Monday, November 30, 2009

ஆரோக்கியம்: வாழைப் பழத்தின் நன்மைகள்.ஏழைகளின் கனி, முக்கனிகளில் ஒன்று என பல நூறாண்டுகளாக விரவி வரும் வாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. மேம்போக்காக, வாழை பழம் மலச்சிக்கல் தீர்க்க உதவும் என்பது தவிர வாழை பழத்தின் நன்மைகள் பல நாம் அறியாதது. வலைதளங்களில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட வாழைப்பழ நன்மைகள் இந்த பதிவில் தொகுக்கபடுகின்றன.

1. மனச்சோர்வு (Depression) குறையும்:
சமீபத்தில் மைன்ட் என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில், மன அழுத்தம் உடையவர்கள், வாழைப்பழம் உண்டபின் மிக இளைப்பாறுதல் தெரிவதாக அறிவித்துள்ளனர். அதற்க்கு காரணம், வாழைப்பழத்தில் உள்ள திர்ய்ப்டோபன் (tryptophan) என்ற புரத சத்து நமது மூடை மாற்றி, மகிழ்ச்சியாகவும் ரெலாக்சாகவும் வைக்க உதவுகிறது. இதன் மூலம் மனச்சோர்வு குறைவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
2.அனிமியா: இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் வாழைப்பழம், ரத்தத்தில் உள்ள ஹீமொக்லோபின்கள் அதிகரிக்க உதவி ரத்த சோகையை தீர்க்க உதவுகிறது.
3. இரத்த அழுத்தம்: வாழை பழத்தில் பொட்டசியம் அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் உள்ளதால், இரத்த அழுத்தம் தீர வழி வகுக்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கழகத்தின் சிபாரிசில், வாழைப்பழம் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புக்கு எதிரானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. புத்தி கூர்மை: வாழை பழத்தில் பொட்டசியம் சத்து அதிகம் இருப்பதால், புத்தி கூர்மைக்கு உதவுகிறது என சமீபத்தில் மிடில் செக்ஸ் என்ற பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

5. மலச்சிக்கல்: இது நாமனைவரும் அறிந்த ஒன்று தான். மலச்சிக்கல் உள்ளவர்களிடத்தில் நார் சத்து அதிகம் உள்ளதால், வாழைப்பழம், சிறந்த மலம் இளக்கியாக செயல்படுகிறது.

6. ஹாங் ஓவர்: நமது 'குடி' மகன்களுக்கானது. ஹாங் ஓவர் என்றால் என்னவென்று சொல்லி தெரியவேண்டியது இல்லை. வாழைபழ மில்க் ஷேக் இல் சிறிது தேனை ஊற்றி குடித்தால், ஹாங் ஓவர் தீரும் என்கிறார்கள்.

7. நெஞ்சரிப்பு: ஏதாவது காரமாக சாப்பிட்டுவிட்டு நெஞ்சரிப்பு என சொல்கிறவர்கள் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடவும். சாப்பாட்டு அமிலங்களை இளக்கி நெஞ்சரிப்பு தீர உதவும்.
8. கொசுக்கடி: வாழைபழ தோலின் உள் பக்கத்தை நமது தோலில் தேய்த்தால், கொசுக்கள் நம்மிடையே வராது என ஆய்வுகள் கூறுகின்றன.
9. நரம்புகள்: வைட்டமின் B சத்து மிகுதியாக இருப்பதால், வாழைப்பழம் நமது நரம்புகளுக்கு நல்லது.

10. உடல் பருமன்: இப்போதைய கால் சென்டர் மற்றும் ஐ டி மக்கள், தங்களது மூளையை கசக்கி வேலை செய்வதால், அவர்களுக்கு உடல் பயிற்சி இல்லாத காரணத்தால், நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால், அதிகம் பசி எடுத்து, அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வாழைபழம் உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவு சீராக இருக்கும். எனவே பசியும் குறைவாகவே இருக்கும்.

11. அல்சர் அல்லது வயிற்றுப் புண்: வயிற்றில் உள்ள பல வியாதிகளுக்கு வாழைபழம் அருமருந்து. அல்சர் வியாதி உள்ளவர்கள், வயிற்றின் ஓரத்தில் அமிலத்தின் சுவடுகள் ஒளிந்திருக்கும். வாழைப்பழம் அந்த அமிலத்தை சாந்தப்படுத்துவதால், வயிற்றின் அலறல்களில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.

