Wednesday, June 27, 2012

என் நிலாவும்.. நிலாத் துண்டுகளும்..








'நிலா வேணுமா...'
கேட்ட என் குட்டி நிலாவிடம்...
'ஆம்' என்று சொல்ல..
நீரில் தெரிந்த நிலாவை,
தன் குட்டிக் கரங்களால்...
அள்ளியெடுத்து
என் கைகளில் கொட்டினாள்.


'நிலா போய்டுச்சே''
என்ற என் குட்டி நிலாவின்
துக்கம் தாளாமல்,
ஒரு நிலவை
வாங்கி அளித்தேன்.


' நிலாவை' கொஞ்சி,
கூத்தாடி,
கட்டி அணைத்தபடி,
நிலவொளியில்
அவள் உறங்குவதை..
நிலாவே
பொறாமையுடன் பார்த்தது.

'நிலாவுக்கு உடம்பு சுகமில்லை'
டாக்டர் சொன்னதும்,
குட்டி நிலாவுடன்
எடுத்து சென்றிருந்த
'நிலா'
பதற்றத்தில் கீழே விழுந்து
உடைந்தது.

'நிலா உடஞ்சிருச்சி'
முனகிய நிலாவுக்கு...
உடைந்த நிலாத் துண்டுகளை,
பொறுக்க தெம்பில்லை.

இன்று,
நிலா இல்லை.
உடைந்த நிலாத் துண்டுகளை
ஓட்டத் தெரியாமல்
அழுதுகொண்டிருக்கிறேன் நான்.





- நிலா முகிலன்.

Saturday, June 16, 2012

நித்தியானந்தரும் அவரது சீடர்களும்...



நித்தியானந்தர்...இந்த பெயர் தான் இப்போது பத்திரிகை,தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களுக்கும் தலைப்பு செய்திகளை அள்ளித் தருகிறது. எவ்வளவோ காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த நித்யானந்தாவின் ஆட்சிபீடம் இப்போது அஸ்திவாரத்தோடு ஆட்டம் கண்டு கலகலத்து பொய் நிற்கிறது. அனால் இப்போதும் அதே மாறா புன்னகையுடன் ஆசி வழங்குகிறார் நித்யானந்தா.

நித்யானந்தா என்ற மனிதன் யார்? எப்படி அவருக்கு இவ்வளவு புகழும் சொத்துகளும் சாத்தியமாயின?அவரது சீடர்களோ, மெத்த படித்த மேதாவிகள். மருத்துவர்கள், பொறியாளர்கள், அயல்நாட்டு பக்தர்கள், இன்று அவரது தற்கொலை படையாக, இன்று அவர் இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பின்பும் அவருக்கு அரணாக நின்றுகொண்டிருப்பது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். தனது குடும்பத்தை, தனது வாழ்க்கையை,தனது கல்வியை  உதறிவிட்டு நித்யானந்தாவின் பின்னே அணிவகுத்து நின்றவர்களின் நிலை தான் இன்று பரிதாபம்.

பொதுவாக துறவறத்தில் இருப்பவர்கள், தங்கள் பொதுவாழ்வில் கறை வந்துவிட்டால், அமைதியாக ஓட்டுக்குள் சென்றுவிடுவார்கள். தங்களது கறைகளை களைந்து தங்களை நிரபராதி(நிரபராதியாக இருந்தால்...) என நிரூபிக்கும் வரை , மீடியா வெளிச்சங்களில் இருந்து விலகி இருக்கவே விரும்புவார்கள். உதாரணமாக. சங்கர ராமன் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்ட ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர், ஒரு கன்னியாஸ்திரியை கற்பழித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட செயின்ட் ஜோசெப் கல்லூரி முதல்வர் ராஜநாயகம் போன்றோரை சொல்லலாம். ஆனால் நித்யானன்தரோ, முன்னை விட இப்போது தான் டார்லிங் ஆப் தி மீடியா வாக வலம் வருகிறார். 

கமெராவில் பதிவு பண்ணப்பட்ட வீடியோ டி வீயிலும் பத்திரிக்கை மூலமாகவும் வெளி வந்தபோது எங்கோ பொய் பதுங்கி கொண்டவர் அங்கிருந்தபடி, தான் சமாதி நிலையில் இருந்ததாகவும் அப்போது நடந்தது எதுவும் தனக்கு தெரியாது எனவும் சொன்னார். பின்னர் அது தவ வழிபாட்டில் ஒரு  வழி  என்றும் சொன்னவர், ஆட்சி மாறியபின் அடிக்கடி  பத்திரிக்கையாளர்களை   அழைத்து பிரஸ் மீட் வைக்கிறார். அந்த சீ டீ பொய் என்றும் மார்பிங் செய்யப்பட்டது என்றும், அது தனது அறையே அல்ல என்றும் பெட்டி கொடுக்கிறார். அந்த பேட்டிகளில் ஒரு துறவி போல பேசாமல், 'தூ' என துப்புகிறார். 'டம்மி பீசு.. காமடி பீசு' என்று சினிமா டயலாகுகள் அவிழ்த்து விடுகிறார். தன்னை பற்றி தவறாக பேசிய ஜெயேந்திரர் மீது வழக்கு போடுவேன் என மிரட்டுகிறார், மதுரை ஆதீனத்தில் தான் பொறுப்பு ஏற்ப்பதை எதிர்க்கும் மற்ற ஆதீனங்களை, தங்களது சீடர்கள் அவர்களது ஆதீனங்களின் முன்னே போராட்டம் செய்வார்கள் என மிரட்டுகிறார். கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை  'தூக்குடா அவனை' என கத்தி தனது சீடர்களை தாக்க சொல்ல அவர்களும் தாக்குகிறார்கள். உச்சகட்டமாக இப்போது ஆர்த்தி ராவ் என்னும் பெண்மணி நித்யானந்தரின் மீது புகார் சொன்னதும்  நித்யானந்தர்  கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட, அவர் சிறையில் இருந்தபடியே கர்னாடக அரசின் மீது மான நஷ்ட வழக்கு பத்து கோடிக்கு போடுகிறார்.

