Friday, August 24, 2012

முதல்வன் பெடரர் - 3


'நான் டென்னிஸ் உலகின் முதல்வனா வரணும்.அதாவது நம்பர் ஒண்ணா வரணும்' பெடரர் என்ற அந்த சிறுவன், தனது கோச்சிடம் இப்படி சொன்னபோது அவர் சிரித்தார். 'மொதல்ல  ஒழுங்கா  டென்னிஸ் விளையாட கத்துக்கோ ' என்று சொன்னார். கூட பயிலும் சிறுவர்களும் சிரித்தார்கள். பெடரருக்கு அவரது கனவை எட்டி பிடிக்கும் வழி அவ்வளவு சுலபமாக இல்லை. முதல் முதலில் விளையாடிய டோர்ணமண்டில் அவர் 6-0 6-0 என்ற நேர் செட்களில் அவர் தோற்றுப் போனார். வழக்கம் போல ஆட்டத்தின் முடிவில் அவர் கதறி அழவும் தவறவில்லை. 

அதனைத் தொடர்ந்து பல தோல்விகள். ஆனால் உள்ளே தான் முதல்வனாக வேண்டும் என்கிற வெறி மட்டும் அவருள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தனது நண்பர்களை அழைத்து விளையாடும் நேரம் போக, சுவர்களில் பந்தை அடித்து ஆடி கொண்டே இருந்தார். அதற்க்கு வெகு விரைவில் பலன் கிடைத்தது. தனது பதினோராவது வயதில், 1993 ஜெனிவாவில் நடந்த உள்ளரங்கு இறுதி பந்தயத்தில் வென்று சுவிஸ் நாட்டின் பனிரெண்டு வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன் ஆனார். ஆறு மாதங்கள் கழித்து தனது பரம டென்னிஸ் வைரியான டானி ஷ்னைடரை தோற்கடித்து வெளி அரங்கிலும் சுவிஸ் நாட்டின் பனிரெண்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லவும்.. 'ஆஹா நம்மாலும் டென்னிசில் வெல்ல முடியும்' என்ற நம்பிக்கை மெள்ள வந்ததது.


                                        பெடரரின் சிறுவயது புகைப்படங்கள் சில...

பெடரரின் பதிமூன்றாம் வயதில், தான் சுவிஸ் நாட்டின் நம்பர் ஒன் வீரனாகவும், உலக அரங்கில் தான் முதல் நூறு பேரிலும் வரவேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்பட்டது. அவனுக்காக எதையும் செய்ய தயாராகவும் அதே சமயத்தில் அவனது முடிவுகளில் குறுக்கிடாத பெற்றோர்கள் , அவனை ஜெனிவா லேக் அருகே இருந்த இகுப்ளேன்(EKUBLEN) என்ற நகரத்தில் இருந்த 'சுவிஸ் தேசிய டென்னிஸ் விளையாட்டு மையம்' (swill national tennis center) அனுப்ப முடிவு செய்தனர். அங்கு பயின்றவாறே, பள்ளியிலும் சேர்ந்து பயில வசதி இருந்தது. அந்த மையத்தில் பயிலுபவர்களுக்கு சில பாடங்கள் படிக்க தேவை இல்லை என்ற வசதியும் இருந்தது. அவர்கள் பேயிங் கஸ்டாக  யாராவது   ஒரு வீட்டில் தங்கி கொள்ள வேண்டும். பெடரரிடம் கேட்டபோது முதலில் தனது தாயை பிரிந்து இருக்க வேண்டுமே என்ற வருத்தத்தில் மறுப்பு சொன்ன போதிலும், டென்னிஸ் மேலிருந்த காதலால், சம்மதித்தார்.

அந்த மையத்தில் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலவிதமான பயிற்சிகளும், பரீட்சைகளுக்கும் பின்னர் தான் அங்கே சேர்த்துக் கொள்வார்கள். நம்மாள் தான் எதிலும் சளைக்காத வீரனாயிற்றே. அவனது செய்கைகள், தேர்வாளர்களான பியர்ரே  பகணினி மற்றும் கிறிஸ்டோபர் பிரெய்ஸ்  (Pierre Paganini and Christophe Freyss) இருவருக்கும் உடனே பிடித்துவிடவும், 'இவனுக்குள் எதோ ஒன்னு இருக்கு' என்று எண்ணிய அவர்கள், உடனே பெடரரை செலக்ட் செய்து விட்டனர்.

