Wednesday, July 21, 2010

ஒரு இந்தியப் பயணம் - 5



இம்முறை இந்தியா செல்லும் வேளையில் எனது இரண்டு நண்பர்களின் பெற்றோரை கண்டு வருவது என தீர்மானமிட்டிருந்தேன். அவர்களை என் சிறுவயது முதலே நான் அறிவேன் என்பதாலும், அவர்களின் ஆசிகளுடனே தான் நான் வளர்ந்தேன் என்பதாலும் தான்.

தி நகரிலுள்ள அந்த பிரமாண்ட பங்களாவில் எங்களது கால் டாக்சி நுழைந்தபோது அந்த வீட்டின் இறுக்கமும் பொலிவிழந்த சூழலும் என் மனதில் சுருக்கென தைத்தது. எனது நண்பன்.. அவர்களுக்கு ஒரே மகன்.அவன் கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கனடாவிற்கு வருகை தந்து அங்குள்ள சி என் டவர், நயாகாரா நீர்வீழ்ச்சி என பல கண்டு புகைப்படங்கள் கொண்டு சென்றனர் அவனது பெற்றோர். வருவோர் போவோரிடமெல்லாம், தன்  மகன் கனடாவில் பெரிய வேலையில் இருப்பதாக கர்வத்தோடு சொல்லிகொள்ளும் அவர்கள் வீட்டுக்கு வருகை புரிவோர் அனைவரிடமும் தங்களது கனடா விஜயத்தை பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததில்லை. ' ஊருன்னா அது கனடா தான்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாம் அவனது அப்பா மொத்தமாக படுக்கையில் விழும் வரை தான். அதற்க்கப்புறம், அவர்கள் வெளியே செல்வது குறைந்து போயிற்று. ஆம் அவருக்கு போன் கான்சர். அதுவும் முதுகு தண்டு வடத்தில் வந்ததால் அவரால எழுந்து நிற்க முடியாது.

அவர்களை நான் சந்தித்தபோது அவர் படுக்கையில் இருந்தவாறே 'வாப்பா' என்றதும் என் கண்களில் நீர் முட்டிக் கொண்டது. அஜான பாகுவான அந்த மனிதர் பாதியாக இளைத்துப் போயிருந்தார். அவரால் எழுந்து அமரக் கூட முடியாத நிலை. அந்த அம்மா தலை நிறையப் பூவுடனும்.. நெற்றி நிறைய குங்குமத்துடனும் மங்களகரமாக ஒரு மகாலட்சுமியை போல் இருந்தார். என் மனைவிக்கும் தொடுத்த பூ அணிவித்து ஆதுரத்துடன் தழுவிக் கொண்டார். எங்களது வருகை அவரது முகத்தில் புன்னகையை வரவழைத்தாலும் அதன் பின்னே உள்ள சோகம் என் உள்ளத்தை கவ்வியது.

'அருண் கனடாவில இருந்து போன் பண்ணாம்பா. அவனுக்கு இந்த வருஷமும் லீவு கெடைக்கலயாம். அடுத்த வருஷம் முயற்சி பண்றேன்னு சொல்லிருக்கான்' என்று அந்த அம்மா சொன்னபோது. அருண் கனடாவில் வேலைபார்க்கிறான் என்ற கர்வம் காணவில்லை.

அப்பா பேசினார்.
' அவன் கிட்ட கொஞ்சம் அட்வைஸ் பண்ணி, அப்பாவ வந்து பாத்துட்டு போக சொல்றியாப்பா?..இன்னும் எவ்வளவு நாள் னு  தெரியல...ராவானா வலி உயிர் போறது. நான் வலி தாங்க முடியாம கத்தற கத்துல.. இவளுக்கும் தூக்கம் கேடறது. அவளுக்கும் வயசாயடுத்து. என்னப்பா பண்றது... பகவான் இப்படி ஒன்னை கொடுத்துட்டான். என்னமோ கருணை கொலை அப்டி இப்டின்னு எல்லாம் சொல்றாளே... அதை எதாச்சும் ஒன்னு பண்ணிடப்படாதா? பிராணன் போனா எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும். இழுத்துட்டே இருக்குப்பா டாக்டரும் எப்போ நான் சாவேன்னு சொல்ல மாட்டேன்கறான்.'

அவர் முகத்திலும், பேச்சிலும் வலியின் வேதனை உரைத்தது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தொண்டையில் இருந்து வார்த்தை வரவில்லை. அம்மா வாயில் முந்தானையை வைத்து அழுத்தியவாறு அடுப்பங்கரை செல்ல என் மனைவி அவர் பின்னாடியே சென்றாள். அவள் முகத்தில் கண்ணீரை என்னால் காண முடிந்தது.

என் மகனின் முகம் நோக்கி பழிப்பு காட்ட அவன் சிரிக்க அவரும் சிரிக்க ஆரம்பித்தார்.
'எவ்ளோ வயசு பையனுக்கு.'
'ரெண்டுப்பா..'

