Wednesday, December 24, 2014

கிறிஸ்துமஸ்

என் சிறுவயது கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.


எனது அம்மாவுக்கு அனைத்து உறவினர்களும் வேண்டும் . வா வா என
அழைப்பார்கள். அனைவரும் சீக்கிரமே வந்து விட வேண்டும். தாமதமாக வரும் உறவினர்களுக்கு திட்டு உண்டு. அப்போதெல்லாம் எங்களில் யாரும் பெரிய பதவிகளில் அமர்ந்திருக்கவில்லை. கை நெறைய சம்பளம் இல்லை. எங்களின்  வெளிநாடு சென்னை மற்றும் பெங்களூரு மட்டுமே.  நானும் சகோதரர்களும் கிறிஸ்துமஸ் நாளின் முன் தினம் அதிகாலை எழுந்து , வீட்டின் முன்னே அமர்ந்து காத்திருப்போம். திருநெல்வேலி, கோவை, சென்னை, மதுரை என ஒவ்வொருவராக  குவியும் பொது மனதில் எழும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காதது. எங்கள் சித்தப்பா வேலை முடித்துவிட்டு சி எஸ் சி பேருந்தில் கடைசியாக வருவார்கள். அதனாலேயே அவர்களுக்கு சி எஸ் சி சித்தப்பா என்ற  பெயர் உண்டு.

அம்மா சம்பளம் இல்லா விடுமுறை(Loss of Pay) எடுத்து விடுவார்கள். காசு இல்லை என கவலைப்பட்டதில்லை. வந்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வந்தவர்கள் சிரிக்க வேண்டும். இதுவே அம்மாவின் குறிக்கோளாக இருந்தது.  அம்மாவுக்கு பலகாரம் சரியாக செய்ய வராவிட்டாலும் ஆள் வைத்து பலகாரம் செய்து விடுவார்கள். நிறைய ஆகிவிட்டதென்றால், குழந்தைகளை அழைத்து 'பத்து பைசா' தரேன் இந்த ஜிலேபி சாப்பிடு  என்று அளித்த தருணங்கள் உண்டு.

எங்கள் வீடு மாட மாளிகையோ கூட கொபுரமாகவோ இருந்ததில்லை. ஆனால், தளும்ப தளும்ப அன்பு நிறைந்திருக்கும்.  முன்னே அஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட கூரையில் ஒரு அறை . அதன் அருகே ஒரு சிறிய அறை . ஒரே ஒரு கட்டிலால் அந்த அறை  நிறைந்திருக்கும். அந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிதாக யாருக்கு திருமணம் ஆகி இருக்கிறதோ அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடும்  நடுவில் ஒரு ஹால். வந்திருக்கும் அனைத்து உறவினர்களும் அங்கே தான் தங்குவார்கள். கடைசியில் ஒரு சமையலறை. அவ்வளவுதான் எங்கள் வீடு.

அவ்வப்போது போய்விட்டு வரும் மின்சாரம். வீட்டில் தண்ணீர் குழாய் கிடையாது. சிறிது தூரத்தில் இருக்கும் விஸ்கோஸ் தொழிற்சாலையின்  குழாயில் தான் தண்ணீர் பிடிக்கவேண்டும்.இரவு பதினோரு  மணிக்கு வரிசையாக குழாயிலிருந்து வீடு வரை ஆட்களாக நின்று கொள்வோம். ஒவ்வொரு குடமாக தண்ணீர் பிடித்து அடுத்தடுத்து ஆட்கள் கைமாறி குடத்து தண்ணீர் வீட்டின் ட்ரம்களில்  நிரப்பப்படும். அப்படி இப்படி என இரவு இரண்டு மணி ஆகிவிடும் உறங்க. நடு  இரவில் ஒருவர் ஹாலின் விளக்கை போட்டு பார்த்தால், ஜாலியான் வாலாபாக் படுகொலைகள் நடந்த இடம் போல காட்சி தரும்.யார் தலை யார் காலில் இருக்கிறது என்பதே தெரியாமல் படுத்து கிடப்பார்கள்.

பகலில் ஆண்கள் எல்லோரும் லுங்கி பனியன் சீருடையுடன், எங்களின்  ரப்பர் பந்து பிடுங்கப்பட்டு கிரிக்கட் ஆட ஆரம்பிப்பார்கள். அவுட் செய்ய பல வியூகங்களும் அமைக்கப்படும். எங்களுடன் பெரியவர்கள் கிரிக்கெட் ஆடுவதை நினைத்து எங்களுக்கு பெருமையாக இருக்கும்.

