Friday, March 16, 2012

ஈழத்தின் அவலம்.

சனல் 4 தயாரித்துள்ள இலங்கை கொலை களங்கள் இரண்டாம் பாகம். மென்மையான இதயம் உள்ளோர் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம்.




சனல் நாலு வெளிப்படுத்திய, ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் வெறித்தாண்டவம், உடல் பதைபதைப்பை உண்டு பண்ணியது. பலருக்குள் தாமும் விடுதலை புலியாக மாறிடலாமா என உள்ளுக்குள்ளே ஒரு அக்கினி கனன்று கொண்டு இருக்கும். இந்த வெறியாட்டத்தை பின்னின்று நடத்திய இந்தியாவின் மத்திய அரசாங்கம், அமெரிக்கா ஐ நாவில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை எப்படி எதிர் கொள்ளபோவது என்று திருடனுக்கு தேள் கொட்டுவதைப் போல கையை பிசைந்து நின்று கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் கழித்து விழித்து கொண்டுள்ள உலக சமூகம், அப்போது ஈழத்தில் இருந்து கேட்ட அவல குரல்களை உதாசீனப் படுத்தியதால் தானே இத்தனை பேர்கள் மாண்டார்கள்.. கொடுமைகளில் சிக்கி உழன்றார்கள். அப்போது எல்லாம் வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது உண்மைகள் வெளி வந்து நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கையில், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பச்சோந்தி அரசியல் வாதிகள் அறிக்கை விடுகிறார்கள். காலை உணவை உண்டுவிட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுவிட்ட தமிழக தலைவரின் உண்ணாவிரதத்தை மறக்க முடியுமா? தனது அரசியல் நாற்காலிக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்று பம்மாத்தாக பிரதமருக்கு கடிதங்கள் மட்டுமே எழுதி கொண்டிருந்தார். பிரதமர் என்ன இவரது 'உடன்பிறப்புகளில்' ஒருவரா? இவரது கடிதம் கண்டு உணர்ச்சிவசப்பட?

ஒரு ராஜீவ் காந்தி என்ற இந்தியனின் கொலைக்காக ஒரு லட்சம் ஈழத்தமிழர்களை காவு கொடுத்தார்களே? அந்த ஒரு லட்சம் ஈழதமிழர்களுக்காக ஒரு லட்சம் இந்தியர்களாவது கண்ணீர் சிந்தி இருப்பார்களா? உலகம் வாழும் அனைத்து தமிழனும், நான் உட்பட, என்ன செய்து விட முடிந்தது. இந்தியாவை ஆண்ட அரசியல் வாதிகளை நோக்கி தான் நம் அத்துணை விழிகளும் இருந்தது. போரை இயக்கிய மத்திய அரசியல் வாதிகளையும் , தன குடும்பத்துக்காக, ஒரு லட்சம் மக்கள் மடிந்த போதும் கடிதம் மட்டும் எழுதி கொண்டிருந்த தலைவனையும் முதலில் குற்றவாளிகளாக்கி கைது செய்ய வேண்டும்.

தமிழனுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் ஒரே அரசியல் வாதி வைக்கோ மட்டுமே. வேறு எவனுக்கும் இலங்கை தமிழனின் வாழ்கையை பற்றி சிந்திக்கவும், அதனை பற்றி பேசவுமே அருகதை கிடையாது.

இருந்தாலும் தற்போதைய நிலையில், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும், காங்கிரஸ் உட்பட, இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே குரலில் வேண்டுக்கோள் விடுத்துள்ளன. இத்தனையும் இந்தியா ஏற்க மறுத்து மாற்றி வாக்களித்தால், புவியில் உள்ள எந்த தமிழனும், தமிழின வரலாறும், ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தையும், அரசியல் வாதிகளையும் மன்னிக்கவே மன்னிக்காது.

வாய்மையே வெல்லும்.

