Wednesday, February 13, 2013

பெண்களுக்கெதிரான தேசம்!




நம் தேசத்தின் ஆணாதிக்கத்துக்கு இதோ, இன்னொரு பலி. காதல் என்ற வன்முறையால், அமிலத்தில் அழுத்தப்பட்டு, தனது சிறகுகள் கருகி, உயிரை விட்டிருக்கிறது இந்த வண்ணத்து பூச்சி. புன்னகை தொலைத்துவிட்ட தேசமோ, தேவதைகளை காக்க வழி அறியாது தலை குனிந்து மௌனமாக நிற்கிறது.

ஏன் இந்த நாடு பெண்களுக்கெதிரான தேசமாக மாறிப் போனது. மொத்தம் உள்ள 135 நாடுகளில், பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவின் இடம் 113. இந்த தேசத்தில் தான் அதிக பெண் தெய்வங்கள் தெய்வமாக வழி படப் படுகிறார்கள்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆணாதிக்க தேசத்தில், பெண்களுக்கெதிரான வன்முறையை ஊடகங்களிலும், சினிமாவிலும் நய்யாண்டி செய்து கொண்டு அவர்களை அவமதித்து வாழும் தேசமிது. பெண் என்றால், காமத்துக்கு உருவாக்கப்பட்ட ஒரு வடிகாலாகத்தான் இந்த நாட்டின் ஒவ்வொரு ஊடக எந்திரமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரம், அவளது எதிர்கால நலன் கருது எழுபது விழுக்காடுகள் வெளியே வருவதே இல்லை. பெண்கள் இப்படித்தான் உடை அணியவேண்டும் எனில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த படுவார்கள் என்று சொல்லி தரும் பெரியோர்கள், தங்கள் வீடு ஆண்கள் பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை சொல்லித் தருவது இல்லை.

நேற்று ஏழு வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் பதிமூன்று வயதுக்குட்பட்ட மூன்று சகோதரிகள், கற்பழிக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

பெண்கள் பயமில்லாமல் நடமாடும் ஒரு இந்தியாவை என்று உருவாக்கப் போகிறோம்? இந்த கேடு கேட்ட நிலைமைக்கு, நம் நாட்டின் ஊடகம் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. பெரும் பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் எல்லாம், அரை குறை ஆடைகளுடன் பெண்களின் படங்களை வெளியிட்டு, மனதின் அடியே அமிழ்ந்து கிடக்கிற பாலுணர்வுகளை வெளியே கொண்டு வருகின்றன. இன்றைய திரைப்படங்களின் வசூலே பெண்களின் இடைகளிலும் தொப்புள்களிலும், மேலும் பல சாமாசாரங்களிலும் தான் இருக்கிறது.

தனக்கு கிடைக்காத பெண் வேறு எவனுக்கும் கிடைக்க கூடாது என தனது கதாநாயகனை விட்டே உலகத்துக்கு பாடம் சொல்லித் தருகிறது. காதல் மட்டுமே உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்றும் காதல் இல்லாவிட்டால் செத்து ஒழி என்றும் பாடம் புகட்டுவது திரைப்படங்கள் தான். பாலியல் வறட்சி நிறைந்த தேசத்தில், மனித அடிமன வக்கிரங்களை வெளியே கொண்டுவர, 'கலாச்சாரத்திற்காக' பாடுபட்டுக் கொண்டிருப்பதாக பீற்றிக் கொள்ளும் எழுத்தாளர்களுமே தங்கள் புத்தகம் விற்பதற்காக, அதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்தால் அடைந்துவிட கூடிய வெறியை ஒருவனுக்கு ஊட்டுவதற்கு அவனது பெற்றோர் தான் மிகப் பெரிய காரணமாக இருக்கிறார்கள். குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதற்காக ஓடி ஓடி வேலை செய்யும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கவனிக்க மறந்து அந்நியமாகிப் போக, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே அறியாமல் போக, குழந்தைகளோ, வளரும் பிராயத்தில் தங்களுக்குள் நடக்கும் ரசாயன உணர்வு மாற்றங்களை அறியாமல் குழம்பிப் பொய் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். கற்பு கற்பு என்று பிதற்றிக் கொண்டு, அதனை பெண்களுக்கு மட்டுமே பொதுவானதாக வைத்து விட்டு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால்,'யாரிடமும் சொல்லாதே மானம் பொய் விடும் ' என அவர்களை மிரட்டி, அவர்களது உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே அமிழ்த்தி புழுங்க வைத்து உயிரோடு ஒவ்வொரு நாளும் சாகடிக்கும் கொடுமை, பாலியல் பலாத்காரத்தை விட கொடுமை.

