Saturday, December 4, 2010

பூலோக சுவர்க்கம் - 6 சுவிஸ் பயணம்.

                                                             இண்டர்லாகன் ஏரி
அன்றைய பொழுது இனியே விடிய.. நாங்கள் ஆவலுடன் காத்திருந்த யுங்க்ப்ரவ் பயணம் செல்ல வேண்டிய நாள் வந்தது. அன்றைய இரவு நாங்கள் சூரிச் செல்ல வேண்டி இருந்ததால், எங்கள் பெட்டி படுக்கைகளை உருட்டி கொண்டு பெர்ன நகர ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நமது பெட்டிகளின் அளவுகளுக்கேற்ப (விலையும் மாறுபடுகிறது) நிறைய லாக்கர்கள் இருக்கின்றன. இரண்டு லாக்கர்களில் எங்கள் பெட்டிகளை அடைத்து விட்டு எட்டு சுவிஸ் பிராங்குகளை உண்டியல் போன்ற துவாரத்தில் போட்டால், தானியங்கி இயந்திரம் மூலம் லாக்கர்களின் சாவிகள் வந்து விழுகின்றன. இருபத்து நான்கு மணி நேரத்துக்கு எட்டு சுவிஸ் பிராங்குகள் வாங்கப்படுகிறது.

யுங்க்ப்ரவ் க்கு பெர்நிலிருந்து இண்டர்லாகன் என்னும் ஒரு மிக அழகிய ஊர் வரை ரயில் செல்கிறது. அங்கிருந்து மலை ஏற மூன்று  ரயில்களை மாறி ஏற வேண்டும். பெர்நிலிருந்து இண்டர்லாகன் செல்லும் வழியில் இரண்டு அழகிய ஏரிகள் வருகின்றன. ஒன்று பிரியன்ஸ் ஏரி . மற்றொன்று துன் ஏரி. இரண்டு ஏரிகளும் இணையும் இடத்தை தான் இண்டர்லாகன் ஏரி என சொல்கிறார்கள். இண்டர்லாகன் என்றால் இரண்டு ஏரிகள் இணையும் இடம் என்று அர்த்தம்.
                                                             இண்டர்லாகன் ஏரி

ரயிலில் செல்ல செல்ல ஸ்பீஸ் என்ற ஏரியும் சேர்ந்துகொள்ள.. அப்படியே மலைகளும் நீல வண்ண நீர்பரப்பும்... பறந்து செல்லும் பறவைகளும்.. நீரில் நீந்தி செல்லும் ஓடைகளுமாக. இயற்க்கை காட்சிகள் விரிய விரிய.. கண்கள் விரிய பார்த்துக் கொண்டு வந்த நாங்கள்.. எங்களுக்கு அதனை காண கண்கள் இருந்தமைக்காக நன்றி சொல்லிக் கொண்டோம். அப்போது தான் கண் பார்வை இல்லாத நபர்களின் மேல் ஒரு மரியாதையும் பரிதாபமும் எங்களுடன் சேர்ந்து கொண்டது. அவர்களுக்கு சுவிஸ் நகரமும் ஒன்று தான்..சுண்டைக்காமுத்தூரும் ஒன்றுதானே என்ற உணர்வு மேலிட.. அந்த இயற்க்கை காட்சிகளை.. அவதார் படத்தின் பண்டோரா கிரகத்தை பார்ப்பதை போல ஐயோ.. வாவ் ஸ்ஸ் என்று குழந்தைகள் போல குதூகலித்தபடி நாங்கள் பார்த்து ரசித்ததை கண்டு.. எங்களோடு கூட வந்த சுவிஸ் மக்கள் எங்களை ரசித்தார்கள். பாதி மூடி இருந்த ஜன்னலை.. மேலும் முழுக்க திறந்து விட்டு.. 'என்ஜாய் யுவர் விஷன்' என்று உதவி புரிந்ததோடு மட்டுமல்லாது.. 'உங்களை புகைப்படம் எடுத்து தரட்டுமா   ?' என அவர்களே எங்கள் புகைப்பட கருவியை வாங்கி எங்களை சுட்டு தள்ளினார்கள்.

