Tuesday, December 6, 2011

முற்றுப் பெறாதக் கவிதை!

முற்றுப் பெறாதக் கவிதை! 
தாள்கள் கிழிபட்ட

ஒரு சமூக நாவலின்,

முற்றுபெறாத அத்தியாயமாய்,

வந்தவன் எல்லாம்,

தன் கை மறந்து,

தங்கையை கேட்க...

மணந்து போன தங்கையை

வாழ்த்த தான் முடிந்தது.


ஆடைகளும்,

அணிகளும்,

அலங்கரிக்க மறுக்கும் உடலுடன்,

ஒரு

அகோரியின் மன நிலையில்,

நிலைத்து நின்றன

வளைகள் பூட்டிய விழிகள்.

 
வெள்ளியின் விலை ஏற்றமோ

என்னவோ..

அவள் சிரசு மயிரில்

ஏறி விட்டன

சில வெள்ளிக் கம்பிகள்..


இரவின்

தனிமையில்,

தவிப்பில்,

குளித்த நீர்த்துளி..

தொட்டு சென்றன..

அவளது

தொடக்கூடாத இடங்களை...


தனிமை தவத்தை

கலைக்க வருமோ..?!

தவிப்பின் தாகம்

தீர்க்க வருமோ..?!

தொலைந்து போனவனின்..

துவண்ட கைகள்..?


அணைப்பும் வேண்டாம்...

அரவணைப்பும் வேண்டாம்..

இறுகப் பற்ற

ஒரு கரம் போதும்..

இன்னமும்

முற்று பெறாத

இக்கவிதையை படிக்க...

எங்கே இருக்கிறாய்..

என் ராஜகுமாரா...?

Saturday, November 5, 2011

என்னைத் தொட்டு...ராஜாவின் ராஜாங்கம்.காலங்கள் உருண்டோடினாலும், சில விடயங்கள் நம்மை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவை நாம் கேட்கும் இசை. சில பெரியவர்கள், 'என்ன இருந்தாலும் அந்த காலம் போல பாடல்கள் இந்த காலத்தில் வருமா' என அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம், இவர்கள் ஏன் பழையதையே போட்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள், புதியதை வரவேற்கத் தயங்குகிறார்கள் என எண்ணத் தோன்றும். ஆனால் இப்போது நம்மையும் சில பாடல்கள் நம்மை பின் தொடர்ந்து ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை கொடுப்பதை இந்தப் பாடலை கேட்கும்போது உணரத் துவங்கினேன். 

யார் என்ன  விமர்சனங்களை வைத்தாலும், ராஜா ராஜாதான். அவர் செய்த சாதனைகளை வேறு எவரும், ஏன் ஒரு ஆஸ்கார் விருது கூட இணையாகுமா என்பது ஐயப்பாடே. சங்கீதம், மேல்தட்டு மக்களுக்கும், சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டுமே என அனைவரும் நினைத்திருந்த மாத்திரத்தில், கடைக்கோடி தமிழனுக்கும் சங்கீதத்தை அவனுக்கும் புரிகிற மாதிரி எடுத்து சென்று சேர்த்த பெருமை ராஜாவுக்கு மட்டுமே உண்டு.  சிந்து பைரவி படத்தில் வரும் 'பாடறியேன் படிப்பறியேன்' என்ற பாடல் அவரை பற்றி பாடுவதை போலவே இருக்கும். 'தலைக்கனம் எனக்கு இல்ல' என்ற வரியை தவிர. இளையராஜாவுக்கு தலைக்கனம் என பலர் கூறக் கேட்டிருக்கிறேன், கலைஞர்களுக்கு தலைக்கனமும் தங்களுக்கு ஒரு கவசமாக கையாள்வதை சொல்வார்கள். வைரமுத்து கூட, பாரதியின் வாழ்க்கை பற்றி தான் எழுதிய 'கவிராஜன் கதை' என்ற கவிதை தொகுப்பின் முன்னுரையில், தான் அந்த தொகுப்பை எழுதியதால் பாரதிக்கும் பெருமை தானே என்று படித்தபின் வைரமுத்துவை எனக்கு சில காலம் பிடிக்காமல் போயிற்று. 

பிறிதொரு நாள் யோசனை செய்தபோது, பாரதியே அப்படிப்பட்ட செருக்குடையவன் தானே என நினைத்து அந்த கோவத்தை கைவிட்டு வைரமுத்துவை ரசிக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு , உன்னை நெனச்சேன் பாடு படிச்சேன் படத்தில் வரும் 'என்னை தொட்டு ' என்ற பாடலை கேட்ட பொது ஒரு கணம் அந்த பாட்டின் இசையிலும் மேன்மையிலும் பாடல்களின் குரல்களிலும் மயங்கி ஏன் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரலில் 'ஆ ஆ ஆ ' என ஆரம்பிக்கும் ஆலாபனையில் ஆரம்பிக்கும் பாடல், தாளத்தின் சந்தத்துடன் ' என்னை தொட்டு அள்ளிகொண்ட மன்னன் பெரும் என்னடி'  என உருக்கி உள் நுழைகிறது. இந்தபாடல் என்ன ராகம், என்ன தாளம் என்ற சங்கீத இலக்கணம் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் கண்களை மூடிக் கொண்டால், நம் மனக்கண்ணுள் விரியும், பச்சை பசும் புல் வெளிகளும், நீரோடைகளும், பறக்கும் பறவைகளும்,  அங்கும் இங்கும் ஓடியபடி பாடும் குண்டு பெண் மோனிஷாவும் கண்ணுக்கு தெரிகிறார்கள்.

ஓடிகொண்டே தனது காதலனைப் பற்றி பாடிகொண்டே துள்ளி ஓடும் மொநிஷாவின் வெட்கம் கலந்த முகம், ஸ்வர்ணலதாவின் குரலுக்கு பொருந்தி அழகு சேர்க்கிறது. பாடலின் இரண்டாவது பல்லவியில், மோகனமாய் பாடியபடி தனது ரொமாண்டிக் சிரிப்புடன் கலந்து கொள்கிறார் SPB. அவருக்கே உரிய காதலும் காந்தமும் கலந்த குரலில், 'உன்னை தொட்டு' என அவர் பாடும்போது அவர் குரலுமே சேர்ந்தே நடிக்கிறது. கார்த்திக் அவருடைய குரலுக்கு, துள்ளல் நடிப்புடன் பொருந்தி அமைய ஒரு சுகமான பாடலில் லயிக்கிறது மனம்.

தெம்மாங்கு மேட்டில் அமைந்த இந்தப் பாடலில், ராஜாவின் மற்ற பாடல்களைப் போலவே, வயலினும், புல்லாங்குழலும், தபலாவும் மட்டும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அவ்வப்போது கேட்கும் கித்தாரின் இசையும் மந்திரம்  செய்கிறது. பாடல் முழுவதும் தாளத்தில் எந்த மாற்றமும் இன்றி ஒரே சீராய் பயணிக்கிறது, பாடலின் கடைசி வரை.

எனினும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம், நான் மதுரை கருமாத்தூரில் கல்லூரியில் படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் படித்த கல்லூரியை சுற்றி பச்ச பசும் வயல்களும் நீரோடைகளும் ஏரிகளும் இருக்க, சந்தியா காலங்களில்  எங்கிருந்தோ வானொலியில் இருந்த கசியும் இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்த்துக் கொள்ளும்.

இந்தப் பாடலைப் பாடிய ஸ்வர்ணலதா புற்று நோயில் இறந்து போனதும், நடிகை மோனிஷா விபத்தில் இறந்து போனதும், நினைவில் வந்து நெஞ்சம் கனக்கிறது. படத்தில் நடித்த கார்த்திக் தமிழில் மிகச்சிறந்த நடிகர்ளில் ஒருவர் என்பது எனது கருத்து, நாளடைவில், போதையிலும், அரசியலிலும் இறங்கி முங்கி தனது எதிர்காலத்தை தானே அழித்துக் கொண்டார்.இளையராஜாவும் இப்போது இசை அமைப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ள, SPB
கூட இப்போது பாடல்கள் பாடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டதாக அறிகிறேன். இருந்தாலும், இந்தப் பாடல் என்றென்றும் என் மனதிலும், என் காதுகளிலும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும் என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

அந்தப் பாடல்...
Monday, October 31, 2011

கோப்பை!
எதற்க்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்...?
உன் தோல்விகளில்...
நான் பங்கேற்றுக் கொள்ளவா?
என் தோள்களில்...
உன் சுமைகளை இறக்கிக் கொள்ளலாம்.
உனக்காக...
என்னால் கோப்பையில் இறங்க முடியாது.

எதற்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்..?
உன் வெற்றிகளை
நான் கொண்டாடுவதற்கா...?
என் தோள்களில் உன்னை சுமந்து
ஊர்வலம் வருவேன்.
உனக்காக
என்னால் கோப்பையை எந்த முடியாது.


எதற்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்...?
நமது நட்பை
டையாளப் படுத்திக் கொள்ளவா?
நீ உடைந்து போகும் முன்பு
என்னை உடைத்து
உன்னை ஒட்டித் தருவேன்...
உனக்காக..
என்னால் கோப்பையை பிடிக்க முடியாது


உன் வெற்றிகளுக்கும்,
உன் தோல்விகளுக்கும்,
உன் கொண்டாட்டங்களுக்கும்...
கோப்பைகளை நிரப்பி நிரப்பி,
உன் நிகழ்கால
நிமிஷங்கள்  
தொலைத்து
உனக்கான ஆயத்தங்கள்
ஆறப்போடப் படுகின்றன...

ஏந்திக் கொள்கிறேன்..
என்
கோப்பையை நான்
நிரப்பிக்கொள்ளவும்,
எனக்கான கோப்பையை
நான் கை பிடிக்கவும்
எனக்கான சுதந்திரம்
உன் கோப்பை கொடுக்குமானால்...!

Saturday, October 29, 2011

உலக சினிமா: தி கிங்க்ஸ் ஸ்பீச்.
அரசியல்வாதிக்கும், அரசாள பிறந்தவர்க்கும், தனது வாயே மூலதனம். அதாவது, மக்களை மதிமயக்க வைக்கும் பேச்சாற்றல் தான் அவர்களது பலம். அதற்க்கு , அண்ணா, கருணாநிதி, மார்டின் லூதர் கிங் என பல உதாரணங்கள் சொல்லலாம். அரசாள பிறந்தவனுக்கு பேசும்போது நாக்கு பிறழ்ந்தால் அவன் என்னவெல்லாம் சங்கடங்கள் அனுபவிக்கக் கூடும் என்பதை அழகாக சொல்கிறது சென்ற வருட சிறந்த படம், சிறந்த நடிகர்,சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதை  என்கிற மிக முக்கியமான  ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற தி கிங்க்ஸ் ஸ்பீச் திரைப்படம்.


பெர்ட்டி என்கிற ஆல்பர்ட் என்கிற ஆறாம் ஜார்ஜ் மன்னர். உண்மை புகைப்படம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில், இங்கிலாந்தை ஆண்ட மன்னன்ஆறாம்  ஜார்ஜ் நோய் வாய் பட்டிருந்த காரணத்தால், தனது முதல் மகனான டேவிட் க்கு பட்டம் சூட்ட நினைக்கிறார். டேவிடோ ஒரு விவாகரத்தான ஒரு அமெரிக்க பெண்ணிடம் காதல் கொண்டு அவளை மணக்க இருப்பதாக கூறுகிறான். அந்த காலத்தில் பிரிட்டிஷ் மன்னன் தான் கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவனாகவும் அறியப்பட்டதால், ஒரு மன்னன் இவ்வாறு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மணப்பது அப்போதைய கத்தோலிக்க மத சட்ட திட்டங்களுக்கு எதிராக இருந்ததால், அவன் மன்னனாக ஆகும் தகுதி இழக்க, சட்டப்படி அவனது தம்பி பெர்ட்டி தான் அந்த பட்டத்துக்கு ஏற்றவன். 

படத்தின் துவக்கத்திலேயே தனது நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை நிகழ்த்த பெர்ட்டி முயற்ச்சிக்க, தனது திக்கு வாய் பிரச்சனையால் அவனால் சரியாக உரை நிகழ்த்த முடியாமல் போக, அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை. மக்களுக்கோ, சரியாக பேசத்தேரியாதவன் தங்களின் தலைவனாக எப்படி இருக்க முடியும் என அவன் மேல் நம்பிக்கை இன்மை. ஏற்படுகிறது. அரசாங்க காரியங்களில் தன சகோதரனை விட சிறந்து விளங்கும் பெர்ட்டி, தனது வாய் பிரச்னையால் அவனால் ஒரு சிறந்த மன்னனாக வாய்ப்பை ஏற்று நாட்டை வழிநடத்த அவனுக்கு நம்பிக்கை வராமல் போகிறது. 
லயொநெல் லோக், தனது மனைவியுடன், உண்மை புகைப்படம்.

