Monday, March 29, 2010

சூப்பர்மேனின் தேவதை...!


அமெரிக்கர்கள் என்றாலே.. கணவர்களை, மனைவிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் என்ற கூற்று நம் நாட்டில் என்றென்றும் நிலவி வரும் செய்தி. காதல் என்பது உலகம் முழுதும் பொதுவான ஒன்றே என அறிந்து கொள்ள டானா ரீவ்ஸ் என்ற இந்த பெண்ணேசாட்சி.

டானா ரீவ்ஸ் , நடிப்பு பயிற்சி பெற்றிருந்தாலும், ஒரு கிளப்பில் பாடகி.

1987 இல் சூப்பர் மேன் பாகம் ஒன்று மற்றும் ரெண்டு படங்களில் நடித்து உலக புகழ் பெற்று சூப்பர் மேனாகவே மக்களால் மதிக்கப்பட்டார் கிறிஸ்டோபர் ரீவ்ஸ். அவர் தனது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சோகத்தில் இருந்தார். அப்போது கிளப்பில் பாடிய டானாவின் குரல் அவரை என்னவோ செய்ய, ப்ரோக்ராம் முடிந்ததும் தானாகவே வலிய தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் கிறிஸ்.அதன் பின்னர் அவர்கள் டேடிங் செய்ய ஆரம்பித்து.. தன தேவதை டானாவே என முடிவு செய்து அவளை கிறிஸ் 1992 இல் மணந்து கொண்டார்.1995 வரை தேவதை கதைகளில் வரும் இன்பமான வாழ்கை வாழ்ந்தார்கள். அவர்களின் காதலுக்கு சாட்சியாக பிறந்த மகனுக்கு வில் ரீவ்ஸ் என பெயர் வைத்தார்கள்.

1995 மே 27 தேதியில் நடந்த சம்பவம் தான் அந்த குடும்பத்தையே புரட்டி போட்டது. ஆம் குதிரையில் சென்று கொண்டிருந்த கிறிஸ் ரீவ்ஸ் குதிரையில் இருந்து தூக்கி எறியப்பட்டு தலை தரையில் முட்டி, முதுகெலும்பு உடைந்து, கழுத்துக்கு கீழே முற்றிலும் செயல் இழந்தவராக மாறிப் போனார். உலகத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய சூப்பர்மேனின் வாழ்க்கை அடுத்தவர் தயவில் என மாறிப்போனது.

முதலில் உடைந்த போதும், திருமணம் செய்தபோது செய்த சத்தியமான, 'இன்பத்திலும் துன்பத்திலும் உன்னுடையவளாய் இருப்பேன்' என்பதை செயல் படுத்த ஆரம்பித்தார் டானா. மனதளவில் உடைந்து போன கிறிஸ்சை தனது அன்பாலும், காதலாலும் தேற்றி அவரே தனது உலகமென வாழ்ந்து கிறிஸ்சை திடப்படுத்தினார்.

சூப்பர் மேன் இனிமேல் அவ்வளவுதான் என எள்ளி நகையாடியவர்கள் மத்தியில், கிறிஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நடிக்கவும், திரைப்படம் இயக்கவும் தயாரானபோது ஹாலிவூட்டே ஆச்சர்யமாக பார்த்தது. கிறிஸ்சின் தன்னம்பிக்கையும் டானாவின் காதலும் அரவணைப்புமே அதற்க்கு காரணம் என அவர்களை ஒரு ஆதர்ச தம்பதியாய் உலகமே கண்டது. அவர்களின் காதல் மேலும் இறுகியது. டானா நடிப்பு மற்றும் பாட்டு ஆகியவற்றுடன்சேர்ந்து , உடல் ஊனமுற்ற மற்றும் உடல் குறைபாடுள்ளவர்களுக்காக தனது கணவனுடன் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தார்.

1996 ஆம் வருடத்தில் தனது கணவனின் பெயரில், கிறிஸ்டோபர் ரீவ்ஸ் பௌண்டேஷன் என்ற உடல் ஊனமுற்றோருக்கான அறக்கட்டளை நிறுவி உடல் ஊனமுற்றோருக்கும், முதுகு தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவினார். Oct. 10, 2004 அவர் கலிபோர்னியா மாகணத்தில் சேவை முனைப்பில் இருந்தபோது கிறிஸ் ரீவ்ச்க்கு மாரடைப்பு வர தனது கணவன் சாகுமுன் அவனை காண பறந்து வந்தார் டானா. ஆனால் அவருக்கு அந்த தருணம் கிட்டவில்லை.

அதன் பின்னர் Care Packages: Letters to Christopher Reeve from Strangers and Other Friends. என்ற புத்தகத்தை தனது கணவனின் பெயரால் எழுதினார். அவருக்கு பல விருதுகள் கிடைத்தாலும் அவர் முக்கியமாக கருதுவது, 2005 இல் அமெரிக்கன் கான்செர் சொசைட்டி வழங்கிய 'மாதர் ஆப தி இயர்' என்ற விருதை தான்.

அவருக்கு மேலும் சோகங்கள் தொடர்ந்தன. ஆகஸ்ட் 2005 இல் அவர் தனக்கு இரப்பையில் கான்செர் இருக்கிறது என அறிவித்த பொது உலகமே அவருக்காக இரங்கியது. கீமோ தெரபி ரேடியோ தெரபி என சிகிச்சைகள் மேற்கொண்டாலும் மார்ச் 6, 2006 இல் சிகிச்சைகள் பலனளிக்காமல் தனது காதல் கணவருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஒரு டிவி பேட்டியில் 'நீங்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்துள்ளீர்கள். எங்கிருந்து உங்களுக்கு அதனை எதிர் கொள்ள பலம் கிடைக்கிறது?' என கேட்கப்பட்டபோது. அவர் கூறியபதில்...

"For years, my husband and I lived on -- and because of -- hope. Hope continues to give me the mental strength to carry on."

' என் கணவரும் நானும் இவ்வளவு நாள் வாழ்ந்ததற்கு காரணம்..நம்பிக்கை. நம்பிக்கை மட்டுமே எனக்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன பலத்தை தருகிறது...'