                                            சிறுவயதில் நித்தியானந்தா (நடுவில்).
துறவி என்பவர் யார்? முற்றும் துறந்தவனை தான் துறவி என்பார்கள். மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களை துறவி என்பார்கள். உதாரணமாக சத்யா ஸ்ரீ சாய்பாபா(புட்டபர்த்தி சாய்பாபா அல்ல), அன்னை தெரேசா, யோகி ராம்சுரத் குமார், என பலரை உதாரணம் கூறலாம். தன்னை துறவி என்று சொல்லிக் கொள்ளும் நித்யனந்தாவுக்கு எதுக்கு தங்கத்தில் மகுடம்? எதற்கு தங்க பல்லக்கு?

 புத்தன் ஊருக்கு எல்லாம் உழைத்து மக்களுக்கு ஞானம் வழங்கினான். அவன் காசு எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. புத்தனின் சீடர்கள், பிச்சை எடுத்து தான் உண்டார்கள். நித்யானந்தர் எவ்வளவு காசு வாங்குகிறார் தெரியுமா? பொதுமக்களுக்கு என்ன சேவைகள் செய்துள்ளார்? புட்டபர்த்தி சாய்பாபா சமூக செயல்கள் பலவையும் செய்துள்ளார். அவரை மந்திரவாதி என பலர் விமர்சனங்கள் வைத்தாலும், மக்களுக்கு அவர் தனது சீடர்கள் மூலம் சேவை செய்துள்ளார், வீராணம் குழாய்களை தமிழகத்துக்கு அமைத்து கொடுத்ததுக்கு சாய் பாபாவின் அறக்கட்டளை பெரும் பங்கினை ஆற்றி இருக்கிறது. நித்யானந்தரின் ஆஸ்ரமம் என்ன சமூக தொண்டு ஆற்றி இருக்கிறது. ஆசிரமத்தின் பணம், ஒரு கார்பொரேட் கம்பனியின் வல்லுனர்வுடன் பல தேசங்களில் கிளைகளை திறந்து ஆன்மிக வியாபாரத்தை விருத்தி செய்து மேலும் காசு பார்த்ததே தவிர ஆன்மிகத்தை சேவையாக செய்யவில்லை.

பல நூறு கோடி சொத்துக்களை வைத்திருந்தபோதும், மதுரை ஆதீனத்தின் மேல் நித்யானந்தருக்கு ஏன் அப்படி ஒரு அதீத மோகம்? தனக்கு அந்தப் பதவி கிடைக்காமல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் எதிர்ப்பவர்களை எல்லாம் எதற்கு தாக்கவும், வழக்கு போடவும், மிரட்டி பேட்டி கொடுக்கவும் செய்யவேண்டும்? அவர்களது சீடர்கள் எல்லாம் யார்? எந்த ஸ்டேடஸ் இல் இருந்து வந்தவர்கள்? அமைதியை நாடித்தானே சாமியார்களை நோக்கி வருகிறார்கள்? அவர்கள் எப்படி சாமியார்களின் அடியாட்களாகி அமைதியை தொலைத்து விட்டு நிற்கிறார்கள்?

இவர்களின் குடும்ப வாழ்க்கையில் கிடைக்காத  அமைதி , இப்போது இந்த அடிதடி வாழ்கையில் இவர்களுக்கு கிடைத்து விட்டதா? நித்யானந்தர் தவறு செய்தாரா இல்லையா என எனக்கு தெரியவில்லை அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. எனக்கு உண்டான கவலை எல்லாம் அவரது சீடர்களை பற்றியது. அவர்கள் அந்த அளவுக்கு படிக்க வைக்க அவர்களது பெற்றோர் எவ்வளவு சிரமப்  பட்டிருப்பர் . தனது மனைவியையும் குழந்தையும்  நடு இரவில் தவிக்க விட்டு துறவறம் சென்ற சித்தார்த்தனை கூட என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது மனைவியான யசோதையும் குழந்தையும் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நான் சிந்தித்து பார்க்கிறேன்.