1995 அந்த பள்ளியில் சேர்ந்தவுடன் தான் ஒரு பெரும் சவாலை பெடரர் எதிர்கொள்ள வேண்டி வந்தது...

ஆட்டம் தொடரும்... 

Tuesday, August 21, 2012

முதல்வன் பெடரர் -2


ராபர்ட் பெடரர் மற்றும் லிநெட் பெடரர் இருவரும், சவுத் ஆபிரிக்கா தேசத்தில் சந்தித்து மணந்து கொண்டனர். அதன் பின்னர் ராபர்டின் சொந்த ஊரான சுவிட்சர் லாந்துக்கு திரும்பி வந்து குடி ஏறினர்.
ஆகஸ்ட் எட்டு 1981 சுவிஸ் நாட்டின் ஓரத்தில் பேசல் நகரத்தின் அருகே உள்ள பெர்நேக் (Berneck) என்ற சிறிய கிராமத்தில், லிநெட் என்ற இளம் பெண், பின்னாளில் வரலாற்றில் பேசப்பட போகும் ஒரு மகவை பெற்றாள். அந்தக் குழந்தைக்கு ரோஜர் பெடரர் என பெயர் வைத்தனர். ராபர்ட் மற்றும் லிநெட் இருவரும், விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களாய் இருந்தனர். டென்னிஸ், சாக்கர், கால்ப் என எதையும் விட்டு வைக்கவில்லை. 

சிறுவயதில் பெடரருக்கு. பாஸ்கட் பால் மிகப் பிடித்தமான விளையாட்டு. சிகாகோ புல்சின் மைகேல் ஜோர்டான் தான் அவருக்கு சிறுவயது ஹீரோ.சிறுவயது பெடரர் சுட்டித்தனம் பொறுக்க இயலாமல் அவரை கண்ட்ரோல் செய்ய இயலாது அவரை  அவர் போக்கிலேயே விட்டு விட்டனர். அவரை டென்னிஸ் வகுப்புக்கு கூட்டி செல்வது தான் மிகவும் கடினமான ஒரு விஷயமாக லிநெட் கூறுகிறார். 'பெடரர் அடிக்கும் பந்துகள் எதுவுமே ஒழுங்காக இராது. எவ்வளவு சொன்னாலும் தப்பு தப்பாகத்தான் அடிப்பான்.'

                                                               சிறுவயதில்.. பெடரர்..
வீட்டின் சுவர்களில் பந்தை டென்னிஸ் மட்டையால் அடித்து பழக ஆரம்பித்தான் சிறுவன் பெடரர்.வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உடைத்து வாங்கி கட்டிக் கொள்வது, பெடரரின் சிறுவயது ஹாபி. அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு தனது அக்கா   டையானை   வம்புக்கு இழுப்பது. அவள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிரும்ம்போது ஒட்டு கேட்பது, அவளது பொருட்களை தனது டென்னிஸ் பயிற்சியின் பொது போட்டு உடைப்பது என அவன் ஒரு குட்டி சைத்தானாக இருந்தான் என இப்போது தனது தம்பியின் சிறுவயது நினைவுகளை பெருமையோடு நினைவு கொள்கிறாள் டயான்.