இறந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, அமெரிக்க ஜனாதிபதி,தலை சிறந்த ஹாலிவூட் நடிகர்கள், அவரது அறக்கட்டளையால் உதவி பெற்றவர்கள், கொடுத்தவர்கள், என வந்த கூட்டத்தை , நிச்சயம் ஒரு நட்சதிரமாகவேண்டும் என்ற உந்துதல் கொண்ட அந்த சூப்பர்மேனின் நியூ யார்க் தேவதை அறிந்திருக்கவில்லை.

'நவ் அண்ட் பாரெவர்' டானா ரீவ்ஸ் கடைசியாய் பாடிய பாடல் மற்றும் அவரது பேட்டி . உங்களுக்காக...

--

Sunday, March 28, 2010

பென்னாகரம்...!



பென்னாகாரம் இடைதேர்தலில்குடம்,பணம்,வெள்ளி, தங்கம் என லஞ்சம் கொடுத்து ஒட்டு வாங்கும் கட்சிகளின் சதி ஒரு அளவு முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதற்க்கு முழு முதல் காரணம், தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா. இதன் மூலம் பண நாயகத்தை ஓரளவு வென்று ஜன நாயகத்தை நிர்மாணித்திருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு எண்பத்தைந்து விழுக்காடுகள் ஓட்டுகள் பதிவாகி உள்ளமை, மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வை காட்டுகிறது. ஒட்டு போடுவது தங்களது கடமை என உணர்ந்தது தான் காரணம். அந்த எண்ணத்தை. விதைத்த, தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் பலருக்கு பாராட்டுகள்.

எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்காம் கொண்டு தேர்தல் பூத்களை கண்காணிப்பது இதுவே முதல் தடவை. இது கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்த உதவும். அரசியல் வாதிகளின் மொள்ளமாரித்தனங்களை வெட்ட வெளிச்சமாக்க பதிவு செய்யப்பட அந்த ஒளி நாடாக்கள் உதவும் என்பதால். தப்பு செய்ய அரசியல் வாதிகள் நிச்சயம் பயப்படுவார்கள்.
இருந்தாலும்
லாரிகளில் புடவை வேட்டிகள் பலவும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் பணப் பட்டுவாடா ரகசியமாக நடந்ததாக கூறப் படுகிறது. என்னதான் தேர்தல் கமிஷன் விழிப்பாக இருந்தாலும், ஜன நாயகத்தை கொழிதொண்டி புதைக்க இது போல சில அரசியல்வாதிகள் மற்றும் வாங்க மக்களும் இருப்பது வரை தேர்தல் நிச்சயம் ஒரு கண் துடைப்பாக தான் இருக்க இயலும்

----

Friday, March 26, 2010

திரைப்படம்: ப்ரம்மரம்(மலையாளம்). வேறுபட்ட கதைக்களம்.


முன்பெல்லாம்... தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்தவுடன், மலையாள மற்றும் வங்காள மொழி திரைப்படங்களே வரிசை கட்டி விருது பட்டியலில் முதன்மையான இடங்களை பிடித்திருக்கும். இப்போது.. தமிழ் படங்களை காபி அடித்து கமெர்சியல் ஐட்டங்களை புகுத்தி, அரை வேக்காடு திரைப்படங்கள் தான் மலையாளத்தில் வெளி வருகின்றன.

இத்தகைய திரைப்படங்களுக்கு மத்தியில் ப்ளஸ்சியின் திரைப்படங்கள்..வேறுபட்ட கதைக் களங்களுடன் தனித்து நிற்கின்றன. இவரது படங்களில் மனித நேய தாக்கங்கள் நிறைந்து இருக்கும். இவரது படங்களான காழ்ச்சா, தன்மாத்ரா போன்ற படங்கள் இதுவரை வெளிவராத கதைகளை சொல்லியது. அந்த வரிசையில் வந்திருக்கும் திரைப்படம் தான் ப்ரம்மரம்.

செய்யாத தவறுக்கு தண்டனையுரும் ஒருவனின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப் படுகிறது என்பது தான் கதை. படம் பார்த்ததும், ' நமக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால்...?'. என நினைத்து பயமாக இருந்தது. அதுவே படத்தின் வெற்றி எனக் கருதுகிறேன்.

ஜோஸ் என்கிற மோகன்லால் கோவையில் ஒரு வெற்றிகரமான பங்கு சந்தை புலியான தனது பள்ளியில் பயின்ற சகமாணவன் உன்னியை தேடி வருகிறான். தன்னை ஜோஸ் என்றும் பள்ளியில் ஆறாவது வகுப்பில் (எந்த வகுப்பு என மறந்து விட்டது) ஒன்றாக படித்ததாகவும் சொல்லி அன்று நடந்த நிகழ்வுகளை சொல்லி தனது நண்பனுக்கு ஞாபகப் படுத்துகிறான். உன்னிக்கும் அவன் தனது பழைய பள்ளி தோழன் என நினைவு வந்துவிட்டது. உன்னியின் மகளுடன் ( அந்த சிறுமியிடம் அபார நடிப்புத் திறமை.) உடனே ஒன்றி விடுகிறான் ஜோஸ்.

கோவையில் டாக்டராக இருக்கும் தனது இன்னொரு பள்ளி தோழனான அலெக்ஸ் வர்கீசுடன் இதனை பகிர்ந்து கொள்கிறான் உன்னி. பலவாறாக நினைத்து பார்க்கும் அலெக்ஸ், ஜோஸ் என்னும் ஒருவன் தம்முடன் படிக்கவே இல்லை என்றும் அவன் சிவன் குட்டி யாக இருக்க கூடும் என்றும் கூற, உன்னி ஜோசிடம் எகிற... ஜோஸ் தான் சிவன் குட்டி தான் என கூற... நம்மை பதற வைக்கிறது, சிவன் குட்டி கூறும் பிளாஷ் பாக்.

