மொழி... ஒரு கலாசாரத்தின் அடையாளம். தமிழ் மொழி மிக மிகப் பழமையான ஒரு மொழி என்பதை எல்லோரும் அறிவோம். அந்த மொழியின் அழகு மற்றும் வீச்சின் அளவால் தான், தமிழுக்கு பல்வேறு மொழிகளின் அச்சுறுத்தல் வந்தாலும் மேற்க்கத்திய நாட்டு மொழியே தன்னை மேல்தட்டு வர்க்கமாக காண்பிக்கும் என்ற சுயமட்ட சிந்தனையின் தாக்கத்தால் சற்று குறைந்திருந்தாலும், இன்றும் தமிழ் மொழிக்குண்டான காதலர்களும், அறிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த அந்த மாநிலத்தில் வசிக்கும் பெருவாரியான மக்கள் பேசும் மொழியே ஆட்சி மொழி என பட்டியல் எண் 345 அறிவித்துவிட்டதால் தமிழ் மொழி தமிழகத்தின் பிரதான மொழி என பிரகடனப் படுத்தப்பட்டது. அறுபதுகளில் லால் பகதூர் சாஸ்த்ரியின் அரசு ஹிந்தியை தேச மொழியாக அறிவித்ததை தொடர்ந்து நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்வைத்தே காமராஜர் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது வெற்றி கொண்டு தி மு க தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது வரலாறு.
தமிழர்கள் வேறு மொழியை கற்பதை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. வேறொரு மொழியை பலவந்தப்படுத்தி திணிக்க முற்படும்போது தான் எதிர்க்கவேண்டி இருக்கிறது. அவரவர் தனி விருப்பத்திற்கேற்ப எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் அவரவர்களுக்கு உண்டான வாய்ப்புகளை பொறுத்தே அமையட்டும். ஆனால் ஹிந்தி மொழி கற்காவிட்டால் இந்தியனே அல்ல என்ற போக்கு பாசிசத்தின் அடையாளத்தையே குறிக்கிறது.
காலம் காலமாக அந்தந்த மாநிலத்தின் பிரதான மொழியே ஆட்சி மொழி என்றும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் என்றும் இருந்து வந்த சூழலை இன்று எதற்காக மத்திய அரசு மாற்ற எத்தனிக்க நினைக்கிறது என்பதை ஆராய வேண்டும்.
மதம் என்பது நம்பிக்கையை சார்ந்தது. யாருடைய நம்பிக்கையையும் யாரும் எளிதாக தகர்த்து விட முடியாது.உண்மையான மதமாற்றம் என்பது மனம் மாறினால் மட்டுமே இயலும். பணம் கொடுத்தோ பால் டின் கொடுத்தோ, வன்முறையாலோ ஒருவரின் மதத்தை மாற்றி விட முடியாது. நம்பிக்கைகளை அழித்து விட முடியாது.
மொழி என்பது ஒரு கலாசாரம். வாழ்வியல் முறை. ஒரு அரசாங்கமே மொழியின் வழியால் தான் இயங்குகிறது. அரசாங்கம் தங்கள் குடிமக்களுக்கு புரியாத மொழியில் அரசானை அறிவிக்கப் படும் என்பதும், அதனை புரிந்துகொள்ளவேண்டும் என்றால் அந்த மொழியை அறிந்து கொள் என்றும் அறிவிப்பது பாசிசத்தின் அடையாளம் அன்றோ? அரசாங்கத்துக்காக மக்களா? அல்லது மக்களுக்காக அரசாங்கமா?
ஹிந்தியோ, மலையாளமோ, கன்னடமோ, தெலுகோ, பிரெஞ்சு மொழியோ தனிப்பட்ட முறையில் கற்பது அவரவர் விருப்பம். அதற்காக ஒரு மொழியை வலிந்து திணிக்க வேண்டாம் என்பதே தமிழ் மொழியாளர்களின் கருத்து.
வடநாட்டு ஊடகங்கள், ஹிந்தியை தேச மொழியாக அங்கீகரிப்பதை எதிர்க்கும் தமிழர்களை எகத்தாளத்தோடு அணுகுகிறார்கள். அதற்காக அவர்கள் சிறுவர்களை அழைத்து பேட்டி என்ற பெயரில் சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த சிறுவர்கள் சொல்வது, 'என்றோ தான் செல்லபோகும் வட இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஹிந்தி தவிர வேறு ஒன்றும் பேசுவதில்லை அதற்காக ஹிந்தி தேவை என்று. தமிழ் நாட்டிற்கு வரும் வட இந்தியர்கள் தமிழ் கற்றுக் கொண்டா தமிழகம் வருகிறார்கள்? அவர்களுக்கு தேவை என்றால் தமிழகம் வந்தபின் தமிழ் கற்றுக் கொள்வதில்லையா?
ஏற்கனவே ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என எண்ணும் பெற்றோர்களால், எங்கள் குழந்தைகளை மேற்கத்திய மொழி ஒன்றிற்கு காவு கொடுத்துவிட்டோம். மேலும் ஒரு மொழியை திணித்து தமிழ் வாழ தடை போடாதீர்கள்.
3 comments:
தக்க சமயத்தில் சரியான பதிவு
தலைப்பு கூடுதல் சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி.
Nice
Post a Comment