இப்போது கண்ணீரும் கம்பலையுமாக பெட்டி கொடுத்த ஆர்த்தி ராவ் இன்ஜினியரிங் படித்து விட்டு அமெரிக்காவில் ஒரு பன்னாட்டு கம்பனியில் கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டு திருமணம் செய்து கணவனும் குழந்தையும் என செட்டில் ஆகிவிட்ட ஒரு சாமானிய ஸ்திரீ.. குடும்ப வாழ்கையில் ஏற்படும் சிறு குறைகளுக்காக மனம் வெதும்பி அனைத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு ஆன்மீகத்துக்கு வரவேண்டும் என்று நித்யானந்தரின் பின்னே வந்து விட்டு இப்போது அனைத்தையும் இழந்து நிற்கிறார். ஐந்து வருடங்களாக தன்னை அவர் உபயோகப்படுத்திக் கொண்டார் என சொல்லும் ஆர்த்தி ராவ் ஐந்து வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் நித்யானந்தரின் அறையில் வைத்த காமெரா மூலம் மற்ற பெண்களுடனும் தன்னை போலத்தான் உறவு கொள்கிறார் என்பதை அறிந்த பின்னர் தான் அவர் என்ன இப்படி மோசம் செய்து விட்டார் என மீடியாக்களின் முன்னே புலம்புகிறார். இதை ஏன் அவர் ஐந்து  ஆண்டு காலமாக  செய்யவில்லை?

இப்போது நித்யானந்தர் சிறையுள் சென்றுவிட்டால் இவரை ச்வாமியாகவே தரிசிக்கிற சீடர்களின் கதி என்ன? அவர்கள் படித்த படிப்புக்கு இப்போது என்ன மதிப்பு இருக்கும்? ஆசிரமத்தில் இருந்ததால், தங்களது படிப்பை அனுபவரீதியாக பயன் படுத்தாமல் அனுபவமற்ற நிலையில் யார் இவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்? இவர்களது குடும்பத்தை எப்படி எதிர் கொள்ள போகிறார்கள்? மரத்தின் அடியே அமர்ந்து த்யானம் செய்து கொண்டே சாகப் போகிறார்களா?

ஆன்மிகம் அமைதி தரும் என்றால், அதற்கென ஒரு நேரம்  ஒதுக்கி  அமைதியை தேடி கொள்ளுங்கள். அல்லது நீங்களே முழு நேர ஆன்மிகவாதியாகி துறவறம் மேற்கொள்ளுங்கள். இது போன்ற நித்யனந்தர்களின் பின்னே சென்று உங்கள் ஆன்மிகத்தை தொலைத்து அமைதியையும் இழந்து, வாழ்கையையும் வெறுத்து ஒரு  தாதாவின் அடியாட்களை போல வாழாதீர்கள். அவர் சிறை சென்றாலும் சிரித்தபடி போஸ் கொடுப்பார். உங்களை நோக்கி வாழ்க்கை சிரித்துக் கொண்டிருக்கும்.


Friday, April 20, 2012

டைட்டானிக் - மரணத்தின் வயது 100!





                                               டைட்டானிக் ஒரிஜினல் படம்.

மனிதன் தனது சாதனைகளுக்கு கர்வப்படும் போதெல்லாம் அவனுக்கு மரண அடி விழுவது வரலாற்றில் பதியப் பட்டிருக்கிறது. அதற்க்கு ஒரு உதாரணமாக திகழும் சின்னம் தான் டைட்டானிக் என்ற மாபெரும் கப்பலின் வீழ்ச்சி.


வைட் ஸ்டார் லைன் (White Star Line) என்ற கம்பனியால் 1909 இல் ஆரம்பிக்கப்பட்டு 1911 ஆண்டு அந்த நாளைய மதிப்பின் படி 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டி முடிக்க பட்ட டைட்டானிக் உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.


1912 இல் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முதல் கப்பல் என்ற கர்வத்தில், எந்த ஒரு இடர்பாட்டினையும் சமாளிக்க கூடிய கப்பல் என்பதால் அறுவது உயிர் காக்கும் படகுகள் கொள்ளக் கூடிய கப்பலில் வெறும் இருவது படகுகளை மட்டுமே கொண்டு சென்றனர். கப்பலில் பெரும் செல்வந்தர்களுக்கு இடையே, ஐரோப்பாவின் அயர்லாந்தில் இருந்தும், இங்கிலாந்திலிருந்தும் மற்றும் பல ஏழை ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு பஞ்சம் பிழைக்க வந்த, பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மக்கள் இருந்தனர்.


ஏப்ரல் பதினைந்து 1912, அட்லாண்டிக் சமுத்திரத்தில், மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த வேளையில் கப்பலில் இருந்தவர்கள் , தங்கள் கப்பலின் மிக அருகே ஒரு பெரும் பனிப்பாறை இருப்பதை அறிந்து கப்பலை திருப்ப எத்தனிக்கையில் பக்கவாட்டில் மோதிய கப்பலின் எஞ்சின்கள் பழுதாகி, முழுக ஆரம்பித்தது. பெருஞ்செல்வர்கள் பெரும்பாலானோர் தப்பிவிட, பெண்களும் குழந்தைகளும் காப்பற்றப் பட ஏழை மனிதர்கள் கப்பலுடன் மூழ்கினர்.பயணித்த 2224 பேரில், உயிர் பிழைத்தவர்கள், 710 தான். 1514 பேர் அந்தப் பனியில் உறைந்து இறந்து போனார்கள்.