டென்னிஸ் உலகில், சிறுவயதில் பெடரரின் ஆதர்சம், போரிஸ் பெக்கர்.  1985 இல் போரிஸ் பெக்கர் விம்பிள்டன் போட்டியில் வெற்றி கொண்ட பொது, பெடரருக்கு வயது நான்கு. அந்த போட்டியை கண்டே பெக்கரை தனக்கு மிகவும் பிடித்து போனதாக சொல்கிறார் பெக்கர். டென்னிஸ் களத்தில்  பெக்கருக்கு பிரதான எதிரி, செர்வுகளுக்கு பெயர் போன ஸ்டெபான் எட்பர்க். 1988 மற்றும் 1990 இல் பெக்கர், ஸ்டெபானிடம் இறுதி ஆட்டத்தில் தோற்று போனபோது, கதறி கதறி அழுதிருக்கிறார் பெடரர். பின்னர் டென்னிஸ் மட்டுமே பிடித்தமான ஆட்டமாக மாறிப்போனது. 'தோல்வி மற்றும் வெற்றி, இரண்டுமே எனக்கு கைகளில் தான் இருக்கிறது. சாக்கரில் வெற்றி தோல்வி நிர்ணயம் ஆவது ஒரு ஆளின் மூலமாக மட்டும் அல்ல.' எனவே தனக்கான விளையாட்டாக டென்னிசை தெரிவு செய்து அதில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.
                                      தன் இளவயது நண்பன் மார்கோவுடன்.... 
பேசல் நகரை சுற்றி இருந்த டென்னிஸ் க்ளப்புகளில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். அங்கு தான் தனது சிறுவயது நண்பனான மார்கோவை சந்தித்தார்.இருவரும் ஒரே இடத்தில் பயின்றதால், இரு நண்பர்களும் குறும்பு செய்து மாட்டிக் கொள்வதை நினைவு கூறுகிறார் மார்க். பாதி நேரம், குறும்பு செய்துவிட்டு தண்டனையாக மார்க்கும் பெடரரும் கோர்டுக்கு வெளியே அமர வைக்க படுவார்கள். பயிற்ச்சியில் போதிய கவனம் செலுத்தாத பெடரர், மாட்ச் என்று வந்து விட்டால் பின்னி எடுத்துவிடுவார்.  இவர்கள் இருவருக்கும் எட்டு வயது இருக்கும்போது இருவரும் இடம் வாரியாக பிரிக்கப் பட்டு வேறு வேறு குழுக்களில் இணைக்கப்பட்டு போட்டியில் விளையாடியதே பெருமையாக ஞாபகம் இருப்பதாக கூறுகிறார் மார்க். மார்க்கும் பெடரரும் நேருக்கு நேர் போட்டியில் மோதிய போது, மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த பெடரர் ஒருக்கட்டத்தில் உடைந்து அழ ஆரம்பிக்க, மார்க் ஓடி பொய் அவரை தேற்றி இருக்கிறார். பின்னர் பெடரர் நம்பிக்கையோடு முன்னேற, தான் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் மார்க் அழ ஆரம்பிக்க பெடரர் ஓடி வந்து தேற்றி இருக்கிறார். பொதுவாக, பெடரர் மிகவும் எமோஷனல் டைப். மிக எளிதாக அழுதுவிடுவார்.இப்போதும்.  அந்த ஒரே ஒரு மாட்சை மட்டும் பெடரருக்கு எதிராக ஜெயித்த மார்க், அதன் பின் எப்பொதுமே பெடரரை ஜெயித்ததில்லை.

ஆட்டம் தொடரும்.....


Friday, August 17, 2012

திரைப்படம்: 22 பீமேல் கோட்டயம்.(மலையாளம்)

சில காலங்களாக, தமிழ் சினிமாவின் மசாலா சூழலில் மதி மயங்கி கொண்டிருந்த மலையாள படங்களில், இப்போது மீண்டும் வசந்த காலம். நல்ல படங்கள் சமீபகாலமாக வரத்துவங்கி உள்ளது வரவேற்கத் தகுந்த முயற்சி. அந்த வரிசையில் சால்ட் அண்ட் பெப்பர் பட இயக்குனர் ஆசிக் அபு வின் இயக்கத்தில் வந்துள்ள 22 பீமேல் கோட்டயம் ஆரவாரமாக இடம் பிடிக்கிறது. அடித்தளக் கதை இந்தி படமான 'ஏக அசீனா தி' என்ற படம் என்ற போதிலும்(அந்த படத்திற்கான கிரெடிட் டைட்டிலில் கொடுக்கப் படுவதால் இது ஒரு நேர்மையான முயற்சி.), படத்தின் கதையோட்டத்தை மாற்றி இன்றைய சூழ்நிலைக்கு பொருந்தி போகும்படி எடுத்துள்ளமைக்காக இந்த படத்தை பாராட்டியே தீர வேண்டும். 