பாலியல் கல்வி, பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்கட்டும். பெண்களை மதிக்க ஆண்களுக்கு, வீடுகள் கற்றுக் கொடுக்கட்டும். ஆண்களை சிறந்த பள்ளிகூடங்களிலும், பெண்களை மோசமான பள்ளிகூடங்களிலும் சேர்ப்பதை வேறுபாடு காட்டுவதை பெற்ற மனங்கள் உணரட்டும். பெற்றோர்களின் நேரம் தினமும் கொஞ்சம் தங்கள் குழந்தைகளுக்காகவும் இருக்கட்டும். இந்த தேசத்தை நம் குழந்தைகள் தான் காப்பாற்ற வேண்டும்.

Friday, February 8, 2013

திரைப்படம்:விஸ்வரூபம்





பலவித சர்ச்சைகளை ஆரம்பத்தில் இருந்தே கண்டு வந்த விஸ்வரூபம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையேயும், எதிர்ப்புகளுக்கு இடையேயும் வெளியாகிவிட்டது. அமெரிக்க திரை அரங்கில் ஒரு வார நாளில் ஒரு இந்திய திரைப்படத்தை காண சுமார் முப்பது பேர் வந்திருந்தது ஆச்சர்யம் அளித்தது. டீவீடி வரும்போது பார்த்துகொள்ளலாம் என்றிருந்த என்னை, படத்தின் விமர்சனங்களும் சர்ச்சைகளும், திரை அரங்கத்தை நோக்கி இழுத்துவிட்டது எனலாம். எனவே படத்தி சுற்றி எழுந்த சர்ச்சைகள், படத்தின் வசூலுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்பது திண்ணம்.

படத்தின் கதை என்ன?. அமெரிக்கனான தமிழன் விச்சுவை மணம் புரிந்து அமெரிக்காவில் வசிக்கும் நிருபமாவுக்கு விச்சுவின் மேல் பெரிதான ஈடுபாடு இல்லை. நடன பள்ளி அமைத்து நடனம் கத்து தருவதால் பெண்மை கலந்திருக்கும் விச்சுவை அவளுக்கு பிடிக்காமல் போக,அவள் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளிக்கும் அவளுக்கும் ஏற்படும் ஈர்ப்பினால் அவனை விவாகரத்து செய்வதற்கு முயல்கிறாள்.

விவாகரத்து செய்ய காரணம் வேண்டுமே!. ஒரு துப்பறிவாளன் அவளுக்காக விச்சுவின் பின்னே அலைந்து அவன் ஒரு இஸ்லாமியன் என்பதை கண்டுபிடித்து எக்குதப்பாக இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்டு உயிரிழக்க அவனிடம் இருக்கும் குறிப்புகளைக் கொண்டு விச்சுவையும் அவன் மனைவியையும், கொண்டு சென்று தனி அறையில் அடைக்கிறது அந்த கும்பல்.

அந்த கும்பலின் தலைவன் ஓமர், விச்சுவின் புகைப்படத்தை கண்டு, தான் அவனை நேரில் காண விரும்புவதாக கூற, அதுவரையில் பெண்மை கலந்து காணப்படும் விச்சு வீறு கொண்டெழுந்து விஸ்வரூபம் எடுத்து அவர்களுடன் சண்டையிட்டு தன மனைவியுடன் தப்பிக்க, அவன் முன்பு அல் குவைதா படைகளில் பயின்றவன் என்பதும் தீவிரவாதிகளை வேரோடு அழிக்கவே அந்த வேடம் பூண்டுள்ள ஒரு இந்திய உளவுத்துறை இஸ்லாமிய ஏஜன்ட் என்பதும் தெரியவருகிறது. இடையே ஆப்கானிஸ்தானில், தீவிரவாதிகளின் பயிற்சி அங்கு அவர்களின் கொடூரமான வாழ்க்கை முறைகள் காண்பிக்கப் படுகிறது.

விச்சு என்ற கஷ்மீரி, எவ்வாறு தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவை மீட்கிறான் என்பது மீதிக் கதை. படத்தின் இறுதியில் ஓமர் தப்பி விட, விஸ்வரூபம் பகுதி இரண்டில் அவனை இந்தியாவில் பிடிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான் காஷ்மீரி.

கதையா மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு விஜயகாந்த் டைப் மசாலா கதை தான். என்ன, விஜயகாந்த் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்றுவார். கமல் உலக நாயகன் ஆயிற்றே. தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றுகிறார்.