ஸ்ட்ராஸ் மற்றும் ஐடா.

டைட்டானிக் படத்தில் வருவது போல ரோஸ் என்றோ ஜாக் என்றோ எந்த காதல் கதையும் இல்லை. ஆனால் அதையும் மிஞ்சும் சுவாரஸ்ய நிகழ்வுகள் உண்டு என்கிறது வரலாறு.

மேசிஸ் என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தின் அதிபர் ஸ்ட்ராசும் அவரது மனைவி ஐடாவும் அந்த கப்பலில் இருந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர்காக்கும் படகில் தப்பி செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டதும், கணவரை விட்டு தான் மட்டும் தப்பிக்க எண்ணமில்லை எனக் கூறி, தனது வேலைக்காரியை தனக்கு பதிலாக ஐடா அந்தப்படகில் அனுப்பி விட்டு, தனது காதல் கணவனுடன் உயிர் கப்பலில் மூழ்கி உயிர் இழந்தார். செல்வா சீமாட்டியாக இருந்தாலும், காதல், எல்லாவற்றையும் விட மேலானது என நிரூபித்தார்.


கப்பலில் கண்ட்ரோல் அறையில் வேலைப் பார்த்த பொறியாளர்கள், கப்பலில் கடைசிவரை மின்சாரம் பழுதாகாமல் தப்பி செல்பவர்களுக்கு கப்பலில் இருந்த விளக்கொளி குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் தப்பி செல்ல கடைசி படகு காத்திருக்கிறது என்று சொல்லப்படதற்க்கு செவி சாய்க்கவில்லை அவர்கள். கடைசி வரை தங்கள் கடமைகளை நிறைவேற்றி விட்டு கப்பலுடன் சேர்ந்து மடிந்து போனார்கள்.

மார்கரெட் பிரவுன் என்ற பெண்மணி தான் ஒரு சீமாட்டியாக இருந்தாலும் அந்த நள்ளிரவில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஆறாவது எண் கொண்ட படகை செலுத்தி அதில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் கார்பெதியா என்ற இன்னொரு கப்பலுக்கு சென்று சேர்த்து கணவனை இழந்த பெண்களுக்கு, பணக்கார குடும்பத்து பெண்களிடம் இருந்து பணம் வாங்கி அந்த காலத்திலேயே 'பத்தாயிரம் ' அமெரிக்க டாலர்களை வசூலித்து அவர்களிடம் அளித்து 'அன்சிங்கபுல் மார்கரெட் பிரவுன்' என்று அவரது பெயரை வரலாறு பதித்தது. அவரை பற்றிய புத்தகங்களும் திரைப்படமும் கூட வெளிவந்தது.

பெஞ்சமின் எனும் பெரும் செல்வந்தர், 'எல்லோரும் மேல் தளத்துக்கு ஓடுங்கள், கப்பல் மூழ்கப் போகிறது' என்று அறிவித்ததும், தன அறை சென்று கோட் சூட் போட்டுகொண்டு தன்னை அழகாக்கியபடி வெளி வந்தார். ' என் மனைவியிடம் சொல்லுங்கள். நான் ஒரு ஜென்டில் மேனை போல மறித்து போனேன் என்று' என்றபடி கப்பலில் மூழ்கி இறந்து போனார். கடைசியில் அவரது உடலை கண்டுபிடித்தவர்கள் அவரது கோட்டை நினைவு சின்னமாக இன்னமும் வைத்துள்ளார்கள்.

ஜோசப் பிருஸ் இஸ்மே, டைட்டானிக் கப்பலின் முதலாளி, பெண்கள் குழந்தைகளுக்கு முன்னே படகில் ஓடி சென்று ஏறி தப்பித்தவர். அவரது வாழ்நாள் முழுக்க கோழை என லண்டன் வாழ் மக்கள் பட்டம் கட்டி அவரை மூலையில் அமரவைத்தனர்

டைட்டானிக் இப்பொது 12,415 feet (3,784 m) ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. பல குழுவினரும் பலமுறை டைட்டானிக் கப்பலுக்கு சென்று பல ஆராய்சிகளும் பல நினைவு சின்னங்களும் எடுத்து உலகில் பல இடங்களில் பல நினைவகங்களில் அவை வைக்கப்பட்டுள்ளன.


                                                  டைட்டானிக் திரைப்படத்தில்.... 

டைட்டானிக் மூன்று முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியை தழுவியது. நீரின் மேல் காதல் கொண்ட ஜேம்ஸ் காமரூன் 1997 இல் ஜாக் மற்றும் ரோஸ் என்ற காதல் கதாபாத்திரங்களையும், டெக்னாலஜி யையும் வைத்து மிரட்டி எடுத்த திரைப்படம் பதினோரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வசூலிலும் உலக சாதனை படைத்தது. டைட்டானிக் என்ற மிகப்பெரும் சோகத்தை உலகமே கொண்டாடியது.

கடந்த நூறு ஆண்டுகளாக ஆழ் கடலில் அடிமனத்தில் மர்மங்களை சுமந்தபடி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது டைட்டானிக்.