12: புகைப்பழக்கம்: வாழைப்பழத்தில் பொட்டசியம் மற்றும் மக்நீசியம் ஆகிய தாதுபொருட்கள் இருப்பதால், புகைப்பழக்கத்தை நிறுத்த நினைப்பவர்களுக்கு வாழைப்பழம் உதவும்.
13, மன அழுத்தம் (Stress). வாழைப்பழத்தில் பொட்டசியம் தாதுப்பொருள் மிகுதியாக இருப்பதால், இதயத்துடிப்பை சீராக்குகிறது,ஆக்சிஜெனை மூளைக்கு அனுப்பி, நீர் அளவை நேரான அளவில் வைக்க உதவுகிறது. நம்மில் மன அழுத்தம் நேர்கிற போது நமது மெடபாலிக் அளவுகள் அதிகமாக, பொட்டசியம் அளவு குறைகிறது. அதனை அதிகரிக்க வைக்க வாழைப்பழம் உதவி மன அழுத்தத்தை குறைக்கிறது.
14. மாரடைப்பு: "The New England Journal of Medicine," என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில், வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், மாரடைப்பை நாற்ப்பது விழுக்காடுகள் குறைக்க இயலும் என கூறுகிறது.
வாழைப்பழம், நமது ஊரில் மலிவாக கிடைப்பது தான் நாம் அதனை விட்டு விலகிப்போக ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. வாழைப்பழத்தை கரகாட்டக்காரன்,காமடிக்கும் 'வாழைப்பழ சோம்பேறி' என திட்டுவதற்கும் பயன் படுத்தி வருகிறோம். உன்னிப்பாக கவனித்து பார்த்தால்தான் அதன் நன்மைகள் நமக்கு புலப்படுகின்றன.
வழக்கப்படுத்துவோம் வாழைப்பழத்தை!

Thursday, November 19, 2009

அன்றும் இன்றும்....யூத்புல் விகடனுக்கு நன்றி.


அன்று...
நாங்கள்
சீறும் சிங்கங்களாக
வீறு கொண்டு எழுந்த போது
எங்கள்
மயிர்க்கால்களை
மழித்து விட்டீர்கள்...

அன்று...
நாங்கள்
வானம்பாடிகளாக
விண்ணில் பறக்க முனைந்தபோது
எங்கள்
சிறகுகளை சிரைத்துவிட்டீர்கள்...

அன்று ....
நாங்கள்
அநீதி கண்டு பொங்கி
கோஷமிட்டபோது
எங்கள்
குரல் வளைகளை
அறுத்து எறிந்தீர்கள்...

இன்று...
புழுபூச்சிகள் தின்றுவிட்ட
எங்களின்,
புகைப்படங்களுக்கு
மாலைகள் அணிவித்து
'தியாகி' என ஒளி ஏற்றுகிறீர்கள்..!

-----

Wednesday, November 18, 2009

சுட்டிப்பெண் டோரா பிறந்த கதை.


உங்கள் வீடு, எங்கள் வீடு, அடுத்த வீடு, ஏன், உலகில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கொள்ளை கொண்ட சுட்டிப்பெண் தான் டோரா. தொலைக்காட்சி பெட்டிகள், வீட்டுக்கு வீடு முளைத்து விட்ட பின், தொலைக்காட்சி தொடர்கள், அருவருப்பான நடன அசைவுகள் கொண்ட சினிமா பாடல்கள் என வீட்டின் வரவேற்ப்பு அறைகளை ஆக்ரமித்த்துக் கொண்டு குட்டி குழந்தைகளை கலாசார சீரழிவுகளுக்கு இட்டு செல்லாமல் காப்பது, குழந்தைகளுக்கான சானல்கள்தான்.

கண்களை உருட்டி பார்க்கும் அந்த பெரிய விழிகளும், நேர்த்தியாக வாரப்பட்ட தலை முடியும், டோரா வின் கண்டுபிடிப்புகளும், சிறியவர்களை மட்டுமல்ல. பெரியவர்களையும் கட்டிபோட்ட சுதந்திரம் டோராவிற்க்கே உண்டு. இன்று மேற்கத்திய நாடுகளில் உள்ள குழந்தைகளிடம்,
'வருகிற பிறந்த நாளன்று என்ன வேண்டும்?' என கேட்டால், உடனே, 'டோரா பொம்மை, டோரா பை, டோரா பேனா' என டோராவை சம்பந்தப்படுத்தியே கோரிக்கைகள் வருகின்றன. டோரா பெண்ணாக இருப்பதால், டோராவை ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மிக அதிகமாக நேசிக்கிறார்கள். எனவே நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஆண் குழந்தைகளை கவர, டோராவிற்கு ஒரு ஒன்று விட்ட சகோதரன் டியாகோ என ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உலவ விட, அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் ஹிட்அடித்திருக்கிறது.

