Thursday, December 16, 2010

A.R. ரகுமான் என்ற ஆளுமை..!


அல்லா ரக்கா ரகுமான், தான் இந்த நிலை வரை வருவதற்கு காரணியான இளையராஜாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

எண்பதுகளின் இறுதியில், தமிழ் திரை உலகின், இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்,கே பாலச்சந்தரின் புது புது அர்த்தங்கள் திரைப்படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிய இளையராஜாவிற்கு  அந்தப் படத்திற்கு பின்னணி இசை வழங்க நேரமில்லை.  படம் வெளியீட்டு தேதியை அறிவித்தாகிவிட்டது. இளையராஜாவோ ஏகப்பட்ட படங்களில் பணி புரிந்து கொண்டிருந்ததால், இதற்க்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. பார்த்தார், கே பி. வேறொருவரை வைத்து பின்னணி இசை கோர்ப்பை முடித்து விட்டு சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டு விட்டனர். இதனை அறிந்த இளையராஜாவுக்கு கடும் கோபம். கலைஞனின் கர்வம் தலை தூக்க, இனி கவிதாலயாவிற்கோ கே பி கோ இசை அமைக்க போவதில்லை என முடிவெடுத்தார். கவிதாலயாவின் அடுத்தப் படத்தை மணிரத்னம் இயக்க முடிவாகி இருந்தது. அதுவரை தான் பணி புரிந்த இளையராஜாவின் இசை தன் புதிய படத்துக்கு இல்லை என்பதை உணர்ந்த மணிரத்னம், அவருக்கு இணையான ஒரு இசை அமைப்பாளர் அப்போது தமிழ் திரை உலகில் இல்லை என்பதால், ஒரு புதியவரை இறக்குமதி செய்ய முடிவு செய்தார்.  தனது நண்பனும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடம் இதை பற்றி சொல்ல, தனது விளம்பர படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருக்கும் திலீப் என்கிற அல்லா ரக்கா ரகுமானை பரிசோதித்து பார்க்குமாறு சொல்ல, மணி சின்ன சின்ன ஆசை பாடல் வரும் பகுதியை சொல்லி, அதற்க்கு ஒரு பாடல் இசை அமைத்து தருமாறு ரகுமானை பணிக்க, அரை நாளில் இசை அமைத்து மணி ரத்னத்திடம் ரகுமான் போட்டு காட்ட, சந்தோஷத்தில் அவரை அணைத்துக் கொண்ட மணி ரத்னம், அதன் பின் தான் நம்பிக்கையோடு தனது 'ரோஜா' திரைப்படத்தை இயக்க கிளம்பினார்.


அதன் பின்னர் நடந்ததெல்லாம்.. இசை உலக வரலாறு..
1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் பாடல்களை முணுமுணுக்காத தமிழ் உதடுகளே இல்லை எனலாம். அப்போது என் வீட்டுக்கு வந்த என் சகோதரனின் கல்லூரி தோழியான ஒரு யுகோஸ்லோவியா நாட்டுப் பெண்ணான கரீனா,' சின்ன சின்ன ஆசை ' என முழுதுமாக தனது மழலை தமிழில் பாடிக் காட்டியபோது, எனக்குள் உண்டான சிலிர்ப்புகளுக்கு சொந்தக் காரன் இந்த ரகுமான். தான் இதுவரை கேட்ட பாடல்களில் தனக்கு பிடித்த பாடலாக அவள் 'சின்ன சின்ன ஆசையை' கொண்டாடிய போது, ரகுமானை நினைத்து எனது மனமும் கொண்டாடியது.

ரோஜாவுக்கு பிறகு, புதிய முகம், ஜென்டில்மேன், காதலன் என அவர் கொடி தமிழில் பறந்துக் கொண்டிருந்தது .இந்த சமயத்தில் அவர் இசைமைத்த 'ரோஜா' இந்தியில் டப் செய்யப்பட்டு ஹிந்தியிலும் சக்கை போடு போட அவரை இந்திக்கு அழைத்து சென்றவர்கள் இருவர். ஒருவர் , ராம் கோபால் வர்மா, மற்றொருவர் சுபாஷ் காய். ராம் கோபால் வர்மாவின் 'ரங்கீலா'வும், சுபாஷ் காய் இன் 'தால்' லும் ரகுமானை இந்திய திரைப்பட உலகின் முதல் இலக்க எண்ணிக்கைக்கு அழைத்து சென்றது. அதன் பின் அவர் சேகர் கபூரால் ஹாலிவூடிற்கு அழைக்கப்பட்டு, பின்னர், அவர் தான் இங்கிலாந்தில் மிக சிறந்த இயக்குனர்களின் ஒருவரான டானி பாயில் லுக்கு ரகுமானை அறிமுகப்படுத்தி வைத்தார்.

