும் திருப்பி அனுப்பி விடுமாம். காரணம். பாதுகாப்பாம்.உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது. தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு பூரண கும்ப மரியாதை. போர் வாசனை அறியாத ஒரு தமிழ் மூதாட்டிக்கு தமிழகத்தில் கால் வைக்க மறுப்பு. 

தமிழர்களின் மேல் உள்ள மத்திய அரசின் வெறுப்பும், தமிழகத்தை ஆள்வோரின் பச்சோந்தி தனமுமே இதற்க்கு காரணம்.

ஒரு இந்தியனாக, ஒரு  தமிழனாக இருப்பதற்கு வெட்கி தலை குனிகிறேன்.

திரைப்படம்: அனுரணன் (வங்காளம்)-உருக்கும் காதல்!





வங்காளம், உலகின் சிறந்த இயக்குனர் மற்றும் கவிஞரை நம் தேசத்திற்கு அளித்துள்ளது. இந்தியாவின் சிறந்த பத்து இயக்குனர்களை பட்டியலிட சொன்னால் அதில் நிச்சயம் சத்யஜித் ரே, ஷ்யாம் பெனேகல், ரிதுபர்ன கோஷ், அபர்ணா சென் என முக்கால் வாசி இடத்தை வங்காளியர் நிரப்பிக் கொள்வர். அந்த வங்காள மொழியில் வெளி வந்து சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்படம் விருதினை வாங்கிய அனுரணன் திரைப்படம் காணக் கிடைத்தது.

நம் தமிழின் மௌன ராகத்திற்கு பிறகு, கணவன் மனைவியருக்குள் நடக்கும் நுண்ணிய உணர்வுகளை படம் பிடித்து காட்டி இருக்கும் படம் என்னை பொறுத்தவரையில் இதுவே. இரண்டு கணவன் மனைவியரின் வாழ்க்கையை சுற்றியே படம் முழுக்க சுழல்கிறது. என்றாலும், அவர்களது ஏக்கங்கள், அவர்களது விருப்பங்கள், பிரச்சனைகளை கையாளும் யுக்திகள் என அவர்கள் வாழ்கை நுணுக்கமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது .

ராகுல் சட்டர்ஜி, லண்டனில் ஒரு பெரிய கம்பனியில் ஆர்கிடெக்ட்.அவனது காதல் மனைவி நந்திதா. அவர்களுக்கு ஒரு குழந்தை இறந்து பிறந்தது. அதன் பின்னர் குழந்தை இல்லை. இருந்தாலும் அவர்கள் காதல் மென் மேலும் வளர்கிறது. அவர்களது அன்னியோன்யம், மற்ற கணவன் மனைவியிரடித்தில் பொறாமையை ஏற்ப்படுத்தும். ராகுலின் கம்பனி அவனை கஞ்சஞ்சன்காவில் கட்டும் ஒரு கட்டிட பணிக்காக, கல்கத்தாவுக்கு மாற்றல் செய்கிறது. ராகுலும் நந்திதாவும் இந்தியாவில் வேலை என்பதால், சந்தோஷமாக ஒத்து கொண்டு கல்கத்தா சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

லண்டனில் வழியில் பார்த்து இருவரும் கல்கத்தா என்பதால் பழக்கம் ஏறபடுத்திக் கொள்கிறார்கள். ராகுலும், சேல்ஸ் மேன்  அமித் பானர்ஜியும். கல்கத்தா வந்த பிறகும் இவர்கள் நட்பு தொடர்கிறது.அமித்தின் மனைவி ப்ரீத்திக்கும் ராகுலுக்கும், தாகூரின் கவிதைகள் இலக்கியம், மற்றும் இயற்கையை ரசிப்பது என பரஸ்பரம் சிந்தனைகள் ஒத்து போகிறது. குழந்தை இல்லா துக்கத்தில் இருக்கும் நந்திதா, ஒரு பள்ளியில் ஆசிரியை யாக வேலை செய்கிறாள். ராகுல் அவ்வப்போது கல்கத்தாவிலிருந்து கஞ்சஞ்சன்காவிற்கு ப்ராஜெக்ட் விஷயமாக சென்று வந்த படி இருக்கிறான்.

எப்போது பார்த்தாலும் பணத்திலேயே குறியாக இருக்கும் அமித் தனது மனைவியை மற்றும் அவளது எண்ணங்களை மதிப்பதில்லை. ராகுலுக்கும் தனக்கும் ரசனை ஒத்து போகிறபடியால், இருவரும் தங்களது இயற்க்கை மற்றும் இலக்கிய ரசனைகளை பரிமாறி கொள்கிறார்கள். 