அவனது கவலையை உணர்ந்த அவனது மனைவி எலிசபெத், தனது கணவனின் இந்த திக்கு வாய் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறாள். அப்போது அவளுக்கு ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட மருத்துவனான லியோனல் லோக் என்பவனைப் பற்றி கேள்விப் பட்டு அவனிடம் தன கணவனை யாருக்கும் தெரியாது அழைத்து செல்கிறாள். லோக், பெர்ட்டியை ஒரு மன்னனாக கருதமுடியாது என்றும் தான் அவனை 'ஹிஸ் ஹைனெஸ்' என்று அழைக்காமல் பெர்ட்டி என்றே அழைக்க முடியுமானால் அவனுக்கு உதவுவதாகக் கூறுகிறான். அதவும் போக, அரசனை தேடி தான் வர முடியாது என்றும், தனது அலுவலகத்துக்கு அவன் வந்தால் மட்டுமே உதவ முடியும் என கறாராக கூறிவிட, எலிசபெத் பெர்ட்டியை எப்படியோ சமாதனப் படுத்தி அவனை அழைத்து வந்துவிடுகிறாள். 

அரச பரம்பரையை சார்ந்த தான் ஒரு சாதாரண மருத்துவனை தேடி செல்வதா என்ற இறுமாப்பும், தன்னை பெயர் சொல்லி ஒரு சாதாரணன் அழைப்பதா என்ற திமிரும் கோவமும் சேர்ந்து புறப்பட, லோக் இன் மீது ஒரு சினத்துடன் தான் அவனைத்தேடி வருகிறான் பெர்ட்டி. அவனது முதல் சந்திப்பில், லோக் ஒரு இசைத்தட்டை சுழல விட்டபடி, அவனை ஒரு செய்தி தாள் கொடுத்து படிக்க சொல்ல, அவன் பாதி படித்து முடித்ததும் 'இதற்க்கு மேல் என்னால் உனது ஆய்வுகளுக்கு உட்பட முடியாது' என கோவத்துடன் வெளியேறி விடுகிறான். அவன் படித்ததை பதிவு செய்த லோக் அந்த பதிவு செய்த ஒலித் தட்டையும் அவனிடம் கொடுத்து அனுப்புகிறான்.
                                            காலின் பிர்த் மற்றும் ஜெப்ரி ரஷ்

அந்த சமயத்ததில், ஜேர்மனி இன் ஹிட்லரின் அட்டூழியம் போருக்க இயலாது, அந்த நாட்டின் மீது படை எடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, பெர்ட்டி  தனது பொதுமக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் வருகிறது. அப்போது லோக் தான் பேசியதை பதிவு செய்த ஒலித்தட்டை கேட்கும்போது தான் திக்கு இல்லாமல் பேசியதை கேட்டதும் லோக் இன் மீது நம்பிக்கை வர, தனக்கு திக்கு வாய் இருப்பதை நீக்க லோக் இடம் தன்னை முழுவதுமாக ஒப்புவிக்கிறான் பெர்ட்டி.

அறிக்கைகளை ஏற்ற இறக்கத்துடன் படிக்க கொஞ்சம் கொஞ்சமாக படிக்க லோக் பெர்டிக்கு பயிற்சி தருகிறான். வார்த்தைகளின் இடையே விழும் இடைவெளிகளில் அவனுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் சொல்லி நிரப்ப சொல்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் எப்படி தன்னை முழுதுமாக தயாரித்து அவன் பொதுமக்களுக்கான தனது வானொலி உரையை வெற்றிகரமாக முடித்தானா என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது திரைப்படம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் வாழ்ந்த ஆறாம் ஜார்ஜ் மன்னன் என்கிற பெர்ட்டியின் உண்மை கதை இது. இப்போது வாழ்ந்து வரும் இரண்டாம் எலிசபெத்தின் தந்தை தான் இந்த பெர்ட்டி 

படத்தில் பெர்ட்டி யாக நடித்திருக்கும் காலின் பிர்த்க்கும்(Colin Firth), டாக்டர் லோக் ஆகா நடித்திருக்கும் ஜெப்ப்ரி ரஷ் க்கும்(geoffrey rush) தான் நடிப்பில் போட்டி.

ஒரு அரச பரம்பரையின் வாரிசுக்கு உரிய கம்பீரத்தையும், தனக்கு திக்கும் வாய் பிரச்னையினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும், தனது மக்களின் மேல் இருக்கும் பிரியத்தையும், தனது மரியாதையை விட்டு கொடுக்க தயங்கும் தயக்கத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கும் காலின் பிர்தின் நடிப்பு ராஜ கம்பீரம். அதற்க்கு இணையான  மென்மையான நடிப்பு லோக் ஆக நடித்திருக்கும் ஜெப்ரி ரஷ். தனது சட்ட திட்டங்களுக்கு பெர்ட்டியை உடன்படுத்த அவர் கை யாளும் மென்மையான ஆனால் உறுதியான நிலைப்பாட்டை அலுவலக மேலாளர்கள் அனைவரும் கடைப் பிடித்தால் நிச்சயமாக அலுவலகங்களில் உற்பத்தி கூடும். மிகவும் நுணுக்கமான பாத்திரப்படைப்பான லோக் ஆக அற்புதமான அண்டர் ப்ளே நடிப்பில் மின்னுகிறாள் ஜெப்ரி ரஷ.

திக்கு வாயால் கஷ்டப்படும் ஒரு மன்னன் அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வருகிறான் என்ற நூலிழை போன்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு, அற்புதமான திரைக்கதை வடித்த டேவிட் செயட்லருக்கும் (David Sidler) ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கும் இயக்குனர் டாம் ஹூப்பருக்கும் ஒரு ராயல் சல்யுட்.
நம்மை கதை நடக்கும் ஆயிரத்து தொள்ளயிரத்து முப்பதுகளுக்கு அழைத்து சென்ற ஒளிப்பதிவாளர் டானி கோஹேன் மற்றும் இசை அமைப்பாளர் அலேசான்டரே டெஸ்பிளாட் ஆகியோரின் உழைப்பு படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது. 

தி கிங்க்ஸ் ஸ்பீச் - ராஜ கம்பீரம். 

Thursday, October 6, 2011

ஸ்டீவ்...!!!

இவ்வுலகில் டெக்னோலஜி பற்றி எந்த மூலையில் பேச்சு எழுந்தாலும் ஸ்டீவ் ஜாப்ஸின் பெயரை உச்சரிக்காமல் அந்த பேச்சு முழுமை அடைவதில்லை. ஆப்பிள் கம்ப்யுடரின் அதிபரான ஸ்டீவின் ஆளுமை அப்படி.

கல்லூரி படிப்புக்கு ஆறு மாதத்தில் முற்றுபுள்ளி, தான் உருவாக்கிய கம்பனியில் இருந்து வெளி ஏற்றம், மோசமான வியாபாரி என பல மைனஸ்களை சுமந்தவர் தான் பிற்காலத்தில் உலகம் போற்றும் வகையில் தனது எதிர் கால கூர் பார்வை மூலமும், பயனாளிகளின் தேவைகளை விரல் நுனிகளில் வைத்திருந்து அதற்கேற்றவாறு தனது கம்பனியை முன்னேற செய்து உலகம் முழுதும் ஆப்பிள் கம்ப்யுடர்ஸ் நிறுவனத்தின் பொருட்களுக்காக ஏங்கும் வகையில், புதிய புதிய டெக்னாலஜிக்களை, புதிய புதிய அறிமுகங்கள் செய்தார்.

ஜன்டாலி என்ற சிரியா நாட்டு தகப்பனுக்கும் சுவிஸ் நாட்டை சேர்ந்த சிம்ப்சனுக்கும் மகனாக பிறந்த ஸ்டீவ் க்கு தனது பிறப்பு முதலே போராட்டம் தான். சிம்ப்சனின் பெற்றோர் ஒரு சிரியா நாட்டை சேர்ந்தவனுக்கு தனது மகளை மணம் முடிக்க விருப்பம் இல்லாததால், அவன் மூலமாக பிறந்த குழந்தையான ஸ்டீவ் ஜாப்சை தத்து கொடுத்து விட, கலிபோர்னியா மாகணத்தை சேர்ந்த ஒரு மத்திய தர குடும்பமான பால் மற்றும் கிளாரா ஜாப்ஸ் ஸ்டீவை வளர்த்து வந்தார்கள்.

மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் அதிபர் மார்க் சுக்கர்புர்க் போல இவரும் எந்த கல்லூரியிலும் பட்டம் வாங்கியவரல்ல. அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் உள்ள ரீட்ஸ் கல்லூரியில் ஆறு மாதங்கள் சேர்ந்து பயின்ற அவர், தனது மத்திய தர பெற்றோருக்கு தனது கல்லூரி செலவு மிகப்பெரும் பாரமாக இருப்பதை உணர்ந்து கல்லூரி செல்வதை நிறுத்திக் கொண்டார்.

தனது நண்பர்களின் வீட்டின் தரையில் படுத்துக் கொண்ட அவர், கோக் பாட்டில்கள் சேகரித்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது சாப்பாடு செலவுக்கு வைத்து கொண்டார். அது தவிர , ஹரே ராத ஹரே கிருஷ்ணா கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தையே உணவாக உட்கொண்டு காலத்தை ஓட்டினார். அந்த சமயத்தில் காலிக்ராபி என்ற கை எழுத்து பற்றிய படிப்பை படிக்கையில் தான் மாக் கம்ப்யூட்டர் பற்றிய எண்ணம் அவர் மனதில் உதயமானது.

ஸ்டீவ் ஜொப்ஸ், ரொனால்ட் வெயின்  மற்றும் ஸ்டீவ் வோஜ்நியாக் 


தனது நெருங்கிய நண்பனான ஸ்டீவ் வோஜ்நியாக் மற்றும் ரொனால்ட் வெயின் உடன் ஒரு கார் கராஜில் ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் துவங்கப் பட்டது. அப்போது கம்ப்யுடர் என்றாலே ஒரு மிகப்பெரிய கருவியாக இருந்தது அதனை உடைத்து சிறிய அளவில் மாகின்டோஷ் என்ற கம்ப்யுடரை வடிவமைத்து வெளி இட்டது ஆப்பிள் நிறுவனம். அது சக்கை போடு போட, பெப்சி நிறுவனத்தில் இருந்து ஜான் ஸ்கல்லி என்பவரை கொண்டு வந்து ஆப்பிள் நிறுவனத்தில் சி இ ஓ ஆக்கினார் ஸ்டீவ். அப்போது ஆப்பிள் கம்ப்யுடர்களின் நிகர லாபம் சரிய, ஆப்பிள் நிறுவனதினுள்ளே நிர்வாக அரசியலும் சேர்ந்து தன்னால் சி இ ஓ ஆக ஆக்கப்பட்ட ஜான் ஸ்கல்லி மூலமாகவே ஸ்டீவ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


பின்னர் வால்ட் டிஸ்னியின் கிராபிக்ஸ் கம்பனியை வாங்கிய ஸ்டீவ், அதற்க்கு பிக்சர் என பெயர் மாற்றம் செய்து வால்ட் டிஸ்னியின் கார்டூன் கிராபிக்ஸ் படங்களை உருவாக்கும் வகையில் அந்த கம்பனியை உருமாற்றினார்.

அதே சமயத்தில் நெக்ஸ்ட் கம்ப்யுடர்ஸ் என்ற கம்பனியை உருவாக்கி அதன் மூலம் புதியவகை கம்ப்யுடர்களை உருவாக்கினார். பிக்ஸார் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி வாங்கிக் கொள்ள, நெக்ஸ்ட் கம்ப்யுடர்சை ஆப்பிள் நிறுவனம் வங்கிக் கொள்ள, ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் சி ஈ ஓ ஆனார் ஸ்டீவ்.

அதன் பின்னர் அவரது சிந்தனையில் உருவான ஐ மாக் கம்ப்யுடர்கள், ஐ போன் ஐ பாட் அனைத்தும் அனைவரும் அறிந்த வரலாறு.


2004 ஆம் ஆண்டு அவருக்கு மிக அரிதான ஆனால் இன்னமும் மருந்து கண்டுபிடிக்கபடாத பான்க்ரியாடிக் கான்செர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
எனினும் அதன் பின்னர் தான் ஸ்டீவின் கனவுகளான ஐ போன் ஐ பாட் என ஒவ்வொன்றாக வெளி வந்தது.

அக்டோபர் ஐந்து 2011 அவரது குடும்பம் அவர் நிம்மதியாக உயிர் நீத்தார் என உலகத்துக்கு அறிவிக்க, அறிவியல் உலகத்தில் மட்டும் அல்லது பூவுலகமும் அவருக்காக வருத்தப்பட்டது. அவரது கனவு ப்ராடக்டுகள் அனைத்தும் இப்பொது பரவலாக மக்களால் உப்யோகப்படுத்தபடுவது முதல் காரணம். ஆப்பிள் எந்த ப்ராடக்டை வெளி இட்டாலும் அது எவ்வளவு விலை இருந்தாலும் முதல் நாளே வாங்கி விட ஒரு பெரும் கூட்டம் கடைகளில் முண்டி அடிக்கிறது. அடித்து ஆப்பிள் ப்ரொடக்ட் எப்போது வெளி வரும் என தவம் கிடக்கிறது கூடம். அதற்க்கு காரணம், ஆப்பிளின் ப்ராடக்டுகளில் நிச்சயம் மட்டற்ற புதுமைகள் இருக்கும் என அவர்கள் நம்புவதே.