Friday, March 16, 2012

ஈழத்தின் அவலம்.

சனல் 4 தயாரித்துள்ள இலங்கை கொலை களங்கள் இரண்டாம் பாகம். மென்மையான இதயம் உள்ளோர் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம்.




சனல் நாலு வெளிப்படுத்திய, ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் வெறித்தாண்டவம், உடல் பதைபதைப்பை உண்டு பண்ணியது. பலருக்குள் தாமும் விடுதலை புலியாக மாறிடலாமா என உள்ளுக்குள்ளே ஒரு அக்கினி கனன்று கொண்டு இருக்கும். இந்த வெறியாட்டத்தை பின்னின்று நடத்திய இந்தியாவின் மத்திய அரசாங்கம், அமெரிக்கா ஐ நாவில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை எப்படி எதிர் கொள்ளபோவது என்று திருடனுக்கு தேள் கொட்டுவதைப் போல கையை பிசைந்து நின்று கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் கழித்து விழித்து கொண்டுள்ள உலக சமூகம், அப்போது ஈழத்தில் இருந்து கேட்ட அவல குரல்களை உதாசீனப் படுத்தியதால் தானே இத்தனை பேர்கள் மாண்டார்கள்.. கொடுமைகளில் சிக்கி உழன்றார்கள். அப்போது எல்லாம் வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது உண்மைகள் வெளி வந்து நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கையில், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பச்சோந்தி அரசியல் வாதிகள் அறிக்கை விடுகிறார்கள். காலை உணவை உண்டுவிட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுவிட்ட தமிழக தலைவரின் உண்ணாவிரதத்தை மறக்க முடியுமா? தனது அரசியல் நாற்காலிக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்று பம்மாத்தாக பிரதமருக்கு கடிதங்கள் மட்டுமே எழுதி கொண்டிருந்தார். பிரதமர் என்ன இவரது 'உடன்பிறப்புகளில்' ஒருவரா? இவரது கடிதம் கண்டு உணர்ச்சிவசப்பட?

ஒரு ராஜீவ் காந்தி என்ற இந்தியனின் கொலைக்காக ஒரு லட்சம் ஈழத்தமிழர்களை காவு கொடுத்தார்களே? அந்த ஒரு லட்சம் ஈழதமிழர்களுக்காக ஒரு லட்சம் இந்தியர்களாவது கண்ணீர் சிந்தி இருப்பார்களா? உலகம் வாழும் அனைத்து தமிழனும், நான் உட்பட, என்ன செய்து விட முடிந்தது. இந்தியாவை ஆண்ட அரசியல் வாதிகளை நோக்கி தான் நம் அத்துணை விழிகளும் இருந்தது. போரை இயக்கிய மத்திய அரசியல் வாதிகளையும் , தன குடும்பத்துக்காக, ஒரு லட்சம் மக்கள் மடிந்த போதும் கடிதம் மட்டும் எழுதி கொண்டிருந்த தலைவனையும் முதலில் குற்றவாளிகளாக்கி கைது செய்ய வேண்டும்.

தமிழனுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் ஒரே அரசியல் வாதி வைக்கோ மட்டுமே. வேறு எவனுக்கும் இலங்கை தமிழனின் வாழ்கையை பற்றி சிந்திக்கவும், அதனை பற்றி பேசவுமே அருகதை கிடையாது.

இருந்தாலும் தற்போதைய நிலையில், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும், காங்கிரஸ் உட்பட, இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே குரலில் வேண்டுக்கோள் விடுத்துள்ளன. இத்தனையும் இந்தியா ஏற்க மறுத்து மாற்றி வாக்களித்தால், புவியில் உள்ள எந்த தமிழனும், தமிழின வரலாறும், ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தையும், அரசியல் வாதிகளையும் மன்னிக்கவே மன்னிக்காது.

வாய்மையே வெல்லும்.

Saturday, March 10, 2012

உலக சினிமா: பெட்டி ப்ளூ(betty blue) -பிரெஞ்ச்-18+


அளவற்ற காதலையும், அதனால் விளையும் பெருந்துயரையும் சொல்லும் பிரெஞ்சு காவியம் தான் பெட்டி ப்ளூ. கற்பு கலாசாரம் என்பவர்களுக்கான படம் அல்ல இது. அதையும் தாண்டி வருபவர்கள் மட்டுமே இந்த படத்தை உள்வாங்கி ரசிக்க முடியும். படத்தில் ஏராளமான நிர்வாணங்கள் உண்டு. ஆனால் அது கிளுகிளுப்புக்கானது அல்ல. வாழ்கையின் உண்மைகளை பேச, அந்த காட்சிகள் தேவைப் படுகிறது. இப்படத்தின் முக்கிய காதாபாத்திரங்களான ஜோர்க்(Zorg) மற்றும் பெட்டி (betty) ஆக வாழ்ந்திருக்கும் பிரெஞ்சு நடிகர்களான ழான் அங்க்லாடே(Jean-Hugues Anglade) மற்றும் பீட்ரிஸ் தல்லே (Béatrice Dalle) இருவரும் உயிர் பெற்ற சித்திரங்களாக நம் கண் முன்னே உலவுகிறார்கள். அந்த வெற்றி படத்தின் இயக்குனரான ழான் பீனிக்ஸ் (Jean-Jacques Beineix) கே சேரும்.