ஒரு முறை, ராகுல் ப்ரீதியுடன், கஞ்சன்ஜங்கா மழையின் அழகையும், சாயங்கால வேளைகளில் நிலவின் கதிர்கள் பட்டு மலை முகடுகள் தகிக்கும் அழகையும் விவரிக்க அவளுக்கும் அந்த அழகை பார்க்க ஆவல் மேலிடுகிறது.  ஒரு முறை, அமித் அலுவலக விஷயமாக திடீரென லண்டன் கிளம்பி சென்றுவிட, நேரம் போகாத ப்ரீத்தி, கஞ்சஞ்சன்காவிற்கு கிளம்பி செல்கிறாள். அவளை வரவேற்கும் ராகுல், அவளுக்கு கஞ்சன்ஜன்காவின் மலைகளை அதன் அழகை, நிலவின் கதிர்கள் மலைகளின் பட்டு தெறிக்கும் அதிசயங்களை காண்பிக்கிறான். ராகுலின் மனைவியை அறிந்திராத, ஹோட்டல் காரன், அவளை அவனது மனைவி என்று ரெஜிஸ்டரில் பதிகிறான். இருவரும் வேறு வேறு அறைகளில் குட் நைட் சொல்லி தூங்க போகிறார்கள்.

காலை கதிரவனின் கதிர்கள் பட்டு ஜொலிக்கும் மலை பிரதேசங்களை கண்ட ப்ரீத்தி ஓடி சென்று ராகுலின் அறைக்கு சென்று அவனை எழுப்ப, அவன் அன்றைய இரவில் ஏற்பட்ட மாரடைப்பினால் இறந்தது போய் இருக்கிறான். சந்தர்பங்களும் சாட்சியங்களும், ராகுலுக்கும், ப்ரீத்திக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கிளம்பி விட.. ஒரு புனிதமான நட்பு களங்கப்பட, அமித்தும் ப்ரீத்தியை சந்தேகப்பட, நந்திதா என்ன முடிவு எடுக்க போகிறாள் என நாம் நகம் கடித்தபடி காத்திருக்கிறோம். 

ப்ரீத்தி தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் கிடத்தி இருக்க ஓடோடி சென்று பார்க்கிறாள் நந்திதா... 
'எப்போதும் நான் பறவையாக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் என் சிறகுகளை சின்ன சின்னதாய் பிய்த்து போட்டு அழகு பார்க்கிறது இந்த சமூகம்' என ப்ரீத்தி கதற...

'அடி லூசு பொண்ணே, சிறகுகள் கொண்டு பறக்க உன்னால் எப்படி முடியும், உன் உணர்வுகளை கொண்டு பற நிச்சயம் நீ பறவையாக உணர்வாய்' என கூறுவதோடு கவிதைத்தனமான முடிவு கொண்டு படம் முடிகிறது.

படத்திற்கு பெரும் பலம், படத்தின் கவிதை நயமுள்ள வசனங்கள். ஒவ்வொரு வசனமும் நம்மை 'அட' போட வைத்துக்கொண்டே இருப்பதற்கு காரணமானவர் வசனகர்த்தா கௌரவ் பாண்டே. கஞ்சன்ஜன்காவின் அழகை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது சுனில் படேலின் அருமையான ஒளிப்பதிவு.

ராகுலாக நடித்திருக்கும் ராகுல் போசின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும்,நந்திதாவாக நடித்திருக்கும் ரிதுபர்னா சென் குப்தாவின் முகத்தின் உணர்வுகளையும் விட, நந்திதாவாக நடித்துள்ள ரெய்மா சென்னின் கண்களே பாதி வசனங்களை பேசி விடுகிறது.

நமக்கே ராகுல் மீதும் நந்திதா மீதும் சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கில் காட்சிகள் வைத்தும் அவர்களின் நட்பின் புனித தன்மையை கவிதையாக சொல்லி இருப்பது இயக்குனர் அநிருத்த ராய் சௌதரி இன் திறமை. படம் சிறிது மெதுவாக நகர்ந்தாலும், உணர்வுகளை புரிந்து கொள்ள அந்த தொய்வு அவசியம் தானென தோன்றுகிறது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம் என தேசிய விருதுகளை அனுரணன் வாங்கியுள்ளது.

அனுரணன் -கவிதை.

Monday, April 12, 2010

ஆப்பிள் ஐ பேட்.

அதென்னவோ, பலருக்கு ஆப்பிள் மீது தீராத மோகம். நான் சொல்வது உண்ணும் ஆப்பிள் அல்ல. ஆப்பிள் என்னும் பிராண்ட் கம்பெனி பற்றி. ஸ்டீவ் ஜாப்ஸ். இந்த பெயரை கேட்காத டெக்னாலஜி மக்கள் ரொம்ப கம்மி. ஆப்பிள் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, மைக்ரோசாப்ட் க்கு எதிராக புதிய ஒபெரடிங் சிஸ்டம் கொண்டு வந்தது முதல் இவரை டெக்னாலஜி உலகம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. பின்னர் இவர் பிக்ஸார் ஸ்டூடியோ, நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என அங்கு இங்கு என அல்லாடி கொண்டிருக்கும் வேளையில், தான் ஆரம்பித்த ஆப்பிள் நிறுவனம் தள்ளாடி கொண்டிருப்பதை கண்டு, மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்து புதிது புதிதாய் எலேக்ட்ரோனிக் சாதனங்களை சந்தையில் இறக்க... சூடு பிடித்து கொண்டது ஆப்பிள். எப்போடா அடுத்த சாதனத்தை இவர் அறிமுகபடுத்துவார் என உலகம் முழுக்க ஆப்பிள் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.