எதிர்பாராத திருப்பங்களுடன், எந்த ஒரு மசாலா ஐட்டமும் சேர்க்காது சிவன் குட்டி இன் மர்மங்களின் முடிச்சை ஒவ்வொன்றாக அவிழ்த்து எதிர்பார்க்காத கிளைமாக்சில் கலங்க வைத்து அப்ளாசை அள்ளுகிறார் ப்ளஸ்சி.

படத்தின் முதுகெலும்பு மோகன்லாலின் அசர வைக்கும் நடிப்பு. கோவம் கொண்டு உறுமுவதும் சட்டென கண் கலங்குவதுமாக ருத்ரதாண்டவம் ஆடி இருக்கிறார். இவரின் நடிப்புக்கு இந்த வருடம் தேசிய விருது கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே.

படத்தின் பின்னணியில் திகிலூட்டும் மோகன் சிதாராவின் இசையில், 'அன்னார கண்ணா வா' பாடல், சுகமான தாலாட்டு.

'அன்னாரக் கண்ணா வா' பாடலின் காணொளி.


அஜயன் விசெண்டின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்கு ஏற்ப கன கச்சிதம்.

படத்தில் உள்ள ஒரே குறை, இரண்டாம் பகுதியில், தனது நண்பர்களை தனது வீட்டிற்க்கு மோகன்லால் கூட்டி செல்லும் பகுதி ரொம்ப நீளமாக தோன்றுவதால்.. அங்கே தொய்வு விழுகிறது.

மற்றபடி வரவேற்க தக்க மாற்று சினிமா 'ப்ரம்மரம்'

நிச்சயம் படம் பார்த்த பின் ஒரு இரண்டு நாட்களாவது உங்களை இந்த படம் தூங்க விடாது.

ப்ரம்மரம்- விறு விறு பம்பரம்...
--

Monday, March 22, 2010

இருக்கை...!



மழையில்,
மனித வியர்வையில்,
குழந்தையின் கிறுக்கல்களில்..
கலவரத்தில் முத்தமிட்ட கத்தியில்...
காதலனை பார்க்கும் அவசரத்தில்...
பூச்சு தீட்டப்பட்ட பெண்ணின் நகங்களில்...,
மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த வன்முறையில்...
நைந்தும் பிய்ந்தும் போன..
இருக்கை...

நிர்வாணம் மறைக்க...
அவ்வப்போது ..
புத்தகம்,
கைக்குட்டை..
சிறு குழந்தை..
காய்கறி கூடை..
பைக்கட்டு என..
இடம் பிடிக்க நிகழும்...
ஆடை அணிவிப்புகள்..

பிச்சைகாரன்,
அம்மாவை தொலைத்த குழந்தை...
பாலியல் தொழிலாளி,
மதம் மறுப்பவன் ,
சாமியார்கள்,
காதலர்கள்...
திருடன்,
வைத்தியன்...
பார்வை தொலைத்தவன்...
வேலை இல்லாதவன்...
கால்களை இழந்தவன்...
என..
எவனுக்கும் பகிரப்படும் இடம்...

இரவின் மடியில்...
சாய்ந்து கொள்ள தோளும்..
காயாத கண்ணீரை...
துடைத்துக் கொள்ள மடியுமாய்...
மாணவர்கள் தாளம் போடும்...
இசை கருவியாய்...
அஜீரண குழந்தையின்
வாந்தியையும் மலத்தையும் ஏந்தி கொள்ளும்
ஏந்தலாய்...

என்னையும் தாங்கிக்கொள்ள...
சிரித்தபடி வரவேற்றது...
அரசு பேருந்தின்...
சன்னலோர... இருக்கை....
---

Wednesday, March 17, 2010

உலக திரைப்படம்: 11:14( ஆங்கிலம்) விறுவிறுப்பின் உச்சம்.





உங்களை நிஜமாகவே இருக்கை முனையில் ஒன்றரைமணி நேரம் இப்படம் உட்கார வைத்திருக்கும். நகம் கடித்தபடி ஒவ்வொரு காட்சிக்கு பின்னாடியும் 'அடுத்து என்ன நடக்க போகிறதோ' என மனம் பதைபதைத்தபடி காத்திருப்பீர்கள். நான் ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேன் ஏன் நினைத்தீர்களானால் படத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அப்படி பட்ட படம் தான் பதினொன்று பதினாலு (11:14..திரைப்படத்தின் பெயரே அதுதான்.).

படத்தின் மேகிங் மிகவும் புதுசு. இயக்குனர் கொஞ்சம் அமோரோஸ் பெர்ரோசை மேகிங்கில் உல்டா பண்ணி இருப்பது போல தோன்றினாலும் இது வேறு வகை. ஐந்து கதாபாத்திரங்களுக்கு ஒரு நாள் இரவு பதினொன்று பதினாலுக்கு என்ன நடக்கிறது என்பதை த்ரில்லாக (தில்லாக) சொல்லி இருக்கிறார் இயக்குனர் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டர் கிரேக் மார்க்ஸ். ஐந்து வெவ்வேறு கதைகள் ஒரே புள்ளியில் பதினொன்று பதினாலுக்கு இணைந்தாலும் ஒவ்வொரு கதைக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருந்து படத்தின் கடைசியில் நம் மனதில் எழும் கேள்விகளுக்கு தெளிவாக நம் திடுக்கிடல்களுக்கு விடை அளிக்கிறது படம்.