ஜோர்க் மற்றும் பெட்டி இருவருக்குமான கலவியில் தான் படமே துவங்குகிறது. ஜோர்க் கிடைத்த வேலைகளை செய்து வாழ்கையை கொண்டாட்டமாக கருதும் ஒரு சாதாரணன்.அவன் வசிக்கும் இடத்தின் அருகே இருப்பவள் பெட்டி. இருவரும் அவ்வப்போது சந்திப்பதாக இருந்து வந்த சமயத்தில், அவளது காதலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜோர்க் உடன் வந்து தங்கி அவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறாள். அவளுக்கு கோவம் வந்தால் என்ன செய்வாள் என அவளுக்கே தெரியாது. ஒருவகையான சைக்கிக் பாரனோயா உடன் இருக்கும் அவளது செய்கைகள், ஜோர்குக்கு பிடித்து விடவே அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான். கவனிக்க, கலவி முடித்தபின் தான் காதலே ஆரம்பிக்கிறது.

அவனுடைய அறையை ஆராயும் அவள் அவன் எழுதி வைத்துள்ள நாவலை வாசிக்க ஆரம்பித்து, அது உலக புகழ் பெறப்போகும் ஒரு நாவல் என கூற, அதுவரை அதனை ரகசியமாய் வைத்திருக்கும் ஜோர்க் தன நாவலை அவள் ரசிக்க ஆரம்பித்து விட்டால் என்றதும் அவள் மீது அவனது காதல் அதிகமாகிறது.ஜோர்கை, அவனது வீட்டுக்கு சொந்தக்காரன், தனது வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்கிறான் என்பதை உணர்ந்த பெட்டி, அந்த வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே எரிந்து விட்டு அந்த வீட்டையே கொளுத்தி விட, இருவரும் எதிர்படும் வாகனத்தில் வேறு ஊரு செல்கிறார்கள். பெட்டி இன் ஒரு உறவுக்கார விதவைப் பெண்ணின் வீட்டில் தங்குகிறார்கள். உடைந்து கிடக்கும் பைப்புகளை பழுது பார்க்கும் வேலை செய்கிறான் ஜோர்க். பேட்டியோ, ஜோர்க் எழுதிய நாவலை, இரவும் பகலும் கண் விழித்து டைப் ரைட்டரில் அடித்து அந்த ஊரில் உள்ள புத்தக வெளியீட்டாளர் எல்லாருக்கும் அனுப்புகிறாள்.

இதனிடையே அவளுடைய உறவுக்கார பெண்மணிக்கு ஒரு பணக்காரன் பாய் பிரெண்டாக அமைய, நால்வரும் வாழ்க்கையின் துயரங்களை மறந்து கூத்தடிக்கிறார்கள். அந்த சமயத்தில் அந்த பாய் பிரெண்டின் தாய் மரணிக்க, அந்த துயரத்தில் பங்கு கொள்ள அந்த கிராமத்துக்கு நால்வரும் செல்ல, தன் தாயின் பியானோ கடையை இவர்களுக்கு தந்து தன் தாயின் வீட்டையும் அவன் தர, சொற்கும், பெட்டியும் புதிய வாழ்கையை துவங்குகிறார்கள்.
இதற்கிடையே, எந்த பதிப்பாளரிடமிருந்தும் ஜோர்கின் நாவல் குறித்து தகவல் வரவில்லை. தான் உலகத்தின் சிறந்த எழுத்தாளனாக கருதும் ஜோர்குக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற நினைவு அவளை ஆத்திரத்தின் எல்லைக்கே கொண்டு செல்ல, அந்த ஆத்திரத்தை எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்களிடம் காட்ட துவங்குகிறாள். எரியும் தணலை அணைக்கும் நீரை போல, ஜோர்க் மட்டுமே அவளை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களது வெறித்தனமான காதலே அவர்களை கட்டி போட்டு வைக்கிறது. இடையே, பெட்டி கருத்தரிக்க, அந்த குழந்தையும் கருப்பைக்குள்ளே இறந்து போக, பெட்டி தனது ஒரு கண்ணை தானே நோண்டி எடுத்துவிட, அவளை ஆஸ்பத்ரியில் கோமா நிலையில் சேர்க்க, ஜோர்குக்கு ஒரு பதிப்பாளரிடம் இருந்து போன் வருகிறது.


படத்தின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ். ஒவ்வொரு சமயங்களிலும் படத்தின் காட்சிகளுக்கேற்ப வண்ணங்கள் மாறுவது அழகு. பெட்டியாக நடித்திருக்கும் பீட்ரிஸ் க்கு இது முதல் படமாம். அற்புதமான நடிப்பு. ஜோர்க் தனது நிர்வாணத்தை பற்றி கவலை இன்றி நடித்துள்ளார். பல இடங்களில் இவருக்கு நிஜமாகவே பீட்ரிஸ் மீது காதலோ எனும் அளவுக்கு அவர்களுக்கிடையே அற்புதமான செமிஸ்டிரி.

