Saturday, February 19, 2011

இது எங்கள் நாடு..!

        புரட்சியாளர்களின் மத்தியில் உரையாடும்  வாயேல் கோநிம்.
 
எகிப்தில் ஆரம்பித்த புரட்சித் தீ.. இன்று, பக்ரைன்,இரான், லிபியா என கொழுந்து விட்டு எரிகிறது.காலம் காலமாக சர்வாதிகாரத்தனமாக, ஒருவரே ஆண்டு வரும் பழக்கங்களுக்கு முடிவு கட்டி மக்கள் ஜன நாயகத்தை விதைக்க விதை விழுந்திருக்கிறது.. எகிப்தில்.  

யாரும் இனி ஐ டி வல்லுனர்களுக்கு சமுதாய அக்கறை கிடையாது என குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில் இந்த விதை விழ காரணமாக இருந்தவர் ஒரு ஐ டி கம்பனியின் மார்கெடிங் மேனேஜர். ஆம் உலகப்புகழ் பெற்ற கூகிளின் மார்கெடிங் மானஜராக பணியாற்றும் வாயேல் கோநிம் (Wael Ghonim) என்ற முப்பது வயது இளைஞர் தான் முப்பது வருடங்களாக எகிப்தின் தனி பெரும் அதிபராக கோலோச்சிக் கொண்டிருந்த ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கக் காரணமாக இருந்தவர்.


                                        சுவிஸ்சில் தனது மனைவியுடன் முபாரக்.

பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் அடித்து துவைத்து கொன்று போடுவது, எகிப்திய காவலர்களின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. லஞ்சமும் விலைவாசி உயர்வும் தலைவிரித்து ஆடிய எகிப்த்தில் முப்பது வருடமாக ஆண்ட முபாரக்குக்கு எண்ணமுடியாத அளவில் கோடிகளில் பணம் புரண்டது. எதிர்த்து கேள்வி கேட்டவர்கள், சிறையில் அடைக்கப் பட்டனர். விசாரணை என்ற பெயரில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப் பட்டனர்.காலேத் செத் என்ற இருபத்தேழு வயது இளைஞனை எகிப்திய காவல் துறை அடித்தே கொன்ற போது, முதல் முதலில் 'நாம் அனைவருமே காலேத் சேத' என்ற முகப்புத்தக பக்கத்தை,'ஒரு சுதந்திர வீரன்' என்ற பெயரில் ஜனவரி 2011 இல்ஆரம்பித்தார் வாயேல்.  அதுவே, ஜனவரி 25  அன்று மக்கள் குழுமி, அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்ப விதையாக விளங்கியது.

ட்விட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் செய்திகள் பரிமாறப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் காவலர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு ஆஸ்பத்ரியில் மாண்டு போக, காவலர்களின் துப்பாக்கி சூட்டிலும் தடியடியிலும் முன்னூறு மக்கள் இறந்து போனார்கள். இரண்டாயிரம் பேருக்கு காயம். இதனை தொடர்ந்து ஜனவரி 27  முதல், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வித்தாக இருந்த வாயலை காணவில்லை. கடைசியாக ஜனவரி 27 அன்று அவர் எழுதிய ட்விட்டர் 'எகிப்துக்காக வேண்டிக்  கொள்ளுங்கள். நாளை அரசாங்கம், மக்களுக்கு எதிராக போர் குற்றம் புரிய இருக்கிறது. நாங்கள் நாட்டுக்காக மரணிக்க தயாராகவே இருக்கிறோம்'.

வாயலை காணாமல், அவருடைய குடும்பமும், நண்பர்களும், கூகுளின் சக ஊழியர்களும் அவரை காணமல் தவித்து விட்டனர். அவரையும் காவலர்கள் கொன்று போட்டிருப்பார்களோ என அச்சத்துடன் காத்திருந்தனர்.

பிப்ரவரி 7 இல் அவர் வெளிவந்தபோது தான் அரசாங்கம் அவரை காவலில் தடுத்து வைத்திருந்தது உலகத்துக்கு தெரிந்தது. அவர் வெளி வந்ததும் அவர் ஒரு ஹீரோவாக போற்றப் பட்டார். 'இது எகிப்திய இளைஞர்களின் சுதந்திரப் போராட்டம். நான் இதன் ஹீரோ அல்ல' என 'ட்ரீம் 2 ' என்ற தொலைகாட்சியில் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.


வாயல் கோநிம் கெய்ரோ பல்கலை கழகத்தில் கணினி துறையில் பொறியியல் பட்டமும், கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலை கழகத்தில் எம் பீ ஏ வும் படித்தவர். தற்சமயம் துபாயில் வசித்து வருகிறார். தனது ரோல் மாடல் என அவர் கருதுவது நம்ம காந்தி தாத்தாவையும், அமெரிக்காவின் மார்டின் லூதர் கிங்கையும் தான்.

மக்கள் புரட்சி வெடிக்க ஆரம்பித்த பதினெட்டு நாட்கள் கழித்து முபாரக் பதவி விலகி இருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக அசம்பாவிதங்கள் நடந்தாலும், அகிம்சைக்கு இன்னமும் சக்தி இருப்பதை இந்த புரட்சி நிரூபித்திருக்கிறது.

இப்போது எகிப்தை தொடர்ந்து, மக்களின் ஜனநாயகம் இல்லாத நாடுகளில் புரட்சி வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது வரவேற்கத்தகுந்த ஒரு விஷயம்.
தமிழர்களும், தமிழ் இயக்கங்களும் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையிலும் இது எப்போதோ நடந்திருக்க வேண்டியது.. ஹூம்..!

1 comment:

Anonymous said...

Thamilargalukku egiptiyarkal alavukku arivu varaathu. Azhagiri, Karunanidhi aakiya dictators kitta adimaiya thaan iruppaanunga

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...