நமக்குள்...
நடக்கும்
நிழல் யுத்தங்களில்..
முடிவுக்கு வந்தன,
முத்தங்கள்
நம்
கனவுகளை புதைத்து..
கல்லறைகள் கட்டிக் கொண்டோம்...
நம்
உறவுப் பாலத்தை தகர்க்க...
நம்
படுக்கை அறையில் நாமே,
வெடிகுண்டுகள் தயாரித்தோம்...
திருமணம் முன்
காத்துக் கிடந்தால்...
களவாடப்பட்டது இதயம்.
இப்போது..
காத்திருந்தால்...
களவாடப் படுகிறது
காலம்.
பறக்கும்
ஒவ்வொரு நிமிடங்களிலும்...
தொலைந்து கொண்டிருக்கிறது,
உனக்கும் எனக்குமான நொடிகள்...
மாற்றிக் கொண்ட மனங்கள்..
தேடிக் கொண்டிருக்கிறது
இளைப்பாற இடங்கள்.
அன்று
ஒரு
குளிர்பானத்தில்
இரு குழல்களில்
உன்னை நானும்,
என்னை நீயும்
உறிஞ்சினோம்.
இன்று..
நம் கோப்பைகளில்
நிரம்பி இருப்பது..
நம் தாம்பத்ய கீறல்களில்
வழிந்த குருதி...
நீயும் நானும் சேரும்
புள்ளி
அழிந்துகொண்டிருக்கிறது..
நாம்
வேறு வேறு திசைகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்..!
--நிலா முகிலன்.
புகைப்படம்: நிர்மல்.
--
3 comments:
பிரிதலின் வலியும் சந்தர்ப்பங்கள் தந்த சம்பவங்களும் நெருடலான கவிதை !
வேதனையான விஷயம்
Good one Surenth!!
Post a Comment