Wednesday, October 8, 2008

நடிகர்கள் ஏன் நாடாளக்கூடாது?

எம்ஜியார்தொடங்கி இன்று வந்துள்ள சிரஞ்சீவி வரை நடிகர்கள் அரசியலில் குதித்திருக்கிறார்கள். நடிகர்கள் நாடாள வர கூடாது என்றும் கூத்தாடிகளுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்றும் ஒரு சாரார் பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்க, பல நடிகர்கள் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கும் முனைப்போடு தான் இருக்கிறார்கள்.

1953 வரை காங்கிரஸில் இருந்த எம்ஜியார், கருணாநிதியால் திமுக விற்கு அழைத்து வரப்பட்டார். கருணாநிதியுடன் ஏற்ப்பட்ட பிணக்கால் 1972 இல் அதிமுக கட்சியை துவக்கினார். அவர் 1987 இல் தான் இறக்கும் வரை அவரே தமிழகத்தின் முதல்வராக இருந்தார். ஒரு நடிகன் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆவது இந்தியாவை பொறுத்த வரை அதுவே முதல் தடவை. எம்ஜியார் மக்களினால் ஒரு கடவுளாகவே பார்க்கப்பட்டார். திரையிலும் அவர் நல்லவனாகவே இருந்தார். ஏழை பங்காளனாக தனது இமேஜை வைத்துக்கொண்டார். நிஜத்திலும் ஏழைகளுக்கு பலவிதத்தில் காப்பாளனாக இருந்தார். இருந்தாலும் பலவித இலவச திட்டங்கள் வெளி வர அவரே முன்னோடி. மக்களை கவர இலவச திட்டங்களை அறிவித்து மக்களை சோம்பேறி ஆகும் திட்டம் அவராலேயே பிள்ளையார் சுழி போடப்பட்டது.

காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டிருந்த தமிழகம், காமராஜ் போன்ற பெருந்தலைவரையே முதல் பதவியில் இருந்து தூக்கி எறிய வைத்தது திரை உலகில் மின்னிய எம்ஜியார் என்ற நட்சத்திரம். தமிழக மக்கள் நடிகர்களை கடவுளாகவே கொண்டாடினர். வில்லனாக நடித்த நம்பியார் நிஜத்தில் சாந்த சொரூபி.சிறந்த பக்திமான். அவரை மக்கள் நிஜத்திலும் வில்லனாகவே பாவித்தார்கள்.தமிழக மக்களின் வாழ்க்கையோடு சினிமாவும் இரண்டற கலந்திருந்தது. எனவே அரசியல் வாதிகள் சினிமா நட்சத்திரங்களை மக்கள் சக்தியை இழுக்கும் காந்த சக்தியாக பயன் படுத்திகொண்டார்கள்.

சரி. நடிகர்கள் நாடாளலாமா கூடாதா? 2006 இல் அமெரிக்காவில் நடந்த கருத்து கணிப்பில் சிறந்த ஜனாதிபதியாக மறைந்த அமெரிக்கா அதிபர் ரோனல்ட் ரீகனை பெரும்பான்மையான அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்தனர். ரோனல்ட் ரீகன் ஒரு நடிகனாக இருந்து அரசியல்வாதியானவர். இன்றும் மத்திய வயதினரிடம் தங்களுக்கு பிடித்த தமிழக முதல்வர் யார் என தேர்வு செய்ய சொன்னால் நிச்சயமாக எம்ஜியார் அறுதி பெரும்பான்மையில் வென்று விடுவார்.
ரீகன் உலக சமாதானத்தில் அக்கறை கொண்டு இருந்தார். அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பொது பல வாய்ப்புகள் வந்தும் போருக்கு செல்லாமல் அமைதி காத்தார். முணுக்கென்றால் போருக்கு புறப்பட்டு விடும் அமெரிக்கா ஜனாதிபதிகள் இடம் இருந்து வித்தியாசப்படுத்தி நின்றார் ரீகன். அதனாலேயே ரீகன் மீது அமெரிக்கா மக்களுக்கு தனி பிரியம்.
மக்களின் ஆதரவு இருந்தால் முதல்வராகலாம். ஆனால் நிர்வாக திறமையும் அரசியலும் தெரிந்திருந்தால் மட்டுமே சிறந்த முதல்வராக முடியும். அதற்க்கு எம்ஜியார் போல ஒரு கட்சியின் சாதரண உறுப்பினராகி அரசியலின் நெளிவு சுளிவுகளை அறிந்து உண்மையான சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே அரசியல் பக்கம் எட்டி பார்க்கவேண்டும்.