தோல்விகளில் இருந்து மீண்டு வரும் பீனிக்ஸ் பறவையை போன்ற வாழ்கையே ஸ்டீவ் வாழ்ந்தார். அவருக்கு வாழ்க்கை ரோஜா படுக்கைகளை அமைத்து தரவில்லை. அவரது பிறப்பின் முதலே போராட்டம். தான் உருவாக்கிய ஆப்பிள் கம்ப்யுடர்சில் இருந்து அவர் வெளி ஏற்றப்பட்டபோதும் அவர் துவண்டு விடவில்லை. 'அது மீண்டும் எனது வாழ்கையை புதிதாக துவங்க ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தது ' என சொல்கிறார்.

அவர் அனைத்தையும் ஜெயம் கொண்ட பொது அவரை தாக்கியது அந்த உயிர்கொல்லி புற்றுநோய். இருந்தாலும் தனது கனவுகளை நனவாக்கி விட்டு ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது பொறுப்புகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்க ஆரம்பித்தார். அவர் உயிர் பிரிந்த நாளில் அவரது மரணத்தை அறிவிக்க எத்தனை ஐ போன்கள் அலறி இருக்கும்?

Wednesday, June 29, 2011

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் - 9

                                                                 லுசர்ன் நகரம்.
ஜூரிக் நகரிலிருந்து லுசர்ன் (LUZERN) நகருக்கு ரயிலில் ஒரு மணி நேரம் பயணப் பட வேண்டும். இந்த இடத்தில் தான் சூர்யா நடித்த 'சில்லென்று ஒரு காதல்' படத்தில் வரும் 'நியூயார்க் நகரில்' பாடம் முழுவதையும் சூட் செய்திருந்தார்கள், என்பது அந்நகரத்து வீதிகளில் நடக்கையில் புலப்பட்டது.


மற்ற நகரங்களை போல இல்லாமல், லுசேர்ன் நகரம் தனித்துவம் பெற்று மேலும் அழகாக இருந்தது. லுசர்ன் ஏரியில் கட்டப்பட்டிருந்த சாபேல்  பிரிட்ஜ்  என்ற மரத்தாலான பாலம் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என அறிந்து வாய் பிளந்தோம். அந்த மரப்பாலத்தில் ஆங்காங்கே சொருகப் பட்டிருந்த பூக்கள் அந்த அழகான பாலத்தை மேலும் அழகூட்டியது.
                                                              சாப்பல் மரப்பாலம்.
அங்கே சிறிது நேரம் சுற்றித் திரிந்துவிட்டு அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து பிளாட்ஸ் மலையின் அடிவாரம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மூன்று கேபிள் கார்களில் பயணப்பட்டால் தான் பிலாடுஸ் மலையின் உச்சியை அடைய முடியும். அதிக கனவுகளுடன் எங்கள் கேபிள் கார் பயணம் ஆரம்பம் ஆகியது. சிறிது சிறிதாக மேலே செல்ல செல்ல, லுசர்ன் நகர் கீழே செல்ல செல்ல அந்த நகரின் அழகை கண்களில் பருக இரு விழிகள் போதாது என்பது எனது எண்ணம். இரண்டாவது கேபிள் கார் நிறுத்தத்தில் உணவகங்கள் இருந்தன. பலதரப்பட்ட 'அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்' நடந்து கொண்டிருந்தது. அங்கு நாங்கள் சண்ட்விச்சுகள் வாங்கி கொண்டு உண்ண அமர, புராதன சுவிஸ் உடை அணிந்தபடி சுவிஸ் மக்களின் இசை கருவியான ஆல்ப் ஹோர்ன் (Alp horn). வாசித்தனர் பனிரெண்டு பேர். சாதாரண மௌத் ஆர்கன் வாசிக்கவே மூச்சு திணறும் எனக்கு அவ்வளவு பெரிய ஒரு கருவியை அற்புதமாக வாசிக்க எப்படி முடிகறதோ என ஆச்சர்யப் பட்டு கொண்டிருந்த நேரம் எங்களை ஏற்றி செல்ல கடைசி கேபிள் கார் வந்து சேர்ந்தது.

முதல் இரண்டு கேபிள் கார்களில் இரண்டு இரண்டு பேராக ஏற்றி சென்றது கேபிள் கார். மூன்றாவது சற்று பெரிதாய் இருக்க, இடம் கொள்ளளவு படி கிட்டத்தட்ட இருபது பேர்களை ஏற்றி சென்றது. நாங்கள் கேபிள் கார்களில் சென்று கொண்டிருக்கும் வேளையில், தரையில் குடும்பம் குடும்பமாக நடந்தபடி ட்ரெக்கிங் செய்தபடி மலை ஏறுபவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருதோம். தங்களது பெற்றோருடன் பத்து வயதே  நிரம்பிய  சிறார்களும் நடந்து சென்றது தான் ஆச்சர்யம்.
                             பிளடுஸ் மலையில் இருந்து லுசர்ன் ஏரியின் காட்சி.
நாங்கள் மவுண்ட் பிளடஸ் மலை உச்சியை அடைந்ததும் ஓடி ஓடி சென்று முகடுகளின் ஓரத்தில் நின்று பார்க்கையில், இயற்க்கை அன்னை கொட்டி கொடுத்த அழகு காட்சிகளை காண கண்கள் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைந்தோம். லுசர்ன் ஏரியும், லுசர்ன் நகரும் மவுண்ட் பிளடஸ் மலை உச்சியில் இருந்து பார்க்கையில் கொள்ளை அழகு.  அங்கேயே அமர்ந்து இயற்கையை ரசிக்க சாய்மான நாற்காலிகள் பலவற்றை போட்டு வைத்துள்ளனர். அதில் சாய்ந்தபடி நீங்கள் அந்தி சாயும் வரை இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வப்போது பஞ்சு மெத்தைகள் போல நமது காலடியில் மேகங்கள் கடந்து சென்று இயற்கையை மறைக்கிறது. வெண்பனி படர்ந்து புகை மண்டலமாக ஆகி, நாம் திரைப்படங்களில் வருவது போல எதோ சொர்க்கத்தில் இருப்பதை போல உணர்கிறோம்.


அங்கு பல மணி நேரங்கள் செலவிட்டப்பின் மலையின் கீழ் இறங்க காக் ரயில் (cog rail) என்னும் உலகின் மிக மெதுவான ரயிலில் இறங்கினோம். ரயிலே படிக்கட்டு போல அமைந்திருப்பது இதன் சிறப்பு. ரயிலில் இரண்டு ஜெர்மானிய ஜோடிகள் ஜெர்மனியில் ஏசி பேசி சண்டையிட்டு கொண்டிருந்ததை பார்க்க புதுமையாக இருந்தது. அரை மணி நேரப் பயணத்துக்கு பின்னர் நாங்கள் மலையின் மற்றொரு புறம் இறங்கி இருந்தது தெரிந்தது. அருகேயே ரயில் நிலையம் இருக்க, ரயிலில் ஏறி அரைமணி நேரப் பயணத்துக்குப் பின் லுசர்ன் நகர ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து ஜுரிக் நகர ரயில் நிலையம் சேர்ந்து தாங்கும் விடுதிக்கு வந்து சேர இரவு எட்டு மணி ஆனது. அந்த ஜெர்மானிய தம்பதியினர் எதற்காக சண்டையிட்டு இருப்பார்கள் என்று யுகம் செய்தபடியே தூங்கிப் போனோம்.


தொடரும்..

Monday, June 20, 2011

திரைப்படம்: ஆரண்ய காண்டம்ஒவ்வொரு முறையும் ஒரு சிறந்த உலக திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், இது போன்ற ஒரு திரைப்படம் எப்போது நமது தமிழில் வரும் என நினைத்து ஏங்கியதுண்டு. இப்போது தமிழ் திரைப்படங்களும் உலக திரைப்படங்களின் தரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதற்கு ஆரண்ய காண்டம் ஒரு வலுவான ஆதாரம். பருத்தி வீரனில் ஆரம்பித்த முயற்சி, சுப்ரமணிய புரத்தை தொடர்ந்து, இப்போது ஆரண்ய காண்டம் என்ற ஒரு சிறந்த திரைப்படத்தில், உலக திரைப்படங்களுக்கெல்லாம் சவாலான ஒரு முயற்சி தெரிகிறது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அப்பாவின் பணத்தை செலவிட்டாலும், வணிக நோக்கோடு குப்பை படங்களை எடுத்து தள்ளாமல், ஒரு நல்ல திரைப்படத்தை தயாரித்ததற்காக எஸ் பி சரணுக்கு ஒரு பூங்கொத்து. ( தன பையன் எடுத்த திரைப்படங்களால் நஷ்டமடைந்த எஸ் பி பி தனது குருநாதர் பெயரில் கட்டிய கோதண்டபாணி ஸ்டுடியோவை விலை பேசி வருவதாக தகவல்).

இரண்டு நிழல் உலக தாதாக்களான  சிங்கம்பெருமாள் மற்றும் கஜபதி ஆகியோருக்கு பகை. கதை நடக்கும் நாளில்,  (படத்தின் கதை காலையில் ஆரம்பித்தது மாலையில் முடிந்து விடுகிறது) அதிகாலையில், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, தனது வைப்பாக வைத்திருக்கும் சுப்புவிடம் தனது தள்ளாத வயதில் சுகம் அனுபவிக்க முடியாத சிங்கம்பெருமாளுக்கு தனது இயலாமையை ஒத்துகொள்ள முடியாத கோவத்தில் இருக்க, அவரது அடியாள் பசுபதி, எதிராளி கஜேந்தரன் போதை பொருள் கடத்த போவதை மோப்பம் பிடித்து , அதனை கடத்த அனுமதி கேட்க, அதனை சிங்கம்பெருமாள் மறுக்க, 'உங்களுக்கு வயசாயடுச்சி அதனால ரிஸ்க் எடுக்க தயங்க றிங்க, நான் பாத்துக்கறேன்' என தனியாக வேலை செய்ய அனுமதி கேட்க, அதனால் கொவமுற்ற சிங்கம் பெருமாள், பசுபதியை போட்டு தள்ள தனது ஆளுகளை ஏவி விட, அதனை அறிந்து பசுபதி தப்பி விட... டாப் கியரில் கிளம்புகிறது திரைக்கதை.

இடையே வாழ்ந்து கேட்ட ஜாமீன் குடும்பத்திலிருந்து தங்களது கடனை அடைக்க சேவல் சண்டை விட்டு சம்பாதிக்க வரும் முன்னாள் ஜமீனும், அவரது மகனும்,  போதை பொருள் வைத்திருக்கும் ஆளுடன் இரவில் தங்க, அவனது போதை பொருளினால் தங்களுக்கு பணம் கிடைக்கும் என அறிந்து அதனை கடத்த, அந்த ஆள் இறந்து விட, போதை பொருள் வாங்க கஜேந்திரனின் குழு வர, அங்கே பொருளை காணமல், தனது ஆள் இறந்து கிடப்பதையும் கண்டு அதனை எடுத்து போனது நிச்சயம் சிங்கம்பெருமாளின் ஆளாக இருக்கும் என நினைத்து அவனுக்கு தொலைபேச, சிங்கம்பெருமாள் அதனை எடுத்தது பசுபதி தான் என போட்டு குடுக்க, பசுபதியை கஜேந்திரனின் ஆட்களும், சிங்கம்பெருமாளின் ஆட்களும் கொல்லதேடுவது தனிக்கதை. 

இதற்கிடையே சிங்கம் பெருமாள் சுப்பு என்கிற தனது வைப்புக்கு காவலாக 'சப்பை' என்ற பெண்தன்மை உடைய ஒருவனை துணைக்கு வைக்க, சுப்புவும் சப்பையும் காதல் கொள்ள....தட தடக்கும் திரைக்கதைக்கு ஏற்ற சுழற்றி அடிக்கும் ரத்த கிளைமாக்ஸ்.

ஓரம்போ, குவார்டர் கட்டிங் போன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய தியாகராஜா குமார ராஜா தான் இப்படத்தின் திரைக்கதை, வசனம் இயக்கத்துக்கு சொந்தக்காரர். அவரது திரைக்கதை உத்தியில், எனக்கு மிகவும் பிடித்தமான அலேஜன்றோ கோன்சாலஸ் இன்னரிட்டு, மற்றும் ஹாலிவூட் திரைக்கதை ஜாம்பவான குவென்டின் டொராண்டினோ வின் சாயல் தெரிந்தாலும், வித்தியாசமான திரைக்கதையால், ஹாலிவூட் தரத்தை எட்டி இருக்கிறார் என மார் தட்டிக் கொள்ளலாம்.