பிலிப் ட்ஜியான் என்பவரின் நாவலே பெட்டி ப்ளூ ஆக திரைப்படம் ஆகி இருக்கிறது.
.
ழான் பீனிக்ஸ்  இயக்கத்தில் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. 1987 வருடத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் பல விருதுகளை வென்று இருக்கிறது
.
படம் நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.

பெட்டி ப்ளூ - ப்யூட்டிபுல்

Friday, March 9, 2012

டிராவிட்- பெருஞ்சுவரின் அந்திமம்.


இந்தியா பல போட்டிகளில் தோல்விகளை எதிர் நோக்கி இருக்கும் காலமெல்லாம், தனி ஒரு ஆளாய் நின்று, எதிராளிகளின் வெற்றியை தடுக்கும் ஒரு பெருஞ்சுவரை நின்று இந்தியாவுக்காக ஆடும் வீரர்களில், திராவிட் முதன்மையானவர்.

1996 இல் சிங்கப்பூரில் தனது கிரிகெட் வாழ்கையை துவக்கிய ராகுலுக்கு கிரிக்கெட் இரத்தின கம்பள வரவேற்ப்பை தரவில்லை.தடுமாறிய அவர், இங்கிலாந்து சுற்றுபயணத்தின் பொது அணிக்கு முக்கியமாக தேவைப்பட்ட அவர் அடித்த 95 ரன்கள் அவரை திரும்பி பார்க்க வைத்தது. 1997 இல் சவுத் ஆபிரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட்டில் இவர் அடித்த 143 மற்றும் 81 ரன்கள், இவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என நிரூபித்தது.

பல வேளைகளில் இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றிய பெருமை ராகுலை சாரும். 1999 உலக கோப்பை ஆட்டங்களில் இந்தியாவை இறுதி போட்டி வரை அழைத்து சென்ற பெருமை ராகுளுக்குத் தான். 491 ரன்கள் எடுத்து அவரே முதன்மையான பாட்ஸ்மானாக திகழ்ந்தார்.அதனாலேயே அவருக்கு அடுத்த உலக கோப்பை போட்டியின் அணித்தலைவராக இருக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. வெஸ்ட் இண்டீசில் நடந்த அந்த ஆட்டங்களில் இந்தியா சொதப்பி வெளியேறியதும், மற்றவர்கள் மேல் பழி போடாமல், தானே பொறுப்பேற்று, தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.

2004 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 233 ரன்கள் அடித்து வெற்றி பெற்று தந்த டெஸ்ட் மாட்சை மறக்க முடியுமா.அந்த டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட்களில் ராகுல் விளாசி எடுத்த மொத்த ரன்கள் 619. 2011 உலக கோப்பை வென்ற இறுமாப்பில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி நான்கு போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. திராவிட் மட்டுமே நான்கு போட்டிகளில் மூன்று செஞ்சுரி அடித்து தான் ஒரு சிறந்த பாட்ஸ் மான் என்பதை மீண்டும் பறை சாற்றினார். அவர் மட்டுமே இந்திய அணியை காப்பாற்ற முடியும் என உணர்ந்து அவரை அதுவரை ஒருநாள் போட்டிகளில் மறுதலித்து வந்த இந்திய தேர்வு குழு அவரை மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை தேர்வு செய்தது.

மற்ற அனைத்து வீரர்களும் களம் விட்டு வெளியேறினாலும்,தனக்காக விளையாடாமல் இந்தியாவுகக நேர்த்தியாக விளையாடிய திராவிட், அவரது ஆட்டத்துக்கு ஏற்ப கவனிக்க படாது போனது, அவரின் துரதிர்ஷ்டம் அல்ல. அவரது விளையாட்டை உபயோகித்துக் கொண்டு அவருக்குரிய மரியாதையை தராமல் புறக்கணித்த இந்த தேசத்தின் அவலம் அது.


சச்சின் என்னும் சூறாவளியில் திராவிட் எனும் தென்றலின் இருப்பிடம் வெளியே தெரியவில்லை. திராவிட் செஞ்சுரி அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தாலும், சச்சின் அந்த ஆட்டத்தில் செஞ்சுரி அடிக்கவில்லையே என கவலைப்பட்டவர் தான் ஏராளம். சச்சினுக்கோ, செஹ்வாகிற்க்கோ கிடைத்த அங்கீகாரங்கள், சிறந்த வீராரான ராகுல் ட்ராவிடுக்கு கிடைக்காமல் போனதை பற்றி அவர் கவலைப்படவில்லை. என்னை போன்ற ராகுலின் ரசிகர்களுக்கு மிகுந்த மனவருத்தம் அளிக்கும் விஷயம் அது.