கதை 1.
---------
ஜாக் தண்ணி அடித்துக் கொண்டு செல்போனில் பேசியபடி,காரை ஒட்டி வரும்போது எதோ ஒன்று அவன் காரின் மேல் மொத கார் சறுக்கிக் கொண்டு சாலை ஓரத்துக்கு செல்கிறது. அப்போது மணி 11:14. சாலை ஓரத்தில் மான்கள் சாலை கடக்கும் சிக்னலை காணும் அவன், எதோ மான் தான் காரில் அடி பட்டு செத்து இருக்கும் போல என நினைத்து காருக்கு எதுவும் அடி பட்டிருக்கிறதா என பார்க்க இறங்கி வந்து பார்க்கிறான். அப்போது தான் அங்கு சிதைந்த முகத்துடன் ஒரு மனித உடலை பார்க்கிறான். குடிபோதையில் அவனை இடித்து விட்டதை உணர்ந்து கொள்ளும் வேளையில் இன்னொரு கார் அவனது அருகே வர, அந்த மனிதனை மறைத்து வைக்கிறான் ஜாக். அந்த காரில் வரும் நார்மா ஒரு நடுத்தர வயதுப் பெண். மானை அடித்து விட்டதாக அவள் கருதி அவனுக்கு உதவ, காவலருக்கு 911 என்ற என்னை அடித்து பேசி சொல்லி விட்டு போகிறாள். அவசர அவசரமாக அந்த பிணத்தை காரின் டிக்கியில் வைத்து பூட்டி காரை எடுக்க எத்தனிக்கும் வேளையில் அவனது காரின் பின்னே ஒரு போலீஸ் கார் நிற்கிறது. இறங்கி அவனிடம் வரும் போலீஸ் அவன் குடித்திருப்பதை உணர்ந்து அவனுக்கு விலங்கு பூட்டுகையில் அவனது காரின் டிக்கியில் ரத்தகரை பார்த்து உள்ளே ஒரு பிணம் இருப்பதை கண்டு திடுக்கிடுகிறான் போலீஸ். அவனை போலீஸ் கார்க்கு அழைத்து செல்ல அங்கே உள்ளே ஏற்கனவே பச்சி மற்றும் டப்பி(duffy) இருப்பதை பார்கிறான். அவர்கள் இவனுக்கு இடம் தர மறுக்க அந்த களேபரத்தில் போலிசிடம் இருந்து தப்பி ஓட, போலீஸ் இவனை துரத்த, பச்சி மற்றும் டப்பி தப்பி ஓடுகிறார்கள். ஜாக் ஓடி செல்ல அங்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கு இருந்து வெளி வரும் நார்மா, தனது கணவனை காணவில்லை என்றும் தனது மகள் விபத்தில் இறந்து விட்டாள் என்றும் அவள் கூற அந்த நேரம் போலீஸ் வந்து அவனை பிடிக்கிறான். அவன் தான் தனது மகளை விபத்தில் கொன்று விட்டதாக கூறி அவனை அடிக்கிறாள் நார்மா.

கதை 2.
--------
டிம் மார்க் மற்றும் எட்டி என்ற டீன் ஏஜ் வாலிபர்கள் ஒரு வேனில் பீர் அறிந்தியபடி தாறுமாறாக ஒட்டி செல்கிறார்கள்.
அவர்கள் போதை வரவழைக்கும் கோகைனை உறிய ஒரு புத்தகத்துக்கு தீ வைக்கிறார்கள் அது குபு குபு என எரிய அதனை தூக்கி சாலை ஓரத்தில் எறிகிறார்கள். அப்போது போதையின் உச்சத்தில் எட்டி வேன் ஜன்னல் கதவை திறந்து அப்படியே ஒன்றுக்கு போக, அதனை வேனை ஒட்டி கொண்டிருக்கும் மார்க் தடுக்க, சாலையின் நடுவே வந்துவிட்ட ஷேரி என்ற பெண்ணை இடித்து விட அந்த பெண் அங்கேயே மரணிக்கிறாள். அப்போது மணி 11:14. செய்வதறியாது அவர்கள் திகைக்க அங்கே ஓடி வருகிறான் ஒரு வாலிபன் (டப்பி). அவள் இறந்து போனதை உணர்ந்ததும் இடுப்பில் உள்ள துப்பாக்கியை எடுத்து வேனை நோக்கி சுட ஆரம்பிக்க, அவர்கள் வேனை கிளப்பி கொண்டு தப்பிக்கிறார்கள், அப்போது தான் டிம் எட்டியின் இடுப்பு பகுதியில் ரத்தம் கொப்பளிப்பதை பார்க்க, எட்டி, அந்த விபத்தில் ஜன்னல் கதவு மூடிக்கொள்ள, தனது ஆண் குறி வெட்டு பட்டு அந்த விபத்து நடந்த இடத்தில் துண்டாகிவிட்டதை சொல்லி அழுகிறான். டிம் அதனை தேடி விபத்து நடந்த இடத்துக்கு செல்ல, அங்கே இறந்த ஷேர்ரியை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருக்கும் இருவர் அந்த விபத்துக்கு இவன் காரணமாக இருக்கலாம் என துரத்த, டிம்மின் ஆண் குறியை தூக்கி கொண்டு வேனில் ஓடி வந்து ஏறி வேனில் பறக்கிறார்கள். டிம் ஏட்டிக்கு அவனுடையதை அளித்து தனது நட்பை பறை சாற்றிகொள்கிறான்.

கதை 3
---------
தனது நாயை வாக்கிங் கூட்டி செல்கிறான் பிரான்க். அப்போது ஒரு கல்லறை தோட்டத்தை கடக்கும் போது அங்கே தனது மகள் ஷேர்ரியின் கார் சாவி கிடப்பதை காண்பவன், தனது மகளின் பாய் பிரெண்டான ஆரோன் கல்லறையில் உள்ள ஒரு தேவதையின் சிலை விழுந்து தலை நசுங்கி செத்து கிடப்பதை கண்டு தனது மகள் பிரச்னையில் இருக்கிறாள் என உணர்ந்து அவளை காப்பாற்ற, அந்த பிணத்தை தனது காரின் டிக்கியில் ஏற்றி ஒரு பாலத்தின் மேல் சென்று சுற்றும் முற்றும் பார்த்தபடி அந்த மேம்பாலத்தின் மேலிருந்து பிணத்தை வீசி எறிய அது ஒரு காரின் மேல் விழுகிறது. அப்போது மணி 11:14 (கவனிக்க, இந்த பிணம் தான் முதல் கதையில் வந்த ஜாக்கின் காரில் விழுந்தது). அவனது ஜாக்கெட்டை தெருவில் எரிந்து கொண்டிருக்கும் புத்தகத்தில் போட்டு அதை எரிக்கிறான்.(இந்த புத்தகம் தான் இரண்டாம் கதையில், அந்த டீன் ஏஜ் வாலிபர்களால் வேனிலிருந்து தூக்கி எறியப்பட்டது).