சமையல் கூட்டாக நடக்கும். ஆண்கள் பெண்கள் என அனைவரும் பங்கு பெறுவார்கள். வெங்காயம் உரிக்கையில் நடு ஹாலில் இருந்து ஒரே ஒரு வெங்காயம் எங்கிருந்தாவது பறக்கும். உடனே அந்த ஹால் முழுக்க அங்கங்கே இருந்து சின்ன வெங்காயங்கள் பறந்து எதிராளிகளை தாக்கி அது ஒரு வெங்காயப் போர்க்களமாகும். ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லாமல் சமையல் நடக்கும். அண்ணா  ரசம் வைப்பார்கள் . அத்தை பிரியாணி செய்வார்கள். பெரியம்மா காய் செய்வார்கள் மற்ற அனைவருமே எடுபிடிகளாக வேலை செய்வோம். எங்கள் யாருக்கும் நடுவிலும் ஈகோ எட்டி பார்த்தது கூட கிடையாது.

எங்கள் அப்பா வந்தவர்களை வரவேற்று விட்டு காணாமல் போய்  விடுவார்கள். அவர்களை தேவாலயத்தில் தான் பார்க்க முடியும். ஆலயத்தின் உத்திரத்தில் ஏறி வண்ணக் காயிதங்கள் கட்டி கொண்டிருப்பார். அல்லது  ஒரு கலை இயக்குனராக மாறி குடிலுக்கான குகைகளை நிர்மாணித்துக் கொண்டிருப்பார் அல்லது ஆலயத்தின் பீடத்தில் வண்ணங்களை குழைத்து பூசி கொண்டிருப்பார். அவர் வீடு திரும்பும்  போது  அனைவரும் உண்டு முடித்து தங்களின் ஜேம்ஸ் அண்ணனை/சித்தப்பாவை/தாத்தாவை /மாமாவை எதிர் கொள்ளுவார்கள். இடுப்பில் ஒரு லுங்கி மார்பில் ஒரு துண்டு அணிந்து கொண்டு அனைவரிடமும் சாப்பிட்டாகிவிட்டதா என்று கேட்டுவிட்டுத்தான் சாப்பிட அமர்வார்கள். அன்று எங்கள் வீட்டில் நடந்த கலாட்டாக்களை ஒவ்வொருவரும் போட்டி போட்டு கொண்டு அவரிடம் சொல்லி முடிக்கையில், அவர் சிரிக்கும் சிரிப்பில் உணவுத் துணுக்குகள் அவர் பல்லிடுக்கில் மாட்டிக் கொள்ளும்.

அவர் வீட்டுக்கு வரும்போது கோயிலுக்கு செய்யவேண்டிய ஏதாவது ஒரு வேலையையும் சேர்த்தே கொண்டு வந்திருப்பார். அவர் உண்டு முடித்தவுடன் என்னை போன்ற சில எடுபிடிகள் அவருடன் மாடிக்கு சென்று, அவர் கொண்டு வந்திருந்த தெர்மாகோல் அட்டைகளில் ஜிமிக்கி ஒட்டவும். வண்ண காகிதங்களை கத்தரிக்கவும் நாங்கள் அவருக்கு உதவி செய்வோம். அவர் எதற்காக அப்போது அதனை செய்கிறார் என்பது எங்களுக்கு விளங்கவே விளங்காது. மறுநாள் ஆலயத்தில் அவர் வைக்கும்போது தான் அந்த ஜோடனை ஆலயத்தை  எவ்வளவு அழகாக அலங்கரித்துள்ளது  என்பதே விளங்கும்.

கிறிஸ்துமஸ் முடிந்து அனைவரும் ஊர் செல்லும் நாள், எதோ பெண்ணை கட்டி கொடுத்த பெண் வீட்டாரின் மறுவீடு போலத்தான் ஒரே கண்ணீராக  நிறைந்திருக்கும். வந்தவர்களும், அம்மாவும் கண்ணீர் விட்டு அழுவார்கள்.  வீடு வெறிச்சோடி போயிருக்கும். வெங்காயத்தை பார்த்தாலே சோகமாக இருக்கும். எங்களின்  ரப்பர் பந்து சீண்டுவாரின்றி கிடக்கும்.

இன்று, அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை.
வசதிகள் பணம் எல்லாம் இருந்தும் உறவினர்கள் அனைவரும் ஆங்காங்கே இருக்க, பதவிகளும் பணமும் பலரை மாற்றிப் போட்டது. இன்று அனைவரும்  தனி தனி தீவுகளாக கரை தெரியாமல் நின்று கொண்டிருக்கிறோம். அடுத்து அனைவரும் என்று சேர்ந்து சந்திப்போம்  என்ற நிலை. கடந்த முறை இந்தியாவுக்கு சென்றிருந்த பொது கூட சிறுமுகை பற்றி பேசாத உறவினர்கள் இல்லை. அந்த வரலாறை அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்ல ஆட்கள் இல்லை.  ஈகோக்களால் நிரம்பி இருக்கிறது இன்றைய உலகம். எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம், எதிர்பாராத ஆட்களிடம்  நாம் எதிர்பாராத பிரச்சனைகள் முளைப்பதை கண்டு மருகி நிற்கும்போது அம்மாவையும் அப்பாவையும்  சிறுமுகையில் களித்த கிறிஸ்மஸ்   நாட்களையும் நினைக்காமல் கணங்கள் நகர்வதில்லை.

I miss you Appa and Amma...

அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.  

Merry Christmas to you All.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...