மூளையை மழுங்கடிக்க வைக்கும் மாயஜால கதைகள் இல்லை. அதிகப்ரசங்கித்தனமான வேலைகளை குழந்தைகளை இந்த தொடரில் செய்வது இல்லை. குழந்தைகள் என்ன செய்யுமோ அதையே தான் இந்த கார்டூன் கதாபாத்திரங்களும் செய்கின்றன. போகிற போக்கில், குழந்தைகளுக்கு எண்கள், வண்ணங்கள்,மலர்கள்,பழங்கள் என சொல்லி கொடுக்கிறார்கள். நற்பண்புகளை நாசூக்காக போதிக்கிறார்கள். கதையோடு கூடி டோரா கேள்விகள் கேட்கிறாள். அதற்க்கு, பதில்களை கூறுகிறார்கள், தொடரை பார்க்கும் குட்டிகள். உதாரணமாக, டோரா ஒரு ஆபிள் தோட்டத்தை கடந்து செல்கிறாள். அங்கு நான்கு மரங்கள் இருக்கின்றன. இந்த தோட்டத்தில் எவ்வளவு மரங்கள் இருக்கின்றன என கேட்கிறாள் டோரா. உடனே மரங்களை எண்ண தொடரை பார்க்கும் குட்டிகளிடையே போட்டி நடக்கிறது யார் முதலில் சொல்வதென்று. நான்கு என கூறவும் டோரா ஒவ்வொரு மரமாக எண்ணி காண்பிக்கிறாள். பெரியவர்களுக்கு இது போர் அடித்தாலும், குழந்தைகள் தொலைகாட்சியில் டோராவின் தொடரை பார்த்தே பல நல்ல விஷயங்கள் கத்துக்கொள்வது நன்மை தானே?.

சரி உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கொண்டாடும் டோரா எப்போது, எங்கே பிறந்தாள்?.


அதற்க்கு நாம் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி 1997 போகவேண்டும்.

1997 டிசம்பரில், அமெரிக்காவில் உள்ள நிகேலோடியன் என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிகாரிகள் ஒன்று கூடி, புதிதாக குழந்தைகளை கவரும்படி நிகச்சிகள் தயாரிக்கவேண்டும் என தனது சக நிர்வாகிகளின் படைப்பு திறனை சோதித்து பார்த்தனர். எவ்வளவோ பேர் சொன்ன கருத்துகள் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எல்லாம் ஏற்கனவே வந்தவையாக இருந்தன. அல்லது குழந்தைகளுக்கு போர் அடிக்கும் நிகழ்ச்சியாக இருந்தன. திரைப்பட கல்லூரியில் படித்து கொண்டு பகுதி நேரம் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்த்த வால்ஷ் என்ற பெண்மணி, தானும் இன்னொரு சக ஊழியனான க்றிஸ் கிப்போர்ட் இருவரும் சேர்ந்து, ஒரு சின்னப்பெண் கதாநாயகியாக நடிக்க குழந்தைகளுடன் நேருக்கு நேர் உரையாடும் வகையில்,குழந்தைகளின் மூளையை வேலை செய்ய வைக்க,அவர்களுடன் ஒவ்வொரு காட்சியிலும் பேசி நடிக்கும் ஒரு காதாபாத்திரம் கொண்ட ஒரு ஐடியா வைத்திருப்பதாக சொல்ல, ஆர்வமானது நிர்வாகம்.


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான இண்டராக்டிவ் தொடராக உருவாகும் எண்ணம் உருவானது. நிர்வாகிகளும், வால்ஷ் மற்றும் கிரீஸ் இருவரும் ஒரு சிறிய படம் ஒன்று எடுத்து தருமாறு பணித்தது.வால்ஷ் மற்றும் க்றிஸ் இருவரும் உக்காந்து யோசிக்க.... பின்வரும் திட்டங்களை உருவாக்கினர்.