                                                                லாட்டர்ப்ருன்னேன் 

பெர்நிலிருந்து இண்டர்லாகன் ரயில் நிலையத்தை அடைய நாற்பது நிமிடங்கள் ஆனது. முழு பயணத்திலும்.. மூன்று ஏரிகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கண்களில் நீர் வழிய பார்த்து ரசித்து கொண்டே வந்தோம். இண்டர்லாகனில் இருந்து அடுத்த ரயில் ஏறி லாடர் பருணன் (Lauterbrunnen) என்ற இடத்துக்கு சென்றோம். விலை மிக அதிகம் நூறு அமெரிக்கன் டாலர்கள் ஆனது.போகும் வழி எல்லாம் பக்காவாட்டில் தெளிந்த நீரோடைகளும், மலைகளில் இருந்து விழும் நீர் வீழ்ச்சிகளும் என அவ்வளவு அழகு. லாடேர்ப்ருன்னானில் இருந்து அடுத்த ரயில் பிடித்து க்ளைன்-ஷேடேக் (Kleine Scheidegg)  என்ற இடம் செல்லும்போது தான் பனி போர்த்திய மலைகள் நம் உடனே ஊடாடிக்  கொண்டு வருகிறது. மலை களின் வழியே பாதை ஏற்படுத்தி பலர் கைகளில் குச்சிகளை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர். இண்டர்லாகனில் இருந்து நடைபயனமாகவே மலையின் உச்சிக்கு வருபவர்கள் இருக்கிறார்கள் என்று பிறகு கேள்விப்பட்டேன். எனக்கும் நடந்து செல்ல ஆசை தான். ஆனால் குடும்பத்துடன் அது முடியாதே.. என எனது ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.
க்ளைன் ஷேடாக்


க்ளைன் வந்து சேர்ந்ததும் அதுவே சொர்கமாக இருந்தது. அங்கேயே அமர்ந்து தெரியும் பனி போர்த்திய மலை முகடுகளை பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது. அங்கிருந்து கிளம்ப மனம் வராமல் அங்கேயே ஒரு மணி நேரம் மலைகளை பார்த்தபடி அமர்ந்துவிட்டோம். பின்னர் ஆசுவாசப்படுத்தியபடி யுங்க்ப்ரவ் போகும் அடுத்த ரயிலில் ஏறினோம். அது தான் மலையின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. உச்சிக்கு போகும்போது வயிற்றை பிசைகிறது. மயக்கம் வருகிறது. யுங்க்ப்ரவ் செல்லும் அனைவரும் மாத்திரைகள் எடுத்து செல்வது நல்லது. அங்கு ஆக்சிஜன் அளவு குறைவதால்.. இந்த மயக்கம் ஏற்படுகிறது என அறிந்தேன்.

மலைகளை குடைந்து ரயில் பாதைகளை அமைத்து இருக்கிறார்கள். மிக மிக மெதுவாகவே ரயிலும் செல்கிறது. அந்த ரயில் பாதை தான், உலகிலேயே உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள ரயில் பாதையாகும். யுங்க்ப்ரவ் என்பது தான் ஐரோப்பாவின் உச்சி அதாவது 'டாப் ஆப் யுரோப்' என்கிறார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு நான்கு ரயில்கள் மாற்றி உச்சிக்கு சென்றதும், எங்களுக்கு அந்த அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது.

--

3 comments:

ஹேமா said...

முகிலன் உங்கள் சுவிஸ் பயணக் கட்டுரை தொடர்ந்தும் வாசித்து வருகிறேன்.எனக்கொரு பிரமிப்பு என்னவென்றால்....நான் இங்கேயே இருப்பதால் அழகு என்றுமட்டும் சொல்வதோடு சரி.ஆனால் இத்தனை தூரம் ரசிக்கவில்லையோ என்னவோ.நீங்கள் இன்றைய நிலைமையில் இங்கு இருந்திருந்தால் நிறையவே இன்னும் ரசித்திருப்பீர்கள்.நிறைவான பனிப்பொழிவு.அத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறது இயற்கை முழுதும் !

NILAMUKILAN said...

யுங் ப்ராவ் சென்றபோது அங்கு இருந்த வெள்ளை பனி மலையை மிகவும் ரசித்தேன் ஹேமா. பனிப் பொழிவு இங்கும் நடக்கிறது. பனிபோழிவின் போது குடும்பத்துடன் ஊர் சுற்றுவது சிறிது கடினம். எனினும் சுவிஸ் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் வருவோம். கிழக்கிலிருந்து மேற்கு வரை, ஜெனீவாவிலிருந்து செயின்ட் காலன் வரை பார்த்தாகி விட்டது. இன்னமும் வடக்கு முதல் தெற்கு வரை, பேசலில் இருந்து செயின்ட் மோர்ரித்ஸ் வரை அளந்து விட ஆசை. அடுத்த முறை ஆவது கொடுப்பினை இருந்தால் குடும்பத்துடன் சிந்திப்போம்.

வடுவூர் குமார் said...

ஆர்வம் மேலிடுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...