முதலில் காசெட் வாக் மான், பின்பு சி டீ பிளேயர், என வந்திருந்த காலத்தில், புதிதாக, பாடல்களை அதிலேயே சேமித்து வைத்து கொள்ளும் ஐ பாட் அறிமுகபடுத்தி, ஆப்பிள் தனது ஏறு முகத்தை ஆரம்பித்தது. ஐபாட் சக்கை போடு போடா, அடுத்து செல் போன்களில் கவனம் வைத்து ஐ போனை இறக்கியது. எதிராளிகளின் அனைத்து போன்களையும் ஓரக்கட்டியது. ஆப்பிள் ஏர் லேப்டாப், ஐ பாட் டச் என தனது புதிய கண்டுபிடிப்புகளை இறக்கி, மக்களை பைத்தியம் கொள்ள வைத்த ஆப்பிள் இப்போது இறக்கி இருப்பது, இணையத்தின் வசதிகளுடன் கூடிய போன் இல்லாதஒரு பெரிய சைஸ் ஐபோன்  தான் ஐ பேட் .

ஐ பேட் அறிமுகமான மார்ச் 26  மட்டுமே  மூன்று லட்சம் விற்று தீர்ந்தது. அறிமுகமான மூன்று நாட்களில் ஒரு மில்லியன் ஐ பேட்கள் விற்று விட்டது. மக்கள் அமெரிக்காவில் கியூவில் நிற்கிறார்கள், இதனை வாங்குவதற்கு.

சரி அப்படி ஐ பேடில் என்ன என்ன பயன்கள் இருக்கு? அதுல என்ன எல்லாம் செய்யலாம்?
1. ஐ பேட்க்கு மௌஸ் தேவை இல்லை. ஐ பேட்டின் மௌஸ் உங்கள் விரல்கள் தான். ஆம். விரலை ஐ பேடில் வைத்து கீழே இழுத்தால் திரை கீழே போகிறது. மேலே இழுத்தால் மேலே, பக்கவாட்டில் இழுத்தால் பக்கவாட்டில். உலகம் இனி உங்கள் விரல் நுனியில் என்றால், அது ஐ பேடை பொறுத்தவரை உண்மை.
2.  ஈ மெய்ல் அனுப்பவேண்டுமேன்றால், ஐ பேட் திரையிலேயே ஒரு கீ போர்டு வருகிறது. அதில் தட்டச்சு செய்து ஈ மெயில் அனுப்பலாம். ப்ளாக் எழுதலாம். தனியாக கீ போர்டு பொருத்தி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

3. ஐ பேட்டின் திரை, ஹை டெபானிஷனில் இருப்பதால், படங்கள் அவ்வளவு தெளிவு. இதில் உங்கள் புகைப்படங்கள் மற்றும் இணையத்தில் உள்ள திரைப்படங்கள், ஒளியும் ஒலியும் ஆகியவை தெள்ளதெளிவாக காணலாம்.
4. ஐ போட் ஆகவும் இது வேலை செய்கிறது. உங்களுக்கு தேவையான  பாடல்களை கேட்டு மகிழலாம்.
5.  வீடியோ கேம்ஸ் விளையாடி கொள்ளலாம்.
6. ஐ புக்ஸ் எனும் ஆபிளின் ஆன்லைன் வர்த்தக இணையத்தில் உங்களுக்கு தேவையான புத்தகத்தை வாங்கி அதனை தரவிறக்கம் செய்து ஐ பேடில் படித்து கொள்ளலாம்.

7. கூகிளின் மாப்ஸ் காண வழி வகை உண்டு என்பதால், உங்கள் நண்பனின் வீட்டுக்கு வழி தெரியாமல் அல்லாட வேண்டியதிலை.( இதற்க்கு 3G தொழில் நுட்பம் அவசியம். இந்தியாவில் எப்போது வருமென தெரியவில்லை.)
8.வீட்டம்மணி சொல்லும் கறி காய் மற்றும் பல சரக்கு சாமான்களை ஐ பேடில் எழுதி வைத்து, வரும்போது அவள் சொன்ன சாமான்கள் அதனையும் மறக்காமல் வாங்கி வந்து..'இந்த மனுஷனுக்கு எத்தன தடவ சொன்னாலும்...' போன்ற அர்ச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
9. உங்கள் நாட்குறிப்புகளை தடவி(எழுதி) வைக்கலாம்.
10. ஐ பேட் வாங்கி தடவல் மன்னன் என்ற பெயர் வாங்கலாம்.
11. லாம்.. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...

ஐ பேட் சந்தைக்கு வந்தபின் அதனை சுற்றி பிரச்சனைகளும் வந்தாச்சி. வொயர்லெஸ் சரியாக வேலை செய்யவில்லை, எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிரைவ் பொறுத்த இயலவில்லை, யு எஸ் பீ போர்ட் இல்லை என பல இல்லைகள்.

ஆப்பிள் இன் ஐ பேட் க்கு போட்டியாக இப்போது எச் பீ நிறுவனம் புதிய டேப்லெட் பீ சி யுடன் களமிறங்கி இருக்கிறது. சரியான போட்டி இருக்கும் என தெரிகிறது.