'அருண் பையனுக்கு வயசு நாலு.  அவளுக்கு டெலிவரி அப்போ ஒத்தாசைக்கு வேணும்னு எங்களை வர சொல்லிருந்தான். கனடா எல்லாம் நல்லா சுத்தி பாத்தோம். அப்போ என் பையன் கனடால இருக்கான் அப்டின்னு சொல்லிக்கறதுக்கு  பெருமையா இருந்திச்சி. ஆனா இப்போ.. முடியாத நேரத்துல அவன் பக்கத்துல இருந்தான்னா.. யானை பலம் இருக்கும்.... வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து.... அது பொய் இல்லைப்பா.. சத்தியமான உண்மை. நான் எல்லாம் அரசாங்க உத்தியோகத்துல ஒரு சாதாரண கிளார்க்கா வேலை பாத்தப்போ நெனச்சி பாத்தேனா கனடா எல்லாம் போவேன்னு?  அருணுக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல கனடா  போகணும்னு. நான் தான் பையன் கனடா போனா எனக்கும் மதிப்பு அவனுக்கும் நல்லதுன்னு கடன் வாங்கி அனுப்பி வச்சேன். எதோ ரெண்டு மூணு வருஷம் சம்பாதிச்சிட்டு வரட்டும் னு. அங்க உள்ள கிரீன் கார்டு சிடிசன் இது பத்தி எல்லாம் எனக்கு அப்போ தெரியாம போச்சி'


'அமெரிக்கா கனடா எல்லாம் மலை பாம்பு மாதிரி. உள்ள வரவங்கள அப்டியே விழுங்கிக்கும் வெளியே துப்பாது. உனக்கு என்ன உங்க அப்பா அம்மா சீக்கிரம் போய்ட்டாங்க. நாலு பசங்க வேற. ஒருத்தர் இல்லாட்டி இன்னொருத்தர் வீட்டில இருந்திருப்பாங்க. நான் ஒண்ணே ஒண்ணு தான் பெத்து வச்சிருக்கேன். அதுவும் இப்போ கூட இல்ல. பேரக் கொழந்தைகளை கொஞ்சனும்னு ஆசையா இருக்கு. வேப்காம்ல தாம்பா பாத்து கொஞ்சிக்கறேன். அவளை கம்ப்யூட்டர் மானிட்டர பக்கத்துல தரவச்சி முத்தம் குடுக்கறேன். எல்லாம் இயந்திரம். ரத்தம் சதை எல்லாம் போச்சி. இதோ பாரு.. எலும்பு ஒவ்வொன்னா ஒடஞ்சிட்டே வருது...இப்போவாச்சும் என்ன தூக்கி உக்கார வச்சி வெளிய போக வைக்கறா. இன்னும் எலும்பு ஒடஞ்சிடுத்துன்னா அதுவும் முடியாது. என்ன பண்ண போறாளோ...?'

'நான் அருண் கிட்ட பேசறேன்ம்பா...'

'எல்லாம் சொல்லியாச்சி அங்க இருந்தா தான் எனக்கு த்ரீத்மேன்ட்க்கு பணம் அனுப்ப முடியும்னு சொல்றான். பணம் எதுக்குடா.. நீ வரதுக்குள்ள நான் பொணம் ஆகாம வேண்டிக்கோ னு சொன்னேன். ரெண்டு வாரம் என் கிட்ட பேசலை. இவ தான் தனியா தவிச்சி போய்ட்டா... எனக்காக ஒன்னு பண்ணுப்பா..'.

'சொல்லுங்கப்பா.. என்ன பண்ணனும்....'

'கடவுள்ட்ட வேண்டிக்கோ...சீக்கிரம் நா செத்து போய்டனும்னு வேண்டிக்கோ...'

'ச்சே ச்சே அப்டி எல்லாம் நீங்க சொல்லக் கூடாது....' அவர் கண்களை மூடிக் கொண்டார்.  அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு எனது அடுத்த நண்பனின் இல்லம் செல்லும்போது நானும் என் மனைவியும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்கும் இதயம் கனத்திருந்தது.

எனது அடுத்த நண்பனின் இல்லம் வியாசர்பாடியில் இருந்தது. அவர்கள் வீட்டில் ஐந்து பையன்கள். ஐவருமே மொத்தமாக ஒரு ஏக்கர் நிலம் வாங்கி பாகம் பிரித்து வீடு கட்டி இருந்தார்கள். அம்மா சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். அவர்களை வளர்த்தது அவர்களது தந்தையும் பாட்டியும் தான். அந்த மனிதனை நான் கண்டபோது அவர் பளிச்சென்று கோல்ட் பிரேம் கண்ணாடியில் சிரித்தார்.
'நீ சற்குணம் தானே...?'
'இல்லப்பா...' என நான் என்னை அறிமுகப்படுத்தி கொண்டபோது.. அவர் ஞாபகம் வந்தது போல சிரித்தார்.
'ஒ ரொம்ப நாளாச்சிப்பா பாத்து '

ஆனால் நான் அந்த வீட்டை விட்டு கிளம்பு வரையில் ஒவ்வொரு பெயரை சொல்லி சொல்லி நீ அவன்தானே என கேட்டார். அவருக்கு ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாய் தப்பி கொண்டிருக்கிறது. ஆனால் அவர் மிக மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், அவர் தனது ஐந்து மகன்களுடன் ஒன்றாக குடி இருக்கிறார்.