படத்தில் வரும் வசனங்களும் இயற்கையாய் அமைந்தும் அற்புதமாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் வந்து விழுகிறது. நீளமாக இல்லாமல் நறுக்கு தெறித்தாற்போல இருப்பது வசனகர்த்தாவின் வெற்றி. படத்தின் மூடுக்கு ஏற்ப இழைகிறது யுவனின் வயலினும் வினோத்தின் ஒளிப்பதிவும். யுவன் பல இடங்களில் மௌனத்தை மீட்டி இருந்தாலும், இசை கோர்வைகள் அனைத்தும் உலகத் தரத்தை எட்டிப் பிடிக்கிறது.

தமிழுக்கு புதுசான ஜாக்கி ஷேராபின் பாத்திரத்தை, தமிழில் வேறு யாரும் செய்ய முடியுமா என ஐயம் எழுகிறது. சம்பத் ராஜ்,சுப்புவாக நடித்திருக்கும் யாஸ்மின் பொன்னப்ப, சப்பையாக வரும் ரவிக்ருஷ்ண, ஜமீன், அவரது மகன், ஆண்ட்டிக்களை மடக்கும் டெக்னிக் சொல்லும் அடியாள் என பாத்திர படைப்புகள் காண கச்சிதம். நடிப்பில் கோடி கட்டி பறக்கிறார்கள்.

படத்தில் ரத்தம் அளவுக்கு அதிகமாவே தெறிக்கிறது. என்றாலும் கதைக் களனுக்கு அது அவசியமாகிறது.

நிச்சயமாக வயது வந்தோர்க்கான படம் இது. வசனங்களுக்கும்
வன்முறைக்கும்.

ஏற்கனவே அமெரிக்காவில் விருது வாங்கிய போதிலும், மேலும் பல விருதுகளை இத்திரைப்படம் குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆரண்யகாண்டம்... அறுசுவை பண்டம்.

Friday, May 6, 2011

ஒபாமா வீழ்த்திய ஒசாமா விக்கெட்..!அந்த சாந்தமான முகத்தையும் அதில் வீற்றிருக்கும் அமைதியான கண்களையும் கண்டவர்கள், அதற்க்கு பின்னே ஒரு தீவிரவாதியையும் ஒரு பயங்கரவாதியையும் கண்டிருக்கமாட்டார்கள், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் வீழும் வரை. ஒசாமா பின் லாடன். இந்த ஒரு பெயர் மட்டுமே அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இரட்டை கோபுரத்தை தகர்த்து அமெரிக்காவின் பொருளாதரத்தை நிலை குலைய வைத்ததில் இருந்து அமெரிக்கா, பல பில்லியன் கணக்கான டாலர்களை பத்து வருடங்களாக செலவழித்தது ஒசாமாவை கண்டுபிடிக்க. நட்பு நாடான பாகிஸ்தானின் துரோக நிலத்தில், பாகிஸ்தான் ராணுவ கேந்திரத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் ஐந்து வருடங்களாக வசித்து வந்ததாக ஒசாமாவின் மனைவி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஒசாமாவை அமெரிக்க கண்டு பிடித்தது எப்படி?

ஒசாமா, தனது கட்டளைகளை, போன் மூலமாகவோ, இன்டர்நெட் மூலமாகவோ அனுப்புவது இல்லை. மன்னர்கால முறைப்படி, தூதுவர்கள் மூலமாகவே தனது கட்டளைகளை தனது தளபதிகளுக்கு இடுவான். அந்த தூதுவன் ஒசாமாவின் நம்பிக்கைக்கு மிக மிக பாத்திரவானாக இருந்திருக்கவேண்டும். அவனுடைய தங்குமிடம் அவனது தளபதிகளுக்கு கூட தெரியாததாக இருந்தது. 

இரட்டை கோபுரம் இடிக்கப் பட்டபின் கைதான அல் குவைதா கைதிகளிடம் விசாரணை செய்ததில், அப்படிப்பட்ட தூதுவர்களில் ஒருவனின் பெயர், அபு அஹமத் அல் குவைடி என்றும் அவன் குவைத் நாட்டை சார்ந்தவன் என்றும் தெரியவந்தது.  பின்னர் 2004 இல் பிடிபட்ட அல் குவைதா வின் முக்கிய நபர்களில் ஒருவனான ஹசன் குல்லிடம் விசாரணை செய்ததில், அபு அஹமத் அல் குவைதாவின் மிக முக்கியமான தூதுவன் என்றும் அவன் அல் குவைதாவின் முக்கிய நபரான பாராஜ் அல் லிபி என்பவனுக்கு நெருக்கமானவன் என்றும் கூறினான்.

பின்னர் 2005  இல் பராஜ் அல் லிபியை கைது செய்தனர் அமெரிக்கர். அவன்,  அல் அஹமத் கொண்டு வந்த செய்தியின் படியே தான் புதிய கமாண்டராக பொறுபேற்றுக் கொண்டதாக கூற, அல் அஹமது நிச்சயம் ஒசாமாவுடன் தொடர்பில் இருப்பதாக நம்பியது அமெரிக்காவின் சி ஐ ஏ.

அந்த தூதுவனின் உண்மை பெயரான ஷேக் அபு அஹ்மத் என்பதை  அறிந்து கொள்வதற்கே சி ஐ ஏ வுக்கு பல ஆண்டுகள் ஆனது. அவனுக்கு நிச்சயம் ஒசாமாவின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என நம்பினர். ஒசாமா வெகு உஷாராக தனக்கு அருகே போன் கள் மற்றும் இண்டர்நெட்டை அனுமதிப்பதில்லை. எனவே வெளி தொடர்பு எல்லாம் தூதுவன் மூலமாகத்தான்.

சென்ற வருட மத்தியில், அல் குவைதாவுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவரின் போன் தொடர்பை ஒட்டு கேட்ட பொது அகமது அவருடன் பேச அவன் இருக்குமிடம் கண்டுபிடித்து அவனை அவனை அறியாமல் தொடர்ந்தது சி ஐ ஏ. 

அவனை தொடர்ந்தபோது தான் அவன் பாகிஸ்தானின் அபோட்டாபாத் என்ற இடத்தில் இருக்கும் அந்த பெரிய சுவர்களுக்குள் அடங்கிய அந்த வீட்டிற்க்கு அமெரிக்க புலனாய்வுதுறை நபர்களை அழைத்து சென்றது. முன்பே அந்த வீட்டை பற்றி சி ஐ ஏ அறிந்திருந்தாலும், ஒசாமா தனது பாதுகாவலர்களின் துப்பாக்கிகள்  புடை சூழ பதுங்கி இருப்பன் என நினைத்ததால், அமைதியான அந்த வீடு அவர்களின் சந்தேக வளையத்துள் வரவில்லை. 
                                                      ஒசாமா தங்கி இருந்த கட்டிடம்.
அந்த வீட்டில் உள்ளே வெளியே நடமாட்டமில்லை. அந்த வீட்டுக்கு போன் இல்லை இன்டர்நெட் இணைப்புகள் இல்லை. உள்ளே நுழைய இரண்டு பாதுகாப்பு அரண்கள். வெளியே பதினெட்டு அடிக்கு சுவர்கள்.  யாருக்கும் தெரியாமல் இருக்கவே அந்த வீடு கட்டப்பட்டுள்ளது என்றும் நிச்சயம் ஒசாமா அந்த வீட்டினுள் பதுங்கி இருக்க கூடும் என்றும் சி ஐ ஏ உணர்ந்து பெப்ரவரி 2011 இல் உறுதி செய்தது.

உலகின் எந்த அதிபரும் எடுக்க தயங்கும் முடிவை எடுத்தார் ஒபாமா. அந்நிய மண்ணில் எதிரியை வீழ்த்துவது. அதுவும் எதிரி அங்கே இருக்கிறான் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அவனை உள்ளே பார்த்தவர் யாரும் இல்லை. அந்த வீட்டில் தாக்குதல் நடத்தி அங்கு ஒசாமா இல்லை என்றால், தோழமை நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் பரஸ்பர நம்பிக்கை இன்மை ஏற்படும். அப்டியே தாக்குதல் நடத்தினாலும், அந்த வீடு இருக்கும் இடம் மக்கள் வாழும் அமைதியான இடம். அருகேயே ராணுவ குடியிருப்புகள், அவர்களுக்கு சேதாரமின்றி தாக்குதல் நடத்தவேண்டும். என பல சவால்கள் இருந்தாலும், துணிந்து முடிவெடுத்தார் ஒபாமா. புலனாய்வுதுறை சொல்வதை நம்பி அவர்கள் அளித்த பல திட்டங்களில், ஹெலிகாப்டரில் பறந்து சென்று இறங்கி தாக்கும் திட்டத்தை அவர் தான் தேர்ந்தெடுத்தார். நேவி சீல்ஸ் எனப்படும் கடற்படை வீரர்களில் சிறந்த வீரர்கள்( பெஸ்ட் ஒப் தி பெஸ்ட் என சொல்கிறார்கள்) ஆறு பேரை தேர்ந்தெடுத்தனர். தனது நட்பு நாடுகளான, பிரிட்டின், கனடா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கூட தெரியாமல், இந்த ஆபரேஷன் நடத்த திட்டமிடப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு தெரியாமல், அந்த நாட்டிலேயே தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு, அந்த திங்கள் கிழமையின் அதிகாலையில் ஹெலிகாப்டர்களின் மேலிருந்து குதித்த அந்த கடற்படை வீரர்கள், வெற்றிகரமாக காரியத்தை முடித்தனர். ஒசாமாவுக்கு இவர்கள் வைத்த சங்கேதப்  பெயர் ஜெரோனிமா. 

ஒசாமாவை கொல்லும்போது என்ன நடந்தது என முன்னுக்குப்பின் முரணான நிறைய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. கடைசியாக வந்த தகவலின் படி, ஒசாமா ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை. தனது மனைவியையும் தற்காப்புக்கு பிடிக்கவில்லை. ஆனால் தடுக்க நினைத்தக வெகு அருகில் இருந்து தலையில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது என சொல்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள மற்ற இரு பாதுகாபாலர்களும் சுடப்பட்டு இறந்து விட்ட நிலையில், ஒசாமாவின் மனைவியை உயிருடன் விட்டு வந்திருக்கின்றனர். ஒசமாவுடனும் அங்கிருந்த கம்புடேர்களில் இருந்த ஹார்ட் டிஸ்க் குகளும்  எடுத்தபடி பறந்து விட்டனர்.

பின்னர் இஸ்லாமிய முறைகள் செய்துவிட்டு ஒசாமாவை கடலில் புதைத்துள்ளனர்.

அரபு நாட்டின் செல்வந்தருக்கு மகனாக பிறந்த ஒசாமாவுக்கு இந்த அளவுக்கு தீவிரவாத சிந்தனைகளை விதைத்தது யார்? எங்கிருந்து வந்தது உயிர்களை கொல்லும்   எண்ணம்.? தான் நம்பிக்கை துரோகத்தால் சாகடிக்கப் படுவோம் என முன்பே ஒசாமா சொல்லி இருக்கிறான். தனக்கு பின்னே தனது பிள்ளைகள் அல் குவைதா இயக்கத்தில் சேர்ந்து விட கூடாது என்று தனது விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறான். ஒவ்வொரு குற்றவாளிக்கு பின்னும் அவனுக்கான நியாயங்கள் இருக்கும் அமெரிக்காவை வீழ்த்தவேண்டும் என்ற ஒசாமாவின் வெறிக்கு பின்னே ஒரு ஞாயம் இருக்கலாம். அது வெளி உலகத்துக்கு தெரியாமல் இப்போது அவனுடன் கடலில் மூழ்கிப் போயிற்று. எப்படி இருந்தாலும், வாளெடுத்தவன் வாளால் சாவான் என்ற பழம் சொல் மொழி மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. உயிர்களை கொல்லுதல் எந்த நியாயங்களையும் முடக்கிப் போடும். அது ஒசாமாவாக இருந்தாலும் சரி, இல்லாத அணு ஆயுதங்களுக்காக இராக்குக்கு படையெடுத்து சதாமை கொன்று அந்த நாட்டை சின்னாபின்னாபடுத்திய அமெரிக்காவானாலும் சரி.

பாகிஸ்தானை தனது சந்தேக வளையத்தில் வைத்துள்ளது அமெரிக்கா. அதனாலேயே பாகிஸ்தானுக்கு கூட தெரியாமல் அதன் மத்தியில் அமைந்துள்ள கட்டிடத்தில் கால் பதித்து ஒசாமாவை அலேக்காக கொன்று தூக்கி உள்ளது. சரிந்திருந்த தனது செல்வாக்கை இதன் மூலம் தூக்கி நிறுத்தி உள்ளார் ஒபாமா என செய்திகள் தெரிவிக்கின்றன. ஒசாமாவின் இறப்பை அமெரிக்கர்கள் கொண்டாடுவதை பார்த்தல், நரகாசுரனின் மறைவை இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளிதான் நினைவுக்கு வருகிறது.

ஒசாமாவின் மறைவுக்கு பழிவாங்கப் போவதாக சூளுரைத்திருக்கிறது அல் குவைதா. எல்லா மதத்தைப் போலவும் அன்பே இஸ்லாமும் போதிக்கிறது. இந்த தீவிரவாத செயல்களால் அப்பாவி இஸ்லாமிய சகோதரர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
 என்னவானாலும் பாதிக்கப் படப் போவதும் பழி வாங்கப்படபோவதும்... அப்பாவி பொதுமக்கள் தான்.