இருந்தாலும் ஆப்பிள் இன் வெறி பிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில், ஆப்பிள் எந்த சாதனத்தை புதிதாக அறிமுகப்படுத்தினாலும் அதனை வாங்கி சந்தோசம் அடையும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும், ஒரு ஆப்பிள் ஸ்டோரில் சந்தித்து காதலித்து ஒரு ஆப்பிள் ஸ்டோரிலேயே மணம் முடித்த கதையும் உண்டு.

ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்த போகும் அடுத்த ஆப்பிள் இன் சாதனத்துக்கு டெக்னாலஜி உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
--

Friday, April 9, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-2 மல்லிகா..ஓ மல்லிகா..



கோவையில் அன்று இரவு..ராகவனும் கனகாவும் கட்டிலில் படுத்திருந்தனர்.

மின் விசிறி ஓடி கொண்டிருந்தாலும் வேர்த்துக் கொட்டியது.

'எனக்கு மல்லிகாவ நெனச்சா கவலையா இருக்கு. இவ்ளோ வயசாகியும் அவ பண்ற ரகளை தாங்க முடியல' ராகவன் கவலையோடு பேசினான்.

'போன மாசம் கூட பாரு, அவ ஸ்கூல்ல படிக்கற ராஜீவ அடிச்சிட்டா. அந்த பையனோட அப்பா பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளைன் பண்ணி இவள சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க'

'ஸ்கூல்ல சேந்து ஆறு மாசம் தான ஆகறது. போக போக சரி ஆய்டும்' என்றாள் கனகா.

'எப்போ பாரு ஸ்கூல்ல இருந்து எதாச்சும் பிரச்சன பண்ணிட்டு வந்துடறா.ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் அவ மேல..'

'ஸ்கூல் நா அப்படி தான் இருக்கும். '

'ஸ்கூல் விட்டா சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டியது தான.. அவ வீட்டுக்கு போறேன் இவ வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு  ரொம்ப லேட்டா வீட்டுக்கு வரா..'

' அவளுக்கும் பிரெண்ட்ஸ் இருக்க கூடாதா'

'பக்கத்துக்கு வீட்டு மாலதி கூடையும் சண்டை.'அன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வரேன்.. ரெண்டு பெரும் முடிய புடிச்சிட்டு நிக்கறாங்க. சமாதனம் பண்றதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆய்டுச்சி.'

'அவ மல்லிகா கிட்ட என்ன பிரச்சனையை பண்ணினாளோ..?'  

'அவ பிரச்சனையை பண்ணினா என்ன. இவ அடங்கி போகலாம்ல.அவளுக்கு ரொம்ப கோவம் வருது. இந்த வயசுல இந்த அளவுக்கு கோவம் வரகூடாது. கைல கெடைக்கறத தூக்கி அடிக்கறா..'

'நீங்க தான் கொஞ்சம் பொறுமையா இருக்கனும்' என்றாள் கனகா.

'நீ எப்போ பாரு அவளுக்கே சப்போர்ட் பண்ணு. பெரியவங்கள எதுத்து பேசறா. எங்க அம்மாக்கு கூட மரியாதை குடுக்க மாட்டேன்கறா. இத எப்படி மாத்தறதுன்னு தெரில.'

'எல்லா பொண்ணுகளும்  இப்போ அப்படி தான் இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க'-கனகா.

'இப்போ கூட சம்மர் வக்கேஷனுக்கு சென்னை போகணும்னு ஒரே அடம். சரி அவ ரகளை கொறஞ்சா சரின்னு அனுப்பி வச்சிட்டேன்.' 

' அவ கேட்டான்னா ஒடன அனுப்பி வச்சிடிங்களே.அது அவளுக்கு குடுக்கற செல்லம் ஆகாதா..?.' கேட்டாள் கனகா.

'எப்படியோ அவள் ரகளை கொறஞ்சி நாம நிம்மதியா இருந்தா சரி.' என்றான் ராகவன்.

'சரி எனக்கு நேரம் ஆய்டுச்சி. குடுக்க வேண்டியது குடுத்தா நான் கெளம்பிட்டே இருப்பேன்' உடைகளை அணிந்தபடி கூறினாள் கனகா.

ராகவன் எழுந்து தனது பர்சில் இருந்து ரூபாய்களை எண்ண ஆரம்பித்த அதே நேரம்,  கோவை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறியபடி பள்ளிகூடத்தில் ஆறு மாதங்களுக்கு முன் டீச்சராக வேலைக்கு சேர்ந்த ராகவனின் மனைவி மல்லிகா தனது அப்பா அம்மாவுக்கு 'டாடா' சொல்லிக்கொண்டிருந்தாள்.
--

Tuesday, April 6, 2010

கூகிள்...!

கூகிள் ஆண்டவர், கூகிளாயினி..என பதிவர்கள் பலவாறும் இதற்க்கு பெயர் வைத்து அழைக்கிறார்கள்.  எதாவது தகவல் வேண்டுமா... கூகிளை அழைத்தால் போதும், தகவல்களை நொடி பொழுதில் கொண்டு வந்து கொட்டும் அமுதசுரபி. இது எப்படி சாத்தியமானது. இவ்வளவு பெரிய சாதனையை சாதித்தவர்கள் யார்? கூகிள் என ஏன் பெயர் வைத்தார்கள்...?