கதை 4
---------
பச்சி ஒரு கடையில் வேலை பார்க்கிறாள். அங்கு வருகிறான் அவளது சிநேகிதனும் கடையில் வேலை பார்ப்பவனுமான டப்பி. தனது காதலி ஷெர்ரி கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் அதனை கலைக்க உடனே ஐநூறு டாலர் வேண்டும் என கேட்க, பச்சி தனது உடல் நிலை சரி இல்லாத சகோதரியின் வைத்திய செலவுக்கே பணம் இல்லை என அவனிடம் புலம்ப அவன் அவளிடம் ஒரு பிளானை சொல்கிறான். அதாவது, அந்த கடையை தான் கொள்ளையடித்து பணம் எடுத்து சென்று விட திட்டம் இடுவதாக கூறுகிறான். அதற்காக அவன் கொண்டு வந்துள்ள ரிவால்வரையும் காட்டுகிறான்.போலீஸ் தன்னை தேடிக்கொண்டிருக்கும் வேளையில் தன காதலியை அழைத்து சென்று அவளது கர்ப்பத்தை கலைத்து விட எண்ணி இருப்பதாக கூறுகிறான். அப்போது அந்த டீன் ஏஜ் வாலிபர்கள் வந்து கடையில் பீர் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். அப்போது அங்கே வருகிறாள் டப்பியின் காதலியான ஷெர்ரி. அவளை அழைத்து தனி அறைக்கு செல்கிறான் டப்பி. அப்போது பச்சி அவனது ரேவோல்வரை எடுத்து தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்டாக நினைத்து கொண்டு விளையாடிகொண்டிருக்க ரேவோல்வேர் வெடித்து விடுகிறது. பயந்து போன டப்பி பச்சியை திட்டி கொண்டிருக்க, அவனது கோட்டை வாங்கி கொண்டு புறப்படுகிறாள் ஷெர்ரி. அப்போது கல்லாவிலிருந்து பணத்தை திருடுகிறான் டப்பி. பச்சி, கொள்ளை அடிப்பது நிஜம் போல இருக்க வேண்டும் என சொல்லி தனது கையில் சுட சொல்கிறாள். டப்பி அவளது கையில் ஓரத்தில் சுட்டு விட்டு அவளுக்கு மருத்துவ உதவி செய்து அவளை போலிசை அழைக்க சொல்லி விட்டு வெளியேற, பச்சி பொலிசில் பேசி கொண்டிருக்கும்போதே போலீஸ் வந்துவிட மயிரிழையில் தப்பிக்கும் டப்பி, எப்படி அவ்வளவு சீக்கிரம் போலீஸ் வந்தது என குழப்பமடைகிறான். ஷெர்ரி இன் கார் இருக்கும் இடம் சென்று தனக்கு பணம் கிடைத்து விட்டதாக கூற, ஷெர்ரி தன காரில் இருந்து இறங்கி அவனை நோக்கி வருகையில், வேனில் அடிப்பட்டு சாகிறாள். அப்போது மணி 11:14 ஓடி வரும் டப்பி அவள் இறந்து விட்டதை கண்டு வேனை நோக்கி சுட துவங்க, அவர்கள் தப்பிக்க, யாரோ கொடுத்த தகவலின் படி அங்கு வரும் போலீஸ் டப்பியை கைது செய்கிறது. பச்சியும் அதற்க்கு உடந்தை என அவளையும் கைது செய்கிறது.

கதை 5.
-------------
இது ஷெர்ரி இன் கதை. நமக்கு எழும் கேள்விகளுக்கு எல்லாம் இந்த பகுதி விடை அளிக்கிறது. முதல் கதையில் ஜாக் யாரிடம் பேசி கொண்டிருந்தான்? ஆரோன் எப்படி இறந்தான்? டப்பி மற்றும் பச்சியை போலீஸ் க்கு போட்டு கொடுத்தது யார் என்பதை நச்சென்று விவரிக்கிறது இந்த பகுதி.

படத்தில் ஏகப்பட்ட கதைகள் முடிச்சிகள் இருந்தாலும் படத்தின் இறுதியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு தெளிவான கதையை நமக்கு புரிய வைப்பது திரைக்கதையின் வெற்றி. படம் முழுக்க நடப்பது ஒரு நாள் இரவு மட்டுமே. எனினும் அதனை படமாக்கிய விதம் நம்மை இங்கு அங்கு என நகர விடாமல் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் கிரேக் மார்க்ஸ். இவரே இந்த படத்தை சிறிதும் தொய்வின்றி எடுத்து செல்ல முழு முதல் காரணம். படத்தின் ஒளிப்பதிவாளர் ஷேன் ஹில்பர்ட் இயக்குனரின் வலது கையாக இருந்து படத்தின் வேகத்திற்கு உதவி இருக்கிறார்.

11: 14 விறுவிறுப்பின் உச்சம்.

படத்தின் முன்னோட்ட காணொளியை காண இங்கே சொடுக்கவும்

--

Thursday, March 11, 2010

செல்லு போனு கொல்லு(ம்) போனு -ஒரு ஜாலி கானா..!


இதனை வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி.


டவுசர் கூட போட மறந்து
டவுனுக்குள்ள அலைவான்.
தம்மாதூண்டு செல்லுபோனு தான்
டவுன் ஆச்சினா அளுவான்.

சாவக் கெடக்கற பெருச கூட
சாவட்டும்னு விடுவான்.
சார்ஜ் இல்லாத செல்லுபோனுக்கு
டாப் அப் பண்ண அலைவான்.

ஓடி ஒளச்ச அப்பனுக்கு
கை கால் அமுக்க நோவும்.
ஒரு வார டாவுக்கு
எஸ் எம் எஸ் அனுப்ப ஏங்கும்

நீயும் அவளும் பாக்கறதுக்கு
செல்லு 'மேட்டர' பதியும்.
ரூமுக்குள்ள நடப்பத பாத்து
ஊரு பூரா சிரிக்கும்.

செல் போன் இல்லா காலத்துல
நிம்மதியா இருந்த..
'செல்'லரிச்சு இந்த நாளு
ஆத்தாளையும் மறந்த...