1. டோரா எங்காவது பயணம் செய்தபடி இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கதையிலும் டோராவுக்கு ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கான நேருக்கு நேர் கேள்வி பதில் பாணியில் குழந்தைகள் தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்க வேண்டும்.

4. குழந்தைகளுக்கு அவரகளது கதையை நேரில் பார்ப்பதை போன்ற அனுபவம் வேண்டும். அவர்கள் அன்றாடும் சந்திக்கும் நிகழ்வுகள் காட்சிகளில் தெரிய வேண்டும்.

5. டோரா ஒரு திடமான, தைரியமான, அறிவான சுட்டி குழந்தையாக இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு விளம்பர ஓவியர் ஹெலேனாவிடம் இவர்கள் சொல்ல சொல்ல, அவர் தனது கணவனின் துணை கொண்டு நாம் இப்போது திரையில் பார்க்கும் டோராவை உருவாக்கினார். முதலில் எல் கே ஜி படித்து கொண்டிருந்த ஹெலேனாவின் குழந்தைக்கு டோராவை காட்ட அக்குழந்தைக்கு மிகவும் பிடித்துப் போனது. ஐந்து முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளை சோதித்து கடைசியில் கத்லீன் ஹீர்லிஸ் என்ற குட்டிபெண்ணின் குரல் டோராவின் குரலானது.1998 இல் டோராவின் குட்டி படம் தயாரானது. முதலில் நான்கு முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளை பிடித்து படத்தை பார்க்க வைத்தார்கள். அவர்கள் அனைவரும் குதூகலத்துடன் டோராவை கொண்டாட ஆரம்பித்தனர். அன்றே தெரிந்து விட்டது நிகேலோடியன் ஊழியர்களுக்கு. டோரா ஒரு மாபெரும் சக்தியாக வளரப் போகிறாள்என்று.ஏப்ரல் 1999 இல் டோரா முதன் முதலில் தொலைகாட்சியில் தோன்றினாள். டோராவை காட்டியே சாதம் ஊட்டிய தாய்மார் பலர். (நிலா காட்டி சோறு ஓடின காலம் எல்லாம் மலை ஏறி போச்சி.) தங்கள் குழந்தை போஷாக்காக வளர காரணம் டோரா என்றனர். டோராவின் பொம்மைகள், டோராவின் பள்ளி பைகள், டோராவின் உடை போல உடைகள், டோராவின் சிகை அலங்காரம், என பலரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர். டோரா பெண்ணாக இருக்கிறாள் ஆம்பிளை பசங்களான எங்களுக்கும் ஒரு கதாபாத்திரம் வேண்டும் என நினைத்த குட்டி பசங்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய, டியாகோ என்ற டோராவின் ஒன்று விட்ட சகோதரனின் பாத்திரம் உருவாக்கப் பட்டது. குழந்தைகளுக்கு நேரப்போக்கு மட்டும் அன்றி அறிவு வளர்ச்சிக்கும் டோரா தொடர் உத்தரவாதம் அளிப்பதால் தான், இன்றும் டாப்பில் இருக்கிறாள்டோரா.

இதில் நிகிலோடியன் எடுத்த முயற்சி பாரட்டத்தகும். எடுத்தேன் கவிழ்த்தேன் என குழந்தைகள் தொடரை வெறும் பூதம் மற்றும் அதிகப்ரசங்கிதனம் காட்டி தொடர் எடுக்கும் நம்மவர்கள், குழந்தைகளோடு குழந்தையாக இருந்து அவர்களின் உலகை புரிந்து கொண்டு ஆய்வு செய்து களத்தில் இறங்கினால் நல்ல குழந்தைகள் தொடர் தமிழிலும் உருவாக சாத்தியம்உண்டு.

Monday, November 16, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே...!


'ஆனந்த சுதந்திரம்... அடைந்து விட்டோம்...'
பாரதீ....!
நீ கண்ட கனவு
இன்னும் எங்களுக்கு கனவாகவே....

'நெஞ்சு பொறுக்குதில்லையே..
இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்துவிட்டால்...'
அன்றே தெரிந்துவிட்டது உனக்கு...
எங்களுக்கு...
இப்போது தான் புரியவே ஆரம்பித்திருக்கிறது.

புதுமை பெண்களை
படைக்கக் கோரினாய்...
புதிதாக பிறக்க கூட
நம் தேசத்து மன்னர்கள்
விட்டுவைப்பதில்லை.

ஜனிக்கும் கருப்பைகளே..
என் புதுமை பெண்களுக்கு...
கல்லறைகள்.