Saturday, April 16, 2011

தமிழக சட்டசபை தேர்தல் 2011.அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது சட்டசபை தேர்தல். வரலாறு காணாது தேர்தல் குழுவினரின் கெடுபிடிகளால் தங்களது தகிடுதத்தங்களை அரங்கேற்ற கட்சிகள் திண்டாடியதும், எழுபத்தி ஏழு விழுக்காடுகள் வோட்டுகள் பதிவானதும் இதுவே முதல் முறை.வோட்டுக்கு பணம் என்று வோட்டு போடவே லஞ்சம் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது தி மு க. இதனை மற்ற கட்சிகளும் பின் பற்ற துவங்கவே, தனது சாட்டையை சுழற்றியது தேர்தல் கமிஷன். விளைவு கொடிகளும் லட்சங்களும் பிடிபட ஆரம்பித்தன.இதற்க்கு நேர்மையான மாவட்ட கலெக்டர்கள் பலரும் காரணமாக வாக்காளருக்கு லஞ்சம் கொடுக்க பயன் படும் பணம் பிடிபட ஆரம்பித்தன. இவ்வளவு நேர்மையாகவும் அமைதியாகவும், திராவிட கழகங்களின் வருகைக்கு பிறகு நடந்ததற்கான சரித்திர கூறுகள் இல்லை.

திமுகாவின் தேர்தல் அறிக்கையில் ஆரம்பித்த காமெடி தேர்தல் நாள் வரை குறையவில்லை. வோட்டுக்கு பணம் லஞ்சம் தருவது போல, மிக்சி கிரைண்டர் லாப்டாப் என இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டிருந்தன தேர்தல் அறிக்கையில். இலவசங்களும் ஒரு வகை லஞ்சமே என என் யாரும் உணர்வதில்லை. உழைக்காமல் வருவது எதுவுமே லஞ்சம் மட்டுமே என்பதை எப்போது தமிழ் மக்கள் உணர்கிறார்களோ அதுவரை நமது தமிழகம் முன்னேற்றப் பாதையில் அடிபோடுவது சந்தேகமே. திமுகாவை தொடர்ந்து அதிமுகா வும் இலவசங்களை அள்ளி தெளிக்க ஆரம்பித்தது.கவனிக்க நமது தமிழக அரசுக்கு 80000 கோடி கடன் இன்னும் நிலுவையில் உள்ளது. எவன் வீட்டுப் பணத்தை இவர்கள் இலவசமாக அள்ளி கொடுக்கிறார்கள். மக்களின் பணம் தானே. கல்லூரி வரையிலான இலவச கல்வி, இலவச மருத்துவம் கொடுங்கள். அதனை அரசின் பெயரால் கொடுங்கள். எந்த ஒரு தனிமனிதனின் பெயரும் அந்த திட்டத்துக்கு இருக்க கூடாது. வேலை வைப்பு கொடுங்கள் அப்போது தானே தமிழகம் முன்னேறும்.

அதிமுகவுடன் விஜயகாந்தின் தே மூ தீ கா மற்றும் மதிமுக இணைந்தால், தி மு க வெற்றி பெற சான்சே இல்லை என அனைவரும் ஆரூடம் சொன்ன பொது அதனை தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ளும் கதையாய், மன்னார்குடி குடும்பம் இடையில் புகுந்து  தனிச்சையாக நூற்றி அறுபது தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம் அந்த ஆரூடத்தை பாக்க பார்த்தது அதிமுக. துன்ப  நாட்களில் துணை இருந்த நண்பன் மதிமுகவை வெளியேற்றிவிட்டு புதிய நண்பனாக விஜயகாந்தை அங்கீகரித்து தனக்கு நூற்றி அறுபது சீட்டுகளை வைத்துக் கொண்டது, தன்னை தேர்தலுக்கு பின் மைனாரிட்டி கட்சி என எதிர்கட்சிகள் சொல்லி விட கூடாது என்ற கவுரவ பிரச்சனையை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

தனது கட்சியின் வேட்பாளரின் பெயரை தவறாக சொல்ல அதனை திருத்த வந்த வேட்பாளரின் தலையில் அடித்த விஜயகாந்த், அதனை எங்கேயோ நின்று படம் பிடித்து அதற்க்கு சவுண்ட் எபெக்ட் குடுத்து திரும்ப திரும்ப ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் டிவி, அவர் அடிக்கவில்லை என தே மு தி க வேட்பாளர் சொல்ல, அப்பா அடித்தல் என்ன தப்பு என விஜயகாந்த் கேட்க, தேர்தல் காமெடிகள் அளவில் அடங்கா.

தனிப்பட்ட பிரச்சனையை ஊத்தி பெருசாக்க வடிவேலு அரசியலில் இறங்கி தனிப்பட வசை பாடிய காமெடி சிரிப்பை வரவழைக்கவில்லை. அவர் மேல் வெறுப்பை தான் சம்பாதித்து கொடுத்தது. இனிமேல் அவர் திரையில் செய்யம் காமெடிகள் மக்கள் மத்தியில் எடுபடுமா என தெரியவில்லை.

இவர்கள் செய்யும் காமெடிக்கு தான் சளைத்தவனில்லை என காங்கிரசின் தங்கபாலு தன் மனைவியை வேட்பாளராகி, சரியான படிவங்கள் தராமல் தானே வேட்பாளரானது பெரும் காமெடி.தேர்தல் முடிந்ததும் எஸ் வீ சேகர், கராத்தே த்யாகராஜன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை இவர் நீக்கியது உச்சகட்ட காமெடி.

எலெக்ஷன் அன்று, ரஜினியை சுற்றி மீடியா மக்கள் சூழ்துள்ள நேரம் அவர் யாருக்கு ஒட்டு போட்டார் என்பதை துல்லியமாக காண்பித்தது தெலுகு டி வீ  சானல் ஒன்று. அதன் மூலம் அவர் ஆளுங்கட்சிக்கு வில்லனாக மாறிப் போனாலும், வரிசையில் நின்று ஓட்டு போடாமல் நேராக ஒட்டு சாவடிக்குள் நுழைய முன்ற த்ரிஷாவை அங்கு வரிசையில் நின்ற ஒருவர் ஆட்சேபிக்க இவர் ஆங்கிலத்தில் திட்ட, நிஜ வில்லியாக மாறிப்போனார் த்ரிஷா. தன்மையாக சொல்லி இருக்க வேண்டும் அவர் கூச்சல் போட்டார் அதனால் நானும் சத்தம் போட்டேன் என்ற விளக்கம் வேறு. அவ்வளவு மனிதர்கள் வரிசையில் நிற்கையில் தான் மட்டும் வரிசை தப்பி போக முயற்சித்ததே தவறு என்பதை அவர் கடைசி வரை உணரவே இல்லை. அவரை விட பெரிய நிலையில் உள்ள, சிவகுமார் குடும்பம், அஜித்குமார் இவர்களை பார்த்து இவர் பாடம் கற்று கொள்ளலாமே. 

தனது சுயமரியாதையை விட்டு விட்டு போட்டி இட விரும்பாமல் ஒதுங்கி கொண்ட வை கோவும், தன கட்சி போட்டி இடாமல், காங்கிரசை கருவறுப்போம் என முழங்கிய சீமானும் தான் கௌரவ நடிகர்கள்.

இப்படி ஒரு காமெடி திரைப்படமாக மாறிவிட்ட 2011  சட்டசபை தேர்தலின் ஹீரோ, நேர்மையாக வேலை பார்த்த எலெக்ஷன் கமிஷனும், நேர்மையான கலெக்டர்களும் தான்.

படத்தின் ரிசல்ட் தெரிய நாம் மே 13 வரை பொறுத்திருக்க வேண்டும். 

வாழ்க ஜன நாயகம்.

தேசபக்தியும் உலகக் கோப்பையும்...!மிக மிகத் தாமதமான பதிவு தான். என்ன செய்ய. வேலை பளுவும் சுகவீனமும் என்னை இணையத்தின் எழுத்திலிருந்து சிறிது ஓய்வெடுக்கச் செத்துவிட்டது. (ஐயோ திரும்பவும் வந்துவிட்டானே என பலரது அலறல் எனக்கு கேட்கிறது). 

உலகக் கிண்ண அலசல்:
சுமாரான துவக்கமாய் இந்தியா துவங்கினாலும், நாளுக்கு நாள் அதன் எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. இந்த 2011 உலகக் கோப்பையில் எந்த ஒரு பந்தயத்தையும் இந்தியா எளிதாக வென்று விட வில்லை.கடைசி வரை நம்மை நகம் கடிக்க வைத்த பின்பே வெற்றி இல்லக்கினை தொட்டனர். முன்பு உள்ள இந்திய குழு எல்லாம் இந்த நிலைமையில் நிச்சயமாக கோப்பையை வேன்றிருக்காது. சிறிது சிக்கல் வந்த உடனேயே நம்பிக்கை இழந்து பொல பொல வென விக்கெட்டுகள் சரிந்து மிக விரைவில் தோல்வியை சந்தித்து விடுவோம். ஆனால் இந்த உலகக் கோப்பை இந்திய அணி அத்தகைய அணி அல்ல. சச்சினுக்காக கோப்பை வெல்வோம் என பந்தயம் ஆரம்பிக்கும் முன்பு சூழுரைத்தாலும், இந்திய அணி இப்போது சச்சினை மட்டுமே சார்ந்திருக்க கூடிய ஒரு அணியாக இல்லாமல், ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அழுத்தமாக பதிய வைத்தார்கள். தங்களது தனித்தன்மையை காட்டுவதற்காக ஆடாமல், அணியின் வெற்றிக்காக ஆடியது ஒன்றே நமது தேசத்திற்கு உலககோப்பையை பெற்று தந்தது.

இந்த வெற்றிக் குழுவை ஒருங்கிணைத்து சென்ற மிஸ்டர் கூல் கேப்டன் டோனி இந்த வெற்றிக்கு ஒரு முழு முதல் காரணம் என சொல்லலாம். வெற்றியை இழந்து விடுவோம் என்ற நிலை வந்தால் மற்ற அணித்தலைவர்களின் டென்ஷனை பார்க்கும் வேளையில் தோனி எவ்வளவு சிக்கலான நிலைமைக்கு அணி சென்றாலும் ஒரு யோகியை போன்றதொரு அமைதியை அவரிடம் காண முடிந்தது. அனைத்திற்கும் மேல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அடுத்தடுத்து விக்கட்டுகள் சரிந்ததும் யுவராஜ் சிங்கிற்கு முன்னாள் தான் களத்தில் இறங்கி ஒரு தலைவனுக்கு உரிய பொறுப்புணர்ச்சியுடன் ஆடி வெற்றி ரன்னை முத்தாய்ப்பாக சிக்சருக்கு அனுப்பி, உலககோப்பை கனவுடன் இருந்த நூற்றி இருபத்து சொச்சம் இந்தியர்களின் கனவை தீர்த்துவைத்தார். வெற்றியில் ஆனந்த கூத்தாடிய தன குழுவினரின் மத்தியில் அவர்களை பார்த்து அமைத்தியாக சிரித்தபடி ரசித்து கொண்டிருந்துவிட்டு சச்சினை கோப்பையை தூக்கி முன் செல்லவிட்டு தான் பின்னால் நடந்து சென்று தனது பெருந்தன்மையை நிலை நாட்டினார்.

சச்சின் இருபத்தொரு ஆண்டுகளாக காண்பித்து வரும் கன்சிஸ்டன்சியை இந்த உலக கோப்பையிலும் தக்கவைத்துக் கொண்டார். தனது ஐம்பதாவது ஒரு நாள் செஞ்சுரியை இந்த உலகக் கோப்பையில் அடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்ட வில்லை என்றாலும், இவர் அளவுக்கு தொடர்ந்து இருபத்தொரு ஆண்டுகள் கிரிக்கட் ஆடுகளத்தில் இப்படி கன்சிஸ்டன்சியை உலக அரங்கில் வேறு யாரும் கொண்டதில்லை. அவரது கிரிக்கட் வரலாற்றில் உலக கோப்பையும் கைப்பற்றி முத்தமிட்டுவிட்டார். இன்னமும் இவர் இன்னொரு செஞ்சுரியை ஒரு நாள் ஆட்டத்தில் அடித்து அந்த ரெக்கார்டையும் தக்கவைத்துக் கொள்வார். உலககோப்பை வெற்றி ஊர்வலத்தை சச்சினை தூக்கி கொண்டு வளம் வந்த இருவரில் ஒருவரான, விராட் கொஹ்லி இடம், சச்சினை தூக்கி வந்தது உங்களுக்கு வலிக்கவில்லையா என ரவி சாஸ்த்ரி வினவ...'இருபத்தொரு வருடங்களாக இந்த தேசத்தை தனது தொழில் சுமந்த சச்சினை நாங்கள் இருபது நிமிடங்கள் தானே தூக்கி வலம் வந்தோம்' என டைமிங்காக அடித்த பன்ச் உலக கோப்பை ஆவணத்தின் அழியா பதிவாக நிலைத்து நிற்கும்.

