Friday, March 13, 2009

உலக திரைப்படம்: த டான்செர் இன் த டார்க் (The dancer in the dark) ஒரு தேவதையின் கதை.என்னை இந்த அளவுக்கு அழ வைத்த திரைப்படம் வேறு எதுவும் இல்லை. நிச்சயமாக இது ஒரு தேவதையின் கதை. லார்ஸ் வான் டிராயரின் 'Breaking the waves' என்ற திரைப்படம் மூலம் அவரது வித்யாச முயற்சிகளின் எனக்கு புலப்பட்டன. ஏனோ அவரின் படங்களில் சோகம் தளும்புகிறது. அப்படத்தில் பாலுணர்வு கொண்ட காட்சிகள் தேவையில்லாமல் வைத்ததினால் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதன் வித்தியாச திரைக்கதை மட்டும் 'அட' போட வைத்தது.
சமீப காலத்தில் இப்படி ஒரு அற்புதமான திரைப்படத்தை நான் கண்டதில்லை. கான்ஸ் விருதுகள் வாங்கிய இத்திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டும் விருதுகள் வாங்கவில்லை. இத்திரைப்படத்தின் அடிப்படை, ஒரு தாய் தன் மகன் மீது கொண்ட பாசம் மற்றும் இசை மற்றும் நடனத்தின் மீது அவளுக்குள்ள ஆர்வம் என்று சொல்வதை விட வெறி.


செக் நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடி ஏறுகிறாள் சல்மா. அவளுக்கு ஜீன் என்ற ஒரு மகன். இருவரும் ஒரு அமெரிக்க குடும்பத்தின் trailor house எனப்படும் அவுட் ஹௌசில் குடி இருக்கின்றனர். அவள் வேலைக்கு செல்லும் சமயம் அவளுடைய மகனை அவர்களே பார்த்துக் கொள்கின்றனர். அவளுக்கு நல்ல உதவி செய்கின்றனர்.
வேலை செய்யும் இடத்தில் அவளுக்கு உதவியாக இருக்கிறாள் கேத்தி. அவளைபோல நமக்கும் ஒரு தோழி கிடைக்காதா என ஏங்க வைக்கும் கதாபாத்திரம்.
சல்மா வேலைக்கு சென்று விட்டு மாலையில் ஒரு நாடக வகுப்புக்கு கேத்தியுடன் செல்கிறாள். இசை நடனம் என்றால் அவளுக்கு பைத்தியம். தான் வேலை செய்யும் இடத்தில் கூட அங்குள்ள இயந்திரங்கள் எழுப்பும் ஒலியை மனதினுள் உள்வாங்கி அதனையும் இசையாக உருவகப்படுத்தி மனதிற்குள்ளேயே நடனம் ஆடுபவள்.
அவளுடைய அலுவலகத்தில் இருக்கும் ஒருவன் அவளை காதலிக்கிறான். அவள் அதனை நிராகரிக்கிறாள். தான் தன் மகனுக்காகவே வாழ்வதாகவும் காதலிக்க தனக்கு முடியாது எனவும் அவள் சொன்னாலும் அவன் அவளுக்காகவே தினமும் காத்திருக்கிறான். அவளுக்கு மிக்க உதவிகள் செய்கிறான்.

அனைவரும் அவளுக்கு உதவி கொண்டிருப்பதற்கு கரணம் வெள்ளந்தியான சல்மாவின் மனது. மற்றும் அவளுடைய தேவதை முகம். அவளுடைய வீட்டுகாரர்கள் அவளது மகனுக்கு அவளது எதிர்ப்பை கூட பொருட்படுத்தாது மிதி வண்டி வாங்கி கொடுக்கிறார்கள்.
இந்நிலையில் தான் அவளது வாழ்கை திசை திரும்புகிறது.தான் சம்பாதித்த பணத்தை தன் மகனுக்கு கூட தெரியாமல் சேமித்து கொண்டிருக்கிறாள் சல்மா. அவளது வீட்டு காரனான பில் ஒருநாள் அவளிடம் வந்து உன்னிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும் என சொல்கிறான் . தனது மனைவி லிண்டா மிகவும் செலவு செய்வதாகவும் பணம் தரவில்லை என்றால் தன்னை விவாகரத்து செய்துவிடுவாள் என்றும் வருத்தப்படுகிறான்.