Saturday, March 10, 2012

உலக சினிமா: பெட்டி ப்ளூ(betty blue) -பிரெஞ்ச்-18+


அளவற்ற காதலையும், அதனால் விளையும் பெருந்துயரையும் சொல்லும் பிரெஞ்சு காவியம் தான் பெட்டி ப்ளூ. கற்பு கலாசாரம் என்பவர்களுக்கான படம் அல்ல இது. அதையும் தாண்டி வருபவர்கள் மட்டுமே இந்த படத்தை உள்வாங்கி ரசிக்க முடியும். படத்தில் ஏராளமான நிர்வாணங்கள் உண்டு. ஆனால் அது கிளுகிளுப்புக்கானது அல்ல. வாழ்கையின் உண்மைகளை பேச, அந்த காட்சிகள் தேவைப் படுகிறது. இப்படத்தின் முக்கிய காதாபாத்திரங்களான ஜோர்க்(Zorg) மற்றும் பெட்டி (betty) ஆக வாழ்ந்திருக்கும் பிரெஞ்சு நடிகர்களான ழான் அங்க்லாடே(Jean-Hugues Anglade) மற்றும் பீட்ரிஸ் தல்லே (Béatrice Dalle) இருவரும் உயிர் பெற்ற சித்திரங்களாக நம் கண் முன்னே உலவுகிறார்கள். அந்த வெற்றி படத்தின் இயக்குனரான ழான் பீனிக்ஸ் (Jean-Jacques Beineix) கே சேரும்.

ஜோர்க் மற்றும் பெட்டி இருவருக்குமான கலவியில் தான் படமே துவங்குகிறது. ஜோர்க் கிடைத்த வேலைகளை செய்து வாழ்கையை கொண்டாட்டமாக கருதும் ஒரு சாதாரணன்.அவன் வசிக்கும் இடத்தின் அருகே இருப்பவள் பெட்டி. இருவரும் அவ்வப்போது சந்திப்பதாக இருந்து வந்த சமயத்தில், அவளது காதலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜோர்க் உடன் வந்து தங்கி அவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறாள். அவளுக்கு கோவம் வந்தால் என்ன செய்வாள் என அவளுக்கே தெரியாது. ஒருவகையான சைக்கிக் பாரனோயா உடன் இருக்கும் அவளது செய்கைகள், ஜோர்குக்கு பிடித்து விடவே அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான். கவனிக்க, கலவி முடித்தபின் தான் காதலே ஆரம்பிக்கிறது.

அவனுடைய அறையை ஆராயும் அவள் அவன் எழுதி வைத்துள்ள நாவலை வாசிக்க ஆரம்பித்து, அது உலக புகழ் பெறப்போகும் ஒரு நாவல் என கூற, அதுவரை அதனை ரகசியமாய் வைத்திருக்கும் ஜோர்க் தன நாவலை அவள் ரசிக்க ஆரம்பித்து விட்டால் என்றதும் அவள் மீது அவனது காதல் அதிகமாகிறது.ஜோர்கை, அவனது வீட்டுக்கு சொந்தக்காரன், தனது வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்கிறான் என்பதை உணர்ந்த பெட்டி, அந்த வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே எரிந்து விட்டு அந்த வீட்டையே கொளுத்தி விட, இருவரும் எதிர்படும் வாகனத்தில் வேறு ஊரு செல்கிறார்கள். பெட்டி இன் ஒரு உறவுக்கார விதவைப் பெண்ணின் வீட்டில் தங்குகிறார்கள். உடைந்து கிடக்கும் பைப்புகளை பழுது பார்க்கும் வேலை செய்கிறான் ஜோர்க். பேட்டியோ, ஜோர்க் எழுதிய நாவலை, இரவும் பகலும் கண் விழித்து டைப் ரைட்டரில் அடித்து அந்த ஊரில் உள்ள புத்தக வெளியீட்டாளர் எல்லாருக்கும் அனுப்புகிறாள்.