'ஒரு குறைவும் கெடயாது தம்பி. இந்த வீட்டுல போர் அடிச்சா அந்த வீட்டுக்கு போய்டுவேன். அங்க போர் அடிச்ச அடுத்த வீடு. ஏன்னா ஸ்வீட் தான் தரமட்டேன்கறாங்க. சுகர் சுகர் னு சொல்றாங்க. வந்தா என்ன. நா இருந்து என்னத்த சாதிக்க போறேன். அதனால, நைசா பேரப் பிள்ளைங்க கிட்ட இருந்து திருடி சாப்டுருவேன். ஆனா எரும மாடுக பொய் அவங்க அப்பா அம்மா கிட்ட வத்தி வச்சிறுதுக.'

உண்மை தான். அவர்கள் வீட்டில் ஐந்து குடும்பமும் சேர்ந்து கிட்டத்தட்ட இருபது பேர் மொத்தமாக வட்டமாக தரையில் அமர்ந்து உண்டோம். கல கல என இருந்தது. வீட்டை விட்டு கிளம்பும்போது மொத்தமாக அனைவரும் வந்து வழியனுப்பினார்கள்.

மறுநாள் காலையில் நான் கிங் பிஷேர் ஏர்லைன்சில்,  இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே உள்ள முரண்களை நினைத்தபடியே கோவை சென்று சேர்ந்தேன்.

என்னை வளர்த்து ஆளாக்கின என் பெற்றோருக்கு மானசீகமாக நன்றி நவின்றேன்.

(பயணம் தொடரும்...)
--

Saturday, July 17, 2010

திரைப்படம்: இஷ்க்கியா (Ishqia).(ஹிந்தி).

கதை?
உத்தரப்ரதேசத்தின்  எல்லையோர கிராமத்தில் வாழ்ந்து வருபவள் கிருஷ்ணா. அவளது கணவனின் சமூக விரோத போக்கு பிடிக்காமல், காவல் துறையிடம் சரணடையுமாறு மன்றாடுகிறாள். அவனும் சரி என மறு அறைக்கு செல்ல அங்கு சிலிண்டர் வெடிக்கிறது.

கலுஜான் மற்றும் பப்பான் இருவரும் திருடர்கள். கலுஜானின் மருமகன் தான் பப்பான். இருவரும் கலுஜானின் மைத்துனனிடம் கொள்ளையடித்து விட்டு, நேபாளின் எல்லையோர கிராமத்துக்கு வருகிறார்கள். அவர்கள் கையில் இரண்டரை லட்ச ரூபாய் பணம். கிருஷ்ணாவின் கணவன் வர்மா தாங்கள் நேபாளுக்கு தப்பி செல்ல உதவி புரிவான் என எண்ணத்துடன் வந்தவர்களுக்கு, சிலிண்டர் வெடித்து வர்மா இறந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். எனினும் அந்த விபத்தில் தப்பித்த கிருஷ்ணா அவர்களுக்கு உதவுகிறாள்.அவர்களது பணம் காணாமல் போக, ஒருவனை கடத்தினால் தங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் என்றும் அதற்க்கு உதவுவதாகவும் கூறுகிறாள் கிருஷ்ணா. மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். இடையே கலுஜான் கிருஷ்ணாவின் மேல் காதல் கொள்ள, பப்பானோ கிருஷ்ணாவின் ஒப்புதலுடன் அவளுடன் கலவி கொள்ள, அந்த மனிதனை கடத்தும் சமயம், கலுஜானுக்கும், பப்பானுக்கும் மோதல் வெடிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ளும் கிருஷ்ணா, அவனை கடத்தி சென்று விடுகிறாள்.

கிருஷ்ணா எதற்கு அவனை கடத்தினாள், கலுஜான் மற்றும் பபபானின் காதல் என்னவானது என்பதை சொல்கிறது திருப்புமுனைகள் பல கொண்ட கிளைமாக்ஸ்.

கிருஷ்ணாவாக வித்யா பாலன், அவரது திரைப்பட வரலாற்றில் நிச்சயம் இந்த படம் ஒரு மைல் கல். இத்தகைய கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். அவரது கண்களே படத்தில் பாதி வசனங்களை பேசி விடுகின்றன. அவரும் பப்பானாக வரும் அர்ஷாத் வாசியும் முத்தமிட்டு கொள்ளும் அந்த முழு நீள நிமிடம் பொறி பறக்கிறது.

நாசருதின் ஷாவின் காதலும் பப்பானின் காமமும் கவிதை. 'உன்னுடையது மட்டும் காதல், என்னுடையது மட்டும் காமமா?' (துமாரா இஷ்க் இஷ்க் ஹமாரா இஷ்க் செக்ஸ் ?) என கேட்கும் அர்ஷத் வர்சியின் நடிப்பு அருமை. படத்தின் பெரும் சக்தியே இது போல படம் முழுவதும் வரும் ப்ளாக் ஹ்யூமர் தான்.