தன்னிடம் பணம் இல்லை என்றும் வீட்டுக்கு பணம் கூட தன்னால் இரு மாதங்களாக கட்ட முடியவில்லை என்று சொல்கிறான். அவன் மேல் பரிதாபம் அடைந்த சல்மா தானும் ஒரு ரகசியம் அவனிடம் சொல்கிறாள். அதாவது தனக்கு கண் பார்வை குறைந்து கொண்டே வருவதாகவும் கூடிய சீக்கிரம் தான் கண் பார்வை இழக்க போவதாகவும் கூறுகிறாள். அது ஒரு வ்யாதி என்றும் தனது குடும்பத்தில் அனைவருக்கும் அது இருக்கிறது. தனது மகன் ஜீனுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த குறையை போக்குவதற்காகவே தான் அமெரிக்க வந்ததாக கூறுகிறாள்.

மறுநாள் அவளிடம் பேசுகிற பில் தனக்கு அவள் வைத்திருக்கும் பணத்தை கடனாக தர முடியுமா என கேட்கிறான். அவளோ அது ஜீனின் பணம் என்றும் அதனை தான் தொட முடியாது அவனது வைத்தியத்திற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளது என்றும் அவனிடம் சொல்கிறாள்.
'அதனாலென்ன நான் போலிசாக பணி புரிவதால் என்னிடம் துப்பாக்கி உள்ளது அதனால் சுட்டு கொண்டு என்னால் செத்துவிட முடியும்'
என கூறி செல்கிறான்.
தான் பணம் தராவிட்டால் அவன் செத்துவிடுவான் என்றும் தன்னால் தான் அது நிகழ போகிறது என்றும் உணர்கிற சல்மா கலக்கம் அடைகிறாள். மறுநாள் அவன் வீட்டிற்கு செல்லும் சல்மா பில்லின் மனைவியான லிண்டாவிடம் அவன் துப்பாக்கியை எங்கு வைத்திருக்கிறான் என கேட்கிறாள். லிண்டா துப்பாக்கி எப்போதும் தனது வீட்டில் தான் இருக்கும் என சொல்கிறாள். சல்மா தான் கொடுத்து வரும் வாடகை அவர்களுக்கு பத்தாது என்றும் அதிகமாக கொடுப்பதாக கூறுகிறாள். நல்ல உள்ளம் கொண்ட லிண்டா அது தேவை இல்லை உனக்கு தேவைப்படும் என கூறுகிறாள்.
சல்மாவிற்கு கண் பார்வை மங்கி கொண்டே செல்கிறது. அவள் சீக்கிரம் பணம் சேர்த்து ஜீனின் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நைட் ஷிப்ட்க்கும் வேலைக்கு செல்கிறாள். அவள் கண் பார்வை மங்கிக்கொண்டிருப்பதால் அவளுடைய தோழி கேத்தி அவளுக்காக வேலை சமயத்தில் உதவி செய்கிறாள். சல்மா நைட் ஷிப்ட் வந்தால் அவளுக்கு கண் தெரியாதே என உணர்ந்த கேத்தி அவளும் நைட் ஷிப்ட் வந்து அவளுக்கு உதவுகிறாள்.
ஒரு நாள் முற்றிலும் கண் பார்வை பறிபோக, அவள் செல்லும் நாடக ஒத்திகைகள் இருந்து அவளை அகற்றி விடுகின்றனர். வீட்டுக்கு வரும் அவள் தனது பணப்பெட்டி காலியாக இருப்பதை அறிகிறாள். தட்டு தடுமாறி பில்லின் வீடிற்கு செல்ல அங்கு லிண்டா அவளை கோவத்துடன் எதிர் கொள்கிறாள். அவள் பில்லை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி அவளிடம் சண்டை போட அப்போது தான் பில் அவளை பற்றி லிண்டாவிடம் தவறாக சொல்லி வைத்திருப்பதை உணர்கிறாள் சல்மா.