-- நிலா முகிலன்

Tuesday, March 9, 2010

பெண்ணே...நீ..!


பொண்ணா பொறந்தவ தான்
பூமி ஆள பொறந்தவதான்
கண்ணா பொறந்தவதான்
கள்ளிக்கு தப்பி பொறந்தவதான்..

பூமி தாய் தான் உண்டு
பூமி தந்தை கேட்டதுண்டா..
மோதல் வார்த்தை 'அம்மா' ன்னு
சொல்லா குழந்தை பார்த்ததுண்டா..

விண்வெளிக்கும் விரைவாளே..
விளையாட்டிலும் வெல்வாளே
விருதுகளும் பல பெற்று
நாட்டின் மானம் காப்பாளே..

பெண் இல்லா துறை ஏதும்
உண்டா இவ்வுலகத்திலே..
இல்லைன்னு சொல்லுங்களே..
அதிலும் இவள் சாதிப்பாளே

உனக்குள்ளே உயிர் வளர்க்க
உனக்கு மட்டும் உரிமை உண்டு.
நீ உயிரை படைப்பதாலே..
நீயும் ஒரு கடவுளானாய்

இருபதாண்டு மேலாக
உன்னை வளர்த்த குடும்பம் விட்டு
எனை வளர்க்க வந்ததாலே
எனக்கும் நீ தாயானாய்...

பெண்கள் தினத்தில்...பெண்மையை வணங்கி... நிலா முகிலன்.

Friday, March 5, 2010

இலவசம்!




கடந்த சில நாட்களாக, ஊடகங்களும் பதிவர்களும் நிதயானந்த சுவாமிகளை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டது அவர் மட்டுமல்ல. அவரை கடவுளாய் வணங்கிய பக்தர்களாகிய மக்களும் தான். ஆனால் அவரது தியான உத்திகள் மற்றும் யோகாவினால் பயனுற்ற மக்கள் ஏராளம். அதில் என் நண்பர்களும் அடங்குவர். அவர் கற்று கொடுத்த தியானங்கள் மற்றும் யோகாவை மற்றும் பயன் படுத்துவோரை, இது அவ்வளவாக பாதிக்க வில்லை. இருந்தாலும் காசு பார்க்கும் நோக்கில் தொலைகாட்சிகள் அந்த கரும கன்றாவியை குழந்தைகளும் தொலைகாட்சிகளை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து, டி ஆர் பீ ரேட்டிங்கை மட்டும் குறி வைத்து அறமின்றி நடந்து கொண்டது மிகவும் கேவலம். பதிவர்கள் அனைவரும் அவரை பற்றி எழுதி வருவதால் எனக்கு எழுத ஒன்றும் இல்லை.

இருந்தாலும் என்னை மிகவும் பாதித்தது, உத்தர பிரதேசத்தில் ஒரு ஆலயத்தில், இலவச பிரசாதம் மற்றும் துணி மணிகள் பெற்றிட முண்டியடித்து வாங்க எத்தனித்து 37 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் உட்பட 65 பேர் பலியானது தான் என்னை உலுக்கியது. நித்யானந்தர் யாரோ ஒரு நடிகையுடன் புரளும் காட்சியை ஒளிபரப்பு செய்து காசு சம்பாதிக்க ஊடகங்கள். மனித உயிர்கள் மாண்டு போனதுக்கு முக்கியத்துவம் தராது போனது ஏன்?

இலவசமாக தருகிறார்கள் என்றால் முண்டியடிக்கின்றனர் மக்கள். இதே போல் தமிழகத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கிய நிகழ்விலும் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்இழந்தது
நினைவிருக்கலாம். இதற்க்கு காரணம் என்ன? இலவசம் என்றால், வசதி படைத்தவர்கள் கூட ஓடி பொய் 'சும்மாதானே' என வரிசையில் நிற்பது இந்தியர்களுக்கே உரிய ஒரு குணமாக மாறி போனது. இதற்க்கு அரசியல் வாதிகளும் ஒரு காரணம் தான். ஒட்டு வங்கிக்காக குறி வைத்து இலவச டி வீ ஒட்டு பொட பணம் பொருள்கள் இத்தியாதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்குவது தான் இவர்களது குறிக்கோள். இன்னும் இலவச அடுப்பு, இலவச நிலம், ஏன் இலவசமாக ஒரு ஏழைக்கு எம் எல் எ சீட் கொடுங்களேன்பார்ப்போம்.

இலவசங்களை கொடுத்து ஏமாற்றாமல், அவர்கள் உழைத்து வாழ ஏன் இவர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில்லை. ஒவ்வொரு இடைதேர்தலிலும் தேர்தல் கமிஷனின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அல்லது அவர்களை மிரட்டி, அல்லது அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு மக்களுக்கு பணம் பட்டுவாடா நடக்கிறது. இதனால் திருவாளர் பொது ஜனம் தனது தொகுதி எம் எல் எ அல்லது எம் பீ எப்போது மண்டையை போடுவார் எப்போது இடைதேர்தல் வரும் என காத்திருக்க ஆரம்பித்து விட்டான்.

ஏழைகளுக்கு தானே இலவசம் என சிலர் வாதிட வரலாம். இலவச பொருட்கள் வாங்குவோர் அனைவரும் ஏழைகள் தானா? தன வீட்டில் இரண்டு டி வீக்கள் இருக்கும் நபரும் , அரசின் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கும் விழாவில் வரிசையில் முண்டி அடித்து கொண்டு நிற்பதை நாம் பார்க்கிறோம்.

ஒரு குடும்பம் ஏழையாக இருக்க காரணம், சரியான வேலை வாய்ப்பு இல்லாதது. அவர்கள் வேலை செய்ய வேலை கொடு, அல்லது அவர்கள் தொழில் செய்ய கடன் கொடு. அதனை விட்டு இலவசம் கொடுத்தல், அவனுக்கு உழைப்பில் நாட்டம் இருக்குமா? அவன் இப்போது கிடைக்கும் சலுகைகளை அனுபவித்து உழைக்க மறந்து அவனது சந்ததியினருக்கு சொத்து சேர்க்க தவறி போனால், அவனது சந்ததியே அழிந்து போகும் அல்லவா.