அதற்க்கு நாம் 1995   ஆம் ஆண்டுக்கு செல்ல வேண்டும்.

லாரி பேஜ் முதன் முதலாக அமெரிக்காவின் முதன்மை பல்கலை கழகமான ஸ்டான்போர்ட் யுனிவெர்சிட்டி இல் பி எச் டீ படிப்பதற்காக சேர்கிறான். அவனுக்கு பல்கலை கழகத்தை சுற்றிகாட்ட நியமிக்கப்பட்டவன் தான் செர்ஜி. அவர்களது முதல் சந்திப்பில் பல விடயங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன என தகவல் உண்டு. தங்களது பட்ட படிப்பின் ஆய்வுக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த செயல்முறை பாடம் தான் ஒரு தேடு தளத்தை(search engine) உருவாக்குவது.

அவர்கள் இருவரும் இணைந்து முதன் முதலாக உருவாகிய தேடு தளம் பாக் ரப்(Back Rub). (பெயரை கவனியுங்கள்...!). ஸ்டான்போர்ட் யுனிவெர்சிட்டி இல் ஒரு வருடமாக பாக் ரப் உபயோகப்படுத்தப்பட்டது. என்றாலும் அதிக அலைவரிசைகளை (bandwidth) உள்வாங்கி கொள்கிறது என்ற குற்றசாட்டு எழுந்தது. ஒரு நாடகத்தில் கூகாள்(googol)  என்ற முறை வந்தது. எண் ஒன்றும் அதற்க்கு பின்னால் நூறு பூஜ்யங்களுமே கூகாள் என அழைக்கப்பட்டது. இவர்களின் தேடு தளத்திற்கான பக்கங்கள் அனைத்தும் ஒன்றாலும் பூஜ்யங்களாலும் தேடப்படுவதால், தங்களது தேடு தளத்திற்கு சிறிது ஸ்பெல்லிங்கை மாற்றி கூகிள் (google) என பெயர் வைத்தனர்.

செப்டம்பர் 15 1997 இல் google.com என்ற கம்பனி பதிவு செய்யப்பட்டது. இந்த இளைஞர்களின் துடிப்பையும் இவர்களது தொலைநோக்கு பார்வையாலும் கவரப்பட்ட சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இன் உரிமையாளர்களின் ஒருவரான ஆண்டி பெக்டோஷெய்ம   (Andy Bechtolsheim) இவர்களது ப்ரோஜெக்ட்க்கு 100,000 அமெரிக்க டாலர்களை அளித்தார். அதனை கொண்டு தங்களது தோழியான சூசனின் (Susan Wojcicki)  கார் கராஜில் 1998 செப்டெம்பரில் தங்களது கம்பனியை துவக்கினர். அதன் பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு.


கூகிள் இந்த கார் கராஜில் தான் முதன் முதலில் துவக்கப்பட்டது.

இன்று பல துறைகளில் கால் பதித்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் க்கு சிம்ம சொப்பனம் இவர்கள் இருவரும் தான்.  உலகத்திலயே மிக சிறந்த அலுவலகம் என்றால் அது கூகிள் அலுவலகம் தான். ஆம் தங்களது அலுவலகர்களை தங்கம் போல பாதுகாக்கிறது கூகிள் நிறுவனம்.


 லாரி பேஜ் மற்றும் செர்ஜி

கூகிள் அலுவலகம் இன்று...

கூகிளின் வியாபார தந்திரமாக 'கிளிக்கினால்' பணம் என்ற புதிய முறை உருவாக்கப்பட்டது. விளம்பரதாரர்களின் விளம்பரங்களை, கூகிள் உபயோகிப்பவர்கள் கிளிக் செய்தால், கூகிளுக்கு பணம் சென்று விடுகிறது. இதன் மூலம் பெரும் பணத்தை கூகிள் ஈட்டியது.மேலும் அவர்களது வியாபார டெக்னிக்குகள் பல கம்பனிகள் அறிந்திருக்கவில்லை.

கூகிள் மாப், கூகிள் போன், கூகிள் ப்ளாக்கர், கூகிள் நியூஸ், ஆர்குட்.கூகிள் எர்த்  என இவர்கள் எல்லைகள் விரிந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு சிறு பொறியில் உருவானது கூகிள். இன்று அது பலருக்கும் கேட்டதை கொடுக்கும் கடவுளாக இருக்கிறது.
--

Sunday, April 4, 2010

உலக சினிமா: 'தி ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker)-போர் முனை தாகம்.



உலக திரைப்பட வரலாற்றில் ஒரு பெண் இயக்குனர் போர்கால காட்சிகளை இவ்வளவு தத்ரூபமாக திரைப்படமாக பதிந்ததில்லை. பெண் திரைப்பட இயக்குனர் என்றாலே, மென்மையான காதல் கதைகள், பெண்ணுரிமை, குடும்ப கதைகள் என்பதையே கையாளும் வழமையை உடைத்து, வேறுபட்ட போர் திரைப்படம் எடுத்து அதற்காக ஆஸ்கார் விருதையும் வென்று சரித்திரம் படைத்துள்ளார், அவதார் படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவி காத்தரின் பிகாலோ.