விஷால் பரத்வாஜின்   போக்குடன் கலந்த கசல் இசை காட்சிகளுகேட்ப படத்துடன் ஊடாடுகிறது.  'டில் தோ பச்சா ஹாய் ஜி ' பாடல் இன்னமும் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது.

சிக்கலான கதையை கம்பி மேல் நடப்பதை போல இலகுவாக்கி இயக்கி இருக்கிறார், விஷால் பரத்வாஜின் ஆஸ்தான திரைக்கதை எழுத்தாளரான அபிஷேக் சௌபி. படத்துக்கு பெரும் பலம் மோகன கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு.எந்த ஒரு மிகைப்படுத்தலும் இன்றி ஒளி அமைப்புகள் துல்லியம்.


ஒரு கமெர்ஷியல் சினிமாவுக்கே உரிய கதையை, சினிமாத்தனங்களை வெகுவாக குறைத்து முடிந்தவரை எதார்த்தமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.



இஷ்கியா...பிடிச்சிருக்கு...

--

Friday, July 16, 2010

ஒரு இந்தியப் பயணம்.-4

இந்தியாவுக்கு  வரும்போதெல்லாம், நான் ஒரு நகரத்தை பார்த்து அஞ்சுவது என்றால் அது சென்னையை கண்டு தான். அதற்க்கு காரணம் அங்குள்ள உஷ்ணம். அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து ரொம்ப அலட்டிக்கிறான் என நினைப்பவர்களுக்கு... கோவை வாசிகளை கேட்டு பாருங்கள். அங்குள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் வாழ்ந்தவர்கள், சென்னை வந்து அதன் காட்டமான தட்பவெட்பம் கண்டு அஞ்சவே செய்வார்கள். நானும் கோயமுத்தூர் காரன் தான். இந்த முறை சற்று அதிகமாகவே சூடு. நூற்றி ஐந்து டிகிரி கொளுத்தி தள்ளியது. ஐந்தடி நடந்தாலே சட்டை எல்லாம் வியர்வையில் நனைந்து போனது. இம்முறை உலகெங்கிலுமே சூடு மிக அதிகம் என படித்திருந்தேன். இந்தியாவில் தான் அப்படி என்றால், இங்கு அமெரிக்க வந்த பிறகும் வெய்யில் நூறு டிகிரியை விட்டு இறங்க மாட்டேன் என்கிறது. ஒசோன் லேயரில் ஓட்டை விழுந்ததை காரணமாக சொல்கிறார்கள்.

எனினும் சென்னை அழகாக மாறி இருந்தது. முன்பை விட அதிக சுத்தமாக இருந்தது. எங்கெங்கும் மேம்பாலங்கள்.பல திறக்கப் படாமல்.. சில கட்டி முடிக்கப் படாமல்...
உயர்ந்த கட்டிடங்கள்...நல்ல சாலைகள் என வெகுவாக உருமாறி இருந்தது. எனினும்... டிராபிக் மிக அதிகம். இரண்டு சக்கர வாகனங்களை விட இப்போது அதிகமாக நான்கு சக்கர வாகனங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

என் மனைவி ஸ்பென்சர்ஸ் பார்க்கவேண்டும் என விரும்பியதால், ஸ்பென்சர்ஸ் சென்றோம். முன்பு இருந்த சுத்தமும் அழகும் இப்போது இல்லை.. மிக மிக நெரிசலாக உரு மாறி இருந்தது. அங்கு எனது நண்பனை வர சொல்லி இருந்தேன்.

                                                              ஸ்பென்சர் பிளாசா 
போலாரிஸ் லாப்சில் வேலை பார்க்கும் அவன் ஸ்பென்சர்ஸ் வந்தபோது இருவரும் கட்டி தழுவிக் கொண்டோம். ஆம். பதினாறு வருடங்கள் கழித்து அவனைப் பார்க்கிறேன். திருச்சி செயிட் ஜோசப்ஸ் கல்லூரியில் படித்த பொது, நாங்கள் அடித்த கூத்து கொஞ்சம் நஞ்சம் இல்லை. கல்லூரியில் விடுதியில் வேறு வேறு அறைகளில் தங்கி இருந்தபோதும்.. வேறு வேறு வகுப்புகள் படித்த  போதும்...எட்டு பேர் கொண்ட எங்கள் நண்பர் பட்டாளம் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கி, ஒன்றாக சைட் அடித்து (வெள்ளிகிழமைகளில் தாவணி பெண்களை பார்க்க அனைவரும் மலைக்கோட்டை கோயில்  சென்று அமர்ந்திருப்போம்). ஒன்றாக திரைப்படங்கள் சென்று... ஒன்றாக கலாய்த்து...என ஒன்றாகவே திரிந்த காலம் அது.பின்னர் எல்லோரும் வெவ்வேறு திசைகளில் பயணப்பட்டாலும்   அவ்வப்போது ஒரு மின்னஞ்சல் என எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இம்முறை என் நண்பன்  சென்னையில் இருந்ததால், அவனை சந்திப்பது என ஏற்பாடாயிற்று. என்னை மதிய உணவுக்கு ஹோட்டல்க்கு அழைத்து செல்வதாக கூறி இருந்தான். நானோ இலை போட்டு சாப்பாடு போடும்  ஒரு சிறந்த சைவ உணவகத்துக்கு அழைத்து செல்லுமாறு கூற அவன் தனது காரில் அழைத்து சென்று நிறுத்தியது ரெசிடென்சி ஹோட்டலில். அங்கு தெரிந்த பணக்காரத்தனம் என்னை மிரள வைத்தது. அந்த உணவகத்து பரிமாறுபவர்கள்.. பஞ்சக்கச்சம் அணிந்து பழுப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினார்கள். எனது நண்பனும் அவர்களிடம் அதே நுனி நாக்கு ஆங்கிலத்தில் கதைக்க நான் தேமே என அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மகாராஜாக்கள் அந்த காலத் சினிமாக்களில் அமர்ந்திருப்பதை போல திண்டுகள் வைத்து இருந்தனர். படுக்கையை பார்த்ததும் என் மகன் வழக்கம் போல அதில் ஏறி குதிக்க ஆரம்பித்தான்.