ஸ்கேனில் தப்பி விட்டால்...
இவர்கள்
முதலில் குடிப்பது
தாயின் முலைப்பாலை அல்ல...
கள்ளிச் செடியின் காம்புப் பாலை..

'தனி ஒருவனுக்கு உணவில்லையேல்..
ஜகத்தினை அழித்திடுவோம்...'
இங்கு ஜகமே தவிக்கிறது..
எதனை அழிப்பது?

'சாதி சண்டைகள் போச்சோ..சமய சண்டைகள் போச்சோ..'
எப்படி பாரதீ?
எங்கள் அரசியல்வாதிகளின் ஒட்டு வங்கியே
அதில் தானே இருக்கிறது?

எங்கள் அரசியல் வாதிகளின்
ஆதர்சன சத்தியகள் எல்லாம்..
அரியணை ஏறியதும்
ஆணி அடிக்கப்படும்.

எங்கள் தலைகள்
அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது
உலக வங்கியில்.

உன் புரட்சி உணர்வுகள்..
எங்கள் இளைஞர்களின் இதயங்களில்
புலரவே இல்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு
திட்டங்கள் தீட்டவேண்டியவர்கள்
பட்டங்களை சுமந்து கொண்டு
வீதிகளில்...
வேலைக்காய்....

'சிங்கள தீவினிற்கு ஒரு பாலம் அமைப்போம்'
அதனை செயல்பட துணிந்ததால்...
எங்களுக்கு கிட்டியது
பாலமல்ல..
மரண ஓலம்.

எங்கள் தேசத்தின் கால்களே
நசுக்கி போட்டது
எங்கள் தொப்புள் கோடி சொந்தங்களை...

இப்போதைக்கு
நம் பாரதத்துக்கு வேண்டியதெல்லாம்
ஒரு நல்ல தலைவன்.

பாரதீ..
மீண்டும்
இம்மண்ணில் பிறந்து விடு.
இறந்து கொண்டிருக்கும் இந்தியாவிற்கு
உயிர் கொடு.
உணர்வுகளை தொலைத்துகொண்டிருக்கும்
எம் நாட்டு இளைஞர்களை
உன் கவிதைகளால் உரமேற்று.
உன் மூலம்
நம் தேசம்...
ஒரு
புதிய விடியலை காணட்டும்.....

--மகா கவியின் நூற்றி இருபத்தி ஏழாம் பிறந்த தினத்தை முன்னிட்டு....

-நிலா முகிலன்.
-----

Friday, November 6, 2009

நகைச்சுவை குற்றங்கள் - 5


தன தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்ட கதை.

அமெரிக்காவில் எந்த ஒரு ஆபத்தில் இருந்தாலும் , மக்கள் உடனே தொலைபேசியில் அழைப்பது 911 என்ற எண்ணை. தொலைபேசியில் நமது விவரம், நம்மை சூழ்ந்துள்ள ஆபத்து, நமது முகவரி எல்லாம் சொல்லி விட்டால் ( சொல்லாவிட்டாலும் நமது எண்ணை வைத்து அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்), எண்ணி ஏழு நிமிடத்திற்குள் காவலர்கள் நமது வீட்டுக்கதவை தட்டுவார்கள்.

அப்படித்தான் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தில் உள்ள கைன்ச்வில் பகுதியை சேர்ந்த வான் போவெல் என்ற 22 வயது வாலிபனிடம் இருந்து வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. அவனுடைய அழைப்பின் காரணம் தான் கொள்ளை அடிக்கப்பட்டது தான்.
"சரி எங்கிருந்து அழைக்கிறீர்கள் உங்கள் முகவரி என்ன? "என கேட்கப்பட்டதும் மறுமுனையில் ஒரு சத்தமும் இல்லை. காரணம் அழைத்தவன் தனது முகவரியை மறந்து விட்டிருந்தான். எனினும் அவன் அழைத்த எண்ணை வைத்து அவனது வீட்டை கண்டுபிடித்து அவனிடம் விசாரணை மேற்க்கொண்ட போலீஸ் கடைசியில் அவனையே கைது செய்தது தான் வேடிக்கை. தான் வைத்திருந்த மரிவானா என்ற போதை பொருள் மூட்டையை இருநபர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்துவிட்டது. போதையில் இருந்ததால், 911 எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடிந்த அவனால் தனது முகவரியை சொல்ல முடியவில்லை. சட்டத்துக்கு விரோதமாக போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக அவன் கைது செய்யபட்டான். அவனிடம் போதை மூட்டையை கொள்ளை அடித்த அந்த இருவரை காவல்துறை தேடி வருகிறது.