ராகுல் என்றுமே எந்த சர்ச்சைகளிலும் மாட்டாத ஒரு ஜென்டில்மேன். அவரது ஆட்டத்தை போலவே அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவர் என்று அவரை பற்றி அவரது சக வீரர்கள் பாராட்டுவர். மற்றவர்களை பற்றி என்றும் கவலை பட்டதில்லை அவர். அணியின் தேவைக்கு ஏற்றது என்ன என்பதை உணர்ந்து அதனை என்னால் முடிந்தவரை அளித்ததை தான் பெருமையுடன் நினைவு கூறுவதாக, தான் ஓய்வு பெரும் இந்நாளில் அவர்  அறிவித்துள்ளார். ராகுல் ஓய்வு பெறுவதை அறிவித்ததும், அவருக்கான அங்கீகாரம் கிட்டாமலேயே ஓய்வு பெருகிறாரே என எனது தொண்டைக்குழிக்குள் எதோ ஒன்று அடைத்துக்கொண்டு பிதுங்கி கண்களில் முட்டிக் கொண்டு நின்றது நீர்.

We miss you dravid.

Wednesday, February 29, 2012

திரைப்படம்: காதலில் சொதப்புவது எப்படி?



ஒரு காதலிக்கும் கல்லூரி ஜோடி, காதலித்து கல்யாணத்துக்கு காத்திருக்கும் கல்லூரி முடித்த ஜோடி, காதலித்து மனம் முடித்து விவாகரத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு மூத்த ஜோடி, இவர்களின் காதலில் எழும் சொதப்பல்களும் அதற்கான தீர்வுகளும் என படம் முழுவதும் புன்னகையுடன் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி மோகன்.

யு ட்யூபில்  நாலு லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ்கள் அடித்து பெரும் வரவேற்பு பெற்ற  'காதலில் சொதப்புவது எப்படி' என்ற இவரது குறும்படத்தையே, சிறிது நீட்டி இவரது இன்னொரு குறும்படமான 'மிட்டாய் வீடு' படத்தில் இருந்து சில காட்சிகளை கலக்கி, ஒரு பீல் குட் படத்தை படைத்திருக்கிறார்.

பெரிதாக கதை என்று ஒன்றும் இல்லாமல், சம்பவங்களை தொகுத்தே, 'பொண்ணுக இப்படி இருப்பாங்க' , 'பசங்க இப்படி இருப்பாங்க' என்று கத்தி இன்றி காதலை அறுவை சிகிச்சை செய்த இவரது புதுமையான திரைக்கதை யுக்தி தான் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கினை ஆற்றி உள்ளது.

கல்லூரியில் படிக்கும் காதலர்களாக சித்தார்த், அமலா பால். ஒவ்வொரு முறையும் அமலா விடம் பல்ப் வாங்கி, சொதப்பி, வருந்தி, கெஞ்சி, கூத்தாடி, 'காதல் ஏங்க இவ்ளோ கஷ்டமா இருக்கு' என புலம்பி டிபிகல் லவ்வர் பாயாக பின்னி எடுத்திருக்கிறார் சித்தார்த்.

கேர்ள் நெக்ஸ்ட் டோர் லுக் உடன் அமலா பால். 'மைனா' படத்திற்கு பிறகு, இந்த படத்தில் சிம்பிளாக வரும் அமலா பால் கொவப்படுவதிலும், ஈகோ காட்டுவதுமாக நன்றாக நடித்துள்ளார். மணம் முடித்த பின் விவாகரத்துக்காக காத்திருக்கும் அமலா பாலின் பெற்றோராக பழைய சுரேஷும் சுரேகாவும். பழைய காதலை பறை சாற்றுவது போல சுரேஷ் காதல் கடிதம் எழுதி மகளையே தன மனைவிக்கு தூது போக சொல்லுவதும் என அவர்கள் இருவரின் யதார்த்த நடிப்பும் அற்புதம்.



சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அவர்கள் இருவரும் பட்டாசு கிளப்புகிறார்கள்.

நீரவ் ஷாவின் ரொமாண்டிக் ஒளிப்பதிவும் தமனின் பின்னணி இசையும் படத்தை உயரத்தில் நிறுத்துகிறது. பாடல்களில் 'பார்வதி' மட்டும் மனதில் நிற்கிறது.

'இந்த பொண்ணுக இருக்காங்களே!' என காமெராவை பார்த்து சித்தார்த் பேசி கொண்டிருப்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், போக போக படத்தை ஒரு டாகுமெண்டரி லெவலில் கொண்டு பொய் விடுகிறது. தவிர நண்பர்களின் பாண்டி செரி பயணம் படத்தை நகர்த்தி செல்ல மட்டுமே உதவி இருக்கிறது.

படத்துக்கு பெரிய பலம், திரைக்கதையும் சிரிக்க வைக்கும் வசனங்களும் தான்.

கல்லூரியை சுற்றியே கதை நடந்தாலும்,  பேராசிரியர்களை கோமாளிகள் போல சித்தரிக்கும் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல்.

காதல் என்றாலே, உருக்கும் வசனங்கள், டூயட் பாடல்கள், காதலுக்கு எதிர்ப்பு, அரிவாள், கொலை சோகமான முடிவு என்ற இலக்கணங்களை எல்லாம் உடைத்து ஜாலியான படத்தை கொடுத்திருகிறார் பாலாஜி மோகன்.

குடும்பத்துடன் காணக்கூடிய ஒரு ஜாலி படம்.

காதலில் சொதப்புவது எப்படி?- ஜாலியான சொதப்பல்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...