'ரொம்ப காஞ்சி பொய் வந்திருப்பீங்க. நீங்க சாப்பிடுங்க நான் பையன பாத்துக்கறேன்' என அவன் என் மகனோடு விளையாட ஆரம்பித்தான்.

இலை போலவே இருந்த வெள்ளி தட்டின் மேல் அதே வடிவத்தில் இலையை வெட்டி வைத்து அதன் மேல் சாப்பாடு பரிமாறினார்கள். ஸ்பூன் டம்ளர் என அனைத்துமே வெள்ளி. சாப்பாடு பிரமாதம். வட்ற்றல் குழம்பு சாம்பார், மோர் குழம்பு ரசம்..புளி சாதம், தயிர் சாதம்.. நான்கு வகைப் போரியல், அப்பளம் கூட்டு என எனது கனவு சாப்பாடு என் கண்முன்னே விரிய விரிய அனைத்தும் ஒரு கை பார்த்தேன். 

அவன் அவனது காரில் கொண்டு வந்து எங்கள் வீட்டில் விட்டு டாடா காட்டியபோது...  . பெரிய கம்பனியில் பெரிய வேலையில் கை நிறைய சம்பாதித்தாலும்.. கல்லூரி காலங்களில் நாங்கள் படித்தபோது எங்கள் வீடுகளில் இருந்து வரும் மணி ஆர்டர்களுக்கு காத்திருந்தபோதும எந்த எதிர்பார்ப்பும இன்றி வளர்ந்த எங்கள் நட்பு  எங்களுக்குள் இருந்த பிணைப்பு, தற்போது எங்களுக்கென்று ஒரு தனி வாழ்க்கை, தனி குடும்பம் என  உருவாகி நாங்கள் மீண்டும் சந்தித்தபோது, கால ஓட்டத்தில்  எங்கேயோ அறுந்து போனதை போல உணர்ந்தேன்.

(பயணம் தொடரும்...)
--

Wednesday, July 7, 2010

ஒரு இந்தியப் பயணம் -3

                          பெங்களூரு விமான நிலையத்தின் வெளிப்புற தோற்றம்.

 'அண்ணா நீங்க தமிழா?' கேட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கும். சாயம் போன சுடிதாரை அணிந்திருந்தாள். மிகவும் ஒல்லியாக இருந்தாள். என்னையும் என் கையில் இருந்த 'சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு' புத்தகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

' ஆமாம்மா' என நான் சொன்னதும் உடனே என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து...
'அண்ணா நான் ராமநாதபுரம் பக்கத்துல காளையார் கோயில் பக்கம் போகணும். எனக்கு உதவி செய்விங்களா?'

அந்தப்பெண் வள்ளி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவள். வீடு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏஜண்டுகள் மூலம் அனுப்பப் பட்டுள்ளவள். மாடு மாதிரி உழைத்திருக்கிறாள். அவளது சம்பளம் ஏஜண்டுகளுக்கு நேரடியாக போய்விடும். அவர்கள் பாதி பணத்தை அம்முக்கி கொண்டு மிச்சத்தை அவளது வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். சமீபமாக இவளுக்கு உடல் நலம் குன்றி பொய் உள்ளது. ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்திருக்கிறாள். அதற்கும் மேல் தங்களுக்கு இவள் உதவிட மாட்டாள் என உணர்ந்து அவளுக்கு ப்ளைட் டிக்கெட் எடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

அவள் அப்படி கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சென்னைக்கு அவளது மாமா வருவதாக சொல்லி இருப்பதாக கூறினாள். அவளது பாரங்களை நானே எழுதி அவளது டிக்கெட் வாங்கி பரிசோதித்து அவளை அவள் கிளம்ப இருக்கும் விமான நிலையத்தின் கேட் வரை சென்று விட்டு வந்தேன். நான் பெங்களூரு சென்று சென்னை செல்ல இருப்பதால், சென்னையில் நான் தாங்கும் இடத்தின் தொலை பேசி என்னையும் கொடுத்து, ஏதாவது தேவையென்றால் அழைக்கும் படி சொல்லிவிட்டு வந்தேன். எனக்கும் முன்னே, அவளது விமானம் புறப்பட்டு விட்டது. கண்களில் நன்றியோடு எனக்கு டாடா காட்டிவிட்டு சென்றாள்.