இருந்தாலும் எதுவும் பேசாது மாடிக்கு செல்கிறாள் அங்கு அவனது பேச்சின் மூலமாக அவனிடம் அவளது பணம் இருப்பதை அறிகிறாள். அதனை பிடுங்கி 'இது எனது பணம் ஜீனின் மருத்துவத்துக்கு வைத்திருக்கிறேன் எனவே நான் இதை எடுத்து செல்கிறேன்' என கூறுகிறாள் அவன் அப்படி சென்றால் அவளை சுட்டு விடுவதாக அவன் சொல்ல அவள் அதை பொருட்படுத்தாமல் செல்ல அவன் பாய்ந்து அவளிடம் பணத்தை பிடுங்க அவள் தடுக்க அந்த சண்டையில் துப்பாக்கி வெடித்து அவன் மேல் தொட்ட பாய்ந்து விடுகிறது. ஓடி வந்த மனைவி இடம் பில், சல்மா பணத்தை களவாடி ஓடப் பார்ப்பதாகவும் தடுத்த தன்னை சுட்டு விட்டதாகவும் கூறுகிறான். உடனே அவள் வெளியே ஓடி அக்கம் பக்கம் உள்ள மக்களை கூப்பிட போகிறாள். அப்போது பில் அந்த பணம் வேண்டுமானால் தன்னை கொன்று விட்டு எடுத்து செல்லுமாறு வேண்டுகிறான். சல்மா அந்த துப்பாக்கியால் அவனை சுட்டு பணத்தை எடுத்து செல்கிறாள்.
இதை எதுவும் அறியாத அவளை ஒருதலையாய் காதலிக்கும் ஜெப் அங்கு வர தன்னை டாக்டர் வீட்டுக்கு அழைத்து செல்ல அழைக்கிறாள். அவனும் அழைத்து செல்ல டாக்டரிடம் பணம் முழுவதையும் கட்டி அடுத்த மாதம் நோவா என்ற தன் மகன் வருவான் அவனுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறுகிறாள். ஜெப் பின்னர் அவளை நாடக ஒத்திகை நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்ல அங்கு அவளை வரவேற்று விட்டு அவளுக்கு தெரியாமல் காவல் நிலையத்திற்கு போட்டு கொடுக்கிறார் நாடக அரங்கின் உரிமையாளர். அவளை கைது செய்கிறது காவல் துறை.
கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. அவளுக்கு எதிராக சாட்சி சொல்கிறாள் பில்லின் மனைவி லிண்டா. அவள் துப்பாக்கியை பற்றி விசாரித்ததை சொல்ல அவளுக்கு மரண தண்டனை தீர்ப்பாகிறது. எங்கே அந்த பணத்தை பற்றி சொன்னால் அந்த பணத்தை கோர்ட்டார் பிடுங்கி ஜீன் க்கு சிகிச்சை கிடைக்காதோ என உண்மையை சொல்லாமல் விட்டு விடுகிறாள் சல்மா.
அவள் சிறையில் இருக்கும் வேலையில் அவளை வந்து சந்திக்கிறாள் அவள் தோழி கேத்தி. இடையே அவளை காதலிக்கும் ஜெப் அந்த மருத்துவமனை சென்று உண்மை அறிகிறான். இவ்விருவரும் அவளை நிரபராதியாக மாற்ற முயற்சி மேற்கொள்கிறார்கள். அவள் மரண தண்டனை பெற்றாளா அல்லது விடுதலை ஆனாளா என அறிய இந்த உணர்ச்சிமிக்க காவியமான திரைப்படத்தை நீங்கள் பார்த்து களிப்படைய வேண்டும்
சல்மாவாக நடித்திருக்கும் யார்க் (bjyork) பாத்திரதிற்க்கேற்ற மிக அற்புதமான தேர்வு. பால் வடியும் அந்த முகம் சல்மாவின் பாத்திர படைப்புக்கு அற்புதமாக பொருந்துகிறது. சல்மாவாக வாழ்ந்திருக்கிறார் யார்க். மிக மிக சவாலான அனைத்து நடிகைகளையும் ஏங்க வைக்கும் பாத்திரம். அவரது நடிப்பில் விக்கி விக்கி தேம்பி தேம்பி அழத்தான் முடிந்தது. சற்றும் மிகை இல்லாத திரைக்கதை, யதார்த்தங்களின் அற்புதத்தை இத்திரைப்படத்தின் வாயிலாக உணர்ந்தேன். விதி மட்டுமே இந்த படத்தின் வில்லனாக கொள்ளலாம். படத்தின் எடிட்டிங்கும் இசையும் இப்படத்திற்கு தூண் என்றால் ராபி முல்லேரின் ஒளிப்பதிவு படத்தின் உயிர் நாடி. இயற்க்கை ஒளியில் அற்புதமான வண்ண கலவை.

லார்ஸ் வான் டயரின் 'Dancer in the dark' திரைப்படம் ஒரு தேவதையின் கதை. நான் மிகவும் ரசித்த மிக நேர்த்தியான திரைப்படம். படம் பார்த்து மூன்று நாட்களாக சல்மா என்னை தூங்க விட வில்லை.

Thursday, March 12, 2009

தேர்தல் 2009மக்கள் அறிவாளிகளாகவும் அரசியல்வாதிகள் முட்டாள்களாகவும் மாறும் காலம் ஒன்று உண்டு என்றால் அது தேர்தல் நடக்கும் காலம் மட்டுமே.

அரசியல்வாதிகள் தங்கள் தொகுதிப் பக்கம் ஒதுங்கி தங்கள் முகங்கள் மக்கள் மறந்துவிடாமல் இருக்க தேர்தல் காலத்தில் மட்டுமே கை கூப்பியபடி எட்டிப் பார்ப்பார்கள். அவர்கள் போடும் கூழை கும்பிடை பார்த்தால், கோவில் வாசல்களில் ஆலய முற்றங்களில், பள்ளிவாசலின் வாசல்களின் 'அம்மா தாயே' என அழைக்கும் அந்த ஜீவன்களின் ஞாபகங்கள். அவர்களின் கும்பிடல் வயிற்றுக்காக...அரசியல் வாதிகளின் கும்பிடு வோட்டுக்காக.மக்களுக்கு வைக்கும் வேட்டுக்காக ....

இன்றைய அரசியல் காட்சிகளை நினைத்தால் எதோ மசாலா படம் பார்ப்பதை போல உணர்வு, நகைச்சுவை, சண்டை காட்சிகள், குடும்ப செண்டிமெண்ட், கண்ணீர் காட்சிகள் என கலவையான ஒரு திரைப்படம் தான் தேர்தல் 2009
தமிழக அரசியலில், இலங்கை தமிழருக்கு தனி ஈழம் அமைய அதிமுக போராடும் என ஜெயலலிதா உண்ணாவிரத பந்தலில் போட குண்டு இலங்கை ராணுவ குண்டை விட பயங்கரமாக வெடித்து கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் இறந்து போனதுக்கு அப்புறம், இத்துணை நாள் இலங்கை தமிழருக்கு எதிராக பேசி வந்த ஜெயலலிதா திடீரென ஞான உதயம் வந்தது போல தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமென பேசி இருப்பது இந்த படத்தின் மிக சிறந்த நகைச்சுவை. அழுகிற குழந்தை கூட இந்த கூற்றை கண்டு சிரிக்க ஆரம்பித்து விடும். தேர்தலுக்காக கொள்கையை கூட மாற்றி கொள்ளும் கட்சிகள் கண்டு நகைப்பதா அழுவதா.


இவ்வளவு நாட்களும் சோனியாவின் கடைக்கண் பார்வை படாதா என ஏங்கி கிடந்தவர், அது தனக்கு கிட்டாது என தெரிந்ததும், தமிழக உணர்வாளர்களின் ஈழ தமிழ் சகோதரர்களின் சகோதரபாசம் அறிந்ததும், தலைகீழாக குப்பற அடித்த பல்டி தான் அவர் மேற்படியாக பேசி உள்ளது.
அடுத்து சகோதர பாசம். வைகோ, ஜெயலலிதாவை தனது கொள்கைக்கு ஆதரவாக மாற்றி விட்டது வேண்டுமானால் அவருக்கு கிடைத்த வெற்றியாக எண்ணி கொள்ளலாம். இருந்தாலும் எத்தனை தடை வந்தாலும் தனது விடுதலை புலிகளின் ஆதரவை அவர் விளக்கி கொள்ளவில்லை. ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருந்த போதிலும் அவர் தனது கொள்கைகளை விட்டுகொடுக்கவில்லை. அந்த வகையில் வைக்கோ பாராட்டுக்கு உரியவரே. இருந்தாலும் அவ்வப்போது அவர் கண்ணீர் விட்டு அழுவது... அவர் நிஜமாக அழுகிறாரா இல்லை நடிக்கிறாரா என்று குழப்பமாக இருக்கிறது. அவர் ஜெயலலிதாவை சகோதரி என விளிக்கும் போதெல்லாம் நகைப்பாக இருக்கிறது.


மருத்துவர் ராமதாஸ் என்ன தான் ஈழ மக்களிடம் பாசம் கொண்டிருந்தாலும், தனது மகனின் பதவி மீது அதைவிட மேலாக பாசம் வைத்துள்ளார். ஆளும் கட்சியான மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்கிறது என கூறினாலும் அதற்க்கு பதிலாக தனது மகனை பதவியை விட்டு ராஜினாமா செய்ய சொல்ல வில்லை.இன்னமும் பம்மிக்கொண்டு தான் இருக்கிறார். ஒருவேளை தேர்தலில் தோற்று தனது மகனின் பதவி காலியானால் வேண்டுமானால் ஈழ தமிழர்களின் மேல் அவரின் பாசம் போங்க கூடும். அவருக்கு வேண்டியதெல்லாம் தன் மகன் அன்புமணிக்கு மத்தியில் ஒரு பதவி. தனது சீடனான காடு வெட்டி குரு எவ்வளவு அட்டூழியம் செய்தாலும் அதை எல்லாம் கண்டுக்காமல் அவருக்கு ஒரு பதவி. அவ்வளவு தான். அதை தரும் கூட்டணி எங்கு இருந்தாலும் அதற்க்கு தாவ அவர் தயார். அவர் எப்போதும் ஒரே கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருந்தது கிடையாது.

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்தின் நிலைமை தான் மிக மோசமாக இருக்கிறது. அவரது எழுச்சியை பார்த்து அட, திராவிட கழகங்களுக்கு மாற்றாக இந்த கட்சி நல்லதொரு கட்சியாக இருக்கும் போல இருக்கிறதே என நிமிர்ந்து உட்கார்ந்தால், அவர் பொது தேர்தலை மனதில் வைத்து, இலங்கை தமிழர் பிரச்னையை ஆதரிக்கலாமா வேண்டாமா, ஆதரித்தால் காங்கிரஸ் தன்னை கை விட்டு விடும் ஆதரிக்காவிட்டால் தமிழகம் தன்னை கை விட்டு விடும் என பதுங்கி கொண்டார். அவ்வபோது 'பொது தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என மக்கி போன முழக்கங்களுடன் பின் தங்கி விட்டார். பொது தேர்தலை தனியாக தன்னால் சந்திக்க முடியுமா என்ற பயம் அவருக்கு வந்து விட்டது. அவரிடம் முன்பு இருந்து வீரியம், திருமங்கலத்தில் டெபொசிட் இழந்ததும் காணாமல் போய் விட்டது.

திருமாவளவன் வீரம் சொரிய பேசுகிறார். எடுத்த கொள்கையில் உறுதியாக நிற்கிறார். அவர் அஞ்சி நான் கண்டதில்லை. எதற்காகவும் அவர் தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் அவரின் தொண்டர்களில் பலர் குண்டர்கள். வர் பந்த் ஏதாவது நடத்தி விட்டால் அரசு பேருந்துகள் தான் பாவம். குறைந்தது இருவது பேருந்துகள் பற்றி எரிகின்றன. முப்பது பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து தூள் தூளாகின்றன. இப்படிப்பட்டவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா? திருமாவளவன் தனது கட்சி தொண்டர்களை அடக்க வேண்டும்.அவர்களுக்காக பரிந்து பேசாது அவர்களின் தவறுகளை எடுத்துரைக்க வேண்டும்.


சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒன்று இருப்பதே சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் மட்டும் தான் தெரியும் என்பதால் அதனை விட்டு விடுவோம்.
தமிழக காங்கிரஸ், படத்தில் வில்லன் முகாமில் இரண்டு குரூப் கொண்டு ஒன்றை ஒன்று தாக்கி கொள்வது போல எப்போதும் முட்டலும் முனகலும் தான். தனியாக நிச்சயமாக காங்கிரஸ் தமிழகத்தில் வெல்ல முடியாததால் எப்போதும் அதற்கு ஒரு திராவிட கட்சியின் துணை தேவைப்படுகிறது. இப்போது ஈழத்து கல்லறைகளின் நிழல் படிந்து கறைபடிந்து பரிதாபமாக நிற்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் வென்றாலும் கூட தமிழகத்தில் மிக கடினமே. ஈழத்தமிழ சகோதரர்களின் இழப்புகளுக்கு, எப்போதோ நடந்து போன ராஜீவ் காந்தி என்ற தனி மனிதனின் கொலைக்கு ஒட்டு மொத்த ஈழ தமிழர்களை பழி வாங்கும் சமயமாக இதனை கருதுவதால், உணர்ச்சி மிக்க தமிழன் நிச்சயம் ஒட்டு போடா மாட்டான். இந்த நிலையை உணர்ந்து தனது கொள்கை மறந்து ஒட்டு வங்கியை அறுவடை செய்ய பார்க்கிறது அதிமுக.
கருணாநிதி இத்திரைப்படத்தின் சிறந்த குணசித்திர பாத்திரம். ஈழ தமிழர்களின் துயர் துடைக்க உயிர் துறக்க தயார் என்று காமெடி பண்ணுவதாகட்டும், அனைத்து எம்பிக்கள் ராஜினமா என வில்லத்தனம் பண்ணுவதாகட்டும், உடன்பிறப்பே உன்னை நெஞ்சில் சுமக்கிறேன் என கண்ணீர் வடிப்பதாகட்டும், அற்புதமான நடிப்பு.அவருக்கு அவருடைய குடும்பத்தில் உள்ள ஒன்று விட்ட சகோதரன் மகன், சகலையின் பேத்தியின் கணவனின் மூத்த சகோதரியின் பேத்தி என குடும்பத்தில் ஒருத்தர் விடாமல் ஏதாவது பதவியை கொடுத்து விட வேண்டும் என முனைப்புடன் திரியும் அவருக்கு ஈழத்தமிழன் செத்தால் என்ன, ஈழத்தமிழச்சிகள் கற்பழிக்கப்பட்டால் என்ன, தமிழ் நாடு எக்கேடு கேட்டால் என்ன தமிழன் எப்படி போனால் என்ன. அழகிரியின் மகளுக்கு பதவி கனிமொழிக்கு பதவி, இன்னும் உதயநிதியின் பய்யன் மட்டும் தான் பாக்கி. கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் வரலாறு காணாத வீழ்ச்சி இம்முறை தமிழகத்தில் இருக்க போகிறது எனவே நான் எண்ணுகிறேன்.

தமிழகத்தில் காங்கிரஸ் கவிழ்ந்தாலும், தேசிய அளவில் காங்கிரஸ்க்கே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மிக்க படித்த மன்மோகன் சிங்கும் ப சிதம்பரமும் மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை பெற்றிருக்கிறார்கள். ப ஜ க விற்கு இருக்கும் கூட்டணிகள் எல்லாம் பிரிந்து போக அது மேலும் காங்கிரசுக்கு பலம் சேர்க்கிறது. வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது அதற்க்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாகி இருக்கிறது. முலாயம் சிங்கும் மனது வைத்தால் காங்கிரசை வீழ்த்துவது கடினம். எனினும் மத்தியில் அமரபோகும் கட்சியை நிர்ணயிக்க போவது தமிழனின் ஒட்டு தான்.
இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...