பெங்களுருவில் ஒரு நர்சாக வேலை பார்த்து வருகிறாள் கோட்டயத்தை சேர்ந்த  டெசா . பெற்றோரை இழந்த அவளுக்கு இருக்கும் ஒரே உறவு, கொச்சினில் படித்து கொண்டிருக்கும் தங்கை. அவளது அறைத்தொழிக்கு
மணமான பணம் படைத்த டி கே விடம் தொடர்பு இருக்கிறது. 

கனடா நாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக, பெங்களுருவில் இருக்கும் இம்மிக்ராஷன் ஆபீசை அணுகுகிறாள்  டெசா . அங்கு மேலாளராக இருக்கும் சிறில் பழக்கமாகிறான். இருவருக்கும் பிடித்துப் போக, இவர்கள் உறவு லிவிங் டுகெதர் அளவுக்கு செல்கிறது.ஒருமுறை ஒரு உணவகத்தில் ஒருவன்  
டெசாவை உரச, அவனை சிறில் அடிக்க, அவனோ ஒரு அரசியல் பெரும்புள்ளியின் மகன். தன்னை அடித்த சிறிலின் கையை உடைக்காமல் ஓய்வத்தில்லை என அவன் சிறிலை தேடி  அலைய , அவனை தனது கஸ்ட் ஹௌசில் தங்க வைக்கிறான் அவனுடைய முதலாளி ஹெக்டே.

சிறில் இல்லாமல் தனியே இருக்கும்  டெசாவை  மண்டையில் அடித்து பலகீனமாக்கி அவளை கற்பழித்து விடுகிறான் ஹெக்டே. அதனை அறிந்து ஹெக்டேவை பழி வாங்கத் துடிக்கிறான் சிறில். அதன் பின் வரும் காட்சிகள் நம்மை சுழற்றி அடித்து பரபரப்பை உண்டு பண்ணுகின்றன. 

படத்தில் சிறிலாக நடித்திருக்கும், காதலுக்கு மரியாதை இயக்குனர் பாசிலின் மகன் பகாத் பாசில் அற்புதம். மிக மிக எளிதாக தனக்குரிய பாகத்தை செய்திருக்கிறார். இவர் முன்பு நடித்த 'சப்ப குறிசு' திரைப்படத்திலும் தனது வித்யாசமான கதாபாத்திரத்தினால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களும் கதைகளும் மிகவும் அரிதானதாக இருக்கிறது. மலையாள நடிகர்களிடையே இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.

டெசாவாக நடித்திருக்கும் ரீமா கல்லிங்காலை சுற்றிதான் படமே. 
பாத்திரத்திற்கேற்று நடித்திருந்தாலும் இன்னும் முயற்சித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.காட்சிகளின் சூழ்நிலைகளுக்கேற்ப,  பதைபதைப்பும் பரபரப்பும்,  இவர் முகத்தில் கொண்டு வராதாது ஏமாற்றம். ஹெக்டேவாக வரும் இயக்குனர் பிரதாப் போத்தன் வழக்கம் போல லூசு நடிப்பை கொண்டு வருகிறார்.

இசை பெரிதாக சொல்லிக்கொளும்படி இல்லை என்றாலும், படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, ஷைஜூ காலேதின்  ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான ஒளியமைப்பு படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி செல்கிறது.  பெங்களூரின் நகரத்தன்மை இவரது ஆளுமையில் புதுமையாகத்  தெரிகிறது. 

இயக்குனர் ஆஷிக் அபு விறுவிறுவென படத்தை நகர்த்தி இருக்கிறார். கலாச்சாரங்களை எல்லாம் குழி தோண்டி புதைத்து மிகவும் கேசுவலாக, இன்றைய நகர வாழ்கையை உள்ளது உள்ளபடி காட்டிய இவருக்கு தைரியம் அதிகம். அதும்போக படத்தை இன்ஸ்பைர் செய்த 'ஏக ஹசீன தீ' உட்பட இரண்டு ஆங்கில படங்களை டைட்டில் கார்டில் போட்ட நேர்மை...