இங்கு அமெரிக்காவில் எங்கள் அலுவாலகத்தில் ப்ரொஜெக்டர் வைத்து உலக கோப்பை போட்டிகளை காண வழி செய்த என் அலுவலகத்துக்கு நன்றி. எங்கள் அலுவலகத்தின் இயக்குனர்களில் ஒருவர் ஒரு பாகிஸ்தானி. பாகிஸ்தானை இந்தியா வென்ற அன்று நடந்த மீடிங்கில் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டதை சொல்லி அவரை வம்புக்கு இழுத்த போது அவர் சொன்ன பன்ச் வசனம்,' நான் ஒரு சிரித்த முகத்தை விட ஐநூறு சிரித்த முகங்களை காணவே ஆசை படுகிறேன். எனவே நானும் இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்'; ( மீசையில் மண் ). இங்கு அமெரிக்காவில் ஆங்காங்கே இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர். பல பார்டிகள் நடந்தேறின.தொலைபேசி வாழ்த்துக்கள் குவிந்தன. இந்தியாவின் தேசபக்தியை உலகெங்கும் பறைசாற்ற கிரிக்கெட் என்ற விளையாட்டு பெரும் பங்கை ஆற்றி உள்ளது .

உலகம் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Friday, March 4, 2011

நகைச்சுவைக் குற்றங்கள்...

 
 
உலகத்தில் பல்வகை குற்றவாளிகள் இருக்கிறார்கள். கொடூரமானவர்கள், உணர்ச்சிவசப் பட்ட நிலையில் குற்றம் செய்பவர்கள், வஞ்சம் தீர்ப்பவர்கள் என. சில குற்றவாளிகள், தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து மாட்டிக் கொள்வார்கள். சிலசமயம் இவர்களின் குற்றங்கள் நகைப்புக்கு உரியதாகப் போய்விடுகிறது. அவ்வகை குற்றங்களை நாம் நகைச்சுவைக் குற்றங்களாக பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் நடந்த இரண்டு நகைச்சுவை குற்றங்களை இப்போது பார்க்கலாம்.
1. ஆம்புலன்ஸ் திருட்டு.
அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தின் லாரன்ஸ் நகரில், ஜாகப் என்பவன் ஒரு வார நாள் இறுதியில் தனது உத்தியோக உயர்வை முன்னிட்டு ஒரு பாரில் சகட்டு மேனிக்கு குடித்திருக்கிறான்.நள்ளிரவை தாண்டிய பொழுதில், பார் மூடும் நேரம் வெளிவந்து பார்க்க டாக்சிகள் எதுவும் கிடைக்காமல் வீட்டுக்கு எப்படி திரும்ப என யோசித்தவன், அருகே விளக்குடன் ஒரு எமர்ஜென்சிக்காக  நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வான் டிரைவரை மண்டையில் தான் குடித்த பீர் பாட்டிலால் அடித்து,  ஆம்புலன்சை கடத்திக்கொண்டு, குடி போதையிலேயே வீடு சென்ற ஜாகப், ஆம்புலன்ஸ் விளக்குகள் சுழலவிட்டவாறே, வீடு சென்று உறங்கிப் போனான். சிறிது நேரத்தில் வந்து போலீஸ் கை விலங்கிட்டபோது போதை தெளிந்தவன் ,  தன் வீட்டின் முன்னால் ஆம்புலன்ஸ் எதற்கு நிற்கிறது என போலீசிடம் கேட்டுள்ளான். அவனது உத்தியோகம் பறிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் திருடியது, குடிபோதையில் வண்டி ஒட்டியது மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியது என குற்றங்கள் அவன் மேல் பதிவு செய்யப்பட்டு அய்யா இப்போது சிறையில்.

2. பிஞ்சு மனங்களில் நஞ்சு.
ப்ளோரிடா மாகணத்தில் உள்ள ஒரு நகரில், தனது பிள்ளைகளை பள்ளியில் விடப்போன தாய் சூசனுக்கு மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அணிந்து வந்த குறைந்த ஆடைகள்  கண்டு கடுப்பு. பள்ளியில் நடந்த பெற்றோர் பிள்ளைகள் மீட்டிங்கில், பள்ளியின் முதல்வரிடம் இதை பற்றி சொல்லி, பிள்ளைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் அப்படி குறைவான உடையிலும் லோ நெக் ப்ளவ்ஸ்களும் அணிந்து வந்தால் பிஞ்சுகளின் மனங்களில் நஞ்சு விதைக்க ஆளாக நேரும் என்பதால் அத்தகைய உடைகளை தடை செய்ய வேண்டும் என கேட்டார். முதல்வரோ, கூலாக, இது ப்ளோரிடா மாகாணம். இங்கு சூடு மிக அதிகம் எனவே அவர்களுக்கு வசதியான ஆடைகளை அணிகிறார்கள். அதை எல்லாம் தடை செய்ய முடியாது என கூற. மேலும் மேலும் வாக்குவாதம் முற்ற, 'ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்தால் மட்டுமே தடை கோர முடியும் என சொல்ல' ஆத்திரம் அடைந்த அந்த தாய், 'அப்படியானால் இப்படி வந்தால் மட்டும் ஆபாசம் என கூறுவீர்களா என சட்டென தனது ப்ளவ்ஸ் உள்ளே இருந்து, வெளியே எடுத்தது போட, முதல்வர் (உள்ளே இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் (!) ) கோவம் அடைந்தார். மேலும் அவரை கொவமஅடைய வைக்க, இரண்டையும்(எதை என்பதை சொல்ல தேவை இல்லை ) சேர்த்து வைத்து ... இப்படி இருந்தால் ஆபாசம் என சொல்வீர்களா ' என கத்த, இப்போது அந்த தாய் இண்டீஜெண்டாக பிகேவ் செய்ததற்காக அபராதம் விதிக்கப் பட்டு மூன்று மாதம் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

Monday, February 21, 2011

உலக சினிமா: ஆந்த்ரே நோஸ் (Entre Nos) (இஸ்பான்யோல்)


 திரைப்படங்களில் பல உண்மைகள் பேசுகின்றன. கடந்து போன கதைகளை சொல்லுகின்றன. நம்பிக்கைகளை விதைக்கின்றன. வாழ்வின் விளிம்பிற்கு சென்ற மனிதர்கள் வெற்றி பெற்ற கதைகளை சில படங்கள் உண்மைக்கு அருகே இருந்து காட்டுகின்றன. அவ்வகை திரைப்படங்களாக 'The pursuit of happyness'  போன்ற திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். அந்த திரைப் படங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு, நமது வாழ்கை அவர்களோடு மேலாக இருப்பதை உணர்ந்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களின் தன்னம்பிக்கை கண்டு நமக்கும் நமது மேல் நம்பிக்கை பிறக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கை பெண்மணியின் கதையைத்தான் ஆந்த்ரே நோஸ் திரைப்படம் பேசுகிறது.

கொலம்பியாவின் பகோடா என்ற ஊரிலிருந்து நியூ யார்க் நகருக்கு வேலை தேடி வருகிறது ஒரு குடும்பம். கணவன், மரியானா என்ற மனைவி. அவர்களின் குழந்தைகள் காபி என்ற காப்ரியல் மற்றும் அண்ட்ரியா என்ற சிறுமி. வந்த இடத்தில் கணவன் வேறு ஒரு துணையை தேடிக் கொண்டு, தனக்கு மியாமி நகரில் வேலை கிடைத்திருப்பதாகவும், தான் அங்கு சென்று செட்டில் ஆனா பின்னர் வந்து குடும்பத்தை அழைத்து செல்வதாகவும் கூறி செல்கிறான். நம்பிக்கையுடன் அவனை வழி அனுப்பி வைக்கிறது. அவனது நண்பனின் மூலமாக, மரியானாவுக்கு அவள் கணவன் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை சொல்லப்பட அவள் உடைந்து போகிறாள். 
நமது ஊர் பப்ஸ் போல இருக்கும் எஸ்பனடா என்னும் பலகாரம் செய்து தெருவில் இறங்கி விற்கிறாள்.அதில் வருமானம் வரவில்லை.


ஒருமுறை கோக் டின்களை சேகரிக்கும் ஒருவனை கண்டு அவன் பின்னாலேயே தன குழந்தைகளுடன் தொடரும் மரியன், ரீசைக்ளிங் செய்யப்படும் ஒரு காலி கோக் டின்னுக்கு ஐந்து சென்ட்கள் கிடைக்கும் என அறிந்து கொண்டு, மறுநாள், ஒரு கடையில் இருந்து ஸ்ட்ராலரை திருடும் அந்த குடும்பம், தினமும் காலி கோக் டின்களை குப்பைகளிலிருந்து பொறுக்க ஆரம்பிக்கிறது. அதே தினம், அவளது கணவன் மூன்று மாதமாக வாடகை தராததால், அந்த சைனீஸ் வீட்டுக்காரன், அவர்களை வீட்டில் இருந்து துரத்தி விட, அந்த குடும்பம் பார்க்குகளிலும், ரயில் மேம்பாலங்களிலும் தங்குகிறது.  யாரோ சொன்ன ஒரு முகவரியை வைத்துகொண்டு, நியூ யார்க் நகரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாரத்துக்கு 150$  வாடகைக்கும் தங்குகிறார்கள். அப்போது தான் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள் மரியான். இருக்கிற கஷ்டம் போதாமல் இது வேறயா என விக்கித்து நிற்கும் வேளையில் அந்த இந்திய பெண் அவள் கருவை கலைக்க உதவுகிறாள்.  நமது ஊரு கிழங்கோ அல்லது மருந்தோ.. எதோ ஒன்றை கஷாயமாக்கி தர, அதுவாகவே கரு கலைந்து விடும் என சொல்லி அவளை பார்த்துக் கொள்கிறாள்.

கருகலைப்பு தனது மதத்துக்கு விரோதம் என தெரிந்தும் ஆலயம் சென்று கடவுளிடம் மன்னிப்பு வேண்டி அழுகிறாள். கரு கலைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பம் குப்பையில் கிடக்கும் காலி கோக் டின்களை பொறுக்கி முன்னேறுகிறது. அவளது ஒவ்வொரு கஷ்டத்திலும் அவளுக்கு துணையாக அவளது மகன் காப்ரியல் இருக்கிறான். எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதமாதிரி காட்டிக் கொள்ளும் அவன், தன தாய் கஷ்டப்படும் போதெல்லாம், தனியனாக கோக் டின்கள் பொறுக்கி குடும்பம் காக்கிறான். படத்தின் முடிவில், இந்தப் படம் ஒரு உண்மை கதை என்றும், தற்போது மரியன், காப்ரியல் மற்றும் ஆண்ட்ரியா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கார்டு போடும்போது நம் மேனி சிலிர்ப்பது உண்மை.

மரியனாக நடித்திருக்கும் பாவ்லா மண்டோசா தான் படத்தின் பிரதான பாத்திரம். தனது இயலாமையும், தன்னம்பிக்கையும் ஒரு சேர  தன முகத்தில் படம் நெடுக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தை க்ளோரியா லா மார்த்தே என்ற மற்றொரு பெண்ணோடு சேர்ந்து எழுதி இயக்கி இருப்பவரும் இவரே.

படத்தில் காப்ரியல்ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன் தான் இந்த படத்தின் கதாநாயகன். எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாதது போல முகத்தில் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு, தன அம்மாவின் சிரமம் புரிந்து அவளது கஷ்டங்களில் தோள் கொடுத்து தன்னால் இயன்ற அனைத்து செல்லும் ஒரு கதாபாத்திரம், அனைத்து அன்னைகளுக்கும் ஒரு உதாரண மகனாக சிறந்த நடிப்பு.

இந்த திரைப்படம் உலகெங்கும் பலவித விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.
                                             இந்த திரைப்படம் வாங்கிய விருதுகள்.

படம் மெதுவாக நகர்ந்தாலும், ஒரு அற்புதமான நெகிழ்வையும், எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டாலும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இந்த உலகத்தில் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை இயக்கத்துக்கு சொந்தமான பெண்கள் க்ளோரியாவுக்கும் பாவ்லா மண்டோசாவுக்கும் ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

இந்த படத்தை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் பாருங்கள்.

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி கீழே...Saturday, February 19, 2011

இது எங்கள் நாடு..!

        புரட்சியாளர்களின் மத்தியில் உரையாடும்  வாயேல் கோநிம்.
 
எகிப்தில் ஆரம்பித்த புரட்சித் தீ.. இன்று, பக்ரைன்,இரான், லிபியா என கொழுந்து விட்டு எரிகிறது.காலம் காலமாக சர்வாதிகாரத்தனமாக, ஒருவரே ஆண்டு வரும் பழக்கங்களுக்கு முடிவு கட்டி மக்கள் ஜன நாயகத்தை விதைக்க விதை விழுந்திருக்கிறது.. எகிப்தில்.  