நேரம் சரி இல்லை.

ஆளற்ற ஒரு கட்டிடத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடி விற்று காசு பார்க்க திட்டம் இட்டனர், கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜெம்ஸ் ஆயர் மற்றும் பிரேட்ரிச்க் கில்லீ. அவர்கள் அதற்க்கு தேர்ந்தெடுத்த நேரம் சரி இல்லாமல் பொய் விட்டது.

ஆம் அவர்கள் உள்ளே புகுந்து திருடி கொண்டிருந்த சமயம், காவல் துறையினரின் ஒரு படையணியினரின் பயிற்சி முகாம் அங்கு அன்று நடத்த திட்டமிட்டிருந்தது அவர்களுக்கு தெரியாமல் போயிற்று. கட்டிடத்தின் உள்ளே ஒரு காவலதிகாரி பதுங்கி கொண்டு காவல் நாய் தன்னை கண்டுபிடிக்கிறதா என பார்ப்பதற்காக எப்போதும் உள்ள வழக்கமாக... ஒலிபெருக்கியில், காவல் நாய் கட்டிடத்தினுள் வருகிறது என்றும் உள்ளிருப்பவர்கள் உடனே வெளியேறாவிட்டால் நாயினால் கடி வாங்கப்படும் சாத்தியம் உண்டு என்றும் கூற, பதுங்கி இருந்த ஜெம்ஸ் ஆயர் தன்னை காவல் துறை கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி நடுங்கி கொண்டே வெளியே வந்து சரணடைந்தான். திடுக்கிட்ட அந்த அதிகாரி அவனை மேலும் விசாரிக்க தான் திருட வந்ததை ஒத்துக்கொண்டு தனது நண்பன் கில்லியையும் போட்டு கொடுக்க..இப்போது இருவரும் சிறையில்.

Wednesday, November 4, 2009

முக்தர் மயி - ஒரு பழங்குடிப் பெண் போராளி.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மலை கிராமம் மீர்வாலா. மச்தோய் பலோச் என்ற பழங்குடியினர் அதிகமாக வாழும் கிராமம். 2002 ஆம் வருடம். தனது பதினாலு வயது தம்பி எதிரி குடியினரின் பெண்ணுடன் சுத்துவதாக கிளம்பிய வதந்தியால் பஞ்சாயத்து கூடப்படுவதை கண்டு மனம் பதை பதைத்து பஞ்சாயத்துக் கூடத்துக்கு ஓடி வருகிறாள் அந்த முப்பது வயதுப்பெண் முக்தர் மாய். தன தம்பி ஒரு பாவமும் அறியாதவன் என்றும் அவனை விட்டு விடுமாறும் பஞ்சாயத்தினர் முன் கெஞ்சி கதறி அழுகிறாள். பஞ்சாயத்தினரோ,
'உனது தம்பி நமது குடிக்கு கேடு விளைவித்துவிட்டான். அவனை மன்னிக்கவேண்டுமென்றால் நீ அதற்க்கு பரிகாரம் செய்யவேண்டும் செய்வாயா?' என கேட்கிறது.

தனது தம்பி மேலுள்ள பாசத்தினால் வரப்போகும் ஆபத்தை அறியாத அந்த அபலைப் பெண் சரி என்பதாக தலையை ஆடுகிறாள். பஞ்சாயத்தினர் நிரூபிக்கப்படாத அந்த வதந்திக்கு அந்த அதிர்ச்சியான அபாயமான அதிரடியான தீர்ப்பை வழங்குகிறார்கள்.

'இந்த பெண்ணின் சகோதரன் தனது நடத்தையினால் நமது குடிக்கு அபகீர்த்தி விளைவித்துவிட்டான். இந்த பெண்ணின் வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ஒரு ஞாயமான தீர்ப்பை வழங்குகிறது. இந்த பெண்ணின் சகோதரனால் நம் குடிக்கு ஏற்ப்பட்ட அவமானம் மொத்தமும் இந்த குடும்பத்துக்கே செரக்கடவது எனவே நம் குடியில் உள்ள நால்வர் இந்த பெண்ணை நம் கிராமத்து மக்கள் அனைவரின் முன்னிலையில் வன்புணர்ச்சி செய்யவேண்டும். அதன் பின்னர் இந்த குடும்பத்தினர் அனைவரும் அதனை நினைத்து நினைத்து வெட்கி வாழ்நாள் முழுதும் வாழவேண்டும்.'