அரசியல் வாதிகளுக்கு மக்கள் முக்கியமல்ல. அவர்கள் கையில் இருக்கும் ஒட்டு தான் முக்கியம். அதற்காக நித்யானந்தர் செய்யும் வேலைகளை விட கீழ்த்தரமாக அல்லவா செய்கிறார்கள். மற்றவன் தப்பு செய்தால் கூவி கூவி கூறும் இவர்கள், காசு கொடுத்து ஒட்டு வாங்குவதும் விபச்சாரம் அல்லவா? பொன்னாகாரம் இடைதேர்தல் வருகிறது. இதற்க்கு மூவாயிரம் ரூபாய் தட்டோடு ஒவ்வொரு வாக்காளன் வீட்டுக்கும் சென்று அன்பளிக்க கட்சிகள் தயாராக வருகிறது என படித்த பொது மக்கள் மேல் தான் கோவம் வந்தது. வாங்குகிறவன் இருக்கும்போது தானே கொடுப்பவன் தயாராகஇருக்கிறான்.

எதையும் சும்மா கொடுத்தால் முண்டியடித்து நிற்பதை நமது மக்கள் கை விட வேண்டும். உழைத்து உண்பதை உணரவேண்டும். இலவசம் தரும் கட்சிகளை ஒதுக்க வேண்டும். உழைப்பை சொல்லும் கட்சியை ஆதரிக்க வேண்டும். இல்லையேல் உத்தரப்ரதேச நிகழ்வுகள் போல இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கும்.
-

Tuesday, March 2, 2010

உலக சினிமா: லைவ் பிளஷ் (LIVE FLESH)


பெட்ரோ அல்மதோவரின் லைவ் பிளஷ் என்ற திரைப்படம் காணக் கிடைத்தது. டாக் டு ஹேர் என்ற அவரது அற்புதமான திரைப்படத்தை கண்டு ரசித்த நான் அதே முனைப்பில் இந்த திரைப்படத்தையும் அவருக்காகவே பார்த்தேன்.

தனது மனைவிகளின் மேல் உயிரையே வைத்திருக்கும் இரண்டு கணவர்கள், அவர்களுக்கு துரோகம் செய்யும் இரு மனைவிகள் என்ற ஒரு வித்யாசமான கதைக் களம். கணவர்களுக்கு இருக்கும் காதலை மிக அழகாக சொல்லும் பெட்ரோ.. தங்கள் கணவர்களுக்கு மனைவிகள் செய்யும் துரோகங்களையும் நியாயப் படுத்த முனைந்திருக்கிறார்.

ஒரு நள்ளிரவில் பிரசவத்தில் துடிக்கும் ஒரு தாய்க்கு ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் பஸ்சில் பிறக்கிறான் விக்டர். அவன் பஸ்சில் பிறப்பதால் அவன் சாகும்வரை பஸ்சில் செல்ல அவனுக்கு இலவச பாஸ் வழங்கப் படுகிறது.

இருபது வருடங்கள் கழித்து, காவல் துறையில் வேலை செய்யும் டேவிட் மற்றும் சன்சோ ஒரு காரில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது அளவுக்கு அதிகமாக குடிக்கும் சன்சோ, தான் தனது மனைவி க்ளாராவின் மீது உயிரையே வைத்திருப்பதாகவும் ஆனால் அவள் தனக்கு துரோகம் செய்வதை அறிவதாகவும் டேவிட் இடம் புலம்பி குடித்து தள்ளுகிறான் சன்சோ. அதற்க்கு டேவிட், அவன் அளவுக்கு அதிகமாக குடிப்பதாலேயே அவனது மனைவிக்கு அவனை பிடிக்காமல் போய் இருக்க கூடும் என அவனுக்கு அறிவுரை சொல்ல, அவள் அவ்வாறு இருப்பதாலேயே தான் குடிப்பதாக வாதிடுகிறான் சான்சோ.

அதே நேரம் வாலிபனான விக்டர் தான் சென்ற வாரம் டேட்டிங் செய்த ஏலேனாவின் வீடு தேடி வந்து தன்னுடன் படுக்குமாறு கூற அவனது ஆண்மையை அவமதிக்கிறாள் எலேனா. அவள் துப்பாக்கியை எடுத்து வந்து உடனே வீட்டை விட்டு வெளியேறுமாறு கூற அவளது கையை பிடிக்கும் விக்டர் அவளை பிடித்து தள்ள அந்த அதிர்ச்சியில் துப்பாக்கி வெடிக்க அவள் மூர்ச்சை அடைகிறாள். அப்போது தொலைக்காட்சி பெட்டியில் எதோ ஒரு சண்டை படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனினும் பயந்து போன பக்கத்து வீட்டுக்காரி போலிசை அழைக்க, அந்த அழைப்பு காரில் சுற்றி கொண்டிருக்கும் டேவிட் மற்றும் சந்சொவின் வயர்லஸ் க்கு வர அவர்கள் அந்த கட்டிடம் நோக்கி விரைகிறார்கள். அப்போது விழித்துக் கொள்ளும் எலேனா விக்டரை வெளியே செல்லுமாறு கூற இருவரும் விளையாட்டு தனமாக கட்டி கொண்டு சண்டை போட அதனை வெளியே இருந்து கவனிக்கும் டேவிட் மற்றும் சந்செஸ், விக்டர் ஏலேனாவை கற்பழிக்க முயல்வதாக நினைத்துக் கொண்டு வீட்டினுள் துப்பாக்கி உடன் பாய்கிறார்கள். ஏலேனாவை காப்பாற்றும் டேவிட், குடி போதையில் இருக்கும் சந்செஸ் ஐ அமைதியாக இருக்கும்படி கூற, சந்செஸ்சோ பாய்ந்து விக்டரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயல, எக்கு தப்பாக துப்பாக்கி வெடித்து டேவிட்டை காயப்படுத்துகிறது.