யாரும் இனி ஐ டி வல்லுனர்களுக்கு சமுதாய அக்கறை கிடையாது என குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில் இந்த விதை விழ காரணமாக இருந்தவர் ஒரு ஐ டி கம்பனியின் மார்கெடிங் மேனேஜர். ஆம் உலகப்புகழ் பெற்ற கூகிளின் மார்கெடிங் மானஜராக பணியாற்றும் வாயேல் கோநிம் (Wael Ghonim) என்ற முப்பது வயது இளைஞர் தான் முப்பது வருடங்களாக எகிப்தின் தனி பெரும் அதிபராக கோலோச்சிக் கொண்டிருந்த ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கக் காரணமாக இருந்தவர்.


                                        சுவிஸ்சில் தனது மனைவியுடன் முபாரக்.

பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் அடித்து துவைத்து கொன்று போடுவது, எகிப்திய காவலர்களின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. லஞ்சமும் விலைவாசி உயர்வும் தலைவிரித்து ஆடிய எகிப்த்தில் முப்பது வருடமாக ஆண்ட முபாரக்குக்கு எண்ணமுடியாத அளவில் கோடிகளில் பணம் புரண்டது. எதிர்த்து கேள்வி கேட்டவர்கள், சிறையில் அடைக்கப் பட்டனர். விசாரணை என்ற பெயரில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப் பட்டனர்.காலேத் செத் என்ற இருபத்தேழு வயது இளைஞனை எகிப்திய காவல் துறை அடித்தே கொன்ற போது, முதல் முதலில் 'நாம் அனைவருமே காலேத் சேத' என்ற முகப்புத்தக பக்கத்தை,'ஒரு சுதந்திர வீரன்' என்ற பெயரில் ஜனவரி 2011 இல்ஆரம்பித்தார் வாயேல்.  அதுவே, ஜனவரி 25  அன்று மக்கள் குழுமி, அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்ப விதையாக விளங்கியது.

ட்விட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் செய்திகள் பரிமாறப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் காவலர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு ஆஸ்பத்ரியில் மாண்டு போக, காவலர்களின் துப்பாக்கி சூட்டிலும் தடியடியிலும் முன்னூறு மக்கள் இறந்து போனார்கள். இரண்டாயிரம் பேருக்கு காயம். இதனை தொடர்ந்து ஜனவரி 27  முதல், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வித்தாக இருந்த வாயலை காணவில்லை. கடைசியாக ஜனவரி 27 அன்று அவர் எழுதிய ட்விட்டர் 'எகிப்துக்காக வேண்டிக்  கொள்ளுங்கள். நாளை அரசாங்கம், மக்களுக்கு எதிராக போர் குற்றம் புரிய இருக்கிறது. நாங்கள் நாட்டுக்காக மரணிக்க தயாராகவே இருக்கிறோம்'.

வாயலை காணாமல், அவருடைய குடும்பமும், நண்பர்களும், கூகுளின் சக ஊழியர்களும் அவரை காணமல் தவித்து விட்டனர். அவரையும் காவலர்கள் கொன்று போட்டிருப்பார்களோ என அச்சத்துடன் காத்திருந்தனர்.

பிப்ரவரி 7 இல் அவர் வெளிவந்தபோது தான் அரசாங்கம் அவரை காவலில் தடுத்து வைத்திருந்தது உலகத்துக்கு தெரிந்தது. அவர் வெளி வந்ததும் அவர் ஒரு ஹீரோவாக போற்றப் பட்டார். 'இது எகிப்திய இளைஞர்களின் சுதந்திரப் போராட்டம். நான் இதன் ஹீரோ அல்ல' என 'ட்ரீம் 2 ' என்ற தொலைகாட்சியில் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.


வாயல் கோநிம் கெய்ரோ பல்கலை கழகத்தில் கணினி துறையில் பொறியியல் பட்டமும், கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலை கழகத்தில் எம் பீ ஏ வும் படித்தவர். தற்சமயம் துபாயில் வசித்து வருகிறார். தனது ரோல் மாடல் என அவர் கருதுவது நம்ம காந்தி தாத்தாவையும், அமெரிக்காவின் மார்டின் லூதர் கிங்கையும் தான்.

மக்கள் புரட்சி வெடிக்க ஆரம்பித்த பதினெட்டு நாட்கள் கழித்து முபாரக் பதவி விலகி இருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக அசம்பாவிதங்கள் நடந்தாலும், அகிம்சைக்கு இன்னமும் சக்தி இருப்பதை இந்த புரட்சி நிரூபித்திருக்கிறது.

இப்போது எகிப்தை தொடர்ந்து, மக்களின் ஜனநாயகம் இல்லாத நாடுகளில் புரட்சி வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது வரவேற்கத்தகுந்த ஒரு விஷயம்.
தமிழர்களும், தமிழ் இயக்கங்களும் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையிலும் இது எப்போதோ நடந்திருக்க வேண்டியது.. ஹூம்..!

Sunday, February 13, 2011

ஆதலினால்...(சில காதல் கவிதைகள்...)

விழிகளின் குழந்தைகள்..!
உன்
விழிகளை
நோக்கும் நொடி எல்லாம்..
என் கனவுக் கருப்பைகள்,
ஆயிரம் கவிதைக் குழந்தைகளை
பிரசவிக்கையில்...
பத்து மாதங்கள் எதற்கு...?

புன்னகைச் சாலை.


இந்த சாலையில் மட்டும்
நடந்து செல்லாதீர்...
அவளது புன்னகைகளை ...
இந்த சாலையெங்கும்
பதியமிட்டிருக்கிறாள்..!

உனக்கானது..!

'எனக்கானதேல்லாம்..
உனக்கானது...'
என்று சொன்ன நீ...
என்னை மட்டும்
எனக்கு
தர மறுக்கிறாய்..!

-நிலா முகிலன்.
Friday, January 28, 2011

புகைப்பட கவிதை... மீனவ நண்பன்

(எனது முதல் பதிவு மீண்டும் மீள் பதிவாக...)
http://www.savetnfisherman.org/
அன்று...
சிதிலமான என்னை செப்பனிட
மனைவியின் தாலி தங்கத்தை விற்றாய்.

உன் வியர்வை துளிகளால்...
எனக்கு வர்ணம் பூசினாய்.

உன் சுவாசக் காற்றால்
என்னை சுத்தப்படுத்தினாய்

கிழிந்த புடவையுடன்...
மனைவி தைத்து தந்த வலையை
என் மேல் போர்த்தி அழகு பார்த்தாய்.

எனது ஓட்டைகளை அடைத்தாய்
குடிசை ஓட்டைகளில்
நனைந்தது உன் குடும்பம்.

நான் முன்னேறி செல்ல
துடுப்பு வழித்தாய்
கை வலித்தாய்
பொறுமை சகித்தாய்
வெய்யிலில் தகித்தாய்.

நீ பசித்திருக்க
என்னை மீன்களால் நிரப்பினாய்.

இன்று...
ஓலசத்தம்
உன் ஓலை குடிசையில்...

நான் கரை ஏறிவிட்டேன்.
நீ..?
இலங்கையிலா? இந்தியாவிலா?
சிதைக்கப்பட்டாயா சிறையிடப்பட்டாயா?

அலைகளின் ஓசையில்
அலறிகொண்டிருகிறது...
என் மௌனங்கள்..

- நிலா முகிலன்

-புகைப்படம் -நிர்மல்Thursday, January 27, 2011

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் -8


ஜூரிச்  ரயில் நிலையம்.
சூரிக் ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கிய பொழுது இரவு பத்தரை மணி. அங்கிருந்து நாங்கள் பதிவு செய்திருந்த விடுதிக்கு செல்ல பத்தாம் நம்பர் டிராமை நாங்கள் பிடிக்க வேண்டும். பெட்டிகளை தூக்கி கொண்டு குழந்தையையும் ஸ்ட்ராலரில் தள்ளிக் கொண்டு அங்கு இருந்த இருவரிடம் எங்கு டிராமை பிடிக்க வேண்டும் என கேட்க அவர்களுக்கு ஆங்கிலம் தெரிய வில்லை. அவர் சுவிஸ் ஜெர்மன் பேசியது எங்களுக்கு புரியவில்லை. அப்போது எங்கிருந்தோ வந்த நமது இந்தியர் ஒருவர் வழிகாட்டி நாங்கள் செல்லும் இடத்துக்கு எங்கு இறங்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு வழி காட்டினார். அவர் சுவிஸ் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார் என அறிந்தோம் நன்றி சொல்லி விட்டு டிராமில் ஏறி அமர்ந்தோம்.

நம்ம ஊரு நாலு பல்லவன் பஸ்களை இணைத்தது போல இருந்தது டிராம். கார்களும் பஸ்களும் ஓடும் சாலையின் ஓரத்தில் டிராமுக்கு என்று தண்டவாளங்கள் இருந்தன. டிராமில் ஏறுவதற்கு முன்பே டிராம் நிறுத்தத்தில் தானியங்கி எந்திரத்தில் கடவு சீட்டு வாங்கி கொள்ள வேண்டும். எங்களுக்கு நான்கு நாள் பாஸ் இன்னும் முடியவில்லை என்பதால் நாங்கள் அதையே உபயோகப் படுத்திக் கொண்டோம். டிராமில் உள்ள ஒரு திரையில், அடுத்து வரும் ஐந்து நிறுத்தத்தின் பெயர்களையும் அந்த நிறுத்தத்துக்கு சென்று சேர இன்னும் எவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்றும் காண்பித்தது. அதன் மூலம் நமது நிறுத்தம் இன்னும் வர எவ்வளவு நேரமாகும் என நம்மால் கணக்கிட முடிந்தது. நமது நிறுத்தத்துக்கு வரும் முன்பே நாம் இறங்க தயாராகி கொள்ள அது இடமும் அளித்தது.

எங்கள் நிறுத்தமான 'யுனிவெர்சிட்டி இர்க்கேல்' வந்ததும் நாங்கள் இறங்கி கொண்டோம். நாங்கள் அடுத்த 7  நாட்களுக்கு அங்குள்ள அக்காடமியா ஸ்டுடியோ அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். விலை ஒரு நாளைக்கு நூறு சுவிஸ் பிராங்குகள்.அவர்கள் ஏற்கனவே ஒரு நான்கு இலக்க எண்ணை அந்த கட்டிடத்தின் நுழைவுக்கான கடவு சொல்லை எங்களுக்கு அளித்திருந்தனர்.கட்டிடத்தின் வாசலில் இருந்த எந்திரத்தில் நாங்கள் அந்த எண்ணை அமுக்கியதும், ஒரு சாவி கொத்து  வந்து விழுந்தது. அந்த சாவியால் கட்டிடத்தின் உள்ளே நுழைந்ததும் பல்வேறு அறைகள் இருந்தன. எங்கள் அறைக்கு தனியாக சாவி போட்டு திறந்தோம். பத்துக்கு பத்து என அறை இருவர் படுக்க கூடிய படுக்கை. குழந்தைக்கு தனியே ஒரு தொட்டில், இணைக்கப்பட்ட கழிவறை, ஒரு மாற திட்டில், சமையல் செய்ய இரு அடுப்புகள் கொண்ட ஹீட்டர். சமையல் செய்ய தேவையான கரண்டி, கத்தி, பாத்திரங்கள், சாப்பிட தட்டுகள் இருந்தன. உடுப்புகள் வைக்க ஒரு அலமாரி, ஒரு மேசை நாற்காலி, டி வீ  என ஒரு குறுகிய கால தங்குதளுக்கு தேவையான அனைத்தும் அங்கு இருந்தன. இருந்த அசதியில் அப்படியே படுக்கையில் படுத்து உறங்கிப் போனோம்.

மறுநாள் கண் விழித்த போது மணி பத்து உடனே எழுந்து பக்கத்தில் கடை ஏதும் இருக்கிறதா என பார்க்க நடந்து செல்ல அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட நடைக்கு பின்னர் 'கூப்' (coop) என்ற ஒரு கடையை கண்டு அங்கு குழந்தைக்கு வேண்டிய பால், அவசர சாப்பாட்டுக்கு பிரட் முட்டை, ஜாம், வெண்ணை,தயிர், தக்காளி வெங்காயம் எல்லாம் வங்கி வந்தேன். பின்னர் அவசர அவசரமாக பிரட் ஆம்லேட் உண்டு விட்டு, பத்தாம் நம்பர் டிராம் பிடித்து ஜூரிக் ரயில் நிலையம் சென்று இறங்கினோம்.

