Tuesday, December 28, 2010

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் - 7


                                                      யுங்க்ப்ரவ்.(jungfraujoch)
யுங்க்ப்ரவ் ரயில் நிலையம் தான் ஐரோப்பாவின் உயர்ந்த ரயில் நிலையம். கடல் அளவிலிருந்து 3471 மீட்டர்களில் அமைந்துள்ளது. சுமார் 3571 மீட்டர்களில் ஸ்பிங்க்ஸ் என்ற மலை ஸ்தலம் உள்ளது. அங்கு ஒரு வானொலி தொடர்பு நிலையம் உண்டு. உலக தட்பவெட்ப நிலை  ஆராய்ச்சி நிறுவனமும் யுங்க்ப்ரவ் இல் உண்டு. மலையை குடைந்து ஏழு மைல்கள் சென்றால் தான் யுங்க்ப்ரவ் என்ற அந்த வெள்ளை சுவர்கத்தை அடைய முடியும். 1896 ஆம் ஆண்டு சூலை மாதத்தின் 27  ஆம் தியதி, மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது. கிட்டத்தட்ட 16  ஆண்டுகள் இந்த பணி நடைபெற்றது. பருவநிலை, விபத்துகள் என பலவாறு தடைகள் ஏற்பட்டபோதும், 1912 ஆண்டில் இந்த பணி யுங்க்ப்ரவ் வரை முடிக்கப்பட்டது. அதைவிட உயர்ந்த ஸ்தலமான ஸ்பிங்க்ஸ் வரை ரயில் பாதை அமைக்க இயலவில்லை. எனினும் இதுவே மனிதகுலத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்று என கருதப்பட ஏதுவாக இருந்தது. 

நான்கு ரயில்கள் மாறி யுங்க்ப்ரவ் சென்ற நாங்கள், பனி துகள்கள் பெய்வதால், வெளியே சென்று பனியில் நிற்க இயலாது என அறிவிப்பு செய்திருந்தனர்.  அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மிகுந்த பசி. அங்கே உணவு உண்ணலாம் என நினைத்த பொது பாலிவூட் என்ற நம்மூர் உணவகம் இருப்பதை கண்டு அடடா இந்த குளிருக்கு காரசாரமாய் சாப்பிடலாம் என பாய்ந்த எங்களுக்கு அங்கு வைத்திருந்த உணவுகளை பார்த்ததும், அப்படியே பின்னேறினோம். ஆமா சும்மா பருப்பு, நான் அப்புறம் ரெண்டு போரியல் ஒரு அளவு சாப்பாடு என வட இந்திய உணவு வகைகளுக்கு முப்பைதைந்து சுவிஸ் பிராங்குகள் என போட்டிருந்தது பகல் கொள்ளையாக இருந்தது. அங்கேயே இருந்த மற்றொரு சுவிஸ் உணவகத்தில் நூடுல்ஸ் வாங்கி உண்டு முடிக்கையில் அந்த அறிவிப்பு பலகையை எடுத்து விட்டு எங்கள் வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
இந்த மலையை குடைந்து தான் லிப்ட் மற்றும் ரெஸ்டாரண்டுகள் அமைத்துள்ளனர். இந்த மலையில் வலது புற அடியில் தெரியும் சிறு துவாரம் தான் இந்த வெள்ளை சுவர்கத்தின் நுழைவு வாயில்

அங்கிருந்த லிப்டின் மூலம் ஒரு இருநூறு அடி கீழ் நோக்கி சென்றதும் இறங்கி வெளியே வந்து பார்த்தால் ஒரு குகைக்குள் நின்று இருந்தோம். கடும் குளிர். நிச்சயம் இங்கு செல்லும்போது ஜாக்கெட் ஸ்வெட்டர் கை உறை எல்லாம் எடுத்து செல்வது நலம் இல்லையேல் எல்லாம் விறைத்து விடும் எச்சரிக்கை. கடும் உயரம் என்பதால், தலை கிறு கிறுத்தது. மூச்சு வாங்க ஒரு இருநூறு மீட்டார் நடந்திருப்போம். அந்த குகையில் வாயில் வர வெளியே வந்தோம்

