Monday, June 30, 2008

புகைப்பட கவிதை .....கரை சேர...



பத்து மாசம் சொமந்தவதான்
பெத்து போட்டு போயிட்டா
பத்து நிமிசம் பாக்கலையே
சாமியாக ஆயிட்டா..

பத்து வருசம் ஆனபோதும்
நெஞ்சில் ஒன்ன சொமக்கறேன்
எஞ்சி இருக்கும் வாழ்க்கை எல்லாம்
ஒனக்குத்தான வாழறேன்...

கொளத்து தண்ணி மீனு போல
என் செல்வம் இங்கு வாழுது
கடலுக்கு தான் ஆசை பட்டா
'சுனாமி' வந்து தாக்குது.

துடுப்பில்லாத படகு போல
மனசு தத்தளிக்குது.
வாழ்க்கை கூட பரிசல் போல
சுத்தி சுத்தி அடிக்குது..

நீ என்ன பாத்து சிரிக்கும்போது
கண்ணு ரெண்டும் மின்னுது
அதுல தெரியும் நம்பிக்கை தான்
என்ன வாழ வக்கிது

பரிசல் போல நான் இருக்க
துடுப்பாக நீ இருக்க
வாழ்க்கை என்னும் நீரைத்தான்
தாண்டி சேர்வோம் கரைக்குத்தான்

---நிலா முகிலன்
புகைப்படம்- நிர்மல்

புகைப்பட கவிதை... மீனவ நண்பன்



அன்று...
சிதிலமான என்னை செப்பனிட
மனைவியின் தாலி தங்கத்தை விற்றாய்.

உன் வியர்வை துளிகளால்...
எனக்கு வர்ணம் பூசினாய்.

உன் சுவாசக் காற்றால்
என்னை சுத்தப்படுத்தினாய்

கிழிந்த புடவையுடன்...
மனைவி தைத்து தந்த வலையை
என் மேல் போர்த்தி அழகு பார்த்தாய்.

எனது ஓட்டைகளை அடைத்தாய்
குடிசை ஓட்டைகளில்
நனைந்தது உன் குடும்பம்.

நான் முன்னேறி செல்ல
துடுப்பு வழித்தாய்
கை வலித்தாய்
பொறுமை சகித்தாய்
வெய்யிலில் தகித்தாய்.

நீ பசித்திருக்க
என்னை மீன்களால் நிரப்பினாய்.

இன்று...
ஓலசத்தம்
உன் ஓலை குடிசையில்...

நான் கரை ஏறிவிட்டேன்.
நீ..?
இலங்கையிலா? இந்தியாவிலா?
சிதைக்கப்பட்டாயா சிறையிடப்பட்டாயா?

அலைகளின் ஓசையில்
அலறிகொண்டிருகிறது...
என் மௌனங்கள்..

- நிலா முகிலன்

-புகைப்படம் -நிர்மல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...