Friday, July 2, 2010

ஒரு இந்தியப் பயணம்.--2





                                          தோஹா விமான நிலையம்.


ஐதராபாத் ஸ்ரீனிவாசன், 'எதற்கு தமிழுக்கு ஒரு மாநாடு?' எனக் கேட்டபோது 'ங' என விழித்த நான், ஒரு வாறு சமாளித்தபடி நான் கேள்விப்பட்ட விடயங்களை அவரிடம் கூறினேன். 'உலகெங்கும் இருந்து தமிழ் மக்கள் வராங்க. தமிழ் மொழி முன்னேற ஆராய்ச்சி செய்ய போறாங்களாம். பல கலை நிகழ்சிகள் நடக்க போகுதாம்'.

'இந்த அரசாங்கங்கள் எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காசை விரயம் பண்ணுகிறார்கள். அதை வைத்து நாட்டில் எவ்ளளவு நல்லது பண்ணலாம்' என அலுத்துக் கொண்டார். நான் ஒன்றும் பேசவில்லை. 

தமிழ் மொழியும் செம்மொழி ஆகிவிட்டது. எங்கள் மொழி சிறந்த மொழி என உலகுக்கு சொல்லவா இந்த மாநாடு? மொழியில் என்ன ஆராய்ச்சி செய்யப் போகிறார்கள்? தமிழகத்தின் மூத்த குடும்பத்தை பிரதானப்படுத்தி தான் எல்லாம் நடக்கப் போகிறது. தலைவருக்கு விழாக்கள் மேல் உள்ள மோகம் இன்னும் போக வில்லை போல. முணுக்கென்றால் விழா எடுத்து விடுகிறார்' என்றெல்லாம் எனது எண்ணங்கள் அந்த விமானத்தைப் போல பறந்துக் கொண்டிருந்தது.

பதினான்கு மணி நேரம் பறந்த அந்த ராட்சத விமானம் தோஹாவில் தரை இறங்க ஆயத்தமானது. அப்போது சாளரத்தின் வழி வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் மணல்...அந்த பறந்து விரிந்த பாலைவனத்தின் நடுவே ஆங்காங்கே வீடுகள் அல்லது கட்டடங்கள் புழுதி படிய தெரிந்தது. உலகின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான வசிப்பிடங்கள். வீடுகளின் அமைப்புகள் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சற்றே டோம் வைத்தார்ப்போல் வீடுகள் இஸ்லாமிய கலாசாரத்தை பறை சாற்றியது. மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படுவது உறங்க வீடு, உடுக்க உடை , உண்ண உணவு. அதில் தான் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை எத்தனை வேறுபாடுகள். ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் எவ்வளவு கலாசார மாற்றங்கள்.
                                   தோஹா நகரம்.. பறவையின்  பார்வையில்...!
 எங்களது விமானம் தோஹாவின் தரையை தொட்ட பொழுது தோஹாவின் நேரப்படி மணி மாலை ஆறு இருபது. விமானத்தை விட்டு கீழிறங்கியதும் ஒரு ஊர்தி வந்து எங்களை டெர்மினலுக்கு அழைத்து சென்றது. மாலை வேளையிலும் சூடு தகித்தது. தட்பவெட்பம் 40 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது.உஸ் அஸ் என்றபடி டெர்மினல் வந்து சேர்ந்தோம் நானும் ஸ்ரீனிவாசனும். 'என்ன இதுக்கே இப்படி வேர்த்து கொட்டுகிறீர்கள். நீங்கள் செல்லப்போவது சென்னை அங்க எப்படி சமாளிக்க போறீங்களோ' என்றார்.

தோஹா விமான நிலையம் மற்ற சர்வதேச விமான நிலையங்களை விட மிகவும் சிறியது. 21 கேட்கள் மட்டுமே உள்ளது. டியூட்டி ப்ரீ ஷாப் இருந்தது. தங்கம் எல்லாம் மிக சுத்தமானதாக இருக்கும் என ஸ்ரீனிவாசன் சொன்னதை கேட்டு ஆவல் உந்தி தள்ள ஒரு வளையல் எவ்வளவு என கேட்டேன். ஆயிரத்து ஐநூறு டாலர்கள் சொல்லவும் நைசாக நழுவி வந்துவிட்டேன். 

ஸ்ரீனிவாசன் அங்கிருந்து ஐதராபாத் பறக்க வேறு கேட் செல்ல வேண்டும். இருவரும் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலை பேசி எண்கள் பரிமாறிக்கொண்ட பின் நான் தனியனானேன். பெங்களூருக்கு புறப்பட இருக்கும் விமானத்துக்காக காத்திருக்க ஆரம்பிக்கையில்..
'அண்ணா நீங்கள் தமிழா..' என ஒரு பெண் குரல் கேட்க அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்கையில் அங்கே அந்த பதின்ம வயதுப் பெண் நின்றிருந்தாள்

--பயணம் தொடரும்.
--

3 comments:

வடுவூர் குமார் said...

சொல்லுங்க‌ சொல்லுங்க‌.நீள‌மான‌ ப‌ய‌ண‌மாக‌ இருக்கும் போல் இருக்கே!!

ஹேமா said...

பயணம் தொடரும் தானே முகிலன்!

Rajasubramanian S said...

தமிழ் மா நாட்டின் நோக்கம் என்னவென்றும் அதுநிறைவேறியதா என்றும் நான் அறியேன்.ஆனால் நமது ஊடகங்களில் தமிழின் தரமும் பயனும் சிறப்பாக இல்லை.இது சம்பந்தமாக என்னுடைய தமிழ் வலையில் ஒரு பதிவு சமீபத்தில் போட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கவும். ourtongue.blogspot.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...