இதனிடையே அவளுடைய உறவுக்கார பெண்மணிக்கு ஒரு பணக்காரன் பாய் பிரெண்டாக அமைய, நால்வரும் வாழ்க்கையின் துயரங்களை மறந்து கூத்தடிக்கிறார்கள். அந்த சமயத்தில் அந்த பாய் பிரெண்டின் தாய் மரணிக்க, அந்த துயரத்தில் பங்கு கொள்ள அந்த கிராமத்துக்கு நால்வரும் செல்ல, தன் தாயின் பியானோ கடையை இவர்களுக்கு தந்து தன் தாயின் வீட்டையும் அவன் தர, சொற்கும், பெட்டியும் புதிய வாழ்கையை துவங்குகிறார்கள்.
இதற்கிடையே, எந்த பதிப்பாளரிடமிருந்தும் ஜோர்கின் நாவல் குறித்து தகவல் வரவில்லை. தான் உலகத்தின் சிறந்த எழுத்தாளனாக கருதும் ஜோர்குக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற நினைவு அவளை ஆத்திரத்தின் எல்லைக்கே கொண்டு செல்ல, அந்த ஆத்திரத்தை எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்களிடம் காட்ட துவங்குகிறாள். எரியும் தணலை அணைக்கும் நீரை போல, ஜோர்க் மட்டுமே அவளை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களது வெறித்தனமான காதலே அவர்களை கட்டி போட்டு வைக்கிறது. இடையே, பெட்டி கருத்தரிக்க, அந்த குழந்தையும் கருப்பைக்குள்ளே இறந்து போக, பெட்டி தனது ஒரு கண்ணை தானே நோண்டி எடுத்துவிட, அவளை ஆஸ்பத்ரியில் கோமா நிலையில் சேர்க்க, ஜோர்குக்கு ஒரு பதிப்பாளரிடம் இருந்து போன் வருகிறது.


படத்தின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ். ஒவ்வொரு சமயங்களிலும் படத்தின் காட்சிகளுக்கேற்ப வண்ணங்கள் மாறுவது அழகு. பெட்டியாக நடித்திருக்கும் பீட்ரிஸ் க்கு இது முதல் படமாம். அற்புதமான நடிப்பு. ஜோர்க் தனது நிர்வாணத்தை பற்றி கவலை இன்றி நடித்துள்ளார். பல இடங்களில் இவருக்கு நிஜமாகவே பீட்ரிஸ் மீது காதலோ எனும் அளவுக்கு அவர்களுக்கிடையே அற்புதமான செமிஸ்டிரி.

பிலிப் ட்ஜியான் என்பவரின் நாவலே பெட்டி ப்ளூ ஆக திரைப்படம் ஆகி இருக்கிறது.
.
ழான் பீனிக்ஸ்  இயக்கத்தில் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. 1987 வருடத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் பல விருதுகளை வென்று இருக்கிறது
.
படம் நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.

பெட்டி ப்ளூ - ப்யூட்டிபுல்

Friday, March 9, 2012

டிராவிட்- பெருஞ்சுவரின் அந்திமம்.


இந்தியா பல போட்டிகளில் தோல்விகளை எதிர் நோக்கி இருக்கும் காலமெல்லாம், தனி ஒரு ஆளாய் நின்று, எதிராளிகளின் வெற்றியை தடுக்கும் ஒரு பெருஞ்சுவரை நின்று இந்தியாவுக்காக ஆடும் வீரர்களில், திராவிட் முதன்மையானவர்.

1996 இல் சிங்கப்பூரில் தனது கிரிகெட் வாழ்கையை துவக்கிய ராகுலுக்கு கிரிக்கெட் இரத்தின கம்பள வரவேற்ப்பை தரவில்லை.தடுமாறிய அவர், இங்கிலாந்து சுற்றுபயணத்தின் பொது அணிக்கு முக்கியமாக தேவைப்பட்ட அவர் அடித்த 95 ரன்கள் அவரை திரும்பி பார்க்க வைத்தது. 1997 இல் சவுத் ஆபிரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட்டில் இவர் அடித்த 143 மற்றும் 81 ரன்கள், இவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என நிரூபித்தது.