மிக ப்ரம்மாண்டதாகவும் மிகவும் பழமையானதாகவும் இருந்தது அந்த ரயில் நிலையம். அங்கிருந்து செயின்ட் மாரிட்ஸ் என்ற இடத்துக்கு ரயிலில் பயணம் செய்து அங்கே ஒரு பஸ் டூர் எடுத்து இத்தாலி உள்ளே சென்று வர திட்டம். எங்கள் அசதியில் நாங்கள் தாமதமாக எழுந்ததால், திட்டம் மாறியது. சுவிசின் மேற்கு முனையான ஜெனீவாவை கண்ட நாங்கள், அடுத்து கிழக்கில் உள்ள செயின்ட் காலனை பார்க்கலாம் என முடிவு செய்தோம். ( மேற்கிலிருந்து கிழக்கு முழுவதும் கவர் செய்துவிடவே இந்த ஏற்பாடு.) ஜூரிக்கிலிருந்து ஒரு மணி நேர தூரத்தில் இருக்கிறது செயின்ட் காலன்.
செயின்ட் காலன் ஆலயம் 
அயர்லாந்தை சார்ந்த காலஸ் என்பவர் ஒரு தியான மையத்தை இந்த இடத்தில் கி பி 613  இல் நிறுவியதால் அவரது நினைவாக இந்த இடம் செயின்ட் காலன் என அழைக்கப் பட்டு வருகிறது. நகரத்தின் மையத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான, பழமையான கத்தோலிக்க தேவ ஆலயம் இருக்கிறது. இந்த நகரமே, அந்த ஆலயத்தை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள்ளது.
        செயின்ட் காலன் ஆலயம் - உள்ளே 
இந்த ஆலயம் பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் பல போர்களில் சிதைக்கப்பட்டு மீண்டும் பதினேழாம் நூற்றாண்டில், மிகப் பிரபலமான கட்டிடக் கலை வல்லுனர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்தை ஒட்டி உள்ள நூலகத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து ஏறக்குறைய நூற்று ஆருபது ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அதில் இரண்டாயிரத்து ஐநூறு கை எழுத்து நூல்கள் ஆகும்.

ஆலயத்தினுள், பழங்கால வேலைப்பாடுகள் அற்புதமாக  தங்க மூலத்தில் இழைக்கப் பட்டிருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு. அங்குள்ள ஒவ்வொரு பொருளும் பழங்காலத்தை நினைவு படுத்துவதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வானுயர அலமாரிகளை அண்ணாந்து நோக்கி கொண்டிருந்தேன். எனது மகனை அந்த அலமாரியின் அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதனை வைத்து அந்த அலமாரிகள் எத்துனை உயரம் என அறிந்து கொள்வீர்கள்.
                                                                 அந்த அலமாரி..!
1983  முதல் இந்த ஆலயம், யுனெஸ்கோ வின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

நாங்கள் பின்னர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து வருகையில் ஒரு புதுவித காட்சியை கண்டோம். ஒரு தெரு முழுக்க  கார்பெட்டை விரித்து வைத்திருந்தனர். மழை வந்தாலும் எதுவும் ஆகாது என எங்களுக்கு சொல்லப் பட்டது. அதனை ச்டாட்ட் லவுஞ் (Stadtlounge) என்கிறார்கள். நகரத்தின் மத்தியில் உள்ள லவுஞ் என்பது அதன் பொருளாம். அழகாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது.
                                                                   ச்டாட்ட் லவுஞ்
அதற்குள் மாலை ஆகி விட்டதால், மீண்டும் ரயில் பிடித்து கூட்டை வந்தடைந்தோம்.

மறுநாள் மலையில் வின்ச்சில் மவுண்ட் பிளாடஸ் செல்ல போகிறோம் என்ற எக்சைட்மேண்டில் பேசியபடியே அசதியில் உறங்கிப் போனோம்.

(தொடரும்)
--

Tuesday, January 25, 2011

ஆஸ்கார் பந்தயத்தில் மீண்டும் ஏ ஆர் ரகுமான்!

தமிழர்கள் தலை நிமிரும் காலம் மீண்டும். இசை மூலம் உலகத்தையே கட்டி ஆண்டு கொண்டிருக்கும் ஏ ஆர் மீண்டும் இந்த வருடம் 127  அவர்ஸ் என்ற டானி பாயிலின் ஆளிவூட் திரைப்படத்திற்க்காக சிறந்த திரை இசை மற்றும் படத்தின் 'இப் ஐ ரைஸ்' என்ற திரைப்பாடலுக்கும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
மலை ஏற்றத்தில் ஈடுபடும் ஒருவன் தனது கை ஒரு பொந்தினுள் மாட்டிக்கொள்ள அவனால் வெளியேற முடியவில்லை. வெளி உலகத்துக்கும் இதை பற்றி தெரிவித்து உதவி கோர முடியாத நிலை. தனது கையை அறுத்துக் கொண்டு கையை விடுவித்தால் ஒழிய அவனால் தப்பிக்க இயலாத நிலை. தன்னிடம் உள்ள மொண்ணைக் கத்தியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக துடிக்க துடிக்க வெட்டிக் கொண்டு தப்பிப்பது தான் 127 hours படத்தின் கதை. இது ஒரு உண்மைக் கதை கூட. இப்படி ஒரு கதையை சுவாரஸ்யப் படுத்த ஒரு இசை அமைப்பாளரின் பங்கு மிக மிக முக்கியம். அப்படி ஒரு படத்துக்கு சிலிர்ப்பூட்டும் இசையை தந்து, வெற்றி பெற்றிருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

                                                                 ஆரோன் ரால்ச்டன்

உண்மை கதையின் கதாநாயகனான Aron ரல்ச்டன் படத்தின் இசையை கேட்டு ஸ்தம்பித்து ஏ ஆரை அழைத்து பாராட்டி கவுரவப் படுத்தி உள்ளார்.. அவர் தனது கைப் பட எழுதிய கடிதம் கீழே.

எனது கதைக்கு உங்கள் சிலிர்ப்பூட்டும் இசைக்கு நன்றி. உங்கள் இசையை நான் அன்று கான்யான் மலையில் மாட்டிக்  கொண்ட பொது கேட்டுக் கொண்டிருந்தால், நிச்சயமாக இன்னும் ஒரு 127  மணிகள் என்னால் வாழ்ந்திருக்க முடியும். என்பதே அந்தக் கடிதத்தில் கண்டுள்ளது. 

ஒன்று மிகவும் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இருமுறை ஏ ஆர் ரகுமானின் ஆஸ்கார் பரிந்துரையும் டானி பாயில் என்ற ஒரு ஆங்கில இயக்குனரலேயே சாத்தியமாகி உள்ளது.  

ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் பந்தயத்தில் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும்.. இந்த ஆஸ்கார் பரிந்துரையே தமிழர்களான நாம் அனைவருக்கும் பெருமை இல்லையா?

இந்த தற்பெருமை அற்ற கலைஞனை மீண்டும் ஆஸ்கார் பந்தயத்தில் ஓடி ஜெயிக்க நாம் வாழ்த்துவோம்.

127 hours  படத்தில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'if I raise'  பாடல் உங்களுக்காக...
Sunday, January 23, 2011

திரைப்படம்: ஆடுகளம்.தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து அற்புதமான திரைப்படங்கள் வெளி வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. உலக சினிமாவை நோக்கிய பயணத்தை அடுத்த களத்துக்கு எடுத்து செல்லும் திரைப்படம் தற்போது வெளி வந்துள்ள வெற்றிமாறனின் ஆடுகளம். இந்தத் திரைப்படத்தை தனுஷின் திரைப்படம் என சொல்வதை விட, வெற்றிமாறனின் ஆடுகளம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். படத்தில் வணிகத் தன்மைகளின் ஆதிக்கங்களை குறைத்து, தமிழுக்கு புதிய களமான சேவல் சண்டையை மையப் படுத்தி, மனித மகிழ்வுகளையும் வக்கிரங்களையும் ஒன்று சேர பதிவு செய்து ஒரு நல்ல சினிமாவை படைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

சிலர் இதனை இஸ்பானியல்  சினிமாவான அமோறேஸ் பெர்ரோசின்  காபி என சொல்கின்றார்கள். அமோறேஸ் பெரோசின் கதை வடிவத்தை தான் மணிரத்னம் ஆயுத எழுத்து படத்தில் கையாண்டார். அமோறேஸ் பெரோஸில் வரும் மூன்று கிளை கதைகளில் ஒன்று நாய் சண்டையை பற்றியது, ஆடுகளம் சேவல் சண்டையை பற்றியது என்ற ஒரே ஒரு சிறிய ஒற்றுமை தவிர, இரண்டும் வேறு வேறு களங்கள், வேறு வேறு கதைகள். எனவே ஆடுகளம் என்ற ஒரு நல்ல முயற்சியை பிரதி என குறுக்கிட வேண்டாம்.

கதை?
மதுரையில் சேவல் சண்டைக்கு பெயர் போனவர் பேட்டைக்காரன். அவரை எதிர்த்து ஒவ்வொரு முறையும் மண்ணை கவ்வுகிறார், சேவல் சண்டைக்கு பெயர்போன குடும்பத்திலிருந்து வந்த காவல் அதிகாரியான இரத்தின சாமி. அது தனது கௌரவத்தை பாதித்தால், மீண்டும் ஒரு முறை பந்தயம் வைத்து பெட்டைகாரனை வெற்றிகொள்ள முடிவு செய்கிறார்.

பேட்டைகாரனிடம் வேலை செய்த தொரை, பார் வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்க, பேட்டைகாரனின் மற்றொரு சிஷ்யன், கருப்பு. ஒவ்வொரு முறை சேவல் தோற்றபோதும் அதனை அறுத்து போட சொல்வது பேட்டைகாரனின் வழக்கம். கருப்பு வளர்த்த ஒரு சேவலை அறுத்து போட சொல்ல, கருப்புக்கு மனம் கேட்காமல், அதனை எடுத்து சென்று தனது வீட்டினில் வளர்க்கிறான். அதற்க்கு, சேவல் சண்டைக்கு தேவையான பயிற்சியும் கொடுத்தபடி வருகிறான்.

சேவல் சண்டையில் ஈடுபடும்படி ரத்தினசாமி இன் சவாலை ஏற்று கொள்ளும் பேட்டைக்காரன், தோற்ப்பவன் மீசை மழித்து மொட்டை அடித்து சண்டையை விட்டே ஒதுங்கி விட வேண்டும் என்ற சவாலுடன் களத்தில் இறங்க சிலிர்ப்பூட்டும் சேவல் சண்டைகள் அந்த ஆடுகளத்தில் அரங்கேற, பேட்டைகாரனின் சேவல்கள், ரதினசாம்யின் தந்திரங்களுடன் களத்தில் இறக்கப்பட்ட சேவல்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல் சுணங்க, பேட்டைகாரனின் எதிர்ப்புக் கிடையே, தான் வளர்த்து வரும் சேவலை களம் இறக்கும் சேவல் வெற்றி வாகை சூட, இறுமாப்பில் பேட்டைகாரனுக்கு தனுஷின் மேல் பகையும் வஞ்சமும் வளர இடை வேளை. அதன் பின்னர் தான் உண்மையான ஆடுகளம்.

 கருப்பு வாக வாழ்ந்திருக்கும் தனுஷுக்கு இது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். அசல் மதுரைக்காரனாக வாழ்ந்திருக்கிறார். அம்மாவை இழந்து அழுகை வராமல் அன்று இரவு அம்மாவை பற்றி தனது ஆங்கிலோ இந்தியன் காதலியான டாப்சீயிடம் புலம்பி கதறி உடைந்து போகுமிடத்தில் கலக்குகிறார். பேட்டைகாரனாக நடித்திருக்கும் ஈழத்துக் கவிஞயர் செயபாலன் ஒரு ரேவெலேஷன். அந்த பெரிய மீசைக்குள்ளிருந்து வரும் உறுமலும், குரோதம் கொண்ட பார்வையுமாக அற்புதமாக நடித்திருக்கும் அவருடன் சேர்ந்து , டப்பிங்கில் ராதாரவியின் குரல் மாடுலேஷங்களும் சேர்ந்து நடிக்கிறது.

தனது முதல் படமான பொல்லாதவனில் கவனத்தை ஈர்த்த வெற்றிமாறன், ஆடுகளத்துக்காக, சேவல் சண்டையின் அடிப்படையிலிருந்து அனைத்தையும் கற்று தேர்ந்து வெளிப்படுத்தியதில் அவரது கடின உழைப்பு தெரிகிறது. வித்தியாசமான களமும்,கதையும், விறுவிறு திரைக்கதையுமாக  நம்மை ஆரம்பம் முதலே கட்டிபோட்டு உட்கார வைத்து விடுகிறார்.

அந்த விறு விறு திரைக்கதைக்கு வேகமூட்டுகிறது சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து புறப்படும் வேல்ராஜின் ஒளிப்பதிவும், சிலிர்ப்பூட்டும் ஜி வியின்  பின்னணி இசையும். இவரது இசையின் 'யாத்தே யாத்தே' மற்றும் 'அய்யயோ நெஞ்சி அலையுதடி',  இரண்டும் தாளமிட வைக்கின்றன..

தனுஷ் தனது அந்த ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்துக் கொண்டு அத்துணை பேரிடமும் மல்லுக்கு நின்று சண்டை இடுவது, மற்றும் கதைக்கு அழுத்தம் கூட்டாத டாப்சீயின் காதல் காட்சிகளும் படத்தின் சீரான திரைக்கதைக்கு உறுத்தலாக இருந்தாலும், ஆடுகளம், தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்புகளில் ஒன்று.

ஆடுகளம்...அதகளம்.
--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...