இராக்கில் வெடிகுண்டு செயலிழக்கவைக்கும் வேலையில் ஒரு விபத்தில் ஒரு வெடிகுண்டு நிபுணன் மரணிக்க, அந்த
குழுவுக்கு தலைமை ஏற்று வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்க வருகிறான் வில்லியம் ஜேம்ஸ். முதலில் வெடிகுண்டுகள் இருக்கும் பார்சலை ஒரு ரோபோவின் துணை கொண்டு ஆராய்ந்து அது என்னவிதமான வெடிகுண்டு, அதில் டைம் செட் செய்யப்பட்டுள்ளதா என ஆராய்ந்து அதன் பின்னரே வெடிகுண்டு நிபுணர்கள் அதன் அருகில் செல்வார்கள்.

மரணத்துக்கு அஞ்சாத வில்லியம் ஜேம்சோ நேராக சென்று தன் கைகளினால் ஆராய்ச்சி செய்வது அவனது குழுவில் இருக்கும் மற்றோருக்கு அச்சத்தையும் எரிச்சலையும் அளிக்கிறது.அவனுடைய குழுவில் அவன் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் வேலையில் அவனுக்கு பாதுகாப்பாக இருப்பவர்கள் சான்பர்ன் மற்றும் ஓவென் எல்ட்ரிஜ். அவர்களின் பணிக்காலம் ஒரே ஒரு மாதம் மட்டுமே இராக்கில் இருக்க வேண்டி இருக்க, ஜேம்ஸ் எடுக்கும் ரிஸ்க்குகள் அவர்களின் வாழ்க்கைக்கே அபாயத்தை உண்டு பண்ணி விட கூடிய சூழல் உருவாகிறது. ஒரு முறை வெடிகுண்டுகளை தேடி புறப்படும் ஜேம்ஸ், ஒரு வேண்டிகுண்டு பல வெடிகுண்டுகளுடன் பிணைக்கப்பட்டு இருப்பதை கண்டு படம் பார்க்கும் நமக்கும்  பல்சை எகிற வைக்கிறது.

பிரிட்டன் போர் வீரர்களுடன் சேர்ந்து எதிரிகளை ஒரு வறண்ட பாலைவனத்தில் தடுப்பு ஏற்படுத்திக்கொண்டு சுட்டு சாய்ப்பது, நடு இரவில் வெடிகுண்டு வைத்தவனை தேடிப்போய் வலிய மாட்டிக்கொள்ள, எதிரிகளின் குண்டு ஓவனின் காலை பதம் பாக்க, எனக்கு இப்படி நேர்ந்ததுக்கு காரணம் நீ தான் என ஓவென் ஜேம்சிடம் குதிக்க, ஜேம்ஸ் தனது போர் போதையை உணர்கிறான்.

பெக்கேம் என்ற தனக்கு நட்புக்கு பாத்திரமான அந்த இராக்கிய சிறுவன் கொந்தப்பட்டு ஒரு மனித வெடிகுண்டாக அவனது பிணத்துக்குள் வெடிகுண்டு பிணைத்திருக்க, கைகள் நடுங்க உள்ளத்தை உலுக்க ஒவ்வொரு சதையாய் பிய்த்து வெடிகுண்டு தேடும் கோரம் ஜேம்ஸின் நடிப்பில் பட்டு தெறிக்கிறது. இதய பலம் உள்ளவர்கள் மட்டுமே இந்த காட்சியை பார்க்க முடியும்.

படத்தின் இறுதியில் ஒருவனின் உடல் முழுதும் வெடிகுண்டுகள் பிணைக்கப்பட்டு பூட்டுகள் போடப்பட்டு அமெரிக்க ராணுவ முகாம் மீது தள்ளப்பட, அவனோ , 'நான் யாதொரு குற்றமும் அறியாதவன், எனக்கு குடும்பமும் பிள்ளைகளும் உள்ளனர், என்னை காப்பாற்றுங்கள் என கதறும்போது, அவன் மேல் இரங்கும் ஜேம்ஸ், தன் உயிரையும் பொருட்படுத்தாது அவனை நெருங்கி காப்பாற்ற முயல, அது டைம் பாம் என அறிந்து அவனை காப்பாற்ற முடியாமல் பின் வாங்கும்போது அந்த குண்டு வெடித்து அவன் சின்னாபின்னாமாகும் காட்சி பல இரவுகள் நம்மை தூங்க விடாது.

அந்த காட்சிக்கு பின்னர் சன்பார்ன் ஜேம்சிடம், 'எதற்காக இங்கே வந்தோம். எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், எனக்கு ஒரு மகன் வேண்டும் என கதறும்போது, இராக் போருக்கு உத்தரவிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மீது கோவமாக வந்தது.

தனது போர் காலம் முடிந்து வீடிற்கு வந்த ஜேம்ஸின் மனதில் நிம்மதி இல்லை. அவனது எண்ணமெல்லாம் மீண்டும் எப்போது தான் போருக்கு போக போகிறோம் என்பதிலேயே இருக்கிறது. தன் குழந்தையிடம், 'இப்போது நீ விளையாடும் இந்த பொம்மை நாளை உனக்கு பிடிக்காமல் போகலாம். உனக்கு வேண்டும் என தோன்றுவது குறுகி கொண்டே வரலாம், உனக்கு பிடித்ததை மட்டுமே நீ தேர்ந்தெடு' என கூறும் அடுத்த காட்சி, மீண்டும் ஒரு போர் முகத்தில் வெடிகுண்டை தேடி ஜேம்ஸ் புறப்படுவதோடு படம் முடிவடைகிறது.