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண்ணின் தந்தை பஞ்சாயத்தின் முன் கீழே விழுந்து அழுது புரள்கிறான். அவனை உதாசீனப்படுத்திவிட்டு கிராமத்தின் முன்னிலையில் அந்த அக்கிரமம் அந்த பெண்ணின் கதறலில் அரங்கேறுகிறது. ஒட்டு மொத்த கிராமமும் அந்த அட்டூழியத்தை கண்டு அமைதியாக இருக்கிறது. அந்த நால்வரும் அந்த பெண்ணை சின்னாபின்னாபடுத்தி போடுகிறார்கள். கந்தலாக கிடந்த அந்த பெண்ணை அவளது தந்தை தன பெண்ணின் நிலையை எண்ணி கதறியபடி ஒரு ஆடையை கொண்டு போர்த்தி வீட்டுக்கு தூக்கி போகிறான்.

தனக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணி எண்ணி முக்தர் அழுது தற்கொலைக்கு முயன்று தோற்க்கிறாள். அவள் தனது குடும்பத்தின் துணையோடும் நண்பர்களின் ஆதரவுடனும் உடல் நிலையிலும் மன வலிமையிலும் தேர்ச்சி பெறுகிறாள். அவளுடைய பால்ய தோழிகளான நஸ்ரீன் அக்தர்,நசீம் அக்பர் மற்றும் ஜமில் அஞ்சும் அவளுக்கு உறுதுணையாக இருந்து தோள் கொடுக்க ஒரு இஸ்லாமிய இமாமின் துணை கொண்டு காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அநீதியை அரக்க செயலை புகாராக கொடுக்கிறாள். அந்த புகார் முதலில் ஏற்றுக் கொள்ள படவில்லை. தான் கற்பழிக்கப்பட்டவள் என வெளிப்படுத்திக்கொள்ள எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டாள் என்கிற தைரியத்தில் அவளது கிராமத்து பஞ்சாயத்து மனிதர்கள் இருக்க, தனது தோழர்களுடன் அந்த இஸ்லாமிய இமாமின் உதவியுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்களின் வாயிலாக உலகுக்கு தெரிவிக்கிறாள்.

இந்த அநீதி உலகெங்கும் பறைசாற்றப்பட, பாகிஸ்தானின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு அவளுக்கு தண்டனை அளித்த கொடியவர்கள் கைது செய்யபடுகிறார்கள். நீதி மன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் மகிழ்வடைந்த முக்தர் இப்படி சொல்கிறாள்.
'இது எனக்கு உண்டான தீர்ப்பு அல்ல. இது போன்ற தீர்ப்பு எழுதும் பஞ்சாயத்தருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு. கல்வி அறிவும் உலக அறிவும் இல்லாத பெண்களை கொடுமை செய்யும் உலகத்தினருக்கு எதிரான தீர்ப்பு'
என முழங்கினாள்

அவளுக்கு அரசாங்கத்தின் பேரில் நாலு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இஸ்லாமாபாத்தின் முக்கிய இடத்தில் முக்தர் தன குடும்பத்துடன் வசிக்க ஒரு பெரிய வீடும் கொடுக்கப்பட்டது. அதனை மறுத்துவிட்ட முக்தர், அரசு தனக்கு அளித்த நாலு லட்சத்தில் தனது கிராமமான மீர்வாலாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்றை துவக்கினாள்.அவளும் அவளது தோழிகளும் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்க துவங்கினார்கள். சமுதாயத்தைச் எதிர்கொள்ளும் பக்குவம் அங்கு பெண்களுக்கு போதிக்க படுகிறது.
தானும் ஒரு மாணவியாய் அந்த பள்ளியில் கல்வி கற்றார் முக்தர். தனது பள்ளியில் மற்ற மாணவியரோடு தானும் மாணவியாய்....

அறியாமையே பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணம் என்பது முக்தர் மயி யின் முழக்கம். அந்த அறியாமை இருளை இன்றைய இளம்பெண்களிடம் இருந்து அகற்றவே அவர் பள்ளிகள் துவங்கி உள்ளார்.
உலகம் முழுதும் அவர் வரவேற்கப்படுகிறார். பல விருதுகள் அவரை தேடி வருகிறது.
அவற்றில் சில.