பிமேல்..சராசரிக்கும் மேல்...

Friday, August 3, 2012

முதல்வன் பெடரர் -1எனது பள்ளி நாட்களில், நான் நன்றாக ஓடியதால், ஓட்டத்துக்கு முதன்மை கொடுக்கும் கோ கோ என்ற விளையாட்டில் என் பள்ளி குழுவில் இணைத்து கொண்டார் என் விளையாட்டு ஆசிரியர். பல்வேறு பள்ளிகளுக்கு சென்று வெற்றிகள் குவித்த போதும், கோ கோ என்ற விளையாட்டுக்கு உலக அரங்கில் மதிப்பில்லை என உணர்ந்தேன். மெதுவாக கால்பந்து பக்கம் கவனம் செலுத்தி, எனது பள்ளி இறுதி ஆண்டுகளில் பள்ளியின் கால்பந்து குழுவில் விளையாடி, கோவை நேரு ஸ்டேடியம் வரை சென்று விளையாடியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என்ன விளையாடினாலும், வீட்டிலும், பள்ளியின் மதிய உணவு இடைவேளைகளிலும் கிரிக்கெட் ஆடுவது பிடித்தமாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானத்தில் கிட்டத்தட்ட பத்து டீம்கள் குறுக்கும் நெடுக்குமாக விக்கட் நட்டி விளையாண்டதை இப்போது நினைத்து பார்த்தாலும் உடல் உள்ளம் சிலிர்க்கிறது.

எனினும், எனது பள்ளி நாட்களில் இருந்தே, டென்னிஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அப்போது தூர்தர்ஷனில், அரை இறுதி, மற்றும் இறுதி போட்டிகளை மட்டுமே ஒளிபரப்பி வந்தார்கள். குட்டை பாவாடை அணிந்து ஆடும் பெண்கள் தான் என் கவனத்தை டென்னிஸ் பக்கம் திருப்பினார்கள். அவர்களை பார்க்க ஆரம்பித்த நான், மெல்ல ஆட்டத்தின் மீதும் கவனம் கொள்ள, ஆடவர் டென்னிசையும் கவனிக்க ஆரம்பித்து எனது முதல் டென்னிஸ் கதாநாயகன் ஐவன் லென்டில் என கொண்டேன். அப்போது (இப்போதும் கூட) டென்னிஸ் என்பது, மேல்தட்டு கனவான்கள் ஆடும் ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. ஐவன் லேண்டிலும், ஸ்டெப்பி க்ராபும் ஆடும் ஆட்டம் கண்டு, எனக்கும் டென்னிஸ் ஆடவேண்டும் என்று மிகுந்த ஆசை எழுந்தது. கிரிக்கெட் மட்டை கூட வாங்க காசில்லாதவன் டென்னிஸ் ராக்கட்டுக்கு ஆசை படலாமா? எனினும் என்றாவது ஒரு நாள் டென்னிஸ் ஆட வேண்டும் என்ற வெறி மட்டும் என்னுள் இருந்தது.

பலப்பல வருடங்கள் கழிந்து, இரண்டாயிரம் வருஷத்தில் முதன் முதலாக நான் விமானப் பயணத்தில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தபோது என் மனதினுள் எழுந்த முதல் சந்தோசம், நான் டென்னிஸ் ஆட வாய்ப்பு அங்கு கிடைக்கும் என்பதே. அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் மீது நான் சென்ற விமானம் மெல்ல பறந்து கொண்டிருந்தபோது, கீழே நிலத்தில் பச்சை நிறத்தில் நான் பலப்பல டென்னிஸ் கோர்ட்டுகளை கண்டதும், எனது கனவு நனவாகப்போவதை கண்டு குதூகலித்தேன். நான் ஐவன் லென்டிலுடனும், பீட் சாம்ப்ராசுடனும், ஆண்ட்ரே அகாசியுடனும் விளையாடுவதை போல கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்.