போர் திரைப்படம் என்றால் இரு நாடுகளுக்கு இடையான சண்டை என்பதாக தான் பெரும்பாலும் இருக்கும். இந்த படத்தில் இயக்குனர் கையாண்டு இருப்பது ஒரு வெடிகுண்டு நிபுணனின் வாழ்க்கை. உயிருக்கு சிறிதும் அஞ்சாது, தனது ஆபத்தான வேலையை ஒரு போதை போல நினைத்து இயங்கும் வெடி குண்டு நிபுணனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் ஜெரேமி ரன்னர்.

படத்தின் திரைக்கதை   , மார்க் போயல், இராக்கில் நடந்த போரில், தானும் ராணுவ வீரர்களுடன் சென்று அவர்களது  வாழ்கையை திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்.படத்தை ஒரு டாகுமெண்டரி எபக்டில் எடுக்கவேண்டும் என தனது ஒளிப்பதிவாளரான பேரி அக்ராய்த் க்கு உத்தரவிட்டிருந்ததாக படத்தின் இயக்குனர் காத்தரின் பிகளோ ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.

'இந்த திரைப்படம், படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் போர் நடக்கும் இடத்துக்கு கூட்டி செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் படமாக்கப்பட்டது' என்றும் அவர் கூறுகிறார்.அந்த நோக்கம் நிச்சயமாக நிறைவேறி இருக்கிறது.

2010 ஆஸ்காருக்கு ஒன்பது விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டு,
சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய அனைத்து முக்கிய விருதுகளையும் தட்டி சென்றது. இது தவிர சென்ற இடங்களெல்லாம் விருதுகளை குவித்தது.

இத்திரை படம் பார்த்ததும், போரின் மீது வெறுப்பும், நம் ராணுவம் மீது மதிப்பும் பெருகுகிறது.

படத்தின் முன்னோட்ட காணொளி இங்கே.

Thursday, April 1, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-1 ராதா விஜயம்!


'ராதா அப்போ நீ கண்டிப்பா வரியா.. நாங்க 4 பசங்க ஒரு சின்கிள் பெட்ரூம் அப்பார்ட் மென்டில தங்கி இருக்கோம். நீ வந்தா உனக்கு ஒரு தனி ரூம் குடுத்துடறோம். நாங்க 4 பெரும் ஹால்ல படுதுக்கறோம். இருந்தாலும் 4 பசங்க கூட தங்கறதுல உனக்குப்ரோப்ளேம் இல்லையே?'

நான் என்னுடைய அலை பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். ராதாவுடனான எனது பேச்சை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர் எனது அறை நண்பர்கள், ஆனந்த்,அஜய் மற்றும் சந்தர்.
நாங்கள் ப்ராஜெக்ட் விஷயமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஒரு அப்பார்ட்மென்ட் எடுத்து வசிப்பவர்கள். யாருக்கும் மணமாகி இருக்கவில்லை.

அது ஒரு நவம்பர் மாதம். வருகிற லாங் வீகென்ட்க்கு நோர்த் கரோலினா போகலாமென முடிவு செய்து வைத்திருந்தோம்.
நான் தொலைபேசி முடித்ததும், என் நண்பர்களிடம் கூறினேன்.
'வருகிற லாங் வீகேண்ட்க்கு என் பிரெண்ட் ராதா நம் வீட்டில் தங்கலாமா...நம்முடன் நோர்த் கரோலினா வரலாமா? உங்களுக்கு ஏதும் ப்ரோப்ளேம் இருக்குதா?'
சந்தர் ஆரம்பித்தான்.
'வேண்டாம் நரேன். மூணு ஆம்பிளைங்க இருக்கற இந்த ஒரு பெட்ரூம் அபார்ட்மென்ட்ல தங்கினா..ராதாவுக்கும் கஷ்டம்.. நமக்கும் கஷ்டம்.'

ஆனந்த்க்கும், அஜய்க்கும் கோவம் வந்து விட்டது.
'மச்சி நீ மூடு..உனக்கென்ன. அவங்க வரதா இருந்தா வந்துட்டு போகட்டுமே. பாவம்' இது ஆனந்த்.
'வரட்டும் மச்சி. நமக்கென்ன ப்ரோப்ளேம் இருக்க போகுது. அவங்களுக்கு ப்ரோப்ளேம் இல்லன்னா நமக்கும் ஒன்னும் இல்லை தானே' -அஜய்.
'இல்ல நரேன் அவங்களுக்கு வேனா ஒரு ஹோட்டல் புடிச்சி தந்திருவோம் நம்மளோட தங்கறது நல்லபடியா படல.'

'டேய் அவங்க...பொண்ணு, பாவம்... ஹோடெல்ல தங்கி பழக்கமிருக்குமோ என்னவோ. நாம அந்த பெட்ரூம் அவங்களுக்கு குடுத்துட்டு ஹால்ல படுத்துக்கலாம். ' ஆனந்த்.