துப்பாக்கியின் விசையை இழுத்த விக்டர் சிறையில் அடைக்கப் படுகிறான்.டேவிட் க்கு குண்டு அடி பட்டதால், அவனது இடுப்புக்கு கீழ் செயல் இழந்து போகிறது. எனினும் தன்னை காப்பாற்றிய டேவிடை மணந்து கொள்கிறாள் எலேனா.

நாலு வருடம் கழித்து விக்டர் சிறையில் இருந்து வெளியே வரும்போது டேவிட் ஊனமுற்றோருக்கான கூடைபந்து போட்டியில் ஒரு நட்சத்திர வீரனாக மின்னுகிறான். தன்னை சிறையில் தள்ளிய அவனை பழி தீர்க்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறான். சந்செசின் மனைவி கிளாராவை மயக்கி அவளை உபயோகப் படுத்திக் கொள்கிறான். தன்னை அடித்து கொடுமை படுத்தும் கணவனான சான்செசை பழி வாங்க கிளாரா விக்டரை உபயோகப் படுத்திக் கொள்கிறாள்.

இடையில் அவனால் தனது மனைவி ஏலேனாவிற்கு ஆபத்து வர கூடும் என பயந்து விக்டரை எச்சரிக்கிறான் டேவிட். அவனை தொடர்ந்து சென்று அவனுக்கும் கிளாராவிற்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்து புகைப்படங்கள் எடுத்து வைத்து கொள்கிறான். எலேனா நடத்தும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விடுதியில் சேர்கிறான் விக்டர். ஏலேனாவின் வேலைகள் கண்டு அவளை பழி வாங்குவதை கை விடுகிறான் விக்டர். அவன் ஏலேனாவின் விடுதியில் வேலை பார்ப்பதை விரும்பாத டேவிட் அவனை மீண்டும் எச்சரிக்க, விக்டரோ தான் துப்பாக்கி மட்டும் பிடித்திருந்ததாகவும் துப்பாக்கியின் விசையை டேவிடை நோக்கி குறிபார்த்து இழுத்தது சான்செஸ் தான் எனவும் கூறும் விக்டர் அதற்க்கு காரணம் அப்போது க்ளாராவிடம் தொடர்பில் இருந்த அந்த ஆசாமி டேவிட் தான் என்றும் கூற வெட்கி தலை குனிகிறான் டேவிட்.

தன்னை தன மனைவி மன்னித்துவிடுவாள் என நினைத்து அதனை ஒளிக்காமல் தனது மனைவியிடம் கூறுகிறான் டேவிட் . ஒரு நாள் தனிமையில் இருக்கும் ஏலேனாவிடம், அவளை படுக்கையில் வீழ்த்தி டேவிடை தான் பழி வாங்க யோசித்தது வைத்திருந்த திட்டத்தை தான் கைவிட்டு விட்டதாக கூறுகிறான் விக்டர். டேவிட் க்ளாராவிடம் வைத்திருந்த தொடர்பை அறிந்து வருத்தத்தில் இருந்த எலேனா, கோவத்தில் தன்னையே விக்டரிடம் பகிர்ந்து கொண்டு, இடுப்புக்கு கீழ் செயல் இழந்த டேவிடை திருமணம் செய்து எதுவும் அனுபவித்திராத தனது வேட்கையை தணித்துக் கொள்கிறாள்..அதனை அப்படியே மறுநாள் டேவிட் இடம் கூற, அவனோ கதறி அழுது பின் அவள் மேல் தப்பில்லை என கூறி, சசெசின் வீடு செல்கிறான்.

விக்டரின் மீது மோகம் கொண்ட கிளாரா சாஞ்சசை பிரிந்து செல்கிறாள். க்ளாராவின் மீது உயிரையே வைத்திருக்கும் சாஞ்சஸ் அவளிடம் அழுது புலம்ப அவளோ அவனை உதாசீனப்படுத்திவிட்டு விக்டர் இல்லம் செல்கிறாள். சான்செசை தேடி வரும் டேவிட், க்ளாராவின் காதலன் விக்டர் தான் என தான் எடுத்த புகைப்படங்களை காண்பிக்க, கோவம் கொண்டு அவனை கொல்ல விரைகிறான் சான்செஸ். அங்கு தன்னை நோக்கி நீட்டிய துப்பாகியுடன் கிளாரவை கண்டு தானும் துப்பாக்கியை எடுக்க இருவரும் சுட்டு கொள்கின்றனர். அப்போது அங்கு வருகிறான் விக்டர். இறந்து போன கிளாரா மற்றும் இறக்கப்போகும் சாஞ்சசையும் மாறி மாறி பார்க்க சாஞ்சஸ் அவனை நோக்கி தனது துப்பாக்கியை உயர்த்த, வெளியே காரில் இருக்கும் டேவிட்க்கு உள்ளே இருந்து துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்கிறது.

அதன் பின் எலேனா மற்றும் டேவிடின் கதை என்னவானது என்பதை சஸ்பென்ஸ் த்ரில் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது டேவிட் ஆக நடித்திருக்கும் ஆவியே பார்டமின் நடிப்பு. ஊனமுற்ற விளையாட்டு வீரராக பின்னி எடுத்திருக்கிறார்.அந்த சக்கர நாற்காலியில் அவர் கூடைபந்து ஆடும் லாவகமும், மனைவியின் மேல் வெளிப்படுத்தும் காதலும்,மனைவியின் துரோகம் தெரிந்ததும் பொங்கும் ஆவேசமும் என படம் முழுதும் வியாபிக்கிறது அவரது நடிப்பாற்றல். காவலர்கள் ஏலேனாவை காப்பாற்றபோகும்போது நடப்பதும், அதன் காரணமும் முக்கியமான திருப்பங்கள். விறு விறு வென செல்கிறது படம். அதே சமயம் காதலையும் துரோகங்களையும் கலந்து கட்டி அடிக்கிறது. பால்மடோரின் படைப்புகளில் இதுவும் ஒரு முக்கியமான படம். 1997 இல் வெளி வந்த இந்த படம் பாப்டா மற்றும் ஐரோப்பிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் பல விருதுகளை அள்ளியது.

நிச்சயமாக வயது வந்தோருக்கான படம் இது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...