டானி பாயில் 'ஸ்லம் டாக் மில்லியனர் ' என்ற இந்தியப் படத்தை உருவாக்க நினைத்தபோது , ஒரு இந்தியர் தான் அந்த படத்துக்கு இசைஅமைக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். தனது நண்பனான சேகர் கபூரிடம் ஆலோசனை கேட்டபோது, சேகர் கபூர் ஏ ஆர் ரகுமானை பரிந்துரைக்க, ரகுமானோ அந்த படத்தை ஒத்துக்கொள்ளலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்து விட்டார். காரணம் அவர் அப்போது அவ்வளவு பிசியாக இருந்தது தான். டானி தனக்கு ஒரு ஏழு இசை கோர்ப்புகள் மட்டும் வேண்டும் என கேட்டதும் ஒத்துக் கொண்டார் ரகுமான். ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் ஒரு கனமான திரைப்படம் என்பதால் படத்திற்கு அதிரடியான இசை வேண்டும் என்பது மட்டுமே டானியின் கோரிக்கை. மிகக் குறைந்த நாட்களில் இசை கோர்க்கப் பட்ட படம் அது. அது தனக்கு ஆஸ்கர் விருது வாங்கி தரும் என்றோ, அதன் மூலம் தனக்கும், தமிழகத்துக்கும், ஏன் இந்தியாவுமே பெருமைகள் கிடைக்கும் என்பதை அவர் அப்போது நினைத்து பார்த்திருக்கவில்லை.

இரண்டு ஆஸ்கார்களை அவர் வாங்கியதும் அவர் கூறிய வார்த்தைகள், அவரை மேலும் ஒரு சிறந்த மனிதராக காட்டியது.  முதல் விருதை வென்றதும், தமிழில் வழக்கம் போல 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்னது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தந்தது என்றால், இரண்டாம் விருதை வாங்கும் வேளையில், ' என் முன்னிருந்த அன்பு மற்றும் வெறுப்பு என இருந்த இரண்டு வாய்ப்புகளில், அன்பை தேர்ந்தெடுத்ததால் நான் இந்த மேடையில் இருக்கிறேன்' என்று சொன்னதும் இந்தியர்கள் அனைவருமே பெருமைப்பட்டனர்.



நான்கு வயதில் பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் ஒன்பதாவது  வயதில் தனது தந்தையை இழந்ததால், குடும்ப பாரம் சுமக்க வேண்டிய நிலை. தனது பதினொன்றாவது வயதில், இளையராஜாவின் இசை குழுவில் சேர்ந்து பணி புரிய ஆரம்பித்தார். உலகின் தலை சிறந்த தபலா வித்துவானான சாகிர் உசேனுடன் சேர்ந்து பல நாடுகள் பயணித்தார். லண்டனின் ட்ரினிட்டி இசை பள்ளியில் இசையில் பட்டம் பெற்றார்.

இப்போது டானியின் அடுத்த திரைப்படமான 127 ஹவர்ஸ் என்ற திரைப்படத்துக்கும்  ரகுமான் தான் இசை. மலை ஏற்றத்தை பொழுதுபோக்காக கொண்ட ஒருவன் ஒரு மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கை ஒரு பொந்தினுள் மாட்டிக்கொள்ள... அவன் எப்படி நூற்றி இருபத்து ஏழு மணித் துளிகளை அவ்வாறு கழித்தான் என்பது கதை. கதையின் கடைசியில், பொந்தினுள் மாட்டிக்கொண்ட தனது கையை தானே வெட்டிக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை. அப்படி செய்தால் மட்டுமே அவன் பிழைக்க முடியும் என்கிற நிலையில் அவன் என்ன முடிவு எடுத்தான் என்பது தான் கதை. இப்படி ஒரு சிலிர்ப்பூட்டும் கதைக்கு தனது சிலிர்ப்பூட்டும் இசையை வழங்கிய ஏ ஆர் ரகுமான், இந்த ஆண்டும், ஆஸ்காருக்கு இணையான, கோல்டன் க்ளோப் என்ற விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கோல்டன் க்ளோபில் விருது வாங்குபவர்களே முக்கால் வாசி, ஆஸ்காரிலும் விருது வாங்குவார்கள். கோல்டன் க்ளோப் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதே மிகப்பெரிய காரியம். அதுவும் இவ்வளவு குறைந்த காலத்தில். .!

ரகுமான் அடுத்த உலக விருது பெரும் நாளை நினைத்து காத்திருக்கிறேன்.

பின் குறிப்பு: இசையை பற்றி எனக்கு அடிப்படை எதுவும் தெரியாது. இருந்தாலும் சமையல் ருசியாய் இருப்பதை சொல்ல சமையல் தெரிந்திருக்க தேவை இல்லை என்பதை போல, இசையை ரசிக்க, இசையின் அடிப்படை அறிவு தேவை இல்லை என்பது என் கருத்து. ஏ ஆர் ரகுமானின் அதிரடி இசை என்ன தான் அருமையாக இருந்தாலும், அந்த அந்த  காலக்கட்டங்களில்  மட்டுமே மனதில் தங்குகின்றன. இளையராஜாவின் மென்மையான மேலோடிகள் காலம் கடந்தபின்னும் மனதில் புகுந்து மயிலிறகால் வருடி  தாலாட்டுவதன் மர்மம் என்னவென்று எனக்கு இன்னமும் விளங்கவில்லை..!


--

1 comment:

Jayadev Das said...

//இசையை பற்றி எனக்கு அடிப்படை எதுவும் தெரியாது. இருந்தாலும் சமையல் ருசியாய் இருப்பதை சொல்ல சமையல் தெரிந்திருக்க தேவை இல்லை என்பதை போல, இசையை ரசிக்க, இசையின் அடிப்படை அறிவு தேவை இல்லை என்பது என் கருத்து. // நெத்தியடி . நல்ல கட்டுரை. கவிதாலயாவுக்கும், இளையராஜாவுக்கும் நடந்த லடாய் புதிய தகவல். ரஹ்மான் எப்படி திரையுலகில் நுழைந்தார் என்பதை அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...