வெறும் ரசிகர் கூட்டத்தை நம்பி அரசியலில் பிரகாசிக்க முடியாது.கட்டுக்கோப்பான மகத்தான ரசிகர் கூட்டம் வைத்திருந்த சிவாஜி கணேசன் இதற்க்கு நல்ல உதாரணம். அவரும் அரசியலில் இணைந்தாலும் அவரால் எம்ஜியார் அளவுக்கு அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. எம்ஜியார் ஜெயலலிதா கருணாநிதி போன்றவர்கள் சினிமாவில் இருந்தாலும் அரசியலில் குதித்து உடனே முதல்வர் ஆக வேண்டும் என ஆசை படவில்லை.

பா மா காவின் கோட்டையான விருத்தாச்சலத்தில் வெற்றி பெற்று சட்டசபை புகுந்த விஜய காந்தின் தைரியத்தை பாராட்டும் அதே வேளையில் சட்டசபையில் அவரது செயல்கள் சிறப்பானதாக இருந்ததா என்பது கேள்வி குறியே. சட்டசபை கூட்டத்தொடரின் முதல் பகுதியில் அவர் வாயே திறக்கவில்லை.கேட்டால் இப்போது தானே சட்டசபைக்குள்ளே நுழைந்திருக்கிறேன் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார். இது ஒரு எம் எல் எ க்கு அழகல்ல. இது அவரது அனுபவம் இல்லாமையே காட்டுகிறது. அவர் தனது கொள்கைகள் பற்றி அல்லது செய்யபோகும் திட்டம் பற்றி சொல்லாமல் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் திட்டி கொண்டே பொழுதை போக்குகிறார்.

அவர் முதல்வராகி விட்டால் அனேகமாக முதல் ஆறுமாதம் ஒன்றுமே செய்யாமல் இப்போது தானே முதல்வராகி இருக்கிறேன்..இனிமேல் தான் பழகி ஆரம்பிக்க வேண்டும் என கூறினாலும் கூறுவார்.
இவரைத்தவிர அவசரகதியில் அரசியலுக்கு வந்த கார்த்திக் சரத்குமார் போன்றோரை பற்றி சொல்லவே வேண்டாம். அரசியலுக்கு வந்த காரணத்தை நடிகர்களிடம் நிருபர்களின் கேள்விக்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில் மக்கள் சேவை செய்ய வந்தேன். அதனை அரசியலுக்கு வராமல் கூட செய்யலாமே.
அதற்காக நடிகர்கள் நாடாள கூடாது என பா மா கா கூறும் கூற்று சிறுபிள்ளைத்தனமானது . நடிகர்களால் தங்களது ஒட்டு வங்கி பாதிக்கும் என்ற பயத்தினால் அவர்கள் அப்படி பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் நாடாளும்போது, நடிகர்கள் ஏன் நாடாள கூடாது. நடிகர்களே அரசியலுக்கு வாருங்கள். ஆனால் வந்தபின் அது என்ன வென தெரிந்து கொள்ள முனையாதீர்கள். அது உங்களை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு ஆபத்தாக முடியும். உங்களுக்கும் அது ஒரு காஸ்ட்லியான விபத்தாக முடியும். அரசியலுக்கு வாருங்கள். அதனை கற்று கொண்டு வாருங்கள். மக்கள் சேவை தான் உங்கள் குறிக்கோள் என்றால் நீங்கள் கட்சி ஆரம்பித்த அடுத்த நாளே முதல்வர் ஆக வேண்டும் என கனவு காணாதீர்கள்.அரசியல் சுவடி கற்றுக்கொள்ளுங்கள்.ஆள வாருங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...