தோஹாவிலிருந்து பெங்களூரு செல்லும் விமானம் சிறியதாக இருந்தது. அமெரிக்காவில் உள்நாட்டில் பறக்கும் விமானங்களை போல இருந்தது. நாலரை மணி நேரப்பயணம் பெரும்பாலும் என் உறக்கத்திலேயேகழிந்தது.
மறுநாள் காலை நான் மூன்று மணி அளவில் நான் பெங்களூரு சென்று அடைந்த பொது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அது வேறொன்றுமில்லை, பெங்களூரு விமான நிலையம் தான்.

அதன் பிரம்மாண்டமும் அழகும் தான் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் என பறை சாற்றிக் கொண்டிருந்தது. எங்கும் கண்ணாடி, நம் முகம் தெரியும் பளிங்குத் தரைகள். பளிச்சிடும் மின் விளக்குகள் என... ' நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா என எண்ண வைத்தது.'

                       பெங்களூரு விமான நிலையத்தின் உட்புறத்  தோற்றம்.

எனினும் குடியுரிமை அதிகாரி என் முகத்தை கூட பார்க்கவில்லை, ஒரு புன்னகை சிந்தவில்லை,கடமையாக பச்ச்போர்டை பார்த்து சீல் குத்தி விட்டு 'நெக்ஸ்ட்' என்றார்.

விமானநிலையத்தின் ஒவ்வொரு இடத்திலும் பணக்காரத்தனம் தெரிந்தது. உள்ளே இன்டர்நெட் வசதியும் உள்ளது. வயர்லெஸ் இன்டர்நெட் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அங்கிருந்த தகவல் அளிக்கும் மையத்தில் சொன்னார் அங்கு கோட் போட்டு டை கட்டி அமர்ந்திருந்தவர். அவர் சிநேகமாக சிரித்தபடிஉதவினார்.
 
 அங்கேயே ஒரு காபியை அருந்தியபடி ( ஒரு காபி நூற்றி அறுபது ரூபாய். காபி டே என்ற கடையில்.) எனது சென்னை விமான டிக்கெட் மற்றும் நேரத்தை உறுதி செய்தபின் டொமெஸ்டிக் விமான நிலையத்திற்கு நடந்தேன். டொமெஸ்டிக் மற்றும் இன்டர்நேஷனல் இரண்டும் உள்ளுக்குள்ளேயே இருக்கிறது. பாதகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்தன. கிங் பிஷர் ஏர்லைன்ஸில் சென்னை சென்று இறங்கியதும், சென்னை விமான நிலையம், தான் இன்னும் மாறவில்லை என சொன்னது. பெங்களூர் விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள தூரம். சென்னையில் புதிதாக விமான நிலையம் அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பல நாடு பயணிகள் மற்றும் பல நாடு விமானங்கள் வந்து போகும் விமான வலை சென்னைக்கு இருப்பதால், விமான நிலையம் மேம்படுத்தப் படுவது அவசியமாகிறது.

சென்னையில் நான் நான்கு நாட்கள் தங்கி இருந்தேன். தோஹாவில் நான் சந்தித்த வள்ளியை சுற்றியே என் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவள் தொலைபேசி அழைத்தால், அவளை எப்படியாவது ராமநாதபுரத்தில் இருக்கும் அவளது குக்கிராமத்தில் பாதுகாப்பாக சேர்த்து விட வேண்டுமே என எண்ணியபடி இருந்தேன். அவளை பற்றி என்னை சென்னைக்கு வரவேற்க வந்த என் மனைவி இடமும் சொல்ல அவளும் பதைபதைத்தபடி காத்திருந்தாள்.
அந்த நான்கு நாட்களில் வள்ளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவே இல்லை.

(--பயணம் தொடரும்)
--

Friday, July 2, 2010

ஒரு இந்தியப் பயணம்.--2





                                          தோஹா விமான நிலையம்.


ஐதராபாத் ஸ்ரீனிவாசன், 'எதற்கு தமிழுக்கு ஒரு மாநாடு?' எனக் கேட்டபோது 'ங' என விழித்த நான், ஒரு வாறு சமாளித்தபடி நான் கேள்விப்பட்ட விடயங்களை அவரிடம் கூறினேன். 'உலகெங்கும் இருந்து தமிழ் மக்கள் வராங்க. தமிழ் மொழி முன்னேற ஆராய்ச்சி செய்ய போறாங்களாம். பல கலை நிகழ்சிகள் நடக்க போகுதாம்'.