ஆகஸ்ட் 2 2005 பாகிஸ்தான் அரசாங்கத்தின் வீர தீர செயல்களுக்கான பாத்திமா ஜின்னா தங்க பதக்கம்.
நவம்பர் 2 2005 அமெரிக்க இதழான கிளாமர் 'இந்த வருடத்தின் சிறந்த பெண்' (woman of the year) என கெளரவம்.
ஜனவரி 2006 - அவரது கதை ஜெர்மனி இல ஜேர்மன் மொழியில் மற்றும் பாரிசிலிருந்து ப்ரென்ச் மொழியிலும் புத்தகமாக வெளி வந்தது. அதனை வெளியிட அவர் பாரிசுக்கு அழைக்கப்பட்டு அரசாங்க மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.
2 மே 2006 இல நியூ யோர்க்கின் ஐ நா சபையில் அவர் பேட்டி காணப்பட்டு அது ஒளிபரப்பானது. அவர் அங்கு சொன்னது..'தனது நீதிக்காகவும் தனது அடுத்த தலைமுறையின் நீதிக்காகவும் தான் பாடு பட போவதாக சொன்னார்'
மார்ச் 2007 இல வடக்கு தெற்கு விருது ஐரோப்பா ஒன்றியத்தால் வழங்கப்பட்டது.

பெண் இன கொடுமைகளால் மனம் புழுங்கி உள்ளுக்குள்ளேயே தவித்திருக்கும் பெண்களுக்கு மத்தியில் முக்தர் மயி ஒரு எடுத்துக்காட்டு. அவரது கல்வி பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி. தகவல் உதவி விக்கிபீடியா

Monday, November 2, 2009

உலகின் மிகப்பெரிய கப்பல் - ஓயாசிஸ் ஒப் தி சீஸ்மனிதனின் ஆசைக்கு எல்லை ஏது. ஒன்றை ஒன்று மிஞ்ச வேண்டும் என முனைப்புடன்,மனிதத்தின் சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதோ உலகத்தின் மாபெரும் கப்பலான 'ஓயாசிஸ் ஆப தி சீஸ்' தனது பயணத்தை துவக்கி உள்ளது. கப்பலின் படங்களையும் செய்திகளையும் பார்த்தால் ஒரு சிறு ஊரையே கப்பலில் உள்ளடக்கி உள்ளார்கள் போல தெரிகிறது.

-கப்பலின் எடை இரண்டு லட்சத்தி இருபதாயிரம் டன்.
-150 மைல்கள் நீளமுள்ள பைப்புகளை பயன்படுத்தி உள்ளனர்.
-3,300 மைல்கள் நீளமுள்ள மின்சார ஒயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-2,300 டன் தண்ணீர் இதிலுள்ள 21 நீச்சல்குளங்கள் மற்றும் ஜக்குசிகளில் பயன்படுத்தப்படுகிறது .
-இந்த கப்பலில் உள்ள சென்ட்ரல் பார்க் தான் உலகிலேயே கப்பலில் கட்டப்பட்டுள்ள உண்மையான பூங்கா. மொத்தம் 12,275 செடிகளும் 56 மரங்கள் மற்றும் மூங்கில்கள் உள்ளது. சென்ட்ரல் பார்க் கப்பலில் உள்ள ஒரு அறை

-5400 பேர் ஒரே சமயத்தில் இதில் பயணம் செய்யலாம்.
-கப்பலில் பதினாறு மாடிகள் உள்ளன..(அம்மாடீ...)
-ஏழு குறு நகர்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
-இரண்டாயிரத்து எழுநூறு அறைகள் உள்ளன.
அக்வா திறந்த வெளி அரங்கம்.

-திறந்த வெளி அரங்கம் உண்டு (கடலலைகளை கேட்டவாறு டைட்டானிக் -திரைப்படம் பார்த்தால் ஒரு பய பயப்படாம இருக்கமாட்டான்.)
-பதினோரு விடுதிகளும் ஏழு நீச்சல் குளங்களும் உண்டு.
குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்.

அதெல்லாம் சரி.. விலை எவ்வளவுன்னு கேக்கறிங்களா...? நம்மால முடிஞ்சது படத்த பாத்து பெருமூச்சி விடுவது தான். அத நான் செஞ்சிட்டேன். அப்ப நீங்க......?
-----

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...