Wednesday, August 16, 2023

பீட் (Bheed) இந்தி

 



கோவிட் சமயங்களில் புலம் பெயர் மக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி சென்ற துயரத்தை வரலாறு மறக்காது மன்னிக்காது. அந்த மக்கள் சந்தித்த வலிகளை  சிறிது சாதிய வன்மங்கள், மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களின் பேதங்கள், மத துவேஷங்கள், சிறிது காதல், சிறிது மனிதம் என அனைத்தையும் கலந்துகட்டி காக்டைல் அளிக்கிறது இந்த இந்தி படம் பீட் (Bheed). Bheed  என்றால் கூட்டம் என இந்தியில் பொருள் படுகிறது 

வெகு தூரம் நடந்து வந்து ஆயாசத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கும் மக்கள் மேல் ரயில் ஏறி 16 பேர்கள் இறந்துபோன நிகழ்வில் கருப்பு வெள்ளையில் தொடங்குகிறது படம். திரிவேதி என்ற உயர் சாதியை சேர்ந்த வாட்ச்மேன்கள் குடும்பம், சுவாரஸ்ய செய்திகளுக்கு அலையும் மீடியாவை சேர்ந்த பெண், தன் குடிகார தந்தையை சைக்கிளில் வெகுதூரம் அழைத்து செல்லும் ஒரு பெண், ஹாஸ்டலில் இருக்கும் தனது பெண்ணை மீட்டுவர முயற்சிக்கும் ஒரு பெண், தியானத்துக்கு சென்று திரும்பும் ஒரு இஸ்லாமிய குழு, இவர்களை சமாளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி (ராஜ் குமார் ராவ்) மற்றும் அவனை காதலிக்கும் உயர் சாதியை சேர்ந்த ஒரு டாக்டர் என இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்தித்தால் என்னவாகும் என்பதை நிதர்சனங்களோடு பொருந்திப்போகும் திரைக்கதை.

புலம் பெயர் மக்களின் துயர் தான் கதை என்றாலும் அதனூடே அரசியல்வாதிகளின் சாதி மத அரசியலால் மக்கள் மனதில் எழும் துவேஷங்களையும் அதன் விளைவுகளையும் காட்சிப்படுத்தி இருப்பது சமூக அக்கறை. கவுதம் லால் டிகாஸ் என தனது சாதி பெயரான டிகாஸ் என்ற தாழ்ந்த சாதி பெயரால் தாழ்வு மனப்பான்மையுடன் வலம் வரும் ராஜ் குமார் ராவ்,நடக்கும் நிகழ்வுகளால் கையறு நிலையில் செய்வதறியாது துடிக்கும் சமயத்தில், தனது உயர் சாதியை சேர்ந்த காதலி பூமி பட்நாகருடன் சாதி வித்யாசம் பார்த்து மறுகும் இடத்திலும்  நடிப்பில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்.  பலராம்  திரிவேதி யாக வரும் பங்கஜ் கபூருக்கு அற்புதமான குணசித்திர வேடம்.

ஆர்டிகிள் 15,மல்க் போன்ற சமூக சிந்தனையுள்ள படங்களை இயக்கிய அனுபவ சின்ஹா தான் இப்படத்தின் இயக்குனர். இன்றைய அரசியல் காலகட்டத்தில் இது போன்ற படம் எடுக்க பெருந்துணிவு வேண்டும். படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்திருப்பதால் உண்மைக்கு அருகே இருப்பதை போன்ற உணர்வை சவுமிக் சட்டர்ஜீ யின் ஒளிப்பதிவு தருகிறது. இசை இருப்பதாகவே தெரியாமல் இசை அமைத்திருக்கிறார் அனுராக் சைக்கியா.

கதை ஒரே இடத்தில் நிகழ்வதாக இருப்பதால் படம் மெதுவாக நகர்வதாக உணர்வை தருகிறது. இருந்தாலும் புலம் பெயர் தொழிலாளிகளின் கொரோனா கால பயணத்தை வலிகள் மாறாமல், உண்மை சம்பவங்களை கோர்த்து மாலையாக்கி  அளித்த அனுபவ சின்ஹாவின் சமூகத்தின் மீதுள்ள காதல் நன்றே தெரிகிறது.

இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது 

பீட்...ஒரு அனுபவம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...