Wednesday, February 11, 2009

ஸ்லம் டாக் மில்லியனர் (Slumdog millionaire) ஆஸ்கார் பரிந்துரைக்கு தகுதியானதுதானா?உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து விருதுகளிலும் நிச்சயம் ஒன்றாவது ஸ்லம் டாக் மில்லியனர் கு கிடைத்திருக்கும். ஏகோபித்த பாராட்டுதல்கள்.

'இத்திரைப்படம் ஒரு கொண்டாட்டம்' (A celebration) என அமெரிக்கா பத்திரிக்கைகள் வரிந்துகட்டிக் கொண்டு விமர்சனம் எழுதி வருகின்றன. சில உயர்தர இந்திய குடிமக்கள், இந்தியாவை இந்த திரைப்படம் கேவலப்படுத்திவிட்டது என குறை கூறி இருந்தனர்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இந்த திரைப்படத்தை பார்க்க சென்றேன். புதுவகையான திரைப்பட உருவாக்கம்(making) எனவும் எழுதி இருந்தார்கள். அதாவது நிகழ்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் மாறி மாறி பயணிக்கிறது திரைக்கதை. இதை தான் நமது மணி ரத்னம் நமது அலைபாயுதே படத்திலேயே செய்து விட்டாரே என்ற எண்ணம் எனக்குள் அலைபாய்ந்தது.
ஒரு இந்தியனான எனக்கு படத்தில் மற்றவர்கள் கூறுவதை போல, உலக அறிஞர்கள் கூறுவதை போல புதுமையான முயற்சி என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இந்தியாவின் சேரியை அப்பட்டமாக துகிலுரித்து காட்டியதை தவிர நமக்கு மிகவும் ,பழக்கப்பட்ட ஒரு ஏழை கோடீஸ்வரனாவது தான் கதை.

முதல் காட்சி, காவல் நிலையத்தில் ஜமால் என்ற இளைஞன் சித்ரவதைப்படுத்த படுகிறான். அவன் மேல் உள்ள குற்றம், ஒரு சேரி இளைஞனான அவன் 'யாருக்கு கோடீஸ்வரனாகும் ஆசை உள்ளது' (who wants to be a millionaire) என்ற நிகழ்ச்சியில் ஒரே ஒரு கேள்வியை தவிர மாற்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்கிறது. அவன் நிச்சயம் கள்ள விளையாட்டு ஆடி இருக்க வேண்டும் என்பதே குற்றச்சாட்டு. பலவிதமான சித்ரவதைவதைகட்க்கு பின் வாய் திறக்கிறான் ஜமால். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவன் வாழ்கையிலேயே விடைகள் இருந்தன என்பது அவன் வாதம். ஒவ்வொரு கேள்விக்கும் அவனுக்கு விடை எப்படி தெரிந்தது என அவன் கூற துவங்கும்போது A R ரகுமானின் சிலிர்க்கவைக்கும் ' ஒ சய்யா' என்ற பாடலுடன் இறந்த கால காட்சிகள் திரையில் விரிகின்றன. அந்த பாடலும், அந்த துரத்தல் காட்சிகளும், அந்த காட்சிகளினூடாக சேரி மக்களின் அவல வாழ்க்கையும் அற்புதமாக காட்சி படுத்தி உள்ளனர். அந்த காட்சியில் மட்டும் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் இசையும் பின்னி பிணைந்து மும்பையின் சேரியை நம் கண்முன் நிறுத்துகிறது.

அமிதாப் பச்சனிடம் கைஎழுத்து வாங்குவதற்காக மலக்குழிக்குள் விழுந்து உடம்பு முழுவதும் மலத்துடன் சென்று கை எழுத்து வாங்கும் காட்சி அருவருப்பின் உட்சம். படத்தில் மிக மிக மிகைப்படுத்தப்பட்ட காட்சியாக தோன்றியது. மற்றபடி சாக்கடையில் துணி துவைப்பது, மத கலவரத்தில் ஜமால் தன் அம்மாவை பறிகொடுக்க ஒரே நொடியில் அநாதை ஆகின்றனர் ஜமாலும் அவன் நண்பன் சலீமும்.

