எனது பள்ளி நாட்களில், நான் நன்றாக ஓடியதால், ஓட்டத்துக்கு முதன்மை கொடுக்கும் கோ கோ என்ற விளையாட்டில் என் பள்ளி குழுவில் இணைத்து கொண்டார் என் விளையாட்டு ஆசிரியர். பல்வேறு பள்ளிகளுக்கு சென்று வெற்றிகள் குவித்த போதும், கோ கோ என்ற விளையாட்டுக்கு உலக அரங்கில் மதிப்பில்லை என உணர்ந்தேன். மெதுவாக கால்பந்து பக்கம் கவனம் செலுத்தி, எனது பள்ளி இறுதி ஆண்டுகளில் பள்ளியின் கால்பந்து குழுவில் விளையாடி, கோவை நேரு ஸ்டேடியம் வரை சென்று விளையாடியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என்ன விளையாடினாலும், வீட்டிலும், பள்ளியின் மதிய உணவு இடைவேளைகளிலும் கிரிக்கெட் ஆடுவது பிடித்தமாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானத்தில் கிட்டத்தட்ட பத்து டீம்கள் குறுக்கும் நெடுக்குமாக விக்கட் நட்டி விளையாண்டதை இப்போது நினைத்து பார்த்தாலும் உடல் உள்ளம் சிலிர்க்கிறது.
பலப்பல வருடங்கள் கழிந்து, இரண்டாயிரம் வருஷத்தில் முதன் முதலாக நான் விமானப் பயணத்தில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தபோது என் மனதினுள் எழுந்த முதல் சந்தோசம், நான் டென்னிஸ் ஆட வாய்ப்பு அங்கு கிடைக்கும் என்பதே. அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் மீது நான் சென்ற விமானம் மெல்ல பறந்து கொண்டிருந்தபோது, கீழே நிலத்தில் பச்சை நிறத்தில் நான் பலப்பல டென்னிஸ் கோர்ட்டுகளை கண்டதும், எனது கனவு நனவாகப்போவதை கண்டு குதூகலித்தேன். நான் ஐவன் லென்டிலுடனும், பீட் சாம்ப்ராசுடனும், ஆண்ட்ரே அகாசியுடனும் விளையாடுவதை போல கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்.
அமெரிக்கா சென்று இறங்கிய பின் சரியாக ஒரு ஆண்டு கழித்து தான் எனக்கு டென்னிஸ் ஆட வாய்ப்பு கிடைத்தது. இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டு, அமெரிக்காவின் வியாபாரம் தடைபட்ட நிலையில் ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் 'பெஞ்சில்' இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என் கம்பெனி எங்களுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்திருந்தது. நாங்கள் பகல் முழுவதும் எங்களுக்கு வரப்போகிற நேர்முகதேர்விற்கு எங்களை தயார் படுத்தி கொண்டோம். மாலை நேரங்களில், கோடை காலங்களில் இங்கு இரவு மிகத் தாமதமாக எட்டரை மணிக்கு தான் வரும் என்பதால் மாலை ஐந்திலிருந்து எட்டு வரை டென்னிஸ் விளையாட ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்கு மேனேஜராக இருந்த மிஸ்டர் முரளிக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். வேலை இல்லாத கவலையை போக்க எங்களுக்கு டென்னிஸ் கை கொடுத்தது. எனக்கு முதலில் டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்கவே தெரிய வில்லை. மற்றவர்கள் எனக்கு டென்னிஸ் தெரியாது என்று ஒதுக்கி விட்ட போதிலும், ரமேஷ் என்ற ஒரு நண்பன் எனக்கு பொறுமையாக ராக்கட் பிடிப்பது முதல் எப்படி விளையாட வேண்டும் என்று பொறுமையாக சொல்லிக்கொடுக்க, வெகு சீக்கிரத்தில் டென்னிஸ் எனக்கு பிடித்து போனது.
ஒவ்வொரு நாளும் எப்போடா ஐந்து ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம். இரவு முற்றிலும் கவிழும் வரை ஆடிதீர்த்தோம். மிஸ்டர் முரளியின் உதவியுடன் டோர்ணமேண்டுகள் வைத்து டென்னிஸ் எங்கள் வாழ்கையில் இருந்து இணை பிரியாத ஒன்றாக ஆகிப் போனது. டி வீயில் டென்னிஸ் காண்பித்து விட்டால் உடனே சானல் மாத்த தோன்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருப்பேன்.
டென்னிஸ் உலகத்தில், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் ஆடி வெல்லும் 'மிஸ்டர் கூல்' பீட் சாம்ப்ராஸ் எனது ஆதர்சமாகி போனார். தனது பதினான்கு வருட காரியரில் பதினாலு கிராண்ட் ச்லாம்களை வென்று, உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரராக உருவானார். ஏழு முறை விம்பிள்டன் போட்டிகளின் சாம்பியனாகவும், ஐந்து முறை யு எஸ் ஓபன் சாம்பியனாகவும் இருந்து தொடர்ந்து ஆறு வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் ஆட்டக்காரராக இருந்துள்ளார். சர்வுகளை பேஸ் லைனில் போடுவதும் பின்னர் ரிடர்ன் ஆனா பந்தை நெட்டின் அருகே போட்டு பாய்ன்ட்களை அள்ளுவது இவரது ஸ்பெஷாலிட்டி.
அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், ஆண்ட்ரே அகாசி. ஸ்டெபி கிராப்பை மணம் முடித்து பல்லாயிரக்கணக்கான ஸ்டெபி ரசிகர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானவர்.
பீட் சாம்ப்ராஸ் , அகாசி ஆட்டம் என்றாலே மைதானம் முழுக்க பொறி பறக்கும். ஒவ்வொரு முறையும் பீட் வேல்லும்போதும் மனம் ஆனந்தக் கூத்தாடும். பீட் சாம்ப்ராசுக்கு இணையாக விளையாடக் கூடிய ஒரே நபர் அகாசி என்றே நினைத்திருந்தேன். பீட் சாம்ப்ராஸ் டென்னிஸ் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்று வெளியேறிய பின், அகாசி மட்டுமே டென்னிஸ் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தார்.
அவரையும் வெல்ல ஒருவன் பிறந்து வருவான் என அப்போது எனக்குத் தோன்றவில்லை.
(ஆட்டம் தொடரும்...)
7 comments:
வாழ்த்துக்கள்... தொடருங்கள்...
ஃ பெடரர் எப்போ சீன்ல வருவார், ஊய்.......ஊய்.......ன்னு விசிலடிக்கலாம்னு நானும் காத்துக்கிட்டு இருக்கேன்........
nandri thanabalan
நன்றி தனபாலன்.
ஜெயதேவ், நீங்களும் ரோஜரின் தீவிர விசிறியா? அவருடைய தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் விரிவாக அவரை பற்றிய பதிவுகள் பல பாகங்களாக வெளிவரும். தங்கள் ஆதரவுக்கு நன்றி.
தலைப்பை பார்த்த உடனே படிக்க வேண்டிய
கட்டாயம். எனக்கு பிடித்த செய்திகளை சுவை பட எழுதி, மகிழ்ச்சி அளித்தமைக்கு நன்றி.
மேலும் தொடர்பவைகளை படிக்க ஆவலாக உள்ளேன்.
நன்றி பட்டுராஜ்.
Post a Comment