பல வேளைகளில் இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றிய பெருமை ராகுலை சாரும். 1999 உலக கோப்பை ஆட்டங்களில் இந்தியாவை இறுதி போட்டி வரை அழைத்து சென்ற பெருமை ராகுளுக்குத் தான். 491 ரன்கள் எடுத்து அவரே முதன்மையான பாட்ஸ்மானாக திகழ்ந்தார்.அதனாலேயே அவருக்கு அடுத்த உலக கோப்பை போட்டியின் அணித்தலைவராக இருக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. வெஸ்ட் இண்டீசில் நடந்த அந்த ஆட்டங்களில் இந்தியா சொதப்பி வெளியேறியதும், மற்றவர்கள் மேல் பழி போடாமல், தானே பொறுப்பேற்று, தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.

2004 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 233 ரன்கள் அடித்து வெற்றி பெற்று தந்த டெஸ்ட் மாட்சை மறக்க முடியுமா.அந்த டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட்களில் ராகுல் விளாசி எடுத்த மொத்த ரன்கள் 619. 2011 உலக கோப்பை வென்ற இறுமாப்பில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி நான்கு போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. திராவிட் மட்டுமே நான்கு போட்டிகளில் மூன்று செஞ்சுரி அடித்து தான் ஒரு சிறந்த பாட்ஸ் மான் என்பதை மீண்டும் பறை சாற்றினார். அவர் மட்டுமே இந்திய அணியை காப்பாற்ற முடியும் என உணர்ந்து அவரை அதுவரை ஒருநாள் போட்டிகளில் மறுதலித்து வந்த இந்திய தேர்வு குழு அவரை மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை தேர்வு செய்தது.

மற்ற அனைத்து வீரர்களும் களம் விட்டு வெளியேறினாலும்,தனக்காக விளையாடாமல் இந்தியாவுகக நேர்த்தியாக விளையாடிய திராவிட், அவரது ஆட்டத்துக்கு ஏற்ப கவனிக்க படாது போனது, அவரின் துரதிர்ஷ்டம் அல்ல. அவரது விளையாட்டை உபயோகித்துக் கொண்டு அவருக்குரிய மரியாதையை தராமல் புறக்கணித்த இந்த தேசத்தின் அவலம் அது.


சச்சின் என்னும் சூறாவளியில் திராவிட் எனும் தென்றலின் இருப்பிடம் வெளியே தெரியவில்லை. திராவிட் செஞ்சுரி அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தாலும், சச்சின் அந்த ஆட்டத்தில் செஞ்சுரி அடிக்கவில்லையே என கவலைப்பட்டவர் தான் ஏராளம். சச்சினுக்கோ, செஹ்வாகிற்க்கோ கிடைத்த அங்கீகாரங்கள், சிறந்த வீராரான ராகுல் ட்ராவிடுக்கு கிடைக்காமல் போனதை பற்றி அவர் கவலைப்படவில்லை. என்னை போன்ற ராகுலின் ரசிகர்களுக்கு மிகுந்த மனவருத்தம் அளிக்கும் விஷயம் அது.

ராகுல் என்றுமே எந்த சர்ச்சைகளிலும் மாட்டாத ஒரு ஜென்டில்மேன். அவரது ஆட்டத்தை போலவே அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவர் என்று அவரை பற்றி அவரது சக வீரர்கள் பாராட்டுவர். மற்றவர்களை பற்றி என்றும் கவலை பட்டதில்லை அவர். அணியின் தேவைக்கு ஏற்றது என்ன என்பதை உணர்ந்து அதனை என்னால் முடிந்தவரை அளித்ததை தான் பெருமையுடன் நினைவு கூறுவதாக, தான் ஓய்வு பெரும் இந்நாளில் அவர்  அறிவித்துள்ளார். ராகுல் ஓய்வு பெறுவதை அறிவித்ததும், அவருக்கான அங்கீகாரம் கிட்டாமலேயே ஓய்வு பெருகிறாரே என எனது தொண்டைக்குழிக்குள் எதோ ஒன்று அடைத்துக்கொண்டு பிதுங்கி கண்களில் முட்டிக் கொண்டு நின்றது நீர்.

We miss you dravid.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...