'இந்த அரசாங்கங்கள் எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காசை விரயம் பண்ணுகிறார்கள். அதை வைத்து நாட்டில் எவ்ளளவு நல்லது பண்ணலாம்' என அலுத்துக் கொண்டார். நான் ஒன்றும் பேசவில்லை. 

தமிழ் மொழியும் செம்மொழி ஆகிவிட்டது. எங்கள் மொழி சிறந்த மொழி என உலகுக்கு சொல்லவா இந்த மாநாடு? மொழியில் என்ன ஆராய்ச்சி செய்யப் போகிறார்கள்? தமிழகத்தின் மூத்த குடும்பத்தை பிரதானப்படுத்தி தான் எல்லாம் நடக்கப் போகிறது. தலைவருக்கு விழாக்கள் மேல் உள்ள மோகம் இன்னும் போக வில்லை போல. முணுக்கென்றால் விழா எடுத்து விடுகிறார்' என்றெல்லாம் எனது எண்ணங்கள் அந்த விமானத்தைப் போல பறந்துக் கொண்டிருந்தது.

பதினான்கு மணி நேரம் பறந்த அந்த ராட்சத விமானம் தோஹாவில் தரை இறங்க ஆயத்தமானது. அப்போது சாளரத்தின் வழி வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் மணல்...அந்த பறந்து விரிந்த பாலைவனத்தின் நடுவே ஆங்காங்கே வீடுகள் அல்லது கட்டடங்கள் புழுதி படிய தெரிந்தது. உலகின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான வசிப்பிடங்கள். வீடுகளின் அமைப்புகள் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சற்றே டோம் வைத்தார்ப்போல் வீடுகள் இஸ்லாமிய கலாசாரத்தை பறை சாற்றியது. மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படுவது உறங்க வீடு, உடுக்க உடை , உண்ண உணவு. அதில் தான் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை எத்தனை வேறுபாடுகள். ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் எவ்வளவு கலாசார மாற்றங்கள்.
                                   தோஹா நகரம்.. பறவையின்  பார்வையில்...!
 எங்களது விமானம் தோஹாவின் தரையை தொட்ட பொழுது தோஹாவின் நேரப்படி மணி மாலை ஆறு இருபது. விமானத்தை விட்டு கீழிறங்கியதும் ஒரு ஊர்தி வந்து எங்களை டெர்மினலுக்கு அழைத்து சென்றது. மாலை வேளையிலும் சூடு தகித்தது. தட்பவெட்பம் 40 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது.உஸ் அஸ் என்றபடி டெர்மினல் வந்து சேர்ந்தோம் நானும் ஸ்ரீனிவாசனும். 'என்ன இதுக்கே இப்படி வேர்த்து கொட்டுகிறீர்கள். நீங்கள் செல்லப்போவது சென்னை அங்க எப்படி சமாளிக்க போறீங்களோ' என்றார்.

தோஹா விமான நிலையம் மற்ற சர்வதேச விமான நிலையங்களை விட மிகவும் சிறியது. 21 கேட்கள் மட்டுமே உள்ளது. டியூட்டி ப்ரீ ஷாப் இருந்தது. தங்கம் எல்லாம் மிக சுத்தமானதாக இருக்கும் என ஸ்ரீனிவாசன் சொன்னதை கேட்டு ஆவல் உந்தி தள்ள ஒரு வளையல் எவ்வளவு என கேட்டேன். ஆயிரத்து ஐநூறு டாலர்கள் சொல்லவும் நைசாக நழுவி வந்துவிட்டேன். 

ஸ்ரீனிவாசன் அங்கிருந்து ஐதராபாத் பறக்க வேறு கேட் செல்ல வேண்டும். இருவரும் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலை பேசி எண்கள் பரிமாறிக்கொண்ட பின் நான் தனியனானேன். பெங்களூருக்கு புறப்பட இருக்கும் விமானத்துக்காக காத்திருக்க ஆரம்பிக்கையில்..
'அண்ணா நீங்கள் தமிழா..' என ஒரு பெண் குரல் கேட்க அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்கையில் அங்கே அந்த பதின்ம வயதுப் பெண் நின்றிருந்தாள்

--பயணம் தொடரும்.
--

Thursday, July 1, 2010

ஒரு இந்தியப் பயணம்.--1


வாஷிங்டன் டீ சி விமான நிலையத்தின் லவுஞ்சில் அமர்ந்து கீழிறங்குவதும் மேலேழும்புவதுமாக இருந்த அலுமினிய பறவைகளை கண்டு பரவசமாக இருந்தது. மூன்று வருடங்கள் கழித்து எனது இந்திய தேசத்து மண்ணை முத்தமிடப் போகிறேன் என்ற நினைவுகளும் ஒரு மாதத்துக்கு முன்னமே இந்தியா சென்று இந்திய வெய்யிலை பற்றி புகார் பத்திரம் வாசித்த எனது மனைவி மற்றும் மகனை பார்க்க போகிறேன் என்றும் சிலிர்ப்பாக இருந்தது.  இந்தியா வெகுவாக மாறி விட்டிருக்கிறது. சென்று பார் உனக்கே புரியும் என்ற எனது நண்பனின் சொல்லும், எனது இந்தப் பயணத்தை வெகுவாக பாதித்திருந்தது.