எங்கும் பனி. வெள்ளை வெளேரென்று தரையும் தூரத்தில் தெரிந்த வெள்ளை மலைகளும் என அந்த காட்சியை நேரில் கண்டால் தான் அனுபவிக்க முடியும். பல படங்களின் பாடல்களை இங்கு ஷூட்டிங் எடுத்துள்ளனர் என்பதை உணர்ந்தோம். மக்கள் அனைவரும் அங்கு பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவி விளையாடிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவிலேயே பனி பிரதேசங்களை கண்டிருந்தாலும், இங்கு உள்ள அழகு அங்கு இல்லை. அதற்க்கு காரணம், மலைகள். மலைகள். நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது தான், அவ்வளவு நேரம் ஒரு மலையின் உள்ளே இருந்திருந்தோம் என உணர்ந்தோம்.

மலையை குடைந்து அதற்குள்,  குகை போல செய்து அதில் லிப்ட், பாதை எல்லாம் போட்டிருந்தார்கள். அங்கிருந்து ஒரு குழுவினர் நடந்தபடி இன்னோர் இடத்தில் இருந்த ஒரு ரேசொர்டுக்கு சென்று கொண்டிருந்தனர். நேரமின்மையால் எங்களால் செல்ல இயலவில்லை.
                                          ஐஸ் ம்யூசியம் செல்லும் வழி.
அங்கேயே ஐஸ் ம்யூசியம் ஒன்று இருக்கிறது. தரை சுவர் எல்லாமே ஐஸில் இருக்கும் அதனுள், ஐசிலேயே, பெங்குவின், கழுகு எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். அவை உருகிவிடாமல் இருக்க அதே தட்ப வெட்ப நிலையை அமைத்திருக்கிறார்கள்.  இந்த தரையில் ஸ்கேடிங் செய்து கொண்டே செல்லலாம். விழாமல் தப்பிப்பது உங்கள் சாமர்த்தியம்.

யுங்க்ப்ரவ் ஸ்தலத்தை அடைய இரு வழிகள் உண்டு. லாடேர்ப்ருண்ணன் வழியாக சென்றால், மலைகளையும், ஓடைகளையும் பார்த்தபடி செல்லலாம். க்லேண்டேல்வால்ட் என்ற இடம் வழியாக சென்றால் மலைகளில் தெரியும் வீடுகளையும், கன்ட்ரி சைட் எனப்படும் கிராமங்களையும் கண்டு களித்தபடி வரலாம். லாடர்ப்ருண்ணன் வழியாக யுங்க்ப்ரவ் அடைந்த நாங்கள், வரும் போது க்லேண்டேல்வால்ட் வழியாக கீழிறங்கினோம். வரும்போதும் பசுமையான மலைகளில் ஆங்காங்கே வீடுகள் அமைந்து காணும் கண்களை கொள்ளை கொண்டது.

                                                     க்லேண்டேல்வால்ட்

மீண்டும் கீழிறங்கி அன்று இரவு நாங்கள் சூரிக் சென்று சேர்ந்தோம். இருந்தாலும், எங்கள் நினைவுகள் மட்டும் யுங்க்ப்ரவ் விட்டு கீழிறங்கி வர மறுத்தன. 

(தொடரும்...)
--

8 comments:

சண்முககுமார் said...

அருமையான பதிவு தொடருங்கள்



இதையும் படிச்சி பாருங்க

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

கோவி.கண்ணன் said...

உங்களின் ஸ்விஸ் தொடர்பதிவுகள் எனக்கு இன்னொருமுறை சென்று வரும் ஆவலை ஏற்படுத்துகிறது

வடுவூர் குமார் said...

வாவ்! அருமை.

ஹேமா said...

அழகாகத் தொகுக்கிறீர்கள் முகிலன் !

NILAMUKILAN said...

நன்றி சண்முகக் குமார்.

NILAMUKILAN said...

மீண்டும் மீண்டும் பார்த்தாலும் திகட்டாத நாடு சுவிஸ் கோவி.

NILAMUKILAN said...

நன்றி குமார்.

NILAMUKILAN said...

வாங்க ஹேமா வந்து நாளாச்சி. நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...