அமெரிக்கா சென்று இறங்கிய பின் சரியாக ஒரு ஆண்டு கழித்து தான் எனக்கு டென்னிஸ் ஆட வாய்ப்பு கிடைத்தது. இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டு, அமெரிக்காவின் வியாபாரம் தடைபட்ட நிலையில் ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் 'பெஞ்சில்' இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என் கம்பெனி எங்களுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்திருந்தது. நாங்கள் பகல் முழுவதும் எங்களுக்கு வரப்போகிற நேர்முகதேர்விற்கு எங்களை தயார் படுத்தி கொண்டோம். மாலை நேரங்களில், கோடை காலங்களில் இங்கு இரவு மிகத் தாமதமாக எட்டரை மணிக்கு தான் வரும் என்பதால் மாலை ஐந்திலிருந்து எட்டு வரை டென்னிஸ் விளையாட ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்கு மேனேஜராக இருந்த மிஸ்டர் முரளிக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். வேலை இல்லாத கவலையை போக்க எங்களுக்கு டென்னிஸ் கை கொடுத்தது. எனக்கு முதலில் டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்கவே தெரிய வில்லை. மற்றவர்கள் எனக்கு டென்னிஸ் தெரியாது என்று ஒதுக்கி விட்ட போதிலும், ரமேஷ் என்ற ஒரு நண்பன் எனக்கு பொறுமையாக ராக்கட் பிடிப்பது முதல் எப்படி விளையாட வேண்டும் என்று பொறுமையாக சொல்லிக்கொடுக்க, வெகு சீக்கிரத்தில் டென்னிஸ் எனக்கு பிடித்து போனது.

ஒவ்வொரு நாளும் எப்போடா ஐந்து ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம். இரவு முற்றிலும் கவிழும் வரை ஆடிதீர்த்தோம். மிஸ்டர் முரளியின் உதவியுடன் டோர்ணமேண்டுகள் வைத்து டென்னிஸ் எங்கள் வாழ்கையில் இருந்து இணை பிரியாத ஒன்றாக ஆகிப் போனது. டி வீயில் டென்னிஸ் காண்பித்து விட்டால் உடனே சானல் மாத்த தோன்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருப்பேன்.டென்னிஸ் உலகத்தில், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் ஆடி வெல்லும் 'மிஸ்டர் கூல்' பீட் சாம்ப்ராஸ் எனது ஆதர்சமாகி போனார். தனது பதினான்கு வருட காரியரில் பதினாலு கிராண்ட் ச்லாம்களை வென்று, உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரராக உருவானார். ஏழு முறை விம்பிள்டன் போட்டிகளின் சாம்பியனாகவும், ஐந்து முறை யு எஸ் ஓபன் சாம்பியனாகவும் இருந்து தொடர்ந்து ஆறு வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் ஆட்டக்காரராக இருந்துள்ளார். சர்வுகளை பேஸ் லைனில் போடுவதும் பின்னர் ரிடர்ன் ஆனா பந்தை நெட்டின் அருகே போட்டு பாய்ன்ட்களை அள்ளுவது இவரது ஸ்பெஷாலிட்டி.

அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், ஆண்ட்ரே அகாசி. ஸ்டெபி கிராப்பை மணம் முடித்து பல்லாயிரக்கணக்கான ஸ்டெபி ரசிகர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானவர்.


பீட் சாம்ப்ராஸ் , அகாசி ஆட்டம் என்றாலே மைதானம் முழுக்க பொறி பறக்கும். ஒவ்வொரு முறையும் பீட் வேல்லும்போதும் மனம் ஆனந்தக் கூத்தாடும். பீட் சாம்ப்ராசுக்கு இணையாக விளையாடக் கூடிய ஒரே நபர் அகாசி என்றே நினைத்திருந்தேன். பீட் சாம்ப்ராஸ் டென்னிஸ் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்று வெளியேறிய பின், அகாசி மட்டுமே டென்னிஸ் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தார்.

அவரையும் வெல்ல ஒருவன் பிறந்து வருவான் என அப்போது எனக்குத் தோன்றவில்லை.


(ஆட்டம் தொடரும்...)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...