முதல் முதலாக கத்தார் விமானத்தில் பறக்க இருந்தேன். வாஷிங்கடனில் இருந்து பதினான்கு மணி நேர பயணத்தில் தோஹா சென்று அங்கு மூன்று மணி நேர இடைவெளிக்கு பின்னர் நாலரை மணி நேரப் பயணத்தில் பெங்களூரு. பின்னர் அங்கிருந்து சென்னை செல்வது தான் எனது பயண அட்டவணை. கத்தார் விமானத்தில் ஏறியதும் என்னை வரவேற்றது தாஜ்மஹால் சிலை போல (அதாங்க பளிங்கு சிலை) நின்றிருந்த அந்த அரேபியா பெண். பிரம்மாண்டமாக இருந்த அந்த விமானத்தில், உள்ளே சென்று அமர்ந்தேன். 

இருக்கைக்கு முன்னே பத்து இன்ச் தோடு திரை. பல திரைப்படங்கள் இருந்தது. எது வேண்டுமானாலும் அமுக்கி பார்த்துக் கொள்ளலாம். அதில், ஐந்தாம்படை மாசிலாமணி என சில மொக்கை தமிழ் படங்களும் இருந்தது. கால் நீட்டக் கூடிய அளவில் நல்ல லேக் ஸ்பேஸ் இருந்தது. பஞ்சையும் மிட்டாயும் கொண்டு வந்து கொடுத்தாள் விமானப் பணிப்பெண். முகம் துடைத்துக்கொள்ள இளஞ்சூடான தேங்காய் பூ துவாலையை கொடுக்க முகத்தில் ஒத்திக்கொண்டேன். சுகமாய்இருந்தது.


என் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் ஒரு இந்திய முகம் என்னை பார்த்து சிநேகமாக சிரித்தது. அவர் பெயர் ஸ்ரீநிவாசன். பூர்வீகம்ஐதராபாத்.

இருவரும் ஐ டி தொழிலில் இருந்ததால், 'நீங்க எந்த கம்பெனி நீங்க எந்த சாப்ட்வேர் ல வொர்க் பண்றீங்க...' ரீதியான அரட்டைக்குப்பின் இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளைப் பற்றி பேச்சு திரும்பியது. பெங்களூரு ஏர்போர்ட் மிக அழகாக இருப்பதான எனது சகோதரன் சொன்னதை அவரிடம் பகிர்ந்து கொள்ள அவரோ, இந்தியாவின் சிறந்த ஏர்போர்ட் ஐதராபாத்தின் ஏர்போர்ட் தான் என்று கூறி அதனை கட்டமைத்த முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடுவை பற்றி புகழ்ந்த அதே வேளையில், ' அவர் மாநிலத்தின் கிரீமி லேயர் எனப்படும் பணக்காரர்களின் வசதிக்கு மட்டுமே பாடுபட்டார் எனவும் விவசாயிகளுக்கு அவர் எதுவுமே செய்யவில்லையே' என நான் கேள்விப் பட்டதை சொன்னதும் அதற்க்கு காரணமாக அவர் சொன்னது என்னை யோசிக்க வைத்தது.

சந்திரபாபு முதல்வராக இருந்தபோது மழையே பெய்ய வில்லை. எங்கும் வறட்சி எதிலும் வறட்சி. ஆனால் ராஜசேகர ரெட்டி முதல்வராக பதவி ஏற்றதும் மழையோ மழை. வளத்தை கொண்டு வந்த ராஜா என அவரை கொண்டாட ஆரம்பித்தனர் ஆந்திர விவசாயிகள். அவர் கிறித்துவர் என்பதால் அவர் மீது மத ரீதியான குற்றசாட்டுகள் இருந்தபோதும் மிகவும் எளிமையான முதல்வர் என்றும் எளிதில் அவரை அணுக முடியும் என்றும் மிக மிக எளிமையானவர் என்றும் சொன்னார். அவர் முதல்வரானதும் அவரால் மழை வந்தது என மக்கள் அவரை கொண்டாடினர் ஆனால் அந்த மழையே அவரது மரணத்துக்கும் காரணமாக அமைந்து விட்டதை சொல்லிவருத்தப்பட்டார்.

மெல்ல பேச்சு தமிழக அரசியல் பற்றி திரும்பியது. வழக்கமாக, ஒரு அரசியல் கட்சி தான் பெரும் சக்தியாக நிரூபித்துக் கொள்ள மாநாடுகள் நடத்துவது வழக்கம். உங்கள் மொழிக்காக மாநாடு நடக்கிறதாமே. எதற்கு? எனஸ்ரீநிவாஸ் கேட்டபோது நான் ராஜேந்திர குமார் நாவலில் வருவது போல ' ங' என விழிக்கக் ஆரம்பித்தேன்! ...


(பயணம் தொடரும்....)
--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...