'ராதா நம்ம கூட தங்கினது இந்தியாவுல இருக்கவங்களுக்கு தெரிஞ்சா நம்மள பத்தி தப்பா நெனைக்கமாட்டாங்களா..? ராதாவோட வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்க?'

'அவங்களே அத பத்தி நெனைக்கல. உனக்கு ஏன் இப்படி புத்தி போகுது.. அதுவும் இந்தியாவுல இருக்கறவங்களுக்கு இங்க நடக்கறது எப்படி தெரியபோகுது. நீதான் டி வீ சேனல்ல வர மேட்டர் படம் எல்லாம் ஒன்னு விடாம பாக்கறியே.. அது எல்லாம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சி போச்சா என்ன...' ஆனந்தின் கோவம் அவன் முகத்தில் தெரிந்தது.

பிரச்சனையை பெரிதாவதை உணர்ந்த நான்...' ஐயோ நமக்குள்ள பிரச்சனை வேண்டாம். ராதாவ வரவேண்டாம்னு சொல்லிடறேன்.'

'இல்ல பாவம் அவங்க இப்பதான் இந்தியால இருந்து வந்திருக்காங்கன்னு சொல்ற..லாங் வீகென்ட் நாலு நாள் லீவு. அவங்க அங்க தனியா என்ன பண்ணுவாங்க. தமிழ் கூட பேசறதுக்கு ஆள் இருக்காது.' கவலைப்பட்டவன் அஜய்.

'அவங்க வரத பத்தி ஒண்ணும் இல்லை. வந்து இங்க ஹோட்டெல தங்கிக்கட்டும்ன்னு தான் சொல்றேன்'. அவங்க வரவேண்டாம்னு சொல்லலை. வரலைனா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன் என்ற கமல் டயலாக் மாதிரி பேசினான் சந்தர்.

'நரேன், இவனுக்கு கஷ்டமா இருந்தா இந்த நாயி வேணா ஹோடெல்ல தங்கிக்கட்டும்.நீ ராதாவ வர சொல்லு ' ஆனந்த் கோவத்தின் உச்சியில் கத்தினான்.

'அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் செய்யணும் யாரு செய்வா வந்தவங்கள் ஒழுங்கா கவனிக்கனும்ல.. நம்ம செய்யற சாப்பாடு அவங்களுக்கு பிடிக்குமோ என்னவோ... ' சந்தர் சொல்ல...உருளை கிழங்கை வறுத்து கொண்டிருந்த ஆனந்த் கரண்டியை எடுத்து அவன் முகத்தில் விட்டெறிந்தான்.

'என்னவோ இவன் சமைக்கிற மாதிரி பெருசா பேசி கிழிக்கறான். நான் எதுக்கு இருக்கேன். நான் சமைக்க மாட்டேனா.. என்னோட சாப்பாடு சாப்பிட்டு தான வளந்த.. '

'பாத்திரம் எல்லாம் வேணா நான் கழுவி வச்சிடறேன். எனக்கு ஒண்ணும் ப்ரோப்ளேம் இல்லை' என்றான் அஜய்.

'சரி மச்சி ராதாவ வர சொல்லலைனா என்னை விட்டு தொரத்திருவாங்க போல இருக்கு. பேசாம வர சொல்லிடு. பிரச்சன எதுவும் வந்தா நான் பொறுப்பில்ல' வேண்டா வெறுப்பாக சம்மதம் தந்தான் சந்தர்.

வர சொல்லி நானும் ராதாவிடம் சொல்லிவிட்டேன். இங்க நடந்த கூத்துகளை சொல்லவில்லை.

அதுவரை தரையில் தான் அமர்ந்து செய்தி தாள் விரித்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். ராதாவின் வருகையை ஒட்டி புதிய மேசை மற்றும் நாற்காலிகள் வாங்கப்பட்டது.

அந்த படுக்கையறை, புதிய கட்டில் மட்டும் மெத்தை விரிப்புகளுடன் தயாரானது. வீடு சுத்தம் செய்யப்பட்டது. பூ ஜாடிகள் வைக்கப்பட்டன.

ஆனந்த் புதிதாக ஒரு ஜீன்சும் டி ஷர்டும் வாங்கினான். ராதா வரும் நாளில் போட்டுக் கொள்ளபோவதாக சொன்னான்.

ராதா வரும் நாளும் வந்தது. நான் ரயில் நிலையம் சென்று நியூ ஜெர்சியில் இருந்து வரும் ராதாவை பிக் அப் செய்வதற்காக சென்றேன். ராதாவுடன் வந்து அப்பார்ட்மென்ட் கதவை தட்டினேன்.

புது ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் கதவை திறந்தான் ஆனந்த். உள்ளிருந்து ஓடி வந்தான் அஜய். ராதாவை பார்த்த மாத்திரத்தில், சந்தர் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். ஆனந்தும் அஜய்யும் ஏன் மேல் பாய்ந்து என்னை அடிக்க ஆரம்பித்தனர்.

ஆம் வந்திருந்தது.. ராதா என்கிற ராதா கிருஷ்ணன்.
--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...