சாதாரண மசாலா கதை என ஒதுக்கிவிட முடியாதபடி, லாஜிக்குகளை புகுத்தி பிரமாண்டத்தை காட்டியதில் இது கமலுக்கு ஒரு விஸ்வரூபமே. குறிப்பாக, படத்தின் முதல் நாற்பது நிமிடங்கள் ராக்கட் வேகத்தில் பறக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகளில் 'இப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள்' என கமல் ஒதுங்கி பார்வையாளனுக்கு காட்சிகளை காண்பிப்பதால், திரைக்கதை வேகமிழக்கிறது. இடைவேளைக்குப் பின்னே, திரைக்கதையில் பாசஞ்சர் ரயிலின் வேகம்.படத்தில் ஒவ்வொரு இடத்திலும், கமல் அமெரிக்காவை உயர்த்தி கோடி பிடிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. க்ளைமாக்சில் அமெரிக்காவின் FBI சிரிப்பு போலீசாக காட்டவே உதவி இருக்கிறது. கமல் மட்டுமே எல்லாம் தெரிந்ததாக காட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

ஆப்கானிஸ்தான் குகைகளுக்குள் புகுந்து புறப்படும் சானு ஜான் வர்கீசின் காமெரா படத்துக்கு பெரிய பலம். திகிலூட்டும் பின்னணி இசையில் கலக்கி எடுக்கும் ஷங்கர் எசான் லாயின் இசையில் சில இடங்களின் பின்னணி இசை, ஏற்கனவே பல ஹாலிவூட் படங்களில் கேட்ட உணர்வு. 'உன்னை காணாமல் ' பாடல் மேன்மை என்றால், 'யாரென்று தெரிகிறதா' பாடல் அதகளம்.

படத்தில் வரும் முதல் ஆக்க்ஷன் ப்ளாக்கில், 'யாரென்று தெரிகிறதா' என்ற பாடலின் பின்னணியில் கமல் தீவிரவாதிகளுடன் மோதும் அந்த சண்டை காட்சி உலகத்தரம். மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் சண்டை காட்சிகளில் சில 'வாவ்' சொல்ல வைக்கிறது. எனினும் பிரம்மாண்டத்தை மட்டுமே வைத்து ஹாலிவூட் தரத்தை எட்டி விட முடியாது. அப்படி பார்த்தால் எந்திரனை கூட ஹாலிவூட் தரம் எனலாம். ஹாலிவூட் தரத்தை எட்ட, பிரமாண்டம் தேவை இல்லை. சமரசம் செய்து கொள்ளப்படாத சீரான திரைக்கதையும் புதுமையான கதையும் இருந்தாலே போதும். உதாரணத்துக்கு, அமெரிக்காவின் பரம வைரியான இரான் நாட்டில் இருந்து வெளியான 'A separation' திரைப்படத்தை எடுத்து கொள்வோம். அதிகம் செலவு செய்யப்படாத அந்த திரைப்படம், திரைக்கதையில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டது. சிறந்த அயல் நாட்டு திரைப்படம் என்ற விருதையும் வென்றது.

படம் வெளியாவதன் முன்னே, இஸ்லாமியர்கள் இப்படத்தை திரை இடக்கூடாது என போர்க்கொடி தூக்கியபோது, நாத்திகரான கமல் படத்துக்கு ஏன் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள் என்ற கோவம் எனக்கிருந்தது. படம் பார்த்ததும், அந்த எதிர்ப்பின் நியாயத்தை புரிந்துகொண்டேன். போகிற போக்கில் இந்து கடவுள்களையும் கிண்டலடிக்கத் தவறவில்லை கமல். ஆனால், படத்தில் வரும் எல்லா இஸ்லாமியனுமே (கமலை தவிர) ஒரு தீவிரவாதியாகத்தான் காட்டப்பட்டிருக்கிறான். அமெரிக்காவிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ, படத்தில் வரும் ஒவ்வொரு இஸ்லாமியனும் வெடிகுண்டுடன் அலைந்து கொண்டிருக்கிறான். அல் குவைதா தீவிரவாதிகளைப் பற்றி தான் படம் எடுத்திருக்கிறார்கள் என சப்பை கட்டு கட்டினாலும், படத்தில் வரும் எல்லா இஸ்லாமியனும் அல் குவைதா தீவிரவாதிகளாகவே இருப்பது எந்த விதத்தில் ஞாயம். இந்த திரைப்படம் அமெரிக்காவில் வேண்டுமானால் பாராட்டுகளைப் பெறலாம். மத பிணக்கங்கள் நிறைந்த நம் நாட்டில் இப்படம், துவேஷங்களை உருவாக்கும்.படம் பார்க்கும் பாமரன் கண்டிப்பாக, இஸ்லாமியர்கள் எல்லாரும் தீவிரவாதி தான் என்ற முடிவெடுக்க இந்த திரைப்படம் ஒரு உந்து சக்தியாக இருக்கும். மற்றபடி அய்யாவுக்கும் அம்மாவுக்கும், இஸ்லாமிய ஒட்டு வங்கியை குறித்த அரசியலையும் அது உருவாக்கும். வரும் காலங்களில் இதனை கருத்தில் கொண்டு படங்களை எடுப்பது கமலுக்கும் நாட்டுக்கும் நல்லது.

எனினும் விஸ்வரூபம், ஒரு பிரமாண்டமான, இந்திய திரைப்படம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...