அனாதையான லத்திகாவும் அவர்களிடத்தில் சேர்ந்துகொள்ள, மூவரும், சிறுவர்களை முடமாகி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலில் அவர்கள் அறியாமலே சேர்ந்து கொள்கிறார்கள். அந்த கும்பலின் தலைவன் ஜமாலின் கண்ணை குருடாக்கும் எண்ணத்துடன் அவனை தேட, சலீம் ஜமாலை தப்ப வைத்ததோடு லத்திகாவை தந்திரமாக கழற்றி விடுகிறான்.

சின்ன சின்ன திருட்டுகள் என கழியும் அவர்கள் வாழ்க்கையில் ஜமால் லத்திகாவை தேடி கொண்டிருக்கிறான். அவர்களது பருவத்தில் அவள் ஒரு விபச்சார விடுதியில் இருப்பதை கண்டுபிடிக்க, சலீம் பிச்சைகார தாதாவை போட்டு தள்ளி விட்டு ஒரு தாதா கும்பலுடன் சேர்ந்து லத்திகாவை வளைத்து துப்பாக்கி முனையில் ஜமாலை துரத்தி விடுகிறான்.

ஒரு கால் சென்டரில் டீ வழங்கும் பையனாக வேலை செய்யும் ஜமால் சலீம் இருக்குமிடம் கண்டுபிடித்து லத்திகாவை கண்டுபிடிக்க அவளோ சலீம் வேலை செய்யும் தாத்தாவின் பிடியில் இருக்கிறாள். அவளுக்காக தான் ரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும் அவளை புறப்பட்டு வந்துவிடுமாறும் கூறுகிறான். அவன் காத்திருக்கையில் அவளும் வருகிறாள். இடையில் சலீம் தனது ஆட்களுடன் வந்து அவளை கடத்தி சென்றுவிடுகிறான். அவள் 'who wants to be a millionaire' நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறாள் என்று ஜமால் அறிந்து அவளுடைய இருப்பிடம் அறிந்து கொள்வதற்காக அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான். முடிவில் சுபமாகி பாலிவுட் ஸ்டைலில் ஜெய் ஹோ என்ற பாடலை ஆடி படத்தை முடிக்கிறார்கள்.
நடிகர்களின் நடிப்பை விடவும், திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் மற்றும் இசை படத்தின் தூண்கள். எனினும் இந்தியர்களுக்கு இது பழகி போன ஒரு பார்முலா. சேரியில் இருந்து ஒருவன் கொடீஸ்வரனாகிறான் . காதலுக்காக இதை செய்கிறான். அதற்க்கு ஒரு வில்லன். கடைசியில் வில்லன் திருந்துவது, ஜமால் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் டிவி ஷோ நடத்தும் அணில் கபூருக்கு எப்படி தெரியும் என்று தெரிய வில்லை. ஏன் என்றால் அவனுக்கு தெரிந்த கேள்வியே கேட்கிறார். கடைசி கேள்விக்கு அவனுக்கு விடை தெரியாத போதும் எதோ ஒன்றை சொல்லி வைக்க அதுவும் சரி ஆகி விடுகிறது. இதனால் இப்படத்தின் நம்பகத்தன்மை மேல் கேள்வி எழுகிறது.

இத்திரைப்படம் ஒரு இந்தியரால் எடுக்கப்பட்டிருந்தால் இந்தியாவை விட்டு வெளியே போகாமல் முடக்கப்பட்டிருக்கும். ஆஸ்கார் வரை இப்படம் பொய் இருக்குமா என்பதே சந்தேகம் தான். என் என்றால் அரசியல் அங்கும் விளையாடுகிறது. படத்தின் இயக்குனர் பிரிட்டனின் மிக சிறந்த படைப்பாளர்களில் ஒருவரான டானி பொய்லே என்பதால் தான் இந்த திரைப்படத்திற்கு இவளவு வரவேற்ப்பு. AR ரகுமான் இதைவிட சிறப்பாக பல படங்களில் இசை அமைத்துள்ளார். இந்த படம் மட்டுமே டானி பொய்லே தயவில் தேர்வு செய்ய பட்டிருக்கிறது.

எனினும், இந்தியன் பார்முலா திரைப்படம் உலகம் முழுதும் இப்பொது இந்த திரைப்படம் மூலம் கொண்டாட படுகிறது. ஒரு தமிழரான AR ரகுமான் கொண்டாட படுவது, உலக தமிழர்கள் அனைவருக்கும் பெருமை. படம் ஆஸ்கார் கு தகுதியானது தான என்ற கேள்வி இருந்தாலும், இத்திரைப்படம் இந்திய திரை மேதைகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் தரும் ஒரு துருப்பு சீட்டு .
இந்தியாவை கேவலப்படுத்தி விட்டதாக குறை கூறுபவர்களுக்கு, மாநகரங்களில் உள்ள சேரிகள் தான் விடை. சேரி என்ற ஒரு இடத்துக்கு போக கூட நாம் விரும்புவதில்லை . கூவம் பக்கமாக மூக்கை பிடித்து கொண்டு நடந்து செல்பவர்களுக்கு அந்த கூவத்தின் அருகிலேயே வாழும் மனிதர்களை பற்றி தெரியுமா? டிராபிக் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்களை துரத்தி விடும் நமக்கு அவர்களின் நிலைக்கு காரணம் பற்றி தெரியுமா? வெள்ளை காரன் இந்தியாவை கேவலப்படுத்துகிறான் என கதறுபவர்கள், அந்த வெள்ளைகாரனான ரிச்சர்ட் ஆட்டன்போரோ காந்தியை பற்றி படம் எடுக்கவில்லை என்றால் நமக்கு அற்புதமான அந்த காந்தி திரைப்படம் கிடைத்திருக்குமா? இன்றும் இந்தியாவில் நமக்கு தெரியாமல் இருக்கும் சேரி மனிதர்களின் வாழ்க்கைக்கும் ஒரு வெள்ளைக்காரன் தான் படமாக எடுக்க வேண்டி இருக்கிறது. அந்த மலக்குழி காட்சி தவிர மாற்ற காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் நடக்கும் அவலங்களே என்பதை நாம் ஒத்துக்கொள்ள தான் வேண்டி இருக்கிறது.

Thursday, February 5, 2009

இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதியை ஏன் குற்றம் சொல்கிறார்கள்?


இலங்கை தமிழர்கள் அனாதைகளாக வீடுகளற்று நாடற்று உறவினர் இழந்து உடைமைகள் இழந்து எப்போது தாங்கள் குண்டுகளுக்கு இரை அவோமோ என அஞ்சி துடித்து கொண்டிருக்கின்றனர். மருத்துவமனையில் குண்டு, பாதுகாப்பு பகுதியில் குண்டு என ஊடகங்கள் எழுதி வருகின்றன.
ராஜபக்ஷே சகோதரர்கள் தமிழர்களை இலங்கையில் இருந்து சுத்தமாக துடைத்து எடுத்து விடுவது என கங்கணம் கட்டி கொண்டு தங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் 'வெள்ளை ஊர்தியில்' அடியாட்கள் வைத்து கொன்று குவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் 'போர் நிறுத்தம்' என அலறினாலும் செவிமடுக்காது தங்களது ஆணவ போக்கினால் அழிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சரி இதில் கருணாநிதி எங்கு நுழைந்தார். நாள் தோறும் ஏடுகளில் அரசியல் வாதிகள் அவரை விமர்சித்தும் (காங்கிரஸ் அரசியல்வாதிகள் தவிர) வலை பதிவாளர்கள் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கியும் வருகின்றனர்.
சில வலைத்தளங்களை படிக்க முடிவதில்லை. அப்படி நா கூசும் வகையில் அவரை வறுத்தெடுக்கிறார்கள். இது நியாயம் தானா? அவர் நினைத்தால் போர் நிறுத்தம் கொண்டு வந்து இலங்கையில் அமைதி திரும்பி விடுமா?
முதலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வருவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு குழு கூறுகிறது. இந்தியா தனது ராணுவத்தை இலங்கைக்கு உதவியாக அனுப்பி உள்ளது என்றும் கேரளா வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கிறது என்றும், ராடர்களை வழங்கி வருகிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். இந்தியா எதற்காக இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு சோனியா காந்தி பழி வாங்குகிறார் என கூறுகின்றனர். அது அவ்வளவு எளிதானதா என தெரியாவிட்டாலும் இந்தியா இலங்கைக்கு உதவி வருவதற்கான காரணம் அரசியல் சம்பத்தப்பட்டதல்ல. இராணுவம் சம்பந்தப்பட்டது என்பதே எனது அனுமானம்.
இலங்கை இந்தியாவிற்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. வடக்கே பாகிஸ்தானும், கிழக்கில் பங்களா தேசும் மேற்கில் சீனாவும், இந்தியாவை எதிரிகளாகவே பார்க்கின்றன. இந்தியா இலங்கைக்கு உதவா விட்டால் இலங்கை நிச்சயமாக பாகிஸ்தானிடம் உதவிகள் கேட்க கூடும். அல்லது கிழக்கு ஆசியாவில் கால்கள் பதிக்க திட்டமிட்டு கொண்டிருக்கும் அமெரிக்காவும் நாக்கை சுழற்றிக்கொண்டு காத்திருக்கிறது. அமெரிக்கா மட்டும் இலங்கைக்கு உதவ ஆரம்பித்தால் இலங்கை அமெரிக்காவின் ராணுவ தளங்களில் ஒன்றாகி விடும். பின் இந்தியாவிற்கு சோதனை தான்.
எனவே தான் மற்றவர்கள் உதவும் முன்பு தான் முந்தி கொண்டு இலங்கையின் நேசத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என இந்திய எண்ணி இருக்க கூடும். உதவிகளை வெளிப்படையாக செய்ய நேர்ந்தால் உலகில் பல இடங்களில் இருக்கும் தமிழர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதற்காகவே இத்தனை ரகசியமாக கை ஆள்கிறதோ என அவதானிக்க வேண்டி இருக்கிறது.

சரி இந்தியா உதவிகள் செய்தால் விடுதலை புலிகள் பலம் இழந்து போக வாய்ப்பு இருக்கிறது. விடுதலை புலிகள், என்றும் இலங்கை ராணுவத்தை பார்த்து பயந்தது இல்லை. ஆனால் ஆள் பலத்தில் இந்திய ராணுவத்தை பார்த்து தான் அஞ்சுகிறது.
அரசியல் காரணங்கள் இவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்லவா. மற்ற மொழிக்காரர்களிடம் இல்லாத உணர்வு தமிழனுக்கு உண்டு. தமிழனுக்கு ஒன்று என்றால் உணர்ச்சி பிழம்பாகிவிடுவான் தமிழன். இதற்க்கு வரலாறே சான்று. இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் 25 ஆண்டு கால வரலாறு. சம உரிமை வழங்குவோம் சுயாட்சி வழங்குவோம் என இலங்கை அரசு சொல்லும் கூற்றை தமிழர்களும் விடுதலை புலிகளும் நம்ப தயாராக இல்லை.இப்போது கூட பாதுகாப்பு பகுதிகளுக்கு வாருங்கள் என தமிழர்களை அழைத்து அதே இடத்தில் குண்டு போட்டு தமிழர்களை கொன்று குவித்து வருகிறது இலங்கை அரசு.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக லசங்கா என்ற பதிப்பாசிரியரை அடியாளை வைத்து கொன்றது இலங்கை அரசாங்கம். அரசுக்கெதிராக கருத்து கூறியமைக்காக 'ஜெர்மனி சுவிஸ் போன்ற தூதர்களை வெளியேற்ற தயங்க மாடோம்' என கோத்தபய ராஜபக்ஷேவை கொக்கரிக்க வைத்தது.
இதையெல்லாம் பார்க்கும்போது உகாண்டாவை ஆண்ட சர்வாதிகாரி இடி அமீன் நினைவுக்கு வருகிறார். உகாண்டா நாட்டினர் தவிர வேற யாரும் அந்த நாட்டில் வாழக்கூடாது என துரத்தி அடித்தவர் அவர். அரசுக்கெதிராக யாரும் கருத்து கூறினால் அதற்குப்பின் அவர்களை காண முடியாது.
தற்ப்போது உகாண்டாவின் ஆட்சி தான் இலங்கையில் நடக்கிறது என்று எண்ணும் வண்ணம் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

சரி கருணாநிதியை எதற்காக எல்லாரும் சாட வேண்டும். அவர் தன்னை தமிழர்களின் காவலர் என கூறி கொள்பவர். மக்களும் அவ்வாறுதான் நினைக்கிறார்கள்.போரின் பிடியில் தவிக்கும் தமிழர்களின் நிலை அவருக்கு தெரியாமலா இருக்கும்? வாரத்துக்கு ஒரு அறிக்கை அவரிடம் இருந்து வருகிறது. 'இலங்கை தமிழனுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் உயிரை விடவும் தயார்' என்று கூறினார். ஆனால் அவருக்கு தசைபிடிப்புக்காக இப்பொது ஊசி போட்டு கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

'இலங்கை தமிழனுக்காக பதவி துறக்கவும் தயார் ' என கூறிய கருணாநிதி 'எப்போது திண்ணை காலி ஆகும் என எதிர்கட்சிகள் எண்ணுகிறார்கள் அவர்கள் ஆசை வீண்' என நய்யாண்டி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு திண்ணை மட்டுமே இப்போது குறிக்கோளாக பொய் விட்டது. எங்கோ தூத்து குடியில் பிறந்த ஒரு தமிழனுக்கு இருந்த தமிழின உணர்வு, தமிழ் காவலராக தன்னை பிரகடனம் செய்த்கொண்ட ஒரு மாபெரும் தலைவருக்கு இல்லாமல் போனது வேதனை. தீ குளித்த முத்துகுமரனின் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் வழங்கி விட்டதோடு இவரது தமிழின உணர்வு முடிந்து விட்டது.
பிரணாப் இலங்கை செல்கிறார் போர் நிறுத்தம் குறித்து பேசுவார் என சொல்லப்பட்டது. அவரும் சென்றார். 'இலங்கையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது' என அப்பட்டமான பொய் அறிக்கை விடுகிறார்.
இலங்கை தமிழருக்காக கூண்டோடு ராஜினாமா என்று கூறிய கருணாநிதி இன்று திண்ணை காலி ஆவதை பற்றி நினைக்கும் காரணமென்ன?. அவர் பார்க்காத பதவியா, அவர் அமராத முதலமைச்சர் நாற்காலியா? இந்த தள்ளாத வயதிலும் எதற்கு பதவி மேல் மோகம்?. அவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவி கொடுத்த பிறகாவது அவரது பதவி மோகம் அவரை விட்டு விலகுகிறதா என பார்க்க வேண்டும்.
இதற்காக மற்ற கட்சிகள் தமிழனுக்காக வாளேந்தி போர் புரியும் என்று நான் சொல்ல வில்லை. அதற்கான அருகதையும் அவைக்கு இல்லை. கருணாதியை மட்டுமே தமிழர்கள் நம்பி வந்ததால் தான் இந்த பதிவு.

கருணாநிதி நினைத்தால் அவருடைய பதவி துறந்து போர் நிறுத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்ய முடியும். போர் முகத்தில் தவிக்கும் எம் தமிழனை காப்பாற்ற முடியும். என்று தமிழும் தமிழனும் தனக்கு முக்கியம் என கருதி பதவி துறந்து தமிழனுக்காக போராடுகிறாரோ அன்று தான் அவர் தமிழ் காவலன். இல்லையேல் அவர் வெறும் திண்